அப்பாடா!! ஒரு வாரம் ஆயிடுச்சுங்க. எனக்கே இப்படி இருந்தா உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நமக்கெல்லாம் இந்த ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடறது எல்லாம் ஒத்து வரலைங்க. எழுத ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆச்சு. இன்னும் 100 போஸ்ட் கூட போடலை. இந்த சற்றுமுன் பார்ட்டிங்க எல்லாம் என்னடான்னு 83 நாட்களில் சகத்திரம் போஸ்டுங்களாம். நமக்கெல்லாம் அந்த ஸ்ட்ரைக் ரேட் ஒத்து வராது. இனிமே இந்த மாதிரி ஒரு நாளுக்கு ஒண்ணுன்னு எல்லாம் சொன்னா ஒரு தடவைக்குப் பத்து தடவை யோசிக்கணும்.
அதுவும் பின்னூட்டங்களை வெளியிடறதும், அதற்குப் பதில் சொல்லறதும், அடுத்த பதிவு எழுதறதும், வழக்கம் போல மத்தவங்க பதிவுகளுக்குச் சென்று உள்ளேன் ஐயா என்பதுமாக மூச்சு முட்டி விட்டது. இனி ஒரு நாள் கூட தாங்கியிருக்காது என்றே நினைக்கிறேன். நல்லபடியாக ஒரு வாரம் ஓட்ட முடிந்ததே பெரிய விஷயம்.
மீள் பதிவு பண்ணியாச்சு, பயணக் கட்டுரை எழுதியாச்சு, சமையல் குறிப்பு போட்டாச்சு, புதிர் போட்டி, வெண்பா விளையாட்டு எல்லாம் விளையாடியாச்சு. நேயர் விருப்பத்தில் மீதி இருப்பது ஒரு இசைப் பதிவுதான். கச்சேரியில் மங்களம் பாடுவது மாதிரி நம்ம நட்சத்திர வாரத்தின் இறுதி பதிவாக ஒரு இசைப் பதிவு போடலாம் என்று எண்ணிய போது வந்தது மங்களம் பாடுவதைப் போட்டே நிறைவு செய்து விடலாமே என்ற இந்த ஐடியா.
பொதுவாக நாம் 'நீ நாம ரூபமுலகு' எனத் தொடங்கும் மங்களத்தைத்தான் பாடிக் கேட்டு இருப்போம். சில கலைஞர்கள் வேறு மங்கள பாடல்கள் பாடிக் கேட்டதே இல்லை. ஆகவே நாமும் அந்த பாடலையே முதலில் கேட்போம். சௌராஷ்ட்டிர ராகம், ஆதி தாளத்தில் அமைந்த இந்த பாடல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜரால் இயற்றப் பெற்றது.
|
ஆனால் இது தவிர வேறு பல பாடல்கள் கூட ஒரு கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு இருக்கின்றன. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இது போன்று பல பாடல்களைப் பாடுவார் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தற்பொழுது இளைஞர்களில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இப்படி வித்தியாசமான பாடல்களை தொடர்ந்து மங்களமாக பாடி வருகிறார்.
அவர் பாடியவைகளில் இருந்து எனக்குப் பிடித்த இரண்டு மங்களப் பாடல்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலாவது பாடல் 'ராமசந்த்ராய ஜனக' எனத் தொடங்கும் குறிஞ்சி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பத்ராசலம் இராமதாஸ் இயற்றிய பாடல். ஒரு கச்சேரியின் முடிவில் ஆரவாரமாக வரும் இந்த பாடலை கேட்கும் போதே ஒரு குஷி வரும் பாருங்கள்.
|
அடுத்தது 'புஜகசாயினோ' எனத் தொடங்கும் யதுகுலகாம்போதி ராகம் ரூபக தாள பாடல். இப்பாடலை இயற்றியவர் சுவாதித் திருநாள் அவர்கள். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்ற உணர்வினைத் தரும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.
|
அப்புறம் தமிழ்ப் பாடல்கள் இல்லையா என்று கேள்விகள் எல்லாம் வேண்டாமே என மத்யமாவதி ராகத்தில் அமைந்த நம் பாரதியார் பாடல் ஒன்று. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.
|
இந்த மங்கள பாடல்களோடு நான் எனது நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன். இந்த வாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், வாழ்த்தி ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும், உப்புமா பதிவுக்கு உறுதுணையாக இருந்த பெனாத்தலாருக்கும் எனது நன்றிகள். அப்புறம் ரொம்ப முக்கியமாக இந்த வாரம் பூராவும் நம்மளை ஃப்ரீயாக (சிலேடை!!) விட்ட தங்கமணிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
இது போன்று இந்த நான்கு பாடல்களைப் போடப் போகிறேன் எனச் சொல்லி அனுமதி கேட்ட உடன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தைத் தந்த கிருஷ்ணா அவர்களுக்கு என் நன்றிகள்.
பட உதவி : திரு. ஹரிஹரன் அவர்கள்.