ஞானப்பழத்தின் நிறம் என்னங்கிற கேள்விக்கு ரெண்டு விஷயம் தெரியணும். ஒண்ணு ஞானப்பழம் அப்படின்னா என்ன? ரெண்டாவது நிறம் என்றால் என்ன?
அண்ணனும் தம்பியும் அடிச்சுக்கிட்டு, தம்பி ஆண்டியாப் போனதுக்குக் காரணமான பழம்தான் ஞானப்பழம்ன்னு நமக்கெல்லாம் தெரியும். அதுக்குப் பின்னாடி வருவோம்.
முதலில் நிறம்ன்னா என்ன? வானவில்லுக்கு ஏழு வண்ணம்ன்னு சொல்லறோம். சூரிய வெளிச்சம் கொஞ்சம் மஞ்சளா இருக்கும் ஆனா அதைப் பொதுவா வெள்ளைன்னு சொல்லிடுவோம். அதே சூரிய வெளிச்சம் மழை பெஞ்ச பின்னாடி காத்துல இருக்கிற நீர்த்துளிகள்ல பட்டு பல நிறங்களாத் தெரியறதுதானே வானவில். அதே மாதிரிதான் பிரமிட் மாதிரி கண்ணாடி வடிவம் ஒண்ணுல ஒளிக்கதிரைப் பாய்ச்சினோமானாலும் ஆகும். ஒரே ஒளிக்கதிரா இருக்கும் பொழுது ஒரே வேகத்தில் செல்லும் ஆனா அதை கண்ணாடி அல்லது நீர்துளிகள் வழியா செலுத்தும் போது ஒவ்வொரு நிறத்துக்கான ஒளிக்கதிரும் வேற வேற வேகத்தில் செல்வது தெரியும். அதனாலதான் அப்படி நிறங்கள் பிரிந்து தெரிகின்றன. ஆக ஒளி என்பது இந்த நிறங்களின் கூட்டுதான். மத்த எல்லா வண்ணங்களும் இந்த ஏழு நிறங்களோட கலவைதான்.
![]() |
ஆசை மட்டுமல்ல, ஒளி செல்வதும் அலை போலத்தான்! |
இப்படி நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு நிறத்துக்கும் உண்டான ஒளிக்கதிரும் வேற வேற அளவு கொண்ட அலைகள் மாதிரி போகும். அதைத்தான் அலைவெளின்னு (Wavelength) சொல்லறோம். ஒளி இந்த அலைவெளியில் போனா இந்த நிறம், அந்த அலைவெளியில் போனா வேற நிறம். அவ்வளவுதான் கணக்கு. இந்த கண்ணாடி ப்ரிசம் இல்லாம வேற ஒரு பொருள் மேல இந்த வெளிச்சம் பட்டா, அது சில அலைவெளிகளை தனக்குள்ள எடுத்துக்கும் மத்த அலைவெளிகளைப் பிரதிபலிச்சுடும். எந்த அலைவெளிகளைப் பிரதிபலிக்குதோ அந்தப் பொருளுக்கு அந்த அலைவெளிக்கான நிறம்தான்னு சொல்லிடலாம். உதாரணத்துக்கு ஆப்பிளை எடுத்துக்கிட்டா சிவப்பைத் தவிர மத்த எல்லா நிறங்களையும் உள்ள இழுத்துக்கிட்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கும். அதனால ஆப்பிள் நமக்குச் சிவப்பா தெரியுது. இலைகள் எல்லாம் இதே மாதிரி மத்த எல்லா அலைவெளிகளையும் உள்ள இழுத்துக்கிட்டுப் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலிக்குது. அதனால அதெல்லாம் நமக்குப் பச்சையாத் தெரியுது. எல்லா நிறங்களையும் பிரதிபலிச்சுட்டா அது வெள்ளை. எல்லா நிறங்களையும் உள்ள இழுத்துக்கிட்டா அது கருப்பு. சரியா?
இப்போ ஆப்பிள் சிவப்பு நிறத்துக்கான அலைவெளிகளை மட்டும்தான் பிரதிபலிக்குதுன்னு நமக்கு எப்படித் தெரியுது? அதுக்கான நுட்பம் நம்ம கண்ணுக்குள்ள இருக்கு. நம்ம கண்ணுக்குள்ள குச்சி வடிவத்திலேயும், கூம்பு வடிவத்திலேயுமான வடிவமைப்புகள் (Rods and Cones) இருக்கு. குச்சி வகை இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டும். நிறத்தைப் பத்திப் பேசும் போது அது வேண்டாம். இந்த கூம்பு வடிவத்தில் இருக்கிறதுல மூணு வகை இருக்கு. சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்களைத் தெரிஞ்சுக்க இந்தக் கூம்புகள் பயன்படுது. இந்த மூணில் எந்த வகை, எவ்வளவு அழுத்தமா பயன்படுதோ அதை வெச்சு எல்லா நிறங்களையும் நம்மால பாக்க முடியுது. இதில் பிரச்சினை இருந்தாத்தான் நிறக்குறைபாடு (Color Blindness) வருது.
நமக்கு மூணு வகைக் கூம்புன்னா, ஆடு மாடுகளுக்கு ரெண்டு வகைதான். இவங்களுக்குச் சிவப்பு நிறம் தெரியாது. அதனால மாட்டுக்கு சிவப்பு நிறத் துணி பிடிக்காதுன்னு சொல்லறது எல்லாம் கட்டுக்கதைதான். அதே மாதிரி நம்மளுக்கு ஆரஞ்சு நிறத்தில் தெரியும் புலி, மான் கண்ணுல பச்சையாகத் தெரியும், அதனால மானோட பார்வையில புலி காட்டுல இருக்கிற மரம் செடி கொடியோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிடுது. தண்ணீரில் இருக்கும் உயிரினங்கள் சிலதுக்கு ஒரு வகை கூம்புதான். அதுவும் கூட இல்லாத வௌவால் மாதியான உயிரினங்களும் உண்டு. இதுக்கு நேரெதிரா பறவைகளுக்கு நம்மை விட ஒரு வகை அதிகம் - நாலு வகைக் கூம்புகள் உண்டு. வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஆறு வகை. ஆனா இந்த விஷயத்தில் அடிச்சுக்கவே முடியாதது மேண்டிஸ் இறால் (Mantis Shrimp) என்ற இறால் வகைதான். இதுக்குப் பதினாறு வகைக் கூம்புகளாம். இவங்க பார்க்கிற உலகமே ரொம்ப வித்தியாசமா இருக்கும்.
![]() |
மனிதன் பார்வையும் மான் பார்வையும்! |
![]() |
மயில் போல ஷ்ரிம்பு ஒண்ணு! |
முதலில் சொன்ன மாதிரி நாம பார்க்கக் கூடிய நிறங்களின் அலைவெளி ஒரு குறிப்பிட்ட அளவுதான். இதைப் பார்க்கக்கூடிய அலைவிரியம்ன்னு (Visible Spectrum) சொல்லறாங்க. இதையும் தாண்டி புற ஊதா (Ultra Violet), அகச்சிவப்பு (Infra Red), மைக்ரோவேவ் (Microwave), காமா கதிர்கள் (Gamma Rays), ரேடியோ கதிர்கள் (Radio Waves), எக்ஸ்ரே (X-ray) கதிர்கள்ன்னு எவ்வளவோ இருக்கு. நம்மை விட அதிகக் கூம்புகள் கண்ணில் இருக்கும் உயிரினங்கள் சிலதால இந்த புற ஊதா, அகச்சிவப்புக் கதிர்களை எல்லாம் கூடப் பார்க்க முடியும்.
![]() |
மின் காந்த நிறமாலையும் நாம் பார்க்கக்கூடிய அலைவிரியமும் |
இதெல்லாம் போதாதுன்னு நம்ம மூளை வேற நடுவில் கோடிட்ட பகுதிகளை நிரப்பப் பார்க்கும். உதாரணத்துக்கு நாம ஒரு காட்சியைப் பார்த்தோமானால் அது நம்ம விழித்திரையில் விழுந்து அங்க இருந்து மூளைக்குப் போய், மூளை இதுதான் நாம பார்க்கறோமான்னு புரிஞ்சுக்கும். ஆனா விழித்திரையில பார்வை நரம்பு இருக்கிற இடம் இருட்டுச் சந்து. இந்த இடத்தில் ஒண்ணும் தெரியாது. நம்ம மூளை என்ன பண்ணும்ன்னா அதைச் சுத்தி இருக்கிற தகவல்களை வெச்சு இங்க என்ன இருக்குன்னு ஒரு முடிவு பண்ணி நாம பார்க்கிற காட்சியை முழுசா ஆக்கிடும்.
அப்படித்தான் வண்ணங்களிலும் விளையாடும். நாம பார்க்கக்கூடிய வண்ணங்களில் ஒரு எல்லையில் இருக்கும் ஊதாவும் மறு பக்கத்தில் இருக்கும் சிவப்பும் சேர்ந்து வந்தா, சம்பந்தமே இல்லாதா அலைவெளிகளா இருக்கேன்னு நினைச்சு எதோ கணக்குப் போட்டு ஒரு புதிய நிறத்தையே உண்டு பண்ணிடும். அதுதான் மஜந்தா. தமிழில் செந்நீலம்ன்னு சொல்லறாங்க. உண்மையில் இந்த நிறமே கிடையாது, இதை சாத்தியமில்லா (Impossible) நிறம் அப்படின்னு சொல்லறாங்க.
![]() |
செந்நீலம் என்னும் மாயை! |
இவ்வளவு பார்த்தாச்சு. இப்போ சொல்லுங்க. நிறம்ன்னா என்ன? ஆப்பிள் என்ன நிறம்? நாம சிவப்புன்னு சொல்லுவோம். ஆனா ஆடு மாடுக்கு அது சிவப்பா தெரியுமா? வௌவாலுக்கு ஆப்பிள் என்ன சிவப்பாவா தெரியப்போவுது? இல்லை நிறக்குறைபாடு இருக்கிறவர் ஒருத்தர் பார்த்தாருன்னா அவருக்குச் சிவப்பா தெரியுமா? வாழ்க்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பார்த்தே இருக்காதவர் கிட்டப் போய் சிவப்பு நிறத்தை எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? ஆக நிறம் என்பதே நாம பார்க்கும் பார்வையில்தானே இருக்கு, இல்லையா?
சரி, ஞானத்துக்கு வரலாம். ஞானம்ன்னா என்ன? உண்மையை உணர்ந்துக்கிறதுதான் ஞானம். அவ்வளவுதானே. ஆனா எது உண்மை? ஆப்பிள் சிவப்பு என்பது உண்மைதான். ஆனா அது மேலோட்டமான உண்மை. அதையே ஆப்பிளுக்கான நிறம் அதைப் பார்ப்பவரைப் பொறுத்ததுன்னு சொல்லிட்டோம்ன்னா அது ஞானம். அந்த ஞானம் சிலருக்கு வாழைப்பழம் மாதிரி எளிதா உரிக்கும்படியாக் கிடைக்குது. சிலருக்கு பலாப்பழம் மாதிரி கொஞ்சம் பழம் கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. அதனாலதான் அதை ஞானப்பழம்ன்னு சொல்லறோம். அப்படி நம்ம மனசுக்குள்ள இருக்கும் பார்க்கச் சாத்தியமில்லாத ஞானப்பழத்துக்கு சாத்தியமில்லாத நிறம்தானே பொருத்தம்?
எனவே ஞானப்பழத்தின் நிறம் செந்நீலம்தான்.
பிகு: பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் எடுக்கப்பட்டவை.
No comments:
Post a Comment
மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!