Thursday, April 26, 2007

ஆப்பு விமர்சனம் - பெனாத்தலாரின் ஆப்பு!

(முதலில் சன் ரீவியில் வரும் திரை விமர்சனம் நிகழ்ச்சியில் வருவாங்களே அந்தம்மா குரலில் படிச்சுக்கோங்க.)

இன்னிக்கு நாம விமர்சனம் பண்ணப் போற ஆப்புரேசல் பெனாத்தலாரின் ஆப்பு. வ.வா.சங்கத்தின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா வந்திருக்கிறது பெனாத்தலாரின் இந்த ஆப்பு.

ஒரேடியா பாராட்டாமலும் அதே சமயம் வெறும் குறைகளா அடுக்காம நடுநிலைவியாதியா இந்த ஆப்பைத் தந்திருக்காரு பெனாத்தலார். அதிலும் வீக்னஸ்களை அடுக்கி ஆரம்பித்த அவர் நேர்மையைப் பாராட்டியே ஆகணும்.

இந்த ஆப்புரேசல் பத்தி சிறப்பு விமர்சகர் கொத்ஸ் அவர்கள் என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம்.

(இனி கொத்ஸ் குரலில் படிக்கணும். என் குரலை கேட்டிராதவங்க சிம்மக்குரலோன் சிவாஜி குரலில் படிச்சுக்கோங்க.)

வீக்னெஸ் எல்லாம் சொல்லி ஆரம்பிச்சிருக்காரு. நல்ல விஷயம்தான். ஆனா பாருங்க. இந்த ஆப்புரேசலில் பல விஷயங்கள் ஒளிவு மறைவா இருக்கு. அதைப் பத்தி நாம இப்போ பார்க்கலாம்.

உதாரணமா அவருக்கு ஃபளாஷ் தெரியும் என்பதற்காக வெறும் எழுத்துக்களில் நகைச்சுவையைத் தரும் மற்ற அட்லஸ் வாலிபர்களை மட்டம் தட்டும் அதிகாரப் போக்கு ரொம்பவே கண்டிக்கப் படவேண்டியது.

(இந்த மாதிரி பேசறது கமல் பேட்டி மாதிரி ரொம்ப செயற்கையா இருக்கு, அதனால இனிமே அவரைப் பார்த்து பேசற மாதிரி சொல்லிடறேனே. சிம்பிளா இருக்கும்.)

//நகைச்சுவையை வெளிப்படுத்த எத்தனையோ மீடியங்கள் இருந்தாலும்//

இந்த ஒரு ஃப்ளாஷ் ஒண்ணைக் கத்துக்கிட்டீராக்கும். அதுனால எதுக்கு எடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ். அதாண்டி உனக்கு விக்கியில் வெச்சோம் ஆப்பு. புகைப்படக்கலை பெரியவர் ஆனந்த் வாயாலையே ஃப்ளாஷ் ஒரு வேஸ்ட் அப்படின்னு சொல்ல வெச்சாச்சு இல்ல.

//அனுபவ நகைச்சுவை, பொதுமைப்படுத்தப்பட்ட கேரக்டர்கள் என்ற இரு
பாகங்களிலேயே ஏறத்தாழ எல்லா பதிவுகளையும் வகைப்படுத்திவிடலாம்.//

கைப்புவிற்கு ஆப்பு ஸ்டைல் நாடகங்களைக் குறைத்துக் கொண்டு மற்ற வகையிலும் எழுத வேண்டுமென்பது என் ஆசையும் கூட. இந்த ஒரு விஷயத்தில் நானும் ஆமாஞ்சாமி போடறேன்.

அதே போல் சில சமயங்களில் வாரத்திற்கு ஏழு பதிவுகள், சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு பதிவு என இல்லாமல் சீரான அளவு பதிவுகள் வரணும். இதைப் பத்தியும் நீங்க ஒரு வரி சொல்லி இருக்கலாம்.

//நான் அட்லஸா இருந்தப்ப சிவாஜி ரீ-ரிலீஸ் பண்ணேன்..//

அவனவன் அட்லஸ் ஆகட்டும், அல்லது நகைச்சுவை போட்டியாகட்டும் மைண்ட் எல்லாம் கசக்கி புதுசு புதுசா எழுதுறான், இப்படி ரீரிலீ்ஸ் பண்ணறதே அசிங்கம், அதுல பெருமை வேற! த்தூ!!

இதுக்கு துணைக்கு வள்ளுவர் வேற, ஒரிஜினல் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
உப்புமா பிராண்ட் பதிவு தவிர வேற எதாவது பதிவு போட்டு இருக்கீராய்யா? ;-)

(அப்பாடா, மாற்றுக் கருத்து சொன்னவன் யோக்கியதையைக் கேள்வி கேட்கணுமே என்ற தமிழ் மரபை மீறலை. என்ன நம்ம பின்புலம் அப்படி, அதனால விளிம்புநிலை மாந்தர்களின் வலி தெரியலை, அதனால நாகரீக அளவுகோல் இன்னமும் க்ரீமீ லேயர் லெவலிலேயே இருக்கு.)

//வெளியே போற சிரிப்புமூட்டிகளையும் மாசத்துக்கு ஒருத்தரா சேத்து விளையாடறதால //

உம்மைச் சேர்த்துக்கிட்டதுனால சும்மா சிரிப்புமூட்டின்னு சொல்லிக்குவீராய்யா? அம்புட்டு பேசறீரே அவங்க நடத்துன நகைச்சுவை போட்டியில் ஒருத்தனாவது அட்லஸாய்யா? வந்துட்டாரு என்னமோ பெருசா சொல்ல. அவங்க இளிச்சவாயனுங்களா யாரு மாட்டறாங்கன்னு பிடிச்சுப் போடறாங்க.

(இதுக்கு மேலும் வெற்றி பெற்றவர்கள் சங்கத்தில் அட்லஸ் வாலிபராக வருவார்களேயானால், காப்பிரைட் வழக்கு வழக்கம்போல் பாயும் என்பதைத் தெரிவித்துக் கொல்கிறேன்.)

//எவ்ளோ கஷ்டம்ங்கறது விக்கிக்கு கஷ்டப்படற கொத்தனாரைப் பாத்தபிறகுதான் புரிஞ்சுகிட்டேன்.//

வாராவாரம் உமக்கு பதிவு போடுன்னு அனுப்பற மெயில் எல்லாம் படிக்கறீரு போல. அட்லீஸ்ட் அது இன்னும் நேர டிலீட் பண்ணற அளவு போகலையே. அது வரை சந்தோஷம். :-D

//இப்படிப் பதிவிட்டால் பின்னூட்டம் வரும் //
//ஒத்தை வரிப் பின்னூட்டங்கள்//

என்னமோ புகையுற வாசனை அடிக்கலை?

//Opputunities//

'aappar' tuni 'tease'??

1. கும்பலோட கோவிந்தா. அடி வாங்குனாலும் ஆளுக்குக் கொஞ்சம்தான் விழும்.
2. புதிய மொந்தையில் பழைய (நகைச்சுவை) கள்?
3. சும்மா 100 பதிவு போட்டிக்கு வரணமுன்னு பழசு புதுசுன்னு எல்லாத்தையும் வாங்கி வெச்சுக்காதே. (நல்ல ஆளய்யா நீரு. உமக்கு பழசு எல்லாம் எடுத்துப் போட ஐடியா வரலைன்னதும், இப்படி எல்லாம் அறிவுரை!)
4. அதாவது இப்போ எழுதறதுக்கு சிரிக்க முடியலை. சிரிக்கணுமுன்னா அட்லீஸ்ட் ஒரு ஜோக்காவது போட்டு வை. இதானே சொல்ல வறீரு?

அடுத்தவனை ஆராயச் சொன்னா நல்லாத்தான்யா செய்யறீரு! கரும்பு தின்ன கூலியா வேணும்! :)))

(மீண்டும் சன் ரீவி அம்மா.)

இப்படி வீக்னஸ், ஸ்ட்ரெங்த், த்ரெட்ஸ், ஆப்பர்சூனிடீஸ் என பல விதமான கோணங்களில் சங்கத்தினைப் புரட்டிப் பார்த்த ஆப்புரேசல் இந்த ஆப்புரேசல்.

பெனாத்தலாரின் ஆப்பு சூப்பரப்பு.

Wednesday, April 25, 2007

இடம், பொருள், ஏவல் - Floralia 2007!!


டிஸ்கி

இது ஒரு விளம்பரப் பதிவு. அதனால் இது உயரெல்லை வந்து முகப்பில் இருந்து செல்லும் வரை இதில் எந்த விதமான கிலேசமும் இன்றி பின்னூட்டக் கயமைத்தனம் செய்யப்படும்.

என்னடா இது மங்களத்தில் இருந்து கச்சேரியை ஆரம்பிக்கிற மாதிரி டிஸ்கியில் இருந்து தொடங்கறானேன்னு பார்க்கறீங்களா? இப்போ எல்லாம் பதிவு எழுதறதுக்கு முன்னாடி டிஸ்கி எழுதிட்டா பெட்டர் அப்படின்னு தோணுது அதான்.

பதிவு ரொம்ப சின்னதுதான். நாம முன்னமே சொன்ன Floralia 2007 - வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு விளம்பரம்.இடம் : இது பத்தி நம்ம கே.ஆர்.எஸ். சொல்லிட்டாரு பாருங்க
பொருள் : இது பத்திதான் நாம முன்னமே சொல்லியாச்சே
ஏவல் : இது வரை வரேன்னு முடிவு பண்ணிச் சொல்லாதவங்க பின்னூட்டத்தில் வருகையை சொல்லிடுங்க.


அம்புட்டுதான் மேட்டர்.

Wednesday, April 18, 2007

கோச்சிங் செண்டர் நோட்டீஸ்!

இடம் : வ.வா.சங்கம்

கைப்பு வழக்கம் போல் பேண்டேஜ் பாண்டியனாக உள்ளே நொண்டியபடி வருகிறார். சங்கத்தில் தேவ், தம்பி, விவசாயி, புலி எல்லாரும் ஒரு பக்கமாக உக்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அருகே உட்கார்ந்து கொண்டு சங்கத்துக் கணக்கு வழக்கை எழுதிக் கொண்டு இருக்கிறார் வெட்டி. இதிலெல்லாம் சேராமல் புத்தகமும் கையுமாய் ஒரு ஓரத்தில் ராயல். இன்னொரு சைடில் பேனாவை முகவாயில் தட்டியபடி ஒரு கவுஜ எழுதும் மூடில் இருக்கிறார் சிபி. தல தலையைக் கண்டவுடன்....

தேவு: தல என்ன ஆச்சு? இன்னைக்கு யாரு முறைவாசல் வெச்சாங்க? அந்த பாழாப் போன கட்டதொரையா? இல்ல அந்த படுபாவி பார்த்திபனா? யாரு அடிச்சாங்க தல? இது யாரு வேல?

குறுக்கில் புகுந்த விவ்ஸ் : யாரு அடிச்சா என்னடா? தல, எங்கெங்க அடிச்சாங்க? எப்படி எப்படி அடிச்சாங்க அதச் சொல்லுங்க தல.

கைப்பு:
ஏண்டா நாதாறிப் பசங்களா, இங்க ஒருத்தன் கண்டபடி அடி வாங்கிட்டு வந்திருக்கேன், இப்படி நிக்க வெச்சு கதையாட கேட்கறீங்க? சினிமாவாடா பாத்துட்டு வரேன் உங்களுக்கு கதை சொல்ல? வாங்குனது பூரா அடிடா அடி. நான் அப்படி எல்லாம் அடி வாங்குறது உங்களுக்கு எல்லாம் மொறவாசல் வெச்சு செய்யுற வேல மாரியாடா தெரியுது?

சிபி: தல, எனக்கு ஒரு டவுட்டு, அடிக்கிற கைதான் அணைக்கும் அப்படின்னு சொல்லுவாங்களே. அடிச்ச பின்னாடி உங்களை அணைச்சாங்களா தல?

கைப்பு: ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்க. என்னடா கேள்வி கேக்குற. அவனுங்க எல்லாம் பாத்தா அணைக்கிற ஆளுங்க மாதிரியாடா தெரிஞ்சுது, அவனுங்க அணைச்சது எல்லாம் அவனுங்க குடிச்சுட்டுப் போட்ட சிகரெட்டைதாண்டா.

வெட்டி: தல, உங்களை அடிச்ச கூட்டத்துல ரெட்டி, ராவ் ஆளுங்க யாராவது இருந்தாங்களா? அப்படி எதனா இருந்தா சொல்லுங்க. நான் அப்படி சைலண்டா போயி உக்காந்துக்குறேன்.

புலி: வெட்டி, இப்படி தெலுங்கு வாசனை வீசுனாலே ஆஃப் ஆனா எப்படி? நடந்தது நடந்து போச்சு, நாட்டுல வேற ஊராடா இல்லை? சிக்கிம், கேரளா, கர்நாடகா, ஒரிஸ்ஸா அப்படின்னு லாட்டிரி விக்கிற ஊருங்க இன்னும் எத்தினி இருக்கு, அதுல எதாவது பிடிச்சிக்க வேண்டியதுதானே. இல்லைன்னா சூடான் பக்கம் வா, சூடா எதுனா புடிச்சித் தரேன்.

இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருக்கும் போது அங்கு ஒரு கண்ணாடியை ஸ்டைலாக சுத்திக் கொண்டு வரும் ஜொள்ளுப்பாண்டி, "ஹாய் பாய்ஸ். தல, வாட் ஹேப்பண்ட்? வொய் பேண்டேஜ்?" என்கிறார். அதுவரை அடங்கிப் போய் இருந்த கைப்பு ஆவேசமாக அழத் துவங்குகிறார்.

கைப்பு: எல பாண்டி, நாங்க பாட்டுக்குச் செவனேன்னுதானே இருந்தோம். சும்மா இருந்த பயலுவளை நீதானடா கோச்சிங் செண்டர் ஆரம்பிக்கறேன், கேச்சிங் செண்டர் ஆரம்பிக்கிறேன்னு உசுப்பி விட்ட. அது எங்க போயி முடிஞ்சிருச்சி பாருடா. பப்ளிக் எல்லாம் சேந்து என்னிய இப்படி சாத்திப்புட்டாங்க பாருடா.

சத்தம் தாங்க முடியாமல் புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிப் பார்த்து ராயல் " தல விசயத்தைச் சொல்லுங்க. இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி நம்ம பாண்டிய வையறீங்க? அவன மாரி உண்டா, அவன் ஸ்டைல் என்ன, அவன் நடை என்ன?" எனத் ஆரம்பிக்க.

கைப்பு: டேய் இருடா. இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? இந்த பாழாப் போன பாண்டி கோச்சிங் செண்டர் ஆரம்பிச்சானா, அதுக்கு நோட்டிஸ் அடிச்சு என் கிட்ட குடுத்தான். இத்தன அப்பரசண்டிங்க இருக்கீங்களேன்னு பார்க்காம நானும் போயி கடைவீதியில் நின்னுக்கிட்டு போறவன் வரவனுக்கெல்லாம் அந்த நோட்டீஸைக் குடுத்துக்கிட்டு இருந்தேன். அப்ப அங்க வந்தாண்டா அந்த பார்த்தி பய.

கைப்ஸ் மூஞ்சியில் கொசுவர்த்தி சுழல்கிறது.

தனக்கே உரிய நீல பட்டு சட்டை வேட்டியில் கைப்பு கடைத்தெருவில் நின்று கொண்டு நோட்டீஸ் குடுத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பின்னாடி நின்று கொண்டு அவரைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார் பார்த்தி.


கைப்பு தெருவில் செல்லும் ஒருவரிடம்: டேய் இங்க வாடா, நோட்டீஸ் குடுத்துக்கிட்டு இருக்கோமில்ல. வாங்கிட்டுப் போகணமுன்னு தெரியாதா? நீயெல்லாம் எதுக்குடா ரோட்டுல நடந்து வர? நாங்க யாருன்னு தெரியுமில்ல. ரௌடிடா ரௌடி.

பின்னால் இருக்கும் பார்த்தி முன்னால் வருகிறார். அவரைப் பார்த்தவுடன் மனதிற்குள் 'எங்க போனாலும் பின்னாடியே வரானே, இன்னைக்கு இவன் கிட்ட வாய குடுத்து மாட்டக் கூடாது' அப்படின்னு நினைச்சுக்கிட்டு பார்த்தியைப் பார்த்து சிரிக்கிறாரு கைப்பு.

கைப்பு:
வணக்கமுண்ணே.


பார்த்தி:
டேய், நான் என்ன உனக்கு அண்ணனா?


கைப்பு (மனதிற்குள்):
ஆஹா. வணக்கம் சொன்னாக்கூட வம்புக்கு இழுக்கறானே. இன்னிக்கி என்னென்ன செய்யப் போறானோ


பார்த்தி:
என்னடா மொனகுற? அது என்ன கையில?

கைப்பு:
அது ஒண்ணுமில்லை. வெறும் பேப்பரு.


பார்த்தி:
எதுக்குடா வெறும் பேப்பரை போறவன் வரவன் கையில எல்லாம் குடுக்குற? எதனா வேண்டுதலா? எனக்கும் குடுடா பார்ப்போம்.


கைப்பு:
இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? விடுங்க. (மனதிற்குள் - இத வெச்சுக்கிட்டு என்ன செய்வானோ, சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணணும். ஆண்டவா, நீதாண்டா என்ன காப்பாத்தணும்)

பார்த்தி: ஆண்டவன் கிட்ட அப்பீல் பண்ணுனா விட்றுவோமா? குடுன்னு ஒழுங்க கேட்டா குடுக்க மாட்ட இல்ல, உன்னிய...

கைப்பு:
ஐய்யோ, உங்களுக்கு இல்லாத பேப்பரா, ஒண்ணு என்ன எல்லாத்தையும் எடுத்துக்குங்க. நான் வரேன்.

பார்த்தி: டேய் நில்றா. நில்றான்னு சொல்லறேன் இல்ல. அப்படி என்னதான் போட்டு இருக்கு நீ ஊருக்கு எல்லாம் குடுக்குற பேப்பருல?

எந்த நேரத்தில் என்ன நடக்கப் போகுதோன்னு பயத்தில், சாதுவாய் கைப்பு பக்கத்தில் நிற்க, பார்த்தி பேப்பரை படிப்பதும், கைப்புவைப் பார்ப்பதுமாக இருக்கிறார். பேப்பரை பல தடவை படிக்கிறார்.


பார்த்தி:
டேய் இதுல என்ன போட்டு இருக்குன்னு தெரியுமா உனக்கு?


கைப்பு:
நம்மளை என்ன எழுதப் படிக்க தெரியாத ஆளுன்னு நினச்சியா? அதெல்லாம் தெரியாமத்தேன் குடுப்போமா? எல்லாம் நான் சொல்லித்தேன் நம்ம பசங்க பிரிண்ட் அடிக்கவே குடுத்தாங்க. இப்ப அதுக்கென்ன?


பார்த்தி:
அப்போ இதுல போட்டு இருக்கறது எல்லாம் நீங்க செய்யறீங்க.


கைப்பு:
செய்யறோம்.
செய்யறோம். அதுக்குத்தானே நோட்டீஸ் அடிச்சுக் குடுக்கறோம். சும்மாவா பின்ன. எல்லாம் நம்ம மக்களுக்காக சேவை. தெரியுமில்ல.

பார்த்தி பக்கத்தில் போகும் சனங்களைப் பார்த்து : ஐயா, கொஞ்சம் இங்க வாங்க. அம்மா நீங்களும் வாங்க. இந்த நோட்டீஸைப் பாருங்க. இதுல போட்டு இருக்கறதை எல்லாம் இவனுங்க செய்வாங்களாம். அதுல தெனாவட்டா வேற பேசறான். ஏண்டான்னு கேட்டா என்னையே முறைக்கிறான். இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க.

நோட்டீஸைப் படித்த சனங்கள் எல்லாம் வெறி ஏறி கைப்புவைப் போட்டு மொத்தி நார் நாராய் கிழிக்கிறது. எல்லாம் அடித்து விட்டு ஓயும் பொழுது பக்கத்தில் இருக்கும் பார்த்தியிடம்.

கைப்பு:
நீ வரும் போதே தெரியும் என் நிலம இப்படித்தான் ஆவப் போவுதுன்னு. இம்புட்டு அடிச்சாங்களே அப்படி என்னத்தய்யா சொன்ன அவங்க கிட்ட?


பார்த்தி:
நீ ஒரு நோட்டீஸ் குடுத்தியே, அதுல கடைசி வரிய படிச்சுப் பாருடா.


கொசுவர்த்தி ரிவர்ஸில் சுற்றி முடிக்கிறது.

கைப்பு: இதாண்டா நடந்தது. நமக்காக ஒரே ஒரு நோட்டீஸ் எடுத்துக்கிட்டு வந்தேன். அப்படி என்னடா போட்டு இருக்கு நம்மள இந்த அடி அடிக்க, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கடா.

நோட்டீஸை வாங்கிப் படித்த அப்பரசண்டிகள் கிரேசி மோகன் டிராமாவில் காணாமல் போகும் நடிகர்கள் போல அப்பீட் ஆகிறார்கள். காற்றில் பறந்து கீழே விழுந்த நோட்டீஸ் இங்கே.

நான் ஏன் வைக்கணும் ஆப்பு?!!

வ.வா.சங்கம் ஆரம்பிச்சு வருசம் ஒண்ணாச்சாம். அதுக்காக ஆண்டு விழாவாம், ஆர்ப்பாட்டமாம் என்னென்னவோ செய்யுதாங்க அந்தப் பசங்க. அதுக்கு நடுவில அவங்குள ஆப்புரேசல் செய்யணுமாம். அதுவும் நாமதேன் செய்யணுமாம். இது எப்படி இருக்குன்னு பாத்தியாலே. நம்மூருல ஒரு வசனம் சொல்லுவாக - திருடன் கையில சாவியக் குடு. அப்பத்தேன் திருடாம இருப்பேம்முன்னு. அந்த மாதிரி இவுக ஆப்புரேசலுக்கு நம்மள கூப்புடுதாக. பின்ன என்னங்கேன். இவுக சங்கத்துல இல்லையே தவுர, இவுக சங்கம் ஆரம்பிச்ச அன்னையிலேர்ந்து இவனுங்க கூடவேத்தானேல நாமளுஞ் சுத்திக்கிட்டுக் கிடக்கோம். அப்படி சப்போர்ட் செய்யுத கூட்டாளி நம்மள போயி இந்த ஆப்புரேசலுக்குக் கூப்பிட்டா எப்படி? என்ன சப்போட்டுன்னால கேக்க, இப்படி ஒரு கூமுட்டைத்தனமா கேள்வி கேட்டா நான் என்னத்தச் சொல்ல?

அவங்க மொதப் பதிவுல ஆரம்பிச்சுப் பின்னூட்டம் போட்டு நல்லாயிருங்கடேன்னு சொன்னதச் சொல்லவா? இல்லை அவங்க நல்லது செய்யும் போதும் சரி, எங்கயாவது சார்ட் கட் அடிக்கும் போதும் சரி, அங்ஙன போயி அதச் சொல்லி அவங்களுக்கு நம்ம பாசத்தைக் காமிச்சதைச் சொல்லவா? இல்ல அவங்க தல ஆப்பு வாங்கும் போது சுத்தி நின்னு வேடிக்கை பார்த்ததத்தேன் சொல்லவா? இதெல்லாம் விடுங்கடே, நம்ம வலையுலகின் சுட்டிச் சுனாமியாய் வளய வரும் பாபா இருக்காருல்லடே, அவரே சொல்லி இருக்காரு , நாமதேன் சங்கத்தின் புகழை திக்கெட்டும் பரப்புரவங்களில் ஒருத்தர் அப்படீன்னு. இதுக்கு மேல என்னடே வேணும் புரூப்பூ?

இருந்தாலும் இதெல்லாம் நம்ம பசங்களுக்கும் தெரியாம இல்லை. எந்த விளையாட்டானாலும் சரி, நம்மளையும் வயசு வித்தியாசம் சேத்துக்கிடுதாங்கல்லா. இப்படித்தான் பாருங்க, அன்னைக்கு நம்மாள் ஒருத்தர் வந்து சேட் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அப்பம் நம்ம வயசக் கேட்டாரு. நாமளும் வெள்ளந்தியா நம்ம வயசச் சொன்னா நம்ப மாட்டேங்குதாரு. நீங்க எழுதறத பாத்தா அப்படித் தெரியலையேங்காரு. அது உண்மையாச் சொன்னாருன்னு வெச்சிக்கிட்டா அதுக்குக் காரணம் இந்த மாதிரி பசங்களோட சேர்ந்து சிரிச்சு வைக்கறதுனாலதானேடே. சிரிச்சா இளமையோட இருக்கலாமுன்னு சொல்லுவாங்க. அது சங்கத்துச் சிங்கங்களை பொறுத்த வரை சரிதானே. அவங்க எழுதுறதப் படிச்சா நம்ம இளமையா இருக்கோமில்ல. இந்த மாதிரி சிரிக்க வைக்கற பசங்களைப் போயி நாம என்னத்த ஆப்புரேசல் பண்ண?

அது மட்டுமில்லை. அவனுங்க எதாவது புதுசா செய்ய நினைச்சாங்கன்னு வெச்சுக்கோ அதை எல்லாம் டெஸ்ட் பண்ணறது நம்மளை வெச்சுத்தான். அது அவங்க ஆரம்பிச்சு வெச்ச அட்லஸ் திட்டமாகட்டும், இல்ல அனுப்பி வெச்ச கிரிக்கெட் டீமாகட்டும், அது எல்லாத்துலயும் நமக்கு இடம் உண்டு. அம்புட்டு ஏன் இந்த ஒரு வருஷக் கொண்டாட்டத்தில் அவங்க கொஞ்சம் சீரியசாக பாத்தாகளா? அதுக்கும் நாந்தேன் மாட்டிக்கிட்டேன். சும்மா கட் பேஸ்ட் பண்ணிட்டுப் போற நம்மளை டூத் பேஸ்ட் கணக்கா புழிஞ்சு எடுத்துட்டாங்கல்லா. இப்படி ஆசையாப் பாசமா இருக்குற பசங்களை, நம்மளை ஒண்ணுக்குள்ள ஒண்ணா வெச்சுப் பழகற பசங்களைப் போயி நாமாளே ஆப்புரேசல் செய்யலாமோ?

சரி, என்னதேன் தாயா மகளா இருந்தாலும் வாயும் வயிறும் வேறன்னு சொல்லுவாங்க இல்ல, அப்படி நமக்கும் இந்தப் பசங்களுக்கும் என்னதேன் ஒத்துப் போவாம இருக்கு அப்படின்னு பார்த்தா இந்த கட்சி மேட்டர்தான் இருக்கு. ஆனா அதையும் எங்க சின்ன மருத்துவர் ஐயா சும்மா இப்படி பிச்சி பிச்சு வெச்சுட்டாரு. அது மட்டுமில்லாம நம்மூரில மருத்துவர் கட்சியில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் வந்து பொறுப்பு வகிக்கிறாப்புல நம்ம தம்பி தேவு வேற நம்ம ரசிகர் மன்ற செயல் தலைவரா இருந்து அரும் பணி ஆத்திக்கிட்டு இருக்காரு. அவரு அப்படி அரும்பணி ஆத்த மீதி சங்கச் சிங்கம், புலி, எருமைன்னு எல்லாம் துணைக்கு நிக்கறாய்ங்க. இவங்களைப் போயி நாம என்னத்த ஆப்புரேசரது போங்க.

சரிய்யா. அதெல்லாத்தையும் விடுங்க, இங்க பாருங்க.


இந்த மாதிரி மொகத்தை வெச்சுக்கிட்டு இருக்குற ஒரு நல்லவரு தலமை தாங்குற சங்கமப்பா இது. அதுல இருக்குற பசங்களைப் போயா நாம ஆப்புரேசறது? ச்சீ. அதெல்லாம் சரி கிடையாதுப்பா.

அப்படியே ஆப்புரேசனமுன்னாலும் நாமதேன் முன்னமே இவங்களை ஆப்பிரேசியாச்சே. ஆப்புரேசலில் போன ஆப்புரேசலை எடுத்து அப்படியே தேதி மாத்தறதும் கூட ஒரு வகைதானேடே. அந்த மாதிரி அதையே இங்க எடுத்துப் போடறேன்.

முதலில் சங்க தல கைப்பூ , அவருக்குப் பின்னாடி வரிசையா மத்த சங்க சிங்கங்கள் மற்றும் புலி.

சங்கத் தலையவன் சிங்காரச் சென்னையில்
வங்கக் கடலோரம் வாழ்பவன் - எங்களின்
நல்லதொரு நண்பனாம் நம்மவன் கைப்புக்கு
எல்லோரும் தந்தாரே ஆப்பு

தேவாதி தேவன் சிரிப்புக் கதிபனவன்
கேவாத தலைக்குக் கரம்

ஜொள்ளு வடித்திடும் பாண்டியவன் வந்து
அள்ளும் கடலை பார்

கலாய்த்தலே தந்தொழிலாய் கொண்ட நம்மவர்
இளாவின் வறுத்தலே பார்

புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
புலியார்க்கு வெள்ளை மனசு!

அபிவரும் கோலங்கள் பார்த்தால் அழுகை
சிபியால் வருமே சிரிப்பு

கட்டாயம் கொல்டி கதைதான் நிஜமில்லை
வெட்டிதினம் சொல்லும் கதை

மேயலே வேலை சிறுவன் இவனுக்கு
ராயலெனும் பேரே சிறப்பு
சரி, நம்மளாலதான் ஆப்படிக்க முடியலை, யாரத்தேன் கூப்பிடலாமுன்னு பார்த்தா, இன்னைக்கு நாட்டுல நடக்குற கூத்து எல்லாத்தையும் அவரு பாணியில ஆப்படிக்கிற ஆப்பின் சிகரம் அண்ணன் இட்லிவடையார்தான் ஞாபகத்துக்கு வந்தாரு. அண்ணனையே அடுத்து ஆப்பு அடிக்குமாறு வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, April 15, 2007

தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நியூ ஜெர்ஸியில் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்றை வசந்த விழாவாக கொண்டாட இருப்பது பற்றிச் சொல்லி இருந்தோம். இந்த சமயத்தில் பேச இருக்கும் தலைப்புகளில் ஒன்றாக "தமிழ்மண சேவைகளில் நாம் விரும்பும் மாற்றங்கள்" என்ற ஒரு தலைப்பையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

இந்த சமயத்தில் அங்கு வந்து பங்கேற்கும் பதிவர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களின் கருத்துக்களும் விருப்பங்களும் கேட்டு அதனையும் குறித்து விவாதித்து, அனைத்து கருத்துக்களையும் தொகுத்து தமிழ்மண நிர்வாகத்தினரின் பார்வைக்கு அனுப்பலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்.

தமிழ்மணத்தின் தற்போதைய சேவைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் என்ன?

தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மேலதிக சேவைகள் என்னென்ன?


இவை தொடர்பாக உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். ஆக்கபூர்வமான கோரிக்கைகளையும் யோசனைகளையும் தமிழ்மண நிர்வாகத்தினர் கட்டாயம் பரிசீலிப்பார்கள் என நம்புகிறோம். அவற்றை பயனர்கள் என்ற முறையில் அவர்களுக்குத் தெரியப்படுத்துவது நம் கடமை எனவும் நம்புகிறோம். ஆகையால் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.

டிஸ்கி : பூங்கா மற்றும் தமிழ்மண நட்சத்திர தேர்வுகள் முறையே பூங்கா ஆசிரியக் குழு மற்றும் தமிழ்மண நிர்வாகிகளின் தனிப்பட்ட தேர்வுகள் என்பதால் அதில் கருத்து கூற வேண்டாம் என்பது எங்கள் எண்ணம். அதனால் திரட்டி என்ற வகையில் தமிழ்மணத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை மட்டுமே பற்றி பேசினால் பொருத்தம் என நினைக்கிறோம்.

Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?

இன்னிக்கு வெட்டி போட்ட இந்தப் பதிவைப் படித்தேன். நமக்குத்தான் இந்த விஷயத்தில் பல தகவல்கள் தெரியுமே, அதைப் பத்தி சொல்லாம இருக்கலாமா அப்படின்னு நம்ம மனசாட்சி குத்தவேதான் இந்தப் பதிவு. என்னதான் ஆணி புடிங்கும் வேலை அதிகமா இருந்தாலும் தமிழ் வலைபதிவர்களுக்கான சேவையை சரியாச் செய்யணும் இல்லையா. அதனாலதான் இப்படி. இது பத்தின facts and figures எல்லாம் குடுத்து உங்க எல்லார் அறிவுக் கண்களை திறந்து விட்டுடலாம் என்ற கருத்துக்கு மதிப்பளித்து இதோ இந்தப் பதிவு.

இந்த க்ரீமீ லேயர் பத்தி பேசறதுக்கு முன்னாடி க்ரீம் அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா? அதனால முதலில் அது பத்திப் பேசலாம். பாலில் நிறைந்து இருக்கும் கொழுப்புசத்தானது பாலின் மேற்புறத்தில் வந்து சேர்கிறது. இப்படி திரண்டு வரும் கொழுப்பானதே க்ரீம் என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கத்தைப் படிக்கும்போதே உங்களுக்கு அந்த கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பு மனக்கண்ணில் தெரிகிறது அல்லவா.

இன்று அமெரிக்காவில் இந்த கொழுப்புச் சத்து நீக்கப்படாத பாலினை Whole Milk எனச் சொல்லுவார்கள். படிப்படியாக இந்த கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் வகைகளை முறையே 2%, 1% மற்றும் ஸ்கிம் (Skim) பால் என அழைப்பார்கள். இவற்றில் உள்ள கலோரி மற்றும் கொழுப்பு சத்துக்களின் அளவுகளைப் பார்க்கலாமா? 8 அவுன்ஸ் (சுமார் 225மிலி) பாலில் உள்ள அள்வுகள் இது
வகை -------- கலோரி---கொழுப்புச்சத்து
முழுப்பால்--- 155----------8.5 கிராம்
2% பால்-------120----------4.5 கிராம்
1% பால்-------100----------2.5 கிராம்
ஸ்கிம் பால்---80----------0.0 கிராம்
இது கிட்டத்தட்ட ஒரு கிளாஸ் அளவு பாலில்! இது ரொம்ப அதிகமாகத் தெரியவில்லை என்றாலும் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் பாலாவது அருந்துகிறோம் என்று எடுத்துக் கொண்டு, ஒரு பவுண்டு (சுமார் அரைக்கிலோ) எடையேற 3500 கலோரிகளே தேவையானது என்பதை நினைவில் கொண்டோமானால், கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் அரைக்கிலோ எடைக்கு உண்டான கலோரிகளை அதிகமாக அருந்துகிறோம்.

அது மட்டுமில்லாமல் இதில் உள்ள கொழுப்பானது நம் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மூன்று கிளாஸ் பாலில் நமக்கு ஒரு நாளைக்கு வேண்டிய அளவு கொழுப்பு இருக்கிறதாம். நாம் சாப்பிடும் மற்ற உணவுகளில் இருக்கும் கொழுப்பை எங்க கொண்டு போய் வைப்பது? அது மட்டுமில்லாமல் இந்த கொழுப்பில் அதிக அளவு இருப்பது Saturated வகையைச் சேர்ந்த கொழுப்பாம். இதனால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், கான்ஸர் எல்லாம் வரும் வாய்ப்பு அதிகமாம்.

அதனால் இன்று மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் இப்படி கொழுப்பு நீக்கிய பாலை அருந்துவதே நல்லதாம். ஒரு படிமேலே சென்று சோயாப்பால், அரிசிப்பால் என அருந்தினால் இதைவிட நல்லதாம். இப்படி வகை வகையாய் பால் கிடைக்காத இடங்களில் பாலைக் காய்ச்சின பின் மேல் வரும் பாலாடையை , அதாங்க க்ரீமீ லேயரை, நீக்கிவிட்டு பின் பாலைக் குடித்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் சேராது.

ஆகவே இன்று கொழுந்து விட்டு எரியும் இந்த பிரச்சனைக்கு விஞ்ஞானரீதியான எனது தீர்ப்பு க்ரீமி லேயரை நீக்குவது நல்லதே!!

டிஸ்கி: வெட்டி, ரொம்ப சீரியஸா நீர் எழுதி இருக்கும் பதிவின் பெயரை எடுத்து இந்த பதிவை போட்டதுக்கு மன்னிக்கவும்.

Thursday, April 05, 2007

Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !

பண்டைக்கால ரோமேனியர்களின் நம்பிக்கைப்படி பூக்களுக்கும் இளவேனிற்காலத்திற்குமான தெய்வம் ஃப்ளோரா . இன்றைக்கு ஃப்ளோரா என்று செடி கொடிகளை அழைக்கக் காரணமும் இந்த தெய்வம்தான். இத்தெய்வத்தைக் கொண்டாடும் வகையில் ப்ளோரேலியா என்ற ஒரு திருவிழா இளவேனிற்கால தொடக்கத்தில் நடத்தப் பெறுமாம். கடுமையான பனிக்காலம் முடிந்து வாழ்வின் சுழற்சி மீண்டும் துவங்குவதைக் கொண்டாடும் விதமாக ஆட்டமும் பாட்டமுமாக நடைபெறும் விழா இது. பொதுவாக வெள்ளை துணிகளையே உடுத்தும் ரோமேனியர்கள் இந்த நாளன்று வண்ண வண்ணத் துணிகள் அணிந்து இத்தெய்வத்திற்குப் பாலும் தேனும் படைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரு விழா இது. அவர்கள் இத்திருவிழாவைக் கொண்டாடும் நாள் இன்றைய நாள்காட்டியின் படி ஏப்ரல் 28ஆம் தேதியாம்.

இப்போ எதுக்குடா ஹிஸ்டரி கிளாஸ், அதான் இந்த தொந்தரவு எல்லாம் வேண்டாமத்தானே ஸ்கூலிலேயே சாய்ஸில் விட்டோம் அப்படின்னு கேட்கறீங்களா? மேட்டர் இல்லாமலேயா இம்புட்டு பில்டப். நாம காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போற வரை ஒரு விதமான பூவைப் பார்த்துக்கிட்டே இருக்கோமே. அந்த பூக்களையும் இந்தத் திருவிழாவில் சேர்த்துக் கொண்டாடலாம் அப்படின்னு ஒரு ஐடியா. அதுக்குத்தான் இந்த பில்டப். காலைல கண் முழிச்ச உடனே கடகடன்னு கிளம்பி ஆபீசுக்குப் போயி ஆணி புடிங்கி, சாயங்காலம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் தமிழ்மணத்தில் மேஞ்சுட்டு அப்புறமா படுத்தோமா தூங்கினோமான்னு இருக்கோம். இதுல எங்க பூவைப் பார்க்கறதுன்னு அப்படின்னு அலுத்துக்காதீங்க மக்களே. நான் சொல்ல வந்தது நம்ம வலைப்பூக்கள் பத்தி!

போதுண்டா பில்டப்பு, மேட்டரைச் சொல்லுன்னு நீங்க கத்தறதுக்கு முன்னாடி நானே சொல்லறேன்.

நிகழும் 2007ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி, சனிக்கிழமை, கூடிய சுபயோக சுபதினத்தில், அமெரிக்கா நியூ ஜெர்ஸி மாநிலத்தில், இளவேனிற் காலத்தைக் கொண்டாடும் வகையிலும், வலைப்பூக்களைக் கொண்டாடும் விதமாகவும் ப்ளோரேலியா 2007 என்ற திருவிழா நடக்க இருப்பதாக பெரியோர்கள் ஆசியுடன் நிச்சயிக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பத்தாருடனும் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி விழாவை சிறப்பாக நடத்தித் தந்து எங்களையும் கௌரவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

உலகெங்கிலும், முக்கியமாக அமெரிக்க வட கிழக்கு மாநிலங்களில், இருக்கும் பதிவர்கள் வந்து கலந்து கொண்டு இந்த விழாவை வெற்றிகரமான விழாவாக செய்துதர வேண்டுகிறோம். விழா நடக்க இருக்கும் இடம், நேரம் போன்றவை இனி வரும் நாட்களில் அறிவிப்பாக வெளி வரும். தேவையான கட்டமைப்பை செய்வதற்கு தங்கள் வருகையை பின்னூட்டங்கள் மூலம் உறுதி செய்தால் வசதியாக இருக்கும்.

வாருங்கள்! கொண்டாடலாம் Floralia 2007!!


டிஸ்கி: என்னடா இது தமிழ் வலைப்பூக்களுக்கான விழாவுக்கு ஆங்கிலப் பேரா? வரிவிலக்கு கூட கிடைக்காதே எனக் கவலைப்படும் நண்பர்களே, அதுக்கும் காரணம் இருக்கு. இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ஆச்சே! அதான் இப்படி!

Monday, April 02, 2007

அ.ஆ. (அன்பே ஆருயிரே எல்லாம் இல்லைங்க)

சும்மா அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்த பொழுது நம்ம தம்பி வந்து ஒரு சந்தேகம் கேட்டாரு. அவரு கேட்டது "அழகுன்னு எதை சொல்றாங்க?" நானும் நம்மளை மதிச்சு சந்தேகம் கேட்க ஆள் இருக்கேன்னு சந்தோஷத்தோட (அதுவும் நம்ம கிட்ட வந்து அழகைப் பத்தி வேற கேட்கறாரேன்னு டபுள் சந்தோஷம்!) நமக்குத் தோணுனதை சொன்னேன். நான் சொன்னது "எது நம்ம எதிரில் இல்லாத போதும், அதை நினைக்கையில் நம் முகத்தில் ஒரு புன்முறுவல் வருகிறதோ அதே அழகு. அது ஒரு முகமாய் இருக்கலாம். ஒரு படமாய் இருக்கலாம். ஒரு வசனமாய் இருக்கலாம். ஒரு பதிவாய் இருக்கலாம் ஒரு பின்னூட்டமாய் இருக்கலாம் அந்தந்த வகையில் அது அழகு." அதைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்ததை எல்லாம் எடுத்துப் பதிவா வேற போட்டுட்டாரு அவரு.

இருந்தாலும் அவரு கேட்ட கேள்வி நம்ம மனசுலையே சுத்திக்கிட்டு இருந்தது. அவருகிட்ட அழகுன்னா என்னன்னு சொல்லிட்டோம். அதன் படி அழகுன்னா நாம என்ன நினைக்கிறோம், அடுத்தவங்க என்ன நினைக்கறாங்கன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருந்தது. தன் பயித்தியக்காரத்தனம் என்னென்னன்னு லிஸ்ட் போட்ட மக்கள், தங்கள் பார்வையில் எது அழகுன்னு சொல்லாமலேயா இருக்கப் போறாங்க அப்படின்னு தோணுனதுனாலதான் இந்தப் பதிவு. இது வெறும் பதிவு மட்டும் இல்லைங்க. இது அடுத்த தொடர் விளையாட்டின் ஆரம்பம். அந்த தொடர்

அழகுகள் ஆறு!

அதாவதுங்க, அழகுன்னா ஐஸ்வர்யா ராய் என்ற அளவோட நிக்காம நம்ம பார்வையில் அழகான முகம், இடம், நிகழ்வு, குறும்பு, பரிசு என நீங்கள் அனுபவித்த அழகு ஐந்தையும் எந்த அழகான விஷயம் உங்களுக்குக் கிடைக்கவில்லை அல்லது விரும்புகிறீர்கள் என்பதையும் சேர்த்து ஆறு விஷயங்களைப் பத்திச் சொல்லலாமே. பதிவு, பின்னூட்டம் எல்லாம் சொல்லி இருக்கலாம், ஆனா ஏற்கனவே நம்ம பேர் ரிப்பேர் ஆகிக் கிடக்கிற இந்த நேரத்தில் அதெல்லாம் கேட்டு சொ.செ.சூ வெச்சுக்க வேண்டாமேன்னு அதை எல்லாம் சாய்ஸில் விட்டாச்சு. சரி, இந்த ஆறு அழகுகள் பற்றி நீங்கள் எழுத வேண்டும். எழுதிய பின் உங்களுக்குப் பிடித்த மூவரை கூப்பிட்டு எழுதச் சொல்ல வேண்டும். இதுதான் அழகுகள் ஆறு விளையாட்டு. விளையாடறவங்க எல்லாரும் "அழகுகள் ஆறு " என்றே தமிழ்மணத்தில் குறிச்சொல் தந்தால் தேடிப் படிக்க எளிதாக இருக்கும்.

சரி. ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா. முதலில் என்னோட ஆறு அழகுகள்.

1. முகம்
அழகான முகம் அப்படின்னு சொல்லும் போது உடனே மனதில் பல முகங்கள் வந்து போகின்றன. சில நேரங்களில் சில முகங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. ஹேர்கட் பண்ணிவிட்டு வீட்டுக்குப் போகும் பொழுது கடை வாயில்களில் இருக்கும் கண்ணடிக் கதவில் நம் முகத்தைப் பார்த்துக் கொள்வது, மேனேஜரிடம் சண்டை போட்டுவிட்டு வந்து நம் இருக்கையில் அமரும் பொழுது மேஜையில் இருக்கும் நம் குடும்பத்தாரின் முகம், சமீபத்தில் வாழ்நாள் விருது வாங்கிய என்றும் இளமையோடு இருக்கும் ரேகாவின் முகம், தேவர் மகன் படத்தின் பாதியில் சிகையலங்காரம் மாற்றி, தாடி எடுத்துப் பெரிய மீசையுடன் வந்து நம்மை ஆவெனப் பார்க்கச் செய்த கமல் முகம் என்று முகங்கள் பல இருந்தாலும், இத்தனை முகங்களுக்கு நடுவே ஒரு முகம் கொஞ்சம் அதிக அழகாக இருக்கும். அது உன்னுடன் முதல் வகுப்பில் அமர்ந்த முதல் நண்பியாக இருக்கலாம், கன்றுக் குட்டிக் காதல் வந்த அந்தப் பெண்ணாக இருக்கலாம் அல்லது உடன்பிறவா சகோதரியான பக்கத்து வீட்டு பத்மா அக்காவாக இருக்கலாம். அது போல் ஒரு முகம் எனக்குள்ளும் இருக்கிறது. அது எனக்கு மட்டுமேவாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

2. இடம்
இடத்திற்கும் பஞ்சமில்லை. எத்தனையோ இடங்கள். சலசலவென ஓடும் தாமிரபரணி ஆற்றின் நடுவே இருக்கும் பாறை, சிருங்கேரியில் துங்கா நதியில் காலை நனைத்தவாறு அமர்ந்திருக்கும் படித்துறை, நயாகரா நீர்வீழ்ச்சியில் நம் மீது தண்ணீர் விழும்படி நிற்க முடிந்த Cave of the winds, பிராத்தனா ட்ரைவ் இன் தியேட்டர், அமைதியான கோயில் பிரகாரங்கள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளுக்கு எல்லாம் மேல் எனக்கு அழகான ஒரு இடம் நான் வசித்த ஒரு வீட்டில் மா மரத்தின் கீழே இருந்த துணி தோய்க்கும் கல்தான். அதன் கீழ் அமர்ந்து சந்தோஷப் பட்ட, துக்கப்பட்ட, என்னை நானே கேள்விகள் பல கேட்டுக் கொண்ட தருணங்கள் பல. இன்று அந்த வீடும் இல்லை அந்த கல்லும் இல்லை. இருப்பதெல்லாம் வெறும் நினைவுகள்தான்.

3. நிகழ்வு
இதுக்கு ரொம்ப போட்டி இல்லைங்க. என் மகன் பிறந்து சில நிமிடங்களுக்குப் பின்னால் அழகாக ஒரு துணியில் சுற்றப்பட்டு நம்ம கையில் தரப்பட்டான் பாருங்க. உண்மையில் அந்த தருணத்துக்கு ஈடே இல்லைன்னு நினைக்கிறேன். நான் ஒரு தந்தை என்ற உணர்வாகட்டும், குழந்தையின் முகமாகட்டும், அவன் மீது நம் விரல் பட்ட ஸ்பரிசமாகட்டும், அதாங்க அழகு! இன்னும் சிலரைக் கேட்டா முதலில் சொன்ன முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமுமே அவங்களுக்கு அழகுதான்னு சொல்லுவாங்க. இல்லைன்னா சொல்ல முடியும்!

4. குறும்பு
நான் சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு போன் வந்தது. அந்தக் குரல் அமெரிக்காவில் இருக்கும் என் நண்பியின் (உறவும் கூடத்தான் ஆனால் உறவுக்கெல்லாம் மேல் நட்புதான்!) குரலைப் போலவே இருந்தது. உடனே உற்சாகத்தில் நானும் பேச ஆரம்பித்து விட்டேன். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் வந்து கொண்டிருந்தது. ஒரு அரை மணி நேரத்திற்கு பின்னால்தான் ஒரு கேள்விக்கு சொதப்பலாய் பதில் வர நான் பேசுவது வேறு யாருடனோ எனத் தெரிய வந்தது. உண்மையிலேயே அது ராங் நம்பர். அப்புறம் அவர்களோடு அடிக்கடி போனில் பேசுவது உண்டு. சென்னையில் இருந்த வரை நல்ல நண்பர்களாக இருந்த நாங்கள் பார்த்துக் கொண்டதே கிடையாது. சென்னை விட்டு வந்த பின் தொடர்பு விட்டுப் போனது. இன்று இணையத்தில் முகம் பார்த்திராமல் இத்தனை நண்பர்கள் இருந்தாலும் அன்றே அப்படி ஒரு நட்பு கிடைத்ததற்குக் காரணம், ராங் நம்பர் என்று சொல்லி பேச்சை நிறுத்திடாமல் வளர்த்த அவர்களின் குறும்புதானே! (நான் செய்த குறும்பைச் சொல்லி சொ.செ.சூ வைத்துக் கொள்வேன் என்று நினைத்தவர்களுக்கு என் அனுதாபங்கள்!!)

5. பரிசு
இதுவும் எவ்வளவு வேணாலும் எழுதற மேட்டர். பரிசு கிடைக்கிறது சின்னவங்களா இருந்தாலும் சரி, பெரியவங்களா இருந்தாலும் சரி, மனதில் ஒரு சந்தோஷம் வரது ஒரு இயற்கையான விஷயம்தான். இதைப் பத்தி சொல்லணுமுன்னா படிச்சப்போ வாங்கின பரிசுகள், குடும்பத்தார் தந்த பரிசுகள், மணமாகும் முன், மணமான பின் அப்படின்னு ஆரம்பிக்கலாம். தங்கமணியைக் கேட்டா நான் அவங்களுக்குன்னு செஞ்ச பிரத்யேகமான வாழ்த்து அட்டையைச் சொல்லலாம். (ஒரு காலத்தில் விளம்பரத் துறையிலும் இருந்தோமில்ல. நண்பர் ஒருவரின் கம்பெனி மூலம் நம்ம ஐடியா, கோவையில் விளம்பரப் பலகையா ஜொலிச்சு இருக்கு!) இல்லைன்னா எதிர்பாராத நேரத்தில் பையன் தரும் முத்தத்தைச் சொல்லலாம். எல்லாமே பரிசுதான். ஆனா வாழ்க்கையில் சில நட்புகள் அமையறதுதாங்க இருக்கிறதுலயே பெரிய பரிசு. அது அப்பா, அக்கா அப்படின்னு கூட இருக்கலாம். அந்த மாதிரி ஒரு நட்புதாங்க நம்ம வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பரிசு.

6. இல்லாத அழகு
நம் நாட்டில் எவ்வளவோ அழகு இருக்கு. ஆனா பாருங்க எவ்வளவு அழகு இருந்தாலும் நமக்கு நல்லா வெச்சுக்கத் தெரியலை. நாம தினமும் போய் வர ரோடாகட்டும் இல்ல ஒரு அமைதிக்காகச் செல்லும் ஒரு அருவியாகட்டும் எங்க போனாலும் நாம போயிட்டு வந்த சுவடா குப்பையைப் போட்டுட்டு வரதுல நாமதான் கிங். நம்ம நாட்டை விட்டுட்டு வெளிய வந்தாலே இது அவ்வளவு மோசமா இருக்கறது இல்லை. ஏன் நாம் மட்டும் இப்படி இருக்கோம்? வளர்ந்தவர்களை ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா பள்ளியில் பசங்களுக்குச் சொல்லித் தந்தால் அவர்களாவது நன்றாக வைத்துக் கொள்வார்களா? கற்றுக் கொடுப்பவர் வெளியில் போய் குப்பையை விட்டெறிவதை மாணவர்கள் பார்த்தார்களானால் அவர்களுக்கு சொல்லித் தந்ததைச் செய்யத் தோணுமா? இதுக்கு என்னதான் வழி?

சரி. நான் ஆடறது ஆடியாச்சு. அடுத்து ஆடறவங்களைக் கூப்பிட வேண்டியதுதான். சரி, ஒரு மூணு பேரைக் கூப்பிடலாம். அவங்க அழகை நாமளும் தெரிஞ்சுக்கலாம். ஒரு சிறு ஓடையாய்த் தொடங்கி இருக்கும் 'அழகுகள் ஆறு' என்ற தொடரைப் பெரிய ஆறா ஓடவிடும் பொறுப்பை இவங்க தலையில் வெச்சுடலாம். நான் அழைக்க விரும்பும் மூவர்

  1. தம்பி (நம்மளை இப்படி ஒரு தினுசா யோசிக்க வெச்சதுனால)
  2. துளசி டீச்சர்
  3. வல்லி சிம்ஹன் அம்மா