Tuesday, December 25, 2007

பூனைக்குட்டி என்ன பூனைக்குட்டி. கொரில்லாவே வெளியே வந்துவிட்டதே!

இந்த பூனைக்குட்டி என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த உடனேயே உங்களுக்கு ஞாபகத்தில் வரும் குறிச்சொற்கள் - விருது, OPML, திரட்டிகள், மட்டற்ற சுதந்திரம் என்பவைகளாக இருந்தால் நீங்க ரொம்ப நேரம் இணையத்தில் செலவழிக்கிறீர்கள். தமிழ்மணமேட்டிஸ் என்ற நோய் தாக்கி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சனிக்கிழமைகளில் கணினி முன் உட்காராமல் சனி பகவானுக்கு எள் முடி ஏற்றினால் உசிதம். இல்லையென்றால் விருது குடுக்க உனக்கு என்ன தகுதி, நீயென்ன கிழிச்சன்னு கேட்டுக்கிட்டு அலைய வேண்டியதுதான். அப்புறம் நீங்க எதைக் கிழிப்பீங்கன்னு தெரியாம பீதியோட இருப்பாங்க உங்க கூட இருக்கறவங்க. சரி போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.

ஒரு வாரத்துக்கு முன்னாடி "நச் என்று ஒரு போட்டி" அப்படின்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன். ஒரு நகர் படம் ஒன்றைக் குடுத்து அதை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு இரு கேள்விகளுக்கு விடை அளிக்க சொல்லி இருந்தேன். அதில் முதல் கேள்வியில் ஒரு பந்து தரையில் எத்தனை முறை தட்டப்பட்டது என கவனத்தை ஒரு முகப்படுத்தும்படியாக இருந்தது. அடுத்த கேள்வி வித்தியாசமாக எதாவது ஒரு சம்பவத்தை பார்த்தீர்களா என்றும் கேட்டிருந்தேன்.

நிறைய பேரு நிறையா விதமான பதில்களோட வந்திருந்தாங்க. ஆனா அங்க நடந்த ஒரு வித்தியாசமான சம்பவத்தைக் கவனிச்சு சொன்னவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். அது என்ன தெரியுமா? பந்து விளையாடும் அரங்கில் கொரில்லா வேஷம் கட்டிய ஒருவர் நிதானமாக நடந்து வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டுப் போகிறார். ஆனால் இதைச் சொன்னவர்கள் வெகு சிலரே. அவர்களும் கூட முதல் முறை இதை பார்க்காமல், மீண்டும் பார்த்த பொழுதே இதை உணர்ந்து கொண்டதாகச் சொல்லி இருக்கின்றனர். பந்து தரையில் பட்டதை எண்ணும் ஜோரில் இதைப் பார்க்காமல் விட்டவர்கள் அனேகம்.

மீண்டும் ஒரு முறை இந்த நகர்படத்தைப் பார்க்க நினைத்தால் நீங்கள் சொடுக்க வேண்டிய உரல் இது.

இந்த விடியோவை பயன் படுத்துபவர்கள் யார் தெரியுமா? உலகப் புகழ் பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் (சுப்பிரமணியா சாமி நடத்தும் கிளாஸ் எல்லாம் இல்லைங்க) தலைமை பண்புகள் பற்றி எடுக்கப்படும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள நகர்படம் இது. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் ஒரு தலைவரின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், ஒரு சிறிய வேலையில் கவனம் செலுத்தும் பொழுது தன் கவனம் முழுவதையும் அதனில் செலுத்தாமல் சுற்றி நடப்பதையும் கவனிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். When engaged in solving a small problem, the leader should never miss the big picture.

இதனை நேரடியாகச் சொல்லாமல் இப்படி ஒரு படத்தைக் காண்பித்து ஒரு விளையாட்டாக இப்பாடத்தினைச் சொல்லித் தருகிறார்கள். இதனைச் சார்ந்த மற்றொரு பாடம் - Don't sweat the small stuff! அதாவது சிறு விஷயங்களுக்கு தேவையான அளவு கவனம் மட்டுமே தாருங்கள் என்பது. இதற்கும் ஒரு உதாரணம் தருகிறார்கள்.

ஒரு ஜாடி நிறைய பெரும் கற்களைப் போட்டுவிட்டு அந்த ஜாடியில் இதற்கு மேல் எதையாவது போட முடியுமா எனக் கேட்கிறார் ஒருவர். ஜாடி நிறைந்து பெரும் கற்கள் இருப்பதால் முடியாதென்றே மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த விளையாட்டை நடத்துபவர் கொஞ்சம் அளவில் சிறிய கற்களை எடுத்து அந்த ஜாடியில் போடும் பொழுது அவை அப்பெரிய கற்களின் இடைவெளியில் சென்றுவிடுகின்றன. அதற்கு மேலும் அளவில் சிறியதான கற்களை போட அவைகளும் இடைவெளிகளுக்குள் சென்று விடுகின்றன. இறுதியாக அந்த கற்களுக்கு மேல் முடிந்த அளவு மணலையும் கொட்டுகிறார். கணிசமான அளவு மணலும் அந்த ஜாடியில் சேருகிறது.

அவர் அதற்குப் பின் "இந்த ஜாடியானது உங்களுக்கு இருக்கும் நேரத்தைக் குறிக்கிறது. அதனை முதலில் மணல் போன்ற சிறிய வேலைகளுக்குப் பயன்படுத்தினால் அதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆனால் அதையே முதலில் பெரிய காரியங்களுக்கு பயன்படுத்தினால் அதன் பின் சிறிய வேலைகளுக்கும் நேரம் கிடைக்கும்." என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு விளக்கியபின், அதே ஜாடியில் ஒரு பியரையும் ஊற்றினார் இதற்கென்ன பொருள் என்று மாணவர்கள் கேட்டதற்கு எவ்வளவு வேலை இருந்தாலும், பியருக்குக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் நேரம் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

இப்படி பலவிதமான உதாரணங்களின் மூலம் மேலாண்மை குறித்த பாடங்கள் கற்றுத் தரப் படுகின்றன என்று அவ்விதமான பயிற்சிக்கு சென்ற ஒருவர் என்னிடம் கூறினார். அவர் என்னோடு பகிர்ந்து கொண்டதில் சிலவற்றைத்தான் நான் இந்த இரு பதிவுகளில் பகிர்ந்து கொண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

Saturday, December 22, 2007

வீணாவின் ஜாக்கெட்! (ந.ஒ.க.)

வீணா தணிகாசலம்! பெயரைக் கேட்டாலே பெண்கள் அனைவர் முகத்திலும் பெருமிதம் தாண்டவமாடும். அவர்கள் அனைவருக்கும் அவள் ஒரு ஆதர்ச பெண் அல்லவா? எழுத்திலாகட்டும், எடுக்கும் படங்களிலாகட்டும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்ணுரிமைக்கும் அவள் கொடுக்கும் குரல் உலகெங்கும் அல்லவா எதிரொலிக்கிறது. அவளது பெருமையை பெரிதாய் பாராட்டாத ஆணுலகம் கூட அவள் அழகிற்கு அடிமையாக அல்லவா கிடக்கிறது. இன்றைக்கும் பாருங்கள் மயிலின் கழுத்தின் நிறத்தை ஒத்த புடவையாகட்டும் அதற்கேற்ற ஒரு மேற்சட்டையாகட்டும், கழுத்திலும் காதிலும் ஜொலிக்கும் நகைகளாகட்டும் வானுலகில் இருந்து வந்த தேவதை போல் அல்லவா இருக்கிறாள். இப்பேர்பட்ட பெருமைகளுடைய வீணா தணிகாசலம், சர்வாலங்கார பூஷிதையாக எங்கே போகிறாள் என்று நாமும் பின்னாடியே போய் பார்க்கலாமா?

ஆஹா, இது நகரின் எல்லைகளைத் தாண்டி விளைநிலங்கள் நடுவே நம் நாட்டின் ஜாதிக்கட்சி தலைவர் ஒருவர் கட்டியிருக்கும் கல்லூரி வளாகம் அல்லவா இது. கண்டபடி சீரழியும் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதற்காகவே கட்டப்பட்ட கலைக் கோயில் அல்லவா இது. அதிலும் இன்று எதோ ஒரு பெரிய விழா நடக்க இருக்கிறது போல் இருக்கிறதே. இதோ, இந்த சுவரொட்டியைப் பார்த்தால் விபரம் தெரிய வரும் போலிருக்கிறதே. விழி வழி தகவற் பரிமாற்ற துறையின் ஆண்டு விழாவாம். சிறப்பு விருந்தினர் நம்ம வீணாவின் குருநாதர், பிரபல திரைப்பட இயக்குநர் வேலு ராஜேந்திராவாம். கூட கூப்பிடப்பட்டிருப்பது விளம்பரப் பட இயக்குநர் விஜயன் பாலாவும் பிரபல எழுத்தாளர் அமரனுமாம். இவர்களுக்கு சமமாக தன்னையும் அழைத்து இருப்பதே வீணாவிற்கு ரொம்ப பெருமை போல. அத்தனை பெருமிதமும் தன் முகத்தில் தெரிய கல்லூரி வாசலில் வந்து சேர்கிறாள் நம் நாயகி வீணா.

ஆனால் என்ன இது? இத்தனை ஆர்வத்தோடு வந்த வீணாவை உள்ளே விட மறுக்கிறானே இந்த பாதுகாப்பு அதிகாரி. வீணாவோடு எதோ ஒரு சர்ச்சையில் வேறு ஈடுபட்டிருக்கிறான் போலத் தெரிகிறதே. நாம் கொஞ்சம் அருகில் சென்று விஷயம் என்னவென்று கவனிக்கலாம். அந்த அதிகாரி "மன்னிக்கவும். என்னால் உங்களை உள்ளே அனுப்ப இயலாது. இந்த கல்லூரியின் விதிகள் உங்களுக்குத் தெரியுமல்லவா. தமிழ்ப் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்டுவதை தன் கடனாக நினைத்து தலைவர் தொடங்கிய கல்லூரி அல்லவா இது. தமிழர் பாரம்பரிய உடையில் இல்லாதவர்கள் யாரும் உள்ளே வர முடியாது என்பது தாங்களுக்கு தெரியாததல்ல. ஆண்களாய் இருந்தால் வெறும் வேட்டியும் பெண்களாய் இருந்தால் புடவையும் அணிவதல்லவா நம் தமிழ் பாரம்பரியம். மேற்சட்டை என்பது வெளிநாட்டு நாகரீகத்தின் மூலம் ஏற்பட்ட மாசல்லவா? அதனை அணிந்து இங்கு உள்ளே வர முடியுமா? இவ்விதியை நிலைநாட்ட, திரைப்படங்களில் தன் கதாபாத்திரங்களை மேற்சட்டை இன்றியே அலைய விட்டு கலாச்சாரத்துக்கு பெருமை சேர்த்த சாரதிரோசாவைத் துறைத் தலைவராகக் கொண்டிருக்கும் கல்லூரி அல்லவா இது. மற்ற இடங்களில் வேண்டுமானால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு நீங்கள் உடுத்தி இருக்கும் உடையை அனுமதிக்கலாம். ஆனால் அது இங்கு ஒரு நாளும் ஒத்துக் கொள்ளப் படாது. இவ்விதியினை என்னால் மீற முடியாது. உங்களை என்னால் உள்ளே அனுமதிக்க முடியாது. தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்." என்று கூறி அல்லவா வீணாவை உள்ளே விடாமல் தடுக்கிறான்.

எவ்வளவோ சொல்லிப் பார்த்த வீணாவின் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராய் அல்லவா போகிறது. ஆனால் தன் பங்கிற்கு அவளும் போட்ட துணியிடனே உள்ளே செல்வேன் அல்லது உள்ளே செல்லேன் என்றல்லவா இருக்கிறாள். கடைசி வரை போராடிப் பார்த்துவிட்டு தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு வீட்டை நோக்கி செல்கிறாள் வீணா.

கோபத்தில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்த அவள் முகம் வீட்டினுள் நுழையும் பொழுது மகிழ்ச்சியாகத் தெரிகிறதே. என்ன மாயம் இது? ஒன்றும் புரியவில்லையே. நமக்குத்தான் இந்த குழப்பம் என நினைத்தால் வீட்டில் இருந்த அவளின் உதவியாளரும் இந்த குழப்பத்தில் இருக்கிறாள் போல. வீட்டினுள் நுழைந்த வீணாவிடம் "அம்மா, இப்பொழுதுதான் விஷயத்தைக் கேள்விப்பட்டேன். என்ன அக்கிரமம் இது? கேட்கும் பொழுதே என் மனம் கொதிக்கிறதே. ஆனால் நீங்கள் என்னடாவென்றால் மகிழ்ச்சியுடன் வருகிறீர்களே. எனக்கு ஒன்றும் புரியவில்லையே அம்மா" என்கிறாள்.

அதற்கு வீணாவோ " போடி பயித்தியக்காரி. அங்கு இப்படி உடை அணிந்து சென்றால் என்னை விட மாட்டார்கள் எனத் தெரியாமலா இப்படிச் சென்றேன். அங்கு நான் சென்று விழாவில் கலந்து கொண்டிருந்தால், செய்தித்தாட்களில் மற்றவர்கள் பேசியதை எல்லாம் போட்டுவிட்டு, கடைசியாக இவ்விழாவில் வீணா தணிகாசலமும் கலந்து கொண்டார் என சின்னதாக போட்டு இருப்பார்கள். இப்பொழுது இந்த சர்ச்சையினால் பார், தினத்தந்தியில் கட்டுரை, சந்திரத் தொலைக்காட்சியில் பேட்டி, வலைப்பதிவில் என்னை வைத்து தொடர் பதிவுகள் என எல்லா ஊடகங்களிலும் என் பெயர் அடிபடும். இந்த விளம்பரத்திற்காகத்தானே நான் இப்படி உடையணிந்து சென்றேன்" என்கிறாளே. இது எல்லாம் இவளே முன்னின்று நடத்திய கபட நாடகமா? அய்யோ எனக்கு தலை சுற்றுகிறதே, மயக்கமாய் வருகிறதே. இந்தத்திட்டத்தை அறியாமல் நானும் ஒரு பதிவிட்டு இவளது கபட நாடகத்துக்குப் பலியாகிவிட்டேன் போல இருக்கிறதே!

டிஸ்கி: உண்மைச் செய்தியில் ஒரு விருந்தினரை நடத்திய விதம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத, கண்டிக்கப் பட வேண்டிய ஒரு விஷயம். அதே சமயம் ஒரு கல்லூரியில் மாணவர்கள் எவ்விதமான உடையணியலாம் என சட்டம் போடுவது அப்படி ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. என் கல்லூரியில் காலரில்லா ரீ சட்டை போடுவது நான் படித்த வரையில் அனுமதிக்கப்பட்டதில்லை. அது ஒன்றும் பெரிய உரிமை மீறலாக எனக்குப் படவில்லை. பள்ளிகளில் இருக்கும் இந்த விதிகள் கல்லூரியிலும் வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? இதனை வைத்து எழுப்பப்படும் ஈய பித்தளை சத்தங்கள் எல்லாம் வெறும் சத்தங்களாகவே இருக்கிறது. இது குறித்த செல்வனின் பதிவில் நாகை சிவா அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான்பெரும்பாலும் ஒத்துப் போகின்றேன். இக்கதை எழுதத் தூண்டிய வவ்வாலுக்கு நன்றி.

வழக்கம் போல
இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே. நடந்த சம்பவத்தில் எனது கருத்தாக இதனை திரிக்க வேண்டாம். இது சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக.

Wednesday, December 19, 2007

நச் என்று ஒரு போட்டி!

புதிரு போட்டின்னு எதனா செஞ்சுக்கிட்டு இருப்பியே. இப்போ என்னடான்னா புகைப்பட போட்டி, நச் கதை போட்டின்னு நீ பங்கெடுத்துக்கிட்டு புதிர் போடாம இருக்கியே அப்படின்னு நம்ம நண்பர் ஒருத்தர் திட்டுனதுனால இந்தப் பதிவு. இதுவும் ஒரு புதிர்தான், ஆனா வித்தியாசமான புதிர். இந்த புதிரை அதன் முழு சுவாரசியத்தோட விளையாடணமுன்னா நான் சொல்லும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். சரியா?

ஒரு உரல் தரப் போறேன். அந்த உரலை சொடுக்கினால் வரும் பக்கத்தில் ஒரு நகர்படம் (அதாங்க வீடியோ) இருக்கும். இதுல ரெண்டு அணியினர், அணிக்கு ஒரு பந்தை வெச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ஒரு அணியினர் கருப்பு மேலாடையும் மற்றொரு அணியினர் வெள்ளை மேலாடையும் அணிந்து கொண்டிருப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப எளிமையான ஒரு வேலைதான். இந்த நகர்படத்தை ஒரே ஒரு முறை பாருங்கள். அப்படி பார்க்கும் பொழுது வெள்ளை மேலாடை அணிந்திருக்கும் அணியினர் பந்தினை எத்தனை முறை தரையில் தட்டுகிறார்கள் என எண்ணிச் சொல்ல வேண்டும். கவனமாய் எண்ணுங்கள். அவர்கள் தரையினில் படாமல் தூக்கிப் போட்டு பிடிக்கவும் செய்வார்கள். அதனால் கவனமாக வெள்ளை அணியினர் (எளிதாக வெள்ளை அணியினர், கருப்பு அணியினர் எனச் சொல்லலாம், சரியா) பந்தினை தரையில் எத்தனை முறை தட்டுகிறார்கள் என எண்ணி பின்னூட்டமாய் இடுங்கள்.

நீங்கள் சொடுக்க வேண்டிய உரல் இது.

பார்த்தாச்சா? எண்ணியாச்சா? பின்னூட்டம் போட்டாச்சா? என்னது போடலையா? முதலில் அதைச் செய்யுங்க. நான் சொன்னபடி கேட்டாத்தான் புதிரின் சுவாரசியமேன்னு சொல்லி இருக்கேன் இல்லையா. செய்யுங்க.

செஞ்சாச்சா? இப்போ அடுத்தது. எண்ணச் சொன்னதை சரியா எண்ணினீங்க. வேற என்ன கவனிச்சீங்க? இதை முதலில் காண்பிச்ச நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் இது - "வெள்ளை அணியில் இருக்கும் பெண் தன்னிடம் பந்து வருகையில் தரையில் ஒரு முறையாவது தட்டிய பிந்தான் அடுத்தவரிடம் தந்தார். மற்றொரு நண்பர் சொன்னது - "வெள்ளை அணியைச் சேர்ந்த ஒரு ஆண் ஒரு தடவை கூட தரையில் பந்தைத் தட்டவே இல்லை." இது போன்று நீங்கள் எதாவது வித்தியாசமாகப் பார்த்தீர்களா? அதனை அடுத்த பின்னூட்டமாகப் போடுங்கள்.

மீண்டும் சொல்கிறேன் ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்துவிட்டு பின்னூட்டங்களை அளியுங்கள்.

வழக்கம் போல் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படாது. ஆனால் நீங்கள் சொன்ன விடைக்கு எனது பதில்கள் வெளியிடப்படும். இந்திய நேரம் திங்கள்கிழமை காலை இந்த புதிருக்கான விளக்கம் வெளியிடப்படும். அப்பொழுது உங்கள் விடைகள் வெளியிடப்படும்.

அந்த பதிவை எதிர்பார்த்திருங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!!

Tuesday, December 11, 2007

அவள் பறந்து போனாளே...! (ந.ஒ.க.)

காலையில் எழுந்து ஒரு நடை நடந்துவிட்டு அப்படியே காலையுணவையும் முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் இராகவன். கதவைத் திறக்கும் பொழுதே கண்ணில் பட்டது தரையில் கிடந்த அந்தக் கடிதம். உறையில் இருக்கும் கையெழுத்தைப் பார்த்த உடனேயே மலர்ந்தது அவன் முகம். கடிதம் வந்திருப்பது ஜானகியிடம் இருந்துதான். ஊரில் இருந்த வரை கூடவே இருந்தவளை இந்த சென்னைக்கு வந்த பின் பார்ப்பதே அரிதாகி விட்டது. தரையில் இருந்து கடிதத்தை எடுக்கும் பொழுதே அவன் மனம் ஊரை நோக்கிச் சென்றுவிட்டது.

ஜானகி அவனது பக்கத்து வீட்டுப் பெண்தான். அவனை விட இரு வயது சிறியவள். சிறுவயதில் இருந்தே இவனையே சுற்றி சுற்றி வந்தவள். ஊரார் அனைவரும் சிறு வயதில் இருந்தே அவர்களை கணவன் மனைவியாகக் கேலி செய்து வந்தது இருவர் மனதிலுமே ஆழமாக பதிந்து போய்விட்டது. பதின்ம வயது வந்த பின் ஜானகி முன்பு போல் அவனிடம் நெருங்கவில்லை என்றாலும் அவன் மீதான பிரியம் சற்றும் குறைந்ததில்லை. இவனுக்கும் அவளிடம் அன்றைய நிகழ்வுகளைச் சொல்லாமல் தூக்கம் வந்ததில்லை. அப்பொழுதுதான் இராகவன் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்தது அவன் தந்தையின் மரணம். படித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவன் தலையில் விழுந்தது.

படித்து பட்டம் வாங்கியவர்களுக்கே வேலை கிடைக்காத போது பாதியில் வந்த இவனுக்கு என்ன வேலை கிடைக்கப் போகிறது. ஊரில் ஒன்றும் சரிவர அமையாமல் சென்னைக்கு வந்தும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. இருந்த சிறு நிலத்தையும் விற்றுதான் ஊரில் இருப்பவர்களும் இவனும் ஜீவனம் செய்து கொண்டிருக்கிறாகள். இந்த முறை சென்ற நேர்காணலில்தான் வேலை கிடைத்துவிடும் போல் இருக்கிறது. நாளை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். நாளையே வேலைக்குச் சேர்ந்துவிட்டு, இந்த வார இறுதியில் சென்று ஜானகியிடம் சொல்ல வேண்டும். விரைவில் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டியதுதான்.

இவ்வாறாக நினைத்துக் கொண்டிருந்தவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது அவன் கையில் இருந்த கடிதம். திருமணம் பற்றிய நினைப்பால் எழுந்த புன்சிரிப்பு மாறாமல் கடிதத்தை படிக்கத் தொடங்கினான்.

அன்புள்ள ராகவனுக்கு,

என்னை மன்னித்து விடு. இப்படி ஒரு விஷயத்தை நேரில் கூட உன்னிடம் சொல்ல முடியாமல் கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டேன். இந்தக் கடிதத்தை நீ படிக்கும் பொழுது நான் ஊரை விட்டுச் சென்றிருப்பேன். உன்னைத் தவிர வேறு ஒருவரையும் தெரியாத நான் வேறு ஒருவருக்கு மனைவியாகி இருப்பேன்.


நீ இங்கு வேலை கிடைக்காமல் சென்னைக்கு சென்ற நாள் முதலாகவே அப்பா மாற ஆரம்பிச்சுட்டாரு. காரணம் இல்லாமல் எம்மேல எரிஞ்சு விழறதும் உன்னைப் பற்றிய பேச்சு வந்தால் ஒண்ணுக்கும் உதவாதவன் என்றும் ஒரு வேலை சம்பாதிக்க தெரியாதவன்னும் உன்னை திட்டுவாரு. அது மட்டுமில்லாமல் எனக்கு வெளியிடங்களில் மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பிச்சுட்டாரு. நான் எவ்வளோ சொல்லியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ஒரு வேலை தேட துப்பில்லை அவன் கையில் உன்னைக் குடுத்து உன் வாழ்க்கையை சீரழிக்க மாட்டேன்னே சொல்லிக்கிட்டு இருப்பாரு.

தீவிரமா மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருந்த அவரு ஒரு நாள் அவர் நண்பர் குடும்பத்தோட வந்து என்னைப் பெண் பார்க்க ஏற்பாடு செஞ்சுட்டாரு. அவங்களும் பையன் அமெரிக்கா திரும்பப் போறதுக்கு முன்னாடி கல்யாணம் முடிக்கணும் அப்படின்னு அவசரப்பட்டு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் நடத்தச் சொல்லிட்டாங்க. நான் எவ்வளவோ மாட்டேன்னு சொல்லியும் எங்கப்பா கல்யாணம் நடந்தே தீரும் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்னிக்கு ராத்திரி நான் ரொம்ப சண்டை போட்டதால பூச்சி மருந்தை குடிச்சு தற்கொலை செஞ்சுக்க போயிட்டாரு எங்க அப்பா. ஒண்ணு இந்த கல்யாணம் நடக்கணும் இல்லைன்னா செத்துடுவேன் என மிரட்டி என்னை கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுட்டாரு. உன் கழுத்தில் ஒரு தாலி ஏறினாத்தான் என் கழுத்தில் தாலி நிக்கும். அதை செய்வியாடின்னு கேட்ட எங்கம்மாவிற்கு, செய்வேம்மான்னு சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லாமப் போச்சு. இப்படி கட்டாயப் படுத்தி என்னை அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுட்டாங்க.

என்னை மறந்து விடுன்னு எல்லாம் என்னால சொல்ல முடியாது ராகவன். நானும் உன்னை மறக்க முடியாது. உன்னாலும் என்னை மறக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனால் வாழ்க்கைல நாம ஆசைப்பட்ட எவ்வளவோ நடக்காமல் போனாலும் நாம பாட்டுக்கு நம்ம வழியைப் பார்த்துக்கிட்டுப் போகலையா, அந்த மாதிரி இதையும் தாண்டி போகலாம். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தால் நாம இருந்ததும் இழந்ததும் ஞாபகத்திற்கு வந்து நம்மை நிம்மதியாவே இருக்க விடாது. அதனால் இனி நமக்குள்ள தொடர்பே வேண்டாம்.


இப்படிக்கு
கண்ணீருடன்
ஜானகி


தொடர்ந்து பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருந்த இராகவனுக்கு கடிதத்தின் ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக விழ உடைந்து போய் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.

அழுகுரல் சத்தத்தைக் கேட்டு துணுக்குற்ற புதிய காப்பாளர் " என்னய்யா இது, சேர்ந்த முதல் நாளே இப்படி அழுகைச் சத்தம், வா என்னான்னு பார்ப்போம்" எனக் கிளம்பினார். கூட இருந்த உதவியாளர், "அதெல்லாம் கவலைப்படாதீங்கய்யா. இது இந்த காப்பகத்தில் பத்து வருஷமா நடக்கறதுதான். காலையில் சாப்பாடு முடிஞ்ச உடனே வந்து அந்த பழைய கடிதாசியைப் படிப்பான். அப்புறம் நாள் பூரா ஓன்னு அழுவான். மத்தபடி ஆபத்தில்லாதவந்தான்யா." என்றார்.

(சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக)


Sunday, December 09, 2007

பூ பூக்கும் மாசம் தை மாசம் - ஆனா எங்க ஊரில் இல்லை!

நான் பாட்டு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை உசுப்பி விட்டு புகைப்படப் போட்டியில் கலந்துக்க வைச்சாரு நம்ம வெண்பா வாத்தி. அப்புறம் பாருங்க. நம்ம பதிவை கணக்கில் கூட எடுத்துக்கலை. சரி போகட்டும். ஆனா அந்த முறை எடுத்த படத்தை அப்படியே போட்டுட்டேன். ஆனா எடுத்த படத்தை கொஞ்சம் மேம்'படுத்தி'ப் போடணும் அதுக்காக பிக்காஸா, ஜிம்ப் என என்னென்னமோ சொல்லிக்குடுக்கப் பார்த்தாரு. ஆனா நம்ம மண்டையில்ல ஏறும் மேட்டர்தானே ஏறும். சரி போகட்டும்.

இந்த மாதம் தலைப்பு என்னடான்னா மலர்களாம். அங்க நான் சொன்னேன் - "புதுசா படமெடுக்கப் போகலாமுன்னு பார்த்தா மரத்துல இலை கூட இல்லை!! நல்லா தலைப்பு குடுத்தீங்க போங்க!!" நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைன்னா இந்த படத்தைப் பாருங்க.

பின்ன என்னங்க. இங்க எல்லாம் மரங்கள் இலை இல்லாம இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பைக் குடுத்தது பூமியில் வடப்பக்கம் வாழும் தமிழர்களுக்கு எதிரான சதிதான். இளவேனிற் காலம் ஆரம்பித்திருக்கும் தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது. இதற்குத் துணை போன அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என் கண்டனங்கள்.

சரி போகட்டும். பரணில் (அட அந்தப் பரண் இல்லைங்க, இது நம்ம பரண்) கிடந்த படங்களை கொஞ்சம் தூசி தட்டிப் போட்டு இருக்கேன். இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை எல்லாம் இது வரை செஞ்சதில்லை. இதான் முதல் முறை. நல்லா இருக்கான்னு சொல்லுங்க.



என்னடா இது சுவாரசியமா எதுவும் இல்லையே என்று ரென்சனாகும் நண்பர்களுக்காக இது. ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு நண்பர்கள் சமீபத்தில் பதிவு போட்டு இருக்காங்க. ஒண்ணு நம்ம கால்கரி சிவா, ரெண்டாவது விட்டது சிகப்பு. ரெண்டு பேரும் அவங்க அவங்க ஸ்டைலில் எழுதி இருந்தாலும் சிவாண்ணா எழுதி இருக்கும் பின்குறிப்பு என்னமோ நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கு. நீங்களும் ரெண்டு பதிவையும் பாருங்க.

Thursday, December 06, 2007

மக்கள் தீர்ப்பே பாப்பையா தீர்ப்பு! பட்டிமன்றம் பகுதி 5

சாலமன் பாப்பையா

ஆக மொத்தம் பேச வேண்டிய எல்லாரும் பேசி முடிச்சுட்டாங்க. மேடையேறிப் பேசின நாலு பேரா இருக்கட்டும். பின்னூட்டத்துல பொளந்து கட்டின ஜனங்களா இருக்கட்டும். என்னமா பேசுனாங்கய்யா. அதுவும் நம்ம மக்கள் இருக்காங்களே சும்மாவே நல்லாப் பேசுவாங்க. இங்க ஒரு அப்பாவி ஒருத்தன் கிடைச்சு இருக்கான் வந்து மொத்துங்கடான்ன உடனே கிளம்பி வந்துட்டாங்கய்யா.


அத்தனை பேரு பேசினாங்களே, என்னென்ன பேசுனாங்க - பின்னூட்ட வெறின்னு பேசினாங்க, உப்புமா சுவைன்னு பேசினாங்க, அண்ணான்னாங்க, தம்பின்னாங்க, அடிச்சுக்கிட்டாங்க, அணைச்சுக்கிட்டாங்க. ஆஹா, ஆஹா என்ன உணர்ச்சிகள், என்ன காட்சிகள். ஆனா யாராவது ஒருத்தனாவது பதிவு எல்லாமே உப்புமா இல்லை, வெறும் பின்னூட்டத்துக்காக பதிவுகள் எழுதலை அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னீங்களாய்யா? வல்லியம்மாதான் கொஞ்சம் கிட்ட வந்தாங்க ஆனா அதுலேயும் அர்த்தமுள்ள ஹிந்து மதம் அப்படி இப்படின்னு காமெடி பண்ணிட்டாங்க.


இப்படித்தான் ஒரு முறை ஒரு பட்டிமன்றம் - சீதைக்கு ராமன் சித்தப்பாவா? பெரியப்பாவான்னு தலைப்பு. பங்கெடுத்துக்கிட்டவங்க எல்லாம் ரொம்ப அற்புதமா பேசுனாங்க. அங்க நான் குடுத்த தீர்ப்பு சித்தப்பாதான்! இது எல்லாம் சரித்திரம் பார்த்துத் தர தீர்ப்பு இல்லைங்க. இது என்ன பரீட்சையா சரியான பதிலை யார் எழுதி இருக்கான்னு சொல்ல? இது பட்டிமன்றமய்யா. இங்க அன்னிக்கு டேட்ல யாரு நல்லா பேசி இருக்காங்க அப்படின்னு சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு சொல்லணும்.


அப்படித்தான் இங்க துளசி ஆரம்பிச்ச அழகைச் சொல்லவா, பெனாத்தலார் பெருமையாப் பேசினதைச் சொல்லவா, வேவு பார்த்திட்டு வ்ந்தா மாதிரி பாயிண்டா அடுக்கின தேவைச் சொல்லவா, இல்லை பாட்டு என்ன, கவுஜ என்ன குட்டிக் கதை என்னான்னு கலக்கின மருத்துவரைச் சொல்லவா. என்னா பேச்சு என்னா பேச்சு. இதுல நடுவில சினிமா பாட்டு மெட்டுல இட்டுக்கட்டிப் பாட ஆரம்பிச்சுட்டாரு நம்ம பெனாத்தலார். ஆனா அதுக்கு ஈடு குடுக்கிற மாதிரி தேவ் வந்து பட்டையைக் கிளப்பிட்டாரு.


இப்படி எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவு சொல்லலாமுன்னு நினைக்கும் போதுதான் தெரிஞ்சுது நம்ம கொத்ஸ் நெல்லைச் சீமையாளாமே. அந்த பக்கத்து ஆளுங்களைப் பார்த்தாலே நமக்குக் கொஞ்சம் டென்ஷந்தான்யா. ஒரு தடவை அங்க ஒரு பட்டிமன்றம் அப்படின்னு ஒத்துக்கிட்டு போயிட்டோம். எல்லாரும் பேசி முடிச்சு தீர்ப்பு சொல்லற வேளை வந்தது. அப்போன்னு பார்த்து நல்ல வெள்ளையும் சொள்ளையும் போட்டுக்கிட்டு மூஞ்சி நிறையா மீசையை வெச்சுக்கிட்டு ஒரு ஆள் பின்னாடி கையைக் கட்டிக்கிட்டு நம்ம பக்கத்தில் வந்து நின்னான். என்னடா பார்வை ஒரு மாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே இருக்கும் போது இவனை கலர் ஜெராக்ஸ் எடுத்தா மாதிரி ஒருத்தன் அந்தப் பக்கம் வந்து நின்னு நம்மளைப் பார்த்து ஒரு மாதிரி சிரிச்சான். என்னடா அப்படின்னு பார்த்தா நம்ம கிட்ட ஜாமான் இருக்கு சாமி, நம்மூர் வழக்கப்படி நமக்கு எதிரா தீர்ப்பு வந்தா ஒரே போடா போட்டுருவேன்னான். அப்போ அவன் அப்படின்னு கேட்டா அந்த பக்கத்துக்கு எதிரா தீர்ப்பு வந்தா அவன் போடுவாமில்ல அப்படின்னு அசராமச் சொல்லுதாங்கய்யா.


அன்னைக்குத் தப்பிச்சு வந்தது தம்பிரான் புண்ணியமாப் போச்சு. அது என்னமோ தெரியலை. இன்னிக்கு மேடை ஏறினதுலேர்ந்து அந்த நினைப்பாவே இருக்கு. அதுனால நான் என்ன சொல்லறேன்னா ஜனநாயக முறைப்படி வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வாக்காளப் பெருமக்களான உங்களை அறிமுகப் படுத்திக்கிட்டு நான் எஸ் ஆகறேன். வாக்காளப் பெருமக்களே தவறாம உங்கள் பொன்னான பட்டிமன்றத்தில் பேசிய அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும். அப்போ வர்ட்டா!!


Wednesday, December 05, 2007

மருத்துவர் தரும் செகண்ட் ஒப்பீனியன் - பட்டிமன்றம் பாகம் 4

சாலமன் பாப்பையா

நியூசிலாந்த்தில் ஆரம்பிச்சு அப்படியே அமீரகம் வந்து பின்ன என்னமோ மறந்து போனா மாதிரி இந்தியாவுக்குப் போயிட்டு இப்போ நம்ம பட்டிமன்ற வண்டி ரஷ்யாவில் வந்து நிக்குது. இந்தக் குளிருக்கு இதமா தேவ் ஆரம்பிக்கப் போற டீக்குடிப்பு போராட்டத்தில் கலந்துக்கிட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சா இப்போ வரப்போறவரு வோட்காதிபதி இராமநாதன். இளஞ்சிங்கம் நீரு, பஞ்ச் டயலாக் எல்லாம் வெச்சு பேசுவீரு. நீர் விரலைச் சுத்தி பேசும் அந்த அழகைப் பார்த்து எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க, வந்து பழகுங்க அப்படின்னு ஆசையாக் கூப்பிடணும். அப்படிக் கலக்க 'வா நீ, வா நீ, வா நீ, நம்ம மேடை ஏறி வா நீ!!'


மருத்துவர் இராமநாதன்

இதுவரைக்கும் பெருந்தலைகளெல்லாம் வந்து பேசிட்டு போயிட்டாங்க. கடசியா ஒரு தறுதலையும் பேசினாத்தான் தீர்ப்பு சொல்வேன்னு பாப்பையா நினச்சிருப்பாரு போல. அதான் என்ன கூப்பிட்டிருக்காரு.

முதல்ல கொத்ஸுக்கு இந்த தறுதலை வாசகனின் வாழ்த்து!

நள் இருளில்(ம்) நட்டம் பயின்று ஆடும் நாதனே!
கல்லிடைஉள் குத்தனே தென்பாண்டி நாட்டானே!
எண்ணுதற்கு எட்டா ஊட்டு பெறுகழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழு மாறு ஒன்று அறியேன்!

கொத்தனாருக்கு ஏதோ வெறி பிடிச்சுருக்குனு எல்லாரும் ஒத்துக்கறாங்க. அந்தவரைக்கும் என் செகண்ட் ஒப்பீனியன்ல டவுட் இல்ல. ஆனா பிடிச்சுருக்கறது என்ன வெறி? அது ஏன் தலைக்கு ஏறியிருக்குனு யோசிச்சு பார்த்தா அது உப்புமா வெறிதான்னு கன்பர்ம் ஆயிடுது. எனக்கு முன்னாடி எங்க அணித்தலைவர் பெனாத்தலார் பல்வேறு பாயிண்ட்ஸ அள்ளிவிட்டாரு. அதோட சேர்த்து கொசுறா நானும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்.

உப்புமானா என்னவோ சாதாரணம்னு அளந்துவிடறாங்க தேவும் ரீச்சரும். உப்புமாவோட உன்னதத்தை உணர்த்த ஒரு குட்டிக்கதை சொல்றேன். உடனே கண்ணீர் துடைக்க க்ளீனெக்ஸோட உஷாராவற வாலிப வயோதிக அன்பர்களே: இது எந்த குட்டியோட கதையும் இல்ல. நான் சொல்றது குட்டி as in சின்ன. சத்ரபதி சிவாசி சின்ன வயசுல அவுரங்கசீப்ப எதிர்த்து சண்டை போட்டு சில கோட்டைகளை ஜெயிச்சார். ஆனா சில நாட்கள்லேயே அதையெல்லாம் அவுரங்கசீப் படையினர் மீண்டும் கைபற்றிட்டாங்க. ஒருநாள் அவுரங்கசீப்போட படை துரத்துனதுல உசுருக்கு பயந்து ஒரு கிராமத்து வீட்டுக்கு மாறுவேஷத்துல போய் பசின்னு கேக்க, அங்க ஒரு கிழவி சிவாஜிக்கு 'உப்புமா'வ கிண்டிப்போட்டு அத எப்படிச் சாப்பிடறதுன்னு சொல்றாப்போல போர்த்தந்திரத்தை, கோட்டைகளை கூட வசப்படுத்தும் வழியை கத்துக்கொடுத்தாங்களாம். இப்படியாக உப்புமாவ வச்சுதான் சத்ரபதியே சாம்ராஜ்யம் சமைச்சாரு. கதைனு சொன்னா நீதி வேணுமில்லியா? உப்புமாவ குறைச்சு மதிப்பிட்டா பதிவு ஊத்திக்கும்கறது சிவாஜிக்கு தெரியுது. ஆனா விவாஜி எழுதுற மன்றத்துக்கு தெரியலியே!

ஒண்ணுமில்லாத விஷயத்தை ஊதிப்பெருசாக்கி அதையும் நாலு பேரு படிச்சு கருத்து சொல்லுமளவுக்கு எழுதணும். அதுக்கு உப்புமாவெறி இல்லாம முடியுமா? நான் இன்னிக்கு கார்த்தால ட்ரெட்மில்ல ஓடினேன்கற mundane மேட்டரையும் தமிழ்ப்பதிவுலகின் முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளில் ஒன்றாக மாற்ற முடியும்னா அதுக்கு உப்புமாவெறி இல்லாம முடியாது. பின்னூட்டம் போடறது இப்பல்லாம் நிறைய பேரு செய்யறதில்லனு ரீச்சர் வருத்தப்படறாங்க. அத நானும் ஒத்துக்கறேன்.


ஏன்? இன்னிக்கு தமிழ் வலையுலக முகப்பை பாருங்க... எத்தனையோ பேரு ரவுசு பண்றேன் நக்கல் பண்றேனு பதிவு போடறாங்க. அதையும் எத்தனையோ பேரு வந்து படிக்கிறாங்க. ஆனா கமெண்ட் போடறாங்களோ? இல்லையே. கொத்தனாருக்கு மட்டும் போடறாங்கன்னா அது ஏனு நாம யோசிக்கணும். பதிவுல ஒண்ணுமில்ல. ஆனா என்னவோ இருக்கு. அந்த என்னவோ வந்தவங்கள ஒரு பதிலாவது கொடுத்துட்டு போகணும்னு படுத்துது. அது என்னது? அது பின்னுட்ட வெறிங்கறாங்க அவங்க. ஆனா உப்புமா வெறிங்கறேன் நான். ஏன்னா பின்னூட்டத்துலயும் உப்புமா கிண்டறவர் நம்ம கொத்ஸு.


வெறுமனே பின்னூட்டம் வாங்கணும்னா அதுக்கு எத்தனையோ டாபிக்ஸ் இருக்கு. அந்தந்த செக்ஷன் ஆளுங்க வந்து தானா போட்டுட்டு போவாங்க. ஆனா அது எல்லாமே குழுக்களா இருக்கும். ஆனா எந்தக்குழுவுக்குள்ளும் சிக்காம தொடர்ச்சியா சிக்ஸர் அடிக்க முடியுதுன்னா எந்த பக்கத்திலயும் சாயாத ஜோரான உப்புமா போடற திறமை கொத்ஸுக்கு இருக்கறதுனால மட்டுமே. அந்த unique நடையும் நக்கலும் இல்லேன்னா இலவசம் இவ்வளவு பிரபலமாகியிருக்குமா? பதிவு மட்டும் உப்புமாவா இருந்தா போதுமா? கண்டிப்பா போதாது. பின்னூட்டத்துலயும் உப்புமா கிண்டத்தெரியணும். கிண்டாம விட்டா கல்லாகிடும். வந்து பின்னூட்டம் போட்டவன் வாயக் கிண்டனும். கிண்டக் கிண்டக் கவுண்டரும் குன்ஸாவாரு. ப்ளாக்கரும் ரென்சன் ஆவாரு. இதுல எதிரணியில இருந்தும் தானே மனமுவந்து சூனியம் வச்சுகிட்டு இந்த பாயிண்ட கொடுத்த அக்காவுக்கு நன்னி.


அய்யா...கண்ணாடி போட்டவங்கள்லாம் எம்ஜிஆர் ஆக முடியுமா? பதிவு போட்டவங்கள்லாம் உப்புமா மன்னனாக முடியுமா? மிச்ச பதிவுகள்ல போடற பின்னூட்டங்களால மட்டும் தான் கொத்தனாரின் பதிவுகளிலும் பின்னூட்டங்கள் எகிறுதுங்கற மாதிரி கருத்த தேவு சொல்லிருக்காரு. இதவிட தவறா கொத்ஸோட புல்லிங் பவர மதிப்பிட முடியாது. கொத்தனாரின் பதிவுகள்ல போய் நீ கொடுத்த தவசதானியத்துக்கு இப்ப நாங்க மொய் வைக்கிறோம்னு பலகாலம் கழிச்சா பின்னூட்டம் போடறாங்க? இங்க பின்னூட்டம் போடறவங்களோட நோக்கம் கொடுத்து வாங்கறது இல்ல. உப்புமா ருசிக்க வந்தவங்கள தப்பா எடை போடலாமா?


அந்த மாதிரி மொக்கை பின்னூட்டங்கள் - ஒண்ணு நமக்கு நாமே போட்டுக்கணும் இல்லேன்னா பொழுது போகாத நண்பரை கட்டாயமா உட்கார வச்சு போடச் சொல்லணும். இதுல இன்னஸண்டான வெளியாளுங்க (அதாவது சாட்ல "மச்சான் வெளாடுவோம் வா"னு கூப்பிடப்பட்டவர்கள் அல்லது ஆஞ்சலீனா அண்டர்க்ரவுண்ட் சொஸைடிஸோட பார்களிலிருந்து மோப்ளாக் செய்பவர்கள்) வந்து மே ஐ கம் இன்' னு வந்து சொல்லிட்டு -, நீ உருப்படுவியா, நீமட்டும் உருப்படுவியான்னு இப்படியாக யாஹூல பண்ணவேண்டிய கான்பரன்ஸை போடலாம். போடறாங்க. ஆனா பொதுவா மத்தவங்களுக்கு துளிக்கூட சுவாரசியமா இருக்காது. எல்லாரையும் இன்வால்வ் பண்ண வைக்கிற திறமை இல்லேன்னா இப்படி தொடர்ந்து செய்ய முடியாது. மேற்சொன்ன வழிமுறைகள்ல இந்த பின்னூட்ட வெறி பிடிச்சவங்களுக்கு ஒரு சில பதிவுகள்ல வெற்றி கிடைச்சாலும் அவங்களால அத தக்க வச்சுக்க முடியாது.


அதுதான் நான் சொல்ல வர்றது. உப்புமாத் திறமையும் வெறியும் இல்லேன்னா பின்னூட்டங்களும் வரப்போறதில்லை. வரும் ஆனா ரெண்டு மூணு பேரு மட்டும் ஜோக் பண்றேனு ஜோக்கர் ஆவற காமெடி பண்ணி எல்லாரையும் கழுத்தறுத்து ஓடவச்சிருவாங்க. உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் தேவையில்லை.


இப்ப கடைசியா பஞ்ச் செக்ஷனுக்கு வந்திருக்கோம். ரெண்டு காதுக்கு ரெண்டு பஞ்ச். பஞ்சு வச்சுக்குற அளவுக்கு விஷ்க் விஷ்கோட டயலாக் சொல்லலேனா எப்படி?


ஒண்ணு: தெளிவா சொல்லிடறேன். எதிர் அணியினர் புரிஞ்சுதான் இந்த பட்டிமன்றத்துல கலந்துகிட்டாங்களானு தெரியாது. ஆனா என்னப் பொறுத்தவரைக்கும் இப்ப நாம எழுதிருக்கோமே - இதுதான் உப்புமாவுக்கு டெபனிஷன். இந்த மாபெரும் உப்புமா மன்றத்துல உங்கள எதிரணியில பேசக்கூப்பிட்டதுல இருக்குற உள்குத்தை புரிஞ்சுக்காம பேசியிருக்காங்க. அக்காதான் இன்னஸெண்டுன்னா தேவு அவர வச்சு காமெடி கீமடி பண்ற்த புரிஞ்சுக்காம ரொம்ப நல்லவர் மாதிரி கச்சேரி நடத்திருக்காரு.


ரெண்டு: கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது.

சாலமன் பாப்பையா

மருத்துவரே வாங்க. மத்த டாக்டருங்க எல்லாம் கை பிடிச்சுப் பார்த்து விஷயம் என்னான்னு சொல்லுவாங்க. நீங்க விஷயம் என்னான்னு சொல்லிட்டு கைத்தட்டலை அள்ளிக்கிட்டீங்க. பாட்டு என்ன, கதை என்னான்னு தூள் கிளப்பிட்டீங்க. இனிமேலாவது அந்த ஸ்ரீதர் வெங்கட் இது பட்டிமன்றம்தான்னு ஒத்துப்பாருன்னு நினைக்கிறேன்.

இப்போ, ரெண்டு அணியும் தங்களுக்குக் கொடுத்த தலைப்பை எடுத்துப் பிரமாதமா பேசிட்டாங்க. கூடவே வந்து பின்னூட்டங்களில் காரசாரமா வெளுத்து வாங்கிட்டாங்க சிலர். இப்போ எல்லாத்தையும் சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு சொல்லும் வேளை வந்தாச்சு.

அதுக்குள்ள டைரக்டர் அங்க என்னமோ கையைக் காட்டறாரே, என்ன விஷயமுன்னு பார்க்கலாம். என்னது ப்ரேக் போகணுமா? சரி சரி.

யாரு வெற்றி பெறப் போறாங்க பின்னூட்டமா, உப்புமாவான்னு பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ரேக்!


(தொடரும்)

Tuesday, December 04, 2007

தேவு பிழிந்த சேவு - பட்டிமன்றம் பாகம் 3

சாலமன் பாப்பையா

மீண்டும் விளம்பர இடைவேளை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நம்ம பட்டிமன்றத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன். துளசி ரீச்சரும் பெனாத்தலாரும் கலக்கி எடுத்துட்டாங்க. அடுத்து பின்னூட்ட வெறியேன்னு பேச வரது கொத்ஸின் ரசிகர் மன்ற செயல் தலைவர் தேவ். வாங்க தேவு, வந்து பிழியுங்க சேவு!

நேத்து விளம்பரம் போட நேரமில்லாம ரெண்டு பேரை பேசச் சொல்லிட்டேன்னு டைரக்டர் கோச்சிக்கிட்டாரு. அதனால இன்னிக்கு ஒருத்தர் பேசின உடனே ஒரு சின்ன ப்ரேக். (என் நேரமடா, இந்த சின்னப் பொண்ணுங்க மாதிரி கையை ஆட்டிக்கிட்டே ப்ரேக் சொல்ல வேண்டியதாப் போச்சு. நல்ல வேளை குட்டியா ஒரு டவுசர் போட்டுக்கச் சொல்லாம விட்டாங்களே!)

தேவ்

பதிவுலகம் போற்றும் பின்னூட்டக் கலையின் பிதாமகனே... பின்னூட்ட இலக்கணத்தின் மொத்த உருவமே... உங்கள் பதிவுலக வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்லாம்...100 வது பதிவாம்... என்னச் சொல்லுவது... பதிவுகளின் எண்ணிக்கை என்பது எதிரணியில் இருக்கும் மதிப்பிற்குரிய நண்பர்களுக்கும் பிறருக்கும் வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கும்..ஆனால் பின்னூட்ட வள்ளலாகிய உங்களுக்கு இதுவரை 10000 ஆயிரத்துக்கும் அதிகமான பின்னூட்டங்கள் வாங்கிய உங்களுக்கு பின்னூட்ட எண்ணிக்கையை வைத்து அல்லவா விழா எடுக்க வேண்டும்...

பதிவுகளின் எண்ணிக்கையை இங்கு நாளும் கூட்டுவோர் பலருண்டு..அது பதிவுலக இயல்பு..ஆனால் ஒரே பதிவை இட்டு அந்த பதிவிலேயே பின்னூட்டக் கச்சேரியை நிகழ்த்தி.. அந்தக் கச்சேரியை எண்ணிக்கைக்கே வலிக்கும் அளவுக்கு ஏற்றி போற்றி உயர்த்தும் உங்களுக்கு எதில் வெறி என்று ஒரு பட்டி மன்றம்...அதை விவாதிக்க ஒரு பதிவு..

எதிரணியில் இருக்கும் நண்பர்கள் செய்த முதல் குற்றம் அண்ணனின் பதிவுகளைப் படித்தது...பொதுவாக அண்ணனின் எண்ணற்ற என்னைப் போன்ற அன்புத் தொண்டர்கள் அண்ணன் பதிவை எவ்வாறு நோக்குகிறோம் என்பதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்...கேட்டப் பிறகாவது உண்மையைப் புரிந்து உடனே ஒத்துக் கொள்ளுங்கள்

கிரிக்கெட் ஸ்கோர் எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி பார்க்க வேண்டும் தலைவர் கொத்தனார் பதிவுகளை... சும்மா பந்துக்கு பந்து ரன் ஏத்தும் சச்சின் போல... தமிழ்மணத்தில் அண்ணன் பதிவு பின்னூட்டப் பகுதியில் தெரிய ஆரம்பித்ததும்... ஒவ்வொரு முறை ரிபிரெஷ் ஆகும் போதும்.. பின்னூட்டம் ஏறும் அழகைப் பார்த்து இருந்தால் இப்படி ஒரு வாதம் இடவே நீங்கள் முயன்று இருக்க மாட்டீர்கள்

உங்களுக்கு எல்லாம் பதிவு போடுவதோடு பணி முடிந்தது எனப் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்துவிட்டு உறங்கப் போய் விடுவீர்கள்..ஆனால் அண்ணன் ஸ்டைலே தனிய்யா....சும்மா பதிவு போட்டுட்டு. கீ போர்டு நிமிர்வதற்குள் பின்னூட்ட வரிசையில் முதல் ஆளாய் நின்று பின்னூட்ட விளையாட்டை அண்ணனே ஆரம்பித்து வைக்கும் அழகு என்ன....அது ஒரு அழகான வெறி என இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன்..
அண்ணன் போட்டக் கடைசி பத்து பதிவுகளில் 1000 பின்னூட்டங்களை அனாசயமாகத் தொட்டவர் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்...அவசரத்தில் உப்புமாத் தின்று விட்டு இங்கே மேடையேறியிருக்கும் அருமை நண்பர்களுக்கு எப்படித் தெரியும்...

பின்னூட்டப் புயலாரின் சாதனைகளை அவர் தம் இலவசம் என்ற பதிவிற்குள்ளே அடக்க நினைக்கிறார்கள் எதிரணி நண்பர்கள்... அண்ணன் பின்னூட்டக் கோலம் போடாத தமிழ் பதிவு என்பது இனி தமிழ் மணத்தில் பிறக்கப் போகும் பதிவு என்றே அர்த்தம்..அந்த அளவுக்கு பதிவுகளில் பின்னூட்டச் சுனாமியாய் புகுந்துப் புறப்படும் ஆற்றல் படைத்தவர் எங்கள் அண்ணன்,

பதிவுகளுக்கு நேரமுண்டு...பின்னூட்டங்களுக்கு நேரம் காலமுண்டா... ஒரு நாளுக்கு 24 மணி நேரமென்றால் தன் பின்னூட்ட நற்பணிக்காகவே அடுத்த நாளிடம் எக்ஸ்ட்ராவாக இரண்டு மணி நேரம் கடன் வாங்கி பின்னூட்டப் பணி புரியும் எங்கள் அண்ணனை ஒரு உப்புமாச் சட்டிக்குள் அடைத்து வைக்க நினைக்கும் உங்களைப் பார்த்தால் எனக்குச் சிப்பு சிப்பாக வருகிறது,..

அவரவர் பதிவினைப் பாருங்கள்..உங்களால் கண்டு கொள்ளாமல் விடப் பட்டப் பின்னூட்டங்கள் எத்தனை... நீங்கள் பதில் சொல்லத் தயங்கிய பின்னூட்டங்கள் எத்தனை...வெளியிடத் தயங்கிய பின்னூட்டங்கள் எத்தனை... மொத்தப் பின்னூட்டங்களுக்கு ஒற்றை பின்னூட்டத்தில் நன்றி நவின்று நகர்ந்த தருணங்கள் எத்தனை? இப்படி எதாவது ஒரு நிகழ்வை அண்ணனின் பதிவினில் காட்ட முடியுமா?

அண்ணனின் பின்னூட்ட வெறி ஒரு கட்டத்தில் கரை உடைத்துப் பொங்கி கடலாக பாய...அதைத் தொடர்ந்து பின்னூட்டக் கயமை என அந்த கலையை ஆதிக்க வர்க்கம் அறிவித்து அண்ணன் மீது பின்னூட்டக் கயமைப் பிரிவு போலீஸ்காரை ஏவி விட்டது உலகறிந்த செய்தி..அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது அண்ணன் எங்களுக்கு உப்புமா வழங்கவில்லை.. பின்னூட்டங்கள் தான் வழ்ங்கினார் என்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டிய செய்தி

ஆயிரம் பின்னூட்டங்கள் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதில் பின்னூட்டம்... நக்கல் பின்னூட்டத்துக்கு நயமான பின்னூட்டம்...கேலிப் பின்னூட்டத்திற்கு கலக்கலானப் பின்னூட்டம், அனானியாக வந்து உசுப்பேத்திப் பின்னூட்டினாலும் அதற்கும் தக்க பின்னூட்டம் என அசத்தும் அண்ணனை எங்கள் பின்னூட்டப் பேரசானை... உப்புமா எனச் சொல்லுவதை எதிர்த்து இந்த நிமிடமே டீ குடிக்கும் போராட்டத்தை அறிவிக்க ஆயுத்தமாக உள்ளேன்... அண்ணனின் விழா என்பதால் காபியும் குடிக்க தயார் என அறிவிக்கிறேன்...

பொதுவாக அண்ணனுக்காக உணர்ச்சிவசப் படும் கோடானு கோடி தொண்டர்களில் முதல் தொண்டன் நான்..அந்த முறையில் அண்ணனின் பின்னூட்டப் பணிகளுக்காகவே அவருக்கு உலகமெங்கும் ஆயிரமாயிரம் மன்றங்கள் இயங்கி வருகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

வாழும் பின்னூட்ட வரலாறு அண்ணன் கொத்ஸ் அவர்களின் 100வது பதிவிற்கு அண்ணனை வாழ்த்தி வணங்குவதோடு.... அண்ணனின் பின்னூட்ட வெறியை மீண்டும் நினைவுப்படுத்தி நிலைனிறுத்தி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

சாலமன் பாப்பையா


பெனாத்தலார் பின்னூட்ட உயரெல்லை பத்திப் பேசினா இவரு பின்னூட்ட கயமை பத்திப் பேசிட்டாரு. அவரு பப்ளிஷ் பண்ண டயம் சோன் பத்திப் பேசினா இவரு 24 மணி நேரமும் பின்னூட்டம் போடறதைப் பத்திப் பேசிட்டாரு. தடாலடியா டீ குடிப்பு போராட்டம் அறிவிச்சுட்டாரே அடுத்தது என்ன போண்டா தின்னும் போராட்டமான்னு கேட்க வந்தா அதுக்கு வலையுலகில் அர்த்தமே வேறயாமே. அதுனால பக்கோடா தின்னும் போராட்டம் ஒண்ணு ஆரம்பிங்கப்பா. அடுத்து பக்கோடா தின்ன வருவது, அட, உப்புமா சுவையைப் பத்திப் பேச வருவது நம்ம இராமநாதன் அவர்கள். வாங்கய்யா.

(தொடரும்)

Monday, December 03, 2007

கோதாவில் பின்னூட்டநாயகியும் உப்பு மாமாவும் - பட்டிமன்றம் பாகம் 2

சாலமன் பாப்பையா

விளம்பர இடைவேளை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நம்ம பட்டிமன்றத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன். இப்போ முதலில் பேசப்போறது நம்ம பின்னூட்ட நாயகி துளசி ரீச்சர். வாங்கம்மா வாங்க.

துளசி ரீச்சர்

முதல்லே அனைவருக்கும் வணக்கம். உப்புமாவா, பின்னூட்டமா என்றதுதான் விவாதமுன்னா.........கொஞ்சம் நீங்களே யோசிங்க. உப்புமா...... ஹஹ்ஹஹா....... மறுநாளே ஊசிப்போயிரும். பின்னூட்டங்கள் அப்படியா? நாளாக ஆக மெருகு கூடுமேயன்றிக் குறையாது. இது புதுப்புதுக்கருத்துக்கள் ஊற்றுபோல பொங்கிவரும் ஆழ்கிணறு.

ஆழமா(??) எழுதும் பதிவர்களின் பதிவுகளில் பார்த்தீங்கன்னா.......பதிவையும் விடப் பின்னூட்டங்களிலே இருக்கும் கருத்துப் பரிமாற்றங்கள்(???) அதி'ரசமா' இ(னி)ருக்கும். பின்னூட்டம் வரலைன்னா கவலையே படாத பதிவர்கள் இருக்கலாம். ஆனால் (நல்ல) பின்னூட்டம் வந்ததால் மகிழ்ச்சி அடையாதவர்கள் இருக்கவே முடியாது. நம்ம பதிவுகள் நல்லதோ சொத்தையோ, மக்கள் அதைப் படிச்சிருக்காங்கன்றதுக்கு ஆதாரமே பின்னூட்டம்தான். அது கும்மியானாலும் சரி, கோலாட்டமானாலும் சரி.

பின்னூட்டங்களை மதித்து, அதுக்குப் பின்னூட்டங்களைப் போடறதுன்றது ஒரு கலை. எல்லாருக்கும் எளிதாக் கை வராத ஒரு கலை. 'வருகைக்கு நன்றி, கருத்துக்கு நன்றி'ன்னு சப்பையாப் பதில் சொல்லாம,ஆடற மாட்டுக்கு...அடடா ..... சரி. ஆடற பின்னூட்டத்துக்கு ஆடியும், பாடற பின்னூட்டத்துக்குப் பாடியும் பதில் சொல்லணும். எப்பப் பின்னூட்டங்கள் வருமுன்னே தெரியாத ஒரு நிலையில் கண் துஞ்சாமல் ( பதம் சரியா?) மெய் வருத்தம் பாராமல் உடனுக்குடன் அதுகளை 'மாடு விரட்டிப் பட்டியில்' அதாங்க பெட்டியில்...எந்தப் பெட்டியா? சரியாப்போச்சு விடியவிடிய ராமாயணம் கேட்ட கதைதான் போங்க....பின்னுட்டப்பெட்டியில் அடைச்சு, 'அதுக்குத் தண்ணி காமிக்கறது' லேசுப்பட்ட வேலையா?

பின்னூட்டத்துக்குப்போய் இவ்வளவு மெனெக்கெடணுமான்னு கேக்கறவங்க நெஞ்சுலே கை வச்சு யோசியுங்க. உங்களில் எத்தனைபேர் பின்னூட்டிட்டு, அது பப்ளிஷ் ஆச்சா ஆச்சான்னு போய்ப்போய் பார்த்து கவுண்ட்டரை ஏத்திக்கிட்டு இருந்தீங்க? ஆகலைன்னா என் பின்னூட்டத்துக்கு என்ன ஆச்சுன்ற எதிர்க்கேள்வி வேற....... இவ்வளோ என்னத்துக்கு? பப்ளிஷ் பட்டனை ஒரு முறைக்குப் பலமுறையா அழுத்தி ஒரே பின்னூட்டம் நாலைஞ்சுதடவை வெளிவர்றதைக் கவனிச்சிருப்பீங்கதானெ?

என்னவோ இப்ப ப்ளொக்கர் பகவான் அருளாலே பின்னூட்ஸ் எல்லாம் உங்க மெயில் பொட்டிக்கே வந்துருது. கவுண்(ட்)டரும் கம்னு கிடக்கார். உப்புமா ஒரு பூனைன்னா பின்னூட்டம் ஒரு யானை. பூனையைக் கவனிக்காமப்போறவங்க இருப்பாங்க. யானையைக் கவனிக்காம இருப்பாங்களா? இல்லே இருந்துற முடியுமா ? ஏன்? அதோட பிரமாண்டம் அப்படி!!!

எதைச்சொன்னாலும் எழுதுனாலும் 'எங்கே இதுக்குச் சான்று?'ன்னு கேக்கும் மக்கள்ஸ்க்கு இந்த இடத்தில் இன்னொண்னும் சொல்லிக்க ஆசைப்படறேன். பின்னுட்ட வெறிதான் என்பதற்கு சான்று வேணுமா ? இங்கே இந்தப் பட்டிமன்ற அறிவிப்புலேயே பாருங்கைய்யா..!!!! 'நான் உப்புமா, நானுப்புமா 'ன்னு உப்புமாக் கட்சியாளுங்கக்கூட அதைப் பின்னூட்டத்துலே வந்துதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. பின்னூட்டங்களைக் கவனிச்சு, யார் யார் ஆதரவு தராங்கன்னுக் கவனிச்சுக்கிட்டே இருக்காங்கைய்யா....கவனிச்சுக்கிட்டே இருக்காங்க. இப்பப் புரிஞ்சிருக்குமே உங்களுக்கு எந்தச் சுவை மிகுதியா இருக்குன்னு (கடைசி வரியை சிவாஜி ஸ்டைலில்,நடிகர்திலகம் சிவாஜிய்யா படிக்கவும்.)

வெறும் நூறு பதிவுக்குப் ஆயிரக்கணக்கில் பின்னூட்டங்கள் வாங்கி இருப்பது வெறி என்று நீங்கள் நினைத்தால் அது வெறிதான். ஏன்? நாய்க்கு மட்டும்தான் வெறி பிடிக்கணுமா? மனுஷன் நாயைவிடக் கேவலமா? ஷாஜகானின் காதல் வெறிதான் இன்னிக்கு உலகம் முழுசும் வாயைப்பிளந்து 'ஆ'வெனப்பார்க்கும் அதிசயம். பணவெறி, நிறவெறின்னு வெறிகள் நிரம்பின உலகத்திலே என்
அருமை மாணவரான கொத்ஸின் பதிவுகளில் விஞ்சி....விஞ்யென்ன விஞ்சி?
மிஞ்சி இருப்பதும் பின்னூட்டவெறிதான் என்பதில் மிகவும் பெருமைகொண்ட ரீச்சருள்ளத்துடன் ( தாயுள்ளம் மாதிரி இது ஒரு உள்ளமுன்னு வச்சுக்குங்க) நூறு பதிவு கண்ட கொத்ஸ் நீடூழிவாழ்ந்து இன்னும் பலநூறு பதிவுகள் காணட்டுமென வாழ்த்துகின்றேன்.

வணக்கம்.


சாலமன் பாப்பையா

கும்மி ஆனாலும் சரி கோலாட்டமானாலும் சரி என பேசி பெண்கள் அனைவரையும் கவர்ந்துட்டாங்க துளசி. இவ்வளவு வெறித்தனமா பேசின இவங்களுக்குப் பதில் சொல்ல வராரு உப்பு மாமா அப்படின்னு எல்லாரும் செல்லமா கூப்பிடற வலைமாமணி பெனாத்தலார் அவர்கள். வாங்கய்யா வந்து ப்ளாஷுங்க, ச்சீ விளாசுங்க.

பினாத்தல் சுரேஷ்


ஊசிப்போவதுதான் உப்புமா என்ற சமையலறைக் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்கும் மதிப்பிற்குறிய ரீச்சர் அக்கா, உப்புமா என்பது என்போன்ற, கொத்ஸ் போன்ற பதிவர்களின் ஜீவனோபாயம் என்பதை முதற்கண் புரிந்து கொள்ளுங்கள்!

உப்புமா என்பது பதிவிடுதல் மட்டுமே, வெறி அல்ல என்ற பார்வையிலிருந்து வெளியே வாருங்கள். உப்புமாவும் ஒருவகை வெறிதான்! பின்னூட்டத்துக்கு அல்ல, ஹிட்டுக்கு வெறி.

சூடான தலைப்பை ஒட்டி வெட்டிப் போடுவது, நாலணா பெறாத மேட்டரை முதல் நாலு வரிகளில் பில்ட் அப் கொடுத்து ஊதிப் பெரிதாக்குவது, வலைப்பதிவர்களின் பெயர்களைத் தலைப்பில் வைத்து அனைவரையும் ஆசைகாட்டுவது, நன்றி என உணர்ச்சிவசப்பட்டு தலைப்பு கொடுத்து உள்ளே போய்ப் பார்த்தால் "டிக்கெட் காசு போக நாலணா திருப்பிக் கொடுத்த பேருந்து நடத்துனருக்கு நன்றி" என்று ஏமாற்றுவது, விடைபெறுகிறேன் என்ற தலைப்பில் "ஆஹா தமிழ் வலைப்பதிவுகளுக்கு வந்ததடா நல்ல காலம்" என்று நினைத்துக்கொண்டு உள்ளே போனால் அல்பமாய் குவிஸ் வைத்து விடை கேட்பது.. இதுதான் உப்புமா.. இப்படிப்பட்ட பதிவுகள் இல்லாவிட்டால் கொத்ஸின் பதிவுகள் பூரிபோல் நூறாக உப்புமா? நேர்மையானவர் பார்வையில் இப்பதிவுகள் தப்புமா? இப்படி பதிவு போடாவிட்டால் பின்னூட்டங்கள் அவர் மெயிலை ரொப்புமா?

தமிழ்மணத்தில் பின்னூட்ட உயரெல்லை என ஒரு கருத்தாக்கத்தைக் கொண்டுவந்தபோது முதலில் கலங்கக்கூடிய ஆள் என எல்லாரும் நினைத்தவர் கொத்ஸ்.. ஆனால் தன் உப்புமாமேல் உள்ள நம்பிக்கையால் பின்னூட்டம் வந்தாலென்ன, முகப்பைவிட்டுப் போனாலென்ன என தன்கடன் உப்புமா செய்து கிடப்பதே என்று கருமமே கண்ணானார் நம் கொத்ஸ். இதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு இருப்பது பின்னூட்டவெறியல்ல, உப்புமா வெறிதான் என்பது?

இவருடைய உப்புமா வரலாறை சற்றே திரும்பிப் பார்ப்போம். இவருடைய பதிவுகளில் முதல்முதலாக பேசப்பட்ட பதிவு "போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்".. அன்றல்ல இன்றல்ல, என்றும் தமிழ் வலைப்பதிவுகளில் ஹிட் வாங்கித் தரக்கூடிய முக்கியமான் குறிச்சொல் டோண்டு - திட்டினாலும் படிப்பார்கள், வாழ்த்தினாலும் படிப்பார்கள். அதுவும் கூட போலி சேர்ந்தால் - தமிழ்மணம் படிப்பவர்களுக்கு அடுத்த நொடி க்ளிக்காவிட்டால் வலிப்பே வந்துவிடும். ஆனால் எல்லாருமே பின்னூட்டம் போட அஞ்சும் களம் இஃது! பின்னூட்ட வெறியா இப்படி ஒரு பதிவிடச் சொல்லும்? இத்துடன் அன்றைய ஹாட் டாபிக்கான மறுமொழி மட்டுறுத்தலையும் சேர்த்தது ஹிட்டுக்கு மண் சுமக்கும் வெறி அன்றி வேறு என்ன? உப்புமா இலக்கணம் மீறாமல், பதிவுக்குள் இவற்றைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை! இந்த தரமான உப்புமாவுக்குக் கிடைத்த பரிசுதான் 400க்கு மேல் பின்னூட்டங்கள்.

நீங்கள் சொல்கிறீர்கள்,

// உங்களில் எத்தனைபேர் பின்னூட்டிட்டு , அது பப்ளிஷ் ஆச்சா ஆச்சான்னு போய்ப்போய் பார்த்து கவுண்ட்டரை ஏத்திக்கிட்டு இருந்தீங்க ? ஆகலைன்னா என் பின்னூட்டத்துக்கு என்ன ஆச்சுன்ற எதிர்க்கேள்வி வேற ....... // என்று.

ஏன் அவர் உடனடியாக பப்ளிஷ் செய்வதில்லை? ஏனென்றால் உப்புமாக்கலையை - ஹிட் வெறியை ஒரு விஞ்ஞானமாகப் பயின்றவர் கொத்ஸ். உடனே வெளியிட்டு உடனே பதில் சொன்னால் ஒரு ஹிட், நேரம் பார்த்து வெளியிட்டு (அமெரிக்க நேரம், அமீரக நேரம், இந்திய நேரம் இங்கிலாந்து நேரம் - எல்லாம் கொத்ஸுக்கு அத்துபடி) அதில் ஒரு 100 ஹிட் பார்த்து, பிறகு இன்னொரு நேரம் பார்த்து பதில் சொல்லி இன்னொரு 100 ஹிட் பார்ப்பது பின்னூட்ட வெறியா ஹிட் வெறியா?

வெறும் வெண்பாப் பதிவிலும் குமரன் என்ற சகவலைப்பதிவரை இழுப்பது, நன்றி, விடைபெறுகிறேன், தமிழ்மணத்தில் 33% ஒதுக்கீடு, ஈழ நண்பர்களுக்கு கேள்வி, விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும் (அவருக்காவது புரிஞ்சிச்சா இந்தத் தலைப்பு?) க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?, கமலின் வலி எனக்குப் புரிகிறது, துளசி டீச்சருக்கு சமர்ப்பணம், சர்வைவல் ஆப் பிட்னஸ் என்று எல்லா நேரங்களிலும் வைத்த தலைப்புகளிலேயே தெரிகிறதே இவருடைய உப்புமா வெறி?

சான்று சான்றுன்னு சலம்பிகிட்டிருக்காய்ங்களே துளசி அக்கா, சாதா பதிவரெல்லாம் 100ஆவது பதிவுன்னா என்ன பண்ணுவாங்க? "வணக்கம், இது என் நூறாவது பதிவு"ன்னு ஒரு லைன் மேட்டர் எழுதி, அதுக்கு நன்றி நன்றின்னு ஒரு டைட்டிலைக் கொடுத்தாலே போதும், 100க்கு வாழ்த்து, வாழ்த்த வயதில்லை, திட்ட திடமில்லைன்னு கும்மி, உங்கள் சேவை நாட்டுக்குத் தேவைன்னு ஆதரவு, வரிக்கு வரி உடன்படுகிறேன், படிச்சிட்டு வந்து பதில் சொல்றேன் (எழுதினதே ஒரு வரி) அப்படி இப்படின்னு 100 பின்னூட்டம் தேத்திடலாமே, பின்னூட்டவெறியா இருந்தா அதானே பண்ணியிருப்பாரு கொத்ஸும்? ஆனா என்ன பண்ணாரு? அவரு தன்னோட உப்புமா பாசத்தைக் காட்டினாரு, டைட்டில்லே என்னன்னு புரியாம மையமா எதையோ எழுதினாரு, வர ஆளுங்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்க பின்னூட்டத்துலயும் விடாம உப்புமா கிண்டிகிட்டே இருக்காரு.. இது எதுக்கு சான்றுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாக்க வாணாம்?

நட்சத்திர வாரத்திலும் விடாமல் உப்புமா கிண்டிய கொத்தனாருக்கு பின்னூட்டவெறியை தாராளமாக, ஏராளமாக விஞ்சி இருப்பது ஹிட் வெறியே - உப்புமாச் சுவையே என்று ஆணித்தரமாக, போல்டுத் தரமாக, ஸ்க்ரூத் தரமாகக் கூறி வாய்ப்புக்கு நன்றிசொல்லி கிண்டுகிறேன், நன்றி வணக்கம்.


சாலமன் பாப்பையா


உப்புமா இது தப்புமான்னு நினைச்சேன். ஆனா சும்மா கிண்டி எடுத்துட்டீரே. ஆணி, போல்ட்டு, நட்டு, ஸ்க்ரூ அப்படின்னு ஒரு ஹார்ட்வேர் ஸ்டோரே திறந்துட்டாரு பெனாத்தலார். இதுக்கு எந்த மாதிரி ஆயுதங்களை வெச்சு பதில் சொல்லப் போறாரு நம்ம தேவ் அப்படின்னு பார்க்கலாம். அவரு வர வரையில் பார்வையாளர்கள் நீங்கள் எல்லாரும் உங்க வாதங்களை எடுத்து வையுங்க.


(தொடரும்)

Sunday, December 02, 2007

ஒன்றானவன் - இரண்டானவன் - இப்ப நூறானவன்! பட்டிமன்றம் பாகம் 1!

மாயண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக மற்றும் நம் உறவினர் எல்லாம் வந்திருக்காக. வாம்மா மின்னல் அப்படின்னு ஒரு மீசைப் பார்ட்டி சவுண்ட் விடறது நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்த மாதிரி இன்னிக்கு நம்ம பதிவில் துளசி ரீச்சர் வந்திருக்காக, பெரியவர் பினாத்தலார் வந்திருக்காக, தலைவர் தேவ் வந்திருக்காக, ரஷ்ய பனிக்கரடி இராம்ஸ் வந்திருக்காக, ரொம்ப முக்கியமா நம்ம பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்துக்கு நாட்டாமை, ச்சீ, பட்டிமன்றதுக்கெல்லாம் நடுவரா இருக்கிற சாலமன் பாப்பையா வந்திருக்காக.

என்னடே விசேஷம், இம்புட்டு பேரும் ஒண்ணா வந்திருக்காகன்னு பாக்கீயளா? நாமளும் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம். இப்போ 100 பதிவு போட்டுட்டோமுன்னு நம்ம ஆளுங்க கிட்ட சொல்லப் போக அவங்க பொங்கல் தீவாளின்னு நாள் கிழமை வந்தா பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்துறதுதேன் மொறை. அதனால நம்ம 100ஆவது பதிவுக்கும் அவர் தலைமையில் பட்டிமன்றம் நடத்தணுமுன்னு ஒரே அடம். அவனவன் எம்புட்டு வேகமா 100, 200ன்னு பதிவு போடறான், அதுல 1000க்கு மேல பதிவு வேற போட்டவக எல்லாம் இருக்காங்க. இதுல நாம 100 பதிவு போட்டதுக்கு எல்லாம் கொண்டாட்டமான்னு கேட்டா அதெல்லாம் அப்படித்தான். நாங்க பாத்துக்கிடுதோம் நீர் சும்மா இரும்வேன்னு சொல்லிட்டு ஏற்பாடு செஞ்சுட்டாக.

என்னமோ பட்டிமன்றமாம். நம்ம சாலமன் பாப்பையாதான் நடுவரா இருக்காராம். நான் இப்படி ஓரமா இருந்து பாக்கப் போறேன் நீங்களும் வாங்களேன். நடுவர் பாப்பையா அவங்க பேச ஆரம்பிச்சுட்டாக. என்னான்னு கேப்பமா? அவரு பேசுத கொரலு மறந்து போச்சுன்னா இங்ஙன போயி ஒரு வாட்டி பாத்துக்கிடுங்கடே.

பூமிப் பந்தில் பல்வேறு தளங்களில் கொத்தனாரின் நூறாவது பதிவை கொண்டாடும் வலை மக்களே, உங்கள் அனைவரையும் வாழ்த்தி இந்த பட்டிமன்றத்திற்கு வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு என்னான்னு சொல்லிட்டாங்க. அதாவது இன்னைக்கு எத்தனையோ பேரு பதிவு எழுதறாய்ங்க. அதை எத்தனை பேரு படிக்காய்ங்க? ஆனா நம்ம கொத்தனார் எழுதினா எல்லாரும் வந்து படிச்சுடறாங்க இல்லையா. படிக்கலைன்னா அவர் வந்து தனிமடல் எல்லாம் போட்டு, மின்னரட்டையில் வந்து மிரட்டி நம்மளைக் கூட்டிக்கிட்டு வந்திடறாரு அது வேற விஷயம். ஆனா வந்து படிச்சுடறாங்க.

இதுல பாருங்க அவனவன் வந்து என்னென்னமோ எழுதறான். துறை சார்ந்த பதிவுன்னு எழுதறான், நுரை சார்ந்த பதிவுன்னு சோப்பு போடறான். ஆனா எல்லாத்துக்கும் வராத ஒரு கூட்டம் நம்ம கொத்தனார் பதிவுக்கு வருதுன்னா அதுல ஒரு சுவை இருக்கணும். சுவைன்னு சொன்னா பல விதமான சுவை இருக்கு. நகைச்சுவை இருக்கு, அரசியல் சுவை இருக்கு, கவிதைச் சுவை இருக்கு. இப்படி என்னென்னமோ இருக்கு. ஆனா இவரு பதிவுல இருக்கிறது உப்புமா சுவை அப்படின்னு சொல்ல ரெண்டு பேரு வந்திருக்காங்க. இந்த சுவையுணர்வு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கிற ஆளுங்கதான். ஒருத்தர் வலைமாமணி, உப்புமாமா என பல பட்டங்களை வாங்கின பெனாத்தலாரு. அவரு கூட அந்த அணியில் இருக்கிறது அவரு கட்சி ஆளு மருத்துவர் இராமநாதன்.

சுவை என்னய்யா சுவை. அந்தச் சுவை எல்லாம் தாண்டி அவருகிட்ட ஒரு வெறி இருக்குப் பாருங்க அந்த வெறிதான் அவர் வெற்றியில் பெரும்பங்கு அப்படின்னு சொல்லறாங்க இந்த எதிர் அணியினர். வெறி என்ற சொல்லுக்கு நடுவில 'ற்' அப்படின்னு போட்ட வெற்றிதானே. அதுனால அவங்க சொல்லறது சரியாத்தான் இருக்கும் போலத் தெரியுது. அதுவும் என்ன வெறியாம் - பின்னூட்ட வெறியாம். அட இதை யாரு சொல்லறாங்கன்னு பார்த்தா பின்னூட்ட நாயகி அப்படின்னு பெயர் எடுத்த வலையுலக மாதாமகி துளசி ரீச்சர். இந்த சப்ஜெக்ட் பத்தி இவங்க சொன்னா சரியாத்தானே இருக்கும். இவங்க கூட ஆமாம் போடப் போறது சும்மா தல தல அப்படின்னு சொல்லி கொத்தனாரை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் தெள்ளுதமிழ் நாயகன் தேவ்.


ஆக, நாம இன்னிக்கு பேசப் போகும் தலைப்பு "கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி நிற்பது உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா? ". வலையுலக சர்வீஸ் படி சீனியரான துளசி அவர்களை முதலில் வந்து பின்னூட்ட வெறியே என்ற தலைப்பில் பேசுமாறு அழைக்கிறேன். வாங்கம்மா வாங்க.


(தொடரும்)