Saturday, November 16, 2024

சிரமம் பாராமல் படித்துவிடுங்கள்!

 

நடைபயிலும் பொழுது எதையாவது கேட்டுக் கொண்டே நடப்பது பழக்கம். பெரும்பாலும் கர்நாடக இசைக் கச்சேரியாக இருக்கும் அல்லது கர்நாடக இசை சம்பந்தப்பட்ட செயல்விளக்கமாக இருக்கும். இவை தவிர்த்து புலவர் கீரன், வாரியார் சுவாமிகள், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் போன்ற பெரியோர்களின் தமிழ் ஆன்மிக உரைகளைக் கேட்பதும் உண்டு. இன்று அருணகிரிநாதர் பற்றி வாரியார் சுவாமிகள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் தமிழின் பெருமையைச் சொல்லும் பொழுது சிரமாறு என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அது எப்படி திருமாலைசிவனைவிநாயகனைமுருகனை என பல கடவுள்களைக் குறிக்கக்கூடிய சொல்லாக விளங்குகிறது என்று சொன்னார். 

 

வீட்டுக்கு வந்தபின் இது குறித்து இணையத்தில் தேடினால் செய்கு தம்பிப் பாவலர்தான் இதை ஒரு சிலேடைக் கவிதையாக எழுதி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. இவர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுள் குறிப்பிடத்தக்க சாதனையாளர். ஒரே சமயம் பலதரப்பட்ட செயல்களில் கவனத்தைக் குவிக்கக்கூடிய கவனகம் என்ற கலையில் தேர்ந்தவர். ஒரே சமயத்தில் நூறு விதமான வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தவர் என்பதால் சதாவதானி என்ற பட்டம் பெற்றவர். கவனகத்தை வடமொழியில் அவதானம் என்பர். நூறு செயல்களைச் செய்யக்கூடியவர் என்பதால் சதாவதானி. செய்கு தம்பிப் பாவலர் சமய நல்லிணக்கத்தைப் போற்றியவர்,சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர் என்று இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். 


சமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி


ஒரு சமயம் இப்படி ஒரு சதாவதான நிகழ்ச்சி ஒன்றில் இவரை மடக்க நினைத்த ஒருவர்துருக்கனுக்கு ராமன் துணை என்ற ஈற்றடியைத் தந்து வெண்பா எழுதச் சொன்னார். துருக்கன் என்பது முஸ்லீம்களைக் குறிக்கும் சொல் (துருக்கியர்கள்துலுக்கர்கள் எனப் பேச்சு வழக்கில் வழங்கப்படுவது) என்பதால் இவர் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இவரோ ராமாயணத்தைப் பற்றி ஒரு வெண்பா இயற்றி அதில் கடைசி வரிக்கு முந்திய வரியில் பரதலட்சுமணசத் என ராமனின் தம்பிகளைக் குறிப்பிட்டு கடைசி அடியாக துருக்கனுக்கு ராமன் துணை என எழுதினாராம். சேர்த்துப் படிக்கும் பொழுது சத்துருக்கனுக்கு ராமன் துணை என அழகாகப் பொருள் வரும்படி செய்தார். 

 

மற்றொரு முறை எல்லா கடவுள்களுக்கும் பொருந்தும்படி பாடல் ஒன்றை இவரை இயற்றச் சொல்ல,

சிரமாறுடையான் செழுமா வடியைத்

திரமா நினைவார் சிரமே பணிவார்

பரமா தரவா பருகாருருகார்

வரமா தவமே மலிவார் பொலிவார்

 

என்ற கவிதையை இயற்றி சிரமாறுடையான் என்பதற்கு திருமால்சிவன்பிள்ளையார்முருகன்அல்லா என அனைவருக்கும் பொருந்துமாறு விளக்கமளித்தாராம். 

 

(1) தலையிலே கங்கை ஆற்றை உடைய சிவபெருமான் 

(2) தலையிலே ஆறுமுகங்களை உடைய முருகன் 

(3) தலையிலே மாறுபட்ட முகத்தை உடைய கணபதி (சிரம் + மாறு = சிரமாறு உடையான். அதாவது மாறுபாடான முகம் உடையான்) 

(4) தலையாய நெறிகளை உடைய அல்லா அல்லது இயேசு அல்லது புத்தர் (ஆறு – நெறி)

(5) முன்னும் பின்னும் தலைகள் இருக்கும் பிரம்மா

(6) திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால் (இதில் எனக்குத் தோன்றியது எப்பொழுது கடல் மேல் படுத்துக் கொண்டு இருப்பதால் வெப்பம் ஆறிய நிலையில் இருப்பவர் என்பதால் சிரம் ஆறும் உடையான் என்றாலும் பொருத்தமாகத்தானே இருக்கும்)

 

என்றெல்லாம் பொருள் வரும்படி பாடல் இயற்றினார் செய்கு தம்பிப் பாவலர்.  

 

இதிலிருந்து சில விளக்கங்களைத்தான் வாரியார் தனது உரையில் எடுத்துச் சொல்லி இருந்தார். அவர் சொன்ன விளக்கங்களை கேட்கும் பொழுது உமையவளை நினைத்தேன். கூடப் பிறந்த அண்ணன்கட்டிக்கிட்ட புருசன்பசங்க ரெண்டு பேருன்னு எல்லாரும் சிரமாறு உடையவர்கள். இவள் பாவம் ஒத்தத் தலையை வெச்சுக்கிட்டு இவங்க கிட்ட என்ன பாடு படறாளோன்னு நினைச்சேன். அதைச் சொன்னாலாவது கொஞ்சம் கஷ்டத்தை மறந்து சிரிப்பாளோன்னு நினைச்சு அதை ஒரு வெண்பாவாகச் சொன்னேன். 

 

சிரமாறு வைத்தவன் சீயன் தமயன்

சிரமாறு கொண்ட சிவனுன் கணவன்

சிரமாறு பெற்ற சிறுவன் தனயன்

சிரமாறு சேர்த்தவன் சின்னக் குமரன்

சிரமம்தான் உன்பாடு சிந்தித்தேன் அம்மா

சிரமன்சொல் கேட்டுச் சிரி!

 

சீயன் – திருமால்சிரமன் – அடிமை. மற்ற சொற்கள் எல்லாம் எளிமையானவை என்றுதான் நினைக்கிறேன். 

 

செய்கு தம்பிப் பாவலர் பற்றி மேலதிகத் தகவல்களுக்கு:


https://www.tamilvu.org/courses/degree/p202/p2024/html/p20246l2.htm


https://www.dailythanthi.com/News/Districts/2018/07/31100458/Sadawatani-who-has-reconciled-communal-harmony.vpf

 

No comments:

Post a Comment

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!