Tuesday, June 05, 2012

குன்றுக்களின் சிறப்புக்கள் - கவுண்டர் டெவில் ஷோ

”டேய் தேங்கா மண்டையா, என்னடா என்னமோ கார்டைக் கையில் வெச்சுக்கிட்டு உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்க, என்ன மேட்டரு?” 

“அண்ணே, நேத்து பள்ளியூடத்தில குடுத்தாங்கண்ணே. இதைப் படிச்சா க்கு போட கத்துக்கலாமாம்.” 

“டேய் நீயே ஒரு மக்குப் பய, உனக்கு க்கு போட கத்துக் குடுக்கறாங்களாக்கும். கொண்டு வாடா அத இங்க. எதுக்குடா இந்தக் கார்டு?” 

“அண்ணே, இந்த ரூல்ஸ்படி எழுதினா ஒண்ணுக்கு மேல வந்தா க்கு போட்டு எழுதணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணிடலாமாம்.” 

“ Single Letter - மிகும். பூக்கள் மாக்கள். ஏண்டா இதுவாடா ரூலு?” 

“ஆமாண்ணே, எடுத்துக்காட்டு பாருங்க ஒண்ணா இருந்தா பூ. அதுக்கு மேல போனா பூக்கள்” 

“ஏண்டா உனக்கு வாயுல பூவே ஒழுங்கா வராது புய்ப்பம்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவந்தானே நீயி. இதுல எதுக்குடா இம்புட்டு வெளக்கம். சரி பூவுக்கு பூக்கள் சரி, அப்போ கைக்கு என்னடா? கைக்களா? அதுவும் ஒத்த எழுத்துதானேடா? கைக்கள், பைக்கள் இதுவாடா தமிளு? ” 

”அண்ணே, இதுக்குத்தாண்ணே உங்களை பள்ளியூடம் பக்கத்துல கூடப் பார்க்கக் கூடாதுன்னு பஞ்சாயத்து தீர்ப்பு போட்டிருச்சு. இப்படிக் கேள்வி கேட்டே வாத்தியாருங்களை எல்லாம் வம்புக்கு இழுத்தா எப்படி?” 

“சரிடா, போட்டும். ஒர் எழுத்து ஆச்சு, அடுத்தது ரெண்டு எழுத்துக்கு என்னடா ரூலு?” 

“2 letter குறில் வந்தா மிகும். நெடில் வந்தா மிகாதுண்ணே” 

“2 letterஆ? நல்ல வேளை இங்க்லீசுக்கு ரூல் எழுதினவன் கண்ணுல படலை. நாண்டுக்கிட்டுப் போயிருப்பான். அது என்னடா குறிலு, நெடிலு?” 

“ பசுக்கள் இங்க க்கு வரும்ணே. மாடுகள் இங்க வராதுண்ணே. அதைத்தான் சொல்லிக் குடுத்தாங்க.” 

“பசுக்கு வரும் மாட்டுக்கு வராதுன்னா அது என்ன பாலாடா? சரிடா. தேனீ கூட்டமா வந்தா அது தேனீக்களா? தேனீகளாடா? தேஏஏஏஏஏனீ - இது நெடில் இல்லையாக்கும்? அப்போ ஏண்டா தேனீக்கள்?”

“அண்ணே, வெறும் கார்டை பார்த்தாப் போதுமா? நாலு மணி நேரம் க்ளாஸில் உட்கார வேண்டாமா? ரெண்டு எழுத்துக்கு மேல இருக்கிற ரூல் எல்லாம் உ-ன்னு முடியறதுக்கு மட்டும்தாண்ணே” 

“கார்டைப் படிச்சாப் போதும்ன்ன, இப்போ என்னாமோ பாடம் நடத்துனா கூட இருந்து கேட்கணும்ன்னு ரூல் போடற. ஒண்ணு சொன்னா உனக்கு ஒழுங்காச் சொல்லத் தெரியாதாடா மாங்கா மண்டையா. சரி அதை விடு. அடுத்தது என்னடா?”

“நல்ல வேளைண்ணே மூணு, அதுக்கு மேல போனா எல்லாம் ஒரே ரூல்தாண்ணே. புள்ளி வெச்சா க்கு வரலாமாம். இல்லைன்னா கூடாதாம்.” 

“ எச்சூஸ் மி, அது என்ன இவ்வளவு நேரம் வரணும். கூடாதுன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாப் பேசிட்டு. இப்போ மட்டும் வரலாமாஆஆஆஆம்ன்னு இழுப்பு? அப்போ அவன் அவன் எனக்கு வரலாம் உனக்கு வரக்கூடாதுன்னு எப்புடி வேணா எழுதலாமா ஆபீசர்? அதான் மொழி வளர்ப்பா ஆபீசர்?”

“அண்ணே, என்ன அண்ணே இது, என்னைப் போயி ஆபிசர்ன்னுக்கிட்டு. ஹிஹி வெட்கமா இருக்கு.” 

“ டேய் மொன்னத் தலையா நீ கெட்ட கேட்டுக்கு உக்காத்தி வெச்சுப் பேசறதே பெரிய விஷயம். நாம எல்லாம் மருதமலை பக்கத்துல மாடு மேய்க்கறோம். இங்க வரவனுங்க எல்லாம் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்ன்னு சொல்லிட்டுப் போறானுங்க. அங்க ஆரம்பிக்கலாம். ஒண்ணா இருந்தாக் குன்று, அதுவே ரெண்டா இருந்தா உன்னோட ரூல்படி குன்றுக்களா?” 

“அதான் போடலாமுன்னு சொல்லிட்டாங்களே. இனிமே நீங்க போடறதுதாண்ணே.” 

“அட்டென்சன் ஆல் ஆபிசர்ஸ் இனிமே குன்றுக்கள், அம்புக்கள், வம்புக்கள். தும்புக்கள் சொம்புக்கள் இப்படித்தான் எல்லாரும் எழுதணும். எவனாவது வந்து தப்பு சொல்லிட்டா உடனே கார்டைக் காட்டி அவன் சீட்டைக் கிழிச்சு அனுப்பணும். திஸ் இஸ் கவர்னமெண்ட்டு அனௌன்ஸ்மெண்ட்.” 

“ அண்ணே, ஒரு ரூல் போட்டு ஒரே நாள்ல தமிளுக்கு இவ்வளவு புது வார்த்தை வாங்கி தந்து இருக்கீங்கண்ணே. உங்களுக்கு க்-தமிழ் அறிஞ்சருன்னு பட்டம் குடுத்தே ஆவணும்ண்ணே! ஆனாலும் அறிவுண்ணே உங்களுக்கு” 

“ஏண்டா இப்போதான் வேலையையே ஆரம்பிச்சு இருக்கேன். அதுக்குள்ள பட்டம் குடுத்து படுக்க வைக்கப் பார்க்கறியா? இந்த கேம் எல்லாம் என் கிட்ட வேண்டாம். எனக்கு மட்டும்ன்னா அறிவு. உன்னையும் சேர்த்தா அறிவுக்கள்ன்னுவியாடா? பேசாம உட்காந்து கேளு.

மூணு எழுத்து ஆச்சா நாலு எழுத்துக்கு வா. ஏண்டா காப்பிக்கொட்டை தலயா, நான் என்னமோ பேசிக்கிட்டு இருக்கேன், கரும்புத் தோட்டத்துக்குள்ள என்னடா வேல. அடேய் கரும்பையே எடுத்துக்கோ. ஒண்ணா இருந்தாக் கரும்பு. மேல போனா கரும்புக்கள். அதானேடா ரூலு? வெச்சுக்கோ கரும்புக்கள் அரும்புக்கள் இரும்புக்கள் - இப்படி எளுதினாத்தாண்டா தமிளு!”

“ சூப்பர்ண்ணே.” 

“டேய். வரப்பு மேல குத்த வெச்சுக்கிட்டு இருந்தோமா, போனோமான்னு இரு. அங்க போயும் சூப்பர், இங்க வந்து சூப்பர்ன்னு இருந்த மண்டைய ஒடச்சு ரத்தம் பார்க்காம விட மாட்டேன். வரப்பா? ஓக்கே அடுத்த லிஸ்ட்டு எளுதிக்கோ - வரப்புக்கள் தரப்புக்கள் பிறப்புக்கள் இறப்புக்கள். சிறப்புக்கள்” 

“அண்ணே சிறப்புக்கள்ன்னா என்ன அண்ணே? டாஸ்மாக்ல காந்தி பொறந்த நாளுக்கு ஸ்பெசலாப் போடப் போறாங்களா?” 

”டேய் நீயா நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு சிறப்பு க் கள்ன்னு இழுத்துட்டு எந்தக் கடை சரக்குக்குன்னு கேட்டா மவனே உனக்கு சங்குதான். உடனே சங்குக்கள்ன்னு திரும்ப மூணு எழுத்துக்குப் போவாதே. போடா வெண்ரு” 

“நான் மட்டும்ன்னா வெண்ரூ நீங்களும் சேர்ந்தா வெண்ரூக்களாண்ணே?” 

“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” 

 

டிஸ்கி 1: வெட்டிப்பயலின் கவுண்டர் டெவில் ஷோ பார்த்து இந்தப் பூனை போட்டுக் கொண்ட சூடு. அவர் மன்னிப்பாராக.

டிஸ்கி 2: வாடா போடாக்களும் (க் வரும்தானே?) நாயே பேயேக்களும் கவுண்டர் மொழியினால் வந்தவை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு இல்லை.

டிஸ்கி 3: இப்படித்தான் மொழி வளர்க்கணுமா? முடியலைடா சாமீ!

Posted via email from elavasam's posterous