Thursday, March 30, 2006

Voipstunt - வெறும் ஸ்டண்ட்?

Voipstunt . இப்பொழுது இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சேவை இது. கணினியிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது நாடுகளில் உள்ள தொலைபேசிகளை இலவசமாக அழைக்க முடியும் என்பதுதான் இந்த சேவை. இந்த நாடுகளில் இந்தியர்கள் அனேகம் பேர் வசிக்கும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் அடக்கமென்பதால் அதிக அளவில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தளமாய் விளங்கி வருகிறது. நமது தமிழ் மணத்தில் கூட ஒரு நண்பர் இதைப் பற்றி எழுதியிருந்தார்.

உலகெங்கிலும் இலவச தொலைபேசி அழைப்புகள், 100% சதவிகிதம் இலவசம், என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்யப்படுகின்ற ஒரு தளம் இது. இவர்களின் முதற் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 10 இடங்களில் இலவசம், முற்றிலும் இலவசம் போன்ற வார்த்தைகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மையான ஒரு கூற்று என்பதைப் பார்ப்போம். இணையத்தில் இருக்கும் நண்பர்கள் மட்டுமின்றி பதிவிடப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள தொலைபேசி எண்களை இலவசமாக அழைக்கலாம் என்னும் விளம்பரத்தின் கீழே பொடி எழுத்துகளில் தெரியப்பட்டிருக்கும் விதிமுறைகள் கீழ் வருமாறு.

'இத்தளத்தைத் தவறாக பயன்படுத்த இயலாமல் செய்வதற்காக இலவசமாக அழைக்கக்கூடிய வசதி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதற்குமேல் இவ்வசதியை வேண்டுவோர், ஒரு நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும். இந்தத்தொகை நீங்கள் வெறும் இலவச சேவையை மட்டும் உபயோகிக்கும் வரையிலும், அதிகபட்சமாக 120 நாட்கள் வரையிலும் தொடப்படமாட்டாது.'

அதாவது 120 நாட்களுக்குப் பின் இத்தொகை அவர்களைச் சேர்ந்துவிடும். குறைந்த பட்சமாக 10 யூரோவாவது செலுத்தப்பட வேண்டும். ஆக மொத்தம், 120 நாட்கள் இந்த இலவச சேவையை உபயோகிக்க 10 யூரோ கொடுக்க வேண்டுமாம். ஆனால் இது இலவச சேவையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தக் கதை. இந்த மாதிரி தவறுதலாக வழி காட்டக்கூடிய விளம்பரங்களை எதிர்த்து யாரேனும் தட்டிக் கேட்க வேண்டாமோ? 'There is no such thing as free lunch' என்னும் கூற்றைத்தான் இத்தளம் மெய்ப்பிக்கின்றது.

இதை ஒட்டி நான் முன்னமே எழுதிய ஒரு பதிவையும் இப்பொழுது மீள்பதிவு செய்கிறேன்.

மொத்த ஆளுமை விலை

முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.

மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rockrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.

இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)

எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.

ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)

இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.

"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"

புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.

Monday, March 13, 2006

கணக்கொன்று போட்டேன்

அலுவலகத்தில் பணி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் புதிதாகப் பெரிய பதிவொன்றும் போட முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் வருகை இருப்பதை StatCounter மூலம் பார்க்கிறேன். அவர்கள் ஆவலுக்காக ஒரு சிறிய புதிர்.

பி.பி.சி.யில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அந்நிகழ்ச்சியை நடத்துபவர், 'பாட்டொன்று கேட்டேன்' என்று மிக அழகாக சொல்லுவார். அதைப் கேட்டதிலிருந்து அதைப்போலவே ஒரு தலைப்பு வைக்க ஆசை. வைத்தாகிவிட்டது. அவர் சொல்வதைப் போலவே ராகமாய் படித்துக் கொள்ளுங்கள்.

நண்பர் பாலராஜன்கீதா அவர்கள் தனிமடலில் இப்புதிரினை அனுப்பி, வேண்டுமென்றால் பதிவிலும் போட்டுக்கொள்ளுங்கள் என அனுமதியும் தந்தார். நன்றி நண்பரே.

நான் போட அதிக சமயம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நன்றாக இருந்ததால் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம். நீங்களும் முயன்று பாருங்களேன். பதிலை மட்டும் தராமல் போட்ட விதத்தையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

வழக்கம்போல் விடைகள் உடனடியாகப் பதிவிலிடப்படா. சரியா தவறா என்ற எனது பதிலே பதிவிலிடப்படும். இப்பொழுது புதிர்.

அ + ஆ = இ
ஈ - உ = ஊ
எ = ஏ X ஐ

இங்கு அ முதல் ஐ வரையான எழுத்துகளுக்கு 1லிருந்து 9 வரையான எண்களைப் பொருத்த வேண்டும். ஒரு எழுத்துக்கு ஒரு எண்தான் வரும். எல்லா எண்களும் ஒரு முறை வர வேண்டும். பொருத்திய பின் மேலிருக்கும் சமன்பாடுகள் சரியாக வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.

எங்கே முயலுங்களேன். மறக்காமல் போட்ட விதத்தையும் சொல்லுங்கள்.

Sunday, March 05, 2006

ஒரு வாரமாய் பௌர்ணமி

இப்படித்தான் சொல்லத் தோணுது. பின்ன நம்ம நிலா இந்த வாரம் பூரா இப்படி ஒளி வீசும்போது பௌர்ணமி இல்லாம என்னவாம். வாழ்த்துக்கள் நிலா.

படமெடுத்து போடறாங்க, சந்தோஷமா எப்படி இருக்குக்கறதுன்னு சொல்லறாங்க, கல்கியில வந்த கதையை எடுத்து போடறாங்க, என்னென்னவோ பண்ணறாங்க. அதுல நமக்கு தெரிஞ்சது இந்த போட்டிதான். பூப்பறித்த அனுபவம்ன்னு அவங்க சொல்லிட்டாங்க. ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.

போட்டிக்கு முன்னால்

நம்ம நடத்துற புதிர்ப் போட்டிகளினால நிலாவைத் தெரியும். தெரியும்ன்னா என்ன, ஒரு சக பதிவர் என்ற முறையில் தெரியும் அவ்வளவுதான். இவங்ககிட்ட இருந்து ஒரு தனி மடல் வருது. நான் ஒரு போட்டி வைக்கப் போறேன், கலந்துக்கறீங்களான்னு. என்னடா இது, நமக்கு போட்டியா, இல்லை நமக்கே போட்டியான்னு ஒரு சந்தேகம். ரெண்டு, மூணு தடவை படிச்சு பாத்துட்டுதான் நான் ரெடி, நீங்க ரெடியான்னு பதில் போட்டேன். அமெரிக்காவில் இன்னும் ஒரு ஆளு வேணுமேன்னு திரும்பி வந்தாங்க. நம்ம இன்னொரு பிளாக்கர் ஐ.டி. பதிவு செஞ்சு டபுள் ஆக்சன் குடுக்கலாமான்னு ஒரு ஐடியா. அப்புறம் சரின்னு நம்ம கௌசிகனை இழுத்துவிட்டாச்சு.

அப்புறம் நமக்கு தோழர், நம்ம கைப்புன்னு சொன்னாங்க. சரி, காமெடி கிளப் அப்படின்னு அணிக்கு பேர் வச்சுக்கலாமேன்னு மனக்கோட்டை எல்லாம் கட்டி அவருக்கு மெயில் போட்டா ஆளு அப்பீட்டு. என்ன ஆனாருனே தெரியலை. நிலா நம்ம கிட்டயே வந்து இந்தியாவில் சப்ஸ்டிட்யூட் ஒரு ஆளைப் பிடிங்கன்னு சொன்னாங்க. சரின்னு அதுக்கும் நமக்கு புதிர் போட உதவர பெரியவர் பேரை சொல்லியாச்சு. சொல்லி இந்த பக்கம் திரும்பினா அடுத்த மெயில். ஜிரா விளையாட முடியாதுன்னு சொல்லிட்டார், அதனால அவர் இடத்திற்கு ஹரிஹரன்ஸை தள்ளியாச்சு. இன்னும் ஒரு ஆளைப் பிடியுங்கன்னு. எனக்கு ஒரு சந்தேகம். இப்படி ஆள் பிடிக்கிற திறமையை சோதிக்கத்தான் போட்டியோன்னு. (இது ஆறாம் சுற்றில் உண்மையாச்சு. அது பத்தி அப்புறம்.) நானும் சளைக்காம நம்ம பதிவுக்கு வரவங்களுக்கு மெயில் அனுப்பி பார்த்தா அவங்க எல்லரும் இந்தியாவிற்கு வெளில இருக்காங்க. (இதுல ஒருத்தரை நம்ம ரசிகர் மன்ற தலைவின்னு (ர.ம.த.) எல்லாம் எழுதிட்டாங்க. அதெல்லாம் இல்லைங்க. நீங்க மன்னிச்சு விட்டுருங்க. உங்களுக்கு ஓக்கேன்னா சொல்லுங்க. உங்க பேரைச் சொல்லறேன்.) ஆக மொத்தம் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கியிருந்தா இந்நேரம் கொஞ்சம் பணம் பண்ணியிருக்கலாம். ஹூம்.

கடைசில நமக்குத் தோழர் குமரன்னு முடிவாச்சு. நீங்க ரெண்டு பேருமே அமெரிக்காவில் இருக்கறதுனால உங்களுக்கு கொஞ்சம் பலகீனம்தான், சமாளிங்கன்னு வேற நிலா சொல்லிட்டாங்க. சரிதான் ஆடிப் பார்த்திட வேண்டியதுதான் என களத்தில் இறங்கியாகிவிட்டது. இதுக்கு நடுவிலே, நம்ம 4X4 பதிவுல இந்த போட்டியை பத்தி சொல்லப் போக, நீ எப்படி சொல்லலாம்ன்னு சண்டை வேற போட்டாங்க இந்த நிலா. இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.

போட்டி
ஆறு சுற்று. எல்லாவற்றிலேயும் நல்லா செய்தாதான் வெற்றி. இவ்வளவுதான் தெரியும். இந்த ஆழமான அறிவோட போட்டியில இறங்கியாச்சு. ஒவ்வொரு ரவுண்டா பாக்கலாம்.

சுற்று 1
போட்டியன்று அமெரிக்க காலை. கண்விழித்தால் சுற்று 1-க்கான கேள்விகள் வந்திருந்தது. மொத்தம் 5 கேள்விகள். அதில் மூன்றுக்கு பதில் வேற சொல்லி முடித்துவிட்டார்கள். சரிதான் நமக்கு இந்த போட்டி சரிவரப் போவதில்லை என்றே முடிவு கட்டியாகிவிட்டது. பின் குமரனுடம் ஆலோசித்து இரண்டு தவறான விடைகளுக்குப் பின் ஒரு சரியான விடையை சொல்லியாகி விட்டது. நம்ம ர.ம.த (இப்போதைக்கு இப்படி சொல்லறேன், அவங்க பேர் போட அனுமதி தந்தாங்கனா அவங்க பேரைத்தான் படிக்கணும். ஓக்கே.) வேற தனிமடலில் விடையை சொல்லிப் போட சொன்னார்கள். மீதமிருந்த கேள்விக்கு விடையை தேடி நம்ம நண்பர் குழாமை முடுக்கி விட்டேன். ஐந்தே நிமிடங்களில் விடை வந்தது. ஆனால் நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். பார்த்து போடுவதற்குள் கௌசிகன் முந்தி விட்டார். மன்னியுங்கள் பதில் தந்த நண்பரே. ஆகவே கிடைத்தது 10 புள்ளிகள். விட்டது 40.

சுற்று 2
தலைவரை பத்தி பேசி உசுப்பேற்றி விட்டார்கள் நிலா. உடன் நண்பர்கள் குழாமுடன் ஆலேசனை. நல்லதாக ரெண்டு ஐடியாக்கள் கிடைக்க, அதை செய்வதற்குள் செல்வன் அதை ஒட்டியே ஒரு விளம்பரம் போட, மீண்டும் வரைபலகைக்கு. இந்த சுற்றுக்கு நேரம் இருக்கிறதே. பிறகு வரலாம் என்று விட்டோம். நடுவில், வந்தேண்டா பால்க்காரனை உல்டா செய்து குமரனுக்கு அனுப்பினேன். அவர் நமது தமிழை சரி செய்து, அவர் பங்குக்கு வார்த்தைகளைப்போட்டு விட்டு இதனை அனுப்பி விடலாம் அல்லது முதலில் ஆன மாதிரி வேறு யாராவது இதைப்போல் செய்துவிடப்போகிறார்கள் என சொன்னார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இது மிக அருமையாய் வந்திருக்கிறது என நாங்களே பாராட்டிக் கொண்டு அனுப்பி விட்டோம். அதன் பிறகு நண்பர்கள் திட்டியதை அச்சிலேற்ற முடியாது. விட்டு விடுவோம். நல்ல வேளை இம்முடிவு வரும் பொழுது எங்கள் அணி வலுவான நிலையில் இருந்ததால் தப்பித்தோம்.

சுற்று 3
இது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. குமரனும் நானும் பேசி பதிலை அனுப்பி விட்டோம். நமது ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். கூடவே மேலும் இரு விடைகளையும் போட்டோம். சிக்கலில்லாத சுற்று. குமரன் சொன்னது போல் இந்த சுற்று தான் எங்கள் தன்னம்பிக்கையை மீட்ட சுற்று. நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்தது கலந்து பேசிக்கொள்ள உதவியாய் இருந்தது. இச்சுற்றின் பின்னூட்டத்தில்தான் ர.ம.தவிற்கு அப்பட்டம் கிடைத்தது! இச்சுற்றின் இறுதியில் நாங்கள் மல்லிகை அணியுடன் கூட்டாக இரண்டாமிடத்தில் இருந்தோம்.

சுற்று 4
மீண்டும் 5 கேள்விகள் இந்திய பகல் நேரத்தில். ஆனால் சுற்று ஒன்றின் அனுபவம் காரணமாக அதிகாலையிலேயே எழுந்தாயிற்று. அதற்குள் தேவ் இரு பதில்களைப் போட்டு இருந்தார். நானும் கஷ்டப்பட்டு ஒரு பதிலைப் போட்டேன். மீதம் இருந்தது இரு கேள்விகள். என்ன தேடியும் விடைகள் கிடைக்கவில்லை. குமரன் நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் அனுப்பி விடைகளை வாங்குகிறேன் என்றார். வாங்கியும் விட்டார். அதில் இவரைத் தவிர வேறு யாருமே மெயில் அனுப்பவில்லை என்று இருவரும் சொன்னதுதான் இவரின் முயற்சிக்கு சர்டிபிகேட். நிலா சொல்வது போல் இதுதான் இனிஷியேட்டிவ். பலருக்கும் இந்த சுற்று பிடிக்கவில்லை. ஆனால் நிலாவின் கருத்துகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆக மொத்தம் எங்களுக்கு 30 மதிப்பெண்கள். முக்கியமாக முதலிடத்தில் இருந்த சாமந்தியினருக்கு எதுவுமில்லை. இப்பதிவின் பின்னூட்டங்களை கட்டாயம் படியுங்கள். குமரனும் நானும் ஆடிய பிள்ளையார், முருகன் விளையாட்டு எனக்குப் பிடித்தது.

சுற்று 5
அணியினர் இருவரும் கலந்தாலோசித்தால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதான கேள்விகள். நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்ததால் மிகச் சுலபமாக முடித்துவிட்டோம். விதிமுறைகளை சரியாகப் படிக்காததால் ஒரு 5 புள்ளிகள் கோட்டை விட்டேன். குமரனின் பெருந்தன்மை என்னை திட்டவில்லை. அது மட்டுமில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் 'இங்கேயும் கொஞ்சம் அவசரப்பட்டு 5 புள்ளிகளைத் தவறவிட்டுட்டோம். ' என எழுதி என் தவறில் அவரும் பங்கெடுத்துக்கொண்டார். Hats Off Kumaran. இருந்தாலும், இச்சுற்றின் முடிவில் நாங்கள் முன்னணியில்.

சுற்று 6
இதுதாங்க நம்ம சுற்று. 5-ம் சுற்று வரும் போழுதே இதுவும் வந்துவிட்டது. ஆனால் அதைப் போடும் மும்முரத்தில் இதை கவனிக்கவில்லை. ஐந்தாம் சுற்றை முடித்துவிட்டு பார்த்தால் ஒரு வோட்டு கூட விழவில்லை. நிலா வேறு பிரச்சாரம் செய்யலாம் என்று முடுக்கிவிட்டார். என்ன செய்வது என்று ஆலோசனை. குமரனுக்கு அதிகம் பேரைத்தெரியுமென்பதால் அவர் வீடு வீடாகச் சென்று வோட்டு கேட்பது என்றும், நான் பதிவு போட்டு பொது மக்களை அழைப்பது என்றும் முடிவானது. நண்பர்களையும் வோட்டு சேகரிக்க அழைத்தோம். இந்த உத்தி சரியாக வேலை செய்ததால் மற்ற அணியினராலும் காப்பியடிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் இரண்டாம் சுற்றின் முடிவுகள் தெரியாததால், இரண்டாமிடத்திலிருந்த சாமந்தியை விட குறைந்தபட்சம் 25 வாக்குள் பெற்றால் போட்டியை வென்றுவிடலாம் என கணக்கிட்டு, இதுதான் நமது இலக்கு என செயல்பட ஆரம்பித்தோம். நான்காம் சுற்றில் உதவிய சிவாவும், மதியும் முதலிரண்டு வோட்டுக்களை பதிய இச்சுற்று எங்களுக்கு சாதகமாகவே தொடங்கியது. செல்லக்கூடிய வோட்டுகளில் முதல் 20 வோட்டுகள் எங்களுக்கு விழுந்தது ஆச்சரியம்தான். சாமந்தியினரை விட 22 வாக்குள் மட்டுமே அதிகம் பெற முடிந்தாலும், (எங்கள் இலக்கு 25) இச்சுற்று எங்களுக்கு மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நிலா சொல்லியது போல் உழைப்பில்லாமல் இவ்வெற்றி வந்திருக்க வாய்ப்பேயில்லை. இதில் குமரனின் பங்கு அதிகம். சாமந்தியினர் இருவரும் வலையுலகிற்கு புதிது என்பதால் அவர்களுக்கு அதிகம் பேரைத்தெரியாமல் போனது அவர்களின் பலவீனமாய் ஆனது. எங்களுக்கு பெரும் பின்னடைவைத் தந்த இரண்டாம் சுற்றிற்கு மாற்றாக அமைந்தது இச்சுற்று.

வெற்றி! வெற்றி! இப்படியாக போட்டியை வென்றாகியாயிற்று.

போட்டிக்கு பின்

இதுவே பெரிய பதிவாய் போனதால் ஒரு வரி செய்திகள் வடிவத்தில்.

முதலாவது, இந்த போட்டியை, நினைத்து, நடத்தி, வெற்றிகண்ட நிலாவிற்கு பாராட்டுகள். கூடவே நம்ம குமரனுக்கும், வோட்டு போட்ட மக்கள்களுக்கும், உதவிய நண்பர்களுக்கும் எனது நன்றி. (ஆமாம் இப்பதான் பார்த்தேன். உங்க அறிமுக பதிவுல 'தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.'ன்னு எழுதியிருக்கீங்களே நிலா, நாங்க போட்டி எல்லாம் நடத்தி, பின்னூட்ட சாதனையெல்லாம் பண்ணினது உங்க கண்ணில் படலையா?)

நல்ல நண்பர்களின் அறிமுகம். முக்கியமாக தருமி அய்யா. (ஆமாம் அய்யாதான், தருமி அய்யா!). அது மட்டுமில்லாது தெரியாத பலருக்கு நம்மை தெரிய வைத்த ஒரு சந்தர்ப்பம்.

நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்த ஒரு பலகீனத்தை பலமாய் மாற்றி வெற்றி கண்டதில் கொஞ்சம் கூடுதல் பெருமை.

நமக்கும் புதிர்கள் அல்லாத சில வேலைகளைச் செய்ய முடியும் எனக்கண்டது ஆச்சரியம்தான். இதனால் புதிர்களிலிருந்து கொஞ்சம் விலகி வேறு பதிவுகளும் போடலாமென ஒரு ஐடியா. என்ன சொல்லறீங்க?

வீட்டில் இரு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கு பரிகாரமாக, நிலா பரிசாக தரும் DVDயை துணைவியாருக்கு பிடித்ததாய் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு மாதிரி சரிகட்டிவிட்டேன். (அய்யய்யோ, நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டேனே)

நிலா, தருமி, தேவ் எல்லாரும் சேர்ந்து இ.கோ., மேஸ்திரி, கொளுத்து என்றெல்லாம் அழைக்கப்பட்ட நம்மை கொத்ஸ் ஆக்கிவிட்டார்கள். இப்படியே போய் தக்காளி கொத்ஸு, கத்திரிக்காய் கொத்ஸு என மாறி, கடைசியில் யோவ் தக்காளி, என்ன குண்டு கத்திரிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படாமல் இருந்தால் சரி. :)

நாம் ரெகமெண்ட் செய்த கௌசிகனும், ஹரிஹரன்ஸும் நன்றாக விளையாடி மானத்தை காப்பாற்றி விட்டார்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.

இரண்டு நாட்களாக, இந்த போட்டியினால் செய்யாமல் விட்ட பணிகளை செய்ய வேண்டி வந்ததாலும், தூங்காமல் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட வேண்டியிருந்ததாலும், இப்பதிவு கொஞ்சம் லேட். மன்னிச்சுக்கோங்க. மறக்காம நிறையா பின்னூட்டம் போடுங்க. ஓக்கேவா?