Saturday, April 13, 2013

ராம காதைக்குக் கொத்தனார் நோட்ஸ்

நம்ம சொக்கன் இருக்காரே சொக்கன், கொஞ்ச நாளா கம்பராமாயணத்தில் மூழ்கி இருக்காரு. பாட்காஸ்ட் என்ன, பதிவுகள் என்னன்னு புகுந்து விளையாடிக்கிட்டு இருக்கார். 

இதெல்லாம் போறாதுன்னு இன்னிக்கு நம்ம ஹரி அண்ணா தலைமையில் வாரம் 100 கம்பராமாயணப் பாடல்களைப் படிப்பதும் அதற்கு விளக்கம் சொல்வதும் என்று ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்து இருக்கிறார்.

இதை எல்லாம் வெளியூர்காரர்கள் தவற விடுகிறோமே எப்படிக் கலந்து கொள்வது எனப் பார்த்தால் பெங்களூர் வந்து சேர் என்கிறார். சரி கம்பன் தந்த ராமாயணம் கை வரவில்லை என்றால் என்ன கொத்தனாரே ராமாயணம் எழுதுவான் என களத்தில் இறங்கி விட்டேன்.

அறுசீர் விருத்த பா வகையில் சுருக்கமாக கதையின் முக்கிய இடங்களைச் சொல்ல ஒரு முயற்சி செய்தேன். படித்து கருத்தினைத் தெரிவித்தால் மகிழ்வேன்.

பக்தியோடு இக்காதையைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சம்பத்துகளும் வாய்க்கும், மோட்ச பலன் கிட்டும்! :)


முத்துப் போன்ற மூவருக்கு
...முன்னம் வந்தான் முதல்வனவன்
தத்தை போன்ற பெண்ணவளை
...தனுசை உடைத்துக் கைப்பிடித்தான்

சித்தி சொன்ன காரணத்தால்
...சிரித்தே சென்றான் காட்டுக்கு
தொத்திக் கொண்டான் தம்பியுமே
...தொண்டு செய்யத் துணையாக


பத்தில் பாதி ஐந்தாக
...பரமன் கண்டான் குகனைப்பின்
பத்தி முத்திப் பாட்டியவள்
...பழங்கள் கடித்துத் தந்தனளே

பத்து தலையன் ராவணனும்
...பற்று வைத்தான் பிறன்மனைமேல்
எத்தன் மாரீ சன்துணையால்
...எடுத்தே சென்றான் இலங்கைக்கு

பித்தம் பிடித்தப் பெருமானும்
...பிரிய அனுமன் தனைக்கண்டான்
சித்தம் மாறி வாலியினை
...சீறும் அம்பால் அவன்வென்றான்

பக்தன் அனுமன் இலங்கைக்கு
...பறந்து சென்று பார்த்தவுடன்
ரத்தம் கொதித்து அவ்விடத்தை
...ரணமும் செய்து வந்தானே

மொத்தக் குரங்குப் படைகொண்டு
...மோத ராமன் முடிவெடுத்தான்
சத்தக் கடல்மேல் கல்போட்டு
...சாதித் திடத்தென் திசைசென்றான்

வித்தை பலவும் செய்தாலும்
...வீணாய்ப் போனர் இலங்கையரும்
யுத்தம் தனிலே யுவராசர்
...யுதிரம் கொட்டி வீழ்ந்தனரே

செத்துத் தொலைந்தான் ராவணனும்
...சேர்ந்தாள் சீதை ராமனுடன்
அத்தி தாண்டி அவர்களெல்லாம்
...அயோத்தி சென்று அடைந்தனரே!

நோட்ஸ்! 

பாடலைக் காண்பித்த பொழுது நண்பர்கள் சிலர் அது என்ன சத்தக்கடல் என்று கேட்டார்கள். அலையோசை மிகுந்த கடலே சத்தக்கடல்.

சரி, அது என்ன அத்தி? அத்தி என்றால் கடல். பாற்கடலில் படுத்துறங்கும் திருமாலுக்கு அத்திசயனன் என்று ஒரு பெயர் உண்டு. 

15 comments:

  1. /சித்தி சொன்ன காரணத்தால்
    ...சிரித்தே சென்றான் காட்டிற்கு/

    இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன :-)

    ஞானஸ்தர்!

    amas32

    ReplyDelete
  2. சீரான தாளகதியில் ஒரே எதுகையில் சரளாம ஓடுகிறது பாடல். குகனோடு ஐந்தானதைச் சொல்லி 10/2 கணக்கில் அழகாக இருக்கிறது. கம்பர் சொன்னதையும் எதிரஒலிக்கிறது).

    பாராட்டுகள். பக்தியை "பத்தி" என்றாக்கியது சரிதான். அனுமனை எத்தன் என்றது ஏன்?

    ReplyDelete
  3. அனுமன் எத்தனுக்கு எத்தன், எல்லாந்தெரிந்த சித்தன்,ராவணாதி ஜித்தன், ராம்னுக்குப் பக்தன்!!

    இலங்கைக்குத் தாவிச் சென்று சும்மா வந்தானா? வாலை சுருட்டி அதன் மேல் அமர்ந்து, அதன் முனையைத் தீக்கு தந்து ஊரையே எரித்து எத்தனை வேலை செய்தான். அவன் அவர்களுக்கு எத்தன் இல்லையா? அதான்! :)

    ReplyDelete
  4. கம்பராமாயணத்துக்குப் போட்டியா இது வம்பர் ராமாயணமா!!!!!

    நானும் மேட்டழகிய பூனையா வந்து ஆசிகள் வழங்கியாச்சு.!

    ம்ம்ம்ம்.... நடக்கட்டும்..........

    ReplyDelete
  5. கம்ப ராமாயணத்தில் சிவனைப் பற்றி 400க்கும் மேற்பட்ட பாடல்களில் கம்பன் எழுதி இருக்காராம். அதை எல்லாம் தொகுத்து கம்பனும் சிவனும் என்ற பெயரில் புத்தகம் ஒன்று வந்திருப்பதாக அண்ணன் Naga Chokkanathan சொல்லிக் கொண்டு இருந்தார்.

    உடனே தோன்றிய அறுசீர் விருத்தம்!

    அரியைப் பற்றிப் பாடியவன்
    ...அரனை விட்டு வைப்பானோ
    கரியின் தந்தை காலடியைக்
    ...கவனம் கொண்டு தொழுவானோ
    விரியும் காதை அவனெழுதி
    ...வியந்து மகிழச் செய்வானோ
    சரியே அவனும் சொல்லுவது
    ...சமமே அரியும் அரனுமிங்கே!

    ReplyDelete
  6. அருமை. சந்தம் சொல்லோடு பந்தமாய் கடகடவென ஓடுகிறது. ரசித்துப் படித்தேன்.

    எனக்கு ஒரு ஐயம். காட்டிற்கு என்று எழுதியிருக்கின்றீர்கள். காட்டுக்கு என்பதுதான் சரி என்று எங்கோ படித்த நினைவு. விளக்குங்களேன்.

    ReplyDelete
  7. Beautiful verses. One doubt though. Did Rama meet Guhan after seeing Sabari? I was off the idea that Rama met Guhan to cross Ganges way before he met Sabari in the Southern parts...

    ReplyDelete
  8. Beautiful verses. One doubt though. Did Rama meet Guhan after seeing Sabari? I was off the idea that Rama met Guhan to cross Ganges way before he met Sabari in the Southern parts...

    ReplyDelete
  9. ஜிரா

    காட்டுக்குதான் சரி. கட கடன்னு எழுதி அப்படியே போட்டுட்டேன். எழுதும் பொழுதே நெருடியது.

    ReplyDelete
  10. Goosie,

    சரியாச் சொன்னீங்க. மேல ஜிராவுக்குச் சொன்ன அதே பதில்தான். நாலு முறை படிச்சும் கூட இந்தத் தப்பு கண்ணில் படலை பாருங்க. குகனைத்தான் முதலில் பார்த்தது.

    ReplyDelete
  11. ஹூம், சபரியைப் பார்த்துட்டா குஹனைப் பார்த்தான்னு கேட்க வந்தால் ஏற்கெனவே கேட்டு வைச்சிருக்காங்க. பதிவு இன்னிக்குத் தான் அப்டேட் ஆயிருக்கு. :( அடுத்து மஹாபாரதமும், பாகவதமுமா? நடத்துங்க!

    ReplyDelete
  12. கீதாம்மா, அந்த ஒரு வரிதான் கண்ணில் பட்டுதா!! என்னா மாமியார்த்தனம்!!

    ப்ளாக் அப்பப்போ அப்டேட் ஆவுது, ஆனா நான் போஸ்டர் ஒட்டறது இல்லை! :)

    ReplyDelete
  13. தவறுகள் சிலவற்றைச் சரி செய்து, மாற்றப்பட்ட வடிவத்தை பதிவில் சேர்த்துவிட்டேன்.

    ReplyDelete
  14. அரியைப் பற்றிப் பாடியவன்
    ...அரனை விட்டு வைப்பானோ
    கரியின் தந்தை காலடியைக்
    ...கவனம் கொண்டு தொழுவானோ

    தப்பாக நினைக்க வேண்டாம். இந்த வ்ருத்தத்தைப் படித்த பின் என மனதில் உடன் நினைவுக்கு வந்த பாடல் :-

    அம்மா இங்கே வா வா
    ஆசை முத்தம் தா தா
    இலையில் சாதம் போட்டு
    ஈயை தூர ஓட்டு
    உன்னை போல நல்லார்
    ஊரில் யார்தான் உள்ளார்

    ReplyDelete
  15. க்ருஷ்ணகுமார்

    அம்மா இங்கே வா வா என்பது சந்தம் என்றால் என்ன என்பதற்குச் சரியான உதாரணம். இன்றைக்கும் நமக்கு மறக்காமல் இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அதன் ஓசை நயமே.

    அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது என்றால் நான் எழுதியதிலும் கொஞ்சம் ஓசை நயம் இருப்பதாக நான் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

    நீங்கள் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!