Sunday, June 25, 2006

ஆறிப் போகுமுன் ஒரு ஆறு பதிவு

இந்த ஆறு விளையாட்டுக்கு நம்மளை அழைத்தது குமரன். என்ன எழுதலாமுன்னு யோசிக்கும் போது எண்ணங்கள் ஆறா ஓடுனதுல ஒரு ஆறு சங்கதிகள் மட்டும் சொல்லறேன். அட இதுக்கே ஓடினா எப்படி? ஆறு மனமே ஆறு.

ஆறுதான் நம்ம எண்களிலேயே முதல் மாசறு எண் (Perfect Number). அதாவது ஒரு எண்ணை வகுத்தால் வரும் முழு எண்களைப் பெருக்கினாலோ, கூட்டினாலோ, வகுக்கப்பட்ட அதே எண் வந்தால் அது மாசறு எண்ணாகும். இங்கு ஆறை வகுத்தால் வரக்கூடிய எண்கள் 1,2 மற்றும் 3. இந்த மூன்று எண்களை கூட்டினாலோ, பெருக்கினாலோ 6 வருவதால் அது மாசறு எண் என அழைக்கப்படுகிறது. (இதுக்கு வேற பேர் இருக்காங்க? எனக்கு தெரியலை. சும்மா மாசறு எண் அப்படின்னு நானா மொழிபெயர்ப்பு செஞ்சுக்கிட்டேன்). சரி கணக்கு தெரியும் என கணக்கு காட்டியாகிவிட்டதா? இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.

1) ஆறு பற்றி சொல்ல வந்தா முதலில் நம் ஆறுமுகனின் ஆறுபடைவீடுகள்தான் ஞாபகம் வரும். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு வரி செய்தி. தெரிந்தவர்கள் மேலதிக விபரங்கள் சொல்லுங்களேன். எல்லாம் பலவேறு இடங்களில் படித்தது. தப்பா இருந்தா சொல்லுங்கப்பூ.

திருப்பரங்குன்றம் - நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதியது இங்குதான்.

திருச்செந்தூர் - குன்றில் அமையாமல் கடற்கரையில் அமையப் பெற்ற கோயில் என கூறப்பட்டாலும் இக்கோயிலின் கருவறை அமைந்த இடம் ஒரு சிறு குன்று.

திருவாவினன்குடி - பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சுவாமிமலை - இங்கு கோயிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை பழைய தமிழ் முறைப்படி இருந்த 60 வருடங்களைக் குறிக்கின்றன.

திருத்தணி - முருகனே தனக்குப் பிடித்த மலையாக திருத்தணியை கூறியதாக கந்தபுராணம் கூறுகின்றது.

பழமுதிர்சோலை - சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.

2) விளையாட்டை எடுத்துக்கிட்டீங்கன்னா, பல விளையாட்டுகளில் இந்த எண் முக்கியமானதா இருக்கு. கிரிக்கெட்டில் ஆறு ரன்கள்தான் அதிகமாகப் பெறக்கூடியது. அதே போல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள். டென்னிஸில் ஒரு செட் முடிய ஆறு ஆட்டங்கள்தான் பொதுவாக ஜெயிக்க வேண்டும். அமெரிக்காவில் விளையாடும் ஃபுட்பாலில் டச்டவுண் செய்தால் ஆறு புள்ளிகள். ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் ஒரு விதமான ஃபுட்பாலிலும் ஒரு கோல் அடித்தால் ஆறு புள்ளிகள். வாலிபாலில் ஒரு அணியில் ஆறு பேர்கள்தான் விளையாடுவார்கள். அதே கதைதான் ஐஸ் ஹாக்கியிலும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி என்ன ஆறுக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தம்? யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

3) இப்போ நமக்குப் பிடித்தமான ஒரு விஷயம் - சாப்பாடு! அறுசுவை விருந்து எனச் சொல்கிறோம். அந்த ஆறு சுவைகள் என்னன்னு கேட்டா தித்திப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு அப்படின்னு ஒரு லிஸ்ட்டும் போடுவோம். ஆனா நம்ம ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில்லெல்லாம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு சக்தி இருக்கிறதாவும் அதனால எல்லா விதமான சுவையையும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அளவாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இந்த பலன்கள் என்னவென்று பார்ப்போமா?

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

ஆனா நம்ம அலோபதி மருத்துவத்தில் இந்த மாதிரி இல்லை. இதைப் பற்றி அந்த துறை சார்ந்தவர்கள் கொஞ்சம் விவரமா சொல்லுங்க. எது சரி?

4) அடுத்ததா நம்ம மற்றொரு விருப்பமான விஷயமான சினிமாவுக்கு போகலாம். கெவின் பேக்கனின் ஆறு பாகைகள் (Six Degrees of Kevin Bacon ) அப்படின்னு ஒரு விளையாட்டு இருக்கு. இந்த கெவின் பேக்கன் ஒரு அமெரிக்க நடிகர். உலகத்தில் எந்த நடிகரை எடுத்துக் கொண்டாலும் அவருடன் இணைந்து நடித்தவர்களைச் சங்கிலியாகக் கொண்டு கெவின் வரை வர ஆறு இணைப்புகளே போதும் என்பதுதான் இந்த விளையாட்டு. உதாரணமாக நம்ம ரஜினியை எடுத்துக் கொண்டால் அவர் நடித்த கிஷன் கன்னேயா என்ற திரைப்படத்தில் உடன் நடித்தவர் சாயீத் ஜாப்ரி. இவர் டே ஆப் த சைரன்ஸ் என்ற படத்தில் ஜான் மொராய்ட்டிஸ் என்பவருடன் நடித்துள்ளார். ஜான், வேர் த ட்ரூத் லைஸ் என்ற படத்தில் கெவினுடன் நடித்துள்ளார். ஆகவே சூப்பர் ஸ்டாரின் கெவின் எண் 3. இதே போல் கமலை எடுத்துக்கொண்டால் அவர் இதே சாயீத்துடன் சாகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகவே இவரின் கெவின் எண்ணும் 3. (அப்பாடா ரெண்டு பக்கமும் அடிக்க மாட்டாங்க). யாராக இருந்தாலும் ஆறு படிகளில் கெவினை அடைந்து விடலாமாம்.

இதற்காக வெர்ஜினியா பல்கலைகழகத்தில் ஒரு வலைப்பக்கம் அமைத்து இந்த விளையாட்டுக்காக வசதி செய்துள்ளார்கள். நீங்கள் விளையாடிப் பார்த்து யாருக்காவது ஆறு படிகளுக்கு மேல் வருகிறதா எனப் பாருங்களேன். (நம்ம புரட்சிக் கலைஞர் இந்த லிஸ்ட்டில் இல்லவேயில்லை. நீங்கள் அவர் பெயரைப் போட்டு விட்டு காணவில்லை என என்னை அடிக்க வராதீர்கள்.)

5) சினிமா பத்தி பேசும் போது மற்றொரு முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்ம தளபதி சிபி இருக்காரே. அவரோட ஃப்ரெண்டு (பின்ன என்ன வெறும் நட்புன்னுதானே அறிக்கை எல்லாம் விட்டுக்கறாங்க) நயன்தாராவிற்கு ஒரு கையில் ஆறு விரலாம். ஆனா அது வெளிய தெரியாத மாதிரி பாத்துக்கறாங்களாம். மெய்யாலுமாப்பா?

6) கடைசியா (உண்மையில் முதலிலேயே) ஆறு என எண்ணத் தொடங்கிய உடன் நினைவுக்கு வருவது சிக்ஸ் பேக் பியர்தான். அடிக்கிற வெயிலுக்கு அதுதான் சரிப்படும். வாங்கிட்டு வந்ததை கவனிக்கணும். அதனால இதோட ஆட்டம் க்ளோஸ்.

போறதுக்கு முன்னாடி நான் யாரையாவது ஆறு பேரைக் கூப்பிடணும். போன தடவை இந்த மாதிரி நாலு விளையாட்டு விளையாடும் போது கூப்பிட்ட நாலு பேரில் மூணு பேர் இப்ப எழுதவே காணும். அதனால வேண்டியவங்களைக் கூப்பிடவே பயமா இருக்கு. சரின்னு அந்த ஆறுமுகன் மேல பாரத்தைப் போட்டுவிட்டு கூப்பிடறேன். இதில் யாராவது ஏற்கனவே கூப்பிடப் பட்டிருந்தால் சொல்லுங்க. மாத்திடலாம்.

1. வெண்பா வாத்தி ஜீவா
2. வரலாற்று டீச்சர் துளசி
2.பாலர் கதை சொல்லும் பரஞ்சோதி
2. சங்கச் சிங்கம் ஜொள்ளுப்பாண்டி
3. டா கில்லி கோட் தந்த பெனாத்தலார்
3. செய்திகளைச் சூடாகத் தரும் ஆவி பறக்கும் இட்லிவடையார்
4. நம்ம ர.ம.செ.த, தேவு தம்பி
5. பமகவின் நிரந்தர தலை முகமூடியார் (உள்குத்து எல்லாம் இல்லாம சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு தலைவா.)
5. காமெடி ஸ்பெஷலிஸ்டாக உருவாகி வரும் கோவி.கண்ணன்
6. பெரியவர் ஹரிஹரன்ஸ் (இப்போவாவது மீண்டும் பதிவு போட ஆரம்பிக்கறாரான்னு பார்ப்போம்)

(சிலர் பல முறை அழைக்கப்பட்டு விட்டதால், அதே எண்களில் இன்னும் சிலர்.)

கஷ்டப்பட்டு எழுதியாச்சு. ஒரு 'ஆறு'தல் பரிசாவது தாங்கப்பா.

Friday, June 02, 2006

தரமாய் பதிவொன்று தா (வெ.வ.வா)

மதுமிதா அவர்கள், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்காக வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விபரங்களையும், வலைப்பூவைத் தொடங்கிட தூண்டுதலாய் இருந்தது என்னவென்பதையும் ஒரு பதிவாய்ப் போட்டு, அதன் சுட்டியை அவருக்கு அனுப்புமாறு சொன்னார்கள். அதன்படி அநேகம் பேர் அனுப்பிவிட்ட நிலையில், இதோ என்னைப் பற்றிய விபரங்கள்.

வெறும் விபரங்களைப் பதிவாய் போட வேண்டாமே என யோசித்து அவர் கேட்டதையே ஒரு வெண்பாவாய் வடித்திருக்கிறேன். அதன் ஈற்றடிதான் 'தரமாய் பதிவொன்று தா'. இதை வைத்து சற்றே வேகம் குறைந்த வெண்பா வடிக்கலாம் வா தொடரை மீண்டும் துவங்குகிறேன். இந்த வாரத்தின் ஈற்றடியை வைத்து வெண்பா வடிக்கவே வாருங்களேன். முதலில் என் முயற்சி.

வலைஞரைக் கேட்டார் மதுமிதா வாகாய்
'சளைக்காமல் சொல்வாய் சரியாய் - வலைப்பூக்
குரமாகி வந்தவொரு உந்துத லென்ன?
தரமாய் பதிவொன்று தா'.

மதுமிதாவிற்காக என் விபரங்கள்.

வலைப்பதிவர் பெயர் : இலவசக்கொத்தனார்

வலைப்பூ பெயர் : இலவசம் தான் வேறென்ன?

சுட்டி(url) : http://elavasam.blogspot.com

ஊர் : எடிஸன், நியூ ஜெர்ஸி

நாடு : அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் அப்போதைய தலைவர், திரு. முத்துசாமி செல்வராஜ். இவர் வலைப்பூ வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் பெரும்பாலான பதிவுகளைப் படித்துவிடுவார். அவரின் மூலம் முதலில் அறிமுகமானது என் பள்ளி ஜூனியராக ஆகிப்போன டுபுக்குவின் வலைப்பூ . அதன் மூலம் அப்படியே தமிழ்மணத்தில் நுழைந்து, இப்பொழுது போதை தலைக்கேறி தமிழ்மணம் பக்கம் வராமல் இருக்க முடியாத நிலமை.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜனவரி 10, 2006

இது எத்தனையாவது பதிவு : 27

இப்பதிவின் சுட்டி(url) : http://elavasam.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : தமிழ் மறந்து போவது போல ஒரு உணர்வு. முதலில் மற்ற பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள் இடத் தொடங்கினேன். கடைசியில் நமக்கே நமக்கான்னு ஒரு வலைப்பூ.

சந்தித்த அனுபவங்கள் : ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புது அனுபவம்தான். அதான் எந்த ஊருக்கு போனாலும் யாராவது வலைப்பதிவாளர்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறோமே.

பெற்ற நண்பர்கள் : எந்த ஊர்ப் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது.

கற்றவை : முதலில் மனசு வெச்சா நம்மால எதுவும் முடியும் என்ற நம்பிக்கை. சீரியஸ் கட்டுரை, நகைச்சுவைக் கட்டுரை, வெண்பா என எல்லாமே கைப்பழக்கம்தான் என்ற புரிதல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : புதிர், பயணக்கட்டுரை, வெண்பா, சமையற்குறிப்பு, சமயக்குறிப்புன்னு நினைச்சதை எழுத முடியுது. நம்ம பதிவில் எல்லாரும் ஆடுற பின்னூட்ட விளையாட்டைப் பத்திக் கேட்கவே வேண்டாம்.

இனி செய்ய நினைப்பவை : புதுசா என்ன? இப்படியே யாருக்கும் மனக்கஷ்டம் வராம பதிவெழுதிக்கிட்டுப் போகவேண்டியதுதான்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சராசரி ஆசைகள் உள்ள ஒரு சராசரி மனிதன். அவ்வளவுதான். நம்மைப் பத்தி சில விஷயங்கள் சொன்ன பதிவு இது.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : இருக்கும் கொஞ்ச நாள் எல்லாரையும் அரவணைத்து சச்சரவு இல்லாமல் விட்டுக்கொடுத்துதான் செல்வோமே.