Wednesday, May 30, 2007

விடுகதையா இந்த வாழ்க்கை?!!

போன பதிவில் கமலைப் பத்தி சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா ரஜினி ரசிகர்கள் சும்மா விட்டுடுவாங்களா? அதான் ரஜினி பட பாட்டு ஒண்ணைத் தலைப்பா வெச்சாச்சு. விடுகதை அப்படின்னு சொன்ன உடனே சிவாஜி ரிலீஸ் டேட் பத்திதான் பதிவுன்னு தப்புக் கணக்குப் போடக் கூடாது. அதெல்லாம் பத்திப் பேச நான் என்ன கடவுளா என்ன? சரி போகட்டும்.

இந்தப் பதிவு வந்து ரீபஸ் என்ற புதிர் பற்றி. நான் வலையுலகில் வந்த புதுசுல எழுத மேட்டர் இல்லாம போட ஆரம்பிச்ச விஷயம் இது. நட்சத்திர வாரத்தில் கட்டாயம் போடணும் அப்படின்னு ஏகப்பட்ட பிரஷர். அதனால நம்ம ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மீண்டும் ரீபஸ் பதிவு. அப்போ எல்லாம் நம்ம பக்கம் வராதவங்களுக்காக ரீபஸ் பற்றி ஒரு சிறு விளக்கம்.

ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறொரு வார்த்தையாலோ அல்லது ஒரு படத்தாலோ குறிப்பிடுவதே ரீபஸ் புதிராகும். ரீபஸ் என்றால் லத்தீனில் பொருட்களின் மூலம் என்று அர்த்தமாம். பொருளாலும் (meaning) பொருட்களாலும் (things) ஒரு சொல்லையோ சொற்றொடரையோ குறிப்பிடுவதுதான் ரீபஸ். இதற்கு மேலும் ரீபஸ் பற்றி படிக்கவும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும் இங்க போயிட்டு வாங்க.

ரீபஸ் அப்படின்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா? இப்போ இந்த வாரத்து புதிர்கள். வழக்கம் போல விடைகள் எல்லாம் தமிழ்த் திரைப்படப் பெயர்கள்தான். அதுவும் இங்க இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்தான். விடைகளை நீங்க பின்னூட்டமா போடுங்க. பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படாது. விடைகள் சரியா தவறா என்பது மட்டும் சொல்லப் படும்.

போன தடவை எல்லாம் ரொம்ப எளிதாக இருப்பதாக கலந்து கொண்டவர்கள் சொன்னதால் இந்த முறை புதிர்கள் கொஞ்சம் கடினமானவைதான். புதிதாகத் தெரிந்து கொள்ளலாம் என, சில புழக்கத்தில் இல்லாத சொற்களையும் இங்கு தந்துள்ளேன். சொல் ஒரு சொல் நண்பர்கள் மன்னிப்பார்களாக. ஆட்டத்தை ஆரம்பிப்போமா?

இனி புதிர்கள்
  1. அமடல்வா
  2. சகத்வன்திரம்
  3. நெஞ்கல்யாணிசு
  4. விவரி
  5. ஓவியலூசு
  6. சிரிப்ஏழைபு
  7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்)
  8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)
  9. ஆலஜானிவாக்கர்யம்
  10. வேல் வினை
  11. மீண்டும் மீண்டும்
  12. அட்சி இரதன்
  13. உயர்ளம்ந்த
  14. என்விதிகை
  15. சஹானா ஆதி ரூபகம்
  16. அஜீத் அடானா
  17. காததோழன்லி
  18. இந்தியா

பழைய புதிர்ப் பதிவுகளைப் பார்க்க விரும்புவோர்க்காக அந்த சுட்டிகள்.

  1. புதிர்ப் பதிவு 1
  2. புதிர்ப் பதிவு 2
  3. புதிர்ப் பதிவு 3
  4. புதிர்ப் பதிவு 4

கமலின் வலி எனக்குப் புரிகிறது!

இன்னிக்கு தமிழ்படங்கள் எடுத்துக்கிட்டா பெரும்பாலான படங்கள் வந்து இந்த பார்முலா படங்கள் எனச் சொல்லக்கூடிய ஒரு சூத்திரத்திற்குள் அடங்கிவிடுகிறது. அதாவது ஒரு ஹீரோ+ அம்மா அல்லது தங்கை செண்டிமெண்ட்+ ஒரு பணக்கார ஹீரோயின்+ அவளோட கெட்ட அப்பா+ 5 பாட்டு + 4 சண்டை + ஒரு பஞ்ச் டயலாக் இதுதானே அந்த சூத்திரம். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை இதையே அரைச்சு அரைச்சு தியேட்டர் பக்கம் போனாலே புளிச்ச வாடை அடிக்குது.

இதுலேர்ந்து கொஞ்சம் வித்தியாசமா படங்கள் தர முயற்சி பண்ணற, விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரில் முக்கியமான ஒருவர் நம்ம கமல். ஆனாப் பாருங்க அந்த மாதிரி முயற்சிகள் பெரும்பாலும் முழுதும் உள் வாங்கப் படறது இல்லை. பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தழுவுது, சில வெற்றிப் படங்கள் ஆனாலும் அதில் அவர் கவனம் எடுத்து செதுக்கி இருக்கும் காட்சிகள் கண்ணில் படாமலேயே போகுது. உதாரணத்துக்குப் பார்த்தீங்கன்னா, அன்பே சிவம் படம் ஓரளவு வெற்றி பெற்ற படம்தான். ஆனா அதில் அவர் சிரமம் எடுத்து செதுக்கி இருக்கும் சில காட்சிகள் எல்லாம் நம்ம கண்ணில் படவே இல்லை. அவர் வந்து அந்த ஒரிசா ஹோட்டலில் தரையில் படுத்து இருப்பார். அப்போ பார்த்தீங்கன்னா அவரோட ஒரு கால் வந்து மற்றொரு காலை விட குட்டையாகத் தெரியும். இதை நாம எத்தனை பேர் பார்த்து இருப்போம். ஆனா அவ்வளவு உழைப்பு இருக்கு அதற்குப் பின்னாடி.


ஒருத்தரே ஒருத்தர் பார்த்துப் பாராட்டினாலும் போதும். அதுதான் எனக்கு சந்தோஷம் என அவர் சொன்னதாகப் படித்து இருக்கேன். தான் சரியானதைத்தான் செய்கிறோம் என்பது தெரிந்தும், அதற்காக கடினமாக உழைத்தும், அது போய்ச் சேர வேண்டிய அளவிற்குப் போய் சேராதது எவ்வளவு வலியைத் தரும். அதுவும் ஒரு முறை இல்லை. மீண்டும் மீண்டும். இப்படி தொடர்ந்து செய்வதற்கு எவ்வளவு மனத்துணிவு இருக்க வேண்டும். உண்மையில் இவர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். இவருடைய முயற்சிக்கு ஆதரவு தந்து இவரை மீண்டும் பார்முலா படங்கள் பக்கம் போகாமல் இருக்கச் செய்வது நம் கடமை.

என்னடா இது ஓவட்டோஸ் புலம்பலா இருக்குன்னு பார்க்கறீங்களா? பின்ன என்னங்க, ரொம்பவே மண்டையை உடைச்சுக்கிட்டு ஒரு பதிவு போட்டா, அந்த ஐடியா சரியாகப் போய் சேராமல் இருந்தால் அவரு படம் ப்ளாப்பாகுறதுதான் ஞாபகத்துக்கு வருது.

உப்புமா பதிவு ஒண்ணு போட்டேன். அதில் வெளிப்படையா தெரியறது ஒரு லேயர், அப்புறம் உள்குத்து ஒரு லேயர் என பல லேயரில் வைத்து ஒரு பதிவு போட்டா முதல் லேயரை மட்டும் பாத்துட்டு இதெல்லாம் ஒரு உப்புமாவான்னு கேட்டுட்டு போயிடறீங்க. அதுவும் கேப், பார்மேட்டிங், வெள்ளெழுத்து, ஹைலைட் அப்படின்னு எவ்வளவுதான் ஹிண்ட் தரது. இப்போ சொல்லறேன் கேட்டுக்குங்க.

மக்களே, அந்த பதிவில் பார்மேட்டிங் பிரச்சனைகள் இல்லை. வெள்ளைக் கலரில் சில பத்திகள் எழுதப் பட்டுள்ளன. முழு பதிவையும் ஹைலைட் செய்தீர்களானால் அந்த எழுத்துகள் தெரியும். பெனாத்தலாரின் குறிப்புகள் அவை. படித்து மகிழுங்கள்.


அப்பாடா. முடியலைடா சாமி!!

டிஸ்கி: வலையுலக வரலாற்றில் முதன் முறையாக என் பதிவுக்கு பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்திருக்கிறேன். இது 1005க்கு பயந்து என வரும் வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் பின்னூட்டங்கள் போடப்பட வேண்டிய இடம் இது.

Tuesday, May 29, 2007

நட்சத்திர உப்புமா (அ) பெனாத்தலாருக்கு சமர்ப்பணம்

எல்லாரும் வித்தியாசமான பல விஷயங்கள் தரும் இந்த வாரத்தில் நமக்கென்று இருக்கற ஸ்டைலை விட்டு விடலாமா? அதனால மக்களே இந்த வாரம் நட்சத்திர உப்புமா! உப்புமா பதிவு என்பதால் நம்ம உப்புமா குரு, மின்னொளி மன்னன் பெனாத்தலாரிடம் அனுப்பி சரி பார்க்கச் சொன்னேன். அவர் தந்த உப்புமா குறிப்புகள் இங்க இருக்கு. தேடிப் பார்த்தீங்கன்னா கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா கேளுங்க சொல்லறேன். இனி பதிவு.

இன்னிக்கு ஆணி புடிங்கறவங்க மத்தியில வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமா இருக்கு. அல்சர், எரிச்சல், வாயுத் தொல்லை எனப் பல விதமான பிரச்சனை இவர்களைத் தாக்குது. அளவுக்கதிகமான காபி, எழுந்து நடமாடாமல் இருக்கும் இடத்திலேயே வேலை என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும் மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனைகளுக்குக் காரணமாகச் சொல்வது காலை உணவு உட்கொள்ளாததுதான். அதுனால இவங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் சமையற்குறிப்பு. அதிகமான பொருட்கள் வேண்டாம், சுலபமாகச் செய்திடலாம், அதிக நேரம் ஆகாது, சுவையாகவும் இருக்கும். இதுக்கு மேல் என்ன வேணும். சந்தோஷமா செய்து சாப்பிடுங்க மக்கா!

இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், ஹிட்டும் வரும். இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!





தேவையான பொருட்கள்
அவல்இரண்டு கப் கணினி 1
உருளைக்கிழங்கு 1 மானிட்டர் 1
வெங்காயம்1 கீ போர்ட் 1
பச்சை மிளகாய்4 ஈ கலப்பை 1
எலுமிச்சம் பழம்1 லதா எழுத்துரு 1
மஞ்சள் பொடி1/2 தேக்கரண்டி இணைய இணைப்பு குறைந்தது 256Kbps
மிளகாய்ப் பொடி1 தேக்கரண்டி பிரவுஸர் 1
கொத்துமல்லிசிறிதளவு கிண்டல் தேவையான அளவு
கறிவேப்பிலைசிறிதளவு நையாண்டி தேவையான அளவு
உப்புதேவையான அளவு அறிவு பூர்வமான அணுகல் 0.00000%
தாளிக்க
வேர்க்கடலை2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு1 தேக்கரண்டி
எண்ணைசிறிதளவு


செய்முறை

1) வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், மாற்று போன்றவற்றை திறந்துவைத்துக்கொள்ளவும்.

2) அவலை நன்றாகக் தண்ணீரில் நனைத்து, களைந்து பின் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.

3) களைந்தெடுத்த அவலில் உப்பும், மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாகப் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்.

4) வாணலியில் எண்ணெய்யை விட்டு அதில் தாளிக்க வைத்திருக்கும் சாமான்களையும் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக வெடிக்க விடவும்.

இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும்.

5) அதன் பின் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாகக் கிளறவும்.

பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.

6) சில நிமிடங்களுக்குப் பிறகு உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப் பார்க்கவும்.

7) காய்கறி நன்றாக வதங்கிய பின் அவலைப் போட்டு நன்றாக கிளறவும்.

பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது.

8) 5 - 6 நிமிடங்கள் கிளறிய பின் அடுப்பை அணைத்திடவும்.
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பப்ளிஷ் பொத்தானை அமுக்கிவிடவும்

9) சற்றே ஆறிய பின் எலுமிச்சை ரசத்தைச் சேர்த்து கிளறவும். மேலே கொத்து மல்லியைத் தூவிவிடவும்.

இடுகையைத் திறந்து, திரட்டிகளுக்குத் தகவல் அனுப்பவும்.

தடித்த அவல், மெல்லிய அவல் என இரு வகைகள் கிடைக்கும். மெல்லிய அவல் எளிதில் குழைந்து விடும். அதனால் தடித்த அவலே நல்லது. சாப்பிட்டு விட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க!

ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது. போட்டுவிட்டு ஹிட்டு ஏறியிருக்கா என்று சொல்லுங்க!

இதோட இன்றைய உப்புமா பதிவு இனிதே முடிந்தது.

Monday, May 28, 2007

துளசி டீச்சருக்கு சமர்ப்பணம்!

முகவுரை

பதிவெழுத ஆரம்பிச்ச புதுசில் என்ன எழுதணும் அப்படின்னு தெரியாம முழிச்ச நேரங்கள்தான் அதிகம். (ஆமாங்க, கட் பேஸ்ட் விளையாட்டெல்லாம் அப்போ தெரியாது.) அப்போ நம்ம டீச்சர்தான் ஒரு முக்கியமான அறிவுரை தந்தாங்க. கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்கோ, உன்னை சுத்தி நடக்கிற விஷயங்களை பாரு. எத்தனை பதிவுகள் எழுத வேண்டுமானாலும் மேட்டர் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. அதைத்தான் இன்னைக்கு வரை பின்பற்றிக்கிட்டு வரேன். அதனாலதான் நான் நட்சத்திரமா இருக்கும் இந்த வாரத்தில் அவங்களுக்கு முதல் பதிவு சமர்ப்பணம்.

அது மட்டுமில்லை. இன்னிக்கு பயணக்கட்டுரை அப்படின்னு சொன்னா உடனே அவங்க ஞாபகம்தான் நமக்கெல்லாம் வரும். இதுவும் ஒரு பயணக் கட்டுரை என்பதாலும் அவர்களுக்கு சமர்ப்பணம். ஒரு விஷயத்தில் அவங்களை மிஞ்சிட்டோமில்ல. ஏன்னா இது ஆன் லொகேஷன் பதிவு. டீச்சர், இதுக்கு என்ன சொல்லறீங்க.

முகவுரை முற்றிற்று.
____________________________________________________________________

இந்த வாரயிறுதி அமெரிக்காவில் ஒரு நீண்ட வாரயிறுதி. இந்த திங்கள்கிழமை மெமோரியல் தினம் என போரில் உயிர்நீத்தோரைப் பெருமைப் படுத்தும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது. நல்ல வெயில் வந்தபின் வரும் முதல் நீண்ட வாரயிறுதி என்பதால், அனைவரும் வெளியூர் சென்று கொண்டாடப்படும் நாட்களாகவே இருக்கிறது. நாங்களும் ஒரு நண்பர் குடும்பத்துடன் நியூயார்க் மாநிலத்தில் லேக் ஜியார்ஜ் என்ற இடத்திற்கு சென்று வந்தோம்.




நியூயார்க் மாநிலத்தின் வடப்பகுதியில் இருக்கும் இந்த ஏரி அடிராண்டேக் என்ற மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்து இருக்க்கிறது. கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் பரப்பளவும் 300 அடி வரை ஆழமும் கொண்டது இந்த ஏரி. இதன் தென்முனையில் இருக்கும் ஒரு கிராமம்தான் லேக் ஜியார்ஜ் கிராமம். இந்த வாரயிறுதியில் இந்தியர்களால், அதுவும் குறிப்பால் தமிழர்களால் முற்றுகை இடப்பட்டது என்றால் மிகையே இல்லை. அவ்வளவு தமிழர்கள்.

சுற்றுலா வரும் விருந்தினர்களையே நம்பி இருக்கும் கிராமம். ஊர் முழுவதும் ஹோட்டல்கள்தான். எல்லா விதமான உணவகங்கள், ஊரின் மையப்பகுதியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடி களிக்க கேளிக்கை இடங்கள், பல விதமான வீரவிளையாட்டுகள் என பொழுது போக்குவதற்காகவே இருக்கும் ஊர். வார நாட்களில் இவ்வளவு விருந்தினர்கள் இல்லாமல் எப்படி இருக்கும் என நினைத்தே பார்க்க முடியவில்லை.

இது மட்டுமில்லாமல், ஒரு பழைய கோட்டையும் இருக்கிறது. கோட்டை என்றால் உடனே நம்மூர் கோட்டை மாதிரி எல்லாம் எண்ணிப் பார்க்காதீர்கள். நம்மூர் அரசர்கள் எல்லாம் அவர்கள் குழந்தைகளுக்கு விளையாட கட்டிக் கொடுக்கும் கோட்டைகள் கூட இதை விடப் பெரிதாக இருக்கும். வில்லியம் ஹென்றி கோட்டை எனப் பெயர் கொண்ட இது இப்பொழுது ஒரு மியூசியமாகவும் ஒரு ஹோட்டலாகவும் இருக்கிறது. செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சண்டைகள் நடந்த இடம் இது. இன்று இதனை ஒரு டிராமா போல் செய்து காண்பிக்கிறார்கள். சிறார்களுக்கு அந்த வீரர்களைப் போன்று உடையணிவித்து, அவர்கள் படையில் சேர்ந்ததுக்காக ஒரு சான்றிதழும் தருகிறார்கள். (எல்லாவற்றிற்கும் தனித்தனி கட்டணம் உண்டு.)



நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் இடமில்லாமல் போய் எங்களை இந்த கோட்டையில் இருக்கும் ஹோட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். ஏரிக்கரையிலேயே அருமையான ஹோட்டல். அறையில் இருந்து பார்த்தால் ஏரியும் அதனைச் சுற்றியுள்ள சிறுவனமும் தெரிவது போன்ற அமைப்பு. ரொம்பவே சந்தோஷமாக ஆரம்பித்தது.




சுற்றிப் பார்க்கவும், செய்து பார்க்கவும் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ள இடம். ஏரியில் படகு வாடகைக்கு எடுத்து ஓட்டுவது, பெரிய கப்பலில் பிரயாணம் செய்வது, மீன் பிடிப்பது போன்றவைகள் இருந்தாலும் பேரா செய்லிங் (Para Sailing), ரிவர் ரேப்டிங் (river rafting), ரிவர் ட்யூபிங் (river tubing), பலூன் சவாரி (hot air ballooning) என பலவிதமான சாகச விளையாட்டுக்களும் உண்டு. இதில் நாங்கள் பேரா செய்லிங் மற்றும் ரிவர் ட்யூபிங் மட்டும் செய்தோம். பலூன் சவாரியின் விலை மிக அதிகமாக இருந்ததால் சாய்சில் விட வேண்டியதாகப் போயிற்று.

பேரா செய்லிங் என்றால் ஒரு படகில் ஒரு பேராசூட்டை கட்டி விட்டு அந்த படகு செல்லும் பொழுது மேலெழும் பாராசூட்டில் தொங்கிக்கொண்டு செல்வது. சுமார் 300 அடி உயரம் வரை அழைத்துச் செல்கிறார்கள். ஒரு ஊஞ்சலில் ஆடும் பொழுது வெகு உயரமாகச் செல்வது போல்தான் உணர்கிறோம். 5 - 7 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த சவாரி ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ட்யூபிங் என்றால் நம்ம ஊரில் லாரி ட்யூபை ஆற்றில் போட்டு அதில் மிதந்து செல்வதுதான். அதைக் கொஞ்சம் ஆர்கனைஸ்டாகச் செய்கிறார்கள். நியூயார்க் நகர் வரை வரும் ஹட்சன் நதியின் ஆரம்பப் பகுதிகளில் ட்யூபில் பயணம் செய்தது நன்றாகத்தான் இருந்தது. ஒர் இரவில் செய்த படகு பயணமும், அப்பொழுது கண்ட வாண வேடிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மற்றொரு விஷயம்.




மிக அதிகமான கூட்டம் இருந்தாலும் சற்றே சரியாக திட்டமிட்டதாலும் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்பதை விட பார்ப்பதை நன்றாக பார்க்க வேண்டும் என முடிவு செய்ததால் ரொம்பவும் அவதி அவதி என ஓடாமல், அழகாகக் கழிந்தது இந்த விடுமுறை. அமெரிக்க கிழக்கு கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இது. போகுமுன் என்னிடம் சொல்லுங்கள் மேலும் தகவல்கள் தருகிறேன்.

Sunday, May 27, 2007

தமிழ்மணத்துக்கு ஏழு நாள் ஏழரை!!

எத்தனையோ பேர் வந்து நட்சத்திரமா ஜொலிச்சிட்டுப் போன இடத்தில் இந்த வாரம் நம்மளை நட்சத்திரமாகப் போட்டு இருக்காங்க. வேற யாருமே கிடைக்கலை போல. அதான் நம்ம பக்கம் எல்லாம் பார்வை திரும்பிடுச்சுன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தாக்கூட முன்ன ஒரு முறை செஞ்சா மாதிரி தமிழ்மணமே நட்சத்திரமாக இருந்திருக்கலாம். இப்போ வேலியில் போற ஓணானை மடியில் கட்டிக்கிட்ட மாதிரி நம்மளை இழுத்து விட்டு இருக்காங்க. ஏண்டா செஞ்சோமின்னு அவங்களும், ஏண்டா செஞ்சாங்க அப்படின்னு நீங்களும் கதறும்படியாச் செய்ய வேண்டியதுதான் நம்ம வேலை. செஞ்சிறுவோம்.

முதல் பதிவு நம்மளை பத்தின அறிமுகமா இருக்கணுமாமே. சரி. நாம மரபு மாறாம அதை வெச்சே ஆரம்பிக்கலாம். முதலில் ஒரு தபா இந்த நட்சத்திர அறிமுகம் அப்படின்னு தமிழ்மணத்தில் எழுதித்தரச் சொன்னதை பார்த்திடுங்க.

அடுத்து, நம்ம கிட்ட நிறையா பேரு கேட்கற ஒரு கேள்வி ஏன் உங்க பேரு இலவசக் கொத்தனார். அதுக்கு அப்புறம் உங்களுக்கு ஊர் என்ன ஏது அப்படின்னு. இது எல்லாமே முன்னாடி எழுதியாச்சு. அதனால அதோடு சுட்டிகள் எல்லாம் இங்க குடுத்து ஒரு பதிவா ஒப்பேத்த வேண்டியதுதான். அது மட்டுமில்லா மீள்பதிவு செய்யறது ஒரு மரபுதானே.

முதல் பதிவு
ஏன் இலவசக்கொத்தனார் - 1
ஏன் இலவசக்கொத்தனார் - 2
எனக்குப் பிடித்தவை (நான்கு விளையாட்டு)
மதுமிதாவிற்காக இலவச அறிமுகம்
அப்புறம் கடைசியா அழகுகள் ஆறு

அறிமுகம் ஆயிடிச்சு இல்ல. என்னடா இவன் முதல் பதிவே இப்படி மீள்பதிவா போட்டு சொதப்புறானே என நினைக்காதீங்க மக்களே. ஒரு நாளைக்கு ஒரு பதிவு எல்லாம் நமக்கே ஓவர் டோஸ், படிக்கிற உங்களைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. இருந்தாலும் உப்புமா பதிவு, விவாத மேடை, போட்டி எல்லாம் போடலாம். வெயிட்டீஸ் ப்ளீஸ்.

Saturday, May 19, 2007

MXXIV - பெனாத்தலாரின் வா சிஜி கோட்

டிஸ்கி: இது ஒரு விளம்பரப் பதிவு. படிக்கப் பிடிக்காதவர்கள் இன்னும் சில நாட்களில் நேரடியாக பெனாத்தலார் பதிவுக்குப் போகலாம்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்ற வள்ளுவர் வாக்கின் படி எண்ணும் எழுத்துமே ஒருவனின் இரு கண்களாக கருதப்படும் தமிழ் கூறும் நல்லுலகிலே இந்த எண்ணையும் எழுத்தையும் இணைத்து ஒரு புது வரலாறு படைக்க இருக்கிறார் நமது மின்னொளி மன்னன் பெனாத்தலார் அவர்கள். இது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

இதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் எண் 1024. அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த எண் சாதாரணமான எண் இல்லை. கணினித் துறையில் ஒரு முக்கியமான எண். 10 பைனரி ஸ்விட்சுகள் கொண்டு வைக்கக்கூடிய கணினி முகவரிகள் 1024. இதனால்தான் கணினியின் மெமரி 1024பைட் துண்டுகளால் அளக்கப்படுகிறது. பைனரியில் 1024 என்ற எண்ணை எழுத வேண்டுமானால் 10,00,00,00,000 என எழுத வேண்டும்.

இப்படிப் பட்ட 1024 என்ற எண்ணை வைத்து என்ன மாயம் செய்யப் போகிறார் நம் மின்னொளி மன்னன் எனப் பார்க்கலாமா. அதற்கு இன்னும் சில தினங்கள் காத்திருங்கள். அது வரை அவர் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டமாக போடுங்கள். சரியாக சொல்பவருக்கு ஒரு சர்'ப்ரைஸ்' இருக்கலாம்.

MXXIV - இது என்ன அப்படின்னு கேட்பவர்களுக்கு பதில் பின்னூட்டங்களில் வரும்.

அப்டேட் : பெனாத்தலாரின் 1024 பதிவு

Tuesday, May 15, 2007

ஏதய்யா கதி - கர்நாடக சங்கீத பாடலும் பின்நவீனத்துவ ஆய்வும்

பல்லவி
ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி
ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி

அனுபல்லவி
மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லேது வேறேதய்யா கதி

சரணம்
பேதை எனக்குன்னருள் காட்டாது
என்னோடேதைய்யா விளையாட்டா
பூதல சலநாட்டா நின் தாள்தான் கதி
புகழ் கவி குஞ்சர தாசனுக்கேதய்யா கதி




ராகம் - சலநாட்டை தாளம் - ஆதி
புனைந்தவர் - கோட்டீஸ்வர ஐயர்
பாடியவர் - சஞ்சய் சுப்பிரமணியம்

பாண்டேஜ் பாண்டியன், மயிலை மன்னாரு, பவுர்ணமி பாண்டியன் வரிசையில் யாரும் வராததுனால பின்நவீனத்துவ விளக்கம் குடுக்க ஆள் இல்லாம போனதுனால, நம்மளே களத்தில் இறங்க வேண்டியதாப் போச்சு.

முதலில் வழக்கம் போல டிஸ்கிகள்.
1) நம்ம பதிவுக்கு பல விதமான மக்கள்ஸ் வராங்க. வெறும் கர்நாடக சங்கீத பாட்டு ஒண்ணு மட்டும் போட்டா, அது பிடிக்காதவங்க கோபப்படலாம் இல்லையா. அதான் இப்படி. பாட்டு வேணுமுன்னா பாட்டு, பின்நவீனத்துவம் வேணுமா அதுவும் இருக்கு. எல்லாரும் பாட்டையும் கேளுங்க. நல்ல பாட்டுங்க.

2) இந்த மாதிரி நினைச்சுப் பார்த்ததுக்கு நம்ம சின்ன மருத்துவரின் இந்தப் பதிவுதான் காரணம். அடிக்க வரவங்க நேரா ஒரிஜினல் பார்டியையே கவனிச்சுக்கலாம். யாரு கவுஜ எழுதினாலும் பின்நவீனத்துவமா போயி தும்மிட்டு வந்துடறீரே, அந்த காலத்து கர்நாடக சங்கீத பாட்டுக்கு அப்படி எழுத முடியுமான்னு ஒரு சவால் வந்ததால இப்படி.

3) நல்ல கர்நாடக சங்கீதப் பாடலை இப்படி எல்லாம் அர்த்தம் பண்ணிக் கெடுக்கணுமா படவா ராஸ்கல் அப்படின்னு திட்டறவங்க இதுக்கு மேல படிச்சு ப்ளட் பிரஷரை ஏத்திக்க வேண்டாம். கோட்டீஸ்வர ஐயர் என்னை மன்னிக்க.

4) இதைப் புனைந்தவர் பெயர் கோட்டீஸ்வர ஐயர் அப்படின்னு இருக்கே. பெயரில் ஐயர் அப்படின்னு ஜாதி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு வம்பெல்லாம் பண்ணக்கூடாது. அவரை எல்லாரும் அப்படித்தான் கூப்பிடறாங்க. நடேச, சரி வேண்டாம், நாகேஸ்வர ராவ் பார்க் அப்படின்னு அழகா தமிழில் சொல்லறது இல்லையா, அது மாதிரி இதையும் வெச்சுக்கலாம்.

5) இன்னிக்கு நடக்க போற விஷயத்தை அன்னைக்கே சொல்லிட்டாரு பாருப்பா எங்காளு, அதான் அறிவு அப்படின்னு சொல்ல வரவங்களும், அதுக்கு பதிலா காறித்துப்பறவங்களும் தனிப்பதிவு போட்டுக்குமாறு வேண்டிக்கறேன்.

அடுத்தது சிச்சுவேஷன்.

ஒரு பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, நம்ம எக்ஸ் மந்திரி தயாநிதி கீறாரு பாரு, அவருக்கு ஒரு கனவு வருது. ஒரே பாட்டுல பெரிய ஆளு ஆவுற ஹீரோ கணக்கா, இவரும் ஒரே தேர்தலில் பெரிய மினிஸ்டரு ஆவறாரு. அல்லாரும் ஆஹா ஓஹோன்னு கூவிக்கினுக்கீறாங்க. அது மட்டுமில்லாம சன் ரீவி, தினகரன் பேப்பருன்னு எல்லாமே இவங்க குடும்பம் கையுலதானே இருக்கு. அந்த மெதப்புல இவரு படுத்துக்குனு கனவு காணறாரு. கனவுல அவரோட தாத்தா கலிஞ்சரு வந்து இவராண்ட இந்த பாட்டு பாடறாரு.

இனி பின்நவீனத்துவம்

ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி
ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி

அதாவது ஆட்சி செய்ய இன்னைக்குத் தேவை படறது என்னவென்று பார்த்தால், மக்களிடம் நம் கருத்தைக் கொண்டு போய் சேர்க்கிற ஊடகங்கள்தான் முக்கியம். அதுல மழை பெய்தால் அது என் ஆட்சியினால்தான், அதுவே அதிகமாகி வெள்ளமானால் அதற்கு போன ஆட்சிதான் காரணம் என்று நமக்கு வேண்டியபடி செய்தி எல்லாம் தர வேண்டும். அது போன்ற ஊடகங்களில் முக்கியமானது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையோ, அழுது வடியும் தொடர்களையோ தந்து அறிவை வளர்க்கும் ரீவிதான் முதல். அதில் பிரபலமானதாக இருக்கும் சன் ரீவி உங்கள் குடும்ப சொத்து. அதனால் உன்னை விட்டால் எனக்கு ஏதய்யா கதி அப்படின்னு பாடறாரு.

அது மட்டுமா? இன்னைக்கு என்னதான் நாம இலவசமா ரீவி குடுத்தாலும், அதைப் பாக்க மின்சாரம் இருக்கிறதா? பவர் கட்டு எனச் சொல்லி மின்சாரம் குடுக்க முடியாமல் போனால் நாம் சொல்ல வந்த செய்தியை மக்களிடம் எப்படிச் சேர்ப்பது? அதுக்கு நமக்கு வேண்டியது ஒரு செய்தித்தாள். அதையும் சின்னப்புள்ளங்க எல்லாம் இடுப்பை அசைச்சுக்கிட்டு ஆடி நம்பர் ஒன்னா ஆக்கிக்கிட்ட பேப்பரும் உன் கையில்தான் இருக்கு. அதுனால இன்னொரு முறை ஏதய்யா கதின்னு பாடறாரு.

என்னதான் நம்பர் ஒன் அப்படின்னு நம்மளே சொல்லிக்கிட்டாலும், மிடில் கிளாஸ் எல்லாம் நம்ம பேப்பரையா படிக்கிறாங்க. அவங்க படிக்கிறது எல்லாம் நடிகைகள் படத்தை அட்டையா போட்டு சினிமா செய்தியா தர பத்திரிக்கைகள்தானே. அதுல பார்த்தா நம்ம பெஸ்ட் கண்ணா பெஸ்டுன்னு சொல்லி விக்கற குங்குமமும் உங்க கையிலதான் இருக்கு. பார்க்கறது பத்திச் சொல்லியாச்சி, படிக்கிறதைப் பத்திச் சொல்லியாச்சு. அடுத்து கேட்கறதுன்னு பார்த்தா, அங்கயும் 'கேட்டீங்களா'ன்னு நீங்கதான் சூரியன் எப்.எம் ரேடியோவை வெச்சுக்கிட்டு இருக்கீங்க. இதுக்காக இன்னும் ரெண்டு ஏதய்யா கதி. இப்படி எல்லாத்துக்குமே உங்களை விட்டா வழி இல்லைன்னு சொல்ல வெச்சுட்டீங்களேப்பா.

மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லேது வேறேதய்யா கதி

சாதா தயாநிதி அப்படின்னு இருந்த நீ ஒரே எலக்ஷனில் நின்னு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சு, முதல் முறை பாராளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கும்போதே காபினெட் மினிஸ்டரா நுழைஞ்சு, அப்புறம் என்னமோ ஒத்த ரூபா வித்தை எல்லாம் காமிச்சு நாடே உன்னைப் பாக்கும்படியா செஞ்சு, இன்னைக்கு மா தயாநிதியா ஆகிட்டியே.

உமா என அழைக்கப்படும் பார்வதியின் மறுபெயரைக் கொண்ட ப்ரியாவை மணந்து கொண்டவனே, தன் தந்தையின் பெயரும் புகழும் தொடரும்படியாக நடந்து கொள்ளும் தனயனே, மிகத் தெளிவாக நிதி பரிபாலனம் செய்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் பெயர் வருமாறு செய்த குடும்பத்தினனே! (குறிப்பு: வரநிதிகுண - அதாவது நிதி வரும் வழிகளை நன்றாக தெரிந்து கொண்ட என இருக்க வேண்டும். அதனை வரகுணநிதி எனச் சொல்வது பொயடிக் லைசென்ஸ்.)

இன்னிக்கு தமிழகத்தில் காங்கிரஸ் தயவில்தான் என் ஆட்சி நடக்குது. அந்த காங்கிரஸ் மேலிடம் இருக்கும் டெல்லியில் நீதானே இன்னிக்கு நம்ம சார்பில் இருக்க. அவங்க கிட்ட உனக்குத்தானே நல்ல பேரு. எனக்கு எதாவது காரியம் ஆகணமுன்னா அவங்களை மிரட்ட உன் மூலமாதானே போக வேண்டி இருக்கு. இப்படி எனக்கு பலவிதங்களில் ஊன்றுகோலா இருக்கும் நீ மட்டும் இல்லைன்னா என் கதி என்ன ஆவறதுன்னு பாடறாரு.

பேதை எனக்குன்னருள் காட்டது
என்னோடேதைய்யா விளையாட்டா
பூதல சலநாட்டா நின் தாள்தான் கதி
புகழ் கவி குஞ்சர தாசனுக்கேதய்யா கதி

நானும் ஐம்பது வருஷமா அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கேனேப்பா, ஆனா நான் இவ்வளவு வருஷங்களில் செய்யாத சாதனை எல்லாம் ஒரு ஐந்து வருஷம் கூட ஆகலை, இப்படி ஒரு சாதனை பண்ணிட்டு நிக்கிறியே, உனக்கு முன்னாடி நான் ஒரு பேதை. எனக்கு நீதான் அருள் காட்ட வேண்டும். எனக்கு பின்னாடி கட்சி மற்றும் ஆட்சி தலைமைக்கு யாரு வரணமுன்னு ஆசைப்படறேன்னு உனக்குத் தெரியாதா?

அதுக்கு இன்னிக்கு பிரச்சனை இருக்கறதுனாலதானே தள்ளாத வயசில் நானே இன்னும் ஆட்சிக் கட்டிலில் படுத்துக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் நடக்கணமுன்னா உங்க செய்தித்தாளான தினகரனில் அதுக்கு ஏத்தா மாதிரி செய்தி வர வேண்டாமா? அதை விட்டுட்டு இப்படி கருத்துக் கணிப்பு எல்லாம் போட்டு அந்த திட்டத்துக்கு ஆப்பு வெச்சா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டு இது?

கலைஞர் எனப் புகழ்பெற்ற தமிழ்க்கவியான எனக்கு, (திராவிடக்) குஞ்சுகளின் அரசனான அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அடியவனான எனக்கு இன்றைக்கு உன்னை விட்டால் வேறு ஏதைய்யா கதி எனப் பாடுகிறார்.


முடிவுரை

கனவுதான் கண்டாரு. அப்படியே சும்மா இருக்கலாமில்ல. அதைப் போயி தாத்தா கிட்ட சொன்னாரு. அவரு கடுப்பானதுனால இப்போ அண்ணன் ரன் அவுட்டு. அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம். அதுக்கு ஏத்தா மாதிரி வேற பாட்டு வரும்.

Tuesday, May 01, 2007

நியூஜெர்ஸி பதிவர் சந்திப்பு - ஊடக விமர்சனங்கள்

எல்லாமே தலை கீழா நடக்குது.

எந்த ஒரு விஷயமானாலும் நாம எல்லாம் மாங்கு மாங்குன்னு பதிவு போடுவோம். நம்ம பாபா வந்து அப்படியே அதை ஒரு லிங்க் குடுத்து ஸ்னாப்ஜட்ஜ், கில்லி அப்படின்னு இணைச்சுட்டுப் போயிடுவாரு.

ஆனா பாருங்க, நியூஜெர்ஸி சந்திப்பு முடிஞ்ச கையோட பொட்டிய தூக்கிட்டு கிளம்ப வேண்டியதாப் போச்சு. அதனால அதைப் பத்தி நம்மளால ஒரு பதிவு போட முடியலை. கலந்துக் கிட்ட எல்லாரையும் அவங்க பார்வையில் சந்திப்பு குறித்த பதிவு போடச் சொல்லியாச்சு. அதன் படி முதன் முதலா பதிவு போட்டது நம்ம பாபாதான்! அதனால

(எப்படி ஏற்ற இறக்கத்தோட கத்திப் படிக்கோணமுன்னு தெரியுமில்ல!)
இதனைத் தொடர்ந்து மற்ற பதிவர்கள் சந்திப்பு பற்றி எழுதியவுடன் அவர்களது பதிவுக்கான உரல்களையும் இங்கு இணைத்து விடலாம். அது எல்லாரையும் போய்ச் சேர அவ்வப்பொழுது தேவையான பதிவு மற்றும் பின்னூட்டக் கயமைத்தனங்களையும் சரியாகச் செய்து விடலாம்.

ஸ்டார்ட் மியூஜிக்!!

(இது ஏன் வெட்டிப்பயலின் பதிவில் வந்தது? கே.ஆர்.எஸ்.சும் வெட்டியும் ஒருவரேதானா என்ற கேள்வி எல்லாம் கேட்கக் கூடாதாம். )

தென்றல் அவர்களின் பார்வையில்
(நீங்களும் க்ரீம் பிஸ்கட்டை விட்டுட்டீங்களே!)


வெட்டி அவர்கள் எழுதும் தொடரின் முதல் பகுதி

வெட்டி அவர்கள் எழுதும் தொடரின் இரண்டாம் பகுதி

(ஜாமூனை பற்றி சந்திப்பின் போது சொல்லாதது ஏன்?)