Sunday, December 05, 2010

அக்கு வேற ஆணி வேற!

அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே. அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை.

அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு.

இவைதான் அக்கு என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள். இதில் அக்கு என்றால் எலும்பு என்பது ஒரு பொருள் உண்டாகும் அடிப்படை கட்டமைப்பு என்பதாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பொருளின் பாகங்கள் என்பதை விட, ஒரு பொருளின் கட்டமைப்புக்கான (structure / frame) பாகங்களாக இருப்பதை அக்கு என்று சொல்வோமானால் அது எலும்புக்கு ஈடாக வருகிறது. ஆகையால் இந்த இடத்தில் அக்கு என்பதற்கு எலும்புதான் சரியான பொருளாக வருகிறது. ஆனால் அப்படி எடுத்துக் கொண்டோமானால் ஆணி என்ற சொல் வருவதற்கான காரணம் சரியாகப் புரியவில்லை. எல்லாப் பொருட்களுமே ஆணி வைத்துதான் கோர்க்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு தவறான முன்முடிவாகவே எனக்குத் தோன்றியது. எனவே ஆணி என்ற சொல்லுக்கு வேறு என்ன விளக்கங்கள் இருக்கின்றன எனப் பார்க்க அகராதியை நாடினேன்.

ஆணி [ āṇi ] {*}, s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence, மேன்மை; 6. support, foundation, ஆதாரம்; 7. wish, desire, விருப்பம்.

இதுதான் ஆணிக்கு அகராதியில் இருக்கும் விளக்கங்கள். அக்கு என்பதற்கு ருத்திராட்சம் எனப் பார்த்து இருந்ததால் ஒரு வேளை அது கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கத்தை சோதிக்க ஆணி என்ற சொல் வந்திருக்குமோ என்றும் கூட நினைத்தேன். ஆனால் அதுவும் சரியான பொருளைத் தராத எண்ணமே வந்ததால் மேலும் கொஞ்சம் தேடினேன்.

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது. குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி

கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி

எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை நேரடியாக அணுகாமல் மறைபொருளாகப் பார்த்தோமானால், இங்கு ஆணி என்பது விருப்பத்தைக் குறிக்கும் என்று உணரலாம். அதாவது ஒருவனிடம் இருந்து நரம்பு, எலும்பு மட்டுமில்லாமல் அவன் ஆசையையும் நீக்கி எனப் பாடலின் பொருளாகச் சொல்லலாம். கயிறு என்றால் நரம்பு. எக்கு என்றால் எலும்பு என்றும் ஆணி என்றால் விருப்பம் என்றும் பொருள் இருப்பதை முன்னமே பார்த்தோம். எப்படி ஒருவனை பகுதி பகுதியாய் பிரித்து எடுப்பது என்று முடிவானால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம். ஆனால் அவனுள் இருக்கும் ஆசையை எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. பற்றற்ற நிலையை அடைவது என்பது எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை. எனவே ஒரு மனிதனை பரிபூரணமாய் பிரிப்பது என்றால் அவனுள் இருக்கும் ஆசையை வரை தனியாகப் பிரித்து எடுப்பது என்று பொருளாகிறது.

எனவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிப்பது என்றால் பரிபூரணமாகப் பிரித்துப் பார்ப்பது என்பது தெளிவாகிறது. இந்தப் பழமொழியில் அக்கு என்றால் எலும்பு என்பதையும் ஆணி என்றால் நேரடியாக தசை என்றும் மறைபொருளாக விருப்பம் என்றிருப்பதையும் இனி நாம் நினைவில் கொள்வோம்.

(தமிழ் பேப்பரில் 04-12-2010 அன்று வெளி வந்தது)

தமிழ் பேப்பரில் வரும் இலக்கணத் தொடரைப் படிக்கிறீர்களா?



16 comments:

  1. இலக்கணத்துக்கு எல்லாம் போகலை, தமிழ் பேப்பரின் சுட்டி கொடுங்க, பார்ப்போம். :)))

    இந்த இலக்கியத்தை இத்தனை நாட்கள் எங்கே ஒளிச்சு வைச்சீங்க?? அருமை, அற்புதம்னு சொல்றது வெறும் சொல். அநுபவிச்சுப் படிச்சேன். நன்றி.

    ReplyDelete
  2. இப்படி அஃகு வேற ஆணி வேறன்னு ஒரேடியா மேயு மேயுன்னு மேஞ்சுட்டீங்க!!!!!

    இப்படி எல்லாம் பொருள் இருக்குன்னு இப்பத்த்யான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    சரியான அகராதி டிச்ச பயலா இருந்தால் எப்படி:-))))))

    ReplyDelete
  3. ச்சே ..! எல்லாத்தையும் 'அக்கு வேறு ஆணி வேறு'ன்னு பிரிச்சி மேஞ்சிட்டீங்க.

    உங்கள் பொறுமையின் ஆழமும், தமிழார்வமும், ஆய்வும் போற்றுதற்குரியது, ஐயா.

    ReplyDelete
  4. அக்கு வேற ஆணி வேற பற்றி அக்கு வேறா ஆணி வேறா அலசிட்டேங்களே!!

    பிரமாதம்.

    -அரசு

    ReplyDelete
  5. anna, kallidaikaranoda oru salaam!!..:) akkuveeru aaniveera pinni yedukkarel anna.

    ReplyDelete
  6. /இலக்கணத்துக்கு எல்லாம் போகலை, தமிழ் பேப்பரின் சுட்டி கொடுங்க, பார்ப்போம். :)))/

    ஹய்யோ கீதாம்மா, குடுத்து இருக்கிறதே சுட்டிதான்.அந்த நீல எழுத்துகளின் மேலவே ஒரு சொடுக்கு சொடுக்குங்க.

    /இந்த இலக்கியத்தை இத்தனை நாட்கள் எங்கே ஒளிச்சு வைச்சீங்க?? அருமை, அற்புதம்னு சொல்றது வெறும் சொல். அநுபவிச்சுப் படிச்சேன். நன்றி./

    அக்குன்னா என்னன்னு கேள்வி கேட்ட ஆயில்யனுக்குத்தான் நன்றி சொல்லணும்! :)

    ReplyDelete
  7. /இப்படி அஃகு வேற ஆணி வேறன்னு ஒரேடியா மேயு மேயுன்னு மேஞ்சுட்டீங்க!!!!!/

    ரீச்சர், என்னது இது எஃகுன்னா இரும்பு. அதனால ஆணிக்கு முன்னாடி வர இது அஃகுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? இது அக்கு!!

    /இப்படி எல்லாம் பொருள் இருக்குன்னு இப்பத்த்யான் தெரிஞ்சுக்கிட்டேன்./

    நானும் நானும்!!

    /சரியான அகராதி படிச்ச பயலா இருந்தால் எப்படி:-))))))/

    வெறும் அகராதி படிச்சாப் போதும் இதுக்கு எல்லாம் ஏண்டாப் பதிவுன்னு கேட்கறீங்களா? :))

    ReplyDelete
  8. /ச்சே ..! எல்லாத்தையும் 'அக்கு வேறு ஆணி வேறு'ன்னு பிரிச்சி மேஞ்சிட்டீங்க. /

    :))

    /உங்கள் பொறுமையின் ஆழமும், தமிழார்வமும், ஆய்வும் போற்றுதற்குரியது, ஐயா./

    நன்றி ஐயா! :)

    ReplyDelete
  9. /அக்கு வேற ஆணி வேற பற்றி அக்கு வேறா ஆணி வேறா அலசிட்டேங்களே!!

    பிரமாதம்.

    -அரசு/

    அரசு

    புதிய விஷயம்தான்!! :)

    ReplyDelete
  10. /anna, kallidaikaranoda oru salaam!!..:) akkuveeru aaniveera pinni yedukkarel anna./

    தக்குடு

    என்ன இது தங்க்லிஷ்!!

    நன்றிப்பா.

    உம்ம பதிவு எல்லாம் படிச்சுக்கிட்டுதான் இருக்கேன். எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும். மத்தபடி நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. கீதாம்மா

    இலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியின் சரியான வடிவத்தைச் சொல்லி இருக்கேன்.

    பார்க்கவும்! :)

    ReplyDelete
  12. இலக்கணத் தொடரில் ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியின் சரியான வடிவத்தைச் சொல்லி இருக்கேன். //

    யாரு தேடறது?? :P:Pஆ+நெய்?? அப்படித் தான் எங்க தமிழ் ஆசிரியர் சொல்லி இருந்தாங்க. நீங்க வேறே ஏதோ வம்பு பண்ணி இருக்கீங்கனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. சூப்பர் சார். நானும் இது நாள் வரை அக்கு என்பது ஏதோ சாரம் அல்லது தச்சர் பயன்படுத்தும் ஆப்பு போன்ற பொருள்களோடு சம்பந்தமான ஒன்று என்றுதான் நினைத்திருந்தேன். இப்படி ஒரு ஆழமான பொருளிருக்கும்னு தோணலை!

    தகவல் தந்தமைக்கு நன்றி.

    ரங்கா.

    ReplyDelete
  14. அஃகம் vs அக்கு மறைபொருள் விளக்கம் அல்லது pinநவினத்துவ விளக்கம் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. சூப்பர் சார்.

    ReplyDelete
  16. ரொம்ப அற்புதமாக உள்ளது உங்கள் விளக்கம். நான் இப்படி யோசித்துப் பார்த்ததே இல்லை. பாசுரத்தை மேற்கோள் காட்டிச் சொல்லியிருப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

    amas32

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!