Friday, July 06, 2012

Tablet - மாத்திரை குளிகை என்னும் மாயை தவிர்ப்போம்

#எல்லாமேதமிழ்தான் சீரிஸ்

இன்றைய சொல் Tablet. இதனைத் தமிழ்ப்படுத்தக் கிளம்பி இருக்கிறார்கள். இந்த ஆங்கிலச் சொல்லிற்குப் பலவிதமான பொருள் உண்டு என்பதை மறந்து மாத்திரை என்ற பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு டேப்லட் என்றால் மாத்திரை என்கிறார்கள். சிலர் இதனை இன்னும் சிறப்பாக மொழிபெயர்ப்பதாக எண்ணி குளிகை என்றும் புழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது Waterfall என்பதை நீர்வீழ்ச்சி என மொழிபெயர்க்கும் கொடுமைக்கு ஒப்பானதாகவே கருத வேண்டும்.

இது ஒரு விபரீதமான வழக்கம். இதை தொடர விடாமல் தவிர்க்க வேண்டியது தமிழ்பால் அன்பு கொண்ட பண்டிதர் இல்லாதவர்களின் கடமை. ஒரு சொல்லின் வேர் வரை சென்று பார்த்தால் ஒழிய அதை சரியாக மொழிபெயர்க்க முடியாது. அனைத்து மொழிகளுமே தமிழில் இருந்துதான் வந்தது என்பதை மறக்காமல் இருந்தால் இது குறித்து எந்த குழப்பமும் இன்றி இருக்க முடியும்.

Tablet என்ற சொல்லின் மூலமே தமிழ்தான் என்பதை நாம் அறிந்து கொண்டோமானால் அச்சொல்லை அப்படியே தமிழில் கையாள்வதில் நமக்கு எந்தவிதமான தயக்கமும் ஏற்படப் போவதில்லை.

டேப்லட் என்ற சொல்லின் மூலம் இரண்டு தமிழ்ச் சொற்களில் இருக்கிறது. முதலில் இந்த டேப்லெட்டுகளில் தொடுதிரைகள் உள்ளன. கைவிரல் கொண்டு நம்மால் இந்த திரைகளில் உள்ளிட முடியும். அப்படிச் செய்யும் பொழுது பல நேரங்களில் விரல் கொண்டு தேய்க்கின்றோம். எனவே தேய்ப்பது / தேய்த்தல் என்பது முதல் வேர்.

நம் மனதிற்குப் பிடித்தமானவையை இனிப்பாக கருதுவது பண்டை தமிழர் இயல்பு. இதன் நீட்டலாகவே இன்றும் லட்டு அல்வா என்ற சொற்களை இனிப்பு மட்டுமல்லாத பொருளில் பயன்படுத்துகிறோம். குழந்தைகளைக் கொஞ்சும் பொழுது கூட லட்டு என்று நாம் இனிப்பின் பெயரைக் கொண்டு கொஞ்சுவதை கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் எளிதான கேள்விகளை லட்டு என்று சொல்லிக் கேட்டும் இருக்கிறோம்.

கண்ணா, இன்னும் ஒரு லட்டு தின்ன ஆசையா என்ற விளம்பரம் பெரும் பிரபலம் அடைந்ததற்கு இதுவே காரணம். லட்டு என்பது கூட இலட்டுகம் என்ற சொல்லில் இருந்து வந்தது. இந்த இலட்டுகம் என்பது நமக்கு தேவையான இரண்டாவது சொல்.

டேப்லட் என்பது எப்பொழுதும் நம்முடனே இருப்பது. வாங்கும் பொழுதும் சரி பாவிக்கும் பொழுதும் சரி. நமக்கு இன்பத்தினை அளிப்பது டேப்லட். இவை தொடுதிரை கொண்டு இருப்பது நாம் அறிந்ததே. அத்திரைகளில் நாம் விரல் கொண்டு தேய்ப்பதும் எப்பொழுதும் செய்வதே.

தேய்ப்பு + இலட்டுகம் என்ற இந்த இரு சொற்களும் சேரும் பொழுது தேய்ப்பிலட்டுகம் என்று புணரும். இது காலப்போக்கில் தேய்ப்பிலட்டு, டேப்பிலட்டு என்றாகி இன்று டேப்லட் என வழங்கப்படுகிறது. அதாவது தேய்ப்பு + இலட்டுகம் = தேய்ப்பிலட்டுகம் -> தேய்ப்பிலட்டு -> டேப்பிலட்டு -> டேப்லட். 

தொடுதிரை கொண்ட பலகைக்கணினிகளை நாம் டேப்லட் என்று அழைப்பது தமிழினை வேர்ச்சொல்லாகக் கொண்ட ஒரு சொல்தான். எனவே இதனை மாத்திரை என்றும் குளிகை என்றும் தவறாக மொழிபெயர்க்காது டேப்லட் என்றே வழங்குவோம்.

எல்லாமே தமிழ்தான் என்ற நம் கூற்றுக்கு இது மற்றுமொரு சான்றே.

வாழ்க தமிழ். வளர்க தமிழர்.

 

Posted via email from elavasam's posterous