Friday, June 02, 2006

தரமாய் பதிவொன்று தா (வெ.வ.வா)

மதுமிதா அவர்கள், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்காக வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விபரங்களையும், வலைப்பூவைத் தொடங்கிட தூண்டுதலாய் இருந்தது என்னவென்பதையும் ஒரு பதிவாய்ப் போட்டு, அதன் சுட்டியை அவருக்கு அனுப்புமாறு சொன்னார்கள். அதன்படி அநேகம் பேர் அனுப்பிவிட்ட நிலையில், இதோ என்னைப் பற்றிய விபரங்கள்.

வெறும் விபரங்களைப் பதிவாய் போட வேண்டாமே என யோசித்து அவர் கேட்டதையே ஒரு வெண்பாவாய் வடித்திருக்கிறேன். அதன் ஈற்றடிதான் 'தரமாய் பதிவொன்று தா'. இதை வைத்து சற்றே வேகம் குறைந்த வெண்பா வடிக்கலாம் வா தொடரை மீண்டும் துவங்குகிறேன். இந்த வாரத்தின் ஈற்றடியை வைத்து வெண்பா வடிக்கவே வாருங்களேன். முதலில் என் முயற்சி.

வலைஞரைக் கேட்டார் மதுமிதா வாகாய்
'சளைக்காமல் சொல்வாய் சரியாய் - வலைப்பூக்
குரமாகி வந்தவொரு உந்துத லென்ன?
தரமாய் பதிவொன்று தா'.

மதுமிதாவிற்காக என் விபரங்கள்.

வலைப்பதிவர் பெயர் : இலவசக்கொத்தனார்

வலைப்பூ பெயர் : இலவசம் தான் வேறென்ன?

சுட்டி(url) : http://elavasam.blogspot.com

ஊர் : எடிஸன், நியூ ஜெர்ஸி

நாடு : அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் அப்போதைய தலைவர், திரு. முத்துசாமி செல்வராஜ். இவர் வலைப்பூ வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் பெரும்பாலான பதிவுகளைப் படித்துவிடுவார். அவரின் மூலம் முதலில் அறிமுகமானது என் பள்ளி ஜூனியராக ஆகிப்போன டுபுக்குவின் வலைப்பூ . அதன் மூலம் அப்படியே தமிழ்மணத்தில் நுழைந்து, இப்பொழுது போதை தலைக்கேறி தமிழ்மணம் பக்கம் வராமல் இருக்க முடியாத நிலமை.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜனவரி 10, 2006

இது எத்தனையாவது பதிவு : 27

இப்பதிவின் சுட்டி(url) : http://elavasam.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : தமிழ் மறந்து போவது போல ஒரு உணர்வு. முதலில் மற்ற பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள் இடத் தொடங்கினேன். கடைசியில் நமக்கே நமக்கான்னு ஒரு வலைப்பூ.

சந்தித்த அனுபவங்கள் : ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புது அனுபவம்தான். அதான் எந்த ஊருக்கு போனாலும் யாராவது வலைப்பதிவாளர்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறோமே.

பெற்ற நண்பர்கள் : எந்த ஊர்ப் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது.

கற்றவை : முதலில் மனசு வெச்சா நம்மால எதுவும் முடியும் என்ற நம்பிக்கை. சீரியஸ் கட்டுரை, நகைச்சுவைக் கட்டுரை, வெண்பா என எல்லாமே கைப்பழக்கம்தான் என்ற புரிதல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : புதிர், பயணக்கட்டுரை, வெண்பா, சமையற்குறிப்பு, சமயக்குறிப்புன்னு நினைச்சதை எழுத முடியுது. நம்ம பதிவில் எல்லாரும் ஆடுற பின்னூட்ட விளையாட்டைப் பத்திக் கேட்கவே வேண்டாம்.

இனி செய்ய நினைப்பவை : புதுசா என்ன? இப்படியே யாருக்கும் மனக்கஷ்டம் வராம பதிவெழுதிக்கிட்டுப் போகவேண்டியதுதான்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சராசரி ஆசைகள் உள்ள ஒரு சராசரி மனிதன். அவ்வளவுதான். நம்மைப் பத்தி சில விஷயங்கள் சொன்ன பதிவு இது.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : இருக்கும் கொஞ்ச நாள் எல்லாரையும் அரவணைத்து சச்சரவு இல்லாமல் விட்டுக்கொடுத்துதான் செல்வோமே.

130 comments:

said...

சிரமமே பார்க்காது சீக்கிரம் நீயே
தரமாய் பதிவொன்று தா.

said...

சபாஷ்! அருமையாக கூறியுள்ளீர்க்கள் கொத்துஸ்...

said...

நன்றி சிவா. நம்ம பழைய வெ.வ.வா தொடரின் பாகங்களையும் படியுங்க. வெண்பா வாத்தி ஜீவா அருமையா சொல்லிக் குடுத்து இருக்காரு. படிச்சிட்டு நீங்களும் எழுதுங்க.

said...

Sorry For English... In a HURRY...

Super Thalaivaa!!!!

said...

நம்றி தேவுத்தம்பி. அவ்வளவு அவசரமா எங்க போறீங்க? ஓ! வெள்ளிக்கிழமை சாயந்திரமா? சரி சரி கேட்கலை. :D

said...

namma pera solli oru link-um koduthathukku oru OOOOO

said...

நடந்த பழசையும் சரி, குடுத்த வாக்கையும் சரி மறக்க மாட்டான் இந்த இ.கொ.

said...

கொத்தனார்..
போன வாரம் எடிசன் வந்திருந்தேன்..
உங்களை பார்க்காமல் வந்துட்டேனே..

அண்ணன் வீடு வந்திருந்தேன் அதனால பலரையும் பார்க்கப் போகல.

said...

:-)

+

said...

என்ன சிரில் இப்படி பண்ணிட்டீங்க. வரேன்னு சொல்லியிருந்தா நான் வந்து பாத்திருப்பேனே. அல்லது போனிலாவது பேசியிருக்கலாமே. பரவாயில்லை.

அட்லீஸ்ட் அடுத்த முறையாவது...

said...

உள்ளேன் ஐயா சிரிப்பானோடு கூட + வேற போட்டு இருக்கீங்களே. அப்படின்னா நல்லா இருக்குன்னு அர்த்தமா?

அதைத்தான் சைகையில் சொல்லறதை விட்டு கொஞ்சம் தமிழில் சொல்லலாமில்ல.

ஆமா அந்த ஜிகர்தண்டா விவாதத்தில் உங்க கருத்தென்ன?

said...

புரோட்டாவைக் கொத்திப் புதுவகைக் கண்ட
சிரோன்மணி வெண்பாவில் சொன்னார் - தராத
ஒருநண்பா உன்பெயர் நூலில் ஒளிரத்
தரமாய்ப் பதிவொன்று தா

ஓகை நடராஜன்.

said...

+ என்றால் 'மேலே' குத்த வேண்டிய இடத்துலயும் குத்தியாச்சுன்னு 'பொருள்'. ஜிகர்தண்டா விவாத்தத்தை 50 பின்னூட்டம் வரை கவனிச்சேன். அப்புறம் அந்தப் பக்கமே வரலை. முடிஞ்சா இந்த வார இறுதியில வர்றேன்.

இந்த வாரம் நானே ஒரே பதிவு தான் போட்டிருக்கேன். நீங்க என்னடான்னா ரெண்டு பதிவு... ஹும் வாழுங்க. நான் அடுத்தப் பதிவு போடாததுக்கு காரணம் உங்க பதிவுகளையெல்லாம் பின்னூட்டங்களோடு படிச்சுப் 'புரிஞ்சுக்கணும்'ங்கற எண்ணம் தான். :-)

said...

//புரோட்டாவைக் கொத்திப் புதுவகைக் கண்ட//

புது வகை எல்லாம் இல்லைங்க. இருக்கறதத்தான் சொன்னேன். இதுக்கெல்லாம் நம்ம பேரைப் போட்டா மதுரக்காரங்க வைவாய்ங்க.

உங்க வெண்பா ரொம்ப நல்லா இருந்தது நடராஜன் சார். நான் மதுமிதாக்கா கேட்டதைச் சொன்னேன். நீங்க என்னடான்னு நான் சொன்னா மாதிரி சொல்லிடீங்க.

நீங்க இந்தப் பக்கம் வரதே பெருமையா இருக்கய்யா.

said...

//+ என்றால் 'மேலே' குத்த வேண்டிய இடத்துலயும் குத்தியாச்சுன்னு 'பொருள்'.//

ஆஹா. பாத்தீங்களா. பழக்கதோஷத்தில் அர்த்தம்ன்னு உங்ககிட்டயே சொல்லிட்டேன். மாப்பு ஐயா மாப்பு.

//முடிஞ்சா இந்த வார இறுதியில வர்றேன். //

கட்டாயம் வாங்க. மதுரைக்காரங்க மொத்தமா வந்து விளக்கம் தரலையேன்னு எனக்கு மனக்குறைதான்.

//நீங்க என்னடான்னா ரெண்டு பதிவு... ஹும் வாழுங்க.//

என்னங்க இப்படி புகையுற வாசனை. இந்த விஷயத்தில் எல்லாம் உங்களோட போட்டி போட நம்மால முடியாது. எதோ மன்னிச்சி விட்டுடுங்க.

எதுக்கும் ஒரு சேஃப்டி சிரிப்பானும் போடறேன். :-)

said...

வெண்பா எழுதுவ தெல்லா மில்லாமல்
நண்பகா ளுடனெ பின்குத் துடன்முன்
குத்துக பொருள் பகரின்று போய்நாளை
தரமாய்ப் பதிவொன்று தா

said...

பெருசு,

சொன்னபடி வந்து போட்டுட்டீங்களே. வெரிகுட். கொஞ்சம் வெளிய போறேன். வந்து கரெக்ட் பண்ணறேன்.

said...

கொத்ஸ்,

நிஜமாவே பதிவு எழுத ஆரம்பிச்சு அஞ்சே அஞ்சு மாசம்தானா ஆகுது? அதுவும் 27 பதிவுதானா?

கணக்கைச் சரியாச் சொல்றீரா இல்லையா?

காலங்காலமாய் உங்களை இங்கே பாக்கறமாதிரி இருக்கேப்பா?

இங்கே நீர் ஒருவேளை குடித்தனமே போட்டதாலேயா?
இதோ போட்டுட்டேன் சிரிப்பான்.
:)))))))))))))))))))))))))))))))))))))))

said...

கொத்ஸ்,

உண்மையாவே பதிய ஆரம்பிச்சு அஞ்சே அஞ்சு மாசம்தானா
ஆச்சு? அதுவும் 27 மட்டுமேயா?

கணக்கைச் சரியாப் பார்த்தீரா?

காலங்காலமா உங்களை இங்கே பார்த்தமாதிரி இருக்கேப்பா.
ம்ம்ம்ம்ம் எதனாலே அப்படித் தோணுது?

நீர் இங்கேயே குடித்தனம் போட்டுட்டதாலேயா?

சரிசரி. சிரிப்பான் போட்டுறலாம்.
:-))))))))))))))))))))))))))))))))

said...

போய் யாரக் கரெக்ட் பண்ண போறீங்க

said...

//அதுவும் 27 பதிவுதானா?//

ஆமாம். அவ்வளவுதான். நாங்க பதிவுகளின் எண்ணிக்கையை விட தரத்தைத் தானே நம்பறோம்.

அது மட்டுமில்லை. பின்னூட்டத்துக்கு பதில் போட்டே பெண்டு நிமிறுது. நீங்க வேற.

//காலங்காலமாய் உங்களை இங்கே பாக்கறமாதிரி இருக்கேப்பா?//
அதுதாங்க நான் செஞ்ச் புண்ணியம். எனக்கு இங்க இவ்வளவு சீக்கிரம் கிடைச்ச அக்செப்டன்ஸ் ஒரு பெரிய மோட்டிவேஷன்.

உங்கள மாதிரி பெரியவங்க எல்லாருக்கும் மீண்டும் ஒரு நன்றி.

said...

//போய் யாரக் கரெக்ட் பண்ண போறீங்க //

மாமனார் மாமியார் வந்திருக்காங்க. குடும்பத்தோட அவங்க மூத்த பொண்ணு வீட்டுக்கு வந்தோம். ஒரு 2 மணி நேர காரோட்டம். இன்னைக்கு மழையினாலும், வாரயிறுதியென்பதாலும் ஒரு 4:30 மணி நேரம்தான் ஆச்சு. :(

இப்போ போயி கரெக்டெல்லாம் பண்ணினேன் வீடு கட்டி அடிப்பாங்க.

said...

நான் கூட நீங்க இங்க ரொம்ப நாளா பின்னூட்டிகிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன்.. எனக்கு ஒரு மாசம் முந்திதான் வந்திருக்கீங்க.. ஆச்சரியம் தான்..

said...

வெண்பா நாளை.. வெண்பா எழுதி டச் விட்டுப் போச்சு :)

said...

தரமாய்ப் பதிவு தருவதெலாம் இருக்கட்டும்
வரமாய்ப் பிறந்து வகுப்பெடுத்து வெண்பாவை
வடிக்கக் கற்றுத் தரும் வாத்தியைக்
கண்டு பிடித்துத் தா!

said...

//நான் கூட நீங்க இங்க ரொம்ப நாளா பின்னூட்டிகிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன்.. எனக்கு ஒரு மாசம் முந்திதான் வந்திருக்கீங்க.. ஆச்சரியம் தான்.. ///

அடடா. வாய வெச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம் போல இருக்கே. ஆனா பாருங்க எனக்கு ஒரு மாசம் அப்புறம் வந்தாலும் நீங்கதான் இணையத்தின் செல்லப் பிள்ளை, சுப்ரீம் ஸ்டார். அதனால எவ்வளவு நாள் இருக்கோன் என்பதா கணக்கு? எவ்வளவு ஹிட் குடுத்தோமின்னுதான் பார்க்கணும். :)

said...

//வெண்பா நாளை.. வெண்பா எழுதி டச் விட்டுப் போச்சு :) //

டச் விட்டுப் போச்சா? அடி செ.... சீக்கிரம் வந்து எழுதற வழியப்பாருங்க. இல்லை வாத்தியார் வந்தா போட்டுக் குடுத்துருவேன்.

said...

//வாத்தியைக் கண்டு பிடித்துத் தா! //

அவரு இப்போவெல்லாம் அவரு பதிவுக்கே வரதில்லை. கடைசியாப் பாத்தது உங்க பதிவில்தான். கொஞ்சம் தேடிப் பார்த்து இங்க கூட்டிக் கிட்டு வாங்க.

அப்புறம் நீங்க கொஞ்சம் முயன்றால் சரியான வெண்பாவாவே எழுதலாம். உங்க பாட்டையும், நம்ம பெருசு பாட்டையும் அப்புறம் கூறு போட்டுப் பார்க்கலாம்.

said...

இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்...


யாரு.. பொன்ஸக்காவுக்கு வெண்பா எழுத வரலையா :-? இப்ப குடுத்து இருக்கிற ஈற்றடிக்கு பத்து வெண்பா எழுத சொல்லிடலாமா ?


சிபியாரே.. எங்க போய்டப் போறேன் இங்க தானே இருக்கேன். கொஞ்சம் இல்லை அதிகமாவே வேலையிருந்ததால வரல.. இப்பதான் வந்துட்டோம்ல ( யாருய்யா அது வந்துட்டான்யா வந்துட்டான்யான்னு சொன்னது .. எனக்கிப்பவே தெரிஞ்சாகனும் )

அன்புடன்
ஜீவா

said...

கொத்தனாரே,
வெண்பா நான் பள்ளியில் படித்தது. 90 சதவீதம் மறந்துவிட்டது. வெண்பா இலக்கணங்களைப் படிக்க ஏதாவது வலைச்சுட்டி கொடுக்க முடியுமா?

said...

வாங்க வாத்தி,

//இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்... //

இப்படிக் காணாமப் போனா எப்படி? அட்லீஸ்ட் லீவு சொல்லிட்டு போகலாமில்ல.

//ஈற்றடிக்கு பத்து வெண்பா எழுத சொல்லிடலாமா ?//

சொல்லுங்க. சொல்லுங்க. ஆனா ஒண்ணு வரவே காணும்...

//கொஞ்சம் இல்லை அதிகமாவே வேலையிருந்ததால வரல.. //
எங்களுக்கு வெண்பா எழுதச் சொல்லித் தரதுதானே வேலை. வேற என்ன வேலை?

said...

//வெண்பா இலக்கணங்களைப் படிக்க ஏதாவது வலைச்சுட்டி கொடுக்க முடியுமா? //

வாங்க மகேஸ். நீங்களெல்லாம் படிச்சு மறந்து போயிருக்கீங்க. நாங்கெல்லாம் சாய்ஸில் விட்ட ஆளுங்க. ஆனா இப்போ நம்ம வெ.வா (அதாங்க வெண்பா வாத்தியார்) ஜீவா சொல்லித் தராரு பாருங்க அதனாலதான் எதோ முயற்சி பண்ணறோம்.

நீங்க அவர் ஆரம்பிச்ச இந்த வலைப்பூ போய் பாருங்க.

said...

ஜீவா, பொன்ஸ், ஃபுளோரிப்புயல் இவங்க யாரும் வரலையே..

said...

கொத்ஸ்...மன்னிச்சுக்கங்க நம்ம லெவலுக்கு உள்ளேன் ஐயா தான்.
:)-

(Better luck next time - இது எனக்கு நானே)

said...

//கொத்ஸ்...மன்னிச்சுக்கங்க நம்ம லெவலுக்கு உள்ளேன் ஐயா தான்.
:)-//

கைப்ஸ் எல்லம் முயற்சி செய்யலைன்னா எப்படி? சும்மா மானே தேனே பொன்மானேன்னு அடிச்சி விடுங்க. :)

said...

ஹ்ம்ம்.. நம்ம கடுஞ்சொல்லடியாழ்வார் ( அதாங்க போலி ) டோண்டுவின் பதிவில் பதிலிட்டதைத் தொடர்ந்து வாழ்த்துமடல் ஒன்று அனுப்பியிருந்தார் .. இந்த ஈற்றடியை பார்த்தமும் ஒருவேளை அது கடுஞ்சொல்லடியாழ்வார்க்கோ என்று நொனைத்தேன்... அதனால் என் மனதில் எழுந்தவற்றை வெண்பாவாக இதோ ... இலவசனார்.. மன்னிப்பையும் இலவசமாக எனக்கும் இந்தப் பதிவில் இதையிட்டதற்காக மன்னிப்பீராக.. ஆமென்


வைரமோ தங்கமோ வைத்தெமக்குத் தாவென
வாரோமே உம்மிடம் போலியரே - சீராய்
சிரத்திலே நற்சிந்தை ஏற்றி நிதமும்
தரமாய் பதிவொன்று தா



ஜீவா
----------------------
இலவசம்


ஜீவா : கொத்தனாரே .. பேச்சு பேச்சா இருக்கும்போது கை ஓங்கப் படாது. அந்தக் கோட்டைத் தாண்டி நீங்களும் வரப்படாது நானும் வரமாட்டேன் ( எத்தனை நாளைக்கு தான் அதே கோட்டை போட்டுட்டு இருப்பீய... உவ்வேக்.. நாத்தம் குடலைப் பிடுங்குது.. தொவச்சு காயப்போடுமைய்யா )

said...

//கடுஞ்சொல்லடியாழ்வார்//

நல்ல பேருங்க. இனி எல்லரும் இதையே உபயோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

//இந்தப் பதிவில் இதையிட்டதற்காக மன்னிப்பீராக.//

போ.போ.பி.போ.

//வாரோம் உம்மிடம் //

என்னது நீங்க அங்க போறீங்களா? வர வர உம்ம நடத்தை சரியாவே இல்லையே. இருங்க போட்டுக் குடுக்க வேண்டிய இடத்தில் போட்டுக் குடுக்கறேன்.

said...

//வாரோம் உம்மிடம் //

என்னது நீங்க அங்க போறீங்களா? வர வர உம்ம நடத்தை சரியாவே இல்லையே. இருங்க போட்டுக் குடுக்க வேண்டிய இடத்தில் போட்டுக் குடுக்கறேன்.

********

அய்யா தெய்வமே.. நல்லா இருங்க .. எத்தனை பேர் ஐயா கிளம்பி இருக்கீங்க ??

வாரோம் - வரமாட்டோம் அப்படின்னு தானய்யா அர்த்தம்..


ஹ்ம்ம்.. தூரத்துல ஒரு பாட்டு உங்களுக்கு கேக்குதா ??

" காலம் கலிகாலம் மாறிப் போச்சுடா "

அன்புடன்
ஜீவா

said...

//ஜீவா
----------------------
இலவசம்
//

உழைக்கும் வருக்கத்தை காலின் கீழ் போட்டு மிதிக்கும் ஆணவ போக்கு அழியவில்லை என்பதற்கு இதையும் விடச் சான்று வேண்டுமா? உம்மை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

//பேச்சு பேச்சா இருக்கும்போது கை ஓங்கப் படாது. அந்தக் கோட்டைத் தாண்டி நீங்களும் வரப்படாது நானும் வரமாட்டேன்.//

3000 ஆண்டுகளாக ஓங்கியிருக்கும் உமது கைகளே ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் பாட்டாளிகள் எங்கள் கைகள் ஓங்கவே கூடாது. அப்படித்தானே? நீங்கள் கோட்டைக்குப் போவீர்கள் ஆனால் நாங்கள் அக்கோட்டைத் தாண்டி வரக்கூடாது. அதுதானே உமதெண்ணம்.
;)

said...

அய்யா இலவசக் கொத்தனாரே... உமதது திருவடுகள் எந்த திசையில் உள்ளது என்று தயவுசெய்து சொல்வீர்களா ..


நான் சிவனே என்று என் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ஐயா.. உழைக்கும் வர்கமாம் என்னை அதிகார வர்கம் என்று சொல்லிவிட்டீர்கள் என்பதில் தான் மனம் சற்றே கலங்கியுள்ளது.

எனக்கு அரசமீனவனின் பழக்கம் இல்லாததால் இந்த மனதின் வலியை எப்படி தீர்ப்பதென்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

ஆற்றலரசியாரே ... வ.வா.சங்க நிரந்தர தலைவி கீதா அவர்களே.. உயர்திரு கைப்புள்ள அவர்களே.. கட்டதுரை மற்றும் பார்த்தீபன் அவர்களே .. இந்த கொடுமையை தட்டிக் கேட்க தட்டியுடன் வருவதாக சொன்ன தேவு அவர்களே.. எங்கே சென்று மறைந்தீர்கள். தேர்தல் நேரத்தில் மட்டிம் துணைத் தேடும் கயவர் கூட்டம் கொண்ட கட்சி என்றூ மற்றவர்கள் அந்தக் கட்சியைக் குறை கூறுமுன் வந்து இந்த அநியாயத்தை தட்டிக் கேளுங்கள்..


பொன்னம்மா ( அதாங்க .. பொன்ஸ் ) ... உங்களுக்கு குடுத்த சோடால பாதி நமக்கும் குடுங்க.. பேசி பேசி தொண்ட வரண்டு போச்சுல்ல


அன்புடன்
ஜீவா

said...

//வைரமோ தங்கமோ வைத்தெமக்குத் தாவென
வாரோமே உம்மிடம் போலியரே - சீராய்
சிரத்திலே நற்சிந்தை ஏற்றி நிதமும்
தரமாய் பதிவொன்று தா//

வாத்தி, உம்ம வெண்பாவில் 2,3 அடிகளில் மோனை இல்லையே. வாத்தின்னா எதாவது விலக்கா?

நம்ம நடராஜன் சார் போட்ட வெண்பாவில் இதே இரண்டு அடிகளிலும்தான் வரவில்லை. அதான் எதாவது புது விஷயம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாமேன்னுதான்.

said...

கடந்து வந்த பாதையோ கற்றதுவோ
பெயருள்ள பதிவரோ போலியோபிற மாண்பிலா
மனிதரோ, மனதில் மதிப்பதை சொல்லி
தரமாய் பதிவொன்று தா!

இன்னும் முதல் பதிவே போடல.
தரமாய் பதிவொன்று தரணும்.

என்ன கொத்தனாரே! நான் வெண்பா எழுத fitஆ?

said...

//என்ன கொத்தனாரே! நான் வெண்பா எழுத fitஆ?//

பிரபு ராஜா, நல்லாத்தான் ஆரம்பிச்சு இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுனீங்கன்னா சரியான வெண்பாவா வரும்.

முதலில் நம்ம வெண்பா வாத்தி பதிவில் (சுட்டி மேல ஒரு பின்னூட்டத்தில் இருக்கு.)வெண்பா விதிகள் ஒரு வாட்டி பாத்துக்குங்க.

தளை எதுகை மோனைன்னு மூணு விஷயம் இருக்கு. முதலில் தளை தட்டாம வரணும். அப்புறமா எதுகை, மோனை எல்லாம் பாத்துக்கலாம்.

எதனாச்சும் சந்தேகம்ன்னா தயங்காம கேளுங்க.

said...

//முதலில் நம்ம வெண்பா வாத்தி பதிவில் //

அதை கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சி, இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னுதான் ஒதுங்கி நின்னேன்.

இப்போ கொஞ்சம் ஆர்வக்கோளாருல எழுதிட்டேனா.. இனி அதையும் படிக்க முயற்சி பண்றேன்்.

//முதலில் தளை தட்டாம வரணும்//

தலையை கொஞ்சம் தட்டினா அடுத்த தடவை சரியா வந்துரும்.

said...

//முதலில் தளை தட்டாம வரணும்.//
தலையை தட்டினால் வந்துடும்
:-)

said...

//இப்போ கொஞ்சம் ஆர்வக்கோளாருல எழுதிட்டேனா.. இனி அதையும் படிக்க முயற்சி பண்றேன்//

பண்ணுங்க பண்ணுங்க. நாங்க இருக்கோம் உங்க பின்னாடி. படிச்சிட்டு எழுதுங்க. சரி பண்ணித் தரோம்.

//தலையை கொஞ்சம் தட்டினா அடுத்த தடவை சரியா வந்துரும்.//

புதுசா இருக்கறதுனால அதெல்லாம் கிடையாது. ஆனா இப்போ பாருங்க எங்க வாத்தி தலையையே தட்டுவோம்.

said...

//எதனாச்சும் சந்தேகம்ன்னா தயங்காம கேளுங்க.//

இப்ப நாம எல்லாம் வெண்பா எழுதறதால தமிழ் வளருதா?

இல்ல சும்மா டமாசுக்கா?

said...

அண்ணே என்னமோ பதிவுல எழுதுறிங்க எனக்கு ஒன்னும் புரியலை.. கொஞ்சம் விபரமா சொல்லுங்கள்.அது என்ன தரமான பதிவு... அது என்ன கணக்கெடுப்பு....?

said...

//இப்ப நாம எல்லாம் வெண்பா எழுதறதால தமிழ் வளருதா?//

சீரியஸாவே பதில் சொல்லறேன். நம்மால தமிழ் வளருதான்னெல்லாம் தெரியாது. ஆனா நமக்கு தமிழின் அருமை புரியுது. தமிழ் மேல நம்ம பற்று ஜாஸ்தியாகுது. மொத்தத்தில் தமிழ் தெரிஞ்சவங்க எண்ணிக்கை ஜாஸ்தியாகுது. நல்ல விஷயம்தானே.

said...

//எதனாச்சும் சந்தேகம்ன்னா தயங்காம கேளுங்க.//

கொத்ஸ் இப்படியெல்லாம் சொல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குங்க!

:-)

நம்ம புரொஃபொஸர் தாஸ் அவதிப்பட்டது தெரியுமில்ல!

:-)

said...

//.அது என்ன தரமான பதிவு... அது என்ன கணக்கெடுப்பு....?//

இராம்ஸ்,

மதுமிதான்னு ஒருத்தங்க இருக்காங்க. அவங்க வலைப்பதிவர்கள் பத்தி ஒரு ஆராய்ச்சி பண்ணி புத்தகம் ஒண்ணு போடறாங்க. அதுக்காக நம்ம வலைப்பதிவர்கள் எல்லாரையும் அவங்களைப் பத்தி எழுதி ஒரு பதிவாப் போடச் சொன்னாங்க. அதான் மேட்டர்.

நான் சும்மா வெறும் பதிவாப் போடாம அதையே வெண்பா விளையாட்டுக்கு உபயோகப்படுத்திக்கிட்டேன். கவிதைன்னு வந்தா ஒரு அளவு பொய் சொல்ல வேண்டாமா? அதான் தரமான பதிவு அது இதுன்னு சொன்னேன். மத்தபடி பெருசா வேற ஒண்ணும் இல்லை.

இப்போ புரிஞ்சுதா?

said...

சிபி,
வழக்கம்போல 50ஆவது பின்னூட்டம் போட்டாச்சு. வாழ்த்துக்கள்.

//நம்ம புரொஃபொஸர் தாஸ் அவதிப்பட்டது தெரியுமில்ல!//

இது என்ன மேட்டர்? புரியலையே. :(

said...

//நம்ம புரொஃபொஸர் தாஸ் அவதிப்பட்டது தெரியுமில்ல!//

//இது என்ன மேட்டர்? புரியலையே//

நடு ராத்திரில ஃபோன் பண்ணி "சார் நீங்க வெறும் தாஸா இல்லை....."

said...

அடப்பாவி, விட்டா நம்மளை விவேக்குன்னே முடிவு கட்டுவீங்க போல இருக்கே. கொஞ்சம் காமெடியாத்தான் இருக்கேன். அதுக்காக அவர் அளவு புலம்பறதோ, நாட்டை திருத்தவோ முயற்சி பண்ணலையே. :)

said...

நம்ம தாமிரபரணிதண்ணி குடிச்சாலே
'தன்னடக்கம்' தானா வரும்.
நாமெல்லாம் அதுல கொஞ்சமா குதியாட்டம் போட்டிருக்கிறோம்!!!!.

அன்புடன்,
(துபாய்)ராஜா.
http://rajasabai.blogspot.com/

said...

உங்களை விவேக்னு சொல்லலை.

//எதனாச்சும் சந்தேகம்ன்னா தயங்காம கேளுங்க.//

கொத்ஸ் இப்படியெல்லாம் சொல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குங்க!

said...

நான் டமாசுக்குதான் கேட்டேன். ஆனா சீரியஸாவே பதில் சொல்லீட்டீங்க.

உண்மையை சொல்லணும்ணா பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் எல்லோரும் ஆசிரியப்பா, வெண்பா எல்லாம் மறந்துடரோம். விட்டதுடா தொல்லைன்னு.

ஆனா அதையே இப்ப படிச்சா! நூறு நூத்தம்பது பின்னூட்டம் கிடைக்குதுல்ல. (அட மொதல்ல மாதிரி பொறாமைல சொல்லலங்க)

அப்ப தமிழ்பற்று எல்லாருக்கும் இருக்குன்னுதான அர்த்தம்?

said...

//கொத்ஸ் இப்படியெல்லாம் சொல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குங்க//

உங்க உதாரணப்படி சந்தேகம் கேட்கலாமுன்னு சொன்ன நாந்தானே சாக்கிரதையா இருக்கோணும்? இல்லை எனக்குத்தான் சொல்லறீங்களா? சரியான punctuation போடலைன்னா இப்படித்தான்!

said...

//நம்ம தாமிரபரணிதண்ணி குடிச்சாலே
'தன்னடக்கம்' தானா வரும்.
நாமெல்லாம் அதுல கொஞ்சமா குதியாட்டம் போட்டிருக்கிறோம்!!!!.//

வாங்க ராசா. நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு சரி. ஆனா இப்போ இது எங்க வந்தது? கொஞ்சம் புரியலையே.

said...

//எல்லோரும் ஆசிரியப்பா, வெண்பா எல்லாம் மறந்துடரோம்.//

படிச்சாத்தானே மறக்க.

//ஆனா அதையே இப்ப படிச்சா! நூறு நூத்தம்பது பின்னூட்டம் கிடைக்குதுல்ல. (அட மொதல்ல மாதிரி பொறாமைல சொல்லலங்க) //

பின்னூட்டத்தை விடுங்க. அதான் இப்போ எல்லாரும் கிண்டல் பண்ணறாங்களே. இன்னிக்குத் திங்கள்கிழமைன்னு போட்டக்கூடத்தான் வருதுன்னு.

//அப்ப தமிழ்பற்று எல்லாருக்கும் இருக்குன்னுதான அர்த்தம்?//

இல்லைங்க. பின்னூட்டம் போடறது நம்ம பேருலா இருக்கற ஒரு பாசத்துல. ஆனா வெண்பா எழுதினாத்தான் தமிழ்ப் பற்று. வந்த 60 பின்னூட்டத்தில் பார்த்தீங்கன்னா 6 கூட தேறலை. :(

said...

வெண்பா தெரிஞ்சா தானேங்க எழுத முடியும்?நமக்கு இலக்கணம் தகராறு.என்னை பார்த்தா உங்களுக்கு புலவன் மாதிரியா தெரியுது?:-)))

said...

என்ன செல்வன் இப்படி சொல்லறீங்க? நாங்க எல்லாம் மட்டும் என்ன பள்ளியில் படித்ததை வைத்தா எழுதறோம்? நம்ம வெண்பா வாத்தியார் ஜீவ்ஸ்தானே சொல்லித்தராரு. சுட்டி மேல இருக்கு பாருங்க. போயி கொஞ்சம் பாத்தீங்கன்னா தானா வெண்பா வருது...கொஞ்சம் ட்ரை பண்ணுங்கப்பா.

said...

நட்சத்திர வாரத்துல அவருக்கு வேற வேலை இல்லை? வெண்பா எல்லாம் கத்துக்கச் சொல்றீங்க.!!! சரி, மொத்தமா எத்தன வெண்பா தேறிச்சு??

said...

//நட்சத்திர வாரத்துல அவருக்கு வேற வேலை இல்லை? வெண்பா எல்லாம் கத்துக்கச் சொல்றீங்க.!!!//

நாமெல்லாம் 'வார'த்தானே அவரு இந்த வார நட்சத்திரமாயிருக்காரு.

// சரி, மொத்தமா எத்தன வெண்பா தேறிச்சு??//

எண்ணலைங்க. எண்ணினா மனசு வலிக்கும் அதான்.

அது சரி. ஊரிலிருக்கும் அனானிகளுக்கெல்லாம்தான் பதில் சொல்லியாச்சே. உங்க வெண்பாவெங்க?

said...

இத்தனை நாளானதில்.. ஏதோ ஒண்ணு.. வெண்பா மாதிரி வந்துருக்கு.. ரெண்டு பேருமா கொஞ்சம் தட்டி, குட்டி சரிப்படுத்தலாம் :

கரம்பற்றிப் பதிவுக்குக் கொணர்ந்தோம் வெவாவைத்
தரமாய்ப் பதிவொன்று தா

said...

இவ்வளவு கேட்ட பின்னாடி ரெண்டே ரெண்டு வரியா? அதுவும் வாத்தியையே கிண்டல் பண்ணி. நல்லாயிருகம்மா உங்க வேலை.

அதுவும் தளை எல்லாம் தட்டுதே. சரி. நாம இதை முதலில் சரி பண்ணலாம்.

said...

இந்தாங்க நம்ம சரி பண்ணுன வெர்ஷன்.

கரம்பற்றிப் கொண்டுவந்தோம் கற்றுதரத் தானே
தரமாய்ப் பதிவொன்று தா

ஆமா. இதுல கற்றுத்தரத் தானே ன்னு வரணுமா இல்லை எழுதினது சரிதானா?

இதை இன்னும் ரெண்டு வரி சேர்த்து நாலு வரியாக்குங்க பார்ப்போம்.

said...

இது தான் முன்னயே சொல்லி இருக்கோமே கொத்ஸ் நம்ம இலக்கணக் க்ளாஸ்ல..

"அ','இ','ய்' இதுல முடியும் வினையெச்சங்களுக்குத் தான் ஒற்று மிகும்"

உகர ஈற்று வினையெச்சத்துக்கு ஒற்று வராது.. கற்றுதர சரிதான்..

said...

என்னடா இந்தப்பதிவு மறுபடி மறுபடி மறுமொழிகள் லிஸ்டலே வருதே.. ஒருதரம் எட்டிப்பாப்பமேன்னு பாத்தா இங்க வரு.வா.சவோட கிளை ஒண்ணு ஓடிட்டிருக்கு. நடத்துங்க.

அந்த காலத்துல இலக்கோணம் படிச்சப்ப ஆவலா வெண்பா எல்லாம் எழுதிட்டிருந்தேன். இப்ப அதெல்லாம் ரொம்ப தூரம்போல தெரியுது. சும்மா வெள்ளாட்டுக்கு ஜீவ்ஸ்-ஐ படிச்சுட்டு டிரை பண்ணப்போறேன்.

said...

//சும்மா வெள்ளாட்டுக்கு ஜீவ்ஸ்-ஐ படிச்சுட்டு டிரை பண்ணப்போறேன்.//
பண்ணுங்க. பண்ணுங்க. அதுக்குத்தானே இவ்வளவு விளையாட்டும் பின்னூட்டமும். இந்த மாதிரி பதிவுக்கு ஒருத்தர் புதுசா வந்தாக்கூட சந்தோஷம்தான்.

said...

//உகர ஈற்று வினையெச்சத்துக்கு ஒற்று வராது.. கற்றுதர சரிதான்..//

பொன்ஸக்கா, கொஞ்சம் இது பத்தி விளக்கம் வேணும். உங்க பழைய பதிவை படிச்சிட்டு சந்தேகங்களோட வரேன்.

said...

//கரம்பற்றிப் கொண்டுவந்தோம் கற்றுதரத் தானே
தரமாய்ப் பதிவொன்று தா//

என்ன அளவியல் வெண்பாவா ஆக்குங்கன்னா ஆளையே காணும்? நானே செய்யறேன், சரியான்னு பாருங்க.


வெண்பா வடிப்பதை வேடிக்கை தான்பார்த்தோம்
பண்பாடும் வித்தை படிக்கவே, நண்பா
கரம்பற்றிப் கொண்டுவந்தோம் கற்றுதரத் தானே
தரமாய்ப் பதிவொன்று தா

said...

//உங்க உதாரணப்படி சந்தேகம் கேட்கலாமுன்னு சொன்ன நாந்தானே சாக்கிரதையா இருக்கோணும்? இல்லை எனக்குத்தான் சொல்லறீங்களா? சரியான punctuation போடலைன்னா இப்படித்தான்!//


அந்தப் படத்துலே பொரொஃபஸர்தான் எந்த நேரமும் சந்தேகம் கேட்கலாம்ணு பசங்ககிட்ட சொல்வார்.

நீங்க அப்படிச் சொன்னதால உங்களை பொரொஃபஸராத்தான் பார்க்கிறேன்.

(அதுக்காக நைட் 12 மணிக்கு ஃபோன் வந்தா அது நான் இல்லை)

said...

//(அதுக்காக நைட் 12 மணிக்கு ஃபோன் வந்தா அது நான் இல்லை)//

இப்போ விவேக் யாருன்னு தெரிஞ்சுகிட்டு நாந்தான் ஜாக்கிரதையா இருக்கணும் இல்லையா?

said...

// வந்த 60 பின்னூட்டத்தில் பார்த்தீங்கன்னா 6 கூட தேறலை. :( //

பாவமா இருக்கே.

குருவ பகைச்சிகிட்டா இப்படிதான் ஆகும். வெ.வ.வா பதிவுல இந்த ஈற்றடிய போட்டிருந்தீங்கன்னா நிறைய வெண்பா சேந்திருக்கும்.

;)

said...

//குருவ பகைச்சிகிட்டா இப்படிதான் ஆகும். //

அவர ஒண்ணியும் பகைச்சுக்கலையே. அவருதான் அபாண்டமா பழி போடறாரு. :)

//வெ.வ.வா பதிவுல இந்த ஈற்றடிய போட்டிருந்தீங்கன்னா நிறைய வெண்பா சேந்திருக்கும்.//

நீங்க அந்தப்பக்கம் போய் பாத்திருக்கீங்களா? போயிருந்தா இப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்க.

said...

வெண்பாவுக்கு வேந்தனே
என் பாவுக்கு எதிர்ப்பா இல்லையென
சொல்லம்பால் தாக்கும் தீரனே
அழகு தமிழ்ச் சொற்களுக்கு அலகெடுக்கும் ஆற்றலோனே
உன் புகழ் சொல்ல பதிவிட்டவனே
தமிழும்
அந்தத் தமிழால் நின் புகழும்
அந்தப் புகழால் நின் சீரும் பேரும் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்.

(அப்பா...தாவு தீந்து போச்சு. நல்லாருங்க. நல்லாருங்க.)

said...

//குருவ பகைச்சிகிட்டா இப்படிதான் ஆகும். //

அவர ஒண்ணியும் பகைச்சுக்கலையே. அவருதான் அபாண்டமா பழி போடறாரு. :)
\\


பாவி மக்கா... என்னாய்யா பழிபோட்டேன் உம்மேல ?...


அன்புடன்
ஜீவா

said...

//வெண்பாவுக்கு வேந்தனே
என் பாவுக்கு எதிர்ப்பா இல்லையென
சொல்லம்பால் தாக்கும் தீரனே
அழகு தமிழ்ச் சொற்களுக்கு அலகெடுக்கும் ஆற்றலோனே
உன் புகழ் சொல்ல பதிவிட்டவனே
தமிழும்
அந்தத் தமிழால் நின் புகழும்
அந்தப் புகழால் நின் சீரும் பேரும் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்.
//

அண்ணா, தப்பா எதுனா சொல்லியிருந்தா மன்னிச்சு விட்டுடுங்க. இப்படி ஓட்டறீங்களே ஒரு சின்னப்பையனை.

ஆனா உங்க வாழ்தெல்லாம் வேணும். ரொம்ப நன்றி.

இதெல்லாம் செய்யறீங்க ஒரு வெண்பா குடுங்கன்னு நானும் நாயா (ஓ! இப்படி சொல்லக்கூடாதோ?) பேயா அலையறேன். அசைஞ்சு குடுக்க மாட்டேங்கறீங்களே.

said...

//பாவி மக்கா... என்னாய்யா பழிபோட்டேன் உம்மேல ?...//

உங்க பதிவில் நீங்க ஆரம்பிச்சு விட்ட வெ.வ.வா பதிவுகளை நாங்க போடவேயில்லைன்னு இந்த பதிவு போட்ட அதே நாளில் பழி போட்டீரே. அதான்.

உமக்கு ஒரு தனி மடல் போட்டேனே. எங்க பதில்?

said...

// இலவசக்கொத்தனார் said...
//வெண்பாவுக்கு வேந்தனே
என் பாவுக்கு எதிர்ப்பா இல்லையென
சொல்லம்பால் தாக்கும் தீரனே
அழகு தமிழ்ச் சொற்களுக்கு அலகெடுக்கும் ஆற்றலோனே
உன் புகழ் சொல்ல பதிவிட்டவனே
தமிழும்
அந்தத் தமிழால் நின் புகழும்
அந்தப் புகழால் நின் சீரும் பேரும் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்.
//

அண்ணா, தப்பா எதுனா சொல்லியிருந்தா மன்னிச்சு விட்டுடுங்க. இப்படி ஓட்டறீங்களே ஒரு சின்னப்பையனை. //

சின்னப் பையந்த்தான்
அன்று ஓலைச்சுவடியில்
வள்ளுவனும் ஔவையும் பதித்த
தமிழ் முத்திரை என்னும் சின்னப்பையந்தான்.

ஓட்ட முடியுமா?
ஓட்டுக்குள் இருப்பதைக்
காட்ட முடியுமா?
உனது மண்டை ஓட்டுக்குள்
சுரக்கும் தமிழ்ப் பாக்களைக்
கொடுக்கும் அறிவினைக்
காட்ட முடியுமா?

// ஆனா உங்க வாழ்தெல்லாம் வேணும். ரொம்ப நன்றி. //
வாழ்க. வாழ்க.

// இதெல்லாம் செய்யறீங்க ஒரு வெண்பா குடுங்கன்னு நானும் நாயா (ஓ! இப்படி சொல்லக்கூடாதோ?) பேயா அலையறேன். அசைஞ்சு குடுக்க மாட்டேங்கறீங்களே. //

வெண்பா எல்லாம் என் பாவா?
ஆசிரியப்பா எழுதினால் ஆ! சிரியப்பா என்கிறார்கள்
வஞ்சிப்பா செய்யும் வஞ்சம் உலகறியும்
கலிப்பாவும் களிப்பாவாகாமல் போனதை வலிப்பாகாமல் சொல்வதெப்படி?

said...

ஜிரா,

ஒரு முடிவோடதான் இருக்கீங்க. மத்தவங்கன்ன அரசமீனவன் அதிகமாயிடுச்சான்னு கேட்டிருப்பேன். உங்களைப் பத்தி தெரியும் அதனால அதுவும் கேட்கலை.

ரொம்ப அடிக்காதீங்க. அப்புறம் அழுதுருவேன். அவ்வ்வ்வ்வ்வ்....

said...

உங்க பதிவில் நீங்க ஆரம்பிச்சு விட்ட வெ.வ.வா பதிவுகளை நாங்க போடவேயில்லைன்னு இந்த பதிவு போட்ட அதே நாளில் பழி போட்டீரே. அதான்.
****************


அரசமீனவனும் தங்கக் கழுகும் அதிகம் உள்ளே சென்றுள்ளதா உமக்கு ? எங்கே ஐயா அப்படொ சொல்லியிருக்கிறேன்.


டோண்டுவுக்கு பதில் போட்டா தான் தப்புங்கறாங்க... சிவ சிவ... நான் என் மனசாட்சியிடம் பேசினா கூட தப்பா ??



--
உமக்கு ஒரு தனி மடல் போட்டேனே. எங்க பதில்?
---

உம் மடலை சற்றே திறவும் பிள்ளாய்


அன்புடன்
ஜீவா

said...

//நான் என் மனசாட்சியிடம் பேசினா கூட தப்பா ?? //

உம்ம மனசாட்சியிடம் பேசினீரா? சரி சரி. ஆனால் நீர் மனசாட்சி இல்லாத ஆளுன்னு இல்ல நினைச்சேன். :-)

//டோண்டுவுக்கு பதில் போட்டா தான் தப்புங்கறாங்க...//

இதுக்குப் பேர்தானே நக்கல்? ;)

said...

// இலவசக்கொத்தனார் said...
ஜிரா,

ஒரு முடிவோடதான் இருக்கீங்க. மத்தவங்கன்ன அரசமீனவன் அதிகமாயிடுச்சான்னு கேட்டிருப்பேன். உங்களைப் பத்தி தெரியும் அதனால அதுவும் கேட்கலை. //

:-)

// ரொம்ப அடிக்காதீங்க. அப்புறம் அழுதுருவேன். அவ்வ்வ்வ்வ்வ்.... //

புரிகிறது கொத்தனாரே...புரிகிறது. நான் தப்புத்தப்பாய் எழுதி அடிக்கிறதைச் சொல்றீங்கதானே. மதுரையில் முன்பு சீத்தலைச் சாத்தனார் என்று ஒருவர் இருந்தார். அவரும் உங்களைப் போல பாவெல்லாம் எழுதுவார். மணிமேகலை என்னும் காப்பியம் கூட தீட்டியிருக்கிறார். அவர் தமிழை தவறாக எழுதக் கண்டால் எழுத்தாணியைக் கொண்டு தலையில் குத்திக் கொள்வார். அது போல நான் தவறாக எழுதக் கண்டால் அழும் வழக்கம் உமக்கு இருப்பது இன்றாவது உலகிற்குத் தெரிந்ததே என்று மகிழ்கிறேன் நான்.

ஆகையால் உம்மைச் சிறப்பிக்கும் வகையில் தவறைக்கண்டழுவாய்க் கொத்தனார் என்ற பெரும் பட்டத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.

தவறைக்கண்டழுவாய்க் கொத்தனார் வாழ்க!

said...

பட்டம் கொடுத்தீர் பயமாய் இருக்கே
மட்டம் எனது வலைப்பூவே - கட்டம்
சிரமமே பார்க்காது சீக்கிரம் நீயே
தரமாய் பதிவொன்று தா.


ஜிரா, எதோ ஈற்றடிக்கு ஏத்தா மாதிரி தரமாய் பதிவொன்று தான்னு சொல்லிட்டேன். அதுக்காக இவ்வளவு நாள் தரலையான்னு ஓட்டாதீங்க.

said...

//நிஜமாவே பதிவு எழுத ஆரம்பிச்சு அஞ்சே அஞ்சு மாசம்தானா ஆகுது? அதுவும் 27 பதிவுதானா?

கணக்கைச் சரியாச் சொல்றீரா இல்லையா?

காலங்காலமாய் உங்களை இங்கே பாக்கறமாதிரி இருக்கேப்பா?//துளசி சொன்ன மாதிரிதான் எனக்கும் தோணுது. ஆனால் உங்க பின்னூட்டம் அடிக்கடி பார்த்திருப்பதால் இருக்குமோ?
அமெரிக்காவாசின்னாலும், அம்பாசமுத்திரம் தான் மூலமா??? பேஷ் பேஷ்!!

said...

//பாவி மக்கா... என்னாய்யா பழிபோட்டேன் உம்மேல ?...//

//உங்க பதிவில் நீங்க ஆரம்பிச்சு விட்ட வெ.வ.வா பதிவுகளை நாங்க போடவேயில்லைன்னு இந்த பதிவு போட்ட அதே நாளில் பழி போட்டீரே. அதான். //

//எங்கே ஐயா அப்படி சொல்லியிருக்கிறேன்.//

வெண்பா எழுதும் கலைஞர்களுள் வேற்றுமை ஆகாது..

அமைதி. அமைதி..

(அப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு) ;)

said...

//ஆனால் உங்க பின்னூட்டம் அடிக்கடி பார்த்திருப்பதால் இருக்குமோ?//

எல்லாம் ஒரு குடும்பம் மாதிரி பழகறோமில்ல. அதான்.

//அமெரிக்காவாசின்னாலும், அம்பாசமுத்திரம் தான் மூலமா??? பேஷ் பேஷ்!!//

ஆமாங்கக்கோவ். வந்து வாழ்த்தியதற்கு நன்றி.

said...

//வெண்பா எழுதும் கலைஞர்களுள் வேற்றுமை ஆகாது..//

வேற்றுமையா? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இதெல்லாம் பின்நவீனத்துவ கருத்துப் பரிமாறல்கள். சரிதானே வாத்தி?

said...

// இலவசக்கொத்தனார் said...
பட்டம் கொடுத்தீர் பயமாய் இருக்கே
மட்டம் எனது வலைப்பூவே - கட்டம்
சிரமமே பார்க்காது சீக்கிரம் நீயே
தரமாய் பதிவொன்று தா.


ஜிரா, எதோ ஈற்றடிக்கு ஏத்தா மாதிரி தரமாய் பதிவொன்று தான்னு சொல்லிட்டேன். அதுக்காக இவ்வளவு நாள் தரலையான்னு ஓட்டாதீங்க. //

உம்மைப் போல்
தரமறியேன் பதிவில்
வரமறியேன் பாநயத்தில்
சரமறியேன் சொற்களில்
கரமறியேன் விரைவுத் தட்டச்சில்
உரமறியேன் பின்னூட்டப் பெருக்கத்தில்
என்னைப் பதிவென கேட்டால்
என் ஐப் பதிவுதான் தருவேன்!

said...

//உம்மைப் போல்
தரமறியேன் பதிவில்//

உங்க பதிவெல்லாம் ரெகுலரா படிக்கறேன். அதனால இந்த மாதிரி(!) தரமெல்லாம் உங்களுக்கு வராது. அது தெரியும். ;)

//வரமறியேன் பாநயத்தில்//

சிலர் பா எழுத வரம் வாங்கி வந்தவர்கள். அது அவர்கள் எழுத்தைப் படித்தாலே தெரியும். ஆனால் நான் எழுதும் பாக்களைப் பார்த்தால் அவ்வரம் இருப்பதாக அறியவில்லை எனக் கூறுகிறீர்கள்.

//சரமறியேன் சொற்களில்//
நீ எழுதும் பாக்களில் சொற்கள் அழகாய் தொடர்பு கொண்டு வருவதில்லை. அதனால் தொடுத்த சரம் போல் இல்லை எனச் சொல்கிறீர்கள்.

//கரமறியேன் விரைவுத் தட்டச்சில்//
சில பதிவுகளைப் பார்த்தால் உடன் பின்னூட்டமிடத் தோன்றும். ஆனால் என் பதிவுக்கு கை வரவில்லை என சொல்கிறீர்கள்.

//உரமறியேன் பின்னூட்டப் பெருக்கத்தில்//

உரம் என்பது சத்து. இங்கு நடக்கும் பின்னூட்டப் பெருக்கத்தில் சத்தாக ஒன்றும் இல்லை எனச் சொல்கிறீர்கள்.

//என்னைப் பதிவென கேட்டால்
என் ஐப் பதிவுதான் தருவேன்!//

இது உண்மையிலே புரியலை.

என்னா உள்குத்துப்பா. என்னா உள்குத்து. இதுக்கே ஒரு ஸ்பெஷல் பட்டம் குடுக்கணும். யோசிச்சி சொல்லறேன்.

said...

என்னைப் பதிவெனக் கேட்டால்
என் ஐ பதிவு தான் தருவேன்
என்றே எப்போதும் சொல்லும்
என் ஐ இராகவா உம்மை
என் இருநூற்றுப் பதிவில்
என்ன தான் சொன்னீர் என்றே
என் மனம் கேட்ட கேள்வி
என் பதிவில் பாரும் ஐயா.

said...

என்னைப் பதிவிடச் சொல்லினர்!
எண்ணைப் பதிவொன்று போட்டேன்! (100)
வெண்ணெய்ப் பதிவென்று சொல்லினர்!
விண்ணைப் பார்த்து நான் வீழ்ந்திட அனைவரும்
மண்ணைக் கவ்வினன் என்றனர்! மக்கள்!

:))

said...

//என் ஐ பதிவு தான்//

யப்பா சொல்லாளர்களா, இந்த ஐப் பதிவு பத்தி கொஞ்சம் சொல்லுங்க. கொஞ்ச நாள் முன்னாடி எண்ணெய் பதிவு போட்டீங்க. இப்போ என் ஐப் பதிவுன்னு சொல்லறீங்க. சரியாப் போச்சு.

said...

யோவ் சிபி,

இப்போதான் உம்ம பதிவுல போய் எனக்கு கவிஜ புரியாதுன்னு சொல்லிட்டு வந்தேன். இப்போ இங்கேயேவா? விளக்கம் தரச் சொல்லி தர்ணா பண்ணுவேன். சொல்லிட்டேன்.

said...

//இப்போதான் உம்ம பதிவுல போய் எனக்கு கவிஜ புரியாதுன்னு சொல்லிட்டு வந்தேன். இப்போ இங்கேயேவா?//

பின்ன! அங்க இருந்து பி.பி.ப.ஓ ன்னா விட்டுடுவமா?

said...

இப்படி தொரத்தித் தொரத்தி அடிக்கறீங்களே யப்பா. அப்புறம் நானும் கவிஜ எழுத ஆரம்பிச்சா என்ன ஆகும் தெரியுமில்ல.

said...

வெண்பா வெல்லாம் வராது நமக்கெனினும்
என்பாலன்பு கொண்டு எமையழைத்தாய் உமக்கெனவே
நண்பா நான்வடித்தேன் ஓர்வெண்பா எனநீயும்
தரமாய் பதிவொன்று தா!

said...

வெண்பா விதிகளெல்லாம் நானறியேன் ஒருகாலம்
நண்பாஉன் பதிவுகளில் நான்பயின்றேன் சிலகாலம்
நன்பா எனவும் நானொன்று வடித்ததென
தரமாய் பதிவொன்று தா!

said...

கஷ்டப் பட்டு ரெண்டு வெண்பா போட்டிருக்கேன்! திருத்திக் கொடுமைய்யா! (கொடுமைய்யா)

said...

சிபி,

நல்ல முயற்சி. கொஞ்சம் வெண்பா விதிகள் மீண்டும் ஒரு முறை பாருங்க. வெ.வாவின் இந்த பதிவுக்குப் போய் பாருங்க. வாத்தி நல்லா எழுதியிருக்காரு, பின்னூட்டத்தில் இன்னொருத்தர் (அட, நாந்தாங்க) சூப்பரா எழுதியிருக்காரு.

நான் இப்போ உங்க வெண்பாவை சரி பண்ணிப் போடறேன்.

said...

வெண்பா எப்படி எழுதறது ?

said...

சிபி,

உங்க கருத்து ரொம்ப மாறாம ஒரு வெண்பா. நல்லாயிருக்கான்னு பாருங்க.

வெண்பாவே வாராதே வாகாய் யெனயிருந்தேன்
என்பாலே யன்புகொண் டேயழைத்தாய் - நண்பா
சிரமுடைத்து தந்தயிதை சீரியபா வென்றே
தரமாய் பதிவொன்று தா!

said...

எல்லபண்ணா,

தட்டெழுதிதான்னு ஜோக்கடிக்கலாமுன்னு பார்த்தேன். ஆனா உங்க படத்தைப் பார்த்தா பயமாயிருக்கு. அதனால அப்படிச் சொல்லலை.

இப்போதான் சிபிக்கு ஒரு சுட்டி குடுத்தேன். அங்க பாருங்க. எங்க வெண்பா வாத்தியார் கிளாஸ் நடத்தறாரு. விதிகள் எல்லாம் அங்க படிச்சுட்டு வெண்பாவை இங்க போடுங்க. :)

said...

சிபி

வழக்கம் போல் வந்து 100ஆவது பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி.

said...

கொத்ஸ் & வாத்தி,

இது எப்படி இருக்குன்னு பாருங்க!

வெண்பா இலக்கணத்தை ஓரளவு தெரிந்துபின்பு
நண்பா நானெழுதத் தானிங்கு முயற்சித்தேன்!
தளைதட்டா தந்திரத்தை தானறிந்தேன் நீயுதவ
மனதாலும் நன்றிகளைக் காண்.

said...

கொத்ஸ், நம்ம போட்ட வெண்பா சீரீஸ்லயே இது தான் டாப்னு நினைக்கிறேன்.. ஜி.ராவும் குமரனும் சிபியும் போட்டு புகுந்து விளையாடி இருக்காங்க..

// என் ஐப் பதிவு// தான் எந்த ஐந்துப் பதிவை ராகவன் சொல்றாருன்னு தெரியலை...

முன்னைப் பதிவுகள் நான் காணவில்லை
பின்னைப் பதிவுகளில்
உம் ஐப் பதிவு எதென
செம்மையாக இயம்பினால்
தன்மையாய்ப் பார்க்கலாம்
(இல்லைன்னா ஆட்டோ வரும்னு அர்த்தம் இல்லை ;))

said...

சிபி,

கிட்டத்தட்ட வந்துட்டீங்க. ரெண்டு மூணு தளை தட்டல் மட்டும் சரி பண்ணுங்க. முதல் முயற்சிக்கு நல்லாவே வந்திருக்கு.

//ஓரளவு தெரிந்துபின்பு//
//தானிங்கு முயற்சித்தேன்!//
//முயற்சித்தேன்!தளைதட்டா//
//நீயுதவ மனதாலும்//

இந்த நாலு இடத்திலேயும் காய் முன் நிரை வருது பாருங்க.

//நண்பா நானெழுதத்//
இந்த இடத்தில் மா முன் நேர் வருது.

கொஞ்சம் சரி பண்ணுங்க பார்ப்போம். முதலில் இந்த மாதிரிதான் ஆகும். போகப் போக சரியாகும்.

சரி பண்ணிப் போடுங்க.வெயிட் பண்ணறேன்.

said...

//நம்ம போட்ட வெண்பா சீரீஸ்லயே //

எழுதுனது ரெண்டு வரி. அதிலேயும் 2000 தளைதட்டல்கள். ஆனா சொல்லிக்கிறது நம்ம பதிவு. கூட்டணி ஆட்சி கேட்கறதுக்கு ஒரு வரைமுறையே இல்லாமப் போயாச்சி. என்ன ஞாயமப்பா?

//// என் ஐப் பதிவு// தான் எந்த ஐந்துப் பதிவை ராகவன் சொல்றாருன்னு தெரியலை..//

அது ஐந்து பதிவு எல்லாம் இல்லை. குமரன் எனக்கு விளக்கம் சொல்லிட்டாரே.

கடைசியா கவிஜ மாதிரி தெரியிது. எனக்குப் புரியாது. அதனால விட்டுடறேன்.

said...

பொன்ஸ்,

எம் ஐ பதிவென்று
எம் ஐயன் பதிவினைச் சொன்னார்
உம்மைப் போல் ஒருவர்
உம் ஐ பதிவெதென்றால்
என் ஐ இராகவன்
தன் ஐ குமரனின்
தகைமைகள் சொல்லிடும்
ஆயிரம் பதிவுண்டு
ஐந்து மட்டும் சொல்லல்
ஆகுமோ ஆகாது
என்றே சொல்லுவார்
என்றே சொல்லுவேன்
நன்றே அறீவீர் நீர்
நாயகன் தன் புகழை

அப்படியே நம்ம 200வது பதிவிலும் இராகவன் வந்து சொற்விளையாட்டு ஆடியதையும் அதற்கு நான் சொன்ன பதிலையும் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம். :-)

said...

இராகவன் கவிதை சொன்னால் குமரனுண்டு விளக்கம் சொல்ல
குமரன் கவிதை சொன்னால் இராகவனுண்டு விளக்கம் சொல்ல
என்றே தான் எண்ணியிருந்தேன்
இன்னமும் காணவில்லை என் ஐயை.

என்னை இப்படித் தவிக்கவிட்டு
என் ஐ இராகவா எங்கே சென்றாய்?

said...

வாங்க கும்ஸ்.

ரொம்ப நாளா இருந்த என் 'ஐ'யப்பாட்டை தீர்த்த உம் பாட்டை மெச்சினோம். பொற்கிழி குடுக்கலாமுன்னு பொற்குவியலைத் தேடினால் அது யானையாய் மாறிப் போச்சு.

நரியை பரியா மாத்துன கதை தெரியும். ஆனா இப்படி பொன்னை கரியா மாத்துன அதிசயம் இப்போதானே நடக்குது. :)

said...

//என்னை இப்படித் தவிக்கவிட்டு
என் ஐ இராகவா எங்கே சென்றாய்?//

என்'னய்'யா சொல்லறீங்க. என்னதான் உம் ஐ யா இருந்தாலும் அவரும் ஐ மூட வேண்டாமா? அட சட், தூங்க வேண்டாமா? வருவாரு வெயிட் பண்ணுங்க.

அவருக்கு ஒரு ஓப்பனிங் குடுத்து இருக்கேன். வந்து வாட்டுவாரு பாருங்க என்னை.

said...

// //என்னைப் பதிவென கேட்டால்
என் ஐப் பதிவுதான் தருவேன்!//

இது உண்மையிலே புரியலை. //

என்ன கொத்ஸ் இது...நான் சொல்வது முன்னைப் பழமை. பின்னைப் புதுமை. இப்படி விளக்கிய பிறகும் புரியாமல் ஆவீரோ பதுமை!

// என்னா உள்குத்துப்பா. என்னா உள்குத்து. இதுக்கே ஒரு ஸ்பெஷல் பட்டம் குடுக்கணும். யோசிச்சி சொல்லறேன். //

தம்பட்டம் நானறியேன்
உம் பட்டம் தந்து
என் பட்டம் பறந்தால்
நம் பட்டம் சிறக்காதோ
கும்பிட்டும்
வம்பிட்டும் கேளாமல்
நம்பிட்டு வாங்கிடுவேன்
கொத்ஸ் கொடுத்தால்.

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன் கவிதை சொன்னால் குமரனுண்டு விளக்கம் சொல்ல
குமரன் கவிதை சொன்னால் இராகவனுண்டு விளக்கம் சொல்ல
என்றே தான் எண்ணியிருந்தேன்
இன்னமும் காணவில்லை என் ஐயை.

என்னை இப்படித் தவிக்கவிட்டு
என் ஐ இராகவா எங்கே சென்றாய்? //

உம்மை நம் பேராகும்
எம்மை நும் பேராகும்
இம்மை நீர் கொண்ட தகை
தம்மை உணர்ந்து சொல்லச்
செம்மை தனைக் கொண்ட
கொத்சை அழைக்கிறேன்
கொத்சே வருக...விளக்கம் தருக...

said...

//கொத்சை அழைக்கிறேன்
கொத்சே வருக...விளக்கம் தருக...//

அடடா நம்மளை மாட்டி விட்டுட்டீங்களே. சரி, ஒரு கை பார்க்கறேன்.

//எம் ஐ பதிவென்று
எம் ஐயன் பதிவினைச் சொன்னார்//

தான் செய்யும் வேலைகளிலே மிக உயரியது (high, வடமொழி கலக்காமல் ஐ) தன் பதிவென்று என் தலைவனின் பெயர் கொண்ட ராகவன் தன் பதிவினை பற்றிக் கூறினார்.

//உம்மைப் போல் ஒருவர்
உம் ஐ பதிவெதென்றால்//

அதிலும் உன்னை போன்று குசும்புடைய ஒருவர், 'உங்களைப் (உம் I) பற்றி சொல்லும் பதிவு எது?' என்று கேட்டால்

//என் ஐ இராகவன்
தன் ஐ குமரனின்
தகைமைகள் சொல்லிடும்
ஆயிரம் பதிவுண்டு//

என் கண்மணியாம் (eye) ராகவன், தன்னுள் (I) நீக்கமற நிறைந்திருப்பது குமரக்கடவுளே என உணர்ந்து, அவனின் குணங்களையும் பெருமைகளையும் சொல்ல ஆயிரம் பதிவுகளுண்டே.

//ஐந்து மட்டும் சொல்லல்
ஆகுமோ ஆகாது//

இதில் என்னைப் பற்றிச் சொல்லச் சொன்னால் அது ஐந்து பதிவுகள் கூட வராதே. அது என்னுள் இருக்கும் குமரனுக்கு இழுக்கல்லவா? அதனால் சொல்லுவது ஆகாதே

//என்றே சொல்லுவார்
என்றே சொல்லுவேன்//

என்று தன்னடக்கத்துடன் கூறுவார் என்றே நான் சொல்லுவேன் என குமரன் தன் கவிதையில் கூறுகிறார்.

//நன்றே அறீவீர் நீர்
நாயகன் தன் புகழை//

மேலும் இதன் மூலம் தன்னடக்கத்தின் சிகரமாய் இருக்கும் இக்கவிதையின் நாயகனான இராகவனின் புகழைப் புரிந்து கொள்ளுங்கள். அதைப் போன்றே நீங்களும் தன்னடக்கத்தோடு வாழ்ந்தால் பெரும் புகழடைவீர்கள் என்றும் கூறுகிறார்.

said...

யப்பா நண்பர்களா. நான் இப்படியா பாடினேன்? ஏனப்பா இப்படி பொருளை மாற்றிச் சொல்கிறீர்கள்? ஹும். இதில இராகவன் என் பதிவுல நான் அவருக்குச் சொன்ன பதிலுக்கு வேற கொத்ஸ் வந்து பதில் சொல்வார்ன்னு சொல்லியிருகாரே. என்ன மாதிரி விளக்கம் வரப்போகிறதோ?

said...

கும்ஸ்,

இதுதாங்க பின்நவீனத்துவ விளக்கம். உங்க பாட்டுக்கு விளக்கம் உங்க பதிவுக்கே வருது பாருங்க.

said...

//அப்படியே நம்ம 200வது பதிவிலும் இராகவன் வந்து சொற்விளையாட்டு ஆடியதையும் அதற்கு நான் சொன்ன பதிலையும் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம். :-)//

அவங்க ஆடின ஆட்டத்துக்கு நம்ம ரன்னிங் கமெண்டரி வேற போட்டாச்சு. எல்லாரும் போயி பாருங்க.

said...

அப்படியே நான் சொல்ற

பின் நவீனத்துவ விளக்கத்தையும் வந்து பாருங்க~

said...

அதான் வந்து பாத்து உள்ளேன் ஐயா போட்ட பின்னாடி என்ன அழைப்பு? சுறுசுறுப்புதான் போ.

said...

//யப்பா நண்பர்களா. நான் இப்படியா பாடினேன்? ஏனப்பா இப்படி பொருளை மாற்றிச் சொல்கிறீர்கள்? //

இதுக்குதான் அவங்கவங்க பாட்டை அவங்கவங்களே விளக்கிப்புடணும்னு சொல்றது!

said...

அவரு விளக்கம் கொடுத்தா ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்க முடியும். அப்புறம் பின்நவீனத்துவ விளக்கங்கள் எல்லாம் எப்படி கொண்டு வரது?

விளக்கமெல்லாம் இருக்கட்டும். உங்க வெண்பாவெங்க?

said...

அவரு விளக்கம் கொடுத்தா ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்க முடியும். அப்புறம் பின்நவீனத்துவ விளக்கங்கள் எல்லாம் எப்படி கொண்டு வரது?

விளக்கமெல்லாம் இருக்கட்டும். உங்க வெண்பாவெங்க?

said...

நம்ம பொன்ஸ் வெண்பா வடிக்கச் சொன்னா வர மாட்டேங்கறாங்க. எதோ படத்தை மாத்திப் போட்டு விளையாடறாங்க. சரின்னு அங்க போயி வாழ்த்திப் போட்ட வெண்பா.

மதமில்லா யானை மனநிறைவு இங்கே
மதத்தாலோ சண்டைகள் மண்ணில் - இதமாய்
பரபரப்பில் லாமல் பதமாய் படிக்க
தரமாய் பதிவொன்று தா

said...

:)

btw, 27 th postukku 127 commentssaa ? yen vayiru eriyuthuu... :)

said...

அம்பி,

இதுக்கெல்லாம் வயறு எரிஞ்சா எப்படி? இதுக்கெல்லாம் என்ன பண்ணணமுன்னு சொல்லிக் குடுத்து இருக்கோமில்ல. அதெல்லாம் ஒழுங்க ஃபாலோ பண்ணாம வயிறு மட்டும் எரிஞ்சா எப்படி?

பாருங்க இப்போ 128 ஆயாச்சு. :)

said...

//yen vayiru eriyuthuu//

நன்கு குளிர்ந்த பானை நீர் எடுத்து குடிக்கவும் அம்பி.

:))

said...

அம்பி மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வெறும் தண்ணீர் வேலைக்கு ஆவாது. சும்மா சில்லுன்னு அரசமீனவன் எடுத்து விட்டுக்க சொல்லுங்க.