Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, October 25, 2010

ஈஸியா எழுதலாம் வெண்பா!

எப்பொழுது வெண்பா மீது என் கவனம் திரும்பியது என்று எனக்கு ஞாபகமே இல்லை. சத்தியமாக பள்ளிப் பருவத்தில் இல்லை. இணையத்தில் நுழைந்து மேயத் தொடங்கிய பொழுது ஆறாம்திணை என்ற தளத்தில் வாஞ்சிநாதன் போட்டு வந்த தமிழ்க் குறுக்கெழுத்து புதிர்களைக் கண்டேன். ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் இருந்ததால் இந்த தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்களிலும் ஆர்வம் வந்தது. அந்தத் தளத்தில் வெண்பாப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. படிக்கும் பொழுது ஒரு சூத்திரத்திற்குட்பட்டு வார்த்தைகளை போடும் விதம் ஒரு வகையில் ஒரு வார்த்தைப் புதிர் போலத்தான் இருந்தது.

பின் 2006-ல் வலைப்பூ ஆரம்பித்து நானும் தமிழ்ப் புதிர்கள் போடத் தொடங்கிய பொழுது நண்பர் ஜீவ்ஸுடன் சேர்ந்து வெண்பா சமைப்பதும் (ஆமாம், அப்படித்தான் சொல்ல வேண்டுமாம்) தொடங்கியது. உபிச பெனாத்தலும் நானும் பல இடங்களிலும் இந்த வெண்பா ஆட்டம் போட்டோம். அப்பொழுது பலரும் வெண்பா விதிகளைப் புரியும் படிச் சொல்லித் தந்தால் நாங்களும் ஆட்டத்திற்கு வருவோமே என்று பலரும் சொல்ல வெண்பா தளத்தில், என் வலைப்பதிவில், நாங்கள் நடத்தி வந்த விக்கி பசங்க வலைப்பதிவில் என பல இடங்களிலும் இது பற்றி எழுதினோம்.


தொடர்ந்து ட்விட்டரில் சேர்ந்த பின் வெண்பாவுடன் வெண்பாம்களும் போடத் தொடங்கினோம். இந்த வெண்பாம் விளையாட்டுக்குக் காரணகர்த்தா பாராதான். இங்கும் பலரும் வெண்பா விதிகள் பற்றிக் கேட்கத் தொடங்கினர். அதே சமயம் வழக்கம் போல நேர் நேர் தேமா என்று வெறும் விதிகளாகச் சொன்னால் எங்களுக்குப் புரியப் போவது இல்லை. எளிமையாக, எங்களால் புரிந்து கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுகளுடன் தர வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு என்பது நன்றாகவே புரிந்தது.


இன்று எனக்கு ஒருவர் சொல்லித் தந்தால் எப்படிச் சொல்லித் தரவேண்டும் என நான் எதிர்பார்ப்பேனோ, அதைப் போல வெண்பா விதிகளை சொல்லிப் பார்க்கலாம் என்று முயன்றேன். எழுதியதை பாராவிடம் காண்பிக்க அவர் நன்றாக வந்திருக்கிறது. இதனை புத்தகமாகவே போட்டுவிடலாம் என்றார். மெருகேற்றிய வடிவம் இப்பொழுது வெளியிடப்பட்டு விட்ட்து.




வெண்பா என்றால் என்ன, அதை எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான ஒரு அறிமுகப் புத்தகம் இது. இதைப் படித்து ஒரு அளவு புரிதல் வந்த பின் மேலும் அறிந்து கொள்பவர்கள் வழமையான புத்தகங்களைத் தேடிச் செல்லலாம். முழுக்க முழுக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே விதிமுறை விளக்கங்களையும், வெண்பா எடுத்துக்காட்டுகளையும் எழுதியுள்ளேன். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சினிமாவையும் தாராளமாக சேர்த்து இருக்கிறேன். படித்து, உங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்.


இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640) இணையத்தில் வாங்குவதற்கு இங்கு க்ளிக்கவும் அல்லது படத்தின் மேல் க்ளிக்கவும்.


பிகு: இதே போன்று தமிழ் இலக்கணம் பற்றி தமிழ் பேப்பரில் நான் எழுதும் தொடரையும் படித்துப் பாருங்கள்.