ஏதோ ஓரமாய் இருந்த நம்மையும் இந்த விளையாட்டுக்கு இழுத்துவிட்டுடாரு நம்ம வைத்தியர் .
நம்மளும் சும்மா இல்லாம ''ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு (நேரம்டா சாமின்னு நீங்க சொல்லறது கேக்குது) நானும் போய் போடற பின்னூட்டங்களும் உண்டுன்னு இருந்த என்னப் போய் இப்படியெல்லாம்.....சரி சரி போட்டுருவோம். :)" ன்னு பின்னூட்டம் போட்டாச்சு.
ஜாலியா எழுதலாம்ன்னு போய் இப்போ கொஞ்சம் சீரியஸாவே போன நம்ம லிஸ்ட்.
நானிருந்த நாலு ஊர்கள்
1. கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்
சென்னையில் பிறந்தாலும் சில நாட்களிலே அழைத்து வரப்பட்டு வளர்ந்த இடம். அப்பளத்திற்கு பெயர் போன ஊர். இப்பொழுது சினிமா ஷூட்டிங் பிரதான தொழிலாய் தெரிகிறது. நம் கிராம அனுபவங்களின் நிலைகளன்.
2. சென்னை மாநகரம்
பதின்ம வயதுகளில் மீண்டும் பிறந்த இடத்திற்கே வருகை. இதனால் நகர வாழ்க்கையின் சுவைகளையும் மிஸ் பண்ணவில்லை. நமக்கும் இங்கே ஒரு 50 லிஸ்ட் இருக்கே.
3. கோவை மாநகரம்
வேலை நிமித்தம். குடும்பத்துடன் இல்லாமல் எனது தனியான வாழ்க்கையை ஆரம்பித்த இடம். பின் திருமணமாகி தனியை விட்டுவிட்டு வாழ்க்கையை மட்டும் தொடர்ந்த ஊரும்கூட.
4. பெங்களூரு மாநகரம்
வங்கி வேலையை விட்டுவிட்டு மென்பொருளாளனாய் மாறிய இடம். என் மகன் பிறந்த இடம், எங்கள் அரண்மணை (சிறியதாகவே இருந்தாலும்) இருக்கும் இடம் என பல ஒட்டுதல்கள். இப்பொழுது அமெரிக்கவாசியாய் இருந்தாலும், சொல்வதற்கு விசேடமாய் எதுவுமில்லை.
செல்ல விரும்பும் நாலு இடங்கள்
1. பாரிஸ்
பல இடங்கள் போயிருந்தாலும், இதுவரை விமான நிலையம் வரைதான் இங்கு போக முடிந்தது. குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கும் ஓர் இடம்.
2. சிருங்கேரி, கர்நாடகா
மிக அமைதியான இடம். பல முறை சென்றிருக்கிறேன். ஆனாலும் சலிப்பைத் தராத இடம். சென்று வந்தவுடன் மனது லேசாகிவிடுவதென்னவோ நிஜம்.
3. ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து
ரொம்ப அல்பத்தனமான காரணம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களிலும் கால் பதித்தாகிவிட்டது. அதனால் இங்கும் சென்றால் மக்கள் வாழும் அனைத்து கண்டங்களும் சென்றாகிவிட்டது என்ற ஒரு ஆசைக்காக.
4. ந்கோரோந்கோரோ தேசீயப் பூங்கா
ஒரு எரிமலையின் சிகரத்தில் அமைந்துள்ள இடம். வன விலங்குகளைக் காண இதைவிட சரியான இடம் இல்லை என்பது பொதுவான கருத்து. ஒரு முறையேனும் செல்ல வேண்டும்.
சென்று வியந்த நாலு இடங்கள்
1. ஐஸ்லாந்து
தீயும் பனியும் சேர்ந்திருக்கும் இடம். இயற்கை அழகை சொல்லி மாளாது. நடுங்கும் குளிரில் வென்னீர் ஊற்றுகளில் குளித்த அனுபவம் புதிது.
2. நயாகரா நீர்வீழ்ச்சி
அருகில் செல்ல செல்ல, நம்மை ஆவென்று பார்க்க வைக்கும் கம்பீரம். அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
3. கென்யா நாட்டின் சமவெளிக் காடுகள்
இயற்கையான சூழ்நிலையில் வனவிலங்குகளைக் காண முடிந்த அனுபவம். கைக்கெட்டும் தூரத்தில் சிங்கங்கள், காட்டானைகள், காண்டாமிருகங்கள் என மிரட்டிய அனுபவம்.
4. எகிப்திய பிரமிட்டுகள்
பண்டை காலத்தின் சுவடுகள். அதை பற்றிய கதையை சொல்லிய லேசர் ஷோ. மிகப்பெரிய நேஷனல் அருங்காட்சியகம். அதிலுள்ள பொருட்களை பார்த்தால், நமது பாரம்பரியத்துடனான தொடர்பு புரிகிறது. ஒரு வாரம் இருந்தும் கூட முழுதும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே வந்த இடம்.
நமது நாட்டிலும் பல இடங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால், இந்த இடங்களைப் பற்றி எழுதியது குறைவு என்பதால்தான் இப்படி. மற்றபடி, தாய் நாட்டின் பெருமை பற்றி அறியாதவன் என்றெல்லாம் முத்திரை குத்திவிடாதீர்கள்.
பிடித்த நான்கு உணவு வகைகள்
1. தென்னிந்திய உணவு
2. மெக்ஸிகன் உணவு
3. தாய்லாந்து உணவு
4. இந்தோ சைனீஸ் உணவு
பின்ன என்னங்க. நம்மளைப்போய் நாலே நாலு உணவு வகைகளை சொல்லச் சொன்னா எப்படி. எதைப் போட்டாலும் சாப்பிடும் நமக்கு அதெல்லாம் சரி வராது. என்ன, முன்பெல்லாம் அசைவது, அசையாதது என்று எல்லாவற்றையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது (கொன்றிருந்தது) போய் இப்பொழுது மரக்கறியாளனாய் மாறி விட்டேன்.
நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்
1. கமலஹாசன்
சமீபத்தில் இவரைப் பற்றி எல்லாருமே ரொம்ப பேசியாச்சு. தேவர்மகன், குணா, மை.ம.கா.ராஜன், சதி லீலாவதி. ரஜினியையும் பிடிக்கும்.
2. டி.எம்.கிருஷ்ணா
சமீப காலமாய் கேட்க ஆரம்பித்திருக்கும் கர்நாடக சங்கீதத்தில் நமக்கு மிகவும் பிடித்தவர். சஞ்சயையும் பிடிக்கும்.
3. இளையராஜா
நம்ம மொட்டை. இதுக்கு மேல என்ன சொல்ல. அவ்வளவுதான். இசை மட்டுமல்ல. அவர் குரலுக்கும்.
4. ஜெப்ரி ஆர்ச்சர்
அருமையாய் கதை எழுதுவார். படிக்கப் பிடிக்கும். தமிழில் சாண்டில்யன்.
சொல்லாத நான்கு
1. பார்த்த வேலைகள்
இன்னும் நாலு ஆகலையே. ஆனா பார்த்ததை வேற இடத்தில் சொல்லியாச்சு.
2. பிடித்த படங்கள்
இதையும் சைடிலேயே சொல்லியாச்சு
3. பிடித்த டீவீ நிகழ்ச்சிகள்
ரொம்ப டீவீ பார்ப்பதில்லை
4. அட போதுமப்பா
அழைக்க விரும்பும் நால்வர்
1. ஹரிஹரன்ஸ்
நம்ம பெரியவர். எனக்கு எல்லா விதங்களிலும் வழிகாட்டி. இப்போ பதிவு வேற போட ஆரம்பிச்சுட்டார்.
2. கௌசிகன்
இவர் அதிகம் எழுதாதது எனக்கு ரொம்ப வருத்தம்.
3. சின்னவன்
இவர் குசும்பு நமக்கு பிடிக்கும். ஆனால் கொஞ்ச நாளாய் ஆளைக்காணும்.
4. நிலா
நிறைய நல்லா பண்ணறாங்க. இப்போ போட்டி எல்லாம் வேறே போட்டிருக்காங்க. அதான். ஹிஹி.
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
ரொம்ப நீளமாய் போச்சோ?
கொத்தனாரே,
இப்படி அநியாயமா மாட்டி விட்டுட்டீங்களே இப்பப் பாத்து -வேலை பெண்டு நிமித்துது. அடுத்த வாரம் எழுதறேன்.
கல்லிடைக்குறிச்சிக்கு நான் வந்திருக்கேன். அநியாயமா இப்படி ஒரு பிரபலத்தை சந்திக்கிற வாய்ப்பை இழந்திட்டேனே:-))))
அது சரி, ரகசியத்தைக் காப்பாத்தறதுல மன்னன் போலிருக்கு. விளையாட்டு ஆரம்பிக்கற வரைக்கும் ரகசியமா வைக்கச் சொன்னா, ஒரு ப்ரோமோ போட்டு விட்டுட்டீங்க. சரி, பப்ளிசிடியாகவாது பயன்படட்டும் :-)
அடிச்சு ஆடுங்க கொத்தநாரே!
நம்ம பக்கம் வந்திருகீயளா? சந்தோசம்.
ரகசியமா வைக்க சொன்னீங்களா? அதை பாக்கலியே. மன்னிச்சுருங்க. அதான் விளம்பரமெல்லாம் கொடுக்கறேனே, நமக்கு பாத்து போட்டு குடுங்க.
வாங்க சிங் செயக்குமார்,
நானெங்க அடிச்சு ஆடுறது? நமகெல்லாம் பால் போடத்தான் தெரியும். அதை அடிக்கிறதும் அவுட்டாறதும் உங்க திறமைதான்.
என்ன நான் சொல்லுறது?
நண்பரே!
உங்களுக்கு நெல்லை தானா, சந்தோசம்.
நான் அப்போவே படித்தேன், தனியா மடல் அனுப்பி விசாரிக்கலாம் என்று நினைத்தேன்.
நம்ம சிவா, எங்க ஊருக்கு வந்திருக்கிறார், நீங்க?
அப்படியே என்னுடைய இப்பதிவை பாருங்க, ஊரில் செய்த சேட்டைகள் எல்லாம் இருக்குது.
http://paransothi.blogspot.com
பரஞ்சோதி,
தமிழ்மணத்திலே நம்ம மண் வாசனைதான் அதிகம் இல்லையா?
பரமகுறிச்சி வந்திருக்கேன். கோயிலெல்லாம் பார்த்திருக்கேன். எங்க அண்ணன் அந்த பரமகல்யாணி காலேஜுலதான் படிச்சாரு. கடையத்தில அத்தை வீட்டுக்கு போனா உங்க ஊரு தாண்டித்தான் போகணும்.
இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்டு தப்பிக்க பாக்கறீங்களே கௌசிகன். அட்லீஸ்ட் இதுக்காகவாவது ஒரு பதிவு போடுவீங்கன்னு பாத்தா, பிடி குடுக்க மாட்டேங்கறீங்களே.
பெரியவரைப் பாருங்க சமத்தா போட்டுட்டாரு. நீங்களும் இருக்கீங்களே.
அப்புறம் தனிமடல் படைப்புகளெல்லாம் இருக்கட்டும். எல்லாரும் படிக்கிறா மாதிரி அப்பப்போ பிளாக்கரிலும் பதியலாமில்லே.
கல்லிடை பிறந்து சென்னையில் வளர்ந்த
இலவசக் கொத்தனாரே
நீங்கள் போட்டதொரு நல்ல பட்டியல்தான்
படிக்கச் சுகந்தானே
உங்களைக் கூப்பிடலாம்னு நெனச்சேன். பெறகு வைத்தியரக் கூப்பிட்டா அவரு ஒங்களக் கூப்பிடுவாருன்னு தெரிஞ்சிக்கிட்டு அவரைக் கூப்பிட்டேன். கரெக்ட்டா மாங்கா விழுந்திருச்சு....
தமிழ் மணத்துல இப்பல்லாம் தெக்கத்திக் காத்து நெறைய வீசுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
தென்கிழக்குச் சீமையில
செங்காத்து பூமியில
தமிழ்மண ஜாதிக்கொரு கூட்டமிருக்கு.... (ஜாதீன்னதும் ஜாதி வெறியன்னு ஓடி வந்துராதேகப்பா....ஏதொ சினிமா பாட்டு....)
எங்க வீட்டு/அரண்மனைக் கதவு உங்க ஊர்ல செஞ்சதுங்க...அது என்ன, மரவேலைக்குத்தான் உங்க ஊரு famous-னு நினச்சா, நீங்க அப்பளம்ங்கிறீங்க..
நாலில்லாமல் நானில்லை - கொத்தனார் மற்றும் தேவுக்கு சமர்ப்பணம்
http://nilaraj.blogspot.com/2006/03/blog-post_03.html
தருமி அய்யா,
எனக்கு தெரிஞ்ச வரை எங்க ஊர் பக்கம் கடசல் வேலைதான் ஜாஸ்தி. அதாவது சொப்பு சாமான், பார்வைக்கு வைக்க படும் மர சாமான்கள் அப்படித்தான். பழைய வீடுகளிலிருந்து பெரிய கதவுகள் கிடைக்கிறது. அவ்வளவுதான்.
ஒரு வேளை நீங்கள் கள்ளக்குறிச்சியை சொல்கிறீர்களோ? அது வேறு.
யக்காவ்,
பாத்துட்டேன்.இந்தா வாரேன்.
மன்னிச்சுகோங்க கொத்தனாரே அன்னிக்கி கணிணி பக்கம் வரமுடியலை ராசா. என் புல் சப்போட் உங்களுக்குதான்.
மன்னிப்போம் மறப்போம். உங்க ஆதரவு எங்களுக்குத்தான்னு தெரியுமோ.
எதுக்கும் தலைவர் கிட்டயும் சொல்லிடுங்க. உங்களுக்கு கூடலொலில கட்டம் கட்டிடப் போறாரு
கொத்ஸ் அய்யா,(இனிமே இப்படித்தான்; பழிக்குப் பழி; அய்யாவுக்கு அய்யா !)
என்ன இப்படி சொல்லீட்டீங்க. எங்க அரண்மனைக் கதவை இங்கே பாருங்க. கதவுக்குப் பின்னால இருக்கிற முகவரி: C.C.Wood Industry, --Singampatti Road, Kalidaikurichi 627416
தருமி அவர்களே... (இது எப்படி இருக்கு)
இது புதிது. ஊர் பக்கம் போய் நாளானதால் தெரியவில்லை. தகவலுக்கு நன்றி.
இனிமே எங்க ஊர் பெருமையில் இதை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
கொத்ஸ் அவர்களே! (இது எப்படி இருக்கு??)
முதல்ல அப்பளம்; பிறகு உங்களாலேயே பெருமை + இப்போ நான் சொன்னதையும் சேர்த்துக்குங்க..
அய்யா (மீண்டும் இங்கயே போயாச்சு)
இப்படி கவுத்துட்டீங்களே. இனிமே நான் சொல்ல என்ன இருக்கு. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்.
கொத்ஸ். இதுவரை சிருங்கேரி சென்றதில்லை. சீக்கிரம் போக வேண்டும். நீங்க சொன்ன மத்த மூனு இடங்களுக்கும் போனதில்லை தான். ஆனால் சிருங்கேரி போகவேண்டும் என்ற ஆசை மட்டும் தான் உங்கள் பட்டியலைப் பார்த்தவுடன் உடனே வந்தது. :-)
நயாகரா இரண்டு முறை பார்த்தாகி விட்டது. ஆனாலும் இன்னொரு முறை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த 'Maid of the Mist' படகில் ஏறி அருவி அருகில் சென்று வருவது...ஆஹா...அனுபவித்தால் தான் தெரியும் அதன் அருமை. :-)
இதுவரை டி.எம். கிருஷ்ணா பாடல்கள் கேட்டதில்லை. இனிமேல் கேட்டுப் பார்க்கவேண்டும்.
அவ்வளவு தான்பா. இதோட சேர்த்து நாலு பின்னூட்டம் ஆச்சா? ஏதோ 'நாலு' பதிவுக்கு என்னால் ஆன உதவி. :-)
குமரன்,
ஒரு முறை போயிட்டு வாங்க. அப்பதான் நான் சொல்லறது தெரியும்.
ஆமாம் குமரன். நானும் இன்னொரு முறை நயாகரா போகப் போறேன். அநேகமாக இந்த கோடையிலேயே.
என்னிடம் உள்ள சில பாடல்களை நான் பகிர்ந்து கொள்கிறேன். ஹரிஹரன்ஸ் ஒரு கச்சேரியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதன் சுட்டி
http://www.sangeethapriya.org/Downloads/tmk/index.html
இதனைக் கேளுங்களேன்.
//அவ்வளவு தான்பா. இதோட சேர்த்து நாலு பின்னூட்டம் ஆச்சா? ஏதோ 'நாலு' பதிவுக்கு என்னால் ஆன உதவி. :-)//
உங்க நாலும் என் நாலும் சேர்ந்து எட்டாச்சு. ஆனால் 4X4 பதிவிற்கு 16 வேண்டாமோ? ஹிஹி.
Post a Comment