Friday, September 29, 2023

எந்நாட்டவர்க்கும் இறவான் போற்றி!

இன்றைக்கு நண்பர் ஒருவருடன் ஆர்மேனியாவைப் பற்றிப் பேச நேர்ந்தது. 

ஆர்மேனியாவைப் பற்றி ஓர் அறிமுகம். ஆசியாவின் மேற்குப் பகுதியில் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் நடுவே இருக்கும் ஒரு சிறிய நாடு ஆர்மேனியா.  ஜார்ஜியா, அசர்பெய்ஜான், துருக்கி, இரான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டு கடல்வழி ஏதும் இல்லாத நாடு. இன்றைக்கு சுமார் முப்பது லட்சம் பேர் வசிக்கும் நாடு. 

பொதுவாக மேற்குலகில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். ஆனால் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நாட்டில் இருந்து எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழகத்திற்கு வியாபாரிகள் வந்துள்ளனர் என்பது வரலாறு. இவர்கள் தங்கம், வெள்ளி, பவழம், பட்டு போன்றவற்றை இங்கிருந்து கொண்டு சென்று ஆர்மேனியாவில் விற்றனர். இன்றைக்கும் சென்னையில் ஆர்மேனியன் தெரு இருப்பதும் ஆர்மேனியர்களுக்கான வழிபாட்டுத்தலங்கள் இருப்பது தமிழகத்திற்கும் ஆர்மேனியாவிற்கும் இருந்த தொடர்புக்குச் சான்று. 


அதெப்படி அவ்வளவு தொலைவில் இருக்கும் நாட்டினர் நம் நாட்டிற்கு வந்தார்கள்? அதுவும் பொதுவாக அவர்கள் மேற்குக் கடற்கரையில் இருக்கும் நாடுகளுக்குத்தானே வருவார்கள், ஏன் கிழக்குப் பகுதியில் இருக்கும் தமிழகத்திற்கு வந்தார்கள் என்ற கேள்விகள் உங்களுள் எழுவது நியாயமே. அதற்கான விடை தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்த, தழைத்தோங்கி இருக்கும் சைவ சமயமே. 

பரந்துபட்ட பாரதம் என்று அழைக்கப்படும் ஹிந்து ராஜ்ஜியம் காந்தாரம் (தற்போதைய ஆப்கானிஸ்தானில் இருக்கும் காந்தஹார்) வரை பரவி இருந்ததாகப் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அதையும் தாண்டி கருங்கடல் வரை கூட ஹிந்து மதம் தழைத்தோங்கி இருந்தது என்பதே உண்மை. 

இன்று கிருத்துவ மதத்தின் வீச்சு அதிகமாக இருக்கும் நாடாக மாறிவிட்டாலும் ஆதியில் ஹிந்து ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக, குறிப்பாக சைவ சமயம் பேணப்பட்ட பகுதியாகவே ஆர்மேனியா இருந்தது. அது மட்டுமல்லாமல் அங்கு தமிழின் வீச்சும் இருந்தது. அதற்கான சான்று அவர்கள் இன்றளவும் அழைக்கப்பெறும் பெயரிலேயே உள்ளது. 

சிவனை வருணிக்கும் சுந்தரமூர்த்தி நாயனார், 
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே 
மன்னே மாமணியே...." 
எனப் பாடுகிறார். சிவனுக்கு உகந்த மலர் கொன்றை. கொன்றை மலரை சிவன் தலையில் சூடி இருப்பார் என்பது ஐதிகம். அதனால் கொன்றை மாலைகளை அவருக்கு அணிவித்துப் பூசை செய்வது சைவர்கள் வழக்கம். 


அப்படிப் பட்ட பெருமை கொண்ட கொன்றையின் மற்றொரு பெயர் ஆர். கொன்றை மாலை சூடிக் கொண்ட உடலினைக் கொண்ட சிவன் என்பதை உணர்த்த அவருக்கு ஆர்மேனியன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அந்த ஆர்மேனியனை வழிபடுபவர்கள் ஆர்மேனியர்கள். அந்த ஆர்மேனியர்கள் வாழ்ந்த நாடு ஆர்மேனியா. இது போதாதா ஆர்மேனியர்கள் ஆதிசைவர்கள் என்பதற்குச் சான்று! 

போதாது என்று சொல்பவர்களுக்கு இன்னுமொருச் செய்தியை உரைக்கின்றேன். 

சிவனை விட்டுவிடுவோம். அவன் மகன் சரவணனுக்கு வருவோம். கந்தன், கடம்பன், கார்த்திகேயன், வடிவேலன், வேலவன், முருகன் என எத்தனையோ பெயர்கள் இருக்கையில் தமிழின் மூதாட்டி ஔவை அவனை எப்படி அழைக்கிறாள்? கொன்றை வேந்தன் செல்வன் என்கிறாள். 
"கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை 
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே" 
என்பது அவள் வாக்கு. கொன்றைக்கும் முருகனுக்குமான தொடர்பு தெரிகிறதல்லவா?

அப்படிக் கொன்றை வேந்தன் சிவனின் புதல்வன் என்று ஔவை புகழும் முருகனை மற்றொரு மெய்ஞாநியாம் அருணகிரிநாதர், 
"செம்மான் மகளைத் திருடும் திருடன் 
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்தலனே"
என்று பாடுகிறார். பிறப்பு இறப்புமில்லாத கடவுள் முருகன். எனவே அவனுக்கு இறவான் என்று பெயர். 

அந்தச் சிறப்புப் பெயர்தான் இன்றும் ஆர்மேனிய நாட்டின் தலைநகருக்குப் பெயர். ஆம். ஆர்மேனிய தலைநகருக்குப் பெயர் இறவான். நாட்டின் பெயரில் தகப்பன், தலைநகரின் பெயரில் தகப்பன்சாமி. இதை விட வேறு என்ன சான்று வேண்டுமய்யா ஆர்மேனியர்கள் ஆதி சைவர் என்பதற்கு! இதையே வெண்பாவாகவும் எழுதி வைப்போம். 
கூர்கெட்டு மற்றவரைக் கும்பிடப் போனாலும்
வேர்அதுவோ இங்குதான் வேண்டுமப்பா இந்நினைவே
கார்குழல் தன்னிலே கங்கையைக் கொண்டவன்
ஆர்மேனி யானே அழகு!
சனாதனமே உலகப் பொது மறை. அதை நாம் என்றும் போற்றுவோம். நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. 

நன்றி வணக்கம். 

  1. ஆர்மேனியர்களுக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு குறித்து நண்பர் ஶ்ரீராம் பேசி இருப்பதை இங்கு பார்க்கலாம் - https://youtu.be/w2airYWFDuw?si=34LyXlA2Ldh4n96x
  2. இறவான் என்ற பெயரில் அன்பர் பாரா எழுதி இருக்கும் நாவலை வாங்க - https://a.co/d/26saxau
  3. அன்பு இருக்கட்டும் அறிவே சிவம் என அண்ணன் பெனாத்தல் எழுதி வரும் பெருந்தொடருக்கான இணைப்பு - https://galaxybs.com/category/reading/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/