Saturday, May 31, 2008

புதசெவி - 5/31/2008

செய்தி 1

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு சொன்னதை ரொம்பவே அக்கறையா எடுத்துக்கிட்டாங்க பிரிட்டனில் எஸ்ஸெக்ஸ் என்ற ஊரில் வாழும் காரியா தம்பதியினர். இவங்க இந்தியாவில் இருந்து இந்த ஊருக்கு வந்த பொழுது அருகில் கோவில் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அதனால தன் வீட்டில் இருக்கும் அறை ஒன்றையே கோவிலா மாத்திட்டாங்களாம். மாத்தினது மட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு யாரு வேணா இந்தக் கோயிலுக்கு வரலாம் அப்படின்னு சொல்லிட்டாங்களாம். இது வரை அப்படி வந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு பேர் தெரியுமா? அதிகமில்லை 50,000 பேர்தானாம்!! இதில் வந்தவங்களுக்கு இவங்க குடிக்க தேநீர் போட்டுக் குடுக்கறாங்களாம். இவங்க உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போகும் வரை வந்தவங்களுக்கு சாப்பாடே உண்டாம். பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் இந்தக் கோவிலுக்கு வயசு 29 வருடங்கள்! மேலதிக தகவல்கள் இங்கே!

29 வருஷமா வாழ்ந்தும் 50000 தான் ஹிட் ரேட்டாமே! இந்தக்கோயிலுக்கு வந்தவங்க, ஏறினவங்க, வழிபட்டவங்க மார்க்கெட்டிங் சரியாகப் பண்ணல போல!


செய்தி 2

இந்தச் செய்தி டோக்கியோ நகரத்தில் இருந்து. இங்கு வசிக்கும் ஒருவர் தன் வீட்டில் உணவுப் பொருட்கள் காணாமல் போவது குறித்துக் கவலை கொண்டாராம். அதற்காக ஒரு புகைப்படக் கருவி ஒன்றினை அமைத்து அதன் படங்கள் தனது செல்பேசியில் வருமாறு அமைத்தாராம். அதில் எதோ நடமாட்டம் தெரியவே காவலர்களைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு விரைந்திருக்கிறார். எல்லாக் கதவுகளும் மூடப் பட்டிருந்த வீட்டில் எங்கு தேடியும் யாரையும் காணவில்லை. கடைசியாக சாமான்கள் வைக்கும் அறையில் (எங்கள் ஊரில் குச்சில், பாவுள் என இரண்டு அறைகள் உண்டு!) ஒரு மேல்தட்டில் மூதாட்டி ஒருவர் பதுங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனராம். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு நாள் வீட்டைப் பூட்டாமல் சென்ற பொழுது உள்ளே நுழைந்தவர் அங்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்து, குளித்து, வசித்து வந்திருக்கிறார். இப்படி அவர் அங்கு இருந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவாம். மேலதிகத் தகவல்கள் இங்கே!

இப்படிதான் ஒரு கதை சொல்லுவாங்க, டெல்லி சவுத் ப்ளாக்குல ஒரு புலி உள்ளே நுழைஞ்சு பல வருஷமா குமாஸ்தாங்களை அடிச்சு சாப்பிட்டுக் கிட்டிருந்ததாம், யாரும் கண்டே பிடிக்கலையாம்.. ஒரு நாள் டீ கொடுக்கற ஆளை அடிச்சு சாப்பிட்டுச்சாம், உடனே மாட்டிக்கிச்சாம்!

செய்தி 3

நான் நினைத்த நேரத்தில் நினைத்தது நடக்க வேண்டும் என்று பல வருடங்கள் தவம் இருந்த ஒரு அசுரன் வரம் கேட்பதை நாம் அம்புலிமாமா கதைகளில் கேட்டு இருக்கிறோம். இது உண்மையில் சாத்தியம் என்றால் எனக்குக் கீழ்பாக்கத்திற்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்புவதில் முனைப்பாக இருப்பீர்கள். ஆனால் இது இன்று சாத்தியமாகிவிட்டது என்பதுதான் உண்மை. புதரகத்தில் (வேற எங்க!) நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஒன்றில் குரங்குகளின் மூளையில் ஒரு கருவியைப் பொருத்தி அவை தமது சிந்தனையின் மூலமாக ஒரு செயற்கைக் கையை நகரச் செய்து உணவினைப் பெற்றுக் கொள்கின்றனவாம். உடல் செயலிழந்த நிலையில் இருப்பவர்களுக்கு தமது எண்ணங்களின் மூலமாக தமக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளச் செய்வதற்கு இது முதல் படியாம். இந்தச் செய்தியைப் படியுங்கள் அங்கு இருக்கும் நகர்படத்தைக் கட்டாயம் பாருங்கள்.

அதாவது, டெல்லியில இருக்கற செயற்கைக் கைய வச்சு சென்னைலே இருக்கற ஆளைக் கண்ட்ரோல் பண்ணி கர்நாடகா எலெக்சன்லே ஜெயிக்க முயற்சிக்கறது போல! அது சரி குரங்குக்காவது இது வொர்க் அவுட் ஆகுதே!

செய்தி 4

நம்ம பசங்க நிறையா பேரு கண்ணுல தண்ணி வர வைக்கப் போகும் செய்தி இது. எகிப்து நாட்டில் கெய்ரோ நகரின் மிகப் பிரபலமான விடுதி கிராண்ட் ஹையாட் என அழைக்கப்படும் இவ்விடுதி. இவ்விடுதியின் சொந்தக்காரரான அப்துல் அசீஸ் அல் ப்ராஹீம் என்பவர் மது அருந்துவது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் இனி இவ்விடுதியில் மது பரிமாறப்படமாட்டாது என உத்தரவு போட்டு உள்ளார். அது மட்டுமில்லாது அங்கு இருந்து அனைத்து மதுபுட்டிகளையும் கழிவறையில் கொட்டச் சொல்லி விட்டார். அதனைச் செய்து முடிக்க ஒரு நாளுக்கும் மேல் ஆனதாம்!

எகிப்து இஸ்லாமிய நாடு என்பதால் இது சரி என்று ஒரு சாரரும் சர்வதேச விடுதிகள் நடத்தும் பொழுது அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருப்பது தவறு, ஒரு விமானத்தில் செல்லும் பொழுது எப்படி ஒரு இஸ்லாமியருக்கு ஹலால் உணவு வழங்கப்படுகிறதோ அது போல் மேலை நாட்டவருக்கு அவருக்குத் தேவையானதைத் தருவது தவறில்லையே என மற்றொரு சாரரும் வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த முடிவை எடுத்தவர் சௌதி மன்னரின் உறவினர் என்பதால் சௌதி அரசு எப்படி அவர்களது முடிவுகளை எகிப்து நாட்டில் திணிக்கப் பார்க்கின்றனர் என்று வேறு ஒரு கோணம். எது எப்படி இருந்தாலும் கீழே கொட்டாமல் நம்ம பசங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இது பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு இது.

இந்தத் தண்ணியால அங்க பிரச்சனை, அந்தத் தண்ணியால இங்க பிரச்சனை. அரசியலில் இதெல்லாம் தண்ணி பட்ட பாடுப்பா!

செய்தி 5

இரவின் மௌனத்தைக் கலைக்கும் துப்பாக்கிகளின் சத்தங்கள், அதனைத் தொடரும் அபாய சங்கின் ஒலி, இவைகளினூடே பெருத்த மூச்சுடன் ஓடும் மனிதர்களின் காலடி ஓசை. அந்த அமாவாசை இருளை அடித்து விரட்டி வி்டும்படியான தேடொளி. அதில் மாட்டிக் கொண்டவர்களின் கைகளில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்கிறது புதரக எல்லை ரோந்துப் படை. ஆனால் இது நடக்கும் இடத்தில் இருந்து புதரக எல்லை 400 மைல்கள் தொலைவு!

ஆம். வேலை வாய்ப்பும் நல்ல வாழ்க்கையையும் தேடி புதரகத்தினுள் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறி நுழைபவர்களில் மெக்ஸிகோ நாட்டினர்தான் அதிகம். அப்படி செய்வதற்கு முடியாதவர்கள் அதனை அனுபவிக்கவென்றே ஒரு பொழுதுபோக்குப் பூங்காவினைக் கட்டியுள்ளனராம். அங்கு நடக்கும் கூத்துதான் இது. மேலும் படிக்க இதோ சுட்டி.

இதெல்லாம் பூங்காவுல நடக்குற விளையாட்டா? இங்க எல்லாம் பூங்கா நடத்துறதையே விளையாட்டாச் செய்யறாங்க. பாவம் பிபி ஸ்ரீநிவாஸ்.

செய்தி 6

சுவிஸ் கைக்கடிகாரத் தயாரிப்பாளர்களான ரோமெய்ன் ஜெரோம் என்ற நிறுவனத்தார் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் கைக்கடிகாரத்தின் பெயர் "Day & Night". மூன்று லட்சம் டாலர்கள் ($300,000) விலை பெறும் இந்த கடிகாரத்தின் சுவாரசியமே இதில் நேரம் பார்க்க முடியாது என்பதுதான்! பூமியின் புவியீர்ப்பினைக் கொண்டு பகலா இரவா என்று மட்டுமே தெரிவிக்குமாம். இந்நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு, மூழ்கிப் போன டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட எஃகில் செய்யப்பட்ட கடிகாரங்கள். நல்லா ஊரை ஏமாத்தறாங்கப்பா. எதுக்கும் இதை ஒரு முறை படிச்சுக்குங்க.

ஆமாமாம், நம்ம ஊர்லே கூட ஒரு சோப்பு வித்தாங்க, சுத்தமான கங்கை நீர்லே தயாரிக்கப்பட்டதுன்னு.. மார்க்கெட்டிங் உலகத்துல இதெல்லாம் சாதாரணமப்பா!

டிஸ்கி 1: புதசெவி என்றால் புன்னகை தரும் செய்திகளும் விவகாரங்களும் என்பது என் புரிதல். அதான் அங்க இங்க தேடிப் பிடிச்ச சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக் கிட்டேன்.

புதசெவி - புதரகம் தயவு செய்து விலகவும் னு கம்யூனிஸ்டுகளும் போட்டுக்கொள்ளலாம், புண்ணாக்கு, தயவு செய்து விட்டுறுன்னு கொத்தனாரை நிறுத்தச் சொல்லலாம் - இதெல்லாம் விட்டுட்டு இந்த அவியலுக்குப் போயி டிஸ்கி!

டிஸ்கி 2: நம்ம பெனாத்தலாரின் பூர்வீக கிராமம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் குடிமுறை அரசுப் பணிக்கான தேர்வெழுதி (அதாங்க தமிழ்ல சிவில் சர்வீஸ் எக்ஸாம் என்று நாம் சொல்வது) அதன் தரவரிசையில் 156ஆக வந்து சாதனை படைத்துள்ளார். பல முறை தோல்வியுற்றாலும் விடா முயற்சியால் இந்த வெற்றியை பெற்ற அவருக்கு நம் வாழ்த்துகள். பொறியியல் படித்து பல வேலைகள் செய்துள்ள இவர் ஒரு சமயத்தில் ஒரு திரையரங்கின் கணினித் துறையில் வேலை செய்யும் பொழுது அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவும் பரிமாறியுள்ளாராம். ஆனால் இவரைப் பற்றிய செய்திக்குறிப்பிற்கு ரீடிப் தளம் தந்துள்ள தலைப்பு - " The waiter who will be an IAS officer". எதற்காக இப்படி ஒரு பரபரப்புத் தலைப்பு? புதசெவி.

பரபரப்புத் தலைப்பு வைப்பது என்ன தமிழ் வலைப்பூக்களின் தனி உரிமையா? எல்லாம் ஹிட் ரேட் ஏத்தத்தாம்பா -the Engineer who made an IAS Officer னு போட்டிருந்தா கொத்தனாராச்சும் போயி பாத்திருப்பாரா? வலையுலகில் இதெல்லாம் சகஜமப்பா.

Monday, May 12, 2008

அமீரக இந்தியர்கள், உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, சோயா எண்ணை மற்றும் ரப்பர்!!

போன பதிவைப் படிச்சுட்டு, மொக்கை போடறதே வழக்கமா வெச்சு இருக்கியே என்னிக்காவது கொஞ்சம் உருப்படியா எதாவது எழுதக் கூடாதான்னு நம்ம நண்பர் ஒருத்தர் தனிமடல் ஒண்ணு அனுப்பி ஆசீர்வாதம் பண்ணி இருந்தாரு. இவரை சந்தோஷப்படுத்தற மாதிரி பதிவு போட முடியுமான்னு பார்க்கத்தான் இந்தப் பதிவு.

எதை எழுதுவது என யோசிக்கையில் வழக்கம் போல் நம்ம மக்கள் கனகாரியமாக எழுப்பி இருக்கும் ஒரு கோரிக்கையைப் படிக்கப் போய் விஷயம் சிக்கியது. ஆனால் அதைப் பற்றி பேசும் முன் சில விளக்கங்கள்.

ஒரு பொருளை தற்போது வாங்காமல் சிறிது காலத்திற்குப் பின் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கவோ விற்கவோ செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts) என அறியப் பெறுகின்றன. இவ்வகையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் அரிசி, கோதுமை, மாமிசம், எண்ணை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது அந்நிய செலாவணியாகக் கூட இருக்கலாம். இவ்வகைப் பேரங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts), விருப்பப் பேரங்கள் (Option Contracts) என இரு வகைப்படுகின்றன.

அதாவது ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை ரூபாய் 40க்கு வாங்கிக் கொள்கிறேன் என நான் மளிகைக் கடை அண்ணாச்சியுடன் ஒரு பேரம் செய்து கொண்டேன் என்றால் அது ஒரு விதமான எதிர் பேரம். அந்த தேதியில் அரிசி என்ன விலைக்கு விற்றாலும் நான் அண்ணாச்சியிடம் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ என வாங்கியே ஆக வேண்டும். அவரும் அந்த விலைக்கு விற்றாக வேண்டும். அன்றைய விலை 35 ரூபாயாக இருந்தாலும் சரி 60 ரூபாயாக இருந்தாலும் சரி. இதுவே சற்று வேறு விதமாக ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை 40 ரூபாய்க்கு நான் கேட்டால் தரவேண்டும் என மாற்றி ஒப்பந்தம் செய்து கொண்டால் அது விருப்பப் பேரமாகிவிடும். இதில் வர்த்தகம் செய்யப்படுவது ஜூலை இறுதியில் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைக் கேட்கக்கூடிய உரிமை மட்டுமே. அன்று அரிசியின் விலை நிலவரத்தில் கணக்கில் கொண்டு நான் 40 ரூபாய்க்கு வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ எனக்கு உரிமை உண்டு. இவ்வித பேரங்களில் இவ்வுரிமையை வாங்குபவர், அந்த உரிமையை விற்பவருக்கு ஒரு தொகை தந்தாக வேண்டும்.

பொதுவாக இது போன்ற வர்த்தகத்தில் இரு விதமானவர்கள் ஈடுபடுவார்கள் - அந்தத் தேதியில் அந்த பொருள் தமக்குத் தேவை என நினைப்பவர்கள் (Hedgers) அல்லது ஊக வியாபாரம் செய்பவர்கள் (Speculators) . ஒருவர் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து புதரகம் செல்ல திட்டமிட்டு இருந்தாரென்றால் இன்றே புறப்படும் பொழுது ஆயிரம் புதரக டாலர்களை, ஒரு டாலர் 35 ரூபாய் என பேரம் பேசி ஒப்பந்தம் ஒன்று செய்தாரானால் அது முதல் வகை. டாலரே தேவை இல்லாத ஒருவர் பிற்தேதியில் டாலரின் மதிப்பு அதிகமாகலாம் என நினைத்து தனக்குத் தனியாக தேவை இல்லை என்றாலும் கூட இன்றே குறைந்த விலைக்கு அதனை வாங்க ஒரு எதிர் பேரம் செய்தாரானால் அது இரண்டாம் வகை.

இந்த இரண்டாம் வகைப் பேரங்களினால் கூட ஒரு பொருளின் விலை அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போன்று செயற்கையான விலையேற்றங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் இது போன்ற எதிர் பேர ஒப்பந்தங்கள் மீது பல வித கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சமீப கால விலையேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பல பொருட்களில் எதிர் பேரங்களே கூடாது என்றும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது இந்திய அரசாங்கம். இதன் பகுதியாக சென்ற வாரம் சோயா எண்ணை, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மற்றும் ரப்பர் ஆகியவற்றில் எதிர் பேரங்கள் கூடாது என அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கின்றது.

தலைப்பில் கடைசி நான்கு வார்த்தைகளுக்கு பதிவில் விளக்கம் தந்தாயிற்று. அடுத்து அமீரக இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்கலாமா? அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள். சமீப காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டதால் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியின் மதிப்பு குறைந்து விட்டதாம். இதனால் இந்திய அரசாங்கம் இதற்குப் பொறுப்பேற்று அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டுமாம். உதாரணத்திற்கு ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள் கிடைத்தது போய் இன்று 40 ரூபாய்கள்தான் கிடைக்கிறதாம். இந்த பத்து ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டுமாம். என்ன வாசாப்பு ஐயா இது?

இந்த ஈடு கட்டலுக்கு நீங்கள் என்ன இந்திய அரசாங்கத்துடன் ஒரு எதிர் பேரமா செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த நட்டத்தை அவர்கள் தர? இதையே சாக்காக எடுத்துக் கொண்டு 2100 வரைச் சென்ற இன்போசிஸ் பங்குகள் இன்று 1800 ரூபாய்க்குத்தான் விலை போகின்றது. இவ்வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையே காரணம். எங்கள் நட்டத்திற்கு ஈடு வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பலாம். இன்னும் இது போன்று எத்தனையோ காரணங்களுக்கு மற்றவர்களும் கிளம்பலாம். இதெல்லாம் ரொம்பவே அதிகமாத் தோணலை? இதுவே ரூபாயின் மதிப்புக் குறைந்து டாலருக்கு 60 ரூபாய் ஆனால் இவர்கள் என்ன ஒரு பத்து ரூபாயை வேண்டாம் என்று அரசாங்கத்திற்கா தரப் போகிறார்கள்? என்ன ஒரு பொறுப்பில்லாத பேச்சோ தெரியலை.

செய்தியைப் படிக்கும் பொழுதே சிரிக்கவா அழவான்னு தெரியலை. அந்தத் தெரிவை நீங்களே செஞ்சுக்குங்க.

Wednesday, May 07, 2008

மை டியர் பெனாத்தலாரே (08-05-2008)

பெனாத்தலாருக்கு இலவசம் எழுதும் கடிதம். எல்லாரும் சாமிக்கு கடிதம் எழுதும் போது நம்ம ரேஞ்சுக்கு நம்ம ஒரு ஆசாமிக்காவது கடிதம் எழுத வேண்டாமான்னுதான் இந்தக் கடிதமே.

உங்கள் சமீபத்திய பதிவினை படித்தேன். படிக்கப் படிக்க உம்ம மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை கலந்த பயமும் ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது.அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி தெண்டனிட்டுக்கவும்தான் இந்தப் பதிவு.

முதலில் அந்த ஐபில் மேட்டர். (ஆமாம் இதை யாரும் இன்னும் படுத்தலையா?, சாரி தமிழ்ப் படுத்தலையா?)அது எப்படிங்க நீங்களும் நல்லா விளையாடிக்கிட்டு இருக்கிற அணியாப் பார்த்து உம்ம ஆதரவுக் கரத்தை நீட்டறீங்க. முதலில் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே ஒண்ணு இல்லை, ரெண்டு இல்லை, தொடர்ந்து மூணு போட்டியில் அவங்க காலி. அந்த நேரம் பார்த்து அவங்களை விட்டுட்டு ராஜஸ்தானுக்கே என் ஓட்டுன்னு போயிட்டீங்க. இப்படிப் போனதுக்கே உங்களை வெச்சு பல பதிவுகள் வந்திருக்கணும். பாவம் அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ, வரக் காணும். ஆனா உங்க ஆதரவைப் பெற்ற நேரம் இன்னிக்கு ராஜஸ்தானும் காலி. அது எப்படிய்யா இதெல்லாம். சில சமயம் இதெல்லாம் நினைக்கும் போது அம்மா ஆதரவு பெற்ற வாஜ்பேயி ஞாபகம்தான் வருது!

************************
தமிழகத்தில் பிறந்து பெண்களூரில் வேலை செய்து தற்போது புதரகத்தில் இருப்பதாலும் அதை விட முக்கியமா சாப்பாட்டைப் பற்றி பேசி இருப்பதாலும் நீங்கள் இரண்டாவதாகத் தொட்டுச் சென்று இருக்கும் தலைப்பை தெரிவில் விட்டுட்டு அப்படியே உலக நாயகன் மேட்டருக்குப் போறேன்.


//ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். //

என்னதான் வேசம் கட்டினாலும் கமல் ஒரு(க்) கால் மறைத்த ஆச்சார்யங்கள் உள்ளே வைத்திருப்பவர் என்ற உண்மை தெரிந்ததால்தான் சிவாசிக்குச் செய்த பிளாச் போல (தமிழ் தெரியாத ஆரிய கூத்தாடிகளுக்காக - சிவாஜிக்கு செய்த ஃபிளாஷ் எனப் படிக்கவும்), போக்கிரிக்குச் செய்த விமர்சனம் போல இவருக்குப் போட மாட்டேன் என்ற நிலைப்பாடா என மற்றவர்கள் கேட்கும் முன் ஆச்சரியத்தைச் சரியா வெளிப்படுத்துங்க. அம்புட்டுதான்.

****************************

இன்னமுமா மக்கள் இந்த மாதிரி ஏமாற்று திட்டங்களுக்கு ஏமாந்து போய் காசை விட்டுக்கிட்டு இருக்காங்க? பேசாம இந்த பெட்டி தட்டற வேலையை எல்லாம் விட்டுட்டு நாமளும் இதுல இறங்க வேண்டியதுதான் போல. தமிழ்ன்னு சொல்லி ஏமாத்தறவன், பாலம் சாமின்னு சொல்றவங்க, பால சாமி தவிர மத்த சாமி எல்லாம் ஓக்கேன்னு சொல்றவங்க், இவன் தமிழன், இவன் ஆரியன்னு உறுதிப்படுத்தறவங்க, எந்தெந்த சாதி பேர் வெளிப்படையா சொல்லலாம்னு நிர்ணயம் செய்றவங்க, எல்லாம் நல்லாத்தானே இருக்கான். இவனுங்க மாதிரி நாமளும் தெரிஞ்சே ஏமாத்தினாக் கூட, நல்லாத்தான் இருப்போம். என்ன முதல் போட கொஞ்சம் பணம் வேணும். அடுத்து நைஜீரியாவில் இருந்து பல மில்லியன் டாலர் பணம் அனுப்புறவன் கிட்ட இருந்து சில மில்லியன்கள் மட்டுமாவது வாங்கிக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? சேர்ந்தே செய்யலாமா?

****************************

தமிழ்மணம் நல்லாத்தான் இருக்கு. என்ன முன்ன எல்லாம் ஸ்க்ரோல் (தமிழ்?) செய்யாமலேயே நிறையா பதிவுகள் பார்க்க முடிஞ்சுது. ஆனா இப்போ எழுத்து சின்னதா ஆகிக் கூட அதிகமா ஸ்க்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு! போகப் போக பழகிடும்ன்னு நினைக்கிறேன். கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை. அதை சரி செய்ய இளா சொல்லித் தரேன்னு சொல்லி இருக்காரு.

அப்புறம் இந்த உத்தப்புரத்தைப் பத்தி ஆளாளுக்கு எழுதறீங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி. சுவரைக் கட்டி இருக்காங்க சரி. அது தப்புன்னு தெரியும் பொழுது அதை இடிச்சு தள்ளாம அது என்ன அதில் நிலைவாசல் வைக்கிறேன், நிலையில்லாத வாசல் வைக்கிறேன்னு வழவழா கொழகொழான்னு ஒரு முடிவு. அதுக்கு சபாஷ் சரியான தீர்ப்புன்னு சொல்ல நாலு பேரு. ஒண்ணும் சரியாப் படலையே?

**************************

நிறையா சினிமா பார்க்கறீரு. நீர் படும் பாட்டை நான் பார்த்து ரசிச்சுக்கறேன். அதே போதும் எனக்கு.

கடைசியா நம்ம பக்கத்தில் இருந்து ஒண்ணு. மன அழுத்தம் இருக்கிறவங்களுக்கு மருந்தா வலைபதியறது இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா கேள்விப்பட்டீங்களா? (நீங்க கேள்விப்படாட்டி வேற யாரு கேள்விப்படுவாங்க?) எனக்குத் தெரிஞ்சு எழுத்துப் பிழை இல்லாம எழுதும் பொழுதுதான் இந்த அழுத்தம் அதிகம் வருதுன்னு நினைக்கிறேன். "வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அதனால அப்படி ஒரு பதிவு வேணா போட்டுப் பாருங்களேன்!

இப்படிக்கு அன்புடன்
கொத்ஸ்

டிஸ்கி 1: கடிதமெழுதும் இட்லிவடை காணாமல் போய்விட்டார். படிக்க கடிதம் கிடைக்காமல் கை கால் உதறல் எடுப்பதால் நானே எழுதிவிட்டேன்.

டிஸ்கி 2: அசந்து தூங்கினால் ஆள் காலி எனச் சொல்லும் வலை உலகில், உள்ளேன் ஐயா பதிவு பெனாத்தலார் போட்ட பதிவின் தாக்கதால் நானும் போட்ட உள்ளேன் ஐயா பதிவு இது. மேட்டர் இல்லாத காரணத்தால் அவருடைய பதிவையே எடுத்து மொக்கை போட வேண்டியதாய் ஆயிற்று

டிஸ்கி 3: மேலே உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் கற்பனையே (இது சும்மா பாதுகாப்புக்காக. இதை எல்லாம் போடலைன்னா நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்.)