Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Tuesday, January 17, 2012

நாகாநீ நல்லா இரு!

இன்று நண்பர் @nchokkan அவர்களின் பிறந்த நாள். எங்கேயோ தொலைவில் இருந்து என்ன பரிசு தருவது?! வருடத்தின் 365 நாட்களுக்கும் தினம் ஒரு பா விளக்கம் தருபவருக்கு வெண்பாவை விட பொருத்தமான பரிசு உண்டா! .

நாக சொக்கநாதன் என்பதவர் முழுப்பெயர் என்பதலால் அவரை செல்லமாக நாகா என விளித்து ’நாகாநீ நல்லா இரு!’ என்ற ஈற்றடியில் ஒரு பத்து வெண்பா எழுதி அனுப்பிவிட்டேன்.

அருமை சொக்கரே, நீர் இன்னும் பல நூற்றாண்டிரும்!

சொக்கன் அதிகாரம்!

(அதி காரமாய் எழுத மாட்டார், அதிகாரமும் செய்ய மாட்டார். அதனால் சொக்கன் அதிகாரம் என்பது பொருத்தமான ஒன்றே இல்லை. ஆனால் வள்ளுவர் பத்து குறள் எழுதினை ஒரு அதிகாரம் எனப் போட்டதனால் நாமும் அப்படித்தானே செய்ய வேண்டியதாய் இருக்கிறது!)

ஆகாத வேலை அதிகம் இருக்குதப்பா

நாகாநீ நல்லா இரு! (1)

போடா வெயிட்டுடன் போகா மயிருமாய்

நாகாநீ நல்லா இரு! (2)

கூடாத நட்புடன் குத்தும் உறவுமின்றி

நாகாநீ நல்லா இரு! (3)

ஆகாது போகுமோ ஆயிரம் புக்குகள்

நாகாநீ நல்லா இரு! (4)

ஓடாய் உழைக்கிறாய் ஓய்வின்றி ஓடுகிறாய்

நாகாநீ நல்லா இரு! (5)

தேனாகப் பேசுவாய் தீந்தமிழ் எழுதுவாய்

நாகாநீ நல்லா இரு! (6)

ஆகா எனும்படி ஆயிரம் புக்கெழுத

நாகாநீ நல்லா இரு! (7)

சீதாவைப் போலச் சிரமத்தில் சிக்காதே

நாகாநீ நல்லா இரு (8)

சாகரமாம் உன்னறிவு சாகசங்கள் செய்வாயே

நாகாநீ நல்லா இரு! (9)

போகங்கள் மூன்றுமே போதாதே நீயெழுத

நாகாநீ நல்லா இரு! (10)

ஆகா / ஆயிரம் காம்பினேஷனில் ரெண்டு குறள் வந்துட்டுது. அதனலா ஒரு போனஸ் வெண்பாவும் போட்டுடறேன்.

மோதா வழியினை மோகிப்பாய் என்றுமே

நாகாநீ நல்லா இரு! (11)

இவற்றை ட்விட்டரில் போட்ட உடன் வெண்பா(ம்)களை அள்ளித் தெளித்தனர் நண்பர்கள் @writerpara @dynobuoy @erode14 @abc_02 @penathal ! இவர்கள் எழுதிய வெண்பாம்கள் இவை

@writerpara

அமர்க்களமாக பாம்போட்டு மகிழ்ந்திடுவோம்/கமர்ஷியல் பர்த்டே இது.

சாகா வரம்பெற்ற சரக்குபல தந்தவனே / நாகாநீ நல்லா இரு.

ராகாடாட்காமில் ராஜாவின் இசைபோல / நாகாநீ நல்லா இரு

வாகா யுனைவாழ்த்த வருடம் ஒருநாள் தந்தாய் / நாகாநீ நல்லா இரு

@dynobuoy

ஆகாவென உலகம் உனை வாழ்திட/ நாகாநீ நல்லா இரு!

சாகாவரம் பெரும் புத்தகங்கள் படைத்திட/ நாகாநீ நல்லா இரு

ஏகா உன் கைவிரல் சோம்பா/ நாகாநீ நல்லா இரு!

பாகா, எழுத்தாம் யானையைப் ஆளும்/ நாகாநீ நல்லா இரு!

சோகா சோம்பா வதன முடைய/ நாகாநீ நல்லா இரு

பாகாய் பதமாய் இனிக்கும் நண்பா/ நாகாநீ நல்லா இரு!

@erode14

வாகா எழுதுவாய் வாசிப்பிலும் கலக்குவாய் / நாகாநீ நல்லா இரு

ஏகாம்பரன் அருளால் ஏற்றங்கள் பெற்றிடுவாய் / நாகாநீ நல்லா இரு

ஆகாத ஒன்றூமே அணுகாதே என்றுமே / நாகாநீ நல்லா இரு

ராகாஸில் லயித்தே ராஜாவினிசை போலே / நாகாநீ நல்லா இரு

நோகாத உடலோடு நீங்காத வளமோடு / நாகாநீ நல்லா இரு

ஸாகாவை உண்டாக்க சாரங்கள் எழுப்பியே / நாகாநீ நல்லா இரு

ஈகாவைப் போலவே இன்பமாய் திரையாய் / நாகாநீ நல்லா இரு

பாகாய் இனித்து பதினாறும் பெற்றே / நாகாநீ நல்லா இரு

வேகாமல் போகாது வெந்திடுமே உன்பருப்பு / நாகாநீ நல்லா இரு

யோகாவில் சேர்ந்தாற்போல் ஓகோவென்றாகிடுவாய் / நாகாநீ நல்லா இரு

பாகாவென்றானைக்கு பரிவான காவலனாய் / நாகாநீ நல்லா இரு

நாகாஸ்திரம் கொண்டு நாற்திசையும் வென்றிடுவாய் / நாகாநீ நல்லா இரு

மோகாஸ்திரம் போட்டாற்போல் வாசகனை வசங்கொண்டே / நாகாநீ நல்லா இரு

மேகாலயாவிலே பொழிகின்ற மழை போல / நாகாநீ நல்லா இரு

.காமில் பாவெழுத நாட்காட்டி பார்க்காத /நாகாநீ நல்லா இரு

சோகாப்பு இன்றியே சுகவாசம் செய்தபடி / நாகாநீ நல்லா இரு

மாகாளி அருளாலே மகளோடும் புகழோடும் / நாகாநீ நல்லா இரு

மாகாளிக் கிழங்கெனவே மகிழ்ச்சியில் ஊறியே / நாகாநீ நல்லா இரு

நீகாமனாய் நின்று நிம்மதியாய்க் நிலங்கண்டே / நாகாநீ நல்லா இரு

ஆகாரக் குறைவின்றி வியாபாரம் நடக்கட்டும் / நாகாநீ நல்லா இரு

ப்ராகாரம் வலம்வந்த ப்ரார்த்தனைகள் பலிக்கட்டும் / நாகாநீ நல்லா இரு

@abc_02

வேகா வெயிலில் வெட்டியா நடக்காம/நாகாநீ நல்லா இரு.

வேகாத இப்பயலோட வெட்டியாப் பேசாம/நாகாநீ நல்லா இரு

@penathal

பாகாய் இனிக்கட்டும் பல்லாண்டு பல்லாண்டு - நாகாநீ நல்லா இரு

போகாத தூரம் பொடிநடையாய் ஆகட்டும் - நாகாநீ நல்லா இரு!

சோகங்கள் எல்லாமே சொல்லிக்காம போகட்டும் - நாகாநீ நல்லா இரு!

தாகம் தணித்திடும் தண்புனலாய் வாழ்ந்திரு - நாகாநீ நல்லா இரு!

வேகமாய் ஆயிரம்நூல் வேண்டியே வந்திடுமே - நாகாநீ நல்லா இரு!

மோகம் அறுக்க முயற்சிகள் செய்யாமல் - நாகாநீ நல்லா இரு!

வாகாக வாழ்க்கை வளைந்திட வாழ்த்துகிறேன் - நாகாநீ நல்லா இரு!

ராகம் இசைத்திட்டே ரத்தபூமி தன்னிலும் - நாகாநீ நல்லா இரு!

மேகம் பொழிந்திடும் மேன்மை அடைந்திடு - நாகாநீ நல்லா இரு!

பாகமாய் வாழ்ந்திடும் பத்தினி புத்திரியோடு - நாகாநீ நல்லா இரு!

Posted via email from elavasam's posterous

Tuesday, November 09, 2010

கமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு நாங்க பராகபுரியில் ரொம்ப பிசியா இருந்தோம். அன்னிக்கு லீவு எல்லாம் கிடையாது என்பதால் ஒழுங்கு மரியாதையாக ஆபீசுக்குப் போனோம். வேலையைப் பார்த்தோம். ஆனால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் என்று அடுத்த வந்த சனி ஞாயிறு ரெண்டு நாளா கொண்டாடித் தள்ளிட்டோமுல்ல. அதை விடுங்க. சொல்ல வந்த விஷயமே வேற.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘Koffee with Anu' என்ற நிகழ்ச்சியில் கமல் கலந்துக்கிட்டாராம். அப்போ கமலைப் பற்றிப் பேசிய முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்னாராம் “வெண்பா எழுதுவது ரொம்பக் கஷ்டம். அதனாலதான் கம்பன் கூட ராமாயணத்தை விருத்தத்தில் எழுதினார். ஆனா கமல் நினைச்சா வெண்பா எழுதுவாரு”ன்னு. என்ன அநியாயம் ஐயா. நீங்க கமல் வெண்பா எழுதுவாருன்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் கம்பனை வம்புக்கு இழுக்கணும். வெண்பா கஷ்டம்ன்னா விருத்தம் மட்டும் சுலபமா என்ன? போகட்டும்.

வெண்பாவை விட்டு ஏன் கம்பர் விருத்தம் எழுதினார் என்பதற்கு பெனாத்தல் ட்விட்டரில் ஒரு காரணம் சொல்லி இருந்தார். பொதுவாக வெண்பா - செப்பல் ஓசை, அதாவது மெசேஜ் டோன். மேட்டரை டப்புன்னு சொல்லிட தோதான டோன். தசரதனுக்கு ராமர் மகனாகப் பிறந்தார்ன்னு சொல்ற மாதிரி.

ஆனா விருத்தம் அகவல் ஓசை, அதாவது அழைக்கிற ஓசை, ரிங் டோன். விதவிதமா அலங்காரம் பண்ணி, வாடா மாப்ளே, ராமர் கதை கேட்டுக்கன்னு சொல்லற மாதிரி. இதுதான் சரியான காரணம் மாதிரி இருக்கு.

கமலுக்கு வெண்பா எழுதச் சொல்லிக் குடுத்த ஈற்றடி “கல்லுஞ்சொல் லாதோ கதை”. எங்க வெண்பா வாத்தி ஜீவ்ஸ் மட்டும் இதைக் கேட்டா அவரு முதுகுலயே ஒரு சாத்து சாத்தி ஏன்யா அனாவசியா மகிழ்ச்சியா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிற வார்த்தைங்க நடுவில் விவாகரத்து வாங்கித் தர. குடும்பத்தைக் கலைக்காம ஈற்றடி தர முடியாதான்னு கேட்டு இருப்பாரு. நல்லவேளை அவரு பார்க்கலை.

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலை. ஆனால் ட்விட்டரில் பெனாத்தல் இது பத்திப் போட்டு இருந்தார். பார்த்தவுடன் சரி நாம இதுக்கு ஒரு வெண்பா எழுதலாமேன்னு முயற்சி செஞ்சேன்.

சொல்லையே கேட்டதால் சும்மாக் கிடந்தவொரு
தொல்லையும் தீர்ந்துதன் தோற்றமும் பெற்றதை
வில்லொடு வந்தவொரு வீரனின் கால்பட்ட
கல்லுஞ்சொல் லாதோ கதை
அப்போ வீட்டில் இருந்த நண்பர் படித்துவிட்டு “டேய் நீ எழுதும் கவிதை(!!) எனக்குப் புரியுதேடா. அது என்ன சொல்லையும் கேட்டு அதை மட்டும் சொல்லு” அப்படின்னார். என் வெண்பாவுக்கே நோட்ஸ் தேவைப்படுதா? அப்ப கமல் வெண்பாக்கு நோட்ஸ் போட்டா சாதா கோனார், ராஜக்கோனார் ஆயிருவார் போலன்னு நொந்து போய் கௌதம மகரிஷியின் சாபத்தினால் கல்லாய் கிடந்த தொல்லையானது தீர்ந்து எப்படி அகலிகை தன் தோற்றம் திரும்பக் கிடைக்கப் பெற்றாள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்றேன்.

பெனாத்தலும் அவர் பங்குக்கு சமகால அரசியலைப் பற்றிப் பா ஒன்றைப் போட்டார். அரசியலே உன் பெயர்தான் பெனாத்தலோ! :)

ஆள்வோர் கொடுத்த அரசியல் தானங்கள்
நாள்போய் அறிகின்ற சூத்திரம் - ஆள்படை
அல்லும்பகலும் கீறி அயராது வெட்டியதால்
கல்லுஞ் சொல்லாதோ கதை
அடுத்து நம்ம வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர் வெண்பா என்றவுடன் விட முடியாமல் ஒரு குறட்பாவை கொடுத்தார். இரண்டு அடிகளில் எப்படி பெரிய விஷயங்களைக் கூட அருமையாக சொல்ல முடிகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இது.

வெல்லுஞ் செயலுடை வேந்தர்கள் மூப்பதைக்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வாஞ்சிநாதன் அவர்களும் தனி மடலில் இரண்டு வெண்பாக்களை அனுப்பி வைத்தார்.
அலைகடல் மோதும் அழகுமல்லை மேவுஞ்
சிலையின் நளினஞ் செதுக்கிய நேர்த்தியென்ன
தில்லானா ஆடும் திரைப்படத்தின் மேலாகக்
கல்லுஞ்சொல் லாதோ கதை

சிந்தையில் தேற்றமுடன் செந்தமிழ்நாட் டங்கொண்டோர்
நொந்திடார் யாப்பை நுகத்தடியாய் --- செந்தழலின்
மெல்லிய மேனிசெய சிற்பி முயன்றிடின்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இப்படி எல்லாம் வெண்பாக்கள் கிடைத்த உடனே இந்தப் பதிவைப் போட நினைத்தேன். ஆனால் கமல் இந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள் கிடைக்கவே இல்லை. அவை இல்லாது எப்படிப் போட என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஜெயஸ்ரீ அக்கா அது பற்றிய பதிவு போட்டு இருக்கிறார்கள்.

அதிலும் வெண்பாக்கள் முழுமையாக இல்லை என்றாலும் அது எப்படி இருக்கும் என்று ஒரு அளவிற்குத் தெரிகிறது. அவரின் பதிவில் இருந்தே

*மக…. கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். தனிச்சொல் 'இகமிதிலே' பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

["ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்.." என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

இதற்கு மேல் நான் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. வெண்பாவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த ஈற்றடிக்கு மேலும் சில வெண்பாக்களை எழுதலாமே!

வெண்பா எழுத ஆசை இருக்கிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லையே என்று சொல்லுபவர்கள் உடனடியாக இங்கு செல்லவும்! :)

Monday, October 25, 2010

ஈஸியா எழுதலாம் வெண்பா!

எப்பொழுது வெண்பா மீது என் கவனம் திரும்பியது என்று எனக்கு ஞாபகமே இல்லை. சத்தியமாக பள்ளிப் பருவத்தில் இல்லை. இணையத்தில் நுழைந்து மேயத் தொடங்கிய பொழுது ஆறாம்திணை என்ற தளத்தில் வாஞ்சிநாதன் போட்டு வந்த தமிழ்க் குறுக்கெழுத்து புதிர்களைக் கண்டேன். ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் இருந்ததால் இந்த தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்களிலும் ஆர்வம் வந்தது. அந்தத் தளத்தில் வெண்பாப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. படிக்கும் பொழுது ஒரு சூத்திரத்திற்குட்பட்டு வார்த்தைகளை போடும் விதம் ஒரு வகையில் ஒரு வார்த்தைப் புதிர் போலத்தான் இருந்தது.

பின் 2006-ல் வலைப்பூ ஆரம்பித்து நானும் தமிழ்ப் புதிர்கள் போடத் தொடங்கிய பொழுது நண்பர் ஜீவ்ஸுடன் சேர்ந்து வெண்பா சமைப்பதும் (ஆமாம், அப்படித்தான் சொல்ல வேண்டுமாம்) தொடங்கியது. உபிச பெனாத்தலும் நானும் பல இடங்களிலும் இந்த வெண்பா ஆட்டம் போட்டோம். அப்பொழுது பலரும் வெண்பா விதிகளைப் புரியும் படிச் சொல்லித் தந்தால் நாங்களும் ஆட்டத்திற்கு வருவோமே என்று பலரும் சொல்ல வெண்பா தளத்தில், என் வலைப்பதிவில், நாங்கள் நடத்தி வந்த விக்கி பசங்க வலைப்பதிவில் என பல இடங்களிலும் இது பற்றி எழுதினோம்.


தொடர்ந்து ட்விட்டரில் சேர்ந்த பின் வெண்பாவுடன் வெண்பாம்களும் போடத் தொடங்கினோம். இந்த வெண்பாம் விளையாட்டுக்குக் காரணகர்த்தா பாராதான். இங்கும் பலரும் வெண்பா விதிகள் பற்றிக் கேட்கத் தொடங்கினர். அதே சமயம் வழக்கம் போல நேர் நேர் தேமா என்று வெறும் விதிகளாகச் சொன்னால் எங்களுக்குப் புரியப் போவது இல்லை. எளிமையாக, எங்களால் புரிந்து கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுகளுடன் தர வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு என்பது நன்றாகவே புரிந்தது.


இன்று எனக்கு ஒருவர் சொல்லித் தந்தால் எப்படிச் சொல்லித் தரவேண்டும் என நான் எதிர்பார்ப்பேனோ, அதைப் போல வெண்பா விதிகளை சொல்லிப் பார்க்கலாம் என்று முயன்றேன். எழுதியதை பாராவிடம் காண்பிக்க அவர் நன்றாக வந்திருக்கிறது. இதனை புத்தகமாகவே போட்டுவிடலாம் என்றார். மெருகேற்றிய வடிவம் இப்பொழுது வெளியிடப்பட்டு விட்ட்து.




வெண்பா என்றால் என்ன, அதை எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான ஒரு அறிமுகப் புத்தகம் இது. இதைப் படித்து ஒரு அளவு புரிதல் வந்த பின் மேலும் அறிந்து கொள்பவர்கள் வழமையான புத்தகங்களைத் தேடிச் செல்லலாம். முழுக்க முழுக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே விதிமுறை விளக்கங்களையும், வெண்பா எடுத்துக்காட்டுகளையும் எழுதியுள்ளேன். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சினிமாவையும் தாராளமாக சேர்த்து இருக்கிறேன். படித்து, உங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்.


இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640) இணையத்தில் வாங்குவதற்கு இங்கு க்ளிக்கவும் அல்லது படத்தின் மேல் க்ளிக்கவும்.


பிகு: இதே போன்று தமிழ் இலக்கணம் பற்றி தமிழ் பேப்பரில் நான் எழுதும் தொடரையும் படித்துப் பாருங்கள்.

Tuesday, September 09, 2008

தோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)

நான் சமீப காலமாக படிக்கத் தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன். (நன்றி - ஸ்ரீதர் வெங்கட்). சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவரும் க்ரேஸி மோகனும் பல விதங்களில் விளையாடும் வெண்பா விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இப்படி விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பா இயற்றி இருக்கிறாராம். இது பற்றி அவர் எழுதி இருப்பது. 
 
தினசரி எஸ்.எம்.எஸ்ஸில், தொலைபேசியில் வெண்பாவும், கேள்வி பதிலும், நகைச்சுவையும், ரசித்த இலக்கியமும், புதுக் கவிதையுமாக க்ரேஸி கலகலக்க வைக்காத நாள் இல்லை. அவருக்கு பதில் எழுதவே கிட்டத்தட்ட நூறு வெண்பா நானும் இயற்றி விட்டேன். 

'என்ன, வெண்பா அம்பு விட்டுக்கறீங்களா தினமும் மோகனும் நீங்களும்?' கண்ணில் ஒரு மெல்லிய சிரிப்போடு விசாரிப்பார் கமல் எனக்கு முன்னால் என் வெண்பா க்ரேஸி உபயத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.
 
இது குறித்து நண்பர் சொக்கன் ட்விட்டரில் சொல்லி ரொம்ப சிலாகித்துப் பேச 
 
அன்பன் முருகனும் ஆசைமிகு மோகனும்
வெண்பாவில் விட்டாரே அம்பு
 
அப்படின்னு அவர் சொன்னதையே ஒரு குறள் வெண்பாவா மாத்தி அவருக்கு அனுப்பினேன். நல்லா இருக்கு அப்படின்னு சொன்னவரு உடனே ஒரு ஈற்றடியைக் குடுத்து இதுக்கு எழுது பார்ப்போம் அப்படின்னு உசுப்பேத்தி விட்டாரு. அப்படி அவர் குடுத்த ஈற்றடி -  தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
மண்ணிலே கஷ்டம் மறந்திட நீயுமே 
எண்ணியிங்கு ஏதேனும் செய்திட வேண்டித்தான் 
விண்ணில் பறந்திடும் விந்தை உணர்வுக்குத் 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
சொக்கனும் சொன்னாரே சோக்காய் ஒருவேலை 
மக்களை மாட்டிவிட்டு மெண்டலாய் ஆக்கிட 
எண்ணித்தான் தந்தார் எசப்பாட்டாய் ஈற்றடியே - 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
எண்ணியே சொன்னார் எசப்பாட்டாய் அண்ணனுமே 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
அப்படின்னு நானும் நாலு (சரி மூணு) வெண்பாக்களை எழுதி ட்விட்டரில் போட்டேன்.  அப்போ ரொம்ப நாள் ஆச்சே வெண்பாப் பதிவு போட்டு அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. ஆனா என்னடா ஈற்றடி குடுக்க அப்படின்னு யோசிக்கும் பொழுதுதான் மீண்டும் இரா முருகனே கை குடுத்தார். அவரோட வலைத்தளத்தில் அழகா ஒரு ஆஞ்சநேயர் படம் ஒண்ணு போட்டு அதுக்குப் பக்கத்தில் அப்படத்திற்கு ஏற்ற மாதிரி க்ரேஸி மோகன் எழுதின ஒரு வெண்பாவையும் போட்டு இருந்தாரு. அது


ரொம்ப அருமையா வந்திருக்கு இல்லையா இந்த வெண்பா. ஆனா அவரு அவரோட தகுதிக்கு ஏத்த மாதிரி மனமென்ற ஆழியைத் தாண்ட உதவி கேட்கறாரு. நான் இன்னிக்கு நமக்கு இருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி அந்த ஆஞ்சநேயரின் உதவியைக் கேட்கலாமேன்னு 
 
மாசு மதச்சண்டை மாறா பிடுங்கல்கள்
லேசும்தான் ஆகுதப்பா சட்டைப்பை காசின்றி 
வாழ வழியில்லை ஆகவே வந்திங்கு
தோழா கொடுத்திடு தோள்.
 
அப்படின்னு ஒரு வெண்பாவை எழுதிப் போட்டேன். நீங்க இங்க இருக்கும் இரண்டு ஈற்றடிகளில் எதுக்கு வேணும்னாலும் எழுதலாம். எழுதிப் பாருங்களேன். வெண்பா எழுத கத்துக்க ஆசைப்படறவங்க இங்கேயும் இங்கேயும்  போய் எப்படி எழுதறதுன்னு பார்த்துக்கலாம். 
 

Friday, June 01, 2007

சிறுவர் சிரிப்பே சிறப்பு! - (வெ.வ.வா)

உண்மையில் இந்த வெண்பா பதிவு மே 31ஆம் தேதியே வந்திருக்கணும். அன்றுதான் உலக புகையிலை மறுப்பு தினம். இது பற்றி நம்ம சாத்தாங்குளத்தாரும், நாமக்கல்லாரும் போட்டு இருக்கும் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் கூட அதை முன் வைத்து ஒரு வெண்பா பதிவு போடலாமே என நினைத்தேன். ஆனால் சில பல காரணங்களினால் அது போட முடியாமல் போனது. அதற்கு பதிலாக எப்பொழுது போடலாம் என யோசித்த பொழுது குழந்தைகள் தினமான இன்றே போடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.

இன்று ஜூன் 1, இன்றைக்குப் போய் குழந்தைகள் தினமென சொல்கிறானே இந்த கிறுக்கன் அது நவம்பர் 14ஆம் தேதி நேரு பிறந்தநாள் அன்றல்லவா வரும் என என்னை விநோதமாகப் பார்த்தீர்களானால் நீங்கள் மேற்கொண்டு கட்டாயம் படிக்க வேண்டும். ஏனென்றால் வேறு சில நாட்களைப் போல் இல்லாமல் குழந்தைகள் தினம் உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. ஐநாவால் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் சர்வதேச குழந்தைகள் தினம், உலகின் பல்வேறு நாடுகளில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.

அதில் குறிப்பிடம் படியாக சைனா, செக் குடியரசு, வட கொரியா, ரஷ்யா, ஆர்மேனியா, அசர்பெய்ஜான், கசக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், லட்வியா, லித்துவேனியா என பல மாஜி சோவியத் நாடுகள் உட்பட பெரும்பாலான கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜூன் ஒன்றாம் தேதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இன்றும் ஜெர்மெனியின் சில இடங்களில் கம்யூனிச ஆட்சிக்காலத்தின் மிச்சங்களில் ஒன்றாக ஜூன் 1 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. போர்சுகலும் அதன் காலனியாக இருந்த நாடுகளிலும் கூட இன்றுதான் குழந்தைகள் தினம். கம்யூனிச நாடுகள் மட்டும்தான் என இல்லாமல் அதற்கு நேரெதிராக விளங்கும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆகவே இன்றும் குழந்தைகள் தினம்தான் நண்பர்களே!



குழந்தைகள் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவர்களின் குமிழ் சிரிப்புதான். அது மட்டுமில்லை குழந்தைகள் கடவுளை ஒத்தவர்கள் எனவும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். குழந்தைக் கடவுள்கள் எனப் பார்த்தால் உடனடியாக நமக்கு ஞாபகத்திற்கு வருவது கண்ணனும் முருகனும்தான். அவர்களையும் ஆட்டத்திற்கு இழுத்து "சிறுவர் சிரிப்பே சிறப்பு! " என்ற ஈற்றடியைக் கொண்டு வெண்பா வடிக்கலாம் வா தொடரின் அடுத்த பகுதியாய் இந்த பதிவைப் போட்டு இருக்கிறேன்.

நட்சத்திர வாரமாய் இருப்பதால் இந்த ஒரு முறை மட்டும் வெண்பா இல்லாமல் புதுக் கவிதையாய் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் ஈற்றடி கொடுத்த அடியாகவே இருத்தல் அவசியம். முதலில் நான் வெண்பாவாகவே எழுத முயல்கிறேன்.


திருமால் மருகன் தினந்தோள் முருகன்
குருவாய் அமர்ந்த குமரன் அருளால்

கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த

சிறுவர் சிரிப்பே சிறப்பு!


பட உதவி: ஆனந்த்