நாங்க தசாவதாரம் பார்த்தாச்சு. வீட்டில் இருந்து ஒரு 5 நிமிஷம் தள்ளி இருக்கும் திரையரங்கில்தான் போட்டு இருக்காங்க. வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்க தாத்தா பாட்டி இருந்ததால் நானும் தங்கமணியும் முநாமுகா (அதாங்க முதல்நாள் முதல்காட்சி) பார்க்க போயிட்டோம். உள்ளூர் விலையைக் கொஞ்சம் ஏத்திட்டாங்க. அதுவும் இணையத்தில் வாங்கியதற்காக $2.50 வேற தனியா வாங்கிக்கிட்டாங்க. அலுவலகத்தில் இருந்து நேராப் படம் பார்க்கப் போன இந்த யானையின் பசிக்கு வாங்கின சோளப்பொரி எல்லாம் சாய்ஸில் விட்டுடலாம். ஆனாலும் வடை என்ற பெயரில் தந்த வஸ்துவிற்கும் சமோசாவிற்கும் விலை ரொம்பவே அதிகம் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.
நிறைகள்
எல்லாரும் எழுதிட்டாங்க. படம் நல்லா இருக்கு. ஒளிப்பதிவு உலகத்தரம். வரைகலை நல்லா இருக்கு. முக்கியமா முதலிலும் முடிவிலும். ஒவ்வொரு காட்சியிலும் கமல் மற்றும் மற்ற கலைஞர்களின் உழைப்பு தெரியுது. முக்கியமா மேக்கப்பில் எடுத்து இருக்கும் கவனம். அந்தப் பாட்டியின் கைகளில் என் பாட்டியின் கைகளில் இருப்பது போல சுருங்கிய தோலும் அதில் கரும்புள்ளிகளும் இருப்பதைப் பார்த்தீர்களா? இன்று நகைச்சுவை என்ற பெயரில் வழங்கப்படும் கடுப்பேற்றும் விஷயம் கிடையாது. இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. விரலைச் சுத்திக்கிட்டுச் சின்ன பசங்க எல்லாம் பேசும் பஞ்ச் வசனம் கிடையாது. குத்தாட்டம் கிடையாது. கனவில் ரீச்சர் வீட்டுக்குப் பின்னாடி போய் ஆடுவது எல்லாம் கிடையாது. வசனங்களில் இழைந்தோடும் நுட்பமான நகைச்சுவை.
எனக்குப் பிடிச்ச கமல் நம்ம பல்ராம் நாயுடுதான். மனுசன் பட்டையைக் கலக்கறாரு. எல்லாரும் இதைப் பத்தி எழுதறாங்க. அதனால இது போதும்.
குறைகள்
இது பத்தியும் நிறையா பேர் எழுதியாச்சு. ஆனா நான் நிறைகளை எழுதிட்டுக் குறைகளை எழுதலைனா என் நடுநிலமைவியாதி சரியாப் போச்சு அப்படின்னு மத்தவங்க நினைப்பாங்களே. அதுக்காக நானும் சொல்லறேன்.
மைக்கேல் மதன காமராஜனாகட்டும், அவ்வை ஷண்முகியாகட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் கமல் நடிக்க ஒரு காரணம் இருந்தது. அப்படி ஒரு காரணம் இல்லாது போனது ஒரு பெருங்குறையே. அதனால் எதற்காக இத்தனை பாத்திரங்களை இவர் செய்ய வேண்டும் என்பது புரியவே இல்லை.
அதிலும் அந்த வெள்ளைக்கார வில்லன் (கொஞ்சம் ஷேன் வார்ன் மாதிரி இல்ல?), புஷ், கலங்கரைவிளக்க முஸ்லீம், ஜப்பானில் கல்யாணராமன் எல்லாம் முகமூடி போட்டுக்கிட்டு அசிங்கமாவே இருக்காங்க. (பூவராகவனை இந்த லிஸ்டில் சேர்க்கலைப்பா!)
இப்படி இவரே இவ்வளவு வேஷம் கட்டினதுனாலதான் கேப்டன் மாதிரி துப்பாக்கியால கேன்சர் ஆப்பரேஷன் பண்ண வேண்டிய துரதிருஷ்டங்கள் எல்லாம். என்னவெல்லாமோ குறை எல்லாம் கண்டுபிடிச்சவங்க கண்ணில் இது படாம போச்சா இல்லை மத்த படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சா? வேற யாருமே எழுதலையே.
மொத்தத்தில் 10 கமலில் ஐந்து ஆறு பாத்திரங்களாவது அனாவசிய திணிப்பு. அதுவும் அந்த பூவராகவன் / அவதார் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே திணிப்புதான்.
நுண்ணரசியல்கள்
- AASCAR நிறுவனம் பற்றிய தலைப்பு வரும் பொழுது அதில் வரும் சிறுவனின் சட்டையில் Captain என்று எழுதி இருப்பது.
- அவனவன் பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் பதிவு எழுதி சிதம்பரம் சர்ச்சையில் தன் சார்பு நிலையை விளக்க முயல்கையில் "Chee Tam Brahm" எனச் சொல்லி தன் கருத்தைப் பதிவு செய்தது
- தன் தாலி வீசி முட்டிச் செத்த அதே சிங்கத்தலையில் இக்கால அசினை முட்டிக்கொள்ள வைத்து அதன் மூலம் பெண்களுக்கு முட்டிக் கொள்வதுதான் வழி என ஈயம் பித்தளை இளிக்க வைத்தது.
- இன்னும் இருந்தாலும் நிறுத்திக்கறேம்பா.
ஒரு கமல் இருந்தாலே திரையில் மத்தவங்களுக்கு இடம் இருக்காது. இங்க தசாவதாரம். அதுவும் போக நாகேஷ் முதற்கொண்டு பல ஜாம்பவான்கள். இத்தனை பேருக்கும் நடுவே தனக்கென இடம் பிடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு.
முடிவுரை
சமகால படங்களோடு சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது பல கட்டங்களில் தமிழ்த்திரைப்படங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறது இப்படம் என்பதில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குச் சந்தேகம் இல்லை என்கின்ற பொழுதில்... எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதறாங்களோ!! படம் நல்லாத்தான் இருக்கு. சில குறைகளை பெரிதாக எண்ணாமல், படத்தை சமுதாய அவலங்களுக்கு விடை தரும் சாதனமாக எல்லாம் எண்ணாமல் பொழுதுபோக்கா பாருங்க. நல்லாவே இருக்கு.
என்னளவில் கமல் இப்படி எல்லாம் ஒரு படம் பண்ணினால் அதனை அடுத்து ஒரு நகைச்சுவை படம் குடுப்பாரு. அதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.
பஞ்ச் அண்ணா
பதிவை எழுதிட்டுப் பஞ்ச் அண்ணா கிட்ட அனுப்பினேன். அவர் சொன்னது
இந்தப்படத்தில் நுண்ணரசியல் மொழியின் மௌனங்களை க் கட்டமைக்கும் காட்சிகள் மெல்லியல் பார்வையற்று இருந்தாலும் வல்லியல் பார்வையோடு அழகியலும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. "சவுஞ்சாலயமும் ஒரு ஆலயம்தானே என்னும் நாயகன், அறிவாலயத்தையும் சேர்த்தே சாடல் பார்வை வீசுகிறான் என்பது நுண்ணிய நோக்கர்களின் பார்வைக்குத் தப்பாது. இப்படிப்பட்ட காட்சிவன்முறைகளின் ஊடே, ஆதங்க்வாதி என்று தேவபாடை பேசுபவர்களின் தீவிரவாதத்தையும் தோலுரித்துக்காட்டத் தவறவில்லை. மோடி வகையறாக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? கடலில் பள்ளிகொண்ட கோவிந்தராஜப்பெருமாள் கரையொதுங்கக் கொண்டு வந்த சுனாமி சர்ப் எக்ஸல் கரை போல நல்லது எனக்காட்ட கிருமிகளையும் அதையொழிக்க சோடியம் குளோரைடையும் சேர்த்தே கொண்டு வருவதன் பின்னால் உள்ள நோய்க்குறிகளையும் புறந்தள்ளிவிடலாகாது.
டிஸ்கி (நீ போடாம விட்டதால) : இதையெல்லாம் எழுதின பிறகு படிச்சுப்பாத்தா எனக்கே பைத்தியக்காரத்தனமாத்தான் தெரியுது.. இருந்தாலும் இந்த நுண்ணரசியல் எல்லாம் நாம பீராயாட்டி வேற யாரு செய்வாங்க?