Sunday, January 12, 2020

தசரதன் தர்பார்

தர்பார் ரிலீஸ் படலம் நடந்துவிட்டது. தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் வழக்கம்போல் நடந்துகொண்டு இருக்கிறது. இதில் போற்றுவார் சுட்டும் ஒன்று இப்படத்தில் வரும் மகள்- தந்தை உறவு. பொதுவாக கதாநாயகனைச் சுற்றிச் சுழலும் திரையுலகத்தில் அவன் தாய்மேல் கொண்ட பாசத்தைப் போற்றும் திரைப்படங்கள் அதிகம். தன் பெண் மேல் கொண்ட அன்பினைப் பேசும் படங்கள் உண்டு என்றாலும் அவை அரிதே. ஒரு பெண் தனது தந்தை மேல் கொண்ட பாசத்தினைப் பற்றிப் பேசும் படங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். 

தாய் மேல் பாசம் கொண்டவர்கள் மகன்கள், தந்தை மேல் பாசமுள்ளவர்கள் மகள்கள் என்பது பொதுவழக்கு. ஒன்றுக்கு மூன்று தாய்கள் அவர்கள் மேல் பாசம் கொண்ட ராமன் என தாய்ப்பாசம் பற்றிப் பேசி இருக்கும் கம்பன் இந்த தந்தை மேல் மகள் கொண்ட பாசத்தை விட்டு வைத்திருப்பானா என்ன? அதை எப்படிச் சொல்லி இருக்கிறான் எனப் பார்க்கலாம். 

ராமருக்குப் பட்டாபிஷேகம் என அறிவிப்பு வந்தாயிற்று. ஊரே கொண்டாடிக்கொண்டு இருக்க, ஒருத்திக்கு மட்டும் வயிறு எரிகிறது. அது மந்தரை என்னும் கூனி. இந்தப் பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது என முடிவு செய்து கொண்டு, அதைத் தடுக்க கைகேயியைத் தேடி வருகிறாள். கைகேயி படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். துன்பம் வரும் போது தூங்கிக் கொண்டு இருக்கிறாயே என அவளை எழுப்புகிறாள் மந்தரை. ராமன் எனக்கு மகனா இருக்கும்போது எனக்கென்ன துன்பம் என்றபடி எழுந்திருக்கிறாள் கைகேயி. 

இவளை எப்படி மனம் மாற்ற வைப்பது என நினைத்து மந்தரை முதலில் ஆரம்பிப்பது சக்களத்திச் சண்டை. நேரா ராமனுக்குப் பட்டாபிஷேகம்ன்னு சொல்லலை. உனக்கு எல்லாம் போச்சே, தன்னோட அறிவால் கோசலை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாளேன்னு ஆரம்பிக்கறா. 

வீழ்ந்தது நின் நலம். திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசல மதியினால் என்றாள் 

"உன்னோட நலம் போச்சு, செல்வமும் போச்சு, அந்தக் கோசலை இருக்காளே புத்திசாலி, அவளுக்குப் பாரு வாழ்வு"ன்னு ஆரம்பிக்கிறா மந்தரை. ஆனா கைகேயி பாவம் நல்லவள். "கோசலைக்கு இது வரை என்ன இல்லை, எனக்குதான் என்ன குறைச்சல்?" அப்படின்னு பதில் சொல்லறா. அப்போதான் கூனி விஷயத்தையே சொல்லறா. 

கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இதெனச் சொல்லினள் 

வளைந்த கட்டமைப்பைக் கொண்ட வில் உடைய ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம், இதனால் கோசலைக்கு வந்ததே வாழ்வு எனச் செய்தியைச் சொல்கிறாள். செய்தியைக் கேட்ட கைகேயிக்கு ஒரே சந்தோஷம். எப்படி சந்தோஷம்ன்னா கோசலைக்கு எவ்வளவு சந்தோஷம் வந்ததோ அவ்வளவு சந்தோஷமாம் கைகேயிக்கும். சந்தோஷத்தில் தான் போட்டுக் கொண்டு இருந்த மணிமாலையைக் கழற்றி மந்தரைக்குப் பரிசாகத் தந்தாள். மந்தரைக்குக் கோவமான கோவம். 

சரி, சக்களத்திச் சண்டை சரி வரலை. அடுத்ததா பரதனைக் காட்டி இவள் மனத்தை மாத்துவோம் என தாய்ப்பாசத்தைக் குறி வைத்து, “அடியே, சீதையும் ராமனும் சிம்மாசனத்தில் உட்கார உன் மகன் வெறும் தரையில் இருப்பான். ராமனுக்கு பேரும் புகழும் கிடைக்கும், உன் மகன் ஒண்ணுமில்லாமல் போவான். அப்படி இருக்கிறதுக்குப் பதிலா பேசாம சந்நியாசியாகக் காட்டுக்கே போகலாம். ஏன் செத்தேக் கூடப் போகலாம்.” என்று அடுத்த அம்பை எய்கிறாள் மந்தரை. 

கைகேயி இதைக் கேட்டுக் கோவப்படறா. “நீ எனக்கும் பரதனுக்கும் நல்லது செய்ய வந்தா மாதிரி தெரியலை. என் தோழியாப் போனதால உன்னைச் சும்மா விடறேன். இல்லைன்னா இப்படிப் பேசின உன் நாக்கை வெட்டி இருப்பேன். பேசாம இருக்கிற வழியைப் பாரு” அப்படின்னு கொந்தளிக்கறா. 

மந்தரை விடலை. “நீ என்னை என்ன வேணுமானாலும் திட்டு. ஆனா நான் இங்க இருந்து போகறதா இல்லை. ராமன் பட்டம் சூட்டிக்கிட்டான்னா கோசலையும் சீதையும் உன்னைச் சீந்த மாட்டாங்க. அவங்க பார்த்துத் தரதை வெச்சுதான் நீ வாழணும். அதை வெச்சுதான் நீ மற்றவர்களுக்கும் தர முடியும். ஆனா அதை எல்லாம் விடு. இன்னும் ஒரு பிரச்னை இருக்கு.” எனச் சொல்லி அடுத்த குண்டைப் போடறா 

காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத்தெறுகிலன்; இராமன்
            மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ?
            பேதை! உன்துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?

"இப்படி ஒண்ணும் தெரியாம இருக்கியே. உன் காதல் கணவன் தசரதனுக்குப் பயந்துதானே சீதைக்கு அப்பா, ராமனுக்கு மாமா அந்த ஜனகன் உன் அப்பாவின் மேல் போர் தொடுக்காமல் அமைதியாக இருக்கான். இனிமேலும் அவங்க அப்படி இருப்பாங்களா? உன்னைச் சார்ந்ததினால் இப்போ அவங்களுக்கு ஆபத்து வரப் போகுதே" 

மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள; மறத்தார்
செற்றபோது, இவர் சென்று உதவார் எனில், செருவில்
            கொற்றம் என்பது ஒன்று, எவ் வழி உண்டு? அது கூறாய்!
            சுற்றமும் கெட, சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்!

"உங்கப்பாவுக்கு ஊரெல்லாம் சண்டை. அந்தப் பகைவர்கள் யாராவது உங்கப்பாவோட சண்டை போட வந்தால் இவங்க போய் உதவுவாங்கன்னு நினைக்கிற? மாட்டாங்க. அப்படி இவங்க உதவாம போரில் உங்க அப்பாவால ஜெயிக்க முடியுமா? அதுக்கு வழி இருந்தாச் சொல்லு. இல்லைன்னா உன் உறவெல்லாம் துன்பக் கடலில் விழுவாங்க. கூடவே நீயும் சேர்ந்து விழப் போற. இதுதான் நடக்கப் போகுது" என மந்தரை தனது கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தினாள். 

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது 

இப்போதான் கைகேயி மனம் மாறுது.  சக்களத்தி சண்டை வேலைக்காகலை, உனக்கு ஒண்ணும் இல்லாமப் போகப் போகுதுன்னு சொன்னது வேலைக்காகலை, பரதன் வேலைக்காரனாகப் போறான், சந்நியாசி ஆகிடுவான், செத்தே போயிடுவான்னு சொன்னது கூட உரைக்கலை. ஆனா உங்க அப்பாவுக்குக் கஷ்டம் வரப் போகுதுன்னு சொன்ன உடனே பதறி அடிச்சு எங்கப்பாவுக்குப் பிரச்னையா, என்ன செய்யலாம் சொல்லுன்னு கைகேயி கிளம்பறா பாருங்க. அதுதாங்க ஒரு பொண்ணுக்கு அப்பா மேல இருக்கிற பாசம்!! அதை இவ்வளவு அழகாச் சொன்ன கம்பருக்கு ஜே!! 

பின்குறிப்பு: 

அந்தக் கடைசி பாட்டோட முழு வடிவம் இது.  

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
            மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
           ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

கூனி சொன்னதுனால மனம் மாறிடும் அளவுக்கு கைகேயி சிறிய மனம் படைத்தவள் இல்லை. தேவர்கள் திருமால் கிட்ட போய் ராவணன் எங்களைப் படுத்தறான் நீங்கதான் காப்பாத்தணும்ன்னு வேண்ட, அவரும் நான் ராமனா அவதாரம் எடுத்து ராவணனைப் பார்த்துக்கிறேன்னு சொன்னார். அதே மாதிரி இந்த அந்தணர்கள் எல்லாம் அரக்கர் கொட்டம் அடங்க வேண்டும் என்று தவம் செய்தார்கள். இவைதான் மந்தரையாக வந்து கைகேயி மனத்தைக் கலைத்தது என்பது முழுப்பொருள். 

Saturday, January 04, 2020

And whisper'd in the sounds of silence.....

Apparently the bhakths are going around saying the sun sounds Om. And in retaliation the non-bhakths have taken to saying how can there be sounds in space. 

There ARE sounds in space. We cannot hear them as there is no medium, such as, air or water for the vibrations to travel. So, the famous, "In space, no one can hear you scream." tagline of the movie Alien is true to that extent. 

However, there are other ways for us to hear them. All of space is not vacuum. There is interstellar gas, there is galactic dust. The sound transmitted by these are of such low frequency that we cannot hear them. 

Electromagnetic waves, such as Radio waves and Microwaves are aplenty in space. Electromagnetic waves can travel through space. By converting these waves into sound waves, you can hear the space sounds. Scientists employ this technique as one way of analyzing the data that they receive from space. 

Using this and a variety of other techniques there are plenty of space sounds that are available for us to hear. Scientists have been successful in even simulating the sound of the Big Bang!

   

NASA has released a compilation of space sounds that can be the background for any space themed video games or even for a Halloween party!

   

We even know how it sounds, when two black holes collide. Look out for that distinct ‘Wooop’ in this video.

    

 So, what about Sun, then? Of course we do have sounds from Sun. Here is a compilation of those.

   

Does that sound like Om? No. It does not. 

But next time someone says there is no sound in space, tell them there is. You just should listen. 

But, hey, that is exactly what my wife tells me. I should listen!

Friday, January 03, 2020

அழுதற் பொருட்டன்று அன்பு....

அயோத்தியா காண்டம். நகர்நீங்கு படலம். ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டு  மகிழ்ச்சியாக இருந்த அயோத்தி மக்கள் மேல் இடியாய் இறங்குகிறது, 'பட்டாபிஷேகம் தடைபட்டது. ராமன் பதினான்கு வருடங்கள் காட்டுக்குச் செல்கிறான்', என்ற செய்தி. வசிஷ்டர் அதைச் சொன்னதும் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் மக்கள். 

அவர்கள் வருத்தத்தை பல பாடல்களில் சொல்கிறான் கம்பன். இந்தச் செய்தி தசரதனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்ததோ அம்மக்கள் எல்லாருக்கும் அதே போலக் கஷ்டமாக இருந்தது. புண்ணில் மேல் தீ பட்டாற்போல் இருந்தது. பெருங்காற்றில் வீழ்ந்த மரம் போல மண் மேலே விழுந்து அழுதார்கள் அம்மக்கள் என்றெல்லாம் அவர்கள் வருத்தத்தைச் சொல்கிறான். 

ஆனால் மக்கள் மட்டுமா கஷ்டப்பட்டார்கள்? இல்லை, அங்குள்ள பறவைகளும் மிருகங்களும் கூட ராமன் நகர் நீங்கப் போகிறான் என்பது அறிந்து கலங்கினவாம்.

கிள்ளையொடு பூவையழுத கிளர் மாடத்து
உள்ளுறையும் பூசையழுத வுருவறியாப்
பிள்ளையழுத பெரியோரை யென் சொல்ல
வள்ளல் வனம் புகுவானென்றுரைத்த மாற்றத்தால்.

பதம் பிரிச்சு எழுதினா அப்படியே பொருள் புரியும். 

கிள்ளையொடு பூவை அழுத, கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத, உரு அறியாப்
பிள்ளை அழுத, பெரியோரை என் சொல்ல
‘வள்ளல் வனம் புகுவான்’ என்று உரைத்த மாற்றத்தால். 

கிள்ளைன்னா கிளி. பழங்களை மூக்கால் கிள்ளித் தின்பதால் அப்பெயர். பூவை என்றால் நாகணவாய்ப் பறவை. இன்னிக்கு நாம மைனா எனச் சொல்கிறோமே, அந்தப் பறவை. பூசை என்றால் பூனை.

வள்ளல் வனம் புகப் போகிறான். வள்ளல் என ராமனை ஏன் சொல்கிறான்? நேரடிப் பொருளாக தனக்குண்டான அரசுரிமையைத் தம்பிக்குத் தந்ததால் வள்ளல். ஆனால் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் அவன் அவதாரம். தன்னை நம்பி வருபவர்களை கைதூக்கி மேலே கொண்டு செல்லும் தன்மை உடையவன். அப்படி தந்து, பெறுபவர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்வதனால் ராமன் வள்ளலாம். இதைத் தொடர்ந்து பல விதங்களில் சொல்லிக் கொண்டே இருக்கிறான் கம்பன். 

அப்படிப்பட்ட வள்ளலாகிய ராமன் காட்டுக்குப் போகப் போகிறான் என்ற செய்தியைக் கேட்ட கிளிகள் அழுதன. கூட இருக்கும் மைனாக்கள் அழுதன.  வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் பூனைகள் அழுதன. அவ்வளவு எல்லாம் ஏன்யா? தன் தாயின் வயிற்றில் இன்னமும் முழு உருவம் பெறாத பிள்ளைகள் அழுதனவாம். இவர்களே இப்படி வருத்தப்பட்டால் எல்லாம் தெரிந்த பெரியவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்கிறார் கம்பர். 

இதோட கூட இன்னுமொரு பாடலில் 

ஆவு மழுதவதன் கன்றழுத வன்றலர்ந்த
பூவு மழுதபுனற் புள்ளழுத கள்ளொழுகம்
காவு மழுத களிறழுத கால்வயப்போர்
மாவு மழுதன வம்மன்னவனை மானவே 

அதாவது 

ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள்ளொழுகும்
காவும் அழுத களிறு அழுத கால்வயப்போர்
மாவும் அழுதன அம்மன்னவனை மானவே

புனல் புள் - நீரில் வாழும் பறவைகள். களிறு - யானை, கால்வயப்போர் மாவும் - தேர்க்காலில் பூட்டப்படும் போருக்குப் பயன்படும் வலிமையுள்ள குதிரைகள். மா என்றால் குதிரை என்றாலே ஹரியண்ணா எழுதிய கல்லா மா பதிவுதான் ஞாபகத்திற்கு வருகிறது! 

ஓரறிவு உடைய பூக்கள் அழுதன, கள் ஒழுகும் சோலையில் இருக்கும் மரங்கள் அழுதன. ஐந்தறிவு கொண்ட பசுக்களும், அவற்றின் கன்றுகளும் அழுதன. நீரில் வாழும் பறவைகள் அழுதன. யானைகள் அழுதன. போரில் பயன்படும் தேர்களில் பூட்டப்படும் வலிமையான குதிரைகள் அழுதன. அவை எல்லாம் ராமனின் பிரிவைத் தாங்க முடியாத தசரதன் அழுததைப் போல அழுதன. 

இப்படி ஓரறிவு கொண்ட காவும் பூவும் முதல் ஆறறிவு கொண்ட மாந்தர் வரை எப்படி வருத்தப்பட்டாங்கன்னு சோகத்தைப் பிழிஞ்சு எடுக்கறார் கம்பர். ஆனா இதே சம்பவத்தை வேறு ஒரு காப்பியத்தில் எப்படிச் சொல்லறாங்க தெரியுமா? 

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சிலப்பதிகாரம். ஆய்ச்சியர் குரவை. இங்க இளங்கோவடிகள் என்ன சொல்லறார்ன்னா. "அடேய் ராமா, தம்பியோட நீ காட்டுக்குப் போகப் போறயா? உன் காலில் கல்லும் மண்ணும் குத்திச் சிவந்து போகப் போகுதா? நல்லா வேணும்! அன்னிக்கு மாபலி கிட்ட போய் எனக்கு மூணு அடி நிலம் வேணும்ன்னு கேட்ட, அந்த நல்லவனும் நீயே அளந்துக்கோன்னு சொன்னான். ஆனா நியாயமா மூணு அடி அளந்துக்காம முறை கெட்டு மூவுலகையும் ரெண்டே அடியில் அளந்துக்கிட்டு மூணாவது அடியை அந்த மாபலி தலையிலேயே வைத்து அழுத்தினாய்தானே. அதான் இன்னிக்கு அந்த காலில் கல்லும் முள்ளும் குத்தி சிவந்து போகப் போகுது உனக்கு நல்லா வேணும்!" இப்படி ஆய்ச்சியர்கள் கேலியாய்ப் பாடுவதாய் எழுதி இருக்கிறார் இளங்கோவடிகள். 

இது அதிகப்பிரசங்கித்தனம் இல்லை. நல்ல நண்பனை கேலி செய்து, இப்போ சொல்லற மாதிரி சொல்லணும்ன்னா கலாய்ச்சு, கிண்டல் பண்ணி பேசற மாதிரி. பெனாத்தல் ஒரு சினிமா பார்த்துட்டு இதெல்லாம் படமான்னு விமர்சனம் போடுவான். உடனே தேடித் தேடிப் போய் பார்க்கிறதானே உனக்கு நல்லா வேணும் அப்படின்னு நான் கமெண்ட் போடுவேன். எங்களுக்குள்ள இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் ஒரு விளையாட்டு. அது மாதிரி ஆண்டவன் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டு அவரையே கிண்டல் பண்ணறதும் உண்டு. இதுக்கு அசதியாடல்ன்னு பேரு. இதை இளங்கோவடிகள் மட்டுமில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் தொடங்கி பலரும் இப்படி அசதியாடலைக் கையாண்டு இருக்காங்க. 

போகட்டும். இப்போ ஏன் இந்தப் பதிவுன்னா சமீபத்தில் தமிழகத்தில் ராமரை வணங்குவது வழக்கமா என்று சோஷியல் மீடியாவில் ஒரு பேச்சு வந்தது. இன்னிக்கு புலவர் கீரன் கம்பராமாயணம் பத்திப் பேசினதைக் கேட்டுக்கிட்டு இருக்கும் பொழுது, அந்தக் கேள்வி கேட்டவங்களுக்கு இதுதான் பதில் என மனத்தில் பட்டது. அதான் அவர் சொன்ன கருத்துகளை ஒட்டி இந்தப் பதிவினை எழுதினேன். 

கம்பராமாயணம் பொயு 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லறாங்க. அதாவது கிட்டத்தட்ட 900 வருஷத்துக்கு முன்னாடி. ஆனா அதுக்கும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி எழுதப்பட்டது சிலப்பதிகாரம். அதிலும் ராமனைப் பற்றிக் குறிப்பு இருக்கு. குறிப்பு மட்டுமில்லை , வாமன அவதாரமும் ராம அவதாரமும் எடுத்தது திருமால்தான், அந்தத் திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே என அவரைப் போற்றிப் பாடி இருக்காங்க. 
  
ஆக, நம்ம ஊரில் ராமர் இரண்டாயிரம் வருஷமா இருக்காரு, புது வரவு எல்லாம் இல்லைன்னு தெரிஞ்சுக்குங்க. 

பாவம், எம்டியாருக்கு வந்த சோதனை!

ராஜநாயகம் எழுதறதை ஒரு பொழுதுபோக்காப் படிப்பேன். ரெண்டொரு சமயத்தில் தவறுகளைச் சுட்டிக் காட்ட ஒரே அழுகை என்பதால் அதையும் நிறுத்தி விட்டேன். ஆனால் இவர் எம் டி ராமநாதனைப் பற்றி எழுதியதைப்https://rprajanayahem.blogspot.com/2019/12/md.html ) படித்த பின்பு சும்மா இருக்க முடியவில்லை. 

எம் டி ராமநாதன் நல்லாப் பாடுவார். அது வரை சரி. டைகர் வரதாச்சாரியின் சிஷ்யர். அதிலும் சந்தேகமில்லை. ஆனால் "ராமநாதன் எந்த அளவுக்கு குருவை உள்வாங்கி செரித்துக்கொண்டார் என்றால்,அவருடைய மாறுகண் கூட இவருக்கும் வந்து விட்டது”, இதை எல்லாம் எந்த ஆதாரத்தோட பேசறார்ன்னு தெரியலை. சும்மா திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு அடிச்சு விடற மாதிரி எதையோ சொல்லறார். இதுக்கு எல்லாம் எதாவது ஆதாரம் உண்டா?  போகட்டும். 

"தேவச பாகவதரின் மகனாக பாலக்காடு மஞ்சப்பராவில் பிறந்து” அவரோட அப்பா பேரு தேவசமும் இல்லை திவசமும் இல்லை. தேவேச பாகவதர். அதுவும் போகட்டும். தட்டச்சுப் பிழைன்னு இதை விட்டுடலாம்.  "MD ராமனாதனின் கச்சேரியைக் கேட்கும் போது மேடைக் க்சசேரி பந்ததி என்பது உருவானதற்கு முன்பு கர்னாடக சங்கீதத்தை எல்லோரும் இப்படித்தான் பாடியிருப்பார்களோ என்று தோன்றும்.” அது பத்ததி. பந்ததி எல்லாம் இல்லை. சரி, அதையும் தட்டச்சுப் பிழையில் சேர்த்துடலாம். 

"மயிலை கபாலீசுவரர் மீது ‘பரமகிருபாநிதே’ என்றும் ‘சம்போ மஹாதேவா’ என்றும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.” இதில்தான் எனக்கு முக்கியமான பிரச்னை. இந்த இரண்டு பாடல்களைப் பற்றித் தேடிப் பார்த்து விட்டேன். என்னை விடுங்கள். சங்கீதம் தெரிந்தவர்களிடமும் கேட்டுவிட்டேன். அவர்களும் தெரியவில்லையே என்கிறார்கள். இப்படி எதுவும் அவர் இயற்றியதாகத் தெரியவில்லை. என்ன ராகங்களில் இயற்றியுள்ளார் போன்ற விவரங்கள் தெரிந்தால் அப்படி பாடல்கள் உள்ளதா எனத் தேடிப் பார்க்கலாம். இல்லை வழக்கம் போல சும்மா அடிச்சு விட்ட தகவலாய் இருந்தால் அதையும் நிர்ணயம் செய்து விடலாம். 

"பாகேஸ்வரி ராக ’சாகர சயனா’ இவர் இயற்றியது.” சரி. இதைச்  சொன்ன பிறகு, சில பத்திகள் தாண்டி, ஒரு வரி வருகிறது பாருங்கள்.  "முத்துசாமி தீட்சிதரின் நாட்டை ராக ’மஹா கணபதிம்’, ஸ்ரீ வரத தாசாவின் அடானா ராக ’ஹரியும் ஹரனும்’ இவர் பாடியதை கேட்பது ரசானுபவம்.”. தீக்ஷிதர் சரி. அது யாரு ஸ்வாமின் ஶ்ரீ வரத தாசா? அது பின்னாடி வருகிறது. "இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரத தாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும்.வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும். இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரததாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும். வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும்.” 

அதாவது முதலில் இவர் இயற்றியதாக இரண்டு பாடல்கள் பற்றி ஒரு வரி. பின்னர் சாகர சயனவிபோ பற்றி ஒரு வரி. அதன் பின்னர் யாரோ ஶ்ரீ வரத தாசா இயற்றியதாக ஒரு பாடல். ஆனால் அந்த ஶ்ரீ வரத தாசா என்பவர் யாரு? செந்தில் சொல்லற மாதிரி அந்த வாழைப்பழமே இதுதான் மாதிரி சுத்திச் சுத்தி என்னமோ எழுதி இருக்கார். எம்டியாரைப் பத்தின நல்ல கட்டுரை வேணுமானால் ரவி வர்மா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்தப் பதிவையும்https://ramavarma.yolasite.com/vishwa-palam-shri-padmanabham.php ) இந்தப் பதிவையும்https://ramavarma.yolasite.com/unsung-genius---mdr.php) படிக்கலாம். 

விக்கியைப் பார்த்தும் கொஞ்சம் கூகிள்  எழுதினால் கூட கோவையாக எழுத முடியும். இப்படி அள்ளித் தெளித்தால் போல பத்து வரி எழுதி தன்னோட போட்டோவோட ஒரு பதிவு போட்டுக்கணும்ன்னு என்ன ஆர்வமோ. தெரியலை.