Friday, June 29, 2007

இதுதாண்டா திறந்த மனசு!!

ஆசிப் அண்ணாச்சி திறந்த மனசப் பத்திப் பதிவு போட்டாக. பொன்ஸக்காவும், உஷாக்காவும் வந்து அழுவாச்சி ஸ்மைலி போட்டாங்க. சரின்னு நம்ம சிபி அண்ணாச்சி வந்து ஒரு படம் போட்டாக. நம்ம தம்பி வந்து இதுவும் முழுசாத் திறக்கலைன்னு சண்டை போடறாரு.

சரி அம்மணிங்க மனசும் நோவாம, தம்பிண்ணா ஆசையை நிறைவேத்த நம்மளை விட்டா யாரு இருக்கான்னு களத்தில் இறங்கியாச்சி. இதுதாண்டா திறந்த மனசு!!என்னங்க எல்லாருக்கும் சந்தோஷம்தானே!! கண்ணை மூடி, கன்னத்தில் போட்டுக்கிட்டு வேலையைப் பாருங்கடே!!

Sunday, June 24, 2007

சிவாஜி - (நம்) வாயிலே ஜிலேபி!!!

நானும் சிவாஜி பார்த்தாச்சு!!!


பி.கு. : பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னது - " எனக்கு விவேக் காமெடியை விட ரஜினி காமெடிதான் பிடிச்சு இருக்கு."

பி.பி.கு: அப்பொழுது ரஜினி சீரியஸாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

பி.பி.பி.கு: தலையெழுத்து. இதுக்கெல்லாம் 16 டாலர் குடுத்து பார்த்தது.

பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.

பி.பி.பி.பி.பி.கு: நடிக்க முயற்சிக்காத வரையில் பார்க்க ஷ்ரேயா நல்லா இருக்கு. நயன் ஏன் இப்படி இளைச்சுப் போயிட்டாங்க?பி.பி.பி.பி.பி.பி.கு: மொட்டை ரஜினி சூப்பர்!!வர்ட்டா!!

Thursday, June 21, 2007

சுட்ட புதிர் வேணுமா? சுடாத புதிர் வேணுமா?

ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி டிஸ்-ஆர்டரால் பாதிக்கப்பட்டிருந்த முருகன் ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் மரத்தின் மேல் ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, அவன் எங்கேயாவது கீழே விழுந்து அடி பட்டுக் கொள்ளப் போகிறானே என்ற பயத்தில் அவன் பாட்டி ஔவை அவனிருக்கும் மரத்தின் கீழே நின்று கொண்டு அவனை கீழே வாவென அழைக்கிறாள்.

ஒன்று, இரண்டு என்று வரிசைப் படுத்தி பாட்டெல்லாம் பாடினாலும் கீழே வர மறுத்த முருகன் கீழே வந்தால் தனக்கு போர் அடிப்பதாக சொல்ல, அவனை ஒரு இடத்தில் அமர வைக்க புதிர் போடுவதுதான் வழி என நினைத்துக் கொண்டு மரத்தின் மீது இருக்கும் முருகனைப் பார்த்து புதிர் ஒன்று தருகிறேன், கீழே இறங்கி வா எனக் கூப்பிட்டாள். சரி என்ற முருகனைப் பார்த்து "சுட்ட புதிர் வேண்டுமா, சுடாத புதிர் வேண்டுமா?" எனக் கேட்கிறாள். "சுடாத புதிர் என்றால் திரும்பத் திரும்ப கருப்புச் சட்டைக் காரன், காவலுக்குக் கெட்டிக்காரன். அவன் யார் என்ற ரேஞ்சில் கழுத்தை அறுப்பாய். அதனால் சுட்ட புதிரையே குடு" என்றபடி மரத்தில் இருந்து குதித்து வந்தான் முருகன்.

அவனை வீட்டினுள் அழைத்துச் சென்று கணினியில் அமர்த்தி இந்தப் புதிரை விடுவிக்கச் சொன்னாள் ஔவை. புதிரில் மூழ்கிப் போன முருகன், பாட்டி சமையலை முடிக்கும் வரை ஒரு இடத்தில் அமர்ந்திருக்க, நிம்மதியாக வேலைகளை முடித்து வந்த பாட்டி போடும் ஆட்டத்தைப் பாருங்கள்.

நீங்களும் புதிரின் ஒவ்வொரு அடுக்காக சென்று கடைசி அடுக்கினை அடைந்தீர்களானால் பாட்டியின் ஆட்டத்தைக் காணலாம். கூகிளாண்டவர் உதவியை முடிந்த வரை நாடாமல் முயலுங்கள். கொஞ்சம் முயன்றால் விடைகளே கிடைப்பதால் சுவாரசியம் குறைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

கடைசி பக்கம் வரைச் செல்ல எவ்வளவு நேரம் ஆகியது என மறக்காமல் இங்கு பின்னூட்டமிடுங்கள்!!

Tuesday, June 19, 2007

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ...

வெங்கட் ஐயா எழுதி இருக்காக, மாப்பிள்ளை இகாரஸ் எழுதி இருக்காக மற்றும் நம் வலைப்பதிவர் எல்லாம் எழுத இருக்காக வாம்மா மின்னல் அப்படின்னு நம்ம பாபா கூப்பிட்டுட்டாரு. அவர் பேச்சை மீற முடியுமா. நாலு, ஐந்து, ஆறு எல்லாம் முடிஞ்சு இப்போ எட்டு விளையாட்டு ஒரு எட்டு எடுத்து வெச்சு இருக்கு. நம்மளைப் பத்தி நாமே எட்டு விஷயம் சொல்லணுமாம். என்னத்த சொல்ல. பாபா மாதிரி இருந்தா ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரீ அப்படின்னு 16 விஷயம் சொல்லலாம். (அவரை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க அப்படின்னு சொன்னவங்க எல்லாம் இப்போ காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.) நமக்கு எட்டு விஷயமே தேடணும். ஹூம்.

1. சின்ன வயதில் ஹிந்தி ட்யூஷன் கிளாஸ் போகும் போது நம்ம படிப்பைக் கோட்டை விட்டுட்டு அவங்க பெரிய பசங்களுக்குச் சொல்லித் தரும் அக்கவுண்டன்ஸி பாடத்தைக் கற்றுக் கொண்டு, இது ஈஸியா இருக்கே என நினைத்து, அதைத்தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டு, அதன் படியே அவ்வழி சென்று சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது. அதற்குத் துளி கூட சம்பந்தமில்லாமல் ஆணி புடுங்குவது காலத்தின் கட்டாயம்.

2. சாதாரணமாக நாம் பயணம் செய்திருக்கும் பல வித வண்டிகளுடன் அறுவர் மட்டும் செல்லக் கூடிய சிறு விமானம் உட்பட பல விமானங்கள், ஹெலிகாப்டர், பாராசெய்லிங் பாராசூட், நீர்மூழ்கிக் கப்பல் என நிலத்தில், வானத்தில், தண்ணீரின் மேல், தண்ணீரின் கீழ் என பல விதமாக பயணம் செய்தாகிவிட்டது. அடுத்த மாதம் கே.ஆர்.எஸ். நம்மளை பலூனில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கிறார். கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாது போனது ஒரு வருத்தம்தான்.

3. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பட இடங்களுக்குச் சென்று இன்று மக்கள் வாழும் கண்டங்களில் அவுஸ்திரேலியா மட்டும்தான் செல்லவில்லை. டீச்சர், டிக்கெட் வாங்கி அனுப்பியவுடன் அங்கும் சென்று கண்டம் வென்றோன் என்ற பட்டம் போட்டுக்க வேண்டியதுதான்.

4. நானும் என் நண்பனும் இன்றும் பேசிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. இதையும் போட்டுக்க வேண்டியதுதான். ரொம்ம்ம்ப வருஷம் முன்னாடி நாங்க ரெண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தோம். அவன் பவுல் பண்ணும் ஓவர்களில் ஐந்து பால்கள் தடவு தடவு எனத் தடவிவிட்டு ஆறாவது பால் மட்டும் எப்படியோ அடித்து நான்கு ரன்கள் எடுத்துக்கிட்டு இருந்தேன். இப்படி பல ஓவர்கள் அவுட் ஆகாம இருந்து அவனைக் கடுப்படிச்சதையும், ஆறாவது பந்து மட்டும் ஓவர் பிட்ச்சாகப் போட்ட அவன் திறமையையும் பத்தி இப்போ கூட பேசுவோம். :))

5. தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். உண்மையில் நுண்கலை என்பது என்ன எனத் தெரிந்து கொண்டேன். ஓரளவு ஆர்வமும், சரியாக திசை காட்ட ஒருவரும் அமைந்தால், கர்நாடக சங்கீதத்தைப் புரிந்து கொள்ள, அதன் இனிமையை உணர இதைவிட சிறந்த வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இதில் இருக்கும் அற்புதங்களைக் கேட்கும் பொழுது இவ்வளவு நாட்கள் இதனைக் கற்றுக் கொள்ளாமல் போய் விட்டோமே என்ற வருத்தமும், இப்பொழுதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் மேலிடுகிறது. எச்சரிக்கை : விரைவில் பாடல் பதிவு வரலாம்!!

6. எனக்கு பிடித்தமான சப்ஜெக்ட் பற்றி மட்டும் தான் படிப்பது என்றில்லாமல், வகை தொகை இல்லாமல் கண்டதையும் படித்து வைப்பது என் பழக்கம். இதனால் பல நேரங்களில் ஒரு புதிய கூட்டத்தில் இருக்கும் பொழுது அவர்கள் பேசும் விஷயத்தில் பங்கெடுத்துக் கொள்வது எளிதாகிறது. தனிமைப்படாமல் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதும் முடிகிறது. அதுக்காக ஹிந்தியில் எல்லாம் பேசப்பிடாது. அங்க எல்லாம் நிக்காம அப்படியே ஜூட் விட்டுடுவோமில்ல!

7. எங்கு தண்ணீரைக் கண்டாலும் குதித்துக் குளிக்கப் பிடிக்கும். ஆறு, குளம், அருவி என தண்ணீரில் ஆட்டம் போடுவது சிறுவயதில் இருந்து இன்று வரை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பழக்கம். நயாகராவில் Cave of the winds என்னும் இடத்தில் சொட்டச் சொட்ட நனைந்ததும், முஸோரியில் ஒரு அருவி அருகில் வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் குளிர்காலம் என்பதையும் மீறி போட்டிருக்கும் ஸ்வெட்டரைக் கூட கழட்டத் தோன்றாமல் தண்ணீரில் குதித்து ஆடியதும் மறக்க முடியாத ஆட்டங்கள்.

8. இப்படி எட்டு விஷயங்கள் எழுதறதே ஒரு பெரிய விஷயம்தான் அப்படின்னு சொல்லிட்டு ஆட்டத்தைக் க்ளோஸ் பண்ண மனசு வரலை. ஆனா இப்படி நாமும் எதையாவது எழுதுவோம் அதைப் படிக்கவும் ஆட்கள் இருக்காங்க என்பது நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு விஷயம்தாங்க. அதனால வலைப்பதிதல் என்ற இந்த மேட்டரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கிறேன்.

நான் அழைக்கும் எட்டு பேர்
  1. தம்பி தேவ்
  2. வி.எஸ்.கே
  3. கண்மணி
  4. ஜிரா
  5. உஷாக்கா
  6. டுபுக்கு
  7. கீதாம்மா
  8. செல்வன்
(நம்மளைப் பத்தின எட்டு குறிப்புகளைக்கூட எழுதிடலாம் எட்டு பேரை கூப்பிட ரொம்பவே கஷ்டமா இருக்கு சாமி!)


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழைத்தவர் பதிவில் சென்று அழைப்புக்கு நன்றி, பதிவு போடுகிறேன் என ஒரு பின்னூட்டம், போட்டாச்சு என ஒரு பின்னூட்டம் என குறைந்த பட்சம் இரண்டு பின்னூட்டங்களாவது போட வேண்டும் என்று ஒரு புதிய விதியையும் சேர்த்துக்கலாமா! ;-)

Monday, June 11, 2007

இது ஒரு விளம்பரப் பதிவு!!!

ரொம்ப நாள் ஆச்சு. பதிவு போட டயமே இல்லை. தமிழ்மணம் பக்கம் கூட ரொம்ப தலை காட்டலைன்னா பார்த்துக்குங்களேன். இருந்தாலும் கை பரபரங்குதே. என்ன செய்யலாமுன்னு யோசிச்ச போதுதான் ரொம்ப நாளா போட வெச்சிருந்த இந்த விளம்பரப் பதிவு மேட்டர் ஞாபகத்துக்கு வந்தது. மக்கள்ஸ், இது வேற யாருக்கும் தர விளம்பரம் இல்லைங்க. விளம்பரங்கள் பற்றிய பதிவு.

கண்ணில் பட்ட, மெயிலில் வந்த நல்ல விளம்பரங்களைச் சேகரிக்கும் வழக்கம் இருந்தது. அதில் இருந்து சில உங்கள் பார்வைக்கு. இந்த விளம்பரங்களைப் பலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால் பார்த்திராத சிலருக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம். (என்னது, நட்சத்திர வாரம் முடிஞ்சாச்சு, இனிமே சமர்ப்பணம் எல்லாம் வேண்டாமா? சரி சரி!). வழக்கம் போல படங்களைச் சொடுக்கினா பெரிய அளவில் பார்க்கலாம்.

நியூயார்க் நகரின் தரையடி ரயில் பாதைகளில் உண்டாகும் சூடு, இப்படி புகையாய் அதற்கென வைத்திருக்கும் 'ஜன்னல்கள்' வழியாக வெளிவரும். குறிப்பாக குளிர்காலங்களில். அதனை அழகாக பயன்படுத்து 'பால்ஜர்ஸ்' காபி நிறுவனம் செய்திருக்கும் விளம்பரம் இது. மிக அருமையான சிந்தனை. அந்த புகை வெளிவரும் இடங்களில் அழகாக ஒரு காப்பிக் கோப்பையின் ஸ்டிக்கரை ஒட்டிச் செய்த இந்த விளம்பரத்தில் இருக்கும் வாசகம் - "'Hey, City That Never Sleeps. Wake up."

அடுத்தது நம்ம ஊர் மேட்டர். ஒரு பேரங்காடியின் நுழைவு வாயிலில் ஒரு டியோடரண்ட் நிறுவனம் செய்த விளம்பரம் இது. மனிதர்களின் நிஜ உருவங்களைப் போன்ற ஸ்டிக்கர்களை தானியங்கிக் கதவுகளின் மீது ஒட்டிவிட்டனர். ஒருவர் கடைக்குள் வரும் பொழுது கதவுகள் விலகுவது அம்மாந்தர்கள் விலகுவது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். 'People move away when you have body odour' என்ற விளம்பரத்தை நுழைந்தவுடன் கண்ணில் படுமாறு வேறு வைத்துவிட்டனர்.

மலேசியாவில் எடுத்த படம் இது. மின்சார பெட்டி ஒன்றில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி அதிலிருக்கும் அபாயம் என்ற வாசகத்தை அழகாக எடுத்தாண்டு இருக்கிறார்கள். டியூராசெல் பேட்டரிகள் கொண்டு இம்மின்சாதனம் இயங்குவது போலவும். அப்பேட்டரிகளின் சக்தியால் கவனம் தேவை என்பது போலவும் செய்த அருமையான விளம்பரம்.

இது மீண்டும் நம்ம் ஊரில் எடுத்தது. Eatalica என்ற நிறுவனத்தினர், தாங்கள் அறிமுகப் படுத்தும் பர்கரைப் பற்றிய விளம்பர பலகைக்களுக்குக் கீழாக ஈரத் தரை ஜாக்கிரதை என்ற பலகையை வைத்து விட்டு அதன் கீழ் 'Oogling at the burger may involuntarily cause drooling which may in turn lead to a wet floor. Issued for your safety by the management of Eatalica restaurant' என எழுதி இருக்கிறார்கள்.

மீண்டும் மலேசியா. M-Tech Plasma HID Lights என்ற பல்புகளுக்கான விளம்பரம் இது. சாதாரண பல்புகளை விட 300% அதிக வெளிச்சம் கொண்டவைகளாம் இந்த பல்புகள். கார் நிறுத்துமிடங்களிலும் கார் ரிப்பேர் செய்யும் இடங்களிலும் இந்த பல்புகளால் ஏற்பட்ட கருகிய தோற்றங்கள் போன்ற ஸ்டிக்கர்கள் மூலம் தம் பல்புகளின் திறனை அழகாகச் சொல்லி இருக்கின்றனர்.கனடா நாட்டில் புகை எதிர்ப்பு தினத்தன்று நிறுவப்பட்ட விளம்பரம் இது. புகை பிடிக்காதீர்கள் என்பதனை வலுவாகச் சொல்லும் இந்த விளம்பரத்தில் இருக்கும் வாசகம் - 'Death from car accidents: 370, Death from smoking-related causes: 6,027, Quit now before it kills you.'

நியூயார்க் நகரில் ஒரு உடற்பயிற்சி நிலையத்தார் செய்த குறும்பான விளம்பரம் இது. தரையடி ரயிலில் நிற்பவர்கள் அனைவரும் வெயிட்டுகள் தூக்கி உடற்பயிற்சி செய்வது போல் அமைத்து விட்டார்கள்.அடுத்ததும் உடற்பயிற்சிதான். ஹாங்காங் நகரில் ஒரு யோகா பயிற்சிப் பள்ளியின் விளம்பரம் இது. பானங்கள் அருந்தப் பயன்படும் ஸ்ட்ராக்களின் வளையக்கூடிய பாகத்தில் ஒரு பெண் வளைந்து யோகா செய்வது போல் அழகாகச் செய்துவிட்டார்கள். இந்த விளம்பரத்துக்குப் பின் அவ்விடத்தில் சேர்ந்தவர்கள் பலராம்.

சுவிட்ஸர்லாந்தில் ஒரு தரையடி ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்த அழகான விளம்பரம் இது. அந்நிலையத்தின் உள் செல்பவர்களும், வெளி வருபவர்களும் இக்காரின் உள்ளே செல்வது போலவும் வெளியே வருவது போன்றதுமான அமைப்பு, அக்கார் அதிகம் பேர் அமர்ந்து கொள்ளும் வசதியுடையது எனச் சொல்வது போல் அமைத்து இருக்கிறார்கள்.

கடைசியாக ஜப்பான் நாட்டில் ஒரு பேரங்கடியில் தங்கள் உடையில் வாடிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள் எனக் காட்டும் படியாக பெரிய கண்ணாடிகளைக் கொண்டு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து இருக்கிறார்கள். தங்களுக்கு அந்த உடைகள் நன்றாகப் பொருந்துவதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கினராம்.

டிஸ்கி: இன்று துளசி டீச்சர், பல படங்கள் கொண்ட இந்தப் பதிவைப் போட்டதுக்கும், பல படங்கள் கொண்ட இந்தப் பதிவை நான் போட்டதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இது ஒரு விளம்பரப் பதிவு மட்டுமே!!

Sunday, June 03, 2007

அந்தரிகி வந்தனமு!!

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகிவந்தனமு! இந்நாட்டின் உயரிய மாந்தர்களுக்கு என் வணக்கங்கள்! (வேணுமுன்னா இந்த வலையுலகின் அப்படின்னு வெச்சுக்கலாமா?)

அப்பாடா!! ஒரு வாரம் ஆயிடுச்சுங்க. எனக்கே இப்படி இருந்தா உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நமக்கெல்லாம் இந்த ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடறது எல்லாம் ஒத்து வரலைங்க. எழுத ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆச்சு. இன்னும் 100 போஸ்ட் கூட போடலை. இந்த சற்றுமுன் பார்ட்டிங்க எல்லாம் என்னடான்னு 83 நாட்களில் சகத்திரம் போஸ்டுங்களாம். நமக்கெல்லாம் அந்த ஸ்ட்ரைக் ரேட் ஒத்து வராது. இனிமே இந்த மாதிரி ஒரு நாளுக்கு ஒண்ணுன்னு எல்லாம் சொன்னா ஒரு தடவைக்குப் பத்து தடவை யோசிக்கணும்.

அதுவும் பின்னூட்டங்களை வெளியிடறதும், அதற்குப் பதில் சொல்லறதும், அடுத்த பதிவு எழுதறதும், வழக்கம் போல மத்தவங்க பதிவுகளுக்குச் சென்று உள்ளேன் ஐயா என்பதுமாக மூச்சு முட்டி விட்டது. இனி ஒரு நாள் கூட தாங்கியிருக்காது என்றே நினைக்கிறேன். நல்லபடியாக ஒரு வாரம் ஓட்ட முடிந்ததே பெரிய விஷயம்.

மீள் பதிவு பண்ணியாச்சு, பயணக் கட்டுரை எழுதியாச்சு, சமையல் குறிப்பு போட்டாச்சு, புதிர் போட்டி, வெண்பா விளையாட்டு எல்லாம் விளையாடியாச்சு. நேயர் விருப்பத்தில் மீதி இருப்பது ஒரு இசைப் பதிவுதான். கச்சேரியில் மங்களம் பாடுவது மாதிரி நம்ம நட்சத்திர வாரத்தின் இறுதி பதிவாக ஒரு இசைப் பதிவு போடலாம் என்று எண்ணிய போது வந்தது மங்களம் பாடுவதைப் போட்டே நிறைவு செய்து விடலாமே என்ற இந்த ஐடியா.

பொதுவாக நாம் 'நீ நாம ரூபமுலகு' எனத் தொடங்கும் மங்களத்தைத்தான் பாடிக் கேட்டு இருப்போம். சில கலைஞர்கள் வேறு மங்கள பாடல்கள் பாடிக் கேட்டதே இல்லை. ஆகவே நாமும் அந்த பாடலையே முதலில் கேட்போம். சௌராஷ்ட்டிர ராகம், ஆதி தாளத்தில் அமைந்த இந்த பாடல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜரால் இயற்றப் பெற்றது.
Get this widget | Share | Track details


ஆனால் இது தவிர வேறு பல பாடல்கள் கூட ஒரு கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு இருக்கின்றன. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இது போன்று பல பாடல்களைப் பாடுவார் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தற்பொழுது இளைஞர்களில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இப்படி வித்தியாசமான பாடல்களை தொடர்ந்து மங்களமாக பாடி வருகிறார்.அவர் பாடியவைகளில் இருந்து எனக்குப் பிடித்த இரண்டு மங்களப் பாடல்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவது பாடல் 'ராமசந்த்ராய ஜனக' எனத் தொடங்கும் குறிஞ்சி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பத்ராசலம் இராமதாஸ் இயற்றிய பாடல். ஒரு கச்சேரியின் முடிவில் ஆரவாரமாக வரும் இந்த பாடலை கேட்கும் போதே ஒரு குஷி வரும் பாருங்கள்.

Get this widget | Share | Track details


அடுத்தது 'புஜகசாயினோ' எனத் தொடங்கும் யதுகுலகாம்போதி ராகம் ரூபக தாள பாடல். இப்பாடலை இயற்றியவர் சுவாதித் திருநாள் அவர்கள். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்ற உணர்வினைத் தரும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.


Get this widget | Share | Track details


அப்புறம் தமிழ்ப் பாடல்கள் இல்லையா என்று கேள்விகள் எல்லாம் வேண்டாமே என மத்யமாவதி ராகத்தில் அமைந்த நம் பாரதியார் பாடல் ஒன்று. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.

Get this widget | Share | Track details


இந்த மங்கள பாடல்களோடு நான் எனது நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன். இந்த வாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், வாழ்த்தி ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும், உப்புமா பதிவுக்கு உறுதுணையாக இருந்த பெனாத்தலாருக்கும் எனது நன்றிகள். அப்புறம் ரொம்ப முக்கியமாக இந்த வாரம் பூராவும் நம்மளை ஃப்ரீயாக (சிலேடை!!) விட்ட தங்கமணிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

இது போன்று இந்த நான்கு பாடல்களைப் போடப் போகிறேன் எனச் சொல்லி அனுமதி கேட்ட உடன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தைத் தந்த கிருஷ்ணா அவர்களுக்கு என் நன்றிகள்.

பட உதவி : திரு. ஹரிஹரன் அவர்கள்.

Saturday, June 02, 2007

விடை தருவேன் நானே!!

விடுகதையா இந்த வாழ்க்கை என்ற கேள்வியோடு ஆரம்பித்த புதிர் விளையாட்டுக்கு இன்று விடை தருவேன் நானே என முடிவுரை! ரொம்ப நாள் கழித்து நான் போட்ட புதிர். வழக்கமாக வருபவர்கள் வருவார்களா? புதிதாக யாரேனும் வருவார்களா? புதிர் பதிவுகளுக்கு ஆதரவு இருக்குமா? என என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் பதிவையே போட்டேன். எந்த விதமான மசாலாவு சேர்க்காமல் வீட்டுச் சமையல் போல் இருந்தால் அதற்கு உணவகங்களில் மதிப்பிருக்குமா என்ற பயம்தான்.

ஆனால் பாருங்கள் என்ன ஒரு ரெஸ்பான்ஸ். (இதற்கு எதிர்வினை என்பதைத் தவிர்த்து வேறு சொல்லே இல்லையா? அது ஒரு நெகடிவ் பீலிங்கை தருதே.) நான் உண்மையைச் சொல்லறேன். எதிர் பார்க்கவே இல்லை. அதிலும் நான் கஷ்டம் என நினைத்த கேள்விகளை சடாரென்று சிலர் கண்டுபிடித்தது, நான் உண்மையில் எல்லோரும் கஷ்டப்படுவார்கள் எனக் கணித்த குறிப்பில் அனேகமாக எல்லாரும் மாட்டியதிலும் ஆச்சரியம்தான்.

சரி முதலில் விடைகளைப் பார்த்துவிடலாம்.

அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்
முதல் குறிப்பு. மிகவும் எளிதானது. அவா என்றால் ஆசை. மடல் என்றால் கடிதம். அவாவிற்குள் ஒரு மடல் இருப்பதால் ஆசையில் ஓர் கடிதம். (இலக்கணப்படி ஆசையில் ஒரு கடிதம்தானே வரவேண்டும்? அந்த படம் பேரு அதுதான். அதனால நானும் அதை அப்படியே கேட்டேன்.)

சகத்வன்திரம் - ஆயிரத்தில் ஒருவன்
சகத்திரம் என்றால் ஆயிரம். வடமொழியில் சகஸ்ரம் என்றால் ஆயிரம்தானே? இங்கிருந்து அங்க போச்சா அங்க இருந்து இங்க வந்ததான்னு தெரியாது. ஆனா ஆக மொத்தம் சகத்திரம் என்றால் ஆயிரம். ஆயிரத்திற்குள் ஒரு வன் இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன். மற்ற எல்லாவற்றையும் போட்ட பாலா இதற்கு கடைசி வரை கஷ்டப்பட்டதுதான் ஆச்சரியம்.

நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஓர் ராகம்
இது முதல் குறிப்பைப் போன்றதுதான். கல்யாணி என்று ஒரு ராகம் இருக்கிறதல்லவா? கல்யாணி என்றவுடம் பியர் ஞாபகத்துக்கு வந்து ஜில் ஜில் என எழுதியவர்கள் அனைவரும் என் பேரைச் சொல்லி நல்ல பியரா வாங்கிச் சாப்பிடுங்கள்.

விவரி - பச்சை விளக்கு
விவரித்தல் என்றால் விளக்குதல் என்றுதானே பெயர்? அந்த சிலேடையை வைத்துப் போட்ட குறிப்பு இது. பச்சைக் கலரில் எழுதப்பட்ட விளக்கு - பச்சை விளக்கு.

ஓவியலூசு - படகோட்டி
இது நெல்லை மாவட்டக்காரங்களுக்கு ரொம்ப எளிதாக இருந்து இருக்கும். (இல்லையா டுபுக்கு!) ஏனென்றால் இதில் முக்கியமான குறிப்பு அந்த வட்டார வழக்கில் இருக்கிறது. ஆனால் ரொம்பவே புழக்கத்தில் உள்ள சொல்தானே! ஓவியம் என்றால் படம். ஓவிய என்றால் பட. கோட்டி என்றால் பயித்தியம், லூசுதானே. ஆகவே பட கோட்டி.

சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்
இது ரொம்ப நேரான விடைங்க. ஏழை in சிரிப்பில். சரிதானே ஜிரா.

தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - திருவிளையாடல் ஆரம்பம்
திருவிளையாடல் 'தி'யில்தானே ஆரம்பிக்கிறது!! இது கொஞ்சம் கடினமான குறிப்புதான். ஆனா போட்டவங்களைக் கேட்டுப் பாருங்க. அப்படி ஒண்ணும் புரியவே இல்லாத மாதிரி குறிப்பு எல்லாம் இல்லை. தனுஷ் படம் என்றால் நேராக பதில் வந்திருக்கும். அவ்வளவு எளிதான குறிப்பாகத் தர வேண்டாமே என்றுதான் இன்னும் பல படங்களில் நடித்து இருக்கும் பிரகாஷ்ராஜ் பெயரைப் போட்டது.

என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
இருப்பதிலேயே இதுதாங்க கடினமான குறிப்பு. அதே மாதிரி பாலாவைத் தவிர வேறு யாருமே இதனைப் போடவில்லை. பாலா, Hats of to you!! கமல் படம் இல்லைன்னு சொல்லியாச்சு. ஆனாலும் கமல் படம்தான் அதிகம் விடையாக வந்தது. கமல் படம் பேரு என்னங்க? உன்னால் முடியும் தம்பி. இங்க என்ன சொல்லி இருக்கேன்? என்னால் முடியும் தம்பி. ஆக மொத்தம் 'உன்' இடத்தில் நான் 'என்'னைத் தந்திருக்கிறேன். எனவே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். சரியா? :)) இதில் தம்பி என்ற வார்த்தையைக் கொண்டு பரதன், இலக்குவன், ஸ்டாலின் எனப் பல தம்பிகள் வந்தார்கள்.

ஆ - உயிரெழுத்து
நேரான குறிப்புதான். அது ஏன் ஆ? ஏன் அ, இ, ஈ என எதையும் குறிப்பிடவில்லை? பெரிதாய் காரணம் ஒன்றும் கிடையாது. ஆவும் ஒரு உயிர்தானே? :)) இந்த சிலேடையும் அ.ஆவை வைத்து குழப்பலாம் என்ற ஒரு எண்ணமும்தான். அப்படிக் குழம்பியவர்களும் உண்டுதானே!

ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்
நம்ம பசங்க எல்லாம் சரியாக விடை தந்த குறிப்பு இது! எளிதான குறிப்புதான். ஆலயம் என்றால் கோயில். இங்கு அதில் என்ன இருக்கிறது? ஜானிவாக்கர் என்ற குடி. ஆகவே குடியிருந்த கோயில்.

வேல் வினை - வேலுண்டு வினையில்லை
இருப்பதிலேயே எளிதான குறிப்பு இதுதான். வேல் இருக்கு வினை இல்லை. முதலில் நான் வெறும் வேல் என குறிப்பு தரலாம் என இருந்தேன். அப்படிச் செய்து இருந்தால் எத்தனை பேர் சரியாகப் போட்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் எல்லா குறிப்பையும் அதி கடினமாக ஆக்க வேண்டாமே என்றுதான் அந்த வினையையும் சேர்த்தது.

மீண்டும் மீண்டும் - மறுபடியும்
இதுவும் நேரான குறிப்பு. மீண்டும் என்றாலே மறுபடியும்தானே, எதற்கு இரு முறை தந்தது? மீண்டும் மீண்டும் என்ற சொல் வந்தால் அதுவே மறுபடியும் வருகிறது அல்லவா? :))

அட்சி இரதன் - கண்ணும் கண்ணும்
பழைய தமிழ் சொற்கள் இரண்டினைத் தந்து இருக்கிறேன். இரு சொற்களுமே கண் என்ற பொருள் கொண்டவை. மீன் போன்ற அட்சியைக் கொண்டவள் மீனாட்சி அல்லவா? இதைப் பத்தி டீச்சர் பதிவில் கொஞ்சம் வேறு மாதிரி பிரதீப் சொன்னதை ஞாபகமாக குறிப்பிட்டு இருந்தார் கதிரவன். இரதன் என்றாலும் கண்தான். ஆகவே கண்ணும் கண்ணும். இதுதான் விடை. அட்சியும் இரதனும் எனச் சொல்லி இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார் ஒருவர். ஆமாம், செய்து இருக்கலாம் தான்.

உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்.
உயர்ந்த என்ற சொல்லின் உள் ளம் இருக்கிறது. ஆகவே உயர்ந்த உள்ளம். இதில் இல்லாத குழப்பங்களை எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டனர் சிலர்.

என்விதிகை - சட்டம் என் கையில்
போன குறிப்பு மாதிரிதான். விதி என்றால் சட்டம், அது என் கையில் உள்ளது. ஆகவே சட்டம் என் கையில்.

சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
சஹானா ஒரு ராகம். ஆதி தாளம், ரூபக தாளம். இவை எல்லாத்தையும் ஒண்ணா எடுத்துப் போட்டா ராக தாளங்கள். அதாவது ஒரு இராகம் ப்ளஸ் அட்லீஸ்ட் இரண்டு தாளங்கள். வந்திருச்சா?

அஜீத் அடானா - ஒருதலை ராகம்
இது நம்மாளுங்க எல்லாரும் போடுவாங்கன்னு எதிர் பார்த்தேன். சிலவங்க மிஸ் பண்ணினது ஆச்சரியம்தான். 'தல' அஜீத். ஒரு தல. ஒருவரே தல! அடானா என்பது ஒரு ராகம். ஆக இது ஒரு தல ராகம் = ஒரு தலை ராகம்.

காததோழன்லி - நண்பனின் காதலி
நண்பன் in காதலி!! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?

இந்தியா - நம் நாடு
என்னங்க இதை போய் சிலவங்க மிஸ் பண்ணி இருக்கீங்க!! இந்திய நாடு நம் நாடு!!

இள இள இள (வேர்ட் ஆர்ட் - சர்க்கிள்) - இளவட்டம்
'இள' என்ற சொல்லால் ஆன வட்டம் ஆகவே இளவட்டம். இளமை ஊஞ்சல் ஆடுகிறது என சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த பதில் இளவட்டம்தான்.வெற்றி பெற்றவர்கள்

இந்த போட்டியில் 20 குறிப்புகளையும் சரியாகச் சொன்ன ஒரே ஆள் நம்ம பாலராஜன் கீதா அவர்கள்தான். அவரை வெற்றியாளராக அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பாலா. உங்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றதிற்காக ஒரு புதிர் புத்தகம் பரிசாகத் தரலாம் என இருக்கிறேன். நல்ல ரீபஸ் புத்தகமே தேடுகிறேன். அது கிடைக்கவில்லை என்றால் வேறு புதிர்கள் கொண்ட புத்தம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.

பல முறை நான் தொடர்ந்து தவறான விடை என்றாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் (அதாவது, மறுபடியும்!) வந்து தொடர்ந்து முயன்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக முக்கியமாக கோகிலவாணி கார்த்திகேயன் அவர்கள்.

கலந்து கொண்ட அனைவரின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அனைவரும் இப்புதிர்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Friday, June 01, 2007

சிறுவர் சிரிப்பே சிறப்பு! - (வெ.வ.வா)

உண்மையில் இந்த வெண்பா பதிவு மே 31ஆம் தேதியே வந்திருக்கணும். அன்றுதான் உலக புகையிலை மறுப்பு தினம். இது பற்றி நம்ம சாத்தாங்குளத்தாரும், நாமக்கல்லாரும் போட்டு இருக்கும் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் கூட அதை முன் வைத்து ஒரு வெண்பா பதிவு போடலாமே என நினைத்தேன். ஆனால் சில பல காரணங்களினால் அது போட முடியாமல் போனது. அதற்கு பதிலாக எப்பொழுது போடலாம் என யோசித்த பொழுது குழந்தைகள் தினமான இன்றே போடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.

இன்று ஜூன் 1, இன்றைக்குப் போய் குழந்தைகள் தினமென சொல்கிறானே இந்த கிறுக்கன் அது நவம்பர் 14ஆம் தேதி நேரு பிறந்தநாள் அன்றல்லவா வரும் என என்னை விநோதமாகப் பார்த்தீர்களானால் நீங்கள் மேற்கொண்டு கட்டாயம் படிக்க வேண்டும். ஏனென்றால் வேறு சில நாட்களைப் போல் இல்லாமல் குழந்தைகள் தினம் உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. ஐநாவால் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் சர்வதேச குழந்தைகள் தினம், உலகின் பல்வேறு நாடுகளில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.

அதில் குறிப்பிடம் படியாக சைனா, செக் குடியரசு, வட கொரியா, ரஷ்யா, ஆர்மேனியா, அசர்பெய்ஜான், கசக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், லட்வியா, லித்துவேனியா என பல மாஜி சோவியத் நாடுகள் உட்பட பெரும்பாலான கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜூன் ஒன்றாம் தேதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இன்றும் ஜெர்மெனியின் சில இடங்களில் கம்யூனிச ஆட்சிக்காலத்தின் மிச்சங்களில் ஒன்றாக ஜூன் 1 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. போர்சுகலும் அதன் காலனியாக இருந்த நாடுகளிலும் கூட இன்றுதான் குழந்தைகள் தினம். கம்யூனிச நாடுகள் மட்டும்தான் என இல்லாமல் அதற்கு நேரெதிராக விளங்கும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆகவே இன்றும் குழந்தைகள் தினம்தான் நண்பர்களே!குழந்தைகள் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவர்களின் குமிழ் சிரிப்புதான். அது மட்டுமில்லை குழந்தைகள் கடவுளை ஒத்தவர்கள் எனவும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். குழந்தைக் கடவுள்கள் எனப் பார்த்தால் உடனடியாக நமக்கு ஞாபகத்திற்கு வருவது கண்ணனும் முருகனும்தான். அவர்களையும் ஆட்டத்திற்கு இழுத்து "சிறுவர் சிரிப்பே சிறப்பு! " என்ற ஈற்றடியைக் கொண்டு வெண்பா வடிக்கலாம் வா தொடரின் அடுத்த பகுதியாய் இந்த பதிவைப் போட்டு இருக்கிறேன்.

நட்சத்திர வாரமாய் இருப்பதால் இந்த ஒரு முறை மட்டும் வெண்பா இல்லாமல் புதுக் கவிதையாய் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் ஈற்றடி கொடுத்த அடியாகவே இருத்தல் அவசியம். முதலில் நான் வெண்பாவாகவே எழுத முயல்கிறேன்.


திருமால் மருகன் தினந்தோள் முருகன்
குருவாய் அமர்ந்த குமரன் அருளால்

கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த

சிறுவர் சிரிப்பே சிறப்பு!


பட உதவி: ஆனந்த்

சில விவாகரத்துக் குறிப்புகளும் ஜீவனாம்ச கேள்விகளும்...

இப்படித் தமிழ்மணத்தில் ஊறிப் போய் கிடந்தால் வேற என்ன நடக்கும், இதெல்லாம் உனக்குத் தேவைதான் என முனகிக் கொண்டு வரும் நண்பர்களே. என் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. கவலை வேண்டாம்!! இது என்னைப் பற்றிய பதிவு இல்லை. பொதுவானதொரு பதிவுதான்!! சமீபத்தில் படித்த சில செய்திகளால் தூண்டப்பட்டே இந்த பதிவு.

மூன்று பாகங்கள் கொண்ட பதிவு இது. பாகம் ஒன்று சற்றே சுவையான செய்தித் தொகுப்பினை பகிர்ந்து கொள்வது. பாகம் இரண்டும் மூன்றும் விவாதக் களம். உங்க கருத்தை கட்டாயம் வந்து சொல்லுங்க.

விவாகரத்துக் காரணங்கள் - ஒரு சுவையான தொகுப்பு

Marriage is an institution அப்படின்னு சொல்லறவங்க பல பேரு. Wedding is a word, Marriage is a sentence! அப்படின்னு சொல்லறவங்க கூட்டம் அதிகம். நம்ம சமூகத்தில் திருமண பந்தம் புனிதமானது எனக் கருதப்படுகிறது. அதற்கு நாம் தரும் மரியாதை அலாதிதான். ஆனால் அதனை ஒரு விளையாட்டாக எண்ணுபவர்களும் எத்தனையோ பேர். பிரிட்னி ஸ்பியேர்ஸ் கூட குடிபோதையில் நண்பன் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு உடனே விவாகரத்து செய்ததைப் படித்து இருப்பீர்களே. அந்த வகையில் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள் பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது. முதலில் அதனைப் பாருங்களேன்.

கெண்டக்கி மாநிலம்: "நான் பர்கர் சாப்பிடும் பொழுது அதிலுள்ள வெங்காயத்தை என் மனைவியைக் கேட்காமல் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அவள் என்னை அடிக்கிறாள். அதனால் எனக்கு விவாகரத்து தேவை."

கனெக்ட்டிகட் மாநிலம்: "என் மனைவி எழுதிய துண்டு சீட்டு இது - ' நான் சீட்டாட நண்பர்கள் வீட்டுக்குச் செல்கிறேன். வர நேரமாகும். உங்கள் இரவு உணவுக்கான குறிப்பு சேனல் இரண்டில் ஏழு மணிக்கு வரும்.' நான் ஏன் விவாகரத்து கோரக் கூடாது!!"

தென் கரோலினா: காது கேளாத ஒருவர் தன் விவாகரத்து காரணமாகச் சொல்வது -" என் மனைவி என்னை மிகவும் தொண தொண எனப் பேசி நச்சரிக்கிறாள். அவள் அப்படி நச்சரிப்பது சைகை மொழியில்!"

காலராடோ: ஒரு பெண் சொல்வது " அவருடைய பழைய காதலியின் வீட்டைத் தாண்டிச் செல்லும் பொழுது எல்லாம் காரில் என் தலையை அழுத்திக் கீழே தள்ளி, அவருடன் யாரும் இல்லாதது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார். "

ஜியார்ஜியா: இங்கு ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்த காரணம். அவர் அதிக நேரம் வீட்டில் செலவழிப்பதும், அவளிடம் அளவுக்கு மீறி அன்பு மழை பொழிவதும்தான் காரணமாம். He was much too affectionate!!!

நியூஜெர்ஸி: "என் கணவர் எப்பொழுது மடிக்கணினியோடே இருக்கிறார். கண்ட கண்ட நேரத்தில் எழுந்து மின்னரட்டை அடிக்கிறார். கணினி முன் அமர்ந்திருக்கும் பொழுது திடீர் திடீரென சிரிக்கிறார் அல்லது கோபப்படுகிறார். அவரின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் எங்கே பின்னூட்டம் என உளறுகிறார். மருத்துவர்கள் இவர் தீவிர தமிழ்மணமாட்டிஸ் வியாதிக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்." - இது மட்டும் உண்மை இல்லைங்க. வெறும் கற்பனைதான். ஹிஹி...

ஜீவனாம்சம் - சில கேள்விகள்

இப்படி எல்லாம் கண்ட கண்ட காரணத்துக்கு எல்லாம் இங்க விவாகரத்து நடக்குது. Alimony எனப்படும் ஜீவனாம்ச தொகை பலருக்கு வாடகைக்கு அடுத்து இருக்கும் பெரிய செலவாகவே இருக்கிறது. இதனைத் தருபவர்களுக்கு வரிச்சுமையில் சிறுது குறைவதும், பெறுபவர்கள் இதற்கும் சேர்த்து வரி கட்ட வேண்டும் என இது ஒரு பெரிய டாபிக்காகவே ஆகிவிட்டது. பெரும்பாலான சமயங்களில் (99%?) ஆண்கள் பெண்களுக்குத் தருவதாகவே இந்த ஜீவனாம்சத் தொகை இருக்கிறது. Child Support எனப்படும் குழந்தைகளைப் பராமரிக்கப் பட வேண்டிய தொகை யாரிடம் குழந்தை இருக்கிறதோ அவர்களுக்கு மற்றவர் தரும் தொகையாக இருக்கிறது என்ற அளவில் புரிகிறது.

ஆனால் இன்று மற்ற எல்லா வகைகளிலும் சமத்துவம் பேசும் பெண்கள் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? தனது சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு பெண்ணிற்கு அவளது மாஜிக் கணவன் ஜீவனாம்சம் தரத்தான் வேண்டுமா? ஒரு பெண் தனியாகத் தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு என்ன அளவுகோல்? இதனை யார் முடிவு செய்வார்கள்? இதலாம் பற்றி பேசலாம் வாருங்கள்.

ஜீவனாம்சம் - ஒரு புதிய பிரச்சனை

இவ்வளவு எல்லாம் போதாதென்று இப்பொழுது ஒரு புதிய குழப்பம் நீதிமன்றப் படியேறி இருக்கிறது. விவாகரத்தான ஒரு கணவன் தன் மாஜி மனைவிக்கு ஜீவனாம்சம் தந்து கொண்டிருக்கிறார். இந்தப் பெண் ஒரு நாள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறி விடுகிறார். அப்பொழுது அந்த கணவன் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என நிறுத்தி விடுகிறார். ஜீவனாம்சம் பெறுபவர் தன் மாஜி கணவர் தொடர்ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என நீதிமன்ற படி ஏறுகிறார்.

தன் மாஜி மனைவி தற்பொழுது ஒரு பெண்ணாக இல்லை. அவர் ஒரு ஆணாக மாறி விட்டதால், தான் ஜீவனாம்சம் தர வேண்டியது இல்லை. அவர் வேறு பால், வேறு பெயர் கொண்ட வேறு ஒரு நபராகி விட்டார். இவருக்கும் எனக்கும் எந்த விதமான உறவும் இருந்ததில்லை. ஆகையால் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என்பது மாஜி கணவரின் வாதம். தான் இறந்தாலோ அல்லது மறுமணம் புரிந்தாலோதான் ஜீவனாம்சம் தருவதை நிறுத்த வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை. ஜீவனாம்சம் தருவது பழைய உறவுக்காக. தனது பாலின மாற்ற சிகிச்சையால் அந்த உறவு இல்லை என ஆகப் போவதில்லை. ஆகையால் ஜீவனாம்சம் தொடர்ந்து தர வேண்டும் என்பது எதிர் வாதம். நீதிமன்றங்கள் இது வரை தீர்ப்பு வழங்கியதாகத் தெரியவில்லை.

இப்படிப் பார்த்தால் இது சரியா இருக்கு. அப்படிப் பார்த்தால் அது சரியா இருக்கு. நீங்க என்ன சொல்லறீங்க?