Tuesday, September 23, 2014

அனுமனுக்கு எந்தப் பக்கம் Offside?

பெங்களூர் வந்திருக்கின்றேன். பெங்களூரில் கட்டாயம் செய்ய வேண்டும் என நினைத்தவைகள் ஒன்று இங்கு நடக்கும் கம்பராமாயண முற்றோதல் வகுப்பில் ஒரு முறையேனும் கலந்து கொள்ள வேண்டும் என்பது. நான் சென்ற முறை வந்திருந்த பொழுதுதான் இவ்வகுப்பு தொடங்கியது. இணையத்தில் ஏற்றப்படும் காணொளிகளை அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது, நேரில் இவ்வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுவேறத் தொடங்கியது. பொதுவாக சனிக்கிழமைகளில் நடக்கும் இவ்வகுப்பு சென்ற வாரம் ஞாயிறன்று நடந்தது எனக்கு வசதியாக ஆனது. கொஞ்சம் தாமதமானாலும் சென்றுவிட்டேன். சீர் பிரித்துப் படிக்கக் கற்றுக் கொண்டால் கம்பனின் பாடல்களுக்குப் பெரும்பாலும் உரையே தேவை இல்லை. தேவைப்படும் பொழுது மட்டும் விளக்கமும் மற்ற நேரங்களில் சில தொடர்புடைய செய்திகளையும் சொல்லி ஹரி அண்ணா இந்த வகுப்பினை ஒழுங்கு செய்வது அழகு. 

புதிதாக வந்த என்னையும் பாடல்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள். சில பாடல்களைப் படித்தேன். அப்படிப் படிக்கும் பொழுது பார்த்த பாடல் ஒன்றுதான் இந்த பதிவின் தலைப்பில் இருக்கும் கேள்விக்குப் பதில். முதலில் அது என்ன பாடல் என்பதைப் பார்த்துவிடுவோம். 

எறிந்தன,எய்தன, இடி உரும் என மேல்
செறிந்தன படைக்கலம், இடக் கையின் சிதைத்தான்,
முறிந்தன தெறும்கரி; முடிந்தன தடந் தேர்;
மறிந்தன பரிநிரை-வலக் கையின் மலைந்தான்.

சுந்தரகாண்டம். சம்புமாலி வதைப்படலம். நேத்திக்கு டால்பின்ஸ் டீம் போட்ட பந்தை எல்லாம் கிரவுண்டுக்கு வெளில அடிச்ச ரெய்னா மாதிரி (நானும் நேர்ல மேட்ச் பார்த்ததை சொல்ல வேண்டாமா? ஹிஹி) அனுமன் ராவணன் அனுப்பின சேனை எல்லாத்தையும் அடிச்சு துவம்சம் பண்ணறான். அப்போ இந்த சம்புமாலியை அனுப்பி அந்த குரங்கை அடக்கி கொண்டு வான்னு சொல்லறான் ராவணனன். அந்த சம்புமாலியும் அடிவாங்கிச் சாவறதுதான் இந்தப்படலம். இந்தப் படலத்தோட ஆரம்பத்துல சம்புமாலி யாரு, அவனோட சேனை எவ்வளவு பெருசுன்னு எல்லாம் சொல்லிட்டு அப்புறம் அந்த சேனை என்ன ஆகுதுன்னு சொல்லறதுதான் இந்தப் பாட்டு. 

அனுமன் என்ன பண்ணறானாம், தன் மேல இடி இடிக்கிற மாதிரி வந்து விழும் ஆயுதங்களை இடது கையால் சிதைக்கறானாம். என்ன மாதிரி ஆயுதங்கள்ன்னா எறியப்பட்ட ஆயுதங்கள், எய்யப்பட்ட ஆயுதங்கள் அதாவது வேலும் அம்பும். சினிமாவில் எல்லாம் பார்ப்போமே, அந்த மாதிரி. இடது கையில் இதைச் செஞ்சா வலது கை எதுக்கு? 

சம்புமாலியோட சேனையைப் பத்திச் சொல்லும் போது, கம்பன், அவன் கூடப் போன படையின் அளவு பத்தி சொல்லறாரு. அவன் தேரைச் சுத்திப் பத்தாயிரம் தேர்கள் போச்சாம். அதுக்கு ரெண்டு மடங்கு யானையாம். யானைக்கு ரெண்டு மடங்கு குதிரையாம். குதிரைகளுக்கு ரெண்டு மடங்கு காலாட்படையாம். அதாவது பத்தாயிரம் தேர்கள், இருபதாயிரம் யானைகள், நாற்பதாயிரம் குதிரைகள், எண்பதாயிரம் காலாட்படையினர். சம்புமாலியோட அத்தனை பேர் போறாங்க. இந்தப் படையோட சண்டை போடற அனுமனோட வலக்கை ஒண்ணும் சும்மா இல்லை. யானைகளையும் தேர்களையும் குதிரைகளையும் வலது கையால பின்னி எடுத்துடறானாம். 

குத்துச்சண்டையில் பார்த்தீங்கன்னா தன்னை நோக்கி வரும் குத்துகளில் அடி படாம இருக்க பல வழிகள் இருக்கு. அப்படியே தடுத்து நிறுத்தினா அது block. தடுத்து நிறுத்தாம அதைத் கொஞ்சம் தட்டி அது வரும் பாதையில் இருந்து விலகச் செய்து அந்த குத்துக்கான பாதையில் இருந்து அதனை மாற்றிவிடுவது Parry. இப்படி ஒரு கையால் நம்மை குத்த வரும் கையை விலக்கி, கிடைக்கும் அந்த இடத்தில் மற்ற கையால் தான் குத்துவது என்பது சாதாரணமாக நடக்கும் ஒன்று. 

அனுமனும் அப்படித்தான் செய்யறானாம். தன்னை நோக்கி ஏவப்படும் ஆயுதங்களை இடக்கையால் தள்ளி விட்டு வலக்கையால் அந்த ஆயுதங்களை ஏவிய படையை அடித்து அழித்து விடுகிறானாம். இதுல ஒண்ணு பாருங்க. பெரும்பாலான நேரத்தில் வலது கைப்பழக்கம் இருப்பவர்கள்தான் தடுக்க இடது கையும் அடிக்க தன்னோட வலிமையான கையான வலது கையையும் பயன்படுத்துவாங்க. இடது கைக்காரங்க ரிவர்ஸ். வலது கையால தடுத்து இடது கையால அடிப்பாங்க. 

அனுமனும் இடது கையால் தடுத்து, வலது கையால அடிக்கிறதால அவர் வலது கைப்பழக்கம் கொண்டவர்தான். எனவே அவருக்கு ஆப்சைட் வலக்கை ஆட்டக்காரர்களுக்கு எல்லாம் இருப்பது போல வலப்பக்கம்தான்! நான் சொல்லலை. கம்பனே சொல்லிட்டான்.