Thursday, October 22, 2020

வல்கனைசிங் வரலாறு!

சிங் என்று பெயர் இருந்தாலே சீக்கியர் என நினைக்கக்கூடாது. தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலும் சிங் என்ற பெயர் கொண்டவர்கள் உண்டு. ராஜா சிங், ஜெயசிங் என்ற பெயர்களைக் கொண்டவர்களை சர்வசதாரணமாகப் பார்க்க முடியும். இதையே ராஜாசிங் பாண்டியன் என மீசையை முறுக்கவும் வகை செய்து இருப்பார்கள். எனக்கே இந்த மாதிரி சர்தார்ஜி இல்லாத சிங் நண்பர்கள் உண்டு. 

கல்லிடையில் இருந்து அம்பையில் உள்ள பள்ளிக்குச் செல்லும் பொழுது வல்கனைசிங் என்ற பெயர் கொண்ட கடைகள் இரண்டு தென்படும். எதேனும் வேலையாக நெல்லைக்குச் சென்றால், போகும் வழியிலும் சரி, அங்கும் சரி பல வல்கனைசிங் கடைகளைப் பார்க்கலாம். என்னடா இது, வல்கனைசிங் என்ற ஒத்தை ஆளு ஊர் ஊராகக் கடை திறந்து வைத்திருக்கிறாரே என எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வெகு நாட்களுக்குப்பின்தான் அது Vulcanizing எனப்படும் விதத்தில் டயர்களை சரிசெய்து தரும் கடைகள் அவை என அறிந்து கொண்டேன். 

இப்படி மூலம் தெரியாமல் மாறிப் போன சொற்கள் பெயர்கள் மீது ஒரு காதல் வரக் காரணமாக இருந்ததே இந்த நிகழ்வுதான் என நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் பார்ப்போம். 

Hamilton Bridge, அம்பட்டன் வாராவதி ஆகி மீண்டும் Barber's Bridge என்றான கதை எல்லாரும் அறிந்ததே. ஆனால் இது போன்ற பிழைகள் என்றாலே உணவகங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். மஞ்சூரி என சீனாவிலேயே கேள்விப்பட்டிராத பெயரை சீன உணவுக்கு வைத்தவர்கள் நம் ஆட்கள். Vanilla என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் வெண்ணிலா என எழுதி, Vanilla Burfi என்பதை வெண்ணிலா பர்பி என்றாக்கி, அதையே மீண்டும் ஆங்கிலத்தில் Vennilla Purby என எழுதும் திறமை கொண்டவர்கள் நம் ஆட்கள். சுக்குணி என்றால் என்ன தெரியுமா? Zucchini என்ற காய்தான் பாவம் சுக்குணி என்றாகி அதையே ஆங்கிலத்தில் Zukkuni என்று எழுதப்பட்டதும் நடந்திருக்கிறது. 

மேற்கத்தியப் பெயர்களை தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழும் பெற்றோர் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது செய்யும் கலவரம் பற்றித் தனிப் பதிவே எழுதலாம். Gorky, தன் பெயர் தமிழில் கார்க்கி ஆகி திரும்பவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விதங்களைக் கண்டால் வெறுத்தே போய் விடுவார். சமீபத்தில் அப்படித்தான் ஒரு Bernatsha-வை பார்க்க நேர்ந்தது. இந்த கதி மேற்கத்திய பெயர்களுக்கு மட்டும்தான் என நினைக்க வேண்டாம், வடவர் பெயரையும் இவ்விதமே வதைப்போம். நம் முதல் பிரதமர் Jawagarlal Negru. அவர் அப்பா Modilal. அரசியல் வேண்டாம் என்றால் கிரிக்கெட்டில் Ragul Dravid.  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.  அவ்வளவு ஏன் நம் மயிலாப்பூர் கபாலி கூட Kapali என்றாகாமல் Kabali என்றானது சூப்பர்ஸ்டார் கைங்கர்யம். 

அது என்னவோ கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டியதை எல்லாம் அழுத்தாமல் மென்மையாகச் சொல்வது நம் மொழிக்கே உரிய அழகுதான் போல. அதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதும் பொழுதுதான் கொஞ்சம் உதைக்கிறது. Boori, Gireedam, Kaligambal, Magarashtra, Sagunthala, Rasiga, நவராத்திரி சமயத்தில் Golu, எனப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் கொஞ்சம் பல் கூசத்தான் செய்கிறது. ஒரு துணிக்கடையில் Frogs என்ற பெயர்ப்பலகை பார்த்தது இதன் உச்சம். இவங்களை எல்லாம் உள்ள தள்ளி உட்கார வைக்கலாம்ன்னு Barole கேட்பாங்களேன்னு பயமா இருக்கு. 

இந்தக் கொடுமை ஒரு பக்கம்ன்னா கர்நாடிக் பாட்டு பாடறவங்க கிட்ட தமிழ் மாட்டிக்கிட்டு முழிக்கிறது இன்னுமொரு விதக் கொடுமை. ஆஷை முகம் மறந்து போச்சேன்னு ஆரம்பிச்சா அந்தப் பாட்டைக் கேட்கும் ஆசையே இல்லாம ஆகிடும். பாசம் நேசம் எல்லாம் பாஷம் நேஷம்ன்னு ஷமத்தா பாடுவாங்க. இல்லை தளை விடும் ஆயர்கள்ன்னு பாட வேண்டிய பாசுரத்தை தலை விடு மாயர்கள்ன்னு பாடி அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கிடுவாங்க. திரைப்படப் பாடல்களில் லகர, ளகர, ழகர வித்தியாசங்கள் இல்லாமல் போனது தாண்டி இப்போ ந,ன,ண வித்தியாம் கூட இல்லாமப் பாடறதுதான் புதுமை. 

குறங்குதமிழ் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதி இருக்கும் கட்டுரையை இன்று படித்த பின் நினைவுக்கு வந்தவை இவை. ரொம்ப முக்கியமா, 

பொதுவாகவே தமிழ்க்கல்வி தமிழகத்தில் இல்லாமலாகிவிட்டது. புதிய தலைமுறையினரில் சரளமாகத் தமிழ்படிப்பவர்கள், பெரிய எழுத்துப்பிழைகள் இல்லாமல் ஓரிரு பத்திகள் எழுதுபவர்கள் மிகமிக அரிதாகிவிட்டார்கள். ஆகவே நாளிதழ்கள்கூட அவர்களால் வாசிக்கப்படுவதில்லை. 

எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் நாளிதழ்களில் மட்டும் தமிழ் நல்லாவா இருக்கு. எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும்தான் இருக்கு. நல்ல தமிழ் என்பது இல்லாமலேயே போய்விட்ட ஒன்றாகி நாளாச்சு. ஒருமை பன்மைன்னா வீசை என்ன விலைன்னு கேட்பாங்க. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இயக்குனர், நியாபகம், ஞாயம்ன்னு தப்பாவே எழுதுவாங்க. இந்த நாளிதழ்களையும் வாரயிதழ்களையும் படிக்காம இருந்தாத் தப்பே இல்லை ஜெயமோகன். இவங்க மட்டும்தான்னு இல்லை. பிரபல எழுத்தாளர்களிடம் கூட தமிழ் மாட்டிக்கிட்டு கதறிக்கிட்டுதான் இருக்கு. ஆனா சொன்னால் நீ யாரு சொல்ல என்ற மனோபாவம்தான் முதலில் வரும். 

ஆனா இதை எல்லாம் எடுத்துச் சொன்னா அதுக்குப் பேரு குத்தம் கண்டுபிடிக்கிறது. இப்படிச் செய்யறவங்களை கிண்டல் பண்ணுவது போகும் போக்கில் ரெண்டு சாத்து சாத்துவதும்  எப்போதும் நடப்பதுதான். இதே கட்டுரையில் ஜெயமோகன் கூட "பிழைதிருத்தி பிழைசமைத்து உயிரைவாங்கும் பிராமணர்கூட்டம் ஒன்று இணையத்தில் உண்டு." என்றுதான் எழுதி இருக்கிறார். வேறெப்பொழுதும் சாதி பார்க்காத பெரியார் மண்ணும் இந்த சமயத்தில் மட்டும் மறக்காமல் சாதியை துணைக்குக் கூட்டிக் கொள்ளும். ஆனால் பண்ணும் தப்பை மட்டும் திருத்திக் கொள்ளவே கொள்ளாது. 

போகட்டும். அதற்காக, கம்பரசர் என எழுதி இருப்பதைக் கிண்டல் பண்ணும் ஆசான் விளக்கமாக கம்ப்ரஸர் என எழுதாமல் கம்பிரஷர் என எழுதி இருப்பதை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியுமா என்ன!