Tuesday, March 04, 2014

வேறங்கும் உண்டோ விளம்பு (அ) செத்தாண்டா சேகரு

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் என ஒரு சொலவடை உண்டு. அதுவாவது சும்மா இருந்த சங்கு. ஆனா சான்ஸ் கிடைக்கும் போது எல்லாம் வெண்பாவும் வெண்பாமுமா கிறுக்கித் தள்ளிக் கிட்டு இருக்கிறவன் கிட்ட வந்து “மச்சான், இந்த அமுதசுரபி இருக்கில்லடா. அதுல மாசாமாசம் ஈற்றடி தந்து வெண்பா எழுதச் சொல்லறாங்கடா. போட்டி பரிசுன்னு எல்லாம் கிடையாது. ஆனா நாம எழுதற வெண்பா தேர்வாச்சுன்னா அடுத்த இதழில் போடுவாங்களாம்டா. ஒரே ஒரு கண்டிஷன். நேரிசை வெண்பா மட்டும்தான் எழுதலாமாம். நாம ஆளுக்கு நாலு வெண்பா எழுதலாமா?” அப்படின்னு கேட்டா வெளங்குமா? கேட்டது நம்ம சொக்கன். அதனால இந்தப் பதிவையும், இதில் இருக்கும் பாக்களையும் இனி மாதந்தோறும் (இன்ஷா ஜீசஸ்!) வரும் வெண்பாக்களையும் படிச்சுட்டுக் கடுப்பாறவங்க திட்ட வேண்டிய முகவரி அவரோடதுதான். 

"அது என்ன நேரிசை வெண்பா மட்டும்?”, "இன்னிசை வெண்பா என்ன பாவம் பண்ணிச்சு?”, "குறள் வெண்பா மீது ஏன் இப்படி ஒரு குரோதம்?" என்று நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் சொன்ன ஒரே பதில் - "இதான் கண்டிஷன். வேணுமானா எழுது. இல்லைன்னா ஆளை விடு”. இணையத்தில் வெண்பா என்ற பெயரில் தமிழைக் கொத்துபரோட்டா போடுகிறார்கள் என வாத்தியாரிடம் பிராது கொடுக்கும் தோழரும், அவருக்கு ஆமாம் எனப் பின்பாட்டு ட்வீட்டு பாடும் தோழர்கள் சிலரும் இருக்கும் இந்த ரத்தபூமியில் நம்மையும் மதிச்சு வெண்பா எழுதறயான்னு கேட்கும் ரெண்டு சீவன்களில் ஒருத்தரை விரட்டிவிட வேண்டாம் (இன்னொண்ணு உபிச. நானே விரட்டினாலும் ஓட மாட்டான். ஹிஹி.) என்ற நல்லெண்ணத்தில் (பயத்தில் என்பதை இப்படியும் சொல்லலாம்) இந்தத் தருமி, சிவபெருமான் ஸ்டைல் கேள்வி பதில் விளையாட்டை எல்லாம் நிறுத்திட்டு வெண்பா எழுத உட்கார்ந்தேன். 

ஜார்கன் அலெர்ட் (படிச்சாப் புரிஞ்சுடுமோன்னு பயப்படறவங்க, இந்த சிவப்பு நிறப்பத்திகளைத் தாண்டி நேரா அதுக்கும் அடுத்த பத்திக்குப் போயிடலாம்) 

வெண்பா வெண்பான்னு எப்போ பாரு பேசற. ஒரு மாதிரி குன்ஸாப் புரியுது. அது என்ன இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பான்னு யாராவது கேப்பாங்களோ, நாமளும் பதில் சொல்லலாமோன்னு நப்பாசை எதுவும் இல்லாம, யதார்த்தம் தெரியும்கிறதால, நானே கேள்வி வந்ததா நினைச்சு இப்பவே பதிலைச் சொல்லறேன். 

வள்ளுவர் எழுதின மாதிரி ரெண்டு வரியில் இருந்தா அதுக்குப் பேரு குறள் வெண்பா. மூணு வரியில் இருந்தா அதுக்குப் பேரு சிந்தியல் வெண்பா. நாலு வரி வெண்பாவுல ரெண்டு டைப் இருக்கு. ரெண்டாவது வரியோட கடைசியில ஒரு கோடு போட்டு தனிச் சொல் ஒண்ணு வந்தா அதுக்குப் பேரு நேரிசை வெண்பா. அப்படி இல்லைன்னா இன்னிசை வெண்பா. இன்னிசை வெண்பாவில் நாலு வரியும் ஒரே எதுகையோட வரணும். நேரிசை வெண்பாவில் நாலு வரியும் ஒரே எதுகையில் வரலாம் அல்லது முதல் இரண்டு வரிகள் ஒரு எதுகையோடவும், அடுத்த இரண்டு வரிகள் வேற ஒரு எதுகையோடவும் வரலாம். எப்படி இருந்தாலும் தனிச்சொல்ன்னு ஒண்ணு போட்டோமே, அது முதலிரண்டு அடிகளுக்கு எதுகையாத்தான் வரணும். இதான் ரெண்டுக்கும் வித்தியாசம். 

வெண்பான்னா என்ன, எதுகைன்னா என்னன்னு கேட்கிறவங்க நம்ம ஈசியா எழுதலாம் வெண்பா புக்கைத் தேடிக் கண்டுபிடிச்சுப் படிச்சீங்கன்னா இம்மைப் பெருங்கடல் தாண்டி முக்தி பெறும் ஞானமார்க்கம் எல்லாம் கிடைக்காதுனாலும் வெண்பா பத்தி ஒரு ஐடியா கிடைக்கும்.

ஜார்கன் அலெர்ட் ஓவர் 

இந்த மாதத்துக்கான ஈற்றடி - வேறெங்கும் உண்டோ விளம்பு. வேறெங்கும்ன்னு ஆரம்பிக்குதே. இந்த றெ என்பதற்கு ரெ என்பதும் எதுகைதானே, பாரெங்கும் ஊரெங்கும் எல்லாம் போடலாமான்னேன். "நோ நோ அது போங்காட்டம். நான் றெக்கு றெதான் போடறேன். நீயும் அப்படித்தான் எழுதணும்”ன்னு கண்டிஷன் போட்டு பலநாள் கோபத்தைத் தீர்த்துக்கிட்டாரு சொக்கன். (யோசிச்சுப் பாருங்க, மொத எழுத்து நெடிலா இருக்கணும். ரெண்டாவது எழுத்து றெ-வா இருக்கணும். எத்தனை வார்த்தை சொல்ல முடியும் உங்களால?) மேலே சொல்லி இருக்கும் காரணத்திற்காக இதுக்கும் ஓக்கே சொல்லி (கல்யாணம் ஆகி எம்புட்டு வருஷம் ஆச்சு, எல்லாக் கண்டிஷனுக்கும் ஓக்கே ஓக்கேன்னு தலையாட்டறது எல்லாம் நமக்கு இப்போ கைவந்த, ச்சே, தலைவந்த கலைல்லா!) எழுத ஆரம்பிச்சேன். 

இந்த உபிச வேற "எப்போ பாரு சாமி சாமின்னே வர கர்நாடக சங்கீத பாட்டு கேட்கற. இல்லை அதே டாபிக்ல வெண்பா எழுதற. போடா நீ ஒரு போரு"ன்னு அலுத்துக்கிட்டான். அதனால சாமி, பூதம் எல்லாம் வேண்டாம்ன்னு தள்ளி வெச்சுட்டேன். சாமியை விட்டாக் கூட கவுஜன்னு வந்துட்டா காதலை விட முடியுமா? அதனால அதுல ஆரம்பிச்சு அப்புறம் அறச்சீற்றம், அகிலத்துக்கே அட்வைஸ்ன்னு மரபான தலைப்புகளிலேயே எழுதி இருக்கேன். 

சொக்கன் நாலு வெண்பா எழுதச் சொன்னாரு. நம்மூரில் தேர்தல் வேற வருது இல்லையா. அதனால நாலு வாங்குனா ஒண்ணு ப்ரீ என நம்ம பெயருக்குப் பங்கம் வராதபடி அஞ்சு வெண்பா எழுதி இருக்கேன். அஞ்சாமப் படியுங்க. 

காதல் 
சாணாம் வயிற்றிலே சாப்பாடு தானெதற்கு 
பேணாத பாயெதற்கு பேச்செதற்கு- வேணாத
ஊறெதற்கு நீயிருக்க, உன்னண்மைக் கீடுதான் 
வேறெங்கும் உண்டோ விளம்பு

அறச்சீற்றம் - 1
பாபமே இச்சகத்தில் பட்டினிச் சாவுகளே
சாபமே நேர்செய்யாச் சாத்திரமே- கோபமாய்ச்
சீறெந்த நேரமும், சின்னத் தனமிதுபோல்
வேறெங்கும் உண்டோ விளம்பு

அறச்சீற்றம் - 2
மழைநீர்வீண் ஆச்சே மரம்சுள்ளி ஆச்சே
இழையறுந்த தாலாச்சே இன்னல் - பிழையாலே
ஆறெங்கே காணோம் அடர்மணலைத் தான்காணோம்
வேறெங்கும் உண்டோ விளம்பு.

அட்வைஸ் ஆரோக்கியசாமி
அண்டம் முழுதும் அலசித்தான் பார்த்தபின்
கண்டோம் ஒரேயொரு காசினியை - கொண்டோமே
பேறென்றிப் பூமியைப் பேணுவோம், மாற்றுமே
வேறெங்கும் உண்டோ விளம்பு

விலையில்லா போனஸ் வெண்பா.
சீர்பிரித்து நேரிசையில் சிக்கனமாய் நாலுவரி
நீர்எழுதும் பாடல் நிதம்,அதுவே - பார்தன்னில்
பேறென்று சொன்னவொரு பேரிதழின் ஈற்றடிதான்
வேறெங்கும் உண்டோ விளம்பு