Friday, October 21, 2011

எழுத்து / இலக்கணப்பிழைகள் இவ்விடம் மொத்தமாகக் கிடைக்கும்

பாரா, சொக்கன், பெனத்தால் இவர்களுடன் என் பதிவுகள், ட்விட்டர் என பல இடங்களிலும் தமிழில் இலக்கணப் பிழைகள், எழுத்துப்பிழைகள் பற்றி பேசி வருகிறோம். ஒரே இடத்தில் இருந்தால் புதிதாக வருபவர்களுக்கும், தேடவும் எளிதாக இருக்கும் என்பதால் ஒரு புதிய பதிவு ஒன்றினைத் தொடங்கி இருக்கிறோம். 

http://tamildoubt.blogspot.com 

இன்று புறம்::புரம் - இவற்றிடையே உள்ள வேறுபாடு பற்றி எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி - http://ow.ly/7595r

புதிய பதிவுக்கு வந்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும். 

Posted via email from elavasam's posterous

Tuesday, October 18, 2011

வாழ்த்துகளா? வாழ்த்துக்களா?

இதுவும் திரும்பத் திரும்ப வர ஒரு கேள்வி. வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது சரி இல்லை. அதே மாதிரிதான் எழுத்துகள், சொத்துகள், முத்துகள் என்று சொல்லறதுதான் சரி. இதுக்கு என்ன ரூல் இருக்குன்னு சிலர் கேட்கலாம். இன்னும் சிலர் வந்து நீ எழுதின கொத்தனார் நோட்ஸ் படிச்சேன். அதுல கூட வன்தொடர்க் குற்றியலுகரம் வந்தா வலி மிகும்ன்னு இருக்கே. பாட்டுப் பாடு, தேக்குப் பலகைன்னு சொல்லிக் குடுத்துட்டு இப்போ வாழ்த்துக்கள்ன்னு மாத்திச் சொல்லலாமான்னு கேட்கறாங்க.

ராசாக்களா, நீங்க அம்புட்டு தூரம் நோட்ஸ் படிச்சு இருக்கீங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா அதே நோட்ஸ்ல நான் இந்த வாழ்த்து மேட்டரும் சொல்லி இருக்கேனே. சரியாச் சொல்லணும்ன்னா அந்த வன்தொடர்க் குற்றியலுகரம் ரூல்தான் இங்கவும் மேட்டர். புணர்ச்சி விதிகள்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா ரெண்டு தனித் தனி வார்த்தைகள் புணரும் பொழுதுதான் அந்த விதிகள் சரியா வரும்.

அப்போ எழுத்து + கள், இதை எடுத்துக்கிட்டோம்ன்னா எழுத்துக்கள் அப்படின்னு வரும். இதுக்கு அர்த்தம் என்ன? கள் போன்ற எழுத்துன்னு அர்த்தம். இல்லையா? ஆனா ஒன்றுக்கு மேற்பட்டன்னு சொல்ல வரும் பொழுது பன்மை விகுதியா கள் அப்படின்னு சேர்க்கறோம். இது விகுதி. இது தனியான சொல் இல்லை. இதைச் சேர்க்கும் பொழுது நம்ம புணர்ச்சி விதிகள் வேலைக்காகாது. பன்மை விகுதியா கள் சேரும் பொழுது வலி மிகுமா மிகாதான்னு விதிமுறைகள் எதுவும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. ஆனா அர்த்தம் ஆகுது அனர்த்தம் ஆகுதான்னு பார்த்து போடச் சொல்லி இருக்காங்க.

கல்கியின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும்.

கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

நாம முன்னாடி பார்த்தா மாதிரி, கள் போன்ற எழுத்து என்பதைக் குறிக்கும் எழுத்து+கள் என எழுதினால் அது எழுத்துக்கள் அப்படின்னு புணரும். அதனால ரெண்டாவது வரியோட பொருள் என்ன ஆகுதுன்னா கல்கியின் எழுத்து கள் போன்றது. அது எனக்குப் பிடிக்கும்ன்னு ஆகுது. நீங்க அதைத்தான் சொல்ல வந்தா எழுத்துக்கள்ன்னு போடுங்க. இல்லையா எழுத்துகள்தான் சரி.

இனிப்புகள் எல்லாருக்கும் தரலாம் ஆனா இனிப்புக்கள் எல்லாருக்கும் தரலாமா? த்ரக்கூடாதுன்னு சட்டமே இருக்குய்யா!

அதே மாதிரி ஒருத்தருக்கு பிறந்த நாள் விருந்துன்னு அம்சமா சியர்ஸ் சொன்னா அது வாழ்த்துக்கள். மனம் நிறைய வாழ்த்தினா அது வாழ்த்துகள்தான்.

முத்து, சொத்து, வித்து - இதை எல்லாம் என்ன சொல்லணும்? இருக்கிறதை எல்லாம் வித்து’க்’கள் வாங்கினா என் சொத்து’க்’கள், அதுவும் முத்து’க்’கள்ன்னு வேணா சொல்லலாம். பன்மையைக் குறிக்க சொல்லணும்னா முத்துகள் சொத்துகள் வித்துகள்தான். முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் அப்படின்னு கவிஞர் ஒருத்தர் எழுதி இருக்காரேன்னு கேட்டா அது சந்தத்துக்கு எழுதறது. இன்னும் சிலர் கூட இந்த மாதிரி பன்மை விகுதி சேர்க்கும் பொழுது வலி மிகுந்து எழுதி இருப்பாங்க.

இதுக்கு தனியா விதிமுறைகள் ஒண்ணும் இல்லை. அதனால நான் இப்படித்தான் எழுதுவேன்னு சொன்னா ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. ஆனா எழுதினா அனர்த்தம் வரக் கூடாதுன்னு பார்த்துக்கணும். அவ்வளவுதான்.

Posted via email from elavasam's posterous

Sunday, October 02, 2011

கோவிலா? கோயிலா?

பலருக்கும் அடிக்கடி வரும் சந்தேகங்கள் லிஸ்டில் கட்டாயம் இதுவும் இருக்கும். இன்னிக்கு ரெண்டு விதமாகவும் பயன்படுத்தறோம். ஆனா கோவிலா கோயிலா எது சரி? 

இந்தக் குழப்பம் இன்னிக்கு நேத்திக்கு வந்தது இல்லை. ரொம்ப காலமாகவே இருக்கும் குழப்பம்தான். இது சம்பந்தமாப் படிக்கும் பொழுது பிழை இல்லாமல் எழுதுவோம் என்ற ஒரு புத்தகத்தில் அந்த காலத்திலேயே இளம்பூரணர் என்பவர் கோயில் என்றும் நச்சினார்கினியர் கோவில்ன்னு எழுதி இருக்கிறதாப் போட்டு இருக்காங்க. 

கோ என்ற சொல்லுக்கே நிறையா அர்த்தங்கள் இருக்கு. பசு, அரசன் என்றெல்லாம் பொதுவாகவே நமக்குத் தெரியும். இறைவன் என்பதும் ஒரு அர்த்தம். அதனால கோ+ இல் (இல்லம் என்பதன் மூலம்) அப்படின்னா கடவுள் உறையும் இடம் அப்படின்னு சொல்லலாம். 

இப்போ இலக்கண விதிகளை எடுத்துக்கிட்டா ரெண்டு வார்த்தைகள் சேரும் போது முதல் வார்த்தையோட கடைசியில் இ, ஈ, ஐ தவிர வேற எந்த உயிர் எழுத்து வந்து முடிஞ்சு, ரெண்டாவது வார்த்தை உயிர் எழுத்தில் ஆரம்பிச்சா, நடுவில் வகரம் வரும். பூ+அழகு இதனாலதான் பூவழகு அப்படின்னு ஆகுது. 

இப்படிப் பார்த்தா கோ+இல் கோவில்ன்னுதான் வரணும். 

ஆனா சிலப்பதிகாரம் போன்ற பழைய நூல்களில் கோயில் அப்படின்னே சொல்லி இருக்கு. கோஇல் அப்படின்னு எழுதி அதை கோயில் எனச் சொல்லி வந்திருப்பாங்களோ என்னவோ. 

பின்னாடி யாராவது கோயில்ன்னு எழுதினா இலக்கண விதிகள் படி சரியா இல்லையேன்னு நினைச்சு கோவில் அப்படின்னு எழுத ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். எதனால் இந்த எக்ஸெப்ஷன்னு கேட்டு தெரிஞ்சா இங்க வந்து அதையும் எழுதறேன். 

முற்காலத்துல கோவில்ன்னு சொல்லாம கோயில்ன்னு சொல்லி இருக்கிறதுனால நாமும் அதை புணர்ச்சி விதிகளில் இருந்து ஒரு எக்ஸெப்ஷனா எடுத்துக்கிட்டு கோயில்ன்னே சொல்லலாம். 

 

Posted via email from elavasam's posterous