Monday, May 29, 2006

பசும்பழமும் ஜிகர்தண்டா சண்டையும்

கால்கரி பயணம் - முதல் பகுதி , இரண்டாம் பகுதி

சிவா வீட்டுக்குப் போயாச்சு. போன தடவை அவர் வீட்டைப் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான ஆளைப் பத்தி எழுத மறந்துபோச்சு. அது அவரு வீட்டில் வளரும் கிளி. அவர்தான் தன்னைப் பற்றிய குறிப்பில் முன்பு தானொரு பறவை ரசிகர் எனக் கூறியிருந்தாரே. அதன் பெயர் நீமோவாம். அழகாய் சுப்பிரமணி, கல்யாணி எனத் தமிழ்ப் பெயர் வைக்காமல் ஏன் இப்படி எனச் செல்லமாய் கடிந்து கொண்டேன். நல்லா பேசுமாம். ஆனால் எங்கள் கொட்டத்தைக் கண்டு அன்று சற்றே அடங்கியேயிருந்தது. என் மகனைக் கண்டவுடன் மட்டும் குஷியாய்க் கத்தத் தொடங்கியது. தன்னைப் போல் ஒரு சிறிய உருவமாய் இருந்ததால் நட்பா அல்லது போட்டிக்கு வந்த மாதிரியான எண்ணமாவெனத் தெரியவில்லை.

அதற்கான அறை, விளையாட்டுச் சாமான், போர்வை என நன்றாக செட்டில் ஆகியிருந்தது. இவ்வகை கிளிகள் 25 வருடங்கள் வரை வாழுமாம். இதோ அவரின் புகைப்படம்.



நீமோவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு பின் சிவாவின் வீட்டு முகப்பில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம். மலையேறிவிட்டு வந்தது களைப்பாக இருந்ததாலும், வெய்யிலின் கொடுமையால் நாக்கு வரண்டு போனதாலும் சிவாண்ணா தங்கள் ஊரின் லோக்கல் சரக்கான கோக்கனி (Kokanee) என்ற பியரை கொடுத்து உபசரித்தார். பின் தங்கக்கழுகு, அரசமீனவன் போல் அதன் பெயரையும் தமிழ்ப் படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். கோக்கனி என்ற பெயரே தமிழ்தானே என்றவுடன் ஒரு மாதிரி என்னைப் பார்த்தவரிடம் கோக்கனி என்பதன் விளக்கம் பசும்பழம்தானே என்றேன். அவர் ரொம்ப ஓவாராகிவிட்டது என்று அதற்கு மேல் பசும்பழம் வேண்டாமெனக் கூறிவிட்டார். :-)

அடுத்தது சாப்பாடு. பாவம் அவங்க வீட்டம்மா. இவரு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வரவங்களப் பார்த்தா நல்லா நாலு விதமா சாப்பிட்டு வளர்ந்தவங்க மாதிரி தெரியுது. அதனால நீ லீவைப் போட்டு நல்லா சமைன்னு சொல்லி இருப்பாரு போல. அவங்களும் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாங்க. நாங்க ஊரைச் சுற்றி வந்த பசியில் போட்டோ எல்லாம் எடுக்காம புகுந்து விளையாடிட்டோம். சாரி துளசியக்கா, அதையெல்லாம் உங்க கண்ணில் காமிக்க முடியாம ஆகிப்போச்சு. ஆனாலும் மெனு சொல்லறேன் நோட் பண்ணிக்குங்க - காஞ்சீவரம் இட்லி, சட்னி, வெஜிடெபிள் புலவ், ரெய்தா, அப்புறம் நமக்காக அவரு அடி வாங்கி குறிப்பு போட்ட சால்னா (வெஜிடேரியன் வெர்ஷன்). நாங்க எல்லாம் சைவம் என்பதாலும் அன்று அவங்களுக்கு சைவ வெள்ளியாய் ஆனதாலும் கோழி / முட்டை எதுவும் இல்லை. சாப்பாட்டை பற்றி ஒரு வரி. ஒரு வரிதான். நன்றாக வெட்டினோம். திருமதி சிவா அவர்களே, மீண்டும் ஒரு முறை நன்றி.

சாப்பிட்ட களைப்பு தீர இளைப்பாறிவிட்டு, (யோவ், எதுக்குத்தான் ரெஸ்ட் என ஒரு நியாயம் இல்லையா எனத் திட்டுவோர்க்கு. அதுக்கெல்லாம் கால்கரி போய் ஒரு கட்டு கட்டினால்தான்யா தெரியும்!) பிறகு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜிகர்தண்டா. அவ்வளவு நேரம் உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொண்டிருந்த சிவாண்ணா வீறு கொண்டு எழுந்தார். சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் டேபிள் மீது தனக்கு தேவையான சாமான்களைப் பரப்பினார். எனக்கென்னவோ அவருக்கு இதற்கு முன் ஒரு வண்டியில் அடுக்கி வைத்த பிராக்டீஸ் இருந்த மாதிரி ஒரு பீலிங்!

முன்றைய தினம் ஊற வைத்த கடற்பாசியை கிளாஸில் விட்டு அதற்குமேல் நன்னாரி சர்பத்தையும் பாலையும் விட்டு கலக்கி ஜிகர்தண்டா செய்தார். அவரின் குறிப்பில் 'இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் இப்படி செய்தது நன்றாகவே இருந்தது. என் மனைவியார் ஜிகர்தண்டா குடித்தது அதுவே முதல்முறை. அதனால் அவர் கடற்பாசி வெஜிடேரியந்தானே என கேட்டு உறுதி செய்து கொண்டார். நன்றாகவே இருந்தது என நான் கூறியவுடன், சிவாண்ணா ஒரு முறை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். அந்த வட்டக் கழுத்து டீ ஷர்ட்டில் அவர் அதை எப்படி செய்தாரோ தெரியவில்லை.

ஆனால் அவர் மனைவி 'இதெல்லாம் என்ன ஜிகர்தண்டா. பால்கோவா போடாத ஜிகர்தண்டாவெல்லாம் ஒரு ஜிகர்தண்டாவா?' என சவுண்ட் விட்டார். அட, இதைப் பற்றி அண்ணன் பதிவில் ஒன்றும் சொல்லவில்லையே எனக் காதைத் தீட்டிக்கொண்டேன். இவரும் விடாமல் அதெல்லாம் மேட்டுக்குடிகளின் பழக்கம், ஏழைத் தொழிலாளிகள் குடிப்பது இதைப் போன்ற ஜிகர்தண்டாதான் என வாதாட. நிலமை தமிழ்மணம் போல் மாறத் துவங்கியதால் நான் இது நன்றாக இருக்கிறது. அதுவும் நன்றாக இருக்கும் போலவே தோன்றுகிறது என ஒரு சாலமன் பாப்பையாத்தனமான தீர்ப்பைக் கொடுத்து தப்பித்துக் கொண்டேன். மதுரைக்காரய்ங்களா வந்து தீர்ப்பு சொல்லுங்க. இப்படி ஒரு சாப்பாடும் ஜிகர்தண்டாவும் குடித்த பின் நாங்கள் இருந்த நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்ல வேளை அதற்கு முன் அவரின் தோட்டத்தில் எடுத்த ஒரு படம் இருந்ததால் தப்பித்தேன். இதோ எங்கள் நிலை.



அதன்பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களிடம் விடை பெற்றோம். சிவாண்ணா, ஒரு அருமையான மாலைப் பொழுதுக்கு ( சரி, சரி - அதற்கும் மூன்று பதிவெழுத மசாலா கொடுத்ததுக்கும்) நன்றி உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும். திரும்பி வரும் போது விமானப்பயணம் ஒரே கூத்து. அதை சொல்லணும்னா தனிப் பதிவுதான் போடணும். ஆனா அப்படி போட்டா உங்களில் நிறையா பேர் உதைக்க வருவீங்க என்பது தெரியும் என்பதால் ஒரே ஒரு வரி. பத்திரமாய் வந்து சேர்ந்தாச்சு. அவ்வளவுதான்.

Thursday, May 25, 2006

தமிழ்மணத் தாக்கமும் கவிப்பூ திறனாய்வும்

கால்கரி பயணம் பற்றிய முதல் பதிவு

நாங்கள் உணவருந்தச் சென்ற இடம் கால்கரியில் உள்ள மைசூர் பாலஸ் என்ற உணவு விடுதி. உள்ளே சென்று அமர்ந்ததும் அவர்கள் தந்த உணவுப் பட்டியலில் அவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு இருந்தது. அதில் முதல் வரி - "Welcome to Mysore Palace, the South Indian Chettinadu restaurant".



வித்தியாசமானதொரு கூட்டணியாகத் தெரிகிறதா? சற்றே சிந்தித்தால் கூட்டணி என்றவுடன் நினைவுக்கு வருவது அரசியல்தான். அதிலும் மைசூர் என்றவுடன் நினைவுக்கு வருபவர் யாரென்று தெரியாதா? அதே போல் செட்டிநாட்டின் அரசியல் முகம் நமது நிதியமைச்சர்தானே. சரிதான். மற்ற கட்சிகளும் இருக்கிறதா எனப் பார்த்தால் அங்கு உதயசூரியனுக்கு இடமே இல்லை. அவர்கள்தான் இல்லை தமிழ்க்குடிதாங்கி அவர்களின் சின்னமாம் மாம்பழமாவது இருக்கிறதா எனப் பரிமாறுபவரை அழைத்துக் கேட்டால் அதுவும் இல்லை. ஆக முன்னேறிய வருக்கமான பார்ப்பனர்களும் செட்டியார்களும் இடம் பெற்று இருக்கும் அந்த விடுதியிலே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போனதேன்? இது அம்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியல்லவா? இச்சதிக்கு துணை போகும் அவ்விடுதியின் உரிமையாளர்களுக்கு என்ன முத்திரை குத்த வேண்டுமென நமக்குத் தெரியாதா?

ஒண்ணுமில்லைங்க. இப்போ வரும் தமிழ்மணப் பதிவுகள் எல்லாம் படிச்சு, இப்படித்தான் யோசிக்கத் தோணுது. நான் மாம்பழம் இருக்கான்னு கேட்ட போது என்னை ஒரு மாதிரி பார்த்த சிவா, நான் ஏன் கேட்டேன் என விளக்கியதும் பார்த்த பார்வை இருக்கிறதே. செம காமெடி போங்க. உண்மையை சொல்லுங்க, மைசூர் அரண்மனை என பெயர் வைத்துக் கொண்டு செட்டிநாடு உணவகம் எனச் சொன்னா நல்லாவா இருக்கு? ஆனா உண்மையாகவே அந்த விடுதி மேல கோபம்தாங்க. பின்ன என்ன, தங்கக்கழுகும் இல்லை, மீன்கொத்தியும் இல்லை. சரி நம்ம சரக்குதான் இல்லை, உள்ளூர் சரக்காவது இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. கடைசியாக அவங்களே முடிவு செய்து தண்ணீரைப் போல இருக்கும் ஹெய்னிகன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அந்த உணவுப் பட்டியலின் முதல் பக்கத்தைத் தாண்டிச் சென்றால் அடுத்தது Appetizers எனும் துவக்க உணவுகளின் விபரம். அதில் முதலாவதாக இருந்தது கவிப்பூ வறுவல். கவிதை எழுதினால்தான் அதைப் பிய்த்து பொரித்து எடுக்கிறார்கள் என்றால் இங்கு உண்மையாகவே அதனை வறுத்து கொடுக்கிறார்களே என ஆச்சரியப்பட்டு, அது என்ன என விசாரித்தால் அது காலிஃபிளவர் ஃபிரையாம். காலிஃபிளவரருக்கு கவிப்பூ என கவித்துவமான பெயர் சூட்டிய மகான் யாருன்னு தெரியலை. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தால் எங்களுக்கு தமிழில் என்ன சொல்லுவோம் என ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்து பூக்கோஸ் (முட்டைக்கோஸ் போல) எனச் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆக, கால்கரி சென்றதனால் நானும் சிவாண்ணாவும் காலிஃபிளவருக்கு தமிழ் பெயர் அறிந்து கொண்டோம். இதையும் சிவாண்ணா அவர் பதிவில் என் வருகையால் கிடத்த புதையல் லிஸ்டில் சேர்க்க வேண்டும்.



இதற்குப் பின் விசேஷமாக எந்த நிகழ்வும் இல்லாமல் அன்றைய இரவுணவு முடிந்தது. துளசியக்கா, அங்கு ஒரு மிகப்பெரிய யானை சிற்பமொன்று வைத்திருந்தார்கள். பார்த்தவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது! அதை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்பது என் மனைவிக்கு மிகப் பெரிய கேள்வியாய் இருந்தது. அதிகப்பிரசங்கித்தனமாக பதில் ஏதும் சொல்லாததால் என் தலை தப்பியது. அந்தப் படம் உங்களுக்குத் தனி மடலில் அனுப்பறேன்.

அடுத்த நாள், நாங்கள் திட்டமிட்டபடி பான்ஃப் சென்று வந்தோம். அது Rocky Mountains என அழைக்கப்படும் மலைத்தொடரில் இருந்தது. குளிராக இருக்கும், மழை வருமெனவெல்லாம் பயமுறுத்தினார்கள், ஆனால் நாங்கள் சென்ற அன்று வெயில் காய்ந்தது. ஒரு மலை மீது ஏற Gondola எனும் கம்பி வழி செல்லும் இழுவண்டி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை போன்ற வண்டிகளில் நாங்கள் இந்தியாவிலும் மலம்புழா மற்றும் ஹரித்துவாரில் போய் இருக்கிறோம். குஜராத்திலும் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அம்மலையில் Sulphur Springs என அழைக்கப்படும் சுனைகள் இருக்கின்றன. வருடமுழுவதும் அங்கு சூடான நீர் வருமாம். அதில் குளித்தால் உடம்புக்கு நல்லதாம். இங்கு எடுத்த படங்களை வேறொரு நாள் பதிவில் போடுகிறேன். (அதாவது எழுத சரக்கு இல்லாமல் போனா படங்காட்டறேன்!)

மலையிலிருந்து கீழே இறங்கி நேராக சிவாண்ணா வீட்டுக்கு போனோம். அங்க என்ன நடந்தது? ஜிகர்தண்டா கொடுத்தாரா? இதெல்லாம் அடுத்த பதிவில். :)

Sunday, May 21, 2006

கால்கரியில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

நள்ளிரவு நேரம். கால்கரி வந்து இறங்கியாகி விட்டது. மடியில் கனமிருப்பதால் வழியில் பயமாய் இருக்கிறது. விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் எங்களையே பார்ப்பது போல ஒரு உணர்வு. திருட்டு முழியால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நம்மை நாமே காட்டிக்கொடுத்து விடப் போகிறோமோ என ஒரு பயம். சகஜமாய் பேசிக் கொண்டிருப்பது போல் நடித்தாலும் நெற்றியில் வழிந்து வரும் வேர்வை வெய்யிலினால் இல்லை என்ற உண்மை சுட்டுக் கொண்டே இருக்கிறது. சுங்க சோதனை சாவடிகளைத் தாண்டும் போது இதயத் துடிப்பால் உடம்பு முழுவதும் நடுங்குவது போல் ஒரு உணர்வு. அங்குள்ள ஊழியர் 'தங்கள் வருகை நல்லபடியாக அமையட்டும்' என ஒரு புன்னகையுடன் வாழ்த்தி வரவேற்றது கூட மனதில் படாமல் வெளியே ஓடி வந்து வாடகைக் காருக்கு நிற்கும் பொழுது மெல்ல இதமாய் வருடிச் சென்ற குளிர்ந்த காற்றுதான் எங்களை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தது. நாங்கள் கால்கரிக்குள் நுழைந்து விட்டோம். அதுவும் சிவாவிற்காக கடத்திக் கொண்டு வந்த பொருட்களுடன், யாரிடமும் மாட்டாமல்! இனி நிம்மதியாக விடுதிக்கு சென்று உறங்கலாம்.

யப்பா, கிரைம் நாவல் எழுதற பார்ட்டிங்களா, இப்படி நாலு வரி எழுதறதுக்கு முன்னமே முட்டுது. உங்களுக்கெல்லாம் ஒரு பெரிய கும்பிடு. ஆக மொத்தம் சொல்ல வந்தது என்னன்னா, கால்கரி போயி சேர்ந்தாச்சு. ஒரு பிராபளமும் இல்லை. அய்யா கார்த்திக் அவர்களே, நான் பார்த்த வரை அங்க ஒரு நாயும் இல்லை, நாங்களும் நாய் படாத பாடு படலை. ஆகவே வாங்கி வெச்ச 100 ஊசியையும் வேஸ்ட் பண்ணாம நீங்களே அலகு குத்திக்குங்க.

அடுத்த நாள் மாலை ஒரு போன் போட்டு சிவாவை ஹோட்டல் ரூமுக்கு வரச் சொல்லியாச்சு. அவரும் வேலை நேரம் வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு அப்புறமா வந்தார். முதலில் ஒரு சிறு அதிர்ச்சி. கோபால் பல்பொடி மற்றும் தமிழ்மணத்தில் அடிக்கடி கூறுவது போலிகளைக் கண்டு ஏமாறாதீர். அதுபோல இன்னும் ஒன்று - போட்டோக்களைக் கண்டு ஏமாறாதீர். அவர், தான் எழுதும் அரபி அனுபவங்களுக்குத் தோதாக இருப்பதால் ஒரு பழைய பஞ்சத்தில் அடிபட்ட போட்டோவைப் போட்டுக்கொண்டு திரிகிறார். ஆள் அப்படி இல்லவே இல்லை. இருந்தாலும் வந்தவர்தான் சிவாண்ணா என நம்பிக்கொண்டு அவரை குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவிட்டு என்ன செய்யலாம் என ஒரு சதியாலோசனையில் ஈடுபட்டோம். கடைசியில் அன்று அவருடன் அவரது வீட்டிற்குச் சென்று, பின் அவர் குடும்பத்துடன் வெளியில் சாப்பிடச் செல்வது என முடிவானது.

அவரது இல்லத்திற்கு சென்று அவரது மனைவி மக்களுடன் அறிமுகம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு வலைப்பூக்கள் பக்கம் திரும்பும் போதெல்லாம் மனைவியர் இருவரும் கடுப்பாக பார்க்க, ஆஹா, எல்லார் வீட்டிலும் நிலமை இதுதான் போலிருக்கிறது என சிரித்துக் கொண்டோம். வாரயிறுதியில் செய்யும் வேலைகள் பற்றி பேசும்போது இளவேனிற்காலம் வந்துவிட்டதால் வீட்டைச் சுற்றி இருக்கும் புல்வெளியைக் கொத்தவேண்டுமென கூறினார். சரி, இதுதான் நம் துறையாயிற்றே என இலவச ஆலோசனைகள் சிலவற்றைக் கூறினேன். இலவசமானதால் சிவா சரியாக காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் பதிவிலும் சற்று மாற்றி எழுதிவிட்டார். சரியான ஆலோசனைக்கு அணுகவேண்டிய முகவரி - elavasam.blogspot.com. (ஆமாங்க, இந்த மாதிரி எல்லாம் பொடி வைக்கலைன்னா பின்னூட்டம் வாங்கறது எப்படி?)

பிறகு அடுத்த நாள் என்ன செய்யாலாம் என அவரைக் கேட்டு பான்ஃப் (Banff) எனும் மலைவாசஸ்தலத்துக்குப் போய் வரலாம் என முடிவு செய்தோம். ஆனால் கால்கரி மொத்தத்திலும் ஒரு வாடகை கார் கூட கிடைக்கவில்லை. திங்களன்றும் விடுமுறையாம் அதனால் தீர்ந்துவிட்டதாம். சரியென்று ஒரு பேருந்தில், (அட, சரிங்க. உண்மையைச் சொல்லறேன். சொகுசுப் பேருந்துதான்.) முன்பதிவு செய்துவிட்டு சாப்பிடக் கிளம்பினோம்.

அங்கு சென்றால் இரு வேறு உணர்வுகள். திராவிட பாரம்பரியத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் ஒரு வேண்டத்தகாத சதி உலகெங்கும் நடப்பது நாமனைவரும் அறிந்ததே. அது கால்கரியிலும் வேரூன்றியிருப்பதை அறிந்த போது என் மனம் சொல்லெண்ணாத் துயருற்றது. அதே சமயத்தில் தமிழ் வளர்ப்பதில் கால்கரி யாருக்கும் சளைக்கவில்லை என அறிந்த போது என் மனம் ஆனந்தக் கூத்தாடியது. இவைகள் பற்றி அடுத்த பதிவில்.

பி.கு. : இக்கட்டுரையின் தலைப்பு திரு.மாயவரத்தான் அவர்களுக்கு சமர்ப்பணம்.

Sunday, May 07, 2006

கொத்ஸு பரோட்டா

என்னடா இவன் இப்படி ஒரு பதிவு போடறானேன்னு பார்க்காதீங்க. இதுக்கு பின்னாடி இருக்கற காரணங்களை முதல்ல சொல்லறேன். ஆபிஸில் ரொம்ப வேலை, எழுதறத விடுங்க தமிழ்மணம் பக்கம் வந்து படிக்கக்கூட முடியலை. அதனால பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்ம ரசிகர்கள் எல்லாம் வேற என்ன ஆச்சு, என்ன ஆச்சுன்னு மெயிலும் போனுமா ஒரே அன்புத் தொல்லை. அது மட்டுமில்லாம இந்த தேர்தல் ஜுரத்தில் வேற எந்த பதிவு போட்டாலும் எடுபட மாட்டேங்குது. இதெல்லாம் விட்டா வீட்டுல வேற ஒரு வேலையும் பண்ணறது இல்லைன்னு கம்பிளெய்ண்ட். பதிவு எழுதறதா அல்லது வீட்டு வேலை பாக்கறதா? நீங்களே சொல்லுங்க.

சென்ற வாரம் ஒரு நாள் சப்பாத்தியும் சாதமும் அலுத்துப் போச்சு. வேறேதாவது செய்யலாமே என சொல்லப்போக, வந்தது வினை. நீங்களே செய்யுங்களேன் என சீறிப் பாய்ந்தது ஒரு ஏவுகணை. நுணலும் தன் வாயால் கெடும் (சிலேடை எல்லாம் இருக்குங்க) என நொந்துகொண்டே என்ன செய்வது என யோசித்து பிரிட்ஜை குடையும்போது முன்பு வாங்கி வைத்திருந்த குளிருறைக்கப்பட்ட (அதாங்க frozen) பரோட்டா பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டது. சரிதான் இதை வைத்து எதாவது செய்யலாம் என முடிவு பண்ணி கையில் கிடைத்தவையெல்லாம் போட்டு செய்த பதார்த்தம்தான் கொத்ஸு பரோட்டா. நாங்க சாப்பிட்டோம் நல்லா இருந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோபி வேற வந்து சூப்பரா இருக்குன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். ஆகவே மக்களே உங்களுக்காகவே கொத்ஸு பரோட்டா செய்முறை. நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.

முதல்ல என்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
  • வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
  • தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
  • முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
  • இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
  • கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க. இப்போ செய்முறை.

  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
  • பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
  • அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
  • வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
  • அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
  • இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
இதுக்கும் கொத்து பரோட்டாவிற்கும் என்ன வித்தியாசம், அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. அதனாலதான் இந்த பேரு.

ஆங். சொல்ல மறந்துட்டேனே. தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ்.