Friday, June 01, 2007

சில விவாகரத்துக் குறிப்புகளும் ஜீவனாம்ச கேள்விகளும்...

இப்படித் தமிழ்மணத்தில் ஊறிப் போய் கிடந்தால் வேற என்ன நடக்கும், இதெல்லாம் உனக்குத் தேவைதான் என முனகிக் கொண்டு வரும் நண்பர்களே. என் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. கவலை வேண்டாம்!! இது என்னைப் பற்றிய பதிவு இல்லை. பொதுவானதொரு பதிவுதான்!! சமீபத்தில் படித்த சில செய்திகளால் தூண்டப்பட்டே இந்த பதிவு.

மூன்று பாகங்கள் கொண்ட பதிவு இது. பாகம் ஒன்று சற்றே சுவையான செய்தித் தொகுப்பினை பகிர்ந்து கொள்வது. பாகம் இரண்டும் மூன்றும் விவாதக் களம். உங்க கருத்தை கட்டாயம் வந்து சொல்லுங்க.

விவாகரத்துக் காரணங்கள் - ஒரு சுவையான தொகுப்பு

Marriage is an institution அப்படின்னு சொல்லறவங்க பல பேரு. Wedding is a word, Marriage is a sentence! அப்படின்னு சொல்லறவங்க கூட்டம் அதிகம். நம்ம சமூகத்தில் திருமண பந்தம் புனிதமானது எனக் கருதப்படுகிறது. அதற்கு நாம் தரும் மரியாதை அலாதிதான். ஆனால் அதனை ஒரு விளையாட்டாக எண்ணுபவர்களும் எத்தனையோ பேர். பிரிட்னி ஸ்பியேர்ஸ் கூட குடிபோதையில் நண்பன் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு உடனே விவாகரத்து செய்ததைப் படித்து இருப்பீர்களே. அந்த வகையில் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள் பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது. முதலில் அதனைப் பாருங்களேன்.

கெண்டக்கி மாநிலம்: "நான் பர்கர் சாப்பிடும் பொழுது அதிலுள்ள வெங்காயத்தை என் மனைவியைக் கேட்காமல் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அவள் என்னை அடிக்கிறாள். அதனால் எனக்கு விவாகரத்து தேவை."

கனெக்ட்டிகட் மாநிலம்: "என் மனைவி எழுதிய துண்டு சீட்டு இது - ' நான் சீட்டாட நண்பர்கள் வீட்டுக்குச் செல்கிறேன். வர நேரமாகும். உங்கள் இரவு உணவுக்கான குறிப்பு சேனல் இரண்டில் ஏழு மணிக்கு வரும்.' நான் ஏன் விவாகரத்து கோரக் கூடாது!!"

தென் கரோலினா: காது கேளாத ஒருவர் தன் விவாகரத்து காரணமாகச் சொல்வது -" என் மனைவி என்னை மிகவும் தொண தொண எனப் பேசி நச்சரிக்கிறாள். அவள் அப்படி நச்சரிப்பது சைகை மொழியில்!"

காலராடோ: ஒரு பெண் சொல்வது " அவருடைய பழைய காதலியின் வீட்டைத் தாண்டிச் செல்லும் பொழுது எல்லாம் காரில் என் தலையை அழுத்திக் கீழே தள்ளி, அவருடன் யாரும் இல்லாதது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார். "

ஜியார்ஜியா: இங்கு ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்த காரணம். அவர் அதிக நேரம் வீட்டில் செலவழிப்பதும், அவளிடம் அளவுக்கு மீறி அன்பு மழை பொழிவதும்தான் காரணமாம். He was much too affectionate!!!

நியூஜெர்ஸி: "என் கணவர் எப்பொழுது மடிக்கணினியோடே இருக்கிறார். கண்ட கண்ட நேரத்தில் எழுந்து மின்னரட்டை அடிக்கிறார். கணினி முன் அமர்ந்திருக்கும் பொழுது திடீர் திடீரென சிரிக்கிறார் அல்லது கோபப்படுகிறார். அவரின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் எங்கே பின்னூட்டம் என உளறுகிறார். மருத்துவர்கள் இவர் தீவிர தமிழ்மணமாட்டிஸ் வியாதிக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்." - இது மட்டும் உண்மை இல்லைங்க. வெறும் கற்பனைதான். ஹிஹி...

ஜீவனாம்சம் - சில கேள்விகள்

இப்படி எல்லாம் கண்ட கண்ட காரணத்துக்கு எல்லாம் இங்க விவாகரத்து நடக்குது. Alimony எனப்படும் ஜீவனாம்ச தொகை பலருக்கு வாடகைக்கு அடுத்து இருக்கும் பெரிய செலவாகவே இருக்கிறது. இதனைத் தருபவர்களுக்கு வரிச்சுமையில் சிறுது குறைவதும், பெறுபவர்கள் இதற்கும் சேர்த்து வரி கட்ட வேண்டும் என இது ஒரு பெரிய டாபிக்காகவே ஆகிவிட்டது. பெரும்பாலான சமயங்களில் (99%?) ஆண்கள் பெண்களுக்குத் தருவதாகவே இந்த ஜீவனாம்சத் தொகை இருக்கிறது. Child Support எனப்படும் குழந்தைகளைப் பராமரிக்கப் பட வேண்டிய தொகை யாரிடம் குழந்தை இருக்கிறதோ அவர்களுக்கு மற்றவர் தரும் தொகையாக இருக்கிறது என்ற அளவில் புரிகிறது.

ஆனால் இன்று மற்ற எல்லா வகைகளிலும் சமத்துவம் பேசும் பெண்கள் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? தனது சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு பெண்ணிற்கு அவளது மாஜிக் கணவன் ஜீவனாம்சம் தரத்தான் வேண்டுமா? ஒரு பெண் தனியாகத் தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு என்ன அளவுகோல்? இதனை யார் முடிவு செய்வார்கள்? இதலாம் பற்றி பேசலாம் வாருங்கள்.

ஜீவனாம்சம் - ஒரு புதிய பிரச்சனை

இவ்வளவு எல்லாம் போதாதென்று இப்பொழுது ஒரு புதிய குழப்பம் நீதிமன்றப் படியேறி இருக்கிறது. விவாகரத்தான ஒரு கணவன் தன் மாஜி மனைவிக்கு ஜீவனாம்சம் தந்து கொண்டிருக்கிறார். இந்தப் பெண் ஒரு நாள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறி விடுகிறார். அப்பொழுது அந்த கணவன் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என நிறுத்தி விடுகிறார். ஜீவனாம்சம் பெறுபவர் தன் மாஜி கணவர் தொடர்ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என நீதிமன்ற படி ஏறுகிறார்.

தன் மாஜி மனைவி தற்பொழுது ஒரு பெண்ணாக இல்லை. அவர் ஒரு ஆணாக மாறி விட்டதால், தான் ஜீவனாம்சம் தர வேண்டியது இல்லை. அவர் வேறு பால், வேறு பெயர் கொண்ட வேறு ஒரு நபராகி விட்டார். இவருக்கும் எனக்கும் எந்த விதமான உறவும் இருந்ததில்லை. ஆகையால் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என்பது மாஜி கணவரின் வாதம். தான் இறந்தாலோ அல்லது மறுமணம் புரிந்தாலோதான் ஜீவனாம்சம் தருவதை நிறுத்த வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை. ஜீவனாம்சம் தருவது பழைய உறவுக்காக. தனது பாலின மாற்ற சிகிச்சையால் அந்த உறவு இல்லை என ஆகப் போவதில்லை. ஆகையால் ஜீவனாம்சம் தொடர்ந்து தர வேண்டும் என்பது எதிர் வாதம். நீதிமன்றங்கள் இது வரை தீர்ப்பு வழங்கியதாகத் தெரியவில்லை.

இப்படிப் பார்த்தால் இது சரியா இருக்கு. அப்படிப் பார்த்தால் அது சரியா இருக்கு. நீங்க என்ன சொல்லறீங்க?

40 comments:

said...

திருமணமானால் ஜீவனாம்சம் நின்று விடும் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமலேயே உடன் வாழும் முதியோர்கள். அதனால் ஏற்படும் பிரச்சன்னைகள் என பலதும் சொல்ல ஆசைதான்.

ஆனால் இடமில்லை என்பதால் வேறொரு சமயம்தான் பேச வேண்டும்.

said...

ம்.. பேசாம இப்படியே இருந்திடலாம்னு நினைக்குறேன்.. நன்றிங்க கொத்ஸ்..

said...

//திருமணமானால் ஜீவனாம்சம் நின்று விடும் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமலேயே உடன் வாழும் //
கல்யாணத்தை professional, profitable businessஆகவே பண்ணுவாங்க போலிருக்கே உங்க ஊர்ல... !!

said...

உண்மைத்தமிழன் வேற் ஐடியா எதாவது வெச்சு இருந்தீங்களா என்ன? :))))

said...

//கல்யாணத்தை professional, profitable businessஆகவே பண்ணுவாங்க போலிருக்கே உங்க ஊர்ல... !!//

நிறையா விஷயங்களில் அப்படித்தான். ஆனா நான் சொல்ல வரும் இந்த விஷயம் கொஞ்சம் பாவம்தான். இன்னொரு நாள் பேசலாம்.

ஆமாம் அவ்வளவு பெரிய பதிவில் சொல்ல ஒண்ணுமேவா இல்லை. பின்னூட்டத்துக்கு போய் பதில் சொல்லி இருக்கீங்க? :(

said...

பதிவின் மொத்த சாரமும் கூட இதே தான் தோணிச்சு..

Marriage is an institution => Marriage is a profitable Business :)

said...

இன்னமும் இங்க ஒரு மஞ்ச கயித்துல கட்டற தாலிக்கு மதிப்பு இருக்கத்தான் செய்யிது..

அதனால நாம தப்பிச்சோம்...

said...

சும்மா விவாகரத்து கோரமுடியாது. அதற்கு என்று சில காரணங்கள் தேவைப்படுகிறது. அவ்வப்போது இந்த மாதிரி (அ)சுவாரசியமான காரணங்கள் கிடைக்கின்றன சிலபேருக்கு. மற்றபடி அந்த காரணங்களுக்காகத்தான் அவர்கள் விவாகத்தை ரத்து செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

//Marriage is an institution => Marriage is a profitable Business //

உண்மையில் Marriage is for Survival. இது எல்லா நாட்டினருக்கும் பொருந்தும்.

said...

// தென் கரோலினா: காது கேளாத ஒருவர் தன் விவாகரத்து காரணமாகச் சொல்வது -" என் மனைவி என்னை மிகவும் தொண தொண எனப் பேசி நச்சரிக்கிறாள். அவள் அப்படி நச்சரிப்பது சைகை மொழியில்!"//

suggestion to the husband :
close your eyes in the daytime and switch off the lights in the nights
:-)))

said...

//பதிவின் மொத்த சாரமும் கூட இதே தான் தோணிச்சு..//

அதுவும் ஒரு விதத்தில் சரிதான். ஆனா கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலையே காணுமே.... :)

//Marriage is an institution => Marriage is a profitable Business :)//

ஹ்ம்ம்ம்.

said...

பொதுவா இந்தியர்களுக்குச் சகிப்புத் தன்மை அதிகம்! திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படாமல் கூடியவரை பார்த்துக் கொள்வார்கள். அதையும் மீறிச் சில பிரிவுகள் தவிர்க்க முடியாமல் ஏற்படத் தான் செய்கிறது. அதை நாளிதழ்கள் விளம்பரப் படுத்தும் முறையில் கலாசாரம் இன்னும் சீரழிகிறது. பொதுவாய்ப் பெண் விவாகரத்துக்கு வற்புறுத்தினால் நிச்சயம் ஏற்கக் கூடிய காரணம் இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கணவனைப் பிரிய என்னதான் வேலைக்குப் போய் சுயசம்பாத்தியம் இருந்தாலும் பெண் ஒப்புக் கொள்ள மாட்டாள்.

said...

"தனது சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு பெண்ணிற்கு அவளது மாஜிக் கணவன் ஜீவனாம்சம் தரத்தான் வேண்டுமா? ."


ஒரு வேளை ஜீவனாம்சம் கிடைக்கும் என்பதற்காகவே விவாகரத்து கோரலாம் அல்லவா?

Kohilavani Karthikeyan

said...

--ஆனா கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலையே காணுமே.... :) --
ரொம்ப கேட்கிறீங்க.. அதனால..

//ஆனால் இன்று மற்ற எல்லா வகைகளிலும் சமத்துவம் பேசும் பெண்கள் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? //
பொதுவா வரதட்சணை ஒரு குற்றம், அநியாயம்னு பேசிட்டு, தனக்குன்னு பெண் பார்க்கப் போகும் போது, அம்மா வரதட்சணை கேட்பதை வேடிக்கை பார்க்கும் ஆண்கள் மாதிரி இல்லாம, தனக்குன்னு வரும்போது தான் கருத்து சொல்லுவோம்னு உங்க ஊரு பொண்ணுங்க முடிவெடுத்திட்டாங்க போல ;)..

மத்தபடி, எனக்கு சுத்தமா புரியாத, தெரியாத ஒரு நாட்டின் சூழலைப் பத்திய கேள்விகளுக்கு என்னால சொல்ல முடியாது..

இங்க ஒரு தோழிக்கு விவாகரத்து ஆச்சு. அவளுக்கு எந்த ஜீவனாம்சமும் வர்ரதில்லை. 'நீயே வேண்டாம்னு வந்திட்டேன்.. நீ கொடுக்கும் பணம் எந்த மூலைக்கு'ன்னு வந்திட்டா..

இவ இப்படி demand பண்ணாததினாலேயே, 'கல்யாணத்துக்கு நாங்க செலவு செஞ்சத கொடுத்தாத் தான் விவாகரத்து கொடுப்போம்'னு அந்தப் பையன் வீட்ல பிரச்சனை பண்ணத் தொடங்கிட்டாங்க!

இத்தனைக்கும், கல்யாணத்துக்குன்னு அவங்க செலவு செஞ்சது 40% கூட இல்ல.. அவனுக்கும் அவன் அப்பா அம்மா, ஏன் தங்கை குடும்பம் வரைக்கும் அந்த ஒரு வருடம் போல என் தோழி தான் financialஆ உதவி இருக்கா!

எனக்கென்னவோ, இந்த மாதிரி விசயங்களில், வெளியிலிருந்து கருத்து சொல்ல முடியாதுன்னு தோணுது..

said...

//எனக்கென்னவோ, இந்த மாதிரி விசயங்களில், வெளியிலிருந்து கருத்து சொல்ல முடியாதுன்னு தோணுது..
//

வழிமொழிகிறேன்.

இவைகளை case by case ஆகத் தான் பார்க்க வேண்டும்.

said...

இந்த ஜீவனாம்சம் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டுமா?? கொடுமை தான் இது.. ஒரு 5 வருடம் மட்டும் ஜீவனாம்சம் தரவேண்டும்னு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.. ஒரு 2 வருஷம் கல்யாணமாகி இருந்ததால, வாழ்க்கை முழுவதும் கஷ்டபடனுமா?? பாவம் தான் மக்கள் :((


தல, இப்போ பெரிய ஆளுங்களாம், கல்யாணத்துக்கு முன்னடி ஒப்பந்தம் போட்டிக்கறாங்களாம்.. (pre-nuptial agreement).. பின்னொரு நாள்ல விவாகரத்து ஆனா, இவ்வளவு தான் கொடுக்க முடியும்னு முன்னடியே சொல்லிட்டா, நாளைக்கு கோர்ட், கேஸ்னு ஓட வேண்டியது இல்ல.. ப்ராக்டிகலா பாத்தா சரி தான்னு தோணுது...

said...

கொத்ஸ்,
அந்த நியூ ஜெர்ஸி தவிர மற்ற மாகாணங்களில் விவாகரத்துக்காகக் கொடுக்கப் பட்ட காரணங்கள் சொல்லியிருக்கீங்க. அந்தக் காரணங்களை ஏத்துக்கிட்டு அவங்களுக்கெல்லாம் விவாக ரத்து கொடுத்துட்டாங்களா?

said...

Case by Case ஆகத்தான் பார்க்கவேண்டும்.

ராத்திரி தூங்கும்போது குறட்டை விடுகிறான் என்பதற்காக விவாகரத்து செய்பவரையும், வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்வதால் விவாகரத்து செய்பவரையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா?

//இன்று மற்ற எல்லா வகைகளிலும் சமத்துவம் பேசும் பெண்கள் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்?//

இதுவும் சரியான வாதமாகத் தெரியவில்லை கொத்ஸ். ஜீவனாம்சம் என்பதை எந்தக்கேள்வியும் இல்லாமல் கணவன் கொடுக்கவேண்டும் என்று எந்த நீதிமன்றமும் நிர்ப்பந்திப்பதில்லை. யாருடைய குற்றம், யார் கேட்பது என்பதெல்லாம் கவனிக்கப்படாமல் விவாகரத்தோ ஜீவனாம்சமோ முடிவு செய்யப்பட்டுவிடுவதில்லை.

இதை - கணவன் குற்றம், மனைவி குற்றம் என்பதை நிரூபிப்பதையே தொழிலாகக்கொண்டு பல் டிடெக்டிவ் ஏஜன்ஸிகள் பிழைக்கின்றன என்பது உண்மைதானே?

ஜீவனாம்சம் பெறுவது - வழக்கில் நீதிபதிகளால் அறிவுறுத்தப்பட்டால் - பெண்ணின் உரிமை, அதற்கும் விடுதலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

சாம் கேட்கும் கேள்விக்கு விடையறிய எனக்கும் ஆர்வமாக உள்ளது. ஒரு உபகேள்வியும் - எல்லாக்கேஸ்களிலும் ஜீவனாம்சம் கணவன் தரவேண்டும் என்றும் தீர்ப்பானதா? குறிப்பாக இந்த ஓவர் அபெக்ஷனேட் கேஸுக்கு :-)

said...

உண்மையில் Marriage is for Survival. இது எல்லா நாட்டினருக்கும் பொருந்தும்//

said...

ஒரு பெண்ணால் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற முடியுமா??

Thats news for me!

said...

Marriage is an agreement...

(விவாகம்+ரத்து) ரத்தானாலும் காலாவதியாகாதா?

ஐயோ, கண்ணிப்பையன் நான் இந்த விளையாட்டுக்கு வரலை....

said...

//ம்.. பேசாம இப்படியே இருந்திடலாம்னு நினைக்குறேன்.. நன்றிங்க கொத்ஸ்.. //

அப்ப சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோங்க உண்மைத்தமிழன். அதுக்கப்புறமும் பேசாம தான் இருக்கப்போறீங்க :).

said...

ஆனால் இன்று மற்ற எல்லா வகைகளிலும் சமத்துவம் பேசும் பெண்கள் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? தனது சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு பெண்ணிற்கு அவளது மாஜிக் கணவன் ஜீவனாம்சம் தரத்தான் வேண்டுமா? ஒரு பெண் தனியாகத் தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு என்ன //

கொத்ஸ்,
எல்லோரும் பணம் படைத்தவர்களாக இருந்துவிட்டால் ஜீவனாம்சம் கொடுப்பதில் வம்பு வராது. அறியா வயசில கல்யாணம் செய்துகொண்டு கணவன் விருப்பப்படி விவாகரத்து பெறும் பெண்களுக்க் அவன் ஜீவனாம்சம் கொடுக்கத்தானே வேணும்.
இல்லை இந்தப் பெண்படித்ஹ்தவளாயிருந்து அவள் அவனை ரத்து செய்தால் நஷ்டைஇடு கேட்கலாம் ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொல்லிவிடலாம்.
வெறுப்பின் அடிப்படையில் பிரிபவர்களைக் கட்டாயத்தில் நிறுத்துவது குழந்தைகள். அவர்கள் பராமரிப்புக்கு இருவருமே உழைப்பதுதான் நியாயம்.

எத்தனையோ விதவிதமான விவாதங்கள் எழலாம்.
எல்லோருக்கும் ஒரே நீதி அமையாது.

said...

இந்த ஜீவனாம்சம் தகராறு எல்லாம் வேணாமுன்னுதான் இங்கே , ரத்து
ஆனதும் இருக்கற சொத்து எல்லாம் சரி பாதியா பிரிச்சுக்கறாங்க. குழந்தைகள்தான்
யார்கிட்டே இருக்கோ அவுங்களுக்கு மத்தவங்க 'சைல்ட் சப்போர்ட்' காசு தரணும்.
அதுவுமில்லாம வீக் எண்ட்லேஅவுங்க வீட்டுலே வச்சுக்கணும்.

இது திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கும் பொருந்தும். இப்பெல்லாம்
இங்கே கணவன், மனைவி என்ற சொற்களை அரசாங்கத்தில் பயன் படுத்தறதே இல்லை.
எல்லாம் 'பார்ட்னர்ஸ்'தான்

said...

ஜீவனாம்சமே கூடாதுன்னு முழுசா ஒதுக்கவும் முடியாது. கண்டிப்பாக் குடுத்தே ஆகனும்னு அடம் பிடிக்க முடியாது. தியாகபூமி தெரியுந்தானே. இந்தாளுகிட்ட இருந்து பிரிச்சு விட்டுருங்க...அவருக்கு வேணும்னா நான் ஜீவனாம்சம் தாரேன்னு ஒரு பெண் சொன்ன கதை.

நல்ல வேலையில் இருக்கும் படித்த பெண்களுக்கு அந்த மனிதனின் பணம் வேண்டா வெறுப்பாக இருந்தால் வியப்பில்லை.

அதே நேரத்தில் எல்லாப் பெண்களும் அந்த நிலையில் இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

ஆகையால் தீர்ப்பில் இரு தரப்பையும் ஆராந்து நோக்கிச் சொல்ல வேண்டும்

said...

பெண்கள் படித்தவர்களாக இருந்தால் வேலைக்கு போகும் தகுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் ஜீவனாம்சம் வாங்கக்கூடாது. திருமணத்துக்கு பிறகு வாங்கிய சொத்துக்களை சரிபாதியாக (கடனையும் )பிரித்துக்கொள்வதுதான் சரி என்று எனக்கு படுகிறது.

said...

இ.கொ,

திருமணம் ஆகாதவர்களை இப்படியா பயம் காட்டுவது? பதிவில் உள்ள காரணங்களைப் பார்க்கும் பொழுது, ஒரு சின்ன உறுத்தல் வீட்டில் சிறிது அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ளுகின்றோமோ என்று?

உண்மைத்தமிழன்,
இல்லறமே நல்லறம். விரைவில் நீங்களும் ஜோதியில் ஐக்கியமாகுங்கள்.

அன்புடன்
இராசகோபால்

said...

He was much too affectionate!!!
நான் மிக நெருக்கத்தில் உள்ள ஒரு உறவினரிடம் பார்த்தேன்.
ஜீவனாம்சம் என்பது விவாகரத்துக்கு கொடுக்கும் மாதாந்திர வட்டி.

said...

சொந்த காலில் நிற்கும் பெண்களுக்கு ஜீவனம்சம் என்பது தேவையில்லை தான் . இங்க பெரிய பெரிய நடிகர்கள் நடிகைகளின் திருமணமுறிவு எல்லாம் highly profitable business ஜீவனம்சம், கணிசமான தொகை அப்புறம் அந்த விஷயங்களை பத்திரிக்கைகளுக்கு விற்று அதனால் கிடைக்கும் தொகை என்று இப்படி போகிறது.

said...

பல் பசையை நான் கீழே இருந்து அமுக்கி எடுக்கிறேன் என் மனைவி மேலே இருந்து அமுக்கி எடுக்கிறாள் என்பதனாலேயே விவாகரத்து கோரியவர்களும் உண்டு

said...

ஜீவனாம்சம் என்பது exploitation ஆக மாறாமல் இருந்தால் சரிதான். ஆமா, மனைவி மேல் பிழை இருந்து கணவன் வேலையற்று இருந்தால் அவனுக்கு மாஜஜ மனைவி ஜீவனாம்சம் தரவேண்டும் என்று ஏதாவது முன்னுதாரணம் இருக்கா?

கல்யாணம் ஆகாத பசங்ககிட்ட இப்படியெல்லாம் எக்குத்தப்பா விவாதம் வச்சா இப்படித்தான் கேப்போம்.

அப்புறம் இங்க யாரோ சொன்ன மாதிரி பணம் வேணுமின்னா வீட்டுக்கடன், வாகனக்கடன் எல்லாத்தையும் சேர்த்துதானே பிரிச்சுக்கணும்? அப்புறம் இவரு வாங்கிக்கொடுத்த ஐட்டம்ஸு? அதெல்லாம்?

அப்புறம் அக்கா.. இதென்ன பதி சொத்த பிரிக்கிறதா.. எல்லா பெண்களும் அப்படி இல்லைன்னாலும் இதுக்காகவே மணம் செய்யவும் துணிஞ்சவங்க இருப்பாங்க தானே?

said...

தமிழ்நாட்டு வாலிப பசங்க இந்த மாதிரி பிரச்சனைகள் வராம தற்காத்துக்கத்தான் எங்க இளைய தளபதி பலவருஷங்களுக்கும் முன்னாடி ஒரு படத்துல அக்ரிமெண்ட் போட்டு கல்யாணம் செஞ்சுப்பாரு..

ஆனா பாருங்க பாவம் அவர்தான் அந்தப் படத்துல. கடைசியில இதயமே இல்லாத கொடுமைக்காரன் விஜய்ன்னு சிம்ரன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நல்ல பேர் எடுத்துருவாங்க.

உண்மையில பாத்தா பணத்துக்காக அக்ரிமெண்ட் போட்டது சிம்ரன் தான். அந்த காண்ட்ராக்ட் தொடரணுமா வேணாமாங்கற லீகல்/பிஸினஸ் கேள்விக்கு குழந்தை/தாலி/பாரம்பரியம்/கற்பு அதுஇதுன்னு சம்பந்நமேயில்லாத அப்ஸ்ட்ராக்ட் மேட்டரெல்லாம் போட்டு குழப்பி டைரக்டரு நம்மள டார்ச்சர் பண்ணிடுவாரு..

படத்தோட பேரு நியாபகத்தில் இல்லை.

said...

// கணவன் வேலையற்று இருந்தால் அவனுக்கு மாஜஜ மனைவி ஜீவனாம்சம் தரவேண்டும் என்று ஏதாவது முன்னுதாரணம் /இருக்கு ராமனாதன்.ஜீவனாம்சம் மட்டும் அல்லாமல் மருத்துவ காப்பீடு கட்டும் முன்னாள் மனைவியரும் உண்டு ஜீவனாம்சத்தை அபயோகிக்கும் பெண்/ஆண்களும், குழந்தைகளுக்கான பணத்தை தர மறுக்கும் சட்டததை ஏமாற்றும் வழிகளை தேடும் ஆண்/பெண்களும் (இங்கே வசிக்கும் இந்தியர் உள்பட)என பல நிலைப்படும். சில உதாரணங்களுடன் இரு தரப்பையும் இந்த வார இறுதியில் நான் உதவிய/சந்தித்த சில வழக்குகளுடன் விரிவாக எழுதுகிறேன்.விவாகரத்து கோரிய ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பு உதாரணங்களையும் எழுதுகிறேன்.

said...

//திருமணமானால் ஜீவனாம்சம் நின்று விடும் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமலேயே உடன் வாழும் முதியோர்கள்// இதைவிட சுவாரஸ்ய்மான ஒன்று, மறுமணம் செய்துகொள்ளூம் வரை ஜீவனாமசம் வருடா வருடம் 3% அதிகரிக்க வேண்டும் என்று ஒப்பந்தமும் போட்டு, அதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ, வேலையில் ஊதியம் குறைய, அப்படியும் ஜீவனாம்சத்தின் அதிகரிப்பால் இரண்டு வேலைகள் செய்து திண்டாடி, ஆண் பணியில் இருந்து ஓய்வு பெற்றால் ஜீவனாம்சம் தர முடியாமல் திண்டாடிய வழக்கும் உண்டு.

said...

//எனக்கென்னவோ, இந்த மாதிரி விசயங்களில், வெளியிலிருந்து கருத்து சொல்ல முடியாதுன்னு தோணுது//உண்மைதான். அதனால் உதவிக்கு வருபவர்கள், பெண்கல் விடுதியில் காவலர்களால் விடப்படுபவர்கள், வீட்டு வன்முறை காரணமாக வரும் ஆண்கள்/பெண்கள் இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணம் உண்டு. சில சமயம் (அமெரிக்கர்கள், இந்தியர்கள் ) கணவன் மனைவி அல்லாமல் பெற்றோரும் ஒரு காரணம் ஆவதும் உண்டு

said...

//மனைவி மேல் பிழை இருந்து கணவன் வேலையற்று இருந்தால் அவனுக்கு மாஜஜ மனைவி ஜீவனாம்சம் தரவேண்டும் என்று ஏதாவது முன்னுதாரணம் இருக்கா? //

britney spears ஒரு உதாரணம்.. அவருடைய மாஜி கணவர் KFed, ஜீவனாம்சம் பெறுகிறார் என்று படித்திருக்கிறேன்.. குழந்தைகள் செலவும் britneyயுடையதே

said...

//படத்தோட பேரு நியாபகத்தில் இல்லை.
//
ப்ரியமானவளே??

said...

பிரியமானவளே - சரிதான்.

இளங்கோவன்.

said...

கொத்தனார்

அதிக வருமானம் பெறும் மனைவிகளுக்கு கணவன் ஜீவனாம்சம் தரவேண்டியதில்லை என நினைக்கிறேன்.ஒவ்வொரு வழக்கிலும் இருவர் வருமானத்தையும் கணக்கிட்டுத்தான் தீர்ப்பு வழங்குவார்கள்.

இந்தியாவில் ஜீவனாம்ச தொகை வெறும் 500 ரூபாய் என படித்த ஞாபகம்.:(((

said...

//கல்யாணம் ஆகாத பசங்ககிட்ட இப்படியெல்லாம் எக்குத்தப்பா விவாதம் வச்சா இப்படித்தான் கேப்போம்.//

அவரு தான் அப்படி கேட்பார். நாங்க எல்லாம் சைலண்டா போயிடுவோம்....

said...

//இதயமே இல்லாத கொடுமைக்காரன் விஜய்ன்னு சிம்ரன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நல்ல பேர் எடுத்துருவாங்க. //

அதுக்கு அப்பால விஜய் கால் மணி நேரத்துக்கு டயலாக் பேசுவாரே.... இதுக்கு தான் அவசரப்பட்டு தியேட்டர விட்டு வெளியே போக கூடாது என்று சொல்வது....

காசுக்காக கல்யாணம் பண்ணி இருந்தாலும் கற்பு, கலாச்சாரத்தை மதித்து தூக்கி நிறுத்துவர்கள் பெண்கள் என்று சொல்ல வந்து இருப்பார் போல... நான் டைரக்டர சொன்னேன்....

அதும் இல்லாம இது ஒரு ஹிந்தி படத்தோட ரீமேக்... அணில்கபூர், கஜால் நடித்த படம் என்று நினைக்குறேன்....