Monday, December 23, 2013

புக் வித்த காசு....

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் நண்பர்கள் சிலர் தங்களின் புத்தகங்களை வாங்கிச் சேர்க்கும் அனுபவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சொக்கன் தான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் தன்னிடமே இருக்கிறது, அவற்றை அன்பளிப்பாகவோ விற்பனை மூலமோ தருவது கிடையாது. புத்தகங்கள் விஷயத்தில் தான் ரொம்பப் பொசசிவ் என்றார். சிலர் குறிப்பிட்ட புத்தகங்களைத் தவிர மற்றவற்றைத் தருவதில் பிரச்னை இல்லை என்றார்கள். இரவல் தந்து காணாமல் போனப் புத்தகங்கள் பற்றிய சோக கீதங்களும் இசைக்கப் பெற்றன. 

எங்கள் வீட்டிலும் இப்படிப் புத்தகங்கள் குமிந்து கிடக்கும். இவற்றில் பலவற்றை இனி சீந்தப் போவதுமில்லை என்பது தெரியும். சும்மாக் கொடுத்தால் அது அரசாங்கம் தரும் (http://chennai.olx.in/q/sale-government-laptop/c-835) மடிக்கணினி மாதிரி மதிப்பில்லாது போய்விடும் என்பது தெரியும். என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத ஒரே காரணத்தினால் வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். என் வீட்டை விட என் அண்ணன் வீட்டில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 

குடும்பத்தில் அனைவரும் புத்தகக்காதலர்கள் என்பதால் அண்ணன் வீடு எங்கு காணினும் புத்தகங்களடா என்பது போலத்தான் இருக்கும். எல்லா அறைகளிலும், கட்டில்களின் கீழ், மாடிப்படிகளின் கீழ் என புத்தகங்கள் இல்லாத இடங்களே கிடையாது. அங்கு போகும் பொழுது, எதையாவது தேடப் போய் எதிர்பார்க்காத பொக்கிஷங்கள் கையில் மாட்டும் அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஒரு சமயத்தில் இவற்றைக் கட்டி மேய்ப்பது முடியாத காரியம், எதேனும் செய்தாக வேண்டும் என்ற நிலை வந்த பொழுது அண்ணன் எடுத்த முடிவு அலாதியானது. 

அவர் பழைய புத்தகங்கள் கிடைக்கும் இடங்களில் போய் மேலும் புத்தகங்கள் வாங்கினார். ஆமாம், இருக்கும் புத்தகங்களை என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத நிலையில் மேலும் புத்தகங்கள் வாங்கினார். ஆனால் சேகரித்து வைக்க அல்ல. விற்க.  புனைவு, மேலாண்மை, சமயம், வரலாறு, பொருளாதாரம், விஞ்ஞானம், கணினிவியல் என எல்லா விதமான தலைப்புகளிலும் புத்தகங்கள் விற்பனைக்குத் தயராக இருந்தன. 

சாதாரண புத்தக விற்பனையாக இருக்க வேண்டாம். இதில் தனக்கேதும் லாபம் வேண்டாம். வரும் தொகையை நன்கொடையாகத் தந்துவிடலாம் என்பது முதல் முடிவு. 

எங்கே சென்று இதைச் செய்வது? வீட்டில் இருந்தே செய்ய முடியுமா? என யோசிக்கும் பொழுது, தான் வேலை பார்த்த நிறுவனத்தில் இதைச் செய்தால் என்ன என எண்ணி அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். அங்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் இருந்த நண்பர் ஒருவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். இதற்கான நாளும் குறிக்கப் பெற்றது. சம்பளம் கைக்கு வந்த வாரத்தில் இந்நிகழ்ச்சி அமையப் பெற்றது யதேச்சையான விஷயம் என அண்ணன் சொன்னதை நாமும் அப்படியே நம்பி வைப்போம். 

கிட்டத்தட்ட 500 புத்தகங்கள் சேர்த்தாயிற்று. என்ன விலைக்கு வைக்கலாம்? அமெரிக்க நூலகங்களில் இது போல பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் பொழுது Hardcover புத்தகங்கள் ஒரு டாலர், Paperback புத்தகங்கள் 50 செண்ட் என விலையைக் குறிப்பிடுவார்கள். அப்படிச் செய்யலாமா என எண்ணும் பொழுது வேறு ஒரு யோசனை தோன்றியது. 

ஒரு உண்டியலை வைத்து விடலாம். இந்த விற்பனை மூலம் வரும் பணம் அனைத்தும் நன்கொடையாகத் தரப்படும் என்பதை விளம்பரப்படுத்திவிடலாம். வாங்குபவர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் அப்புத்தகங்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து அதை அந்த உண்டியலில் போட்டுவிடலாம். யார் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த யோசனை அந்நிறுவனத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

அதன்படி அனைத்து ஊழியர்களுக்கும் இது குறித்த மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், அதற்கு தான் நினைக்கும் தொகையைத் தந்தால் போதும் என்ற விதமே அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது. 

இந்த விற்பனை மூலம் ரூபாய் 15,000 வரை சேரும் என்பது அண்ணனின் எதிர்பார்ப்பு. கொண்டு சென்ற புத்தகங்கள் பெரும் பகுதி குறித்த நேரத்திற்கு முன் எடுத்துச் செல்லப்பட்டன. சேர்க்கப்பட்ட தொகையோ கிட்டத்தட்ட ரூபாய் 39,000. 

தன் கையில் இருந்து கொஞ்சம் சேர்த்து ரூபாய் 40,000த்தை அந்நிறுவனம் மூலமாகவே Sambhav Foundation (https://www.facebook.com/pages/Sambhav-Foundation/166563906715082) என்ற சேவை இல்லத்திற்கு அனுப்பி வைத்தது மனதை நெகிழ வைத்ததாக இருந்தது என்றார் அண்ணன். 

இந்நிகழ்ச்சி நடந்த சில நாட்களுக்குப் பின் புத்தகங்களை வாங்கிய ஒருவர் அண்ணனை தொலைப்பேசியில் அழைத்து தான் உண்டியலில் இட்ட பணம் போதாது, இன்னும் கொஞ்சம் தந்திருக்க வேண்டும், எப்படித் தரலாம் எனக் கேட்டதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி. Talk about reverse of Buyer's remorse.

அண்ணன் அவ்வழி என்றால் தம்பி நானும் என் வழியில் இதைப் போல ஒன்றைச் செய்தேன். 

நான் "ஜாலியா தமிழ் இலக்கணம்" (https://www.nhm.in/shop/978-81-8493-744-2.html) என்ற புத்தகத்தை எழுதியது பலருக்கும் தெரியும். இங்குள்ள நண்பர்கள் அதனை இந்தியாவில் இருந்து தனித்தனியாக வரவழைப்பதற்குப் பதிலாக என்னையே மொத்தமாக வரவழைத்துத் தர முடியுமா எனக் கேட்டார்கள். 

நானும் அப்படியே செய்து தந்தேன். நண்பர்களிடையே தரும் பொழுது விலைக்கு என வேண்டாம் நீங்கள் என்ன தந்தாலும் அதற்கு சமமான தொகையைச் சேர்த்து நன்கொடையாகத் தரப் போகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆர்வமுடன் அவர்கள் தந்ததோடு என் பங்கையும் சேர்த்து ரூபாய் 18,000த்தை சென்னையில் டாக்டர் சுந்தர் நடத்தி வரும் Freedom Trustக்கு (http://www.freedomtrustchennai.org) அளித்தேன். 

இந்த வருடம் உருப்படியாக எதோ ஒன்று செய்த ஒரு திருப்தி. 

Sunday, December 22, 2013

சொன்னது சாருவா? சொல், சொல், சொல்....

இதை எழுதும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா தேவர்மகன் க்ளைமேக்ஸில் கமலஹாசர் சொல்லும் "கடைசியில் என்னையும் கத்தி தூக்க வெச்சுட்டீங்களேதான்." போகட்டும்.
எனக்குச் சாருவின் எழுத்துகள் பிடிக்காது. அவரின் பதிவுகள் பக்கம் கூடப் போக மாட்டேன். நமக்கு ஒவ்வாத கருத்துகளைப் படித்து நம் ரத்தக்கொதிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணம்தான். ஆனாலும், நண்பர்கள்(?) சமயத்தில் தரும் சுட்டிகளால் சிலவற்றைப் படிக்க வேண்டியதாகி விடுவதுண்டு. இன்று அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது அரவிந்தன். இந்த சுட்டியைத் தந்தார். பின்புலம் தெரிவதற்காக அதற்கு முந்தைய பதிவொன்றும் படித்தேன். ஒரு சிறிய இன்ப அதிர்ச்சிதான்.
எனக்குப் புரிந்த அளவுக்கு விஷயம் இதுதான். பேஸ்புக்கில் எழுதி வரும் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவர் தன் முதல் நாவலை எழுதி இருக்கிறார். அதன் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சாருவிற்கும் அழைப்பு போய் இருக்கிறது. ஆனால் புத்தகத்தைப் படித்த சாருவிற்கு அந்த நாவல் பிடிக்கவில்லை. அதனால் விழாவிற்கு வர முடியாது என்றும், வேறொரு நாள் அந்த எழுத்தாளரிடம் தன் கருத்துகளைச் சொல்வதாகவும் சொல்லி இருக்கிறார். இதற்குப் பொங்கிய சிலர் வழக்கம் போல சாருவைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள் போல. 
தனக்குப் பிடிக்கவில்லை என்ற பொழுதில் அவ்விழாவிற்கு சென்று போலியாக சில வார்த்தைகளைப் பேசுவதில் தனக்கு ஒப்புதல் இல்லை. அதே சமயம் அங்கு ஒரு இளம் எழுத்தாளரின் குறைகளைப் பட்டியலிட மனது வரவில்லை. எனவே தான் வரவில்லை என்று அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்பதே என் எண்ணம். 
இது குறித்த அவர் பதிவில் கூறி இருக்கும் வேறு ஒரு கருத்துதான் எனக்கு இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. 
ஒரு வாக்கியம் கூட இலக்கணமாக இல்லை.  தமிழை அவர் rape செய்திருக்கிறார்.  இலக்கணத்தை உடைக்கலாம்.  ஆனால் அதை பிரக்ஞாபூர்வமாகச் செய்ய வேண்டும்.  இலக்கணமே தெரியாமல் செய்யக் கூடாது.  ஒரு வாக்கியம் கூட வாக்கியமாக இல்லை.
எழுதும் அனைவரும், முக்கியமாக, எழுத்தாளன் எனக் கருதிக் கொள்பவர்கள் அனைவரும் மொழியை சரியாகக் கையாள வேண்டியது அவசியம். எழுத்தாளர்களின் பிரபலம் கூடக்கூட இந்தப் பொறுப்பும் அதிகரிக்கிறது. ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் பலரும் இதைச் சொன்னால் கோபப்படுகிறார்களே தவிர அதன் பின் இருக்கும் உண்மையை உணர்வதே இல்லை. 
இன்று வெளியாகும் வலைப்பதிவுகள், கதைகள், நாவல்கள், பொதுஜன ஊடகக் கட்டுரைகள், செய்திகள் என அனைத்திலும் எழுத்துப்பிழைகள், வரிவடிவப்பிழைகள் என விதவிதமாய்ப் பிழைகள்தான் மலிந்திருக்கின்றன. இதற்குப் பிரபலங்களும் விதிவிலக்கல்ல.
இப்படி எழுதலாமா எனக் கேட்டால், பாரதி, "நல்லதோர் வீணை" என எழுதவில்லையா என்பார்கள். அவன் எங்கு ஓர் எங்கு ஒரு எழுத வேண்டும் எனத் தெரியாமல் எழுதவில்லை. அதே போல கவிதையின் சந்தத்திற்காகச் செய்யப்படும் சில மாற்றங்களை உரைநடையில் அனுமதிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 
"ஒரு வீடு ஒரு உலகம்" எனத் தலைப்பு வைத்த ஜெயகாந்தன் கூட அது இலக்கண மீறல் என்று அறிந்துதான் செய்திருக்கிறார். அதற்கு பின் இருந்த சிந்தனை எவ்வளவு பெரிய விளக்கமாய் வந்திருக்கிறது பாருங்கள்.

தான் எழுதுவதே தமிழ், தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்றும் இருக்கும் இலக்கணத்தை விட்டுவிட்டு புதிய இலக்கணங்கள் வேண்டும் எனப் பேசும் பிரபலங்கள் மத்தியில் இந்தக் கருத்தை சொல்லி இருக்கும் பிரபலமான சாரு நிவேதிதாவிற்கு என் வாழ்த்துகள். 
இதே கருத்தை வலியுறுத்தி நான் சில நாட்களுக்கு முன் எழுதிய மற்றுமொரு பதிவு இது!
பிகு: இதை எல்லாம் சொன்னவர், ஆன்மீகம் என்பது தவறு என யாரேனும் சுட்டிக் காட்டி ஆன்மிகம் என எழுதத் தொடங்குவாரானால்  அவரின் நேர்மைக்கு அது சான்றாக இருக்கும். 

Friday, December 13, 2013

அழகுத் தமிழும் அம்பேல்!

இன்று வதனப்புத்தகத்தில் நண்பர் Murthy Subra அம்பேல் என்ற சொல் தமிழ்தானா என்று கேட்டார். அதற்கு இலக்கண வாத்தியார், வெண்பா வேந்தர் அண்ணன் என். சொக்கன் அது தமிழ் வார்த்தை இல்லை, ஆங்கிலேயர் I am bailing out எனச் சொல்வதை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டு I am bail என மாற்றி அது அம்பேல் ஆனது என்று ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அம்பேல் தமிழ்தான் என நிறுவ வேண்டி இருப்பது காலத்தின் கட்டாயமே. ஆங்கிலத்திலோ லத்தீனிலோ இது போன்ற கேள்விகள் எழுவதே இல்லை. அவர்களுக்கு தம் மொழி மேல் இருக்கும் நம்பிக்கை அத்துணை மகத்தானது. நம் தமிழுக்குத்தான் பாவம் இந்தக்கதி.

போகட்டும், அம்பேலுக்கு வருவோம். அம்பேல் என்றால் அந்த இடத்தை விட்டுக்காணாமல் போய்விடுவதுதானே. அதில் இருக்கும் ஏல் என்பதை என்ன எனப் புரிந்தால் அம்பேல் தமிழ்தானா என்ற கேள்வியே எழாது.

ஏல் என்பது இயல் என்பதன் திரிபு. அகராதியைப் புரட்டினோமானால் ஏல் என்பதற்குப் பல பொருள் உள்ளது விளங்கும்.

ஏல் (p. 151) [ ēl ] , V. v. t. receive, accept, admit, allow, ஒப்புக்கொள்; 2. stretch out hands in begging, receive alms, பிச்சைவாங்கு; 3. oppose in battle, ஏதிர்; 4. love, அன்புகூர்; 5. be equal, ஒத்திரு. v. i. be suitable for, agreeable to, becoming, இசை; 2. be excessive, abound, மிகு; 3. change, மாறுபடு; 4. happen, occur, சம்பவி, as in "ஏற்றதையுணர்கிலமென்று" (வில்லி;) 5. awake from sleep.

இதில் நாம் பார்க்க வேண்டியது ஒத்திரு என்னும் விளக்கத்தை மட்டுமே. அம்பினை ஒத்திருப்பது அம்பேல். அம்பு+ஏல்= அம்பேல்.

வில்லினிலிருந்து ஏவப்பட்ட அம்பானது எப்படி, அவ்விடத்தை விட்டு கடி வேகம் கொண்டு காணாமல் போகிறதோ அதைப் போல நானும் இவ்விடத்திலிருந்து அகல்வேன் எனச் சொல்லவே நாம் அம்பேல் என்கிறோம்.

இங்கு ஒரு சுவாரசியம். நாம் வேகமாகச் செல்வதை வில்லில் இருந்து கிளம்பும் அம்பாக உருவகப்படுத்துகிறோம். ஆனால் கம்பன் ராமனின் வில்லில் இருந்து கிளம்பிச் செல்லும் அம்பின் வேகத்தைப் பற்றி என்ன சொல்கிறான் தெரியுமா?

நம் வாயில் இருந்து செல்லும் வார்த்தைகளின் வேகம் போல் ராமன் எய்த அம்பு விரைந்தது என்கிறான். தாடகை வதம். அவளைக் கொல்ல ராமன் அம்பினை எய்கிறான். அதைச் சொல்லும் பொழுது கம்பன்

சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் 
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுத்தலும்...

எனச் சொல்கிறான். கோபத்தில், சற்றும் எண்ணாமல், பேசிடும் பொழுது சொல்லானது நம் வாயில் இருந்து வேகமாய்ச் செல்வது மட்டுமல்லாது அதைக் கேட்பவரைக் காயமும் படுத்தும் அல்லவா? அதைப் போல வேகமாய்ச் சென்று காயப்படுத்தும் அம்பு எனச் சொல்வது எத்துணை பொருத்தம்!

அப்படிச் சொல்லின் வேகத்தைப் போலச் சீறிப் பாயும் அம்பினை ஒத்து நானும் செல்கிறேன் என்பதைத்தான் நான் அம்பேல் எனச் சுருங்கச் சொல்கிறோம்.

அம்பேல் தூயதமிழ்ச் சொல்லே. இனியும்  இது குறித்த ஐயம் வேண்டாம்.

#எல்லாமேதமிழ்தான்