Thursday, November 29, 2007

கலைஞரே, உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம்!

நார்மலா, நம்ம பதிவுலகில் சில டாபிக்குகள் எல்லாம் உடனே பல பேர் பதிவு போடற மேட்டராத் தெரியும். அது போலவே அந்தந்த சீசனில் நிறையா பேரு அந்த தலைப்பில், அந்த விஷயத்தைப் பத்தி பதிவு போடுவாங்க. இந்த தலைப்பா இருந்தா அதுக்குப் பதிவு போட ஒரு குழு, அந்தத் தலைப்பா இருந்தா அதுக்கு வேற ஒரு கும்பல் என எழுதப்படாத விதிகளும் உண்டு. இதில் ஆதரவுப் பதிவுகள், எதிர்ப்புப் பதிவுகள் எல்லாம் வரும்.

இன்னைக்கு அந்த மாதிரி ஒரு பரபரப்பான நாளா இருக்கும் அப்படின்னு எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லாததால நானே இந்தப் பதிவைப் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இப்போ ஒரு முறை தலைப்பைப் படிச்சுக்குங்க. உடனே பிளட் பிரஷர் எல்லாம் ஏறி என் மூதாதையர் பத்தியும் என் பனியனுக்குள் நெளிவது பத்தியும் பேசத் தயாராகும் முன்னரே சொல்லிடறேன். இது நான் சொன்னது இல்லை. இதைச் சொன்னது மலேசியாவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான நஸ்ரி அசீஸ் என்பவர்.

மலேசியாவில் சில கோரிக்கைகளை முன் வைத்து ஹிந்திராப் என்ற அமைப்பின் மூலம் ஒரு போராட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த பதிவும் அது பத்தி இல்லை. ஆனால் போலீஸர் கண்ணீர் புகை குண்டுகள் வீசிக் இக்கூட்டத்தினரைக் கலைத்தது பற்றியும், கிட்டத்தட்ட 250 பேரை கைது செய்தததையும் தமிழக முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தக் கூட்டதினரை நடத்திய விதம் குறித்த தம் வருத்தத்தைத் தெரிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மலேசிய அமைச்சர் அசீஸ் 'Tamil Nadu Chief Minister M Karunanidhi should "lay off" ' எனச் சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க எனப் பொருள்படும்படி பேசி இருப்பது மிகவும் மரியாதை குறைவாகவே கருத வேண்டியிருக்கிறது. இது மலேசியா. அவரது இடம் தமிழகம். அங்கே இருக்கும் பிரச்சனைகளை அவர் கவனித்தால் போதும் எனப் பொருள்படும் படியாகப் பேசி இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

தமிழர்களைப் பற்றி கவலைப்பட தமிழகத்தின் முதல்வருக்குத் தகுதி கிடையாதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படித் தரகுறைவாக விமர்சித்திருப்பதற்கு நாம் அனைவரும் நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து மலேசியாவில் இருக்கும் பதிவர்களோ, தமிழகத்தில் இருக்கும் பதிவர்களோ பதிவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. மற்ற விஷயங்களுக்கு கொந்தளித்து எழுபவர்கள் இதற்குச் சும்மா இருப்பதன் பின்புலம் புரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் மலேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கப் பட வேண்டியது. இதற்காக இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போராட்டம் குறித்து அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் எந்த நாட்டு குடிமக்களும் தம் அமைதியான முறையில் தம் கருத்துக்களை வெளியிடும் உரிமை இருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு ஒரு முறை வெளிநாட்டு வாழ் இந்தியர்களைப் பற்றி நான் எழுதிய பொழுது, வேறு ஒரு நாட்டின் குடிமக்களாக மாறிவிட்ட பின் அவர்கள் இந்தியர்கள் இல்லை என கருத்துத் தெரிவித்தவர்கள், இன்று மலேயா வாழ் தமிழர்களுக்காக கலைஞர் குரல் கொடுத்ததைத் தவறென்று சொல்வார்களா எனத் தெரியவில்லை.

Friday, November 16, 2007

சா(ை)ல சிறந்தது!

என்னாத்த சொல்ல? இந்த மாசம் இந்த போட்டோ பதிவு குழுவினர் குடுத்து இருக்கும் தலைப்பு "சாலை". நிறையா பேர் ரொம்ப ஆர்வமா கலந்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஜோதியில் என்னையும் சேரச் சொல்லி நம்ம வெண்பா வாத்தி படுத்தி எடுக்கறாரு. நாமளும் படம் எடுக்கத் தெரியாத விஷயத்தை வெளிய சொல்ல வேண்டாமேன்னு ரொம்ப வேலை அது இதுன்னு பந்தா விட்டா, யோவ் ரோட்டைதானே போட்டோ எடுக்கணும் சும்மா வீட்டு வாசலில் போயி எடுத்து அனுப்புமய்யா அப்படின்னு அன்பா ஆணையிட்டுட்டாரு.

சரின்னு நானும் ஒரு நாள் காலையில் ஆபீஸ் போகும் முன் காமிராவை எடுத்துக்கிட்டு போய் நின்னா, பனி விழும் நகர்புறம், தெரியாதே எதிர்புறம் அப்படின்னு பாலுமகேந்திரா படம் மாதிரி ஒரே பனியா இருக்கு. சரின்னு ஒரு படம் எடுத்தாச்சு.


அப்புறம் அந்த இடத்தையே ரெண்டு நாள் கழிச்சு பளிச்சுன்னு வெயில் அடிக்கும் போது போய் எடுத்தேன். எடுத்துட்டு தங்கமணி கிட்ட காமிச்சா ரோட்டை படம் எடுக்கச் சொன்னா என்ன இது வீட்டைப் படம் எடுத்துட்டு வந்து நிக்கறீங்க? ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியுமான்னு வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பிச்சுட்டாங்க.
சரி அவங்க சொல்லிட்டாங்களேன்னு இந்தப் பக்கம் வந்து ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் படம் எடுத்துப் போட்டாச்சு. இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் எல்லாம் பச்சை யூனிபார்மை கழட்டிவிட்டு கலர் கலராய் ட்ரெஸ் பண்ணிக் கொண்டு அட்டகாசமாய் இருப்பதால் சாதாரண சாலைகளும் சும்மா சூப்பரா இருக்கு. கொஞ்சம் பிரயத்தனப்பட்டிருந்தால் நல்ல லொகேஷனாய் போய் படம் பிடித்திருக்கலாம். ஆனால் நம்ம சோம்பேறித்தனம்தான் ஊரறிஞ்சதாச்சே!!நமக்கு இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் கட் பேஸ்ட் எல்லாம் தெரியாது. அதனால எடுத்த படத்தை அப்படியே போட்டுடறேன். நடுவர்களா, கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்கப்பா.

Monday, November 12, 2007

ஸ்ருதி சேரா சங்கீதம்

இதனை எழுதும் பொழுது பேசாப் பொருளைப் பேச துணிந்த உணர்வு எனக்கு. எழுத வேண்டுமா வேண்டாமா? இதனை நான் எழுதுவதை இசை ஆர்வலர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தெரியவில்லை இருந்தாலும் எழுதுகிறேன். கர்நாடக சங்கீதம் ஒரு சிறந்த நுண்கலை, அதிலும் கடந்த பத்து இருபது வருடங்களில் பலருடைய பங்களிப்பால் வெகுவாக வளர்ந்து வரும் கலை. கடந்த சில வருடங்களாக இதில் சாதி மத ரீதியாக இருக்கும் பாகுபாடுகள் பற்றி பலர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். இது பொதுவாக சமுதாயத்தில் காணப்பட்ட பாகுபாடுகளின் பிரதிபலிப்புதான். அதே சமயம் சாதி மதங்களைத் தாண்டி சில மிகப் பெரும் இசையாளர்களிடையே குரு சிஷ்ய உறவோ அல்லது பாடுபவர்கள், உடன் வாசிப்பவர்கள் என்ற உறவோ உறுதி பெற்று இருந்ததைப் பற்றிய புரிதலும் நம்மிடையே முழுதாக இல்லை.

ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்று நம் கண் முன் தென்படும் ஒரு மிகப் பெரும் பாகுபாடு கர்நாடக சங்கீத உலகில் பெண்களுக்கு எதிராக நடத்தப் படும் பாகுபாடுதான். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால் அன்றும் சரி இன்றும் சரி தாங்கள் ஒரு பெண் பாடகருக்கு உடன் வாசிப்பதையோ அல்லது தனக்கு ஒரு பெண் கலைஞர் உடன் வாசிப்பதையோ மறுக்கும் கலைஞர்கள் அனேகம் பேர். முற்காலத்தில் இருந்த சமுதாய கட்டுப்பாடுகளும், அன்று இருந்த மனத்தடைகளும் பெண்களுக்கு சுதந்திரம் தராத நிலையில் இது போன்ற சூழம் ஏற்பட்டிருக்கிறது. இத்தடைகளை மீறி வந்தவர்கள்தான் இத்துறையில் வெற்றி பெற்ற பெண் கலைஞர்கள். ஆனால் இந்த பாகுபாடும் இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாது அடுத்த தலைமுறையிடமும் பரவி வருவதுதான் வேதனை.

இன்று பல ஆண் கலைஞர்கள் தமக்கென ஒரு பெயர் கிடைக்கும் வரை பெண் கலைஞர்களுக்கு உடன் வாசிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமானால் தன்னை ஆண் கலைஞர்கள் உடன் வாசிக்க அழைக்கும் வரை பெண்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் தான் இனி பெண்களுக்கு பக்க வாத்தியமாக செல்லப் போவதில்லை என்ற தீர்மானத்தை பெருமையுடனே சொல்லிக் கொள்கின்றனர். இத்தகைய தீர்மானங்களை வரவேற்கும் விதமாகவே இன்றைய சூழ்நிலை இருக்கிறது. இதற்குப் பின்னால் பெரிதாக அரசியல் அல்லது சமுதாயக் காரணங்கள் எல்லாம் இல்லை. தனக்கு வாய்ப்புகள் தேவை என்ற வரையில் பெண்களுடன் வாசிக்கத் தயங்காத இவர்கள் தமக்கென ஒரு பெயர் வந்த பின் பெண் கலைஞர்களைக் கழற்றி விட்டு விடுகின்றனர். இன்று எல்லா இடங்களிலும் இருக்கும் வேலை முடிந்த பின் தூக்கி எறிந்து விடும் (Use and Throw) கோட்பாடுதான் இங்கேயும் கடைபிடிக்கப் படுகிறது.

இதுவே பெண் பக்க வாத்திய கலைஞர்களை எடுத்துக் கொண்டால், ஆண் கலைஞர்களுக்கு இணையான தகுதி இருந்தாலும் தமக்கு ஆண் பாடகர்கள் சரியான வாய்ப்பு தரவில்லை என்பது இவர்கள் குறை. இவர்கள் பெண்கள் என்பதாலே இவர்களுக்கு வாய்ப்பு குறைவது உண்மைதான். ஒரு ஆண் பாடகராக நான் இதற்குச் சொல்லக் கூடிய ஒரே காரணம் - ஆண் ஆதிக்க மனப்பான்மை!

இதுக்கு ஆண் கலைஞர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்? அதிக அளவில் கூறப்படக் கூடிய காரணம் - பெண்களின் ஸ்ருதி மிகவும் மேல்ஸ்தாயியாக இருப்பதால் வயலினாகட்டும் மிருதங்கமாகட்டும் அந்த ஸ்ருதியில் நன்றாக ஒலிப்பதில்லை என்பதுதான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒரு சரியான காரணமாக இருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் இதன் அபத்தம் புரியும். இவர்கள் முதலில் பெண்களுக்கு வாசிக்கும் பொழுது இது ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? அல்லது ஆண் பாடகர்களில் மேல்ஸ்தாயியில் பாடுபவர்களுக்கும், பல விதமான கருவிகள் வாசிப்பவர்களுக்கும் இவர்கள் வாசிப்பதில்லையா? அப்பொழுது இது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லையா? ஆக இந்த காரணம் சரியான ஒன்றாகத் தோன்றவில்லை.

மற்றொரு பிரபலமான காரணம் ஒரு பெண் பாடகரின் கச்சேரி நல்ல விதமாக நடந்தால் அதற்கான பெருமை அந்த பெண் கலைஞருக்கே போய் சேருகிறது என்றும் தான் எவ்வளவு நன்றாக வாசித்தாலும் தமக்கு எந்த விதமான பெருமையும் வருவதில்லை என்பார்கள். இது ஆண் பாடகர்களுடன் வாசிக்கும் பொழுதும் நிகழக்கூடியதுதானே? அப்பொழுது மட்டும் பரவாயில்லையா? பொதுவாக பெண் பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசித்தால் தமக்கு அந்தஸ்து கிடைப்பதில்லை என்றும் மேலும் ஒரு படி சென்று பெண் பாடகர்களுக்கு வாசிக்காவிட்டால்தான் தனக்கு அந்தஸ்து என்றும் கூடச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு சரியான அணுகுமுறையே இல்லை. அந்தஸ்து என்பது ஒருவரது திறமையை சக கலைஞர்களும் பொது மக்களும் உணர்ந்து கொள்வதால் வருவதே தவிர யாருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் என்பதால் இல்லை.

இன்னும் சொல்வார்கள் பெண் கலைஞர்களுக்கு வாசிக்கும் பொழுது சுதந்திரமாக வாசிக்க முடிவதில்லை என்று. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு குறிப்பிட்ட முறையில் வாசிக்க வேண்டும். அது பெண் பாடகிகளோடு வாசிக்கும் பொழுது முடிவதில்லை. அதனால் என்ன? ஆண் பாடகர்களில் பல விதமாக பாடுபவர்கள் இல்லையா? அதற்கு ஏற்றால் போல் வாசிக்க முடியும் பொழுது இப்படி வாசித்தால் மட்டும் தவறா? பாடகர்கள், அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தாங்கள் உடன் வாசிப்பவர்களை உத்தேசித்து தாங்கள் பாடும் விதத்தை சிறிதே மாற்றிக் கொள்வது இல்லையா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதெல்லாம் இயற்கையான சிறு மாற்றங்கள்தானே?

அடுத்ததாக பெண்கள் ஏன் ஆண்கள் போல் பாட வேண்டும்? ஒரு காலத்தில் பெண் பாடகிகளுக்கு கிடைக்கப் பெற்ற பெரும் பாராட்டு அவர்கள் ஆண்கள் போல் பாடுகிறார்கள் என்பதாகும். என்னளவில் இது ஆண் ஆதிக்கத்தைப் பறைசாற்றும் கடும் சொற்கள் இவை. பெண்களின் இசை ஆண்களின் இசையை விட வித்தியாசமாகத்தான் இருக்கும், இருக்கவும் வேண்டும். நாம் இந்த வித்தியாசத்தைப் போற்ற வேண்டும். ஆகையால் பெண் பாடகர்களுக்கு உடன் வாசிக்கும் பொழுது பக்க வாத்தியக்காரர்களும் வித்தியாசமாகத்தான் வாசிக்க வேண்டும். பெண் பாடகர்களுக்கு ஆண்களை ஒத்த இசை ஞானம் இருப்பதை மறுக்க முடியாது. இதனை எந்த ஆண் பக்க வாத்தியக்காரரும் மறுக்கவும் மாட்டார்கள். இது சரி இல்லை எனச் சொன்னால் ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களை விட அதிக திறமையும் ஞானமும் உடையவர்கள் என ஆகி விடும். இது நம்பக்கூடிய விஷயமா என்ன?

பெண் பாடகர்கள் ஆண் பக்க வாத்தியக்காரர்களை சரி வர நடத்துவதில்லை என்பது என்னிடமே சிலர் சொல்லி இருக்கும் ஒரு குற்றச்சாட்டு. அதையும் பார்க்கலாம். ஒரு பக்கவாத்தியக்காரரிடம் ஒரு ராகத்தை மேலோட்டமாகவோ அல்லது தனியா வாசிக்கும் நேரத்தைக் குறைக்கச் சொன்னாலோ அது தவறுதான். அதைச் செய்தது ஆண் பெண் என்ற பேதமே கிடையாது. ஆனால் இதை ஒரு பெண் செய்தால் அது பெருங்குற்றமாக கருதப்படுகிறது. நான் ஒரு ஆண் பக்கவாத்தியக்காரரிடம் இப்படி ஒரு உதவி கேட்டால் அது கோரிக்கை ஆனால் அதுவே ஒரு பெண் பாடகர் கேட்டால் அது தவறு எனப் பார்ப்பது சரியா? இதையே நான் பாடும் பொழுது என்னுடன் வாசிக்கும் ஒரு பெண் பக்க வாத்தியகாரரிடம் இப்படி நடந்து கொண்டால் அது தப்பு இல்லையா? இது போன்ற தவறுகளை இரு பாலருமே செய்யலாம். அது யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதுதான் நான் சொல்ல வருவது.

ஒரு பெண் பக்கவாத்தியக்காரருக்கு ஆண் பக்கவாத்தியக்காரர்கள் அளவிற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நல்ல திறமையுள்ள பெண் கலைஞர்களை உதாசீனப்படுத்துவதற்கு எந்த விதமான காரணமும் கிடையாது. ஆனால் இன்று பெண்களுக்கு வாசிக்காத ஆண் கலைஞர்களைத்தான் நமக்கு பக்கவாத்தியம் வாசிக்க விரும்புகிறோம். இது ஒரு மடத்தனமான மனோநிலை என்பதைத் தவிர என்ன சொல்ல? நம்மால் திறமையுள்ளவர் என கணிக்கப்பட்ட அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல். இதுதான் என் நிலைப்பாடு.

இவ்வளவு எல்லாம் பேசுகிறானே, இவன் ஒரு பக்கவாத்தியக்காரனா? இவனுக்கு என்ன தெரியும்? என்ற கேள்விகள் வரும். நியாயமான கேள்விதான். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். சில பெண் பாடகர்கள் பாடிக் கேட்கும் பொழுது இவர்களுக்கு ஒரு நாளாவது நாம் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் கிடைக்காதா என நினைப்பேன் என்பதுதான். அது மட்டுமில்லாமல் எனக்காக எத்தனையோ பெண் பக்கவாத்தியக்காரர்கள் வாசித்து இருக்கின்றனர். அவர்கள் எனக்கு வாசித்த ஆண் பக்கவாத்தியக்காரர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதைச் சொல்வதிலும் எனக்குத் தயக்கம் கிடையாது.

நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கான விடைகள் நம்முள்ளேயே கிடைக்கும். இதைப் பற்றிப் பேசப் படுவதே விலக்கப்பட்ட ஒன்றாக இருப்பதற்கான காரணம் என்ன? தான் செய்வதில் தவறொன்றும் இல்லை என்ற நம்பிக்கையினால்தான் இது பற்றி பொது இடங்களில் பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லையா? படித்த நம்மால் நம் நம்பிக்கைகள் பற்றி தைரியமாக பேச முடியாதா? அதைவிட நாம் செய்வது தவறு என்ற புரிதல் வரும் பொழுது இதுவரை செய்தது தவறென்று ஒத்துக் கொள்ள முடியாதா? இந்த விஷயத்தில் நம் நிலைப்பாடு தவறென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இதெல்லாம் நான் எழுதினது இல்லை. பிரபல கர்நாடக சங்கீதப் பாடகர் திரு டி.எம்.கிருஷ்ணா சமீபத்தில் ஹிந்து நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கம். உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லி விடுங்களேன்!

Sunday, November 04, 2007

குயி...குயி...குயி...குயிஜு! விடை தரும் தருணம்!

ஆச்சுங்க! இன்னும் ஒரு நாள் கூட நம்மால மேனேஜ் பண்ணி இருக்க முடியாது. அவ்வளவு ரெஸ்பான்ஸ். இந்த புதிர் போடும் போது சொன்னேன் சில நண்பர்களிடம் இந்த கேள்விகள் சிலதை ப்ரிவ்யூ காண்பித்ததாக. அதில் பெனாத்தலாரும் ஒருவர். அவர் கேள்விகளைப் பார்த்துட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாம் கேள்விகளைப் பார்த்துட்டு ஓடிப் போயிடுவாங்க அப்படின்னு கருத்து சொன்னர். நானும் அந்த பயத்தோடதான் போட்டேன். ஆனா இவ்வளவு பேர் இவ்வளவு ஆர்வத்தோட கலந்துப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட 40 - 50 பேர் வந்து கலந்துக்கிட்டாங்க. வந்த பின்னூட்டங்களும் அதுக்கு நான் சொன்ன பதிலும் எனப் பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட 1200 பின்னூட்டங்கள். அதுவும் எல்லா பதில்களையும் படிச்சு, சரி பார்த்து, மார்க் போட்டு, பதில் சொல்லி, அடுத்த பாகத்தை ரெடி பண்ணி என பெண்டு நிமிர்த்து விட்டது.

இனிமேலும் இது தனியாளாகச் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. இவ்வளவு ஆர்வம் இருக்கிறதுனால இதையும் ஒரு குழுவா சேர்ந்து செய்யலாம் எனப் பார்க்கிறேன். இதுக்காக புதிர்கள் என்ற பெயரில் ஒரு புதிய பதிவு ஒண்ணு தொடங்கி வைத்திருக்கிறேன். இதனைப் பற்றிய விபரங்கள் பின்னர் வெளிவரும். இவ்வளவு ஆர்வமாக நடந்த புதிர் போட்டியின் பொழுது இதனைச் சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.

மீண்டும் இப்போட்டிக்கே வருவோம். இதுவரை பத்து பேர் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் கூறி 54 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முதன்முதலாக முழு மதிப்பெண்கள் பெற்றவர் பெனாத்தல் சுரேஷ்தான். உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் பெனாத்தலாரே! வெற்றிக்குப் பரிசு என்ன எனக் கேட்ட உங்களுக்கு எனது பதில் - அடுத்த போட்டியில் நீங்கள் கேள்வி கேட்கலாம், க்விஸ் மாஸ்டராக இருக்கலாம். :)

கேள்விகளைப் பல இடங்களில் தேடித்தான் எடுத்தேன். நமக்குத் தெரியாத விஷயங்களில் கேள்வி கேட்பது எவ்வளவு தப்பான காரியம் எனத் தெரிந்து கொள்ள வைத்தது இப்போட்டிகளில் இரு கேள்விகள். முதலில் வரலாறு 1. ஹிந்தி சினிமா பற்றி அதிகம் தெரியாத நான் இக்கேள்வியைக் கேட்டு இருக்கக் கூடாதுதான். இதில் அமிதாப் மற்றும் இந்திராகாந்தி ஆகியோரை சரியாகச் சொன்ன பலரும் தயாரிப்பாளராக பல பெயர்களை முன்வைத்தனர். அதற்குப் பல ஆதாரங்களையும் தந்தனர். சிலர் நான் எதிர்பார்த்த விடையையும் தந்ததால் அதற்கு மட்டுமே முழு மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்தேன். இதற்கு நடுவே சரியான விடை எது என நான் கூகிளுகையில் அப்படி ஒரு சிபாரிசு கடிதமே நான் வாங்கவில்லை என அமிதாப் சொன்ன ஒரு செவ்வியும் கிடைத்தது. இந்த முறை க்விஸ் மாஸ்டரின் முடிவே சரியானது என அழுகுணி ஆட்டம் ஆடினாலும் அடுத்த முறை இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்த கேள்வி விஞ்ஞானம் 5 - போபியா பற்றிய கேள்வி. நான் எதிர்பார்த்த விடை ஹைட்ரோபோபியா, ஆனால் விக்கி சுட்டியுடன் அனேகம் பேர் போட்டோபோபியாவும் சரியான விடையே எனச் சொன்னதால் அதற்கும் மதிப்பெண் தந்துவிட்டேன். மருத்துவர் இராமநாதனோ இவை எல்லாமே தவறு. சரியான விடை வேறொன்று எனச் சொல்லி அது பற்றி விளக்க முயன்றார். அது பற்றி அவர் விக்கியில் விரிவாக எழுதுவார் என நம்புகிறேன். இத்துறையிலும் நமக்கு அதிகப் பரிச்சியம் இல்லாததால் விளைந்த குழப்பம் இது. அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

பாகம் 4ல் நான் நன்றி சொன்ன ஆறு பேர் முறையே - டுபுக்கு, ஜீவ்ஸ் என்ற ஐயப்பன், கூகிள், பெனாத்தல் சுரேஷ், என் தங்கமணி,ஆர்வமாய் கலந்து கொண்ட பதிவர்கள். இதில் கடைசிக் கேள்விக்கு விக்கி பசங்க, சற்று முன் குழு, வ.வா. சங்கம் எனப் பல பதில்கள் வந்தது ஆச்சரியம்தான். ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு தன்னடக்கம் கூடாது!

மீண்டும் ஒரு முறை ஆர்வத்துடன் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக அதிக தகவல்களுமாக தந்த பாலராஜன் கீதா அவர்களுக்கும் வந்து பிழை திருத்தங்கள் சொன்ன ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி. பாலா, மீதி இருக்கும் கேள்விகளுக்கும் உங்கள் பாணிப் பதில்கள் தேவை.

ஆஹா, இம்புட்டு நேரம் பேசிட்டு விடைகளைச் சொல்ல மறந்துட்டேனே. எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் இங்க இருக்கு. இறுதி மதிப்பெண் நிலவரம் இங்க இருக்கு. பார்த்துக்குங்க.

அடுத்த முறை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றியுடன் விடைபெறுவது
உங்கள்
கொத்ஸ் .... கொத்ஸ்.... கொத்ஸ்....

Thursday, November 01, 2007

என் வால் ஏன் ஆடுது? - க்விஸ் பாகம் 4

என்னடா இவன் போன பதிவிலேயே கேள்விகள் எல்லாம் கேட்டாச்சுன்னு சொன்னானே. இப்போ என்னமோ புதுசா நான்காம் பாகத்தோட வந்திருக்கானேன்னு பார்க்கறீங்களா? இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என நான்கு பதிவுகள் போட்டாச்சு. நல்ல வரவேற்பைப் பெறாம இருந்தா அப்படியே ஓடிப் போய் இருக்கலாம். ஆனா எல்லாரும் ஆர்வத்தோட வந்து கலந்துக்கிட்டதால, வெள்ளிக்கிழமையும் ஒரு பதிவு போட்டா நட்சத்திர வாரத்துக்கு அப்புறம் தினம் ஒரு பதிவு போட்ட வாரம் எனச் சொல்லிக்கலாமே. அதான் இந்தப் பதிவு.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த வாரம் நல்லா போனதுக்கு சில பேர் காரணமா இருந்திருக்காங்க. அவங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்தப் பதிவு. இப்போ தெரியுதா என் வால் ஏன் ஆடுதுன்னு! 'அட நாயே!, இதுக்காடா இம்புட்டு பில்டப்!' அப்படின்னு திட்ட வந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நிறையா பேருக்கு நன்றி சொல்லணும். இருந்தாலும் நம்ம ஸ்டைல் தலைப்புக்கு ஆறு கேள்வி என்பதால் அவர்களில் ஆறு பேருக்கு இங்க நன்றி சொல்லப் போறேன். அதுவும் அவர்களைப் பற்றிய கேள்விகளாக. அவர்களைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம்.

நன்றி நவில்தல்

1) இந்த கேள்விகள் தயார் செய்யக் காரணமாக இருந்தது இவர் என்னிடம் வேறு ஒரு இடத்தில் பயன்படுத்த கேள்விகள் தயார் செய்து தருமாறு கேட்டதுதான். இவரின் பதிவைப் பார்த்துத்தான் நானும் பதிவெழுத வந்ததே என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். எனது பள்ளி ஜூனியரான இவரின் நகைச்சுவை ததும்பும் எழுத்திற்கு ஒரு தனி வாசக வட்டம் உண்டு. இவரின் சீடர் என்றே புனைப்பெயர் வைத்துக் கொண்ட ரசிகர் உட்பட.

2) முதல் பதிவிலேயே சொல்லி இருந்தேன், தமிழில் கேள்விகளைத் தயார் செய்தவர் ஒரு சிறப்பாசிரியர் என்று. இவருக்கு கற்றுத் தருவதில் பெருத்த ஆர்வம். வெண்பாவாகட்டும், புகைப்படமாகட்டும் இவர் கற்றுத்தர முதல் ஆளாக நிற்பார். இரு பெயர்களில் எழுதி வரும் இவரை தொடர்ந்து எழுத வைப்பதுதான் சவாலான வேலை, காடு மலை கடந்து வந்தோம் சாமியேன்னு பாட்டெல்லாம் பாடணும் போல. மூன்றாம் பாகத்தில் இந்தத் தோழர் பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றிய கேள்வி ஒன்று இருக்கிறது.

3) இவர் பிறந்தது செப்டம்பர் 7, 1998. இந்த ஆறு பேரில் இவர்தான் இளையவர் என்றாலும் இவரின்றி என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. உங்களில் பலராலும் கூட. இவரின் பெயர் உலகளவில் தெரிந்த ஒன்று என்றாலும் அது வந்தது ஒரு எழுத்துப்பிழையினால் என நம்பப்படுகிறது.

4) இவர் ஒரு தொழில் முறை ஆசிரியர். அதனால் நான்கு ஆண்டுகளாக (சமீபத்தில்தான் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததாகச் சொன்னார்) எழுதிக் கொண்டிருக்கும் தன் வலைப்பூவில் கூட அடிக்கடி ஆசிரியராக மாறிவிடுவார். "நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவது" இவரது சாமர்த்தியம் என வேறு ஒரு பதிவரால் பாராட்டப்பட்டவர். இதுக்கு மேல் என்ன சொன்னாலும் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதால் ஸ்டாப். இவரில்லாமல் இந்த புதிர்களுக்கு கிடைத்து இருக்கும் 'நல்ல' தலைப்புகள் கிடைத்து இருக்காது.

5) இவரை உங்களில் அனேகம் பேருக்குத் தெரியாது. ஆனால் உங்களில் பலரை இவருக்குத் தெரியும். இவரது முழுநேர வேலைகளில் ஒன்று அலுவலகத்தில் மட்டுமில்லாது வீட்டிலும் மடிக்கணினியை கட்டி மாரடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதுவான ஜீவனைப் பராமரிப்பது. கடந்த ஒரு வாரமாக ஒரு வித நோய்வாய்ப்பட்டு கணினி அருகிலேயே கிடக்கும் இந்த ஜீவனுக்கு இருக்கும் இடத்தில் வந்து சாப்பாடு கொடுத்து நல்ல விதமாகக் கவனித்து வரும் ஆத்மா. இவரால் காப்பாற்றப்பட்டு வரும் அந்த 'வாயில்லா ஜீவனை' உங்கள் எல்லாருக்கும் தெரியும்!

6) இது ஒருவரல்ல. ஒரு குழு. இதில் ஒருவரையாவது உங்கள் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தெரிந்து இருக்கும். புதிதாகத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகம் உள்ளவர்கள் இவர்கள் அனைவருமே. ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம், சரி, சிங்கம், புலி இன்னும் பலவகை பிராணிகளாய் புறப்படும் இவர்களது பெயர்கள் ஒரு இணையக் கோப்பில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது கடந்த சில நாட்களில் தமிழ்வலையுலகில் அதிகம் பார்வையிடப்பட்டதாகவும் கேள்வி.

இது தவிர இன்னும் எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். சில கேள்விகளைப் பத்தி அதிக தகவல்கள் தந்த, கேள்வி சரியில்லை என விவாதம் செய்த மருத்துவர்கள் எஸ்.கே., ராமநாதன், மேற்பார்வை பார்த்து தனது பொறுப்பை சரியாக செய்து தந்த துளசி ரீச்சர், வெளியில் இருந்து ஆதரவு தந்த பாபா என நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகும். எல்லாருக்கும் என் நன்றிகள்.

முன்பே சொன்னது போல் விடைகள் இந்திய நேரம் திங்கள் காலை வெளியிடப்படும். அப்பொழுது இந்த கேள்விகளுக்கும் விடை சொல்வேன். ஆனால் இது வரை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன நீங்கள் இதற்குச் சொல்லாமலேயா போய் விடுவீர்கள்? :))