Tuesday, October 28, 2014

தோசை சுடத்தக்கோர்

இரவுணவின் பொழுது பிள்ளைகளுடன் அரட்டையடிப்பதென்பது ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். அப்போது படிப்பு விஷயங்கள் பேசப்பட மாட்டாது. அனுபவங்கள், வேடிக்கைகள், நினைவுகள், நக்கல்கள், கிண்டல்கள் மட்டுமே. சிரித்து உருண்டு, புரைக்கேறி, கண்ணீர் மல்கி எழுந்தால் ஒருநாள் முழுக்க மனதில் நிறைந்த சலிப்புகளை வெல்லமுடியும்.

அபூர்வமாக பேச்சு உணர்ச்சிகரமாக ஆவதுண்டு. இன்று அப்படி ஒரு சந்தர்ப்பம். மகள் அவளுக்களிப்பட்ட உணவின்பால் சற்றே சலிப்பைக் காட்டினாள். "வீட்டிலே குடுக்கிறதைத்தானே சாப்பிட்டாகணும். நமக்கு ஒருத்தர் உபசரிச்சுட்டு குடுக்கிறதை வேண்டாம்னு சொல்றது மாதிரி கேவலம் ஒண்ணுமே கெடையாது. அவங்களுக்கு கொஞ்சம்கூட மனசு கோணக்கூடாது… நம்ம முகத்திலே நமக்கு அதுபிடிக்கலைன்னு ஒரு சின்ன தடம்கூட தெரியப்பிடாது. அதுதான் நாகரிகம்." என்று சொன்னேன். 

சட்டென்று ஒரு நினைவு. நண்பர் ஜெயப்பிரகாஷும் நானும் ஓரு முறை சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தோம். உடன் நண்பர் சுரேஷும் உண்டு.  சுரேஷ் திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்களே ஆகி இருந்த காலகட்டம் அது. அன்றைய சுற்றல் முடிந்து பின் இரவு தன் வீட்டில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் சுரேஷ். ஜெயப்பிரகாஷ் வழக்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் ஒத்துக்கொண்டுவிட்டார். 

சுரேஷ் அப்பொழுதுதான் வேலை மாறிச் சென்னை வந்திருந்த சமயம். நாங்கள் மூவரும் அவரின் ஸ்கூட்டரிலேயே அவரது வீட்டுக்குப் போனோம். சிறிய வீடு. ஒரு கூடம், சிறிய படுக்கையறை, சமையலறை. நேரமாகிவிட்டிருந்ததனால் போனதுமே கூடத்திலேயே மேஜை போட்டு சாப்பாடு பரிமாறினார்கள். அகலமான பீங்கான் தட்டில் செக்கச்சிவந்த வண்ணத்தில் தோசை. இன்னொரு கிண்ணத்தில் சிவப்பான சாம்பார். அவ்வளவுதான், வேறு எதுவுமே இல்லை.

எனக்குப் பகீரென்றது. ஜேபி தோசைப்பிரியரென்ற தகவல் சுரேஷுக்குத் தெரியும், அவர் மதியம் செய்த சாம்பாரைச் சாப்பிட மாட்டார் என்றுதான் தெரியாது. நல்ல வாசமுள்ள முருங்கைக்காய். பெரிய துண்டுகளாக போட்டு சாம்பார் வைத்திருந்தார்கள். ஜேபிதான் பாவம். முருங்கைக்காய் அவருக்கு ஆகாது. பாக்யராஜ் சினிமா வந்த பொழுது அதை வைத்து  ஜேபியை கிண்டல் செய்திருக்கிறோம். இன்று அந்தக் கிண்டல் செய்யத் தைரியம் உண்டா என்பது சந்தேகமே. அதையும் விட தோசைக்குக் கோழிக் குழம்பு இல்லாமல் அவருக்கு உள்ளேயே இறங்காது. இங்கு தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி, காரச் சட்னி என்று கூட ஏதுமில்லை. அப்படி ஒரு வழக்கமே அவர்கள் வீட்டில் இல்லை போலும். அந்த சாம்பாரைச் சூடாக்கும் எண்ணம்கூட அவர்களுக்கு இருக்கவில்லை.

ஜேபி இளையராஜா இசை குறித்த ஏதோ கேள்விக்கு பதில் சொன்னபடி சாதாரணமாக வந்து அமர்ந்தார். அரைக்கணம் கூட முகம் மாறுபடவில்லை. ஆனால் அரைக்கணத்திற்கும் குறைவான நேரத்தில் என் கண்களை அவர் கண்கள் வந்து சந்தித்து தடுத்துச் சென்றன. நான் திக்பிரமை பிடித்து மேஜை முன் அமர்ந்தேன்.

அருமையான சாம்பார். தோசையும் நல்ல சுவை. ஆனால் எனக்கு மரத்தூள் தொண்டையில் சிக்கியதுபோல இருந்தது. பிறந்த மறுநாளே  மதியம் செய்த சாம்பாருடன் தோசையச் சாப்பிடுவது வழக்கம் என்பது போல ஜேபி  தோசையைச் சாம்பாரில் முக்கிச் சாப்பிட்டார். ஜேபி தோசைப்பிரியர். சுவைத்து மெதுவாக ‘ஸ்டைலாக’ சாப்பிடுவார். அப்படித்தான் இதையும் சாப்பிட்டார்.

அந்த வீட்டுக்கு விருந்தாளிகளே வருவதில்லை போலும். அவர்களுக்கு உபசரிக்கவே தெரியவில்லை. ஏழெட்டுத் தோசைகளையையும் சாம்பாரையும் அந்த அம்மாள் மேஜையிலேயே வைத்துவிட்டாள். மேஜைக்கு சுற்றி ஊரில் இருந்து வந்திருந்த அவர்களின் இரு தங்கைகளும் நின்று நாங்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தார்கள். ஜேபி அந்தப்பிள்ளைகளிடம் அவர்கள் எந்த எப் எம் ரேடியோவில் பாட்டு கேட்பார்கள் என்று கேட்டார். அவர்களுக்குப் பிடித்த ஆர்ஜே யார் என்றெல்லாம் பேசிக் கொண்டே இருந்தார். 

அந்த அம்மாளிடம் அந்தப்பக்கமெல்லாம் ஏதோ இலைகளைப் போட்டு கூட தோசை செய்வார்களே என்றார். அந்த அம்மாள் பரவசத்துடன் ”முருங்கைக்கீரை முருங்கைக்கீரை” என்று சொல்லி அதை வைத்து எப்படி அடை செய்வார்கள் என்று சொன்னாள். ”அருமையாக இருக்கிறது” என்றார் ஜேபி. அவளுக்கு பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கதவு நிலையைப் பற்றிக்கொண்டாள். ”எங்க ஊரிலே அதிகம் முருங்கைக்கீரை உண்டு” என்று  அபத்தமாக உரக்கச் சொன்னாள். ”உங்க ஊர் எது?” ”திருவண்ணாமலை” ”அப்படியா? திருவண்ணாமலையிலே எனக்கு தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு நண்பர் உண்டு” ஊரில் அந்த அம்மையாரின் குடும்பத்தைப்பற்றி நான்கு கேள்விகள் கேட்டு தெரிந்துகொண்டார். அவரது தமிழ் சென்னைத்தமிழ் நெடியடித்தாலும் பிழையில்லாமலிருக்கும்.

அவர்கள்  அத்தனை பேருக்கும் அந்த நாள் ஒரு மாபெரும் நிகழ்வாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. அவர் அருகிலேயே மொத்தக் குடும்பமும் நின்று வாயைப்பிளந்து வேடிக்கை பார்த்தது. பதினைந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். ஜேபி சுரேஷிடமிருந்து நாற்றமான ஒரு சிகரெட்டை வாங்கி புகை விட்டார்.

திரும்பி எங்கள் விடுதி அறைக்கு வந்தபின் கதவைச் சாத்தியதுமே நான் கேட்டேன் ”இதுக்கு முன்னாடி மதியம் செய்த சாம்பாரைச் சாப்பிட்டிருக்கீங்களா சார்?” ”இல்லே…நல்லாவே இல்லியே..ஐஸ்தண்ணி மாதிரி இருக்கே” ”கஷ்டப்பட்டீயளோ?” என்றேன். ஜேபி பதில் சொல்லவில்லை. அவரது இங்கிதங்களை நான் பொருட்படுத்துவதில்லை. ”கஷ்டப்பட்டீயதானே?” என்றேன். ”ஷார்ட்ஸா கொண்டு வந்திருக்கேள்? பெர்முடாப் போட மாட்டேளா?”

தூங்குவதற்காக படுத்தவர் உடனே எழுந்து விட்டார் ”ஒருமாதிரி இருக்கு…” என்றார். ஏதோ மாத்திரை போட்டுக்கொண்டார். ”நீங்க அவங்ககிட்டே முருங்கைக்காய் பத்திச் சொல்லியிருக்கலாம்” என்றேன். ”அந்த வீட்டிலே வேறே ·புட்டே இல்லை. பாத்தேன். நான் சாப்பிடலைன்னா ஏமாற்றத்திலே அவர் அந்தம்மாவை போட்டு அடிச்சாலும் அடிப்பார்..பரவாயில்லை.நாளைக்குச் சரியாயிடும்” நள்ளிரவு வரை ஜேபி விழித்து அவஸ்தைப்பட்டார். மூக்கிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எனக்கு பயமாக இருந்தது. ஏதாவது ஆகிவிடுமா என்று. ”கொஞ்சம் மூச்சு தெணறறது…பரவால்லை” என்றார். 

நானும் விழித்திருந்தேன். விஜய் சதாசிவம் என்ற இலக்கிய விமரிசகர் பற்றி ஜெயப்பிரகாஷ் சொன்னார்.  எல்லாக் கதைகளையும்  கிழி கிழி என்று கிழிக்கும் அவர் கடைசியில் பதாகை என்ற சிற்றிதழில் ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை எழுதினார். ரொம்பவே சுமாரான கதை. ஆனால் அது ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பு என்று சொன்னார் ”உண்மையிலேயே நம்பிண்டிருந்தார், அதான் பிரச்சினையே” என்றார் ஜேபி.  ”இந்தக்கதையை மனசுக்குள்ள அளவுகோலா வைச்சுண்டுதான் அவர் ஜெயனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் கதை எழுதத் தெரியலேன்னு சொல்லிண்டிருந்திருக்கார்” மூக்கு குழாய் போல ஒழுகியது. வாயில் எச்சில் வந்து துப்பிக்கொண்டே இருந்தார். மறுநாள் கிளம்பும்போது முகம் சற்று உப்பியபடி காணப்பட்டதை தவிர்த்தால் ஒன்றுமில்லை. ”இதை நீங்க எங்கயும் சொல்ல வேண்டாம்” என்றார். நான் தலையசைத்தேன்.

நான் சொல்லி முடித்தேன். மகன் பயங்கரமாக மனம் நெகிழ்ந்துவிட்டான். முகம் கலங்கி கண்கள் பளபளத்தன. ” நீ இப்பல்லாம் அவரை பத்தி பேசினா அவரோட இசைரசனை பத்தியே பேசறதில்லை” என்றாள் மகள். ”உண்மைதான். இப்ப யோசிக்கிறப்ப எழுதினது பேசினது சர்ச்சை பண்ணினது எல்லாமே பின்னாலே போயிட்டுது…மனுஷங்க முழுமையா வாழற சில தருணங்கள் இருக்கு…அது மட்டும்தான் மிச்சம்னு தோணுது” என்றேன்.

டிஸ்கி 1: இன்றைக்கு என்ன சாப்பாட்டு என்று நண்பர் ஜேபியை விசாரிக்கப் போக, அவர் மதியம் செய்த சாம்பாரோடு தோசை என அலுத்துக் கொண்டார். இதை கொஞ்சம் கண்ணு காது மூக்கு எல்லாம் சேர்த்து வரலாற்றின் ஏடுகளில் பதிந்து வைக்க வேண்டியது நம் கடமை என்பதால் உடனே இந்த கட்டுரையை எழுதி வைத்துக் கொண்டேன். நாளை மீள்பிரசுரம் செய்ய வசதியாக இருக்கும் பாருங்கள். ஜேபி, நீர் இன்னுமொரு நூற்றாண்டிரும். 

டிஸ்கி 2: மத்தபடி இதுக்கும் இந்த கட்டுரைக்கும் (http://www.jeyamohan.in/?p=5706) சம்பந்தம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டீங்கன்னா அது உங்க கற்பனை வளத்திற்குச் சான்றே அன்றி வேற ஒண்ணுமில்லை. 

டிஸ்கி 3: இந்த கட்டுரைக்கு முதலில் வைத்த பெயர் "ஒண்ணுமில்லாமல் 700 வார்த்தைக் கட்டுரை ஒன்று தேத்துவது எப்படி?"

டிஸ்கி 4: மேற்கண்டவை அனைத்து எழுத்தாளரின் கற்பனையே. சில உண்மைகளும் கலந்திருக்கலாம்.

டிஸ்கி 5: நான் மேற்கண்டவை என்று சொல்லிக் கொண்டது என் பதிவை மட்டும்தான்.

டிஸ்கி 6: அண்ணன் மருத்துவர் விஜய் அவர்களின் கதையைப் படிக்க -  http://padhaakai.com/2014/10/26/medic-story/


Wednesday, October 15, 2014

மீனாக்ஷி ஊரில் காமாக்க்ஷி ஊர்வலம்!

ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி பத்ததி என்கிறார்கள். இப்படி ஒரு நிரலைப் போட்டுத் தந்தது அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். பல காலமாய்த் தொடர்ந்து இதுதான் கச்சேரி என்பதற்கான கட்டமைப்பு. நான் இந்தக் கட்டமைப்பைத் தாண்டி வேறு வடிவங்களில் கச்சேரிகள் கேட்டதே கிடையாது. ஒரு மாலை முழுவதும் ஒரே ராகம் பாடுவார்கள், விடிய விடிய நடக்கும் கச்சேரிகளில் பிரதான ராகம் மட்டுமே பல மணி நேரம் இருக்கும் என்பதெல்லாம் படித்துத் தெரிந்து கொண்டவையே தவிர கேட்டது கிடையாது.
இந்தக் கட்டமைப்புதான் கச்சேரி என்றால் நான் செய்யப் போவது கச்சேரியே இல்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார் டிஎம் கிருஷ்ணா. Like how a conference, that does not adhere to the traditional rules that govern conferences, is called an unconference, his recent performances can be termed as unconcerts or unkutcheris. இதற்கு அக்டோபர் 12ஆம் தேதி ஹூஸ்டனில் நடந்த கச்சேரி, (இப்படி சொல்லலாமா என்றே சந்தேகம் வருகிறதே) இதற்குச் சரியான உதாரணம்.

தொடர்ந்து படிக்க - தமிழோவியம் மின்னிதழ்.