அயோத்தியா காண்டம். நகர்நீங்கு படலம். ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியாக இருந்த அயோத்தி மக்கள் மேல் இடியாய் இறங்குகிறது, 'பட்டாபிஷேகம் தடைபட்டது. ராமன் பதினான்கு வருடங்கள் காட்டுக்குச் செல்கிறான்', என்ற செய்தி. வசிஷ்டர் அதைச் சொன்னதும் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் மக்கள்.
அவர்கள் வருத்தத்தை பல பாடல்களில் சொல்கிறான் கம்பன். இந்தச் செய்தி தசரதனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்ததோ அம்மக்கள் எல்லாருக்கும் அதே போலக் கஷ்டமாக இருந்தது. புண்ணில் மேல் தீ பட்டாற்போல் இருந்தது. பெருங்காற்றில் வீழ்ந்த மரம் போல மண் மேலே விழுந்து அழுதார்கள் அம்மக்கள் என்றெல்லாம் அவர்கள் வருத்தத்தைச் சொல்கிறான்.
ஆனால் மக்கள் மட்டுமா கஷ்டப்பட்டார்கள்? இல்லை, அங்குள்ள பறவைகளும் மிருகங்களும் கூட ராமன் நகர் நீங்கப் போகிறான் என்பது அறிந்து கலங்கினவாம்.
கிள்ளையொடு பூவையழுத கிளர் மாடத்து
உள்ளுறையும் பூசையழுத வுருவறியாப்
பிள்ளையழுத பெரியோரை யென் சொல்ல
வள்ளல் வனம் புகுவானென்றுரைத்த மாற்றத்தால்.
பதம் பிரிச்சு எழுதினா அப்படியே பொருள் புரியும்.
கிள்ளையொடு பூவை அழுத, கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத, உரு அறியாப்
பிள்ளை அழுத, பெரியோரை என் சொல்ல
‘வள்ளல் வனம் புகுவான்’ என்று உரைத்த மாற்றத்தால்.
கிள்ளைன்னா கிளி. பழங்களை மூக்கால் கிள்ளித் தின்பதால் அப்பெயர். பூவை என்றால் நாகணவாய்ப் பறவை. இன்னிக்கு நாம மைனா எனச் சொல்கிறோமே, அந்தப் பறவை. பூசை என்றால் பூனை.
வள்ளல் வனம் புகப் போகிறான். வள்ளல் என ராமனை ஏன் சொல்கிறான்? நேரடிப் பொருளாக தனக்குண்டான அரசுரிமையைத் தம்பிக்குத் தந்ததால் வள்ளல். ஆனால் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் அவன் அவதாரம். தன்னை நம்பி வருபவர்களை கைதூக்கி மேலே கொண்டு செல்லும் தன்மை உடையவன். அப்படி தந்து, பெறுபவர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்வதனால் ராமன் வள்ளலாம். இதைத் தொடர்ந்து பல விதங்களில் சொல்லிக் கொண்டே இருக்கிறான் கம்பன்.
அப்படிப்பட்ட வள்ளலாகிய ராமன் காட்டுக்குப் போகப் போகிறான் என்ற செய்தியைக் கேட்ட கிளிகள் அழுதன. கூட இருக்கும் மைனாக்கள் அழுதன. வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் பூனைகள் அழுதன. அவ்வளவு எல்லாம் ஏன்யா? தன் தாயின் வயிற்றில் இன்னமும் முழு உருவம் பெறாத பிள்ளைகள் அழுதனவாம். இவர்களே இப்படி வருத்தப்பட்டால் எல்லாம் தெரிந்த பெரியவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்கிறார் கம்பர்.
இதோட கூட இன்னுமொரு பாடலில்
ஆவு மழுதவதன் கன்றழுத வன்றலர்ந்த
பூவு மழுதபுனற் புள்ளழுத கள்ளொழுகம்
காவு மழுத களிறழுத கால்வயப்போர்
மாவு மழுதன வம்மன்னவனை மானவே
அதாவது
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள்ளொழுகும்
காவும் அழுத களிறு அழுத கால்வயப்போர்
மாவும் அழுதன அம்மன்னவனை மானவே
புனல் புள் - நீரில் வாழும் பறவைகள். களிறு - யானை, கால்வயப்போர் மாவும் - தேர்க்காலில் பூட்டப்படும் போருக்குப் பயன்படும் வலிமையுள்ள குதிரைகள். மா என்றால் குதிரை என்றாலே ஹரியண்ணா எழுதிய கல்லா மா பதிவுதான் ஞாபகத்திற்கு வருகிறது!
ஓரறிவு உடைய பூக்கள் அழுதன, கள் ஒழுகும் சோலையில் இருக்கும் மரங்கள் அழுதன. ஐந்தறிவு கொண்ட பசுக்களும், அவற்றின் கன்றுகளும் அழுதன. நீரில் வாழும் பறவைகள் அழுதன. யானைகள் அழுதன. போரில் பயன்படும் தேர்களில் பூட்டப்படும் வலிமையான குதிரைகள் அழுதன. அவை எல்லாம் ராமனின் பிரிவைத் தாங்க முடியாத தசரதன் அழுததைப் போல அழுதன.
இப்படி ஓரறிவு கொண்ட காவும் பூவும் முதல் ஆறறிவு கொண்ட மாந்தர் வரை எப்படி வருத்தப்பட்டாங்கன்னு சோகத்தைப் பிழிஞ்சு எடுக்கறார் கம்பர். ஆனா இதே சம்பவத்தை வேறு ஒரு காப்பியத்தில் எப்படிச் சொல்லறாங்க தெரியுமா?
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சிலப்பதிகாரம். ஆய்ச்சியர் குரவை. இங்க இளங்கோவடிகள் என்ன சொல்லறார்ன்னா. "அடேய் ராமா, தம்பியோட நீ காட்டுக்குப் போகப் போறயா? உன் காலில் கல்லும் மண்ணும் குத்திச் சிவந்து போகப் போகுதா? நல்லா வேணும்! அன்னிக்கு மாபலி கிட்ட போய் எனக்கு மூணு அடி நிலம் வேணும்ன்னு கேட்ட, அந்த நல்லவனும் நீயே அளந்துக்கோன்னு சொன்னான். ஆனா நியாயமா மூணு அடி அளந்துக்காம முறை கெட்டு மூவுலகையும் ரெண்டே அடியில் அளந்துக்கிட்டு மூணாவது அடியை அந்த மாபலி தலையிலேயே வைத்து அழுத்தினாய்தானே. அதான் இன்னிக்கு அந்த காலில் கல்லும் முள்ளும் குத்தி சிவந்து போகப் போகுது உனக்கு நல்லா வேணும்!" இப்படி ஆய்ச்சியர்கள் கேலியாய்ப் பாடுவதாய் எழுதி இருக்கிறார் இளங்கோவடிகள்.
இது அதிகப்பிரசங்கித்தனம் இல்லை. நல்ல நண்பனை கேலி செய்து, இப்போ சொல்லற மாதிரி சொல்லணும்ன்னா கலாய்ச்சு, கிண்டல் பண்ணி பேசற மாதிரி. பெனாத்தல் ஒரு சினிமா பார்த்துட்டு இதெல்லாம் படமான்னு விமர்சனம் போடுவான். உடனே தேடித் தேடிப் போய் பார்க்கிறதானே உனக்கு நல்லா வேணும் அப்படின்னு நான் கமெண்ட் போடுவேன். எங்களுக்குள்ள இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் ஒரு விளையாட்டு. அது மாதிரி ஆண்டவன் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டு அவரையே கிண்டல் பண்ணறதும் உண்டு. இதுக்கு அசதியாடல்ன்னு பேரு. இதை இளங்கோவடிகள் மட்டுமில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் தொடங்கி பலரும் இப்படி அசதியாடலைக் கையாண்டு இருக்காங்க.
போகட்டும். இப்போ ஏன் இந்தப் பதிவுன்னா சமீபத்தில் தமிழகத்தில் ராமரை வணங்குவது வழக்கமா என்று சோஷியல் மீடியாவில் ஒரு பேச்சு வந்தது. இன்னிக்கு புலவர் கீரன் கம்பராமாயணம் பத்திப் பேசினதைக் கேட்டுக்கிட்டு இருக்கும் பொழுது, அந்தக் கேள்வி கேட்டவங்களுக்கு இதுதான் பதில் என மனத்தில் பட்டது. அதான் அவர் சொன்ன கருத்துகளை ஒட்டி இந்தப் பதிவினை எழுதினேன்.
கம்பராமாயணம் பொயு 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லறாங்க. அதாவது கிட்டத்தட்ட 900 வருஷத்துக்கு முன்னாடி. ஆனா அதுக்கும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி எழுதப்பட்டது சிலப்பதிகாரம். அதிலும் ராமனைப் பற்றிக் குறிப்பு இருக்கு. குறிப்பு மட்டுமில்லை , வாமன அவதாரமும் ராம அவதாரமும் எடுத்தது திருமால்தான், அந்தத் திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே என அவரைப் போற்றிப் பாடி இருக்காங்க.
ஆக, நம்ம ஊரில் ராமர் இரண்டாயிரம் வருஷமா இருக்காரு, புது வரவு எல்லாம் இல்லைன்னு தெரிஞ்சுக்குங்க.
4 comments:
பேஷ்!
தமிழர்களிடையே ராமன் கதை வழங்கிவந்த வரலாற்றைப் பற்றி PAK outlookல ஒரு பத்து வருடத்திற்கு முன் ஒரு கட்டுரை எழுதினார்.
சங்கப்பாடல்களிலேயே ராமாயணக்கதை எல்லாம் வருவதை சொல்லியிருந்தார்.
சிலம்பில் இன்னொரு இடத்தில் வரும் ராமாயக் குறிப்பு:
கோவலன் நீங்கிய புகார் (மாதவி) நிலையை சொல்ல இளங்கோ பயன்படுத்தும் உவமை:
‘அருந்திறல் பிரிந்த அயோத்தி போல’
How much the Epic has permeated into the Tamil consciousness, way back back then for it to be invoked in references like this!
ஒரு இடைக்குறிப்பு: ‘சங்க’காலத்திலேயே இங்கு வந்து சேர்ந்தது வான்மீக ராமாயணம் (மட்டும்) அல்ல, அதன் பிறகு எழுந்த கூறல்களும் தான்.
உதாரணமாக, வான்மீகத்தில் அகலிகை கல்லாகவில்லை.
ஆனால் அவள் கல்லுருவிலிருந்து சாபவிமோசனம் பெறும் காட்சி ஓவியமாக தீட்டப்பட்டிருப்பதை தலைவனும் தலைவியும் காணும் காட்சி பரிபாடலில் வருகிறது.
பரிபாடலில், கம்பனும் பாடும் இந்த version வால்மீகியில் இல்லை. எங்கே இருக்கிறது?
காளிதாசரின் ரகுவம்ஸத்தில் அகலிகை கல் ஆகிறாள்.
Blog plug:
http://dagalti.blogspot.com/2019/03/blog-post_18.html
இராமாயணக் கதை இருந்திருக்கும், வழிபாடு இருந்திருக்கத் தேவையில்லையே !
இப்போது கூட நான் எர்மானி கிரேங்கர், சான் சுனோ, தென்னரசு தாரிகேரியர் கதைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன், அதனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து தமிழர்கள் எர்மானி கிரேங்கர் அவர்களை வழிபட்டார்கள் என்று எழுதினால் தகுமா !
பிகு:
எர்மானி கிரேங்கர் - https://en.wikipedia.org/wiki/Hermione_Granger
சான் சுனோ, தென்னரசு தாரிகேரியர் - https://gameofthrones.fandom.com/wiki/Jon_Snow_and_Daenerys_Targaryen
ஐயா சங்கரு,
தென்னரசு தாரிகேயரா? உம்ம தனித்தமிழில் தீயை வைக்க! :))
வழிபட்டார்களா?
நீர் அந்தப் பாட்டைத் தேடி முழுவதும் வாசித்திருப்பீர் என நினைத்தது பொய்யாய்ப் போனதே..
அந்த ரெண்டு வரியோட நிறுத்தலை. அவங்க அதை எல்லாம் சொல்லி திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே, காணாத கண் என்ன கண்ணே, நாராயணா எனாத நா என்ன நாவே என்றுமெல்லாம் சொல்லி அதோடவும் நிறுத்தாம
என்றுயாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க எனப் பாடுகிறார்கள். அதனால் வழிபட்டனரா என்ற ஐயமே வேண்டாம். வழிபட்டனர். அவரைத் திருமால் என்று அழைத்தனர். அவரே ராமர் என்றும் பாடினர்.
இதுக்கும் ஒரு பதில் இருக்கு, ஆனால் அது இங்கே வேண்டாம். என்றாவது நேரில் பார்த்தால் பேசலாம் அது பற்றி :-)
Post a Comment