Monday, September 24, 2007

இந்த சமயத்திலும் சமயமா?

இந்த பதிவை எழுதத்தான் வேண்டுமா என்று பல முறை யோசித்த பின் தான் எழுதுகிறேன். இதனால் என்னென்ன பட்டம் என்னை வந்து சேரப் போகிறதோ தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும்.

ரொம்ப சிறப்பாக தொடர் முழுவதும் விளையாடிய இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. மிகவும் அருமையான ஆட்டம். இரு அணிகளும் வெற்றி பெறக் கூட சாத்தியக்கூறு இருந்த ஆட்டம். கடைசியாக இந்தியா வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களோடு கடைசி வரை போராடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வளவு அருமையாக நடந்த ஆட்டத்தின் முடிவில் நெருடலாய் ஒரு விஷயம். அதுதான் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. காரணம் பாகிஸ்தான் அணியின் தலைவர் மாலிக். போட்டி முடிந்த பின் அவரிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்விக்கு அவர் தந்த பதில் இது - " First of all I want to say something over here. I want to thank you back home Pakistan and where the Muslim lives all over the world."

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? உலகெங்கும் இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்தார்களா? அல்லது பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களும் கிருத்துவர்களும் அவர்கள் தோற்க வேண்டும் என நினைத்தார்களா? இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவை ஆதரிக்காமல் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது இவர்கள் எண்ணமா?

இந்த ஆட்டத்திலேயே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டது மற்றொரு முஸ்லிமாகிய இர்பான் பதான் இல்லையா? அவரோடு உடன் ஆடியது அவருடைய சகோதரர் யூசுப் பதான் இல்லையா? அவர்கள் என்ன பாகிஸ்தானுக்காகவா விளையாடினர்? இப்படி ஒரு மதத்தினை ஒட்டிய ஒரு பேச்சு தேவையா?

தங்கள் வெற்றிக்குப் பின் தாங்கள் நம்பும் கடவுள் இருப்பதாகச் சொல்வது அவரவர் நம்பிக்கை - அப்ரிதி அல்லாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது போல. ஆனால் தாங்கள் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி என்பதில்லாமல் சர்வதேச முஸ்லிம்களின் அணியாக உருவகப் படுத்திக் கொள்வது சரியா? பொறுப்பற்று கண்டபடி பேசும் நம் பதிவுலக நண்பர்கள் போன்று ஒரு பொறுப்பான அணித் தலைவர் இப்படி பேசலாமா? விளையாட்டினுள் மதத்தைக் கொண்டு வரும் இது போன்ற பேச்சுக்கள் தேவையா?

பி.கு. - இது பற்றி எழுதலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த பொழுது இதே கருத்துடன் கிரிக்கின்போவில் கண்ட ஒரு கட்டுரை.

Sunday, September 09, 2007

சர்வைவல் ஆப் பிட்நெஸ்!

டார்வின் அப்படின்னு ஒரு ஆள் இருந்தாரு. உலகில் உயிரினங்கள் இப்படி விருத்தியாகக் காரணம் இயற்கையின் தேர்ந்தெடுப்பு (Natural Selection) அப்படின்னு சொன்னாரு. அவரோட எழுத்துக்களைப் படிச்ச ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் என்பவர் வலிமையே வாழும் ( Survival of the Fittest) எனச் சொல்லப் போக, டார்வினே அத்தொடரை எடுத்தாளத் தொடங்கினார். எந்தக் கேனையன் என்ன சொன்னா என்ன, நம்ம வலையுலகின் கோட் வேர்ட் இன்னைக்கு சர்வைவல் ஆப் பிட்நெஸ்தான். நம்ம மனசுக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கும் தலைப்பாச்சே. நாமளும் மொக்கை போட்டு நாளாச்சே. அதான் இப்படி. மேல படியுங்க.

கொஞ்ச நாள் முன்னாடி தங்கமணி நச்சரிப்பு தாங்காம நானும் நம்ம குடும்ப கொசு கிட்ட போனேன். அதாங்க நம்மளை கண்டாலே உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, அதைத்தான் சொல்லறேன். அதுவும் வழக்கம் போல லிட்டர் கணக்குல உறிஞ்சுக்கிட்டு நாளைன்னைக்கு வா அப்படின்னு அனுப்பி வெச்சுது. (ஆமாம், இப்படி கொசுவைப் பத்தியே கொசுவர்த்தி சுத்தலாமோ?) ரெண்டு நாள் கழிச்சு தம்பதி சமேதரா போய் நின்னா கை நிறைய பேப்பரை வெச்சுக்கிட்டு உனக்கு கொழுப்பு ஜாஸ்தி அப்படின்னு ஒரு நான் வெஜ் சமையல் குறிப்பு மாதிரி ஆரம்பிச்சாரு. இதைச் சொல்லவா டாக்டருக்குப் படிச்சீரு, அதெல்லாம் படிக்காமலேயே தங்கமணி நேத்தே இதைச் சொல்லிட்டாங்களேன்னு நான் நேரம் காலம் தெரியாம சவுண்ட் விட, அதுக்குக் கிடைச்ச பரிசு தொடையில் நறுக்குன்னு ஒரு கிள்ளு. (யப்பா நகத்தை வெட்டுன்னு சொன்னா கேட்கிறாளா, ரத்தமே வந்திருச்சு).

இதையெல்லாம் காதிலேயே போட்டுக்காம நம்மாளு நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அப்படின்னு கெமிஸ்ட்ரீ கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தது. நானும் வகுப்பில் இருப்பது போல் ரொம்ப கவனமா கண்ணைத் திறந்து வெச்சுக்கிட்டு தூங்கிக்கிட்டு இருந்தேன். நடுவில் சாப்பாடு என பேச்சு வர சடாரென முழிச்சுக்கிட்டேன். ஆனா அதுக்குள்ள அந்தாளு செய்ய வேண்டிய டேமேஜ் எல்லாமே செஞ்சுட்டாரு. எண்ணை கூடாதாம், சர்க்கரை கூடாதாம், பொரிக்கக்கூடாதாம், வறுக்கக்கூடாதாம். சொல்லிக்கிட்டே போறாரு. ஏற்கனவே அடிக்கடி உனக்கு என்ன ரெண்டு கொம்பான்னு கேட்கறா இதுல இலை தழை எல்லாம் சாப்பிட்டா என்ன ஆகுறது டாக்டர் என்று ஜோக் அடிக்கலாம் என நினைத்தேன். ஆனா தொடை இன்னும் வலிக்கவே பேசாமல் இருந்துவிட்டேன். அந்த மௌனத்தின் காரணம் தெரியாமல் நான் எதோ உடன்படுவதாக நினைத்து அடுத்த குண்டை தூக்கிப் போட்டார் நம்ம டாக்டன். (வாழ்க்கையில் இப்படி விளையாடறான் இனிமே என்ன மரியாதை. டாக்டர் எல்லாம் கிடையாது. டாக்டந்தான்!) என்னடான்னா உடற்பயிற்சி செய்யணுமாம். அந்த டாபிக்கில் வேற அரை மணி நேரம் லெக்சர். பலியாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு வெளிய வந்தாச்சு. அப்ப ஆரம்பிச்சதுய்யா தொல்லை.


அடுத்த படத்தில் அசினை ரெகமெண்ட் செய்யலாமா இல்லை பாவமா இருக்கே இந்த பாவனா, அதைத்தான் சேர்த்துக்கலாமா என கனவு காணும் காலை நேரத்திற்கு விழுந்தது கத்தரி, எழுந்து வாக்கிங் போங்க என்ற குரலுடன். டெய்லி வாக்கிங் போக நான் என்ன பக்கத்து வீட்டு ஜிம்மியா? என்று கேட்க நினைக்கும் போதே கன்றிப் போன தொடை ஞாபகத்திற்கு வர அதைத் தடவிக் கொண்டே எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ரெண்டு நாள் இப்படிப் போக நம்ம மூளையில் ஒரு ஐடியா உதித்தது. இப்பத்தானே இப்படித் தொரத்தற, இதோ பனிக்காலம் வந்தாச்சே, இப்ப என்ன செய்வீக, இப்ப என்ன செய்வீக என கோஷம் போட ஆரம்பித்தது வினை. வந்து இறங்கியது ஒரு ட்ரெட்மில்.

அதுக்காக இடம் செய்யப் போய் டீவி முன் இருந்த நல்லா படுத்துக் கொண்டு டீவி பார்க்கக் கூடிய சோபா காணாமல் போனது. ஆனந்தம் பார்க்கும் போது அரைமணி நேரம் பண்ணுங்க. சீரியல் பார்த்து எனக்கு கதை சொன்னா மாதிரியும் ஆச்சு. உடற்பயிற்சி பண்ணினா மாதிரி ஆச்சு என ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தாள் என் தர்மப்பத்தினி. அட, அந்த சுகன்யா புருஷன் ட்ரெயினில் வரேன்னு சொன்னா மாதிரி வரலை. இதைச் சொல்ல 7 நிமிஷம். இதுக்கு நடுவில 20 நிமிஷம் விளம்பரம், 3 நிமிஷத்துக்குப் பாட்டு வேற. இப்போ இதைப் பார்த்து கதை சொல்ல ஒரு அடியாள். என்ன கொடுமை சரவணன் இது? அந்த ட்ரெட்மில் சத்தத்தில் வசனம் எதுவுமே கேட்கலை. அது வேற விஷயம்.


இப்படியா 'நடந்துக்கிட்டு' இருந்த என் வாழ்க்கையில் விழுந்தது அடுத்த 'அடி'! சும்மா நடந்தா போதுமா , கை அப்போ சும்மா இருக்கே. உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சமமா பயிற்சி தரணும் அப்படின்னு அவங்க நண்பிகளில் எவளோ ஒருத்தி பத்த வைக்க வந்து இறங்கியது ஸ்டெப்பர். காலுக்கு படியேறுவது மாதிரியும், கைக்கு படகுகில் துடுப்பு போடுவது மாதிரியும் செய்யலாமாம். ஆனந்தத்திற்கு முன்னாடி கஸ்தூரி வருதே, அந்த நேரத்தில்தான் பையன் சாப்பிடறான், என்னால பார்க்கவே முடியறது இல்லை. அந்த நேரத்தில் நீங்க இந்த ஸ்டெப்பரைப் பண்ணிக்கிட்டே பார்த்து அந்த கதையையும் சொல்லிடுங்களேன் என ஆசையாய் வந்து கொஞ்சுகிறாள் என் தர்ம பத்தினி. கொஞ்சலா அது? கட்டளை இல்லையா, அதுவும் பார்க்க ஆரம்பிச்சாச்சு.


அவளுக்கு என்ன ஒரே ஒரு நண்பிதானா என்ன? ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு போட்டுக் குடுக்க, வீட்டில் சைக்கிள், எலிப்டிகல், அது, இது என காலில் இருந்து தொடை, வயிறு, கை, கழுத்து வழியாகத் தலை வரை செல்லும் என்று ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு மாதிரி பாகங்களுக்கு ஒன்றாக விதவிதமாக சாமான்கள் வந்திறங்கத் தொடங்கியது. நானும் கஸ்தூரியில் ஆரம்பித்து ஆனந்தம், மேகலா, அஞ்சலி, கோலங்கள், அரசி, லக்ஷ்மி என எல்லா சீரியல்களையும் பார்க்க வேண்டியதாகி விட்டது. ஆபீஸ் போவதனால் மத்தியான சீரியல்கள் எல்லாம் மிஸ் செய்கிறேன். நடுவில் நியூஸ் போடுகிறார்களோ சாப்பிட எதாவது கிடைக்கிறது. (அடேய் சன் டீவிக்காரனுங்களா, அதையும் எடுத்து எதாவது சீரியல் போட்டு என் அடிமடியில் கை வெச்சுடாதீங்கப்பா.)


சனி, ஞாயிறு சும்மா இருக்காம யோகா கிளாசுக்குப் போங்க என ஒரு கொடுமை. முதல் நாள் அங்க சவாசனம் செய்யும் போது பெரிசா குறட்டை விட்டுட்டேனாம். அதனால இனிமே வரவேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. (நல்ல சனிக்கிழமை எண்ணை எல்லாம் தேச்சு குளிச்சிட்டு அங்க போனா தூக்கம் வருது. அதுக்கு நான் என்ன பண்ண? நம்ம சத்தத்தில் மத்தவங்க எல்லாம் டிஸ்டர்ப் ஆகி முழிச்சுக்கிட்டாங்க போல!) நல்லதாப் போச்சுன்னு அதை நிறுத்தியாச்சு. அடுத்தது Tai Chi கிளாஸ் போறீங்களான்னு பேச்சு வந்தது. அந்தப் பேச்சு ஆரம்பிக்கும் போதே டாய் ச்சீ என நாம உரும, போனா போகுது என அதுவும் வேண்டாமுன்னு வெச்சாச்சு.


இதெல்லாம் ஒரு பக்கம் போயிக்கிட்டு இருக்க, நான் இளைக்கிறேனோ இல்லையோ (தங்கமணி - ஆபீஸில் கண்ட நேரத்தில் என்னதைத் திங்கறீங்களோ, உடம்பைப் பார்த்துக்கணும் அப்படின்னு அக்கறை இருந்தால்தானே.) நம்ம பர்ஸும், பேங்க் பேலன்ஸும் நல்லா இளைக்க ஆரம்பித்தது. ஒரு நாள் நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் உடற்பயிற்சி சாதனங்கள் விற்கும் கடை ஓனரை எதேச்சையாய் ரோட்டில் பார்த்தேன். சாதாரணமா இருந்தவன், உதயகீதம் படத்தில் வர கவுண்டமணி மாதிரி, பென்ஸ் காரில் போய்க்கிட்டு இருந்தான். என்னடா, சாரி சாரி, என்ன சார், எப்படி இது அப்படின்னு விசாரிச்சா, சர்வைவல் ஆப் பிட்நெஸ் அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே போறான்!! (அப்பாடி, தலைப்பில் கொண்டு வந்து முடிச்சாச்சு, நடுவில ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் வெச்சிருந்தா, தமிழ் சினிமாக்கு கதை எழுதப் போய் இருக்கலாம்.)


டிஸ்கி:
இப்பதிவில் வரும் பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. (பின்ன, தங்கமணி பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க இல்ல!)