Showing posts with label எட்டு. Show all posts
Showing posts with label எட்டு. Show all posts

Tuesday, June 19, 2007

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ...

வெங்கட் ஐயா எழுதி இருக்காக, மாப்பிள்ளை இகாரஸ் எழுதி இருக்காக மற்றும் நம் வலைப்பதிவர் எல்லாம் எழுத இருக்காக வாம்மா மின்னல் அப்படின்னு நம்ம பாபா கூப்பிட்டுட்டாரு. அவர் பேச்சை மீற முடியுமா. நாலு, ஐந்து, ஆறு எல்லாம் முடிஞ்சு இப்போ எட்டு விளையாட்டு ஒரு எட்டு எடுத்து வெச்சு இருக்கு. நம்மளைப் பத்தி நாமே எட்டு விஷயம் சொல்லணுமாம். என்னத்த சொல்ல. பாபா மாதிரி இருந்தா ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரீ அப்படின்னு 16 விஷயம் சொல்லலாம். (அவரை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க அப்படின்னு சொன்னவங்க எல்லாம் இப்போ காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.) நமக்கு எட்டு விஷயமே தேடணும். ஹூம்.

1. சின்ன வயதில் ஹிந்தி ட்யூஷன் கிளாஸ் போகும் போது நம்ம படிப்பைக் கோட்டை விட்டுட்டு அவங்க பெரிய பசங்களுக்குச் சொல்லித் தரும் அக்கவுண்டன்ஸி பாடத்தைக் கற்றுக் கொண்டு, இது ஈஸியா இருக்கே என நினைத்து, அதைத்தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டு, அதன் படியே அவ்வழி சென்று சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது. அதற்குத் துளி கூட சம்பந்தமில்லாமல் ஆணி புடுங்குவது காலத்தின் கட்டாயம்.

2. சாதாரணமாக நாம் பயணம் செய்திருக்கும் பல வித வண்டிகளுடன் அறுவர் மட்டும் செல்லக் கூடிய சிறு விமானம் உட்பட பல விமானங்கள், ஹெலிகாப்டர், பாராசெய்லிங் பாராசூட், நீர்மூழ்கிக் கப்பல் என நிலத்தில், வானத்தில், தண்ணீரின் மேல், தண்ணீரின் கீழ் என பல விதமாக பயணம் செய்தாகிவிட்டது. அடுத்த மாதம் கே.ஆர்.எஸ். நம்மளை பலூனில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கிறார். கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாது போனது ஒரு வருத்தம்தான்.

3. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பட இடங்களுக்குச் சென்று இன்று மக்கள் வாழும் கண்டங்களில் அவுஸ்திரேலியா மட்டும்தான் செல்லவில்லை. டீச்சர், டிக்கெட் வாங்கி அனுப்பியவுடன் அங்கும் சென்று கண்டம் வென்றோன் என்ற பட்டம் போட்டுக்க வேண்டியதுதான்.

4. நானும் என் நண்பனும் இன்றும் பேசிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. இதையும் போட்டுக்க வேண்டியதுதான். ரொம்ம்ம்ப வருஷம் முன்னாடி நாங்க ரெண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தோம். அவன் பவுல் பண்ணும் ஓவர்களில் ஐந்து பால்கள் தடவு தடவு எனத் தடவிவிட்டு ஆறாவது பால் மட்டும் எப்படியோ அடித்து நான்கு ரன்கள் எடுத்துக்கிட்டு இருந்தேன். இப்படி பல ஓவர்கள் அவுட் ஆகாம இருந்து அவனைக் கடுப்படிச்சதையும், ஆறாவது பந்து மட்டும் ஓவர் பிட்ச்சாகப் போட்ட அவன் திறமையையும் பத்தி இப்போ கூட பேசுவோம். :))

5. தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். உண்மையில் நுண்கலை என்பது என்ன எனத் தெரிந்து கொண்டேன். ஓரளவு ஆர்வமும், சரியாக திசை காட்ட ஒருவரும் அமைந்தால், கர்நாடக சங்கீதத்தைப் புரிந்து கொள்ள, அதன் இனிமையை உணர இதைவிட சிறந்த வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இதில் இருக்கும் அற்புதங்களைக் கேட்கும் பொழுது இவ்வளவு நாட்கள் இதனைக் கற்றுக் கொள்ளாமல் போய் விட்டோமே என்ற வருத்தமும், இப்பொழுதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் மேலிடுகிறது. எச்சரிக்கை : விரைவில் பாடல் பதிவு வரலாம்!!

6. எனக்கு பிடித்தமான சப்ஜெக்ட் பற்றி மட்டும் தான் படிப்பது என்றில்லாமல், வகை தொகை இல்லாமல் கண்டதையும் படித்து வைப்பது என் பழக்கம். இதனால் பல நேரங்களில் ஒரு புதிய கூட்டத்தில் இருக்கும் பொழுது அவர்கள் பேசும் விஷயத்தில் பங்கெடுத்துக் கொள்வது எளிதாகிறது. தனிமைப்படாமல் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதும் முடிகிறது. அதுக்காக ஹிந்தியில் எல்லாம் பேசப்பிடாது. அங்க எல்லாம் நிக்காம அப்படியே ஜூட் விட்டுடுவோமில்ல!

7. எங்கு தண்ணீரைக் கண்டாலும் குதித்துக் குளிக்கப் பிடிக்கும். ஆறு, குளம், அருவி என தண்ணீரில் ஆட்டம் போடுவது சிறுவயதில் இருந்து இன்று வரை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பழக்கம். நயாகராவில் Cave of the winds என்னும் இடத்தில் சொட்டச் சொட்ட நனைந்ததும், முஸோரியில் ஒரு அருவி அருகில் வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் குளிர்காலம் என்பதையும் மீறி போட்டிருக்கும் ஸ்வெட்டரைக் கூட கழட்டத் தோன்றாமல் தண்ணீரில் குதித்து ஆடியதும் மறக்க முடியாத ஆட்டங்கள்.

8. இப்படி எட்டு விஷயங்கள் எழுதறதே ஒரு பெரிய விஷயம்தான் அப்படின்னு சொல்லிட்டு ஆட்டத்தைக் க்ளோஸ் பண்ண மனசு வரலை. ஆனா இப்படி நாமும் எதையாவது எழுதுவோம் அதைப் படிக்கவும் ஆட்கள் இருக்காங்க என்பது நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு விஷயம்தாங்க. அதனால வலைப்பதிதல் என்ற இந்த மேட்டரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கிறேன்.

நான் அழைக்கும் எட்டு பேர்
  1. தம்பி தேவ்
  2. வி.எஸ்.கே
  3. கண்மணி
  4. ஜிரா
  5. உஷாக்கா
  6. டுபுக்கு
  7. கீதாம்மா
  8. செல்வன்
(நம்மளைப் பத்தின எட்டு குறிப்புகளைக்கூட எழுதிடலாம் எட்டு பேரை கூப்பிட ரொம்பவே கஷ்டமா இருக்கு சாமி!)


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழைத்தவர் பதிவில் சென்று அழைப்புக்கு நன்றி, பதிவு போடுகிறேன் என ஒரு பின்னூட்டம், போட்டாச்சு என ஒரு பின்னூட்டம் என குறைந்த பட்சம் இரண்டு பின்னூட்டங்களாவது போட வேண்டும் என்று ஒரு புதிய விதியையும் சேர்த்துக்கலாமா! ;-)