Saturday, June 02, 2007

விடை தருவேன் நானே!!

விடுகதையா இந்த வாழ்க்கை என்ற கேள்வியோடு ஆரம்பித்த புதிர் விளையாட்டுக்கு இன்று விடை தருவேன் நானே என முடிவுரை! ரொம்ப நாள் கழித்து நான் போட்ட புதிர். வழக்கமாக வருபவர்கள் வருவார்களா? புதிதாக யாரேனும் வருவார்களா? புதிர் பதிவுகளுக்கு ஆதரவு இருக்குமா? என என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் பதிவையே போட்டேன். எந்த விதமான மசாலாவு சேர்க்காமல் வீட்டுச் சமையல் போல் இருந்தால் அதற்கு உணவகங்களில் மதிப்பிருக்குமா என்ற பயம்தான்.

ஆனால் பாருங்கள் என்ன ஒரு ரெஸ்பான்ஸ். (இதற்கு எதிர்வினை என்பதைத் தவிர்த்து வேறு சொல்லே இல்லையா? அது ஒரு நெகடிவ் பீலிங்கை தருதே.) நான் உண்மையைச் சொல்லறேன். எதிர் பார்க்கவே இல்லை. அதிலும் நான் கஷ்டம் என நினைத்த கேள்விகளை சடாரென்று சிலர் கண்டுபிடித்தது, நான் உண்மையில் எல்லோரும் கஷ்டப்படுவார்கள் எனக் கணித்த குறிப்பில் அனேகமாக எல்லாரும் மாட்டியதிலும் ஆச்சரியம்தான்.

சரி முதலில் விடைகளைப் பார்த்துவிடலாம்.

அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்
முதல் குறிப்பு. மிகவும் எளிதானது. அவா என்றால் ஆசை. மடல் என்றால் கடிதம். அவாவிற்குள் ஒரு மடல் இருப்பதால் ஆசையில் ஓர் கடிதம். (இலக்கணப்படி ஆசையில் ஒரு கடிதம்தானே வரவேண்டும்? அந்த படம் பேரு அதுதான். அதனால நானும் அதை அப்படியே கேட்டேன்.)

சகத்வன்திரம் - ஆயிரத்தில் ஒருவன்
சகத்திரம் என்றால் ஆயிரம். வடமொழியில் சகஸ்ரம் என்றால் ஆயிரம்தானே? இங்கிருந்து அங்க போச்சா அங்க இருந்து இங்க வந்ததான்னு தெரியாது. ஆனா ஆக மொத்தம் சகத்திரம் என்றால் ஆயிரம். ஆயிரத்திற்குள் ஒரு வன் இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன். மற்ற எல்லாவற்றையும் போட்ட பாலா இதற்கு கடைசி வரை கஷ்டப்பட்டதுதான் ஆச்சரியம்.

நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஓர் ராகம்
இது முதல் குறிப்பைப் போன்றதுதான். கல்யாணி என்று ஒரு ராகம் இருக்கிறதல்லவா? கல்யாணி என்றவுடம் பியர் ஞாபகத்துக்கு வந்து ஜில் ஜில் என எழுதியவர்கள் அனைவரும் என் பேரைச் சொல்லி நல்ல பியரா வாங்கிச் சாப்பிடுங்கள்.

விவரி - பச்சை விளக்கு
விவரித்தல் என்றால் விளக்குதல் என்றுதானே பெயர்? அந்த சிலேடையை வைத்துப் போட்ட குறிப்பு இது. பச்சைக் கலரில் எழுதப்பட்ட விளக்கு - பச்சை விளக்கு.

ஓவியலூசு - படகோட்டி
இது நெல்லை மாவட்டக்காரங்களுக்கு ரொம்ப எளிதாக இருந்து இருக்கும். (இல்லையா டுபுக்கு!) ஏனென்றால் இதில் முக்கியமான குறிப்பு அந்த வட்டார வழக்கில் இருக்கிறது. ஆனால் ரொம்பவே புழக்கத்தில் உள்ள சொல்தானே! ஓவியம் என்றால் படம். ஓவிய என்றால் பட. கோட்டி என்றால் பயித்தியம், லூசுதானே. ஆகவே பட கோட்டி.

சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்
இது ரொம்ப நேரான விடைங்க. ஏழை in சிரிப்பில். சரிதானே ஜிரா.

தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - திருவிளையாடல் ஆரம்பம்
திருவிளையாடல் 'தி'யில்தானே ஆரம்பிக்கிறது!! இது கொஞ்சம் கடினமான குறிப்புதான். ஆனா போட்டவங்களைக் கேட்டுப் பாருங்க. அப்படி ஒண்ணும் புரியவே இல்லாத மாதிரி குறிப்பு எல்லாம் இல்லை. தனுஷ் படம் என்றால் நேராக பதில் வந்திருக்கும். அவ்வளவு எளிதான குறிப்பாகத் தர வேண்டாமே என்றுதான் இன்னும் பல படங்களில் நடித்து இருக்கும் பிரகாஷ்ராஜ் பெயரைப் போட்டது.

என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
இருப்பதிலேயே இதுதாங்க கடினமான குறிப்பு. அதே மாதிரி பாலாவைத் தவிர வேறு யாருமே இதனைப் போடவில்லை. பாலா, Hats of to you!! கமல் படம் இல்லைன்னு சொல்லியாச்சு. ஆனாலும் கமல் படம்தான் அதிகம் விடையாக வந்தது. கமல் படம் பேரு என்னங்க? உன்னால் முடியும் தம்பி. இங்க என்ன சொல்லி இருக்கேன்? என்னால் முடியும் தம்பி. ஆக மொத்தம் 'உன்' இடத்தில் நான் 'என்'னைத் தந்திருக்கிறேன். எனவே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். சரியா? :)) இதில் தம்பி என்ற வார்த்தையைக் கொண்டு பரதன், இலக்குவன், ஸ்டாலின் எனப் பல தம்பிகள் வந்தார்கள்.

ஆ - உயிரெழுத்து
நேரான குறிப்புதான். அது ஏன் ஆ? ஏன் அ, இ, ஈ என எதையும் குறிப்பிடவில்லை? பெரிதாய் காரணம் ஒன்றும் கிடையாது. ஆவும் ஒரு உயிர்தானே? :)) இந்த சிலேடையும் அ.ஆவை வைத்து குழப்பலாம் என்ற ஒரு எண்ணமும்தான். அப்படிக் குழம்பியவர்களும் உண்டுதானே!

ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்
நம்ம பசங்க எல்லாம் சரியாக விடை தந்த குறிப்பு இது! எளிதான குறிப்புதான். ஆலயம் என்றால் கோயில். இங்கு அதில் என்ன இருக்கிறது? ஜானிவாக்கர் என்ற குடி. ஆகவே குடியிருந்த கோயில்.

வேல் வினை - வேலுண்டு வினையில்லை
இருப்பதிலேயே எளிதான குறிப்பு இதுதான். வேல் இருக்கு வினை இல்லை. முதலில் நான் வெறும் வேல் என குறிப்பு தரலாம் என இருந்தேன். அப்படிச் செய்து இருந்தால் எத்தனை பேர் சரியாகப் போட்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் எல்லா குறிப்பையும் அதி கடினமாக ஆக்க வேண்டாமே என்றுதான் அந்த வினையையும் சேர்த்தது.

மீண்டும் மீண்டும் - மறுபடியும்
இதுவும் நேரான குறிப்பு. மீண்டும் என்றாலே மறுபடியும்தானே, எதற்கு இரு முறை தந்தது? மீண்டும் மீண்டும் என்ற சொல் வந்தால் அதுவே மறுபடியும் வருகிறது அல்லவா? :))

அட்சி இரதன் - கண்ணும் கண்ணும்
பழைய தமிழ் சொற்கள் இரண்டினைத் தந்து இருக்கிறேன். இரு சொற்களுமே கண் என்ற பொருள் கொண்டவை. மீன் போன்ற அட்சியைக் கொண்டவள் மீனாட்சி அல்லவா? இதைப் பத்தி டீச்சர் பதிவில் கொஞ்சம் வேறு மாதிரி பிரதீப் சொன்னதை ஞாபகமாக குறிப்பிட்டு இருந்தார் கதிரவன். இரதன் என்றாலும் கண்தான். ஆகவே கண்ணும் கண்ணும். இதுதான் விடை. அட்சியும் இரதனும் எனச் சொல்லி இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார் ஒருவர். ஆமாம், செய்து இருக்கலாம் தான்.

உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்.
உயர்ந்த என்ற சொல்லின் உள் ளம் இருக்கிறது. ஆகவே உயர்ந்த உள்ளம். இதில் இல்லாத குழப்பங்களை எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டனர் சிலர்.

என்விதிகை - சட்டம் என் கையில்
போன குறிப்பு மாதிரிதான். விதி என்றால் சட்டம், அது என் கையில் உள்ளது. ஆகவே சட்டம் என் கையில்.

சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
சஹானா ஒரு ராகம். ஆதி தாளம், ரூபக தாளம். இவை எல்லாத்தையும் ஒண்ணா எடுத்துப் போட்டா ராக தாளங்கள். அதாவது ஒரு இராகம் ப்ளஸ் அட்லீஸ்ட் இரண்டு தாளங்கள். வந்திருச்சா?

அஜீத் அடானா - ஒருதலை ராகம்
இது நம்மாளுங்க எல்லாரும் போடுவாங்கன்னு எதிர் பார்த்தேன். சிலவங்க மிஸ் பண்ணினது ஆச்சரியம்தான். 'தல' அஜீத். ஒரு தல. ஒருவரே தல! அடானா என்பது ஒரு ராகம். ஆக இது ஒரு தல ராகம் = ஒரு தலை ராகம்.

காததோழன்லி - நண்பனின் காதலி
நண்பன் in காதலி!! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?

இந்தியா - நம் நாடு
என்னங்க இதை போய் சிலவங்க மிஸ் பண்ணி இருக்கீங்க!! இந்திய நாடு நம் நாடு!!

இள இள இள (வேர்ட் ஆர்ட் - சர்க்கிள்) - இளவட்டம்
'இள' என்ற சொல்லால் ஆன வட்டம் ஆகவே இளவட்டம். இளமை ஊஞ்சல் ஆடுகிறது என சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த பதில் இளவட்டம்தான்.







வெற்றி பெற்றவர்கள்

இந்த போட்டியில் 20 குறிப்புகளையும் சரியாகச் சொன்ன ஒரே ஆள் நம்ம பாலராஜன் கீதா அவர்கள்தான். அவரை வெற்றியாளராக அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பாலா. உங்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றதிற்காக ஒரு புதிர் புத்தகம் பரிசாகத் தரலாம் என இருக்கிறேன். நல்ல ரீபஸ் புத்தகமே தேடுகிறேன். அது கிடைக்கவில்லை என்றால் வேறு புதிர்கள் கொண்ட புத்தம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.

பல முறை நான் தொடர்ந்து தவறான விடை என்றாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் (அதாவது, மறுபடியும்!) வந்து தொடர்ந்து முயன்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக முக்கியமாக கோகிலவாணி கார்த்திகேயன் அவர்கள்.

கலந்து கொண்ட அனைவரின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அனைவரும் இப்புதிர்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

37 comments:

said...

கோகிலவாணி, இன்னிக்கு நிம்மதியா தூங்குவீங்களா? :))

எல்லாரும் உங்க அனுபவத்தைப் பத்தி சொல்லுங்களேன்.

said...

அசத்தல் குறிப்பு! ஆனா என்னைத்தான் முழு மதிப்பெண் வாங்கவிடாம செஞ்சிருச்சு!

நானும் 'தம்பி' யிலேயே தான் நின்னேன்!

மற்றபடி 3 புது தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டேன்.
அட்சி - கண்
இரதன் - கண்
சகத்திரம் - ஆயிரம்

அனுபவத்தை என் ப்ளாக் கில பதிவாப் போட்டா என்ன?
மற்றபடி மூளையை வேலை செய்ய வைத்த உங்களுக்கு ரொம்ப நன்றி!

said...

பாலராஜன் கீதா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!(கொஞ்சம் நற நற நற)

said...

ஆகா..இதுகதானா விடைக. அருமையா இருக்கு. குறிப்பா ரொம்ப ரசிச்சது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். பிரமாதம். திருவிளையாடல் ஆரம்பமும் ஓரளவு நல்லாயிருந்தது. ஆனா பிரகாஷ்ராஜ் படம் என்ற குறிப்பு சரியில்லை. நெறையக் கொழப்புச்சு.

சகத்திரம்....இது உண்மையிலேயே கடினமானது. சகத்திரம் என்பது வடக்கில் இருந்து வந்தது என்றே நினைக்கிறேன். ஒருவேளை சகஸ்ரம் என்று கொடுத்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஓவியலூசு..கோட்டியை எப்படி மறந்தேன். ஆனாலும் கடினமானதுதான்.

பச்சைங்குற முடிவு செஞ்சிட்டேன். ஆனா அடுத்த பகுதியில கோட்டை விட்டுட்டேன். ஆனா முனைப்பா யோசிக்கலை.

வேலுண்டு வினையில்லை படத்துக்கு எத்தனை பேர் சரியான விடை சொன்னாங்க?

கண்ணும் கண்ணும், ராகதாளங்கள் - இப்பிடிப் படங்கள் இருக்குறதெல்லாம் உண்மையிலேயே தெரியாது.

நண்பனின் காதலி தெரிஞ்சது. ஆனா ஏன் எழுதாம விட்டேன்னு தெரியலை.

இந்தியா - இதுக்குத் தாய்நாடு, நம்நாடு ரெண்டுமே சொல்லாம்.

said...

பாலராஜன் கீதா , வாழ்த்துக்கள் !
8 ஐக் கண்டுபிடிச்சதுக்கு ஒரு special வாழ்த்து ))

said...

//அசத்தல் குறிப்பு! ஆனா என்னைத்தான் முழு மதிப்பெண் வாங்கவிடாம செஞ்சிருச்சு!//

ஆனா அருமையான முயற்சி கோகிலவாணி. வாழ்த்துக்கள்.

//நானும் 'தம்பி' யிலேயே தான் நின்னேன்!//

தம்பியுடையான் படைக்கஞ்சான், ஆனா விடைக்கு? :))

//மற்றபடி 3 புது தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். //
நானும்தான்.

//அனுபவத்தை என் ப்ளாக் கில பதிவாப் போட்டா என்ன?//
கட்டாயம் போடுங்க. இங்க வந்து சுட்டி குடுங்க.

இதுக்கு முன்னாடி நிலா அவங்க நட்சத்திர வாரத்தில் நடத்திய போட்டியில் பங்கு பெற்ற என் அனுபவத்தைப் படிக்கறீங்களா?

said...

என்ன ஜிரா? பமகவில் ப்ரமோஷனா? துண்டு எல்லாம் அமர்க்களமா இருக்கு!!

//ஆகா..இதுகதானா விடைக. அருமையா இருக்கு. குறிப்பா ரொம்ப ரசிச்சது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். பிரமாதம். திருவிளையாடல் ஆரம்பமும் ஓரளவு நல்லாயிருந்தது.//
எனக்கும் குறிப்பு எழுதும்போத பிடிச்சுது.

//ஆனா பிரகாஷ்ராஜ் படம் என்ற குறிப்பு சரியில்லை. நெறையக் கொழப்புச்சு.//
அதுக்குத்தானே சொன்னது!

//சகத்திரம்....இது உண்மையிலேயே கடினமானது. சகத்திரம் என்பது வடக்கில் இருந்து வந்தது என்றே நினைக்கிறேன். ஒருவேளை சகஸ்ரம் என்று கொடுத்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//
அகரமுதலியில் தேடிதான் எடுத்தேன். இப்படி ஒரு சொல் இருப்பதே இதற்கு அப்புறம்தானே தெரியுது.

//ஓவியலூசு..கோட்டியை எப்படி மறந்தேன். ஆனாலும் கடினமானதுதான்.//
நெல்லை மாவட்டமாவே இருந்தா தெரிஞ்சு இருக்கும். நீர்தான் தூத்துக்குடி ஆகிட்டீரே. அதான்.

//வேலுண்டு வினையில்லை படத்துக்கு எத்தனை பேர் சரியான விடை சொன்னாங்க?//
அதான் அதை ஒரு ஸ்பெரெட்ஷீட்டாவே தந்தாச்சே. 17 பேர் சரியாப் போட்டாங்க. மொத்தம் சீரியசா கலந்துக் கிட்டவங்க அவ்வளவுதான்.

/கண்ணும் கண்ணும், ராகதாளங்கள் - இப்பிடிப் படங்கள் இருக்குறதெல்லாம் உண்மையிலேயே தெரியாது.//
யாருக்குத் தெரியும். அதான் சேஃபா அந்த ராகா சுட்டியை தந்துட்டேன். :))

said...

கொத்ஸ்,

இன்னொரு தடவை சொல்றேன்..என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க :)))

சூப்பர் போட்டி..அடிக்கடி நடத்துங்க!

ஊர்ஸ் பாலராஜன்கீதாவிற்கு வாழ்த்துக்கள் :)

said...

அருமையான கேள்விகள். வெற்றி பெற்ற பாலராஜன்கீதாவிற்கு வாழ்த்துக்கள்.

கொத்ஸிற்கு முடி கொட்டும் வரை (?!?!) யோசித்த கோகிலவாணிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

'ஆ','தி'வும் ரொம்பவே சோதித்தன என்னை.

'என்னால் முடியும் தம்பி' சான்ஸே இல்லை. இப்படிக் கூட யோசிக்க முடியுமா என்ன... :-B

'சகத்திரம்' - யோசிக்கவே இல்லை.

மிக நன்றாக இருந்தது. மிக்க நன்றி!

said...

பலரையும் படுத்திய 'பட' 'கோட்டி' எளிதாக கிடைத்து விட்டார். ஓவியத்திற்கு மாற்றாக 'பட'த்தை தேடியவுடன் மாட்டியது 'படகோட்டி'.

'பச்சை விளக்கு' ஏற்கெனவே 'நீல வானம்' என்ற படத்திற்கு போட்ட புதிர் மாதிரியே இருந்ததால் சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது.

அட்சி என்றால் கண் என்று தெரியும் (மதுரைக்காரங்களுக்கு இது கூட தெரியாம?). இரதனை தேடி இங்கு கண்டு தெளிந்தேன். ஆனாலும் முதலில் சொன்ன விடை 'அதே கண்கள்'.

இளவட்டம் - படத்தை பார்த்தவுடன் தோன்றிய விடை 'இளவஞ்சி'. அப்படி ஒரு படம் இல்லாததால், 'இள' வைத்து தேடியதில் சரியான விடை சிக்கியது.

அம்புட்டுதேன் நம்ம அனுபவம்.

said...

கலந்துக்கிட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் !! 20ம் கண்டுபிடித்த பாலராஜன் கீதாவுக்கு(எப்டீங்க..ம்ம் கலக்கறீங்க :-)) சிறப்பு வாழ்த்துக்கள் !

ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க கொத்ஸ் (உங்க உண்மையான பெயர் என்ன - அதுக்கும் விடுகதை போடாதீங்க :-)))

என்னோட அனுபவத்த விரிவா அப்புறம் எழுதறேன். (இப்போ ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலையா இருக்கறதால, ஹி ஹி.. )

said...

தல, சூப்பர் குறிப்புகள்.. :D

நான் 15 சரியா சொன்னேன்.. எனக்கு 13 மதிப்பெண் தான் போட்டிருக்கீங்க..7,9 தடவி தடவி கடைசியா சரியா சொல்லிட்டேன்..

13 விடைகள சுலபமா அந்த ராகா லிஸ்ட்ல இருந்து கண்டுபிடிச்சிட்டேன்.. ஆ, தி, கொஞ்சம் கடினமா இருந்தது..


சகத்திரம் = ஆயிரமா?? அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.. இத ரொம்ப யோசிச்சதுல, (சவரம், கத்தி, ன் ) பிரிச்சு இதுல ஒரு படமும் கண்டு பிடிக்க முடியாம நொந்தேன்..


ஓவியலூசு = இது ரொம்பவே கொடுமை.. படம், சித்திரம்னு தேடி தேடி லூசானது தான் மிச்சம் :(( உங்க ஆசை நிறைவேறி இருக்கும் :D :D


என்னால் முடியும் தம்பி = மிகவும் ஆச்சர்யபட வைத்த/ரசித்த குறிப்பு.. சத்தியமா கண்டு பிடிச்சிருக்க மாட்டேன்.. :D :D

அட்சி இரதன் = கண் என்று கண்டு கொண்டதில் மீண்டும் மகிழ்ச்சி.. :D:D

அஜீத் அடானா - அடானா ஒரு ராகம், அதை கண்டு பிடிச்சேன்.. அஜீத்-அ சரியா decode பண்ண தெரியல..

மீதி அனைத்தும் எளிதாய் இருந்தது.. ஒரு சொல் கண்டு பிடித்து ராகா பட்டியல்ல தேடினா எளிதில் விடை கிடைத்தது..

அடுத்த முறை இதை விட சிறப்பா செய்ய முயற்ச்சிக்கிறேன்.. :D :D

கொத்ஸ், சினிமாவ தவிர வேறு எதாவது ஒரு பொது துறையிலும் இதை முயற்சி செய்யலாமா??


பாலராஜன் கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

said...

நன்றி :)

said...

புதிர் தந்த இலவசத்திற்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், வாழ்த்துகள் கூறியவர்களுக்கும் சகத்திரம் :-) நன்றிகள்.

கடைசிவரை கோகிலவாணி கார்த்திகேயன், ஜெயஸ்ரீ, மணிகண்டன், கதிரவன், ஸ்ரீதர் இவர்களில் யாரேனும் ஒருவர் முதலில் வந்துவிடுவார்களோ என்றுகூட எண்ணினேன்.

முதலில் பிடித்த(சிலேடை!) குறிப்புகள் ஜானிவாக்கர், ஒரு தலை ராகம்.

என் மகள் பச்சை விளக்கு விடையை கண்டுபிடித்தார்கள். அவர்களே ஒருமுறை விக்கிபீடியாவில் பார்க்கலாம் என்று கூறி மற்றொரு விடை கண்டுபிடித்தது திருவிளையாடல் ஆரம்பம்.

எளிதான ஆயிரத்தில் ஒருவனைக் கண்டுபிடிக்கக் கஷ்டப்பட்டது என் இளைய மகள் கஷ்டமான கணக்குகளை எளிதாகப் போட்டுவிட்டு எளிதான கணக்குகளில் சின்னபுள்ளத்தனமான தப்புகள் செய்வதை நினைவூட்டியது. :-)

திரு.பெருசு அவர்கள் இப்போவாவது வந்து அவரின் புதிருக்கு விடைஅளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.:-)

இலவச(ம்) புதிர்களை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்.

said...

பாலராஜன் சார் மற்றும் கோகிலவாணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

கொத்ஸ்
நீங்க கொத்தனாரா இல்லை சிற்பியா? இப்படி செதுக்கறீங்களே, சொற்களை?

வகர்ப்பம் ஆண்டவன் - நீங்கள் அல்லவோ?
உங்களுக்கும் சேர்த்து தான் வாழ்த்து!

said...

சென்னைத் தமிழில் ஒரு போட்டி வைக்கலாமே !

அன்புடன்
இராசகோபால்

said...

வாழ்த்திய கோகிலவாணி கார்த்திகேயன், ஜெயஸ்ரீ, ஊர்ஸ் உருகுவே கொண்டான் கப்பி பய, ஸ்ரீதர் வெங்கட் எல்லோருக்கும் மீண்டும் உளங்கனிந்த சிறப்பு நன்றிகள்.

said...

இ.கொ,

அட்டவணை, மதிப்பெண் எல்லாம் கொடுத்து அசத்தி விட்டீர்கள். ஆனால், எனது மதிப்பெண்ணை 15-ல் இருந்து 11-க்கு குறைத்து விட்டீர்கள். அடுத்தடுத்து வரும் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் வேண்டாமா?

அன்பு மிரட்டலுடன்
இராசகோபால்

said...

விளக்கங்கள் எல்லாம் சூப்பர், கொத்ஸ்!

இப்போ இது நல்லா புரிஞ்சிடுச்சு.

அடுத்த தபா ஜமாய்சுப்புடலாம்!

***** வாரத்திற்கு வாழ்த்துகள்!

said...

பாலராஜன்கீதாவுக்கு வாழ்த்து(க்)கள்.

அட! மகளும் சேர்ந்து கண்டு பிடிச்சாங்களா?
குடும்பமே கலந்துக்கிட்டு இருக்கு:-))))

said...

கதிரவன், சிங்கம்லே, கேஆர்எஸ், துளசிஅக்கா எல்லோருக்கும் நன்றிகள்.

said...

Good one!

said...

:-) அருமையான குறிப்புக்கள் கொத்ஸ்.

பாலராஜன்கீதாவிற்கு மற்றும் ஒன்னு ரெண்டு நம்பர்ல பரிச கோட்டை விட்டவங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.


அட என்ன ஆச்சரியப்பட வைத்த குறிப்பு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். :-) கேட்டதுமே உதட்டில் ஒரு புன்முறுவல் வந்தது :-)


பிடிக்காதது : ஓவியலூசு ,

தி - பிரகாஷ்ராஜ் படம்னதால அவர் தயாரித்த படம்னுதான் யோசிச்சேன்..


சகத்திரம் எல்லாம் நம்ம தலைக்கு எட்டாதது.. கேள்விய புரின்ச்சிக்கமுடியாததால அதுக்கு விடை யோசிக்கவே இல்ல.. ஆனா சரியான பதில் சொல்லிட்டேன்.( கொத்ஸ்.. ஒழுங்கா மார்க் போடுங்க அதுக்கு)


நெஞ்கல்யாணிசு - இதுக்கு என்னென்னவோ யோசிச்சேன்.. ஆனா கல்யாணி ராகம்றது தோனவேயில்ல.

உயர்ளம்ந்த - பார்த்தவுடனே தோன்றியது உயர்ந்த உள்ளம் தான்.. ஆனா அதா இருக்கதுன்னு ஏதேதொ யோசிச்சேன்.. :-((

அஜீத் அடானா - இதான் சூப்பர்.. அடானான்னா ஒரு பொண்ணு பேர்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். என்னடா இதுன்னு தேவ்கிட்ட கேட்டேன்.. ஒரு தலை ராகம்னு சொன்னதும் அத ஒரு தலை காதல்னு புரிசிகிட்டு அஜித் சைட் டிராக் வேற ஓட்டினாரான்னு கேட்டேன்.. தேவ் தலையில அடிச்சிகிட்டது சாட்லயே தெரிஞ்சது :-((.

said...

என்னால் முடியும் தம்பி - க்ளுவை ரொம்பவும் ரசித்தேன். மிக அருமை.

வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா. விடுகதைகளில் பெரிய புலியாக இருப்பீர்கள் போல இருக்கிறதே!!!

said...

மனதின் ஓசை (என் மெயில் ஐடி இப்போது தேவையா ?:-)), டுபுக்கு (புலின்னு சொல்லாதீங்க என்னை உள்ளே போட்டுடப்போறாங்க:-)) இருவருக்கும் நன்றி.

said...

//இன்னொரு தடவை சொல்றேன்..என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க :)))//

கப்பி, இப்படி எல்லாம் சொன்னா அறிவு இருக்குன்னு நாங்க ஒத்துக்கணுமா? :)))

//சூப்பர் போட்டி..அடிக்கடி நடத்துங்க!//

தாவு தீந்து போச்சு. அடுத்த முறை போட்டேன் என்றால் திரைப்பட பெயர்கள் இல்லை. அது மட்டும் நிச்சயம்.

said...

//கொத்ஸிற்கு முடி கொட்டும் வரை (?!?!) யோசித்த கோகிலவாணிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.//

எனக்கு முடி கொட்டுச்சா? சான்ஸே இல்லை. (இருந்தால்தானே கொட்டறதுன்னு சொல்லறது யாரு? பாபாவா?):))

//'ஆ','தி'வும் ரொம்பவே சோதித்தன என்னை.//
ஆதி சோதித்ததைப் போலவேவா? :))

//'என்னால் முடியும் தம்பி' சான்ஸே இல்லை. இப்படிக் கூட யோசிக்க முடியுமா என்ன... :-B//

அதைத்தான் யோசிச்சு பரிசை அடிச்சாரு பாருங்க பாலா!!

'சகத்திரம்' - யோசிக்கவே இல்லை.

said...

//பலரையும் படுத்திய 'பட' 'கோட்டி' எளிதாக கிடைத்து விட்டார். ஓவியத்திற்கு மாற்றாக 'பட'த்தை தேடியவுடன் மாட்டியது 'படகோட்டி'.//

அது நெல்லைத் தமிழ் இல்லையா? அதான் தூத்துக்குடி மக்கா கூட போடலை!! நம்ம ஊர் பசங்களுக்கு ஒரு எக்ஸ்ட்டிரா மார்க் வாங்க வழி செஞ்சேன்.

ஆனா உங்க அப்ரோச் பிடிச்சுது. நீங்க ராகா.காம் சுட்டி குடுத்ததை பயன்படுத்திய மாதிரி வேற யாருமே செய்யலைன்னு நினைக்கிறேன். ஒரு பாதி விடை கிடைச்சா அதை வெச்சு அந்த தளத்தில் தேடியது போன்றவைதான் நான் சொல்ல வருவது.

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் ஸ்ரீதர்.

said...

//ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க கொத்ஸ் (உங்க உண்மையான பெயர் என்ன - அதுக்கும் விடுகதை போடாதீங்க :-)))//

கதிரவன், இவ்வளவு ஆர்வமா பங்கேற்றதுக்கு ரொம்ப நன்றி.

என் பெயரா? என் வலைப்பதிவு புனைப்பெயர்கள் என்னென்னன்னே இன்னும் லிஸ்ட் போட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க வேற!!

//என்னோட அனுபவத்த விரிவா அப்புறம் எழுதறேன். //

எழுதுங்க. நாங்க வெயிட்டிங். இங்க வந்து சுட்டி குடுத்துடுங்க. இல்லைன்னா தெரியாது பாருங்க.

said...

என்னோட 'விடை தேடிய அனுபவங்கள்' :-)) :

முதல்ல 13விடைகள் ஓரளவு ஈஸியா கண்டுபிடிச்சிட்டாலும்,

அட்சி இரதன்,ஆ, தி - இந்த 3ம் கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க முடிஞ்சது.

ஓவிய லூசு,சகத்வன்திரம், என்னால் முடியும் தம்பி,அஜீத் அடானா
- இந்த நாலும் என்னை ரொம்ப ரொம்ப யோசிக்க வச்சது..கடைசி வரை கண்டு பிடிக்க முடியல :-(

13) அட்சி இரதன் - இதில 'அட்சி'க்கான அர்த்தத்தை -துளசி டீச்சர் பதிவில் ப்ரதீப்பின் பின்னூட்டத்துல இருந்தும் & 'இரதன்'அர்த்தத்தை -கதிரைவேற்பிள்ளை அகராதி
& ஸ்ரீதர் சொல்லியிருக்கும் இடத்திலிருந்தும் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஆனாலும் 'கண்ணும் கண்ணும்'னு ஒரு படம் இருக்குன்னு தெரியாததால
'கண்ணோடு காண்பதெல்லாம்'னு முதல்ல சொன்னேன்.அது தப்புன்னு சொன்னவுடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்; பிறகு 'கண்ணுக்கு
கண்ணாக' சொன்னேன். அதுவும் தப்பு..போய் ராகா லிஸ்ட்ட பாருங்கன்னு சொன்னதுக்கப்புறம்தான் நல்லா பாத்து, சரியான விடை சொல்ல
முடிந்தது :-)

அட்சியும் இரதனும்னு குடுத்திருந்தா இன்னும் எளிதாகக் கண்டுபிடிச்சிருக்கலாம் :-(

9) - முதல்ல அ ஆ (அன்பே ஆருயிரே); அப்புறம் 'ஆ'ன்னு எதையோ பாத்து பயப்படறதத்தான் சொல்றார்ன்னு 'முனி'; 'அச்சச்சோ' ; 'நீயா'; 'ஆஹா'ன்னு சொல்லிப்பாத்தேன்..ம்ஹூம் கடைசில 'உயிர் எழுத்து'ன்னு க்ளிக் ஆச்சு :-)

7) தி (போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - முதல்ல ஆதி / பொய் (பிரகாஷ்ராஜோட சொந்தப்படம்னு..); அப்புறம் 'திருவிளையாடல் ஆரம்பம்'
க்ளிக் ஆச்சு

2) சகத்வன்திரம் - ரொம்ப கஷ்டம் :-(

"சகத்திரம்"கற வார்த்தைய இதுக்கு முன்னாடி நான் கேள்விப்பட்டதே இல்ல. நான் இதுல எழுத்துக்கள மாத்திப்போட்டு, முதல்ல "கரத்தின் வசம்" = அடைக்கலம் / கையோடு கை ன்னு யோசிச்சேன்; தப்புன்ன உடனே "சகத்தின் வரம்" = இயற்கை; ம்ஹூம் பிறகு கத்தின் சவரம் / சவர கத்தி ன் ம் / கத்தி சவரன் ம் ன்னு பலவிதமா யோசிச்சதுல..ரொம்ப குழம்பிப்போயிட்டேன் :-((

5)ஓவிய லூசு : ஓவியம் = சித்திரம்; லூசு = சம்பந்தமில்லாம பேசறவங்க (!!??) ன்னு முடிவு பண்ணி "சித்திரம் பேசுதடி"; எதுக்கும் இருக்கட்டும்னு லூசு = கிறுக்கன்/பித்தன், So,"புதுமைப்பித்தன்"னு சொன்னேன்;2ம் தப்புன்னவுடன், சுவரில்லாத சித்திரங்கள் (சுவரில்லன்னா சித்திரம் லூசா விழுந்திடும்ல..ஹி ஹி ); அதுவும் தப்பா...காதல் கிறுக்கன் (லூசு=கிறுக்கன்; ஓவியத்துக்கும் காதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் ;-) ) ம்ஹூம்
முடியலடா சாமின்னு விட்டுட்டேன்.

பிறகு ஜெயஸ்ரீ "5 ஆவது கேள்விக்கு பதில் சொன்ன பலர் நெல்லைக்காரங்களா இருக்கணும்"னு சொன்னப்ப நெல்லைன்னா அல்வா - அதச்சாப்டா லூசாயிடுவாங்களா ? அப்டியே இருந்தாலும் இதுல "ஓவிய" இல்லியே ?? ஒருவேளை 'தாமிரபரணி'ய சொல்லியிருப்பாங்களோ ??
அதுல எப்டிப்பாத்தாலும் "ஓவிய"
வராதே..சரி, நிச்சயம் ஏதாவது புது வார்த்தையாத்தான் இருக்கும்னுவிட்டுட்டேன்.

என்னோட நெல்லை நண்பர்கள்ட்டயாவது கேட்டிருக்கலாம்..ஹூம்.

இப்போத்தான் கவனிச்சேன் இளவஞ்சியோட வலைப்பக்கத்தில இருக்கும் "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு.." தொடரின் 3வது பாகத்தில் "கோட்டி"ங்கற வார்த்தய உபயோகப்படுத்தியிருக்கார். இந்த தொடரை பிரேம்குமார்
"http://premkumarpec.blogspot.com" 'அன்புடன்' கூகுள் குழுமத்தில் "http://groups.google.com/group/anbudan/browse_frm/thread/92d018474c6db35b/6d42f3e8409738be" அனுப்பி இருந்தார். அத முதல்ல
வாசிக்கறப்ப இந்த வார்த்தய கவனிக்கல. இன்னிக்கு பொறுமையா மறுபடி வாசிக்கறப்ப கவனத்தில் வந்தது :-) இனிமே எங்க என்ன புதுவார்த்தை வந்தாலும் நிச்சயம் மனனம் செஞ்சுப்பேன் - உங்களோட அடுத்த புதிர்ல உதவும்ல..அதான்

8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - விடை தெரிந்தபின் நானும் ரொம்ப ரசித்த புதிர் - முதல்ல இத யாரோ ஒரு 'அண்ணன்'தான் சொல்றார்ன்னு "நினைத்ததை முடிப்பவன்";"வல்லவனுக்கு வல்லவன்";"நம்பினால் நம்புங்கள்";ன்னு சொன்னேன். எல்லாமே தப்புன்னதால, வாய்ப்பாட்ட மாத்தி "என்(னோடு)னால் முடியும் விஷயம்/பொருள்"ன்னு யோசிச்சு "என் வாழ்க்கை - அப்டி ஒரு படம் இல்லியே..அப்போ "என் சுவாசக் காற்று??"ன்னு சொன்னேன்..ம்ஹூம்;

அப்புறம்,அண்ணனால 'முடிஞ்ச' தம்பின்ற அடிப்படையில பாத்தா..வாலி ? கர்ணன் ? இல்ல இவங்கள்லாம் தம்பியால முடிஞ்ச அண்ணன்களாச்சே;
சரி,இந்த வார்த்தை "என்(n)னால் முடியும் & 'தம்பி'ன்ற வார்த்தைக்கும் தொடர்பிருக்கும்"னு யோசிச்சதுல,பரதன்?? - இல்ல சரியா வராதுன்னு விட்டுட்டேன்.

அப்புறம், "இந்த உலகில் எல்லாமே
என்னால்தான் முடியும் தம்பி"ன்னு பஞ்சபூதங்கள் சொல்றதுன்னு நினைச்சு "நெருப்பு";அதுவுமில்லயா சரி காலதேவன் தான் இப்டி
சொல்றாரோ..அப்போ "டைம்" ?? ; அதுவுமில்லியா...சும்மா போட்டுப்பாப்போமேன்னு கடைசி முயற்சியா.."தூங்காதே தம்பி தூங்காதே". அதுவும்
இல்ல :-((

17. நான் ரொம்ப குழப்பிக்கிட்ட இன்னோர் புதிர்: அஜீத் அடானா - அடாணா(/அடானா?)-சங்கராபரணத்தின் ஜன்ய ராகம்னு தமிழ் விக்கிபீடியாவில தெரிஞ்சுக்கிட்டேன். அஜீத் = தல (அ) வெற்றிகொள்ள முடியாதவன்; இந்தப்புதிர்கள் தமிழ் வார்த்தைகள் பற்றித் தானே..அப்ப,
'தல'ன்னு mean பண்ணியிருக்க மாட்டார்; (இங்க "ஜானிவாக்கர்=குடி"ன்ற குறிப்ப மறந்திட்டேன்) அப்ப அது வெற்றின்னு பொருள்படும்.அப்போ, வெற்றி ராகம் - அப்டி ஒரு படம் இல்லியே... கொட்டு
முரசே ? வெற்றிக்கொடி கட்டு ?? ம்ஹூம் தப்பா...சரி, அடானா = அட் + ஆனா ?? வெற்றி அட் ஆனா ? இல்ல "வெற்றி அட ஆனா" ? சே சே..இப்டி ஒரு வார்த்தயே இருக்காது...நாம ரொம்ப யோசிச்சு குழம்பிப்போயிருக்கோம்..
இத்தோட முடிச்சுப்போம்னு நிறுத்திட்டேன் :-))

முதல் நாள் அலுவலகத்துல 2மணி நேரமா இந்தப் புதிர் விடைகளைத்தான் கண்டுபிடிச்சிட்டு இருந்தேன். அடுத்த நாள் வார இறுதி விடுமுறைன்றதால காலைல 8மணிக்கு ஆரம்பிச்சு மதியம் 1 மணி வரை ஓவிய லூசு,அஜீத் அடானா,என்னால் முடியும் தம்பி, சக்த்வன்திரம் னு ரொம்ப குழம்பிட்டேன் :-)

ரொம்ப நல்ல அனுபவம்.நன்றி கொத்தனார் !!

அடுத்த புதிரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

said...

பாலராஜன் கீதாவுக்கு வாழ்த்துக்கள். இருக்கற நாலு முடில மூணு முடிய பிச்சுக்க வச்ச நம்ம கொத்ஸுக்கும் நன்றி :( .

/'என்னால் முடியும் தம்பி' சான்ஸே இல்லை. இப்படிக் கூட யோசிக்க முடியுமா என்ன... :-B
//
ரிப்பீட்டே.இதெல்லாம் நியாயாமா. இப்படியெல்லாம் யோச்சிச்சா எப்படிய்யா விடை சொல்றது?

இந்த மாதிரியெல்லாம் யோசிக்க விடாம சுலபமா விடை சொல்ற மாதிரி இன்னோரு புதிரை சீக்கிரம் போடுங்க !

said...

என்னோட மதிப்பெண்னை 19ல் இருந்து 18ஆ குறைச்சிட்டிங்களே கொத்ஸ் :(. 8வது கேள்வியை தவிர மீதி எல்லா பதிலும் சொல்லிட்டேனே.

said...

ஆஹா! கதிரவன், பதிவை போட்டுட்டு இங்க வந்து சுட்டியைக் கொடுக்கச் சொன்னா இங்க வந்து பதிவையே போட்டுட்டீங்களே!! பதிவுக் கயமைத்தனம் அப்படின்னா என்னான்னே தெரியாதா? :)))

நல்ல எஞ்சாய் பண்ணினீங்கன்னு சொல்லுங்க!! அடுத்த முறையா? போடலாம். கொஞ்சம் டயம் குடுங்க.

said...

நன்றி மணிகண்டன்

said...

சொல்ல மறந்திட்டேனே...4மணி நேரம் மட்டுமே தூங்கி, ஆர்வத்தோட அதிகாலை 4மணிக்கெல்லாம் எழுந்து புதிர் விளக்கமும் பின்னூட்டமும் போட்டு போட்டி நடத்துனதுக்கு ரொம்ப நன்றி !!

said...

என் அனுபவங்களை இங்கே பதிவாகவும் போட்டுவிட்டேன் :-)

said...

(36-1)/2 = இந்த கணக்கு தப்பாகுதே இந்த பதிவுக்கு..