Monday, December 15, 2025

என்ன விலை அழகே! (அல்லது பேரம் பேசும் கலை)


அமெரிக்கா நுகர்வோரின் சொர்க்கம். வாடிக்கையாளரின் வாக்கே வேதவாக்கு என்பதைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கக்கூடிய நாடு. நுகர்வோரின் கவனத்தைக் கவர பல விதமான இலவச இணைப்புகள், விலைக்குறைப்பு, அதிரடித் தள்ளுபடி என்று எல்லா இடங்களிலும் வருடம் பூராவும் ஆடி மாதமாகவே இருக்கும். நுகர்வோரை ஏமாற்றுவது, விலையை ஏற்றி விற்பது போன்ற பழக்கங்கள் பொதுவாக இருக்காது. கடைக்குப் போனால் நமக்குத் தேவையான பொருளின் விலை, தெளிவாகக் குறிக்கப்பட்டு இருக்கும், அது மட்டுமில்லாமல் பலசரக்குச் சாமான்களை வாங்கச் சென்றால் வெவ்வேறு அளவுகளை, வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்பை ஒப்பிட்டுப் பார்க்க வசதியாகக் கூட நூறு கிராமுக்கோ, ஒரு லிட்டருக்கோ என்ன விலை என்பதும் கூடக் குறிப்பிடப்பட்டிருக்கும். சுருக்கமாகச் சொன்னால் நம்மை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. 


இதற்கும் ஒரு விதிவிலக்கு என்றால் அது கார் வாங்குவதுதான். தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் சேர்ந்து கொண்டு வாங்க வருபவர்களின் தலை சுற்றும் அளவிற்குக் குழப்பி விடுவார்கள். கார் விற்குமிடத்திற்குச் சென்றோம், நமக்குப் பிடித்த மாடலைத் தேர்ந்தெடுத்தோம், அதற்கான விலையைச் செலுத்தினோம், வந்தோம் என்று எளிமையாக இருக்க வேண்டியதை எவ்வளவு தூரம் சிக்கலாக்க முடியுமோ அப்படிச் சிக்கலாக்கி விடுவார்கள்.


முதலாவதாக நேரடியாகக் காருக்கு விலை சொல்ல மாட்டார்கள். நமக்கு வேண்டுமென்ற மாடலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே மாடலில் பல வகைமைகள் இருக்கும். ஒரு வகைமைக்கும் மற்றொன்றிற்கும் பெருமளவில் வித்தியாசம் இருக்காது. விலையிலும் சிறிய மாற்றம்தான் இருக்கும். ஆனால் ஒரே மாடலில் பத்து வகைமைகள் இருக்கும். அடிப்படையான வகைமையின் விலைக்கும் இருப்பதிலேயே சொகுசான வகைமைக்கும் விலையைப் பார்த்தால் மடுவுக்கும் மலைக்கும் உண்டான வித்தியாசம் இருக்கும். இதில் எது வேண்டும் எது வேண்டாம் என்று முடிவு செய்யவே மூச்சு முட்டும். 


எப்படியோ மாடலும் அதனுள் வகைமையையும் முடிவு செய்தால் அதன் பின் நிறம், சக்கரத்தின் அளவு, உள்ளே இருக்கும் இருக்கைகளின் வடிவம், லொட்டு, லொசுக்கு என்று ஆயிரத்தெட்டுத் தேர்வுகளைச் செய்ய வேண்டும். ஓவ்வொன்றையும் தேர்வுச் செய்யச் செய்ய விலை மாறும். 


எப்படிப் பார்த்தாலும் காரின் உண்மையான விலை தெரியாது. ஒரு விலை சொல்வார்கள் ஆனால் எல்லாருக்கும் அந்த விலைக்கும் உண்மையான விலைக்கும் சம்பந்தமே கிடையாது என்று தெரியும். ஆனாலும் பெரிய மனது பண்ணி தள்ளுபடி செய்வது போல உங்களைக் கவனிக்கும் விற்பனையாளர் கொஞ்சம் குறைப்பார். 


ஆனால் அதுவும் ஓர் உத்திதான். அதெல்லாம் முடியாது இன்னும் குறை, இன்னும் குறை என நாம் குரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் சென்ற பின் என் மேலாளரைக் கேட்டு வருகிறேன் என்று போவார். திரும்ப வந்து இதுதான் கடைசி என்று அவர் சொல்லிவிட்டார் என்பார். நாமும் இது வேலைக்காகாது என்று எழுந்து போவது போல் நடிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அந்த மேலாளர் வருவார். பின் அவரின் மேலாளர் வருவார். ஒவ்வொருவரும் இதுதான் கடைசி என்று ஒரு தொகையைச் சொல்வார்கள். ஒரு வழியாக ஒரு விலையை ஒப்புக் கொண்டால் அதன் பின் இந்தக் காப்பீடு, அந்தத் திட்டம் என்று எதையாவது தலையில் கட்டப் பார்ப்பார்கள். நாம் உஷாராக இல்லை என்றால் பேரம் பேசிக் குறைத்த எல்லாவற்றையும் திரும்பப் பிடுங்கி விடுவார்கள். 


பழைய காரை அவர்களிடமே விற்றோமானால் அதற்கு நல்ல விலையை வாங்க இதே விளையாட்டை விளையாட வேண்டியது. விற்பது நாமென்பதால் அடிமாட்டு விலையில் ஆரம்பிப்பார்கள். நாம் இன்னும் தா இன்னும் தா என்று திருவாரூர் தேரை இழுப்பது போல இழுக்க வேண்டும். 


இவ்வளவையும் செய்த பின்னும் நாம் சரியான விலையைத்தான் கொடுத்தோமா என்ற எண்ணம் இருந்து கொண்டேதான் இருக்கும். புதுக்காரைப் பார்க்க வரும் நண்பர், இங்கேயா வாங்கினாய், நான் அந்தக் கடைக்குப் போனேன், அவர்கள் இன்னும் கொஞ்சம் குறைத்தார்களே என்பார். பொங்கி வரும் பாலில் தண்ணீரைத் தெளித்தாற்போல் புதுக்கார் வாங்கிய மகிழ்ச்சி, சுருதி இறங்கிப் போய்விடும். 


நான் நன்றாகப் பேரம் பேசுவேன். பேரம் பேசக்கூடியச் சந்தைக் கடைகளில் எல்லாம் பொறுமையாக நின்று பேரம் பேச எனக்குப் பிடிக்கும். நூறு டாலர் விலை சொன்னால் அசராது பத்து டாலரில் கூடப் பேரத்தை ஆரம்பிப்பேன். கூட வருபவர்கள் பாடுதான் பாவம். ஆனால் நல்ல பேரம் பேசுபவர்களை விற்பவர்களுக்கும் பிடிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன். பேரம் படிந்த உடன் நட்பாகிவிடுவார்கள். அதனால் கார் வாங்க வேண்டும் என்றால் நண்பர்கள் என்னைக் கூட்டிச் செல்வது வழக்கம். 


அப்படித்தான் ஒரு முறை நண்பர் ஒருவருக்குக் கார் வாங்கப் போன பொழுது முதலில் சும்மாக் கூட வந்தவன் போல் இருந்தேன். அவர்கள் நண்பரோடு பேரம் பேசி ஒரு விலைக்குச் சரி எனச் சொல்லும் பொழுது பேச்சினுள் நுழைந்தேன். பேரம் இன்னும் பல மணி நேரம் சென்றது. ஒரு கட்டத்தில், உங்கள் தொந்தரவு தாங்க முடியலை, நீங்களே ஒரு விலையைச் சொல்லி எடுத்துக் கொள்ளுங்கள் என்று அழாகுறையாக சொல்லும் அளவிற்கு அன்று பேரம் நடந்தது. கடைசியில் நண்பருக்குக் கணிசமான செலவு மிச்சம். இன்று வரை அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் இப்பொழுதெல்லாம் இந்தப் பொறுமை இல்லை. 


தான் நுழையும் துறைகள் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போடும் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தைத் தொடங்கிய பொழுது அவர் முதலில் சொன்னது இந்த தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் தொடர்பு வலையினை அறுப்பேன் என்பதுதான். சொன்னது போலவே அவர் இன்று வரை விநியோகஸ்தர்கள் இல்லாமலேயேதான் விற்பனை செய்கிறார். இதனால் அவர் சந்தித்தப் பிரச்னைகள் ஏராளம். விநியோகஸ்தர்கள் சங்கம், தங்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கினால் இவருக்கு எத்தனையோ தொல்லைகள் தந்தார்கள். ஆனாலும் மனிதர் அசரவில்லை. 


மூன்று மாதங்களுக்கு முன் புதிதாக ஒரு டெஸ்லா வாங்கினேன். அவர்களின் இணையத்தளத்திற்குச் சென்று மிகச் சிலத் தேர்வுகளை மட்டும் செய்தேன். நீங்கள் செய்திருக்கும் தேர்வின்படி உங்கள் காரின் விலை இவ்வளவு என்று ஒரு கணக்கைச் சொன்னார்கள். கடன் வேண்டுமா என்று கேட்டார்கள். ஆம் எனச் சொன்னவுடன் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யச் சொன்னார்கள். செய்தேன், சில நிமிடங்களில் கடன் தருவதாக முடிவினைச் சொன்னார்கள். எல்லாமாகச் சேர்த்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. 




காரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டு எனக்குச் செய்தி அனுப்பினர். அங்கு சென்றால் என் பெயர் எழுதப்பட்ட பெயர்ப்பலகை கொண்ட கார் இருந்தது. தொலைப்பேசியில் இருந்த செயலி மூலம் காரைத் திறந்து ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். ஓட்டிக்கொண்டு வந்தேன் என்றா சொன்னேன்? இல்லை, வீட்டுக்குப் போ எனச் சொன்னேன், கார் தானே ஓட்டிக்கொண்டு என்னை வீட்டில் சேர்த்தது.  


ஆரம்பம் முதல் முடிவு வரை ஆட்கள் யாரையுமே பார்க்கவும் இல்லை எந்த விதப் பேரமும் இல்லை. புதுக்கார் வாங்கிய மகிழ்ச்சி மட்டுமே மனத்தை நிறைத்தது. 


Friday, December 05, 2025

பூங்கதவே தாழ் திறவாய்!

 

தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ரெண்டுங்கெட்டான் ஊர். அதில் இருக்கும் தனியார் பள்ளியில் மும்மொழிக் கொள்கை அந்த நாளிலேயே உண்டு. ஆனால் தேர்ந்தெடுக்க எல்லாம் வாய்ப்பு கிடையாது. ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளி என்பதால் ஆங்கிலம் முதல் மொழி. தமிழ் இரண்டாம் மொழி. இந்தி மூன்றாம் மொழி. அனைவருக்கும் இப்படித்தான்.


எதற்காக இந்தி படிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கத் தெரியாத வயது. ஆனால் அந்த வகுப்பிற்கு வெளியே இந்தியோடு கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத வாழ்க்கை. இந்தித் திரைப்படங்கள் எல்லாம் கூட வராத ஊர். இந்தித் திரைப்படம் எல்லாம் திருநெல்வேலியோடு நின்றுவிடும். அதற்குத் தெற்கே அவற்றிற்கு அனுமதி கிடையாது. 


தொலைக்காட்சி வந்த பின்புதான் இதில் மாற்றம். இரவில் தமிழ் ஒளிபரப்பு முடிந்தவுடன் இந்திக்கு மாறிவிடுவார்கள். அவர்கள் பேசும் இந்தியும் நாம் படிக்கும் இந்தியும் ஒரே மொழிதானா என்று ஐயம் எழும் அளவிற்கு இரண்டும் தொடர்பில்லாமல் இருக்கும். இந்த இழவிற்கு ரூபவாகினியே தேவலாம். ஆய்புவன் என்று கையைக் கூப்பினாலும் அடிக்கடி தமிழில் பேசிவிடுவார்கள். கிரிக்கெட் மேட்ச் நடந்தால் மட்டும் வேறு வழி இல்லாமல் காதில் இந்தி விழும். பல்லேபாசி, சார் ரன் லியா, சக்கா மாறா என்று சில வார்த்தைகள் மட்டும் இந்தியில் சொல்லிவிட்டு இஸ்னே பௌலிங் கியா, உஸ்னே கவர் டிரைவ் கியா என்று பாதிக்குப் பாதி ஆங்கிலம் கலந்து விடுவார்கள் என்பதல் பிரச்னை இருக்காது. 


நிலைமை இப்படி இருந்ததால் பள்ளியில் சொல்லித் தரும் இந்தி தலைக்குள் ஏறவே ஏறாது. கோமதி மிஸ் எவ்வளவுதான் முட்டிக் கொண்டாலும் நம்ம திறமை ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா என்ற அளவைத் தாண்டியதே இல்லை. இதில் இருக்கும் குழப்பங்கள் போதாதென்று உயர்திணை அஃறிணை என்று எல்லாவற்றையும் ஆண் பெண் எனப் பிரித்துவிடுவார்கள். நாற்காலி என்றால் பெண், மேசை ஆண் என்றெல்லாம் எப்படித்தான் பிரிப்பார்களோ, இதை எப்படி ஞாபகத்தில் வைத்துக் கொள்வது. இந்தியில் பாஸ் ஆவது கோமதி மிஸ் பெருங்கருணை கொண்டு முப்பத்தி ஐந்து மதிப்பெண்கள் போடுவதால்தான். 


இதுதான் நம்ம லட்சணம் என்று பல்லிளிக்க, எல்லாரும் கட்டாயம் இந்திப் பிரச்சார் சபா நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று பிரின்சிபல் உத்தரவு போட்டுவிட்டார். இங்காவது கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் கிடைக்கும். யாரோ பெயர் தெரியாத ஆசிரியர் விடைத்தாள்களைத் திருத்தும் பொழுது அந்தக் கருணை அடிப்படை எல்லாம் இருக்காதே. தேற வேண்டுமானால் தனி வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவானது. 


எங்கள் தெருவிலேயே இருந்த இந்தி டீச்சர் வீட்டுக்குச் செல்லப் பணிக்கப்பட்டேன். அவர்களும் பாவம், முட்டி மோதிப் பார்த்தார்கள். ஆனால் கல்லில் நாரை உரிக்கவா முடியும்? ஏறும் அளவிற்குத்தான் இந்தி என் மண்டையில் ஏறியது. என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை என்று கமலஹாசன் சொல்வதைப் போல பிராத்மிக், மத்யமா என்ற இரண்டு தேர்வுகளில் இந்தியே தெரியாமல் தேர்ச்சியும் பெற்றுவிட்டேன். அதற்கு அடுத்து ராஷ்ட்ரபாஷா தேர்வு. இந்தி ஒன்றும் எங்கள் தேசிய மொழி இல்லை என்பதை அன்றே அறிவித்தவன் நான். முட்டி மோதினேன். இரண்டவது முயற்சியிலோ மூன்றாவதிலோ தேர்வானேன் என்று நினைக்கிறேன். இல்லை கடைசி வரைத் தேர்ச்சி பெறவே இல்லையோ? ஞாபாகம் இல்லை. ஆனால் அதோடு இந்திக்கு முழுக்குப் போட்டாகி விட்டது. அமெரிக்கா வந்த பின் உடன் வேலை செய்தவர்களில் பலர் இந்திக்காரர்கள். அடுத்தவனுக்குப் புரியுமோ புரியாதோ என்று எண்ணமே இல்லாமல் இந்தியிலே பேசுவார்கள். அதனால் கொஞ்சம் புரிபடத் தொடங்கியது. ஆனால் இந்தி தெரியாது என்றே அவர்களிடம் தோள்களை இறக்காமல் இருப்பேன். 


இந்திக் கதவு மூடினாலும் இந்தி டீச்சர் வீட்டில் வேறு ஒரு கதவு திறந்தது. அவர் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வணிகக் கணக்கியல் பாடமும் எடுப்பார். ஆறாம் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கு அவர்களுக்குச் சொல்லித் தந்தது நன்றாகப் புரிந்தது. அவர்களையும் விட. என் இந்திப் பாடத்தை விட்டு அந்தப் பாடத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். இவனுக்குக் கணக்கு வருகிறது என்று தெரிந்த அண்ணன்மார் அவர்கள் வீட்டுப்பாடத்தை எல்லாம் என் தலையில் கட்டுவார்கள். நானும் சரியாகச் செய்து தந்துவிடுவேன். அப்பொழுதே நாம் படிக்க வேண்டியது வணிகக் கணக்கியல்தான் என்று முடிவெடுத்தேன். 


பத்தாம் வகுப்பில் ஓரளவு நன்றாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அறிவியல் பக்கம் ஒதுங்காமல் வணிகவியல், வணிகக் கணக்கியல் பாடங்களையே விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தேன். சென்னைக்கு இடம் மாறினோம். அங்கு சேர்ந்த பள்ளியில் நன்றாகவே படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள், பின்னர் பி.காம், காஸ்ட் அக்கவுண்டன்ஸி என்று  வணிகக் கணிக்கியலில் தொடர்ந்து படித்துக் கொண்டு வந்தேன். இதன் அடுத்த கட்டம் பட்டையக் கணக்காளர் ஆவது. 


அதற்கு  பட்டையக் கணக்காளர் ஒருவரின் கீழ் வேலை பார்த்துத்  தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் நிறுவனங்களைத் தணிக்கை செய்யப் போகும் பொழுது எங்களையும் கூட்டிக் கொண்டு போவார். எப்படி கணக்கு வழக்குகளைச் சரி பார்க்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருவார். ஆரம்பத்தில் எளிமையான வேலைகள், பின் கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்று மெதுவாக முன்னேற வேண்டும். ஒரு கட்டத்தில் நம்மைத் தனியாக தணிக்கை செய்ய அனுமதிப்பார், கடைசிக் கட்டத்தில் வந்து இணைந்து கொள்வார். இப்படிப் பல நிறுவனங்களுக்குச் சென்று தணிக்கை செய்ய வேண்டி இருக்கும். 


அப்படி நான் தணிக்கை செய்யச் சென்ற நிறுவனங்களில் ஒன்று - இந்திப் பிரச்சார் சபா! 



பிகு: இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திப் பிரச்சார் சபா என் வாழ்வில் நுழைந்திருக்கிறது. சொக்கன் எழுதிய காந்தி பற்றிய புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பொழுது இந்திப் பிரச்சார் சபாவைப் பற்றிப் படிக்கக் கிடைத்தது. 


Tuesday, December 02, 2025

இந்தக் கௌரவப் பிரசாதம்…

 

நான் ஒரு சாப்பாட்டு ராமன். என் சாப்பாட்டுத் தேடலின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே இருப்பேன். பல நாட்டு உணவுகளை ருசி பார்க்க வேண்டும். அமெரிக்காவின் பல பகுதிகளின் சிறப்பாகத் திகழும் பண்டங்களை உண்ண வேண்டும். அண்மையில் இருக்கும் உணவகங்களில் சாப்பிட்டு எதற்கு மறுபடி போகலாம் போகக்கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். அவ்வளவு ஏன், நியூயார்க் நகரில் மட்டும் ஒரு முறையாவது சென்று உண்ண வேண்டிய உணவகங்களில் பட்டியல் ஒன்று கூட வைத்திருக்கிறேன். இப்படி என் உணவிற்கானப் பயணத்தில் பல வேண்டும்கள் உள்ளன. 


சிலருக்கு வெளியூர் சென்றால் கூட நம் நாட்டு உணவுகளை உண்ணத்தான் விருப்பம். போன கடை எதற்குப் பெயர் போனதோ அதை மட்டுமே ருசி பார்க்க வேண்டும் என நினைப்பவர்களும் உண்டு. ஆனால் எனக்கு வெளியில் சாப்பிடப் போனால் இந்திய உணவல்லாது மற்ற வகை உணவுகளுக்கே முன்னுரிமை. உடன் வருபவர்கள் பலரும் இந்திய உணவகம் செல்லலாம் என்று சொன்னால் மட்டும் இந்திய உணவகங்களுக்குச் செல்வேன். எங்கு சென்றாலும் வித்தியாசமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து ருசி பார்ப்பது என் வழக்கம். ஓர் உணவகம் பிடித்துவிட்டால் அடிக்கடி அங்கு சென்று அவர்களின் உணவுப்பட்டியலில் இருப்பதை எல்லாம் முயன்று பார்ப்பதும் உண்டு. தெருவோரக் கையேந்தி பவன்களில் இருந்து மிசெலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவகங்கள் வரை தராதரம் பார்க்காது செல்வேன். சாப்பாட்டுக்குச் செலவழிப்பது பரவாயில்லை என்கின்ற ரகம் என்பதால் விலையை வைத்து மட்டும் ஓர் இடத்திற்குப் போகாமல் இருக்க மாட்டேன். 


இப்படிச் செல்வதால் நண்பர்கள் குழாம் என்னைக் கூப்பிட்டு எங்கு செல்லலாம், செல்லுமிடத்தில் எது நன்றாக இருக்கும் என்று விசாரிப்பர். நியூ ஜெர்சியிலிருந்து டெக்ஸாஸ் வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அங்கிருக்கும் நண்பர்கள் இன்னும் என்னை அழைத்து கருத்து கேட்பது குறையவில்லை. நான் அங்கு அடிக்கடிச் சென்ற உணவகங்களுக்கு இப்பொழுது செல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கிருக்கும் மேலாளர்களோ முதலாளிகளோ இன்னும் பெயரைச் சொல்லி அழைக்கும் வகையில் அந்நியோன்னியம் உண்டு. ஆஸ்டினிலும் கூட பல இடங்களில் இந்த வரவேற்பு கிடைக்கும். 


இந்தியா வந்தால் எனக்கு முதன்மையான உணவு என்பது காலை உணவுதான். நன்றாகச் சாப்பிட்டு விட்டால் மதியம் சாப்பிடக் கூட மாட்டேன். இரவுணவு எதோ இருந்தால் போதும். நிதமும் காலை உணவுக்கு எங்கெல்லாம் செல்ல வேண்டும் எனப் பட்டியல் போட்டுவிடுவேன். சென்னையாக இருந்தால் முதல் நாள் காலை ரத்னா கபேயில் இட்லி சாம்பார் என்பது பாரம்பரிய ஆரம்பம். அடையாரில் அண்ணன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளையைத் திறந்திருக்கிறார்கள். எனக்காகவே திறந்திருப்பார்களோ என்று நினைப்பேன். அங்கு சாம்பார் இட்லி முடிந்தால் எதிரில் இருக்கும் ஆவின் பூத்தில் ஏலக்காய் பால் ஒன்றும் குடிக்கலாம். ராயர்ஸ் கபேயில் காரச் சட்னிக்காகவே ஒரு முறை போய்விடுவேன். பார்டர் புரோட்டாக் கடை திநகரில் திறந்திருக்கிறார்கள். எங்கள் ஊர் ருசிக்காக அங்கு செல்வது இப்பொழுது வழக்கத்தில் சேர்ந்திருக்கிறது. புதிதாக வந்திருக்கும் கடைகள் பட்டியலை என் அண்ணன் நீட்ட அக்கடைகளும் நம் திட்டத்தில் இணைந்து கொள்ளும். 


டிசெம்பர் மாதம் சீசனுக்குச் சென்னை என்றால், யோசிக்கக் கூட வேண்டாம். மூன்று வேளையும் எதாவது சபா கேண்டீனிலேயே வேலை முடிந்துவிடும். இன்றைக்கு எங்கெல்லாம் கச்சேரிக்குச் செல்ல வேண்டும், யார் பாடுவதை, வாசிப்பதை எல்லாம் கேட்க வேண்டும் என்று யோசிக்கும் பொழுதே அந்த சபாவில் யாருக்கு சமையல் ஒப்பந்தம், அவர்கள் என்னவெல்லாம் நன்றாகச் செய்வார்கள் என்பதும் முடிவு செய்ய துணை செய்யும். மியூசிக் அகாடமியில் காலை நடக்கும் செயல்முறை விளக்கங்கள் எனக்குப் பிடிக்கும் என்பதால் பொழுது பெரும்பாலும் அங்குதான் விடியும். 


பெங்களூரு சென்றால் பிராமின்ஸ் கபே, வித்யார்த்தி பவன், எம்டிஆர், இன்னும் பல தர்ஷணிகள் என்று அந்த ஊருக்கான பட்டியல் உண்டு. அங்கு நான் அதிகம் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டாம். என் கூட்டாளி ஒருவன் இருக்கிறான். ‘திண்டி வாக்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறான். நாற்பது ஐம்பது பேர் கும்பலாகக் கிளம்பி நகரின் ஒரு பகுதியில் இருக்கும் உணவகங்களுக்கு நடந்து சென்று எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்பார்கள். நான் செல்லும் நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கான திட்டம் இல்லை என்றால் கூட என்னை மட்டும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்பது அவனுக்கு இட்டிருக்கும் எழுதப்படாத கட்டளை. கூட்டிக் கொண்டு போவான்.


இந்த ஸ்விக்கி, ஜொமாட்டோ எல்லாம் வந்த பின் உணவகங்களுக்குச் செல்லாமல் வீட்டுக்கு வரவழைத்து உண்ணும் வழக்கம் இந்தியாவில் அதிகமாகி விட்டது. ஆனால் நான் இதை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்ப்பேன். அங்கு சென்று உண்ணும் அனுபவம் இப்படி வரவழைத்து உண்பதில் கிடைப்பதில்லை என்பது என் முடிவு.  


இவ்வளவு எல்லாம் சொன்னாலும் ஊருக்குச் சென்றால் அப்பொழுதுதான் செய்த அல்வாவை வாழையிலையில் வைத்துத் தரும் பொழுது வரும் இலைவாசமும் நெய்வாசமும் கலந்து நாசியில் நுழைய, அதே வேகத்தில் அல்வாவும் நம் வாய்க்குள் வழுக்கிச் செல்ல, அந்தச் சூட்டோடு அதை முழுங்கும் சுவையும், அதன் பின் திகட்டாமல் இருக்க கடைக்காரர் தரும் ஒரு கைப்பிடி மிக்ஸரும் (சரியாகச் சொல்ல வேண்டுமானால் மிச்சர்) தரும் அனுபவத்திற்கு ஈடாக இதுவரை எதையும் கண்டதில்லை. 



வெளிநாட்டுப் பயணங்களில் போது அந்த நாட்டுச் சிறப்பு உணவுகளைத்தான் தேர்ந்தெடுப்பேன். தங்கும் விடுதிகளில் வேலை பார்ப்பவர்களோடு நட்பு கொண்டாடி, அந்த ஊரில் எங்கெல்லாம் செல்ல வேண்டும், எவற்றை எல்லாம் உண்ண வேண்டும் எனத் தகவல் சேகரித்துக் கொள்வேன். அவர்கள் சொல்லாத இடங்களுக்குச் சென்றேன் என்றால் அது பற்றிய விபரங்களை அவர்களுக்குச் சொல்வேன். அவர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு இன்னும் சில இடங்களைச் சிபாரிசு செய்வார்கள். இந்தக் கொடுக்கல் வாங்கல் ரொம்பவே பயன்படும் ஒன்று. 


சமைக்கத் தெரியும் என்பதால் நன்றாக இருக்கும் பதார்த்தங்களின் செய்முறையைக் கேட்பேன். இப்படி ஆர்வமாகக் கேட்பதைப் பார்த்துவிட்டு சமையலறையில் இருந்து தலைமை சமையல்காரரே நம் மேஜைக்கு வந்து பேசுவார். அடுத்த முறை அங்கு சென்றால் அவரின் பெயரைச் சொல்லி விசாரிக்க நம்மை நல்லபடியாகக் கவனிப்பார்கள். சுவை பற்றிய விமர்சனங்களைச் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள் அடுத்த முறை அப்பொருளை ஆர்டர் செய்யவில்லை என்றாலும் கூட, சென்ற முறை முழுவதும் திருப்தி தராத பண்டங்களைச் செய்து தந்து இப்பொழுது சரியாக இருக்கிறதா என்று கேட்பார்கள்.  வீட்டுச் சமையலை இப்படி விமர்சனம் செய்தால் அம்மா, “நாக்கு நாலு முழம்” என ஏசுவார்கள் என்பதால் போட்டதைச் சாப்பிட வேண்டியதுதான். 


சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வாழ்வதற்காக உண்பவர்கள் உண்டு. உண்பதற்காகவே வாழ்பவர்கள் உண்டு. இதில் நான் எந்த வகை என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா!