Thursday, November 30, 2006

நியூசிலாந்தில் டீச்சர்கள் அட்டகாசம்!!

இது நியாயப் படி துளசி டீச்சர் போட வேண்டிய பதிவு. அவங்க கண்ணுல இந்த செய்தி எப்படி மிஸ் ஆச்சோ தெரியலை. அதனால கிடைச்சுது சான்ஸுன்னு நான் ஒரு பதிவு போட்டாச்சு. தலைப்புக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சும்மா ஓரு கவர்ச்சிக்காக வைத்தது. அதனால் அதற்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு எதையும் தேட வேண்டாம்! :-D

விஷயம் என்னன்னா, நம்ம பசங்க குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் போது வார்த்தைகளை குறுக்கி தட்டெழுதி அனுப்பறாங்க இல்லையா? அதாவது Text Message என்பதையே Txt Msg என்றோ, See You என்பதை CU என்றோ தட்டெழுதுகிறார்களே. இது போல குறுக்கப்பட்ட வார்த்தைகள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு Text Speak என்று பெயர்.

தற்பொழுது நியூசிலாந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் தேர்வுகள் எழுதும் பொழுது இது போன்ற குறுக்கப்பட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம் என அங்குள்ள தேர்வாணையக் குழு ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. வழக்கம் போலவே இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

இது பற்றி சி.என்.என் வலைத்தளத்தில் வந்திருக்கும் செய்திக்கான சுட்டி இது. ஒரு முறை படித்து விடுங்கள். எனக்கு மிகவும் பிடித்தது, செய்தியின் கடைசியில் இது பற்றி, நம் சக வலைப்பதிவாளர்(!) பில் ஸ்டீவென்ஸ் சொல்லி இருக்கும் கமெண்டுகள்தான் - Internet blogger Phil Stevens was not amused by the announcement. "nzqa[New Zealand Qualifications Authority]: u mst b joking," Stevens wrote. "or r u smoking sumthg?"! :-D

எனக்கு இரண்டு கேள்விகள். வழக்கம் போல எல்லாரும் வந்து உங்க கருத்தைச் சொல்லுங்க பார்க்கலாம்.

  1. தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
  2. தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உண்டா? அதில் இது போல குறுக்கி எழுதப்படும் வார்த்தைகள் உண்டா?

Wednesday, November 29, 2006

கேள்வியின் நாயகர்களே....

நம்ம விக்கி பதிவில் கேள்வியின் நாயகனே அப்படின்னு ஒரு பதிவு போட்டோம். என்ன காரணத்துனாலயோ தமிழ்மணத்துல வரலை. அதுல பின்னூட்டம் போட்டாக்கூட முகப்பில் வர மாட்டேங்குது. அதனால இந்த பதிவு ஒரு ரிபீட். விக்கி பசங்க பக்கத்தில் இருக்கும் பெரிய கேள்விக்குறியைச் சொடுக்கினால் இந்த பதிவுக்கு கொண்டு செல்லும். எல்லாம் ஒரு நடை வந்திடுங்க. இனி அந்த பதிவு. இதுக்கு அப்புறம் எழுதினது எல்லாம் விக்கி பதிவுல இருந்து கட் பேஸ்ட். அதனால கேள்விகளை அங்க கேளுங்க. இங்க இல்லை.

நம்ம மக்கள்ஸ் கிட்ட கேள்வி கேட்கலாம் அப்படின்னு ஒரு வார்த்தைதான் சொன்னோம். கேள்வி கேட்க நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா? சும்மா தூள் கிளப்பிட்டாங்க. கேள்விங்களை மெயிலில் அனுப்புங்கன்னு சொன்னா, அத விட்டுட்டு பின்னூட்டமா போடறாங்க, பதிவா போடறாங்க. யாரு என்ன கேள்வி கேட்டாங்கன்னு ஒரே கன்பியூஷன். என்ன கேள்வி எல்லாம் வந்திருக்கு, எதுக்கு பதில் சொல்லியாச்சு, பதில் சொல்லாத கேள்விகளை எப்படி விக்கி பசங்களுக்குள் பாகம் பிரிப்பது என எங்களுக்கே பல கேள்விகள்!!

அது மட்டுமில்லாம, ஒரு கேள்வி ஏற்கனவே யாராவது கேட்டாச்சா இல்லையான்னு தெரியலை, அப்படின்னு வேற ஒரு கம்பிளைண்ட். சரி, இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யலாமுன்னுதான் இந்த பதிவு.

இதுதான் கேள்விகள் கேட்கும் பதிவு. அதாவது கேள்வி கேட்கறவங்க, இந்த் பதிவுக்கு வந்து கேள்வியை பின்னூட்டம் மூலமா கேட்கணும். நாங்களும் பதில் போட்ட உடனே, அந்த கேள்வி வந்த பின்னூட்டத்தை எடிட் செய்து, பதிலுக்கான உரலைச் சேர்த்திடுவோம்.

கேள்விகளைத் தனிப் பதிவாகக் கேட்டு பதிவு எண்ணிக்கையை ஏற்றிக் கொள்ளும் அன்பர்கள், இங்கு வந்து அந்த பதிவின் உரலையாவது பின்னூட்டமாய் இடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு பதிவில் முடிந்த மட்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். எங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும், பதில் அளிக்கவும் அது எளிதாக இருக்கும்.

இந்த பதிவுக்கான சுட்டி விக்கி வலைத்தளத்தில் தனியாக தெரியும். அந்த சுட்டி மூலம் இங்கு வந்தால், இது வரை கேட்கப் பட்ட கேள்விகள், பதிலளிக்கப்பட்ட கேள்விகள், அதற்குண்டான உரல்கள் என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.

என்ன அன்பர்களே, இந்த ஆலோசனை சரிதானே? இனி என்ன? ஸ்டார்ட் தி மியூஜிக்!

Tuesday, November 28, 2006

விரைவில் தமிழ்மணத்திலும் 33% ஒதுக்கீடு???

இந்தியாவில் இருக்கும் வலைப்பதிவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களே! அதுவும் சும்மா 51 சதவிகிதம் 60 சதவிகிதம் எல்லாம் இல்லை. இந்திய வலைப்பதிவர்களில் 76% ஆண்களாம். இதை நான் சொல்லலைங்க. ஆனானப்பட்ட பில் கேட்ஸ் கம்பெனி வெளியிட்டு இருக்கும் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் தெரிய வந்திருக்கும் புள்ளி விபரம் இது. (அவங்களை நம்பாதவங்க நம்ம தமிழ்மண நட்சத்திரங்களில் பெண்களின் எண்ணிக்கை அப்படின்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துக்குங்க. :) )

இன்னும் சில புள்ளி விபரங்கள் பார்க்கலாமா?

  • வலைப்பதிவுகளைப் படிப்பவர்களில் 42% உலக நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் (பாவம் மக்கள்ஸ்!) 49% பொழுது போக்கிற்காகவும் (அடுத்தவன் சண்டை போட்டுக்கிறத பாக்கறது ஒரு பொழுது போக்கா?) படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

  • வலையில் மேய்பவர்களில் 14% தொடர்ந்து வலைப்பூக்களில் பதிவுகள் இடுகிறார்கள். (அதுவே இந்த நிலமையின்னா மத்தவங்களும் எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது?)

  • வலையில் மேய்பவர்களில் 39% பேருக்குத்தான் வலைப்பூக்கள் பற்றி தெரிந்து இருக்கிறதாம். (மத்த 61% எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்காங்க.)

  • வலைப்பதிவர்களில் 54% பேர் 25 -34 வயதுக்குள்ளாக இருப்பவர்களாகவும், 32% 25 வயதிற்குக் கீழாகவும், 15% 35 வயதிற்கு மேலாகவும் இருப்பதாகத் தெரிகிறது. (கூட்டினா 100 மேல வருதேன்னு என்னைத் திட்டாதீங்க. இது அவங்க சொன்னது.)

  • 87% வலைப்பதிவர்கள் வாரத்திற்கு ஐந்து மணி நேரம் வரை வலைப்பதிவுகளைப் பதிவதிலும் படிப்பதிலும் செலவிடுகின்றனராம். (நம்மள மாதிரி தமிழ்மண வியாதி பிடிச்சவங்களைப் பத்தி தெரியாது போல!)

  • பாதிக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை வாரத்திற்கு பத்து பேர் கூட வந்து படிப்பதில்லையாம். (கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கத் தெரியாமலோ, விவகாரமான விஷயங்களைப் பத்தி எழுதாமலோ இருந்தா எவன் வருவான்.)

  • தொழிலதிபர்களால் எழுதப்படும் வலைப்பூக்களுக்குத்தான் நல்ல வரவேற்பாம். (மா.சிவக்குமார் ஞாபகம் வருதா?)

  • அரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா?)

இது பத்தின ரீடிப் செய்தி இங்க, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இங்க.



Thursday, November 16, 2006

எப்படி இருந்த கைப்பு இப்படி ஆகிட்டியேப்பா!!!

இந்த வாரம் அலுவல் காரணமாக ஜெர்மனி செல்ல வேண்டி வந்தது. போகும் பொழுது லுப்தான்ஸா விமானமொன்றில் சென்றேன். அதிலிருந்த புத்தகத்தில் அவர்கள் விமானங்களில் காண்பிக்கப் படும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களும் அவை பற்றிய ஒரு சிறு குறிப்பும் காணப்பட்டது.

சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் இந்த மாதம் காண்பிக்கப் படும் திரைப்படம் நம் கைப்பு ஸ்பெஷலான இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி. அட அயல்நாட்டு விமானங்களில் கூட நம்ம கைப்பு புகழ் கொடி கட்டிப் பறக்கிறதே என ஒரு மகிழ்ச்சியோடு, ரொம்ப ஆர்வமாய் அதன் கதைச்சுருக்கத்தைப் படித்தேன். நீங்களும் அந்த கொடுமையை அனுபவியுங்கள்.




படத்தை சொடுக்குங்கள். கொஞ்சம் பெரிதாகத் தெரியும்.

என்ன படித்தீர்களா? தாங்க முடிந்ததா? எழுத்துப் பிழைகளை விட்டுத் தள்ளுங்கள். சொல்லி இருக்கும் கதையைப் பாருங்கள். நம்ம இம்சை அரசனுக்கு வாய் பேச வராதாம். ஊமையாம். படம் பார்த்த அனைவரும் வந்து கொஞ்சம் பதில் சொல்லுங்கள், இது நான் பார்த்த இம்சை அரசன் படத்தின் கதைதானா அல்லது இரண்டாம் பாகம் எதாவது வந்துவிட்டதா?

மன்னா என அழைப்பவர்களை என்னா என ஒரு திமிரோடு கேட்ட கைப்புவை, கன்னாப்பின்னாவென கேள்வி கேட்டு காவலாளிகளை மடக்கிய இம்சையரசனை இப்படி பேசா மடந்தையாக்கிவிட்டார்களே! ஐயகோ இஃது என்ன கொடுமை! Dumb Child என்ற பதத்தை வாய்பேசாதவன் என மொழிபெயர்த்த அந்த மகானுபாவனை என்னவென்று சொல்லுவது? என்ன தண்டனை கொடுக்கலாம்? உங்கள் ஐடியாக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்த லட்சணத்தில் ஆங்கில சப்டைட்டில் வேறு இருக்கிறதாம். யாராவது சென்னையில் இருந்து லுப்தான்ஸாவில் வந்தீர்களானால் மறக்காமல் இந்த படத்தை சப்டைட்டில்களோடு பார்த்திவிட்டு அதைப் பற்றி எழுதுங்கள்.