Thursday, November 29, 2012

அச்சுதம் கேசவம் க்ருஷ்ண தாமோதரம்....

இந்த வாரம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பது ஒரு ஹிந்தி பஜன். என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், வேண்டாம், கொஞ்சம் அறிந்தவர்கள் கூட, நீயா ஹிந்தியா? பஜனையா? ஆன்மிகமா? என்று வியந்து கேட்கும் வாய்ப்புகள் அதிகம். எனக்கும் கூட அதே ஆச்சரியம்தான். 

ஆனால் சென்ற வாரம் தங்கமணி கேட்டுக் கொண்டிருந்த இந்த ஹிந்தி பஜன், காதில் விழுந்ததில் இருந்து, ராகமா அல்லது எளிமையான பாடல்வரிகளா அல்லது அதில் சொல்லப்பட்ட கருத்தா எது காரணம் என்று விளங்காமலேயே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. நண்பர்களிடம் இது பற்றிப் பேசும் பொழுது இது பரவலாக அறியப்பட்ட பஜன் என்று அறிந்தேன். 

நீங்களும் அந்த பஜன் கேட்க  பிடியுங்க இந்த யூட்யூப் சுட்டி

 

 

முதல் முறை கேட்டதில் இருந்தே தமிழில் இதனை மொழிமாற்றம் செய்தால் என்ன என்று தோன்றியது. இதே மெட்டுக்கு பொருந்தும்படியும் இல்லாமல், நேரடி மொழிபெயர்ப்பு என்றும் சொல்ல முடியாமல் இந்த கருத்துகளை எடுத்துக் கொண்டு தமிழில் நானும் எழுதிப் பார்த்தேன். 

 

கண்ணனைக் காணோமெனக் கண்டனமேன் - மீராவாய்

எண்ணத்தில் கொள்ளவனை எப்பொழுதும் 

 

மன்னவன் உண்பதை மறப்பானோ - சபரியாய்

பண்ணும் அனைத்தையும்நீ படைத்திடவே

 

மஞ்சத்தில் கண்துயில மறுப்பேது - யசோதை

கொஞ்சமாய் உன்வடிவில் கெஞ்சிடவே

 

உன்னோடு அவன்வந்து உறவாட - கோபியர்

பெண்போல நீயாகப் பேரின்பமே!

 

கிட்டத்தட்ட கீதையின் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ரேஞ்சுக்கு அழகாக சொல்லப்பட்ட கவிதை இந்த பஜனை என்றே எனக்குத் தோன்றுகிறது. 

மொழிமாற்றம் பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவல். 

 

Posted via email from elavasam's posterous