Thursday, July 31, 2014

விடை கொடு எந்தன் நாடே!

இப்பொழுதுதான் நியூஜெர்ஸி வந்தது போல் இருக்கிறது ஆனால் பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இரண்டே வயது ஆன மகன், மனைவியுடன் நியூயார்க் கென்னடி விமானநிலையத்தில் இறங்கியது இன்னும் நினைவில் இருக்கின்றது. அமெரிக்கா நமக்குப் பிடிக்குமா, இங்கு எவ்வளவு நாள் இருப்போம், திரும்பி விடுவோமா என்று எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல்தான் வந்தோம். சிறிது சிறிதாக அமெரிக்கா எங்களுள் குடியேற நாங்களும் அமெரிக்காவில் வாழத் தொடங்கினோம். வேலைக்கான விசாவில் வந்து என்னால் எந்த வித முயற்சியும் இல்லாமல் அலுவலகமே க்ரீன் கார்ட்டுக்கு ஏற்பாடு செய்ததும், அதை அடுத்து அமெரிக்க குடியுரிமை பெற்று இந்நாட்டு பிரஜையாகவே ஆனதும் கூட அதிக திட்டமிடல் எதுவும் இல்லாமல் இயல்பாகவே நடந்த ஒன்றானது. நாமிருவர் நமக்கிருவர் என்ற கோஷத்திற்கு ஆதரவாக மகளையும் பெற்றெடுத்து குடும்பம் முழுமையானது நியூஜெர்சியில்தான்.

ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்தில் வேலை. ஆற்றின் மறுகரையில் வாசம். நிதமும் அந்த பெருநகரத்திற்குள் சென்று பின் மீண்டு வருவது என்ற வாடிக்கை. நகரத்தினுள் இருந்ததால் கார் எல்லாம் வைத்துக்கொள்ள தேவையில்லாது எங்கு சென்றாலும் ரயில் பயணம் மட்டுமே. இலவச காலை மாலை இதழ்களைப் படித்துக் கொண்டு பொழுது போய் விடும். ஸ்மார்ட் போன்கள் இல்லாத காலம் என்பதால் சகபயணிகளின் முகங்களைப் பார்ப்பதும் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வதும் பேசுவதும் கூட அப்பொழுது சகஜம். பின் படிப்படியாக அவை எல்லாம் போய் காதில் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு மற்ற ஓசைகளைத் தவிர்த்து அனைவரும் தனித்தனியாக ஒரு தீவு போல இருப்பதும் ஆனது இந்த காலகட்டத்தில்தான். பணியிடம் அருகிலுள்ள துணைநகரம் ஒன்றிற்கு நகர, முதலில் ஒரு கார் வாங்கி அதுவும் போதாமல் இரண்டு கார்கள் என்று ஆனபின் இப்படி ரயிலில் போவது என்பது என்றோ ஒரு நாள் அதிசயமாக நடக்கக்கூடிய செயலாகிப் போனது. இப்படி ரயிலை விடுத்து கார்கள் என வாழ்க்கை மாறியது நியூஜெர்சியில்தான்.

ஹட்சன் ஆற்றின் கரையில், ஒரே ஒரு படுக்கையறையுடன் கூடிய புறாக்கூண்டு ஒன்றில்தான் வாழத் தொடங்கினோம். அதன்பின் சற்றே பெரிய வாடகை வீடு, சொந்த வீடு என்று இங்கு வந்த பின் நமக்கான தேவைகளும் வசதிகளும் பெருகப் பெருக அதற்கு ஏற்றாற்போல் இருப்பிடங்களும் வாழ்வு முறைகளும் மாறினாலும் எல்லா முகவரிகளும் NJ என இந்த மாநிலத்தின் பெயர் சுருக்கத்தையே மாறாமல் கொண்டிருந்தன. அமெரிக்க வாழ்வு முறையின் நல்லவை அனைத்தோடு நம் நாட்டுப் பாரம்பரியங்கள் எதையும் விட்டுத் தராத ஒரு புதிய வாழ்வு முறையை இங்குதான் கண்டு கொண்டேன். சரவணபவன் சாப்பாடு, கிராண்ட் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் கடை, கர்நாடக சங்கீதக் கச்சேரி, நவராத்திரி கொலு, நாலு திசைகளிலும் கோயில்கள், இவற்றோடு American Dream என்றழைக்கப்படும் இந்நாட்டின் விழுமியங்களையும் கலந்து கட்டிய கலாச்சாரத்தை உணர்ந்து கொண்டது இந்த நியூஜெர்சியில்தான். 

உறவினர்கள் தவிர்த்துத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாமல்தான் இந்த ஊருக்கு வந்தேன். மெதுவாக உடன் வேலை செய்பவர்கள், வாடகைக் குடியிருப்பில் உடன் வசிப்பவர்கள், எனக்குப் பின் வந்தவர்கள் என எனக்கான ஒரு நட்பு வட்டாரம் அமைந்தது இங்குதான். சமூக ஊடகங்களில் வலைப்பதிவுகள் மூலம் நுழைந்து பேஸ்புக் ட்விட்டர் எனத் தொடர்ந்து இயங்கத் தொடங்கியதும், தமிழகத்தில் இருந்த பொழுது கூட இல்லாத தமிழார்வமும், அது குறித்த எழுதத் தொடங்கியதும், இவை எல்லாம் மூலம் நட்புகள் உருவாகி, உரமேறி, உலகெல்லாம் விரிந்து கிடப்பதும் நான் இங்கு இருக்கும் பொழுதுதான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஊடகங்கள் மூலம் தெரிந்து பின் நேரில் சந்தித்து இன்று என் வாழ்வில் இன்றியமையாத பகுதியாகிவிட்ட, வகிமா எனச் செல்லமாக அழைக்கப்படும் நண்பர்கள் குழாம் அமைந்தது இந்த நியூஜெர்சியில்தான். 

நிற்க. நாளை முதல் நான் நியூஜெர்சியின் குடிமகன் இல்லை. விடிந்தால் விமானம் ஏற வேண்டியதுதான். மேலே சொன்ன அனைத்தையும் விட்டுவிட்டு டெக்ஸஸ் போகிறேன். வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பம் ஆகிறது. 

தகப்பன் கைபிடித்துப் பொருட்காட்சி காணச் செல்லும் சிறுவனைப் போல உற்சாகமாய்ச் செல்கிறேன் எனச் சொல்ல ஆசைதான் என்றாலும் பழகியவை அனைத்தும் விடுத்து மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்ற ஒரு கலக்கத்தோடுதான் செல்கிறேன். இத்தனை வசதிகளோடு போகும் பொழுதே இந்த கலக்கம் என்றால் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் விடுத்துக் கட்டாயத்தினால் புலம்பெயர்ந்தவர்கள் படும் துயரம் எப்படியாக இருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. அப்படிப் புலம் பெயர்ந்த பின்னரும் மனவலிமையோடு தமக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட அத்துணை பேர்களுக்கும் என் வணக்கம்.

அன்று அமெரிக்கா வந்தது போல் இல்லாது, இன்று வெறும் கீபோர்ட் தொலைவில் இத்தனை நண்பர்கள் இருப்பதால் இங்கிருந்து சென்றாலும் தனிமையை உணரப்போவதில்லை. அந்த வலிமையை என் மனத்தில் இருக்கச் செய்த அத்துணை நட்புகளுக்கும் என் நன்றி. 

இந்த மாமாங்கம் இனியவை அத்தனையும் தந்தது போல இனியும் என் வாழ்வு இருக்க உங்கள் வாழ்த்துகளை நாடுகிறேன். 

Thursday, July 24, 2014

கவிதைகளும் கட்டுடைத்தல்களும்!

நமக்கும் புதுக்கவிதைகளுக்குமான உறவு தொடர்ந்து படித்து வரும் வாசக நண்பர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றே. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கண்ணில் பட்டுத் தொலைத்துவிடுகிறது என்பதே தற்'போதை'ய சோகம். அப்படி மாட்டிய ஒன்றுதான் நண்பர் சுரேஷ் (எழுத்தாளர் ராம் சுரேஷ் இல்லை, நண்பன் பெனாத்தல் சுரேஷ் இல்லை, இவர் வேற) எழுதிய கவிதை ஒன்று. படித்த பின் சும்மா இருக்க முடியாமல் அதனைக் கட்டுடைத்து படித்ததற்கான பிராயச்சித்தத்தைத் தேடிக் கொண்டேன். கவிதையை வெளியிட்ட பதாகை இதழுக்கே எழுதியதை அனுப்பினேன். அவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் இதைப் பகடி என வகைப்'படுத்தி'யது பெருஞ்சோகம். 

எழுதியதில் இருந்து ஒரு சின்ன சேம்பிள் 

இனி இந்தக் கவிதை.

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது

காத்திரமான ஆரம்பம். இரண்டு வரிகளில் பூகம்பம். மனிதக்குரங்கு கதவை திறக்கிறது என்பதை அகக்கண்ணால் பார்க்கிற பொழுது தோன்றும் புன்னகை, மனிதனைத்தான் குரங்கெனச் சொல்கிறார் எனப் புரிய வரும் பொழுது ஏற்படும் கோபம், கேவலம் வயிற்றுப்பிழைப்பிற்காக குரங்காட்டியிடம் பணியும் குரங்கினைப் போல தொப்பி அணியச் சொன்னால் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கு உழைக்கும் வர்க்கத் தோழரின் இயலாமை கண்டு ஆதங்கம், தொப்பி அணிய வேண்டி இருந்தால் அணிய வேண்டியதுதானே, விழுமியங்கள் என நமக்கு நாமே போட்டு கொண்டிருக்கும் விலங்குகளை உடைத்து கதவுகளைத் திறந்து விட்ட அந்த பெயர் தெரியாத தோழரின் ஜென் நிலை கண்ட பரவசம் என பல அடுக்குகளில் பல வித தரிசனங்களைத் தரும் வரிகள். மனிதக்குரங்கு என எழுதாமல் மனித குரங்கு என எழுதி நாம் நினைப்பதற்கு மாறாக தோழரின் வாழ்வில் வலி இல்லை என்ற குறியீடு இவ்வரிகளின் சிறப்பம்சம்.
இந்த கட்டுடைப்பு முழுவதும் இங்கே இருக்கிறது. வாசித்து யான் பெற்ற இன்பத்தில் ஒரு சிறு பகுதியைப் பெற்று மகிழவும்.