Sunday, April 29, 2012

”ஈஸியா எழுதலாம் வெண்பா” - விமர்சனம்

தம்பி @mayilsk நம்ம வெண்பா புக்கு படிச்சுட்டு கடமை தவறாம எழுதி இருக்கும் விமர்சனப் பதிவு - http://www.twitlonger.com/show/h797a6

 

”ஈஸியா எழுதலாம் வெண்பா” - 

தமிழனுக்கே செருக்குடைய குறளைக் காலைதோறும் யாராவது சொல்லக்கேட்டு, நாமும் என்றாவது ஒரு குறளைக் கிறுக்கிடமாட்டோமான்னு ஏங்காவிட்டால் எங்கோ உதைக்கிறதென்று பொருள்.

எங்கள் மண்ணின்மைந்தர் டிராஜேந்தர் ஐயா குவா குவாவென்றுhttp://www.splicd.com/JGUC2vzeEIg/33/40 அழும்போது நமக்கும் அழுகைபீறிட்டு வந்தாலும், இவருக்குள்ளயும் இருந்திருக்குன்னு நாம் பார்க்கவேண்டியது குறள் விளக்கும் ஆர்வத்தைத்தான். இந்த மாதிரி எழுதணும்னு ஆசைமட்டுமிருந்தா என்ன செய்ய? பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் செய்ததோடசரி. தன்னார்வத்தில் சிலர் தட்டித்தட்டிக் கத்துக்கலாம், பலருக்கு யாராவது சொல்லிக்கொடுத்தா நல்லது.

இதற்கு ”எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை”ன்னு தொடைதட்டி நாம பேச ஆரம்பிச்சோம்னா எதிரில் இருப்பவர் நம்மைத் தட்டிவிடவாய்ப்புண்டு. நமக்கு இருக்கிற பொறுமையில், என்னதான் ஆர்வமிருந்தாலும் வெண்பா கற்றலென்பது நம் பொறுமையைச் சோதிக்கக்கூடியதுதான்.

‘மருந்தைத் தேனில் கலந்துகொடு’ன்னு சொல்றது வழக்கம். ஆனால்  இப்போது பாவிக்கப்படுகிற ‘குவார்ட்டர் சொல்லுமச்சி’க்கு ஏற்றார்போல, குவார்ட்டரையும், சிலபல மச்சிகளையும் சேர்த்தே கொடுக்கிறார். ஒரே சேதியைக் குறைந்தது இரண்டுவகையிலாவது பேசுகிறார், இதன்மூலம் ஏதேனும் ஒன்றிலாவது நமக்கு நெருக்கமாவது உறுதிசெய்யப்படுகிறது.

வெண்பா எழுதும் ஆர்வமிருந்து அறிமுகம் சற்றுமில்லாதவருக்கும், இருந்தும் மறந்தவருக்கும் ஆர்வத்தை ஊட்டும் வகையிலும், சீரான பழக்கம் ஏற்படும் வகையிலும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. காட்டமான வாத்தியாக இருப்பதாலேயே ஒவ்வொரு எடுத்துக்காட்டையும் முதல்முறை அறிமுகப்படுத்தும் அதே பொறுமையுடன் நூல் முழுவதும் அறிமுகப்படுத்தி விளக்கவும் செய்கிறார்.

சரி, இவ்வளவு பேசி என்ன செய்ய, படித்ததற்கு ஒரு வெண்பாவைப் போட்டு முடிக்கிறேன்.

குறளை எழுதிடக் கொள்ளை மகிழ்ச்சி
குரலை உயர்த்திவா கூவ.

நூல்: https://www.nhm.in/shop/978-81-8493-484-7.html
ஆசிரியர்: 

 

கடைசியில நாள் மலர் காசு பிறப்புன்னு வரணும்ன்னு எழுதின பக்கத்தை மட்டும் தம்பி சாய்ஸில் விட்டுட்டாப்ல. இன்னும் ரெண்டு வெண்பா எழுதுன்னு இம்போசிஷன் குடுத்து இருக்கேன். 

மயிலு, நல்லபடியா எழுதினதுக்கு நன்றி மக்கா! :)

Posted via email from elavasam's posterous

Tuesday, April 24, 2012

சச்சினதிகாரம்!

இன்று சச்சின் பிறந்த நாள். எத்தனையோ பேர் அவருக்கு வாழ்த்து சொல்லி  இருப்பார்கள். எல்லா சமூகத் தளங்களிலும் இது பற்றிய செய்திகள் வந்தபடியே இருக்கும். இதுவரை பார்த்ததில் ட்விட்டரில் @dagalti எழுதிய இந்த வெண்பா வாழ்த்து என்னைக் கவர்ந்தது.

என்னயோகம் செய்தமோ உங்களாட்டங் கண்டிட

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

அதிலும் இந்த இன்னுமோர் நூற்றாண் டிரும் என்ற ஈற்றடி எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா என பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டை ஞாபகத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. இந்த ஈற்றடியைக் கொண்டு பத்து வெண்பா எழுதினால் சச்சினதிகாரம் கிடைக்குமே எனத் தோன்றி உடனே எழுதத் தொடங்கினேன்.

 

 

அண்ணன் வழிகாட்டி அற்புதமாய் ஆடுகிறீர்

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

ரன்கள் குவிப்பதில் ராட்சதன் நீரய்யா

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

பண்ணவே வேண்டும் பலவேலை பாரினிலே

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

மன்னவர் நீர்தானே மற்றவர் சொல்லுவர்

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

மண்ணிலே உம்போல மாந்தர் வெகுசிலரே

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

என்போல் மகிழ்ந்தோரும் ஏராளம் இங்கிருக்க

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

கண்ணனைப் போலவே கைப்பிள்ளை என்றும்நீர்

 

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

என்னப்பன் உம்மையிங்கு ஏற்றியே வைத்திடுவான்

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

விண்ணவர் வாழ்வில் விளக்கேற்றி வைப்பாரே

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

சின்னவன் என்சொல் சிறப்பாக ஆகுமோ

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

நாம எல்லாம் என்னிக்குத் தனியாவர்த்தனம் பண்ணி இருக்கோம். வழக்கம் போலப் பெனாத்தலாரை ஆட்டத்திற்கு அழைக்க அவர் பங்கிற்குப் போட்டது

 

சின்னவர்கள் சிந்தனைக்கு அப்பாலும் சாதனைகள்

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

உன்னைக் கடிந்து உயரத்தைப் பார்ப்போர்க்காய்

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

மின்னல் கவர்ட்ரைவ் மிச்சம் இருக்கிறதே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

எண்ணற்ற சாதனைகள் இருந்தும் போதலையே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

ஒன்பதும் ஒன்றுமாய் நிறுத்திட மனம்வருமா

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

வெண்பா வாத்தி ஜீவ்ஸ் எழுதியது

 

அன்புடை மக்கள் அருகிருந்து வாழ்த்திட
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

எண்ணியவை நன்றாய், எளிதாய் முடித்தனை
இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

சொக்கன் எழுதியது

 

சின்னஞ் சிறுவன்தான் சச்சின்நீ எப்போதும்

இன்னுமோர் நூற்றாண் டிரும்


கண்ணன் குறும்புகள்போல் கிரிக்கெட்டில் நீதானே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

எண்ணற்ற உயரங்கள் எட்டித் தொட்டவனே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

அன்பான பெருங்கூட்டம் ஆதரவாய் உன்பின்னே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

பண்பாடி வாழ்த்துதுபார் பாரதமே நீஇங்கு

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

'என்னாமா ஆடுறான்பார்' என்றுபலர் வாழ்த்திடநீ

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

என்வாழ்வின் பலநாளை இனிப்பாக்கித் தந்தவனே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

சன்ஒன்றே மூன்ஒன்றே சச்சினும் அப்படியே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

என்னதவம் செய்தோமோ இந்தியனாய் உனைப்பெற

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

மண்மேலே நீவந்த மங்கலநாள் இன்று

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

இன்னும் ஒரு ட்விட்டர் நண்பரான @nattanu

 

டென்னிண்டு டென் டெண்டுல்கர் டெவிலே

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

அன்னிக்கி போலவே இன்னிக்கும் ஆடுறீரே

இன்னுமோர் நூற்றாண் டிரும்

 

ஷேன்வார்னு மெக்குராத்து ஷோயபுக்கு எம்டனே

இன்னுமோர் நூற்றாண் டிரும் #Sachin

 

 

  


 

Posted via email from elavasam's posterous