விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி மேநாட்டாரை விருந்துக்கழைச்சு காட்டப் போறேண்டி எனப் பாடினார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். விஞ்ஞானத்தைப் வெறும் புத்தகங்களைக் கொண்டோ அல்லது பாட விளக்கங்கள் போலவோ பேசினால் கேட்பவர்கள் சுவாரசியமற்றுப் போவார்கள். செயல்முறை விளக்கமாகவோ அல்லது விருந்து படைத்து அதன் மூலம் விஞ்ஞானத்தைப் போதித்தால் அது எளிதில் உள்வாங்கப்படும் என்று அவர் நினைத்தாரா தெரியாது ஆனால் அதுவே இப்பொழுது உண்மை எனக் கொள்ளப்படுகிறது.
நான் சிறுவயதில் அருங்காட்சியகத்திற்குச் சென்றால் காட்சிப்பொருட்களுக்கு முன் “தொடாதீர்கள்!” எனக் கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புகள்தான் நம்மைப் பயமுறுத்தும். ஆனால் இன்று தொட்டு விளையாடி அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளத்தக்க வைகையிலேயே அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்டினில் நான் சென்று வந்த சில இடங்களைப் பற்றிய அறிமுகமே இக்கட்டுரை.
முதலாவதாக “Thinkery” என அழைக்கப்படும் குழந்தைகளுக்கான அருங்காட்சியகம். ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று புரட்சித்தலைவர் பாடியதுக்கேற்ப குழந்தைகளை ஏன்? எப்படி? எதற்காக? என கேள்விகளைக் கேட்க வைப்பதே தங்கள் குறிக்கோள் எனக் கொண்டு இயங்குகிறார்கள். ஆஸ்டின் குழந்தைகள் அருங்காட்சியகமாக 1983ஆம் தொடங்கப்பட்டு 2013ஆம் ஆண்டி Thinkery எனப்பெயர் மாற்றம் பெற்று 40,000 சதுர அடிகள் கொண்ட சொந்தக் கட்டிடத்தில் இயங்குகின்றது இந்த அருங்காட்சியகம்.
எல்லா வயது குழந்தைகளுக்கும், மனத்தில் குழந்தைகளாக உள்ள பெரியவர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடிய பல காட்சிப்பொருட்களைக் கொண்டுள்ளது Thinkery. சிறு விமானங்களைச் செய்து பறக்கவிடுவது முதற்கொண்டு நம் குசினியில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய பரிசோதனைகள் வரை பலவற்றையும் கற்றுக்கொள்ள ஏற்ற இடமாக இருக்கிறது. காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால் பலமுறை செல்லக்கூடியதாக இருக்கிறது இந்த இடம். குழந்தைகளை அறிவியலில் ஆர்வம் கொள்ளச் செய்வதற்குக் கட்டாயம் இங்கே கூட்டிக் கொண்டு செல்லுங்கள்.
அடுத்ததாக கொஞ்சம் வயது வந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான ஒரு நிகழவு. Astronomy on Tap (AOTATX) என்ற பெயரில் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் வானவியல் துறையினர் மாதம் ஒரு மாலை North Door என்ற இடத்தில் நடத்தும் நிகழ்வு இது. பொதுவாக மாதத்தின் மூன்றாம் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. வானவியல் பற்றிய ஆர்வம் இருந்தால் போதும் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் மூன்று பேராசியர்கள் ஆளுக்கொரு தலைப்பில் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். நகைச்சுவை கலந்த பேச்சுனூடே நமக்கு நல்ல விஞ்ஞானத்தையும் கடத்திவிடுகிறார்கள் இப்பேராசிரியர்கள். இப்பேச்சுகளோடு அந்த மாதம் இடம் பெற்ற சுவையான நிகழ்வுகள், சிறு பரிசுகளைக் கொண்ட போட்டி என மிகவும் சுவையாக நடத்தப்படுகிறது இந்நிகழ்வு. வயதுவந்தோர் பியரோ வைனோ அருந்தி கொண்டே பேச்சுகளை கவனிக்கலாம். உணவிற்கு ஒரு சிறு டெக்ஸ்மெக்ஸ் உணவகமும் உள்ளே இருக்கின்றது. இதே இடத்தில் Nerd Nite, Not So Math, Sh!t Faced Shakespeare என வானவியல் மட்டுமல்லாது வேறு சில நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
வெறும் பேச்சுக் கச்சேரிதானா? வேறு ஒன்றும் கிடையாதா என்பவர்கள் Austin Astronomical Society நடத்தும் பொதுமக்களுக்கான நட்சத்திர இரவில் பங்கேற்கலாம். இவர்கள் மாதம் ஒரு முறை டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் வானவியலில் பல்வேறு தலைப்புகளில் பேசுவது மட்டுமின்றி இங்கிருந்து சுமார் 40 மைல் தொலைவில் இருக்கும் Canyon of the Eagles என்ற இடத்தில் பெரிய தொலைநோக்கிகள் மூலம் நட்சத்திரக் கூட்டங்களையும், கோள்களையும் பார்க்க வசதி செய்து தருகிறார்கள். செயற்கை வெளிச்சம் அறவும் இல்லாத Designated Dark Sky Site என்பதால் நாம் சாதாரணமாகப் பார்க்கக் கிடைக்கும் நட்சத்திரங்களை விட பல மடங்கு நட்சத்திரங்களை அங்கு காண முடியும்.
அங்கத்தினராகச் சேர்ந்தால் மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி உண்டு. அது மட்டுமில்லாமல் பள்ளிகளிலோ அல்லது வேலை செய்யும் நிறுவனங்களிலோ ஒரு மாலைப் பொழுதில் தொலைநோக்கிகளுடன் வந்து விளக்கம் தரும் நிகழ்ச்சிகளையும் செய்து தருகிறார்கள். பல கோடி வருடங்கள் பயணித்து நம்மை வந்தடையும் நட்சத்திர ஒளியின் கீழ் ஓர் இரவைக் கடப்பது என்பது அற்புதமான ஒரு அனுபவம். கட்டாயம் முயன்று பாருங்கள்.
ஆஸ்டினில் இப்படி இன்னும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. நம் மனத்தில் எழும் பல கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக மட்டுமில்லாமல் இளைய தலைமுறையை விஞ்ஞானத்தில் ஆர்வம் கொள்ளச் செய்யவும் இவை பெரும் வாய்ப்புகளே. இவற்றை நாம் நல்லவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
· Thinkery — https://thinkeryaustin.org/about/
· Astronomy on Tap Austin — https://www.facebook.com/groups/AstroOnTapATX/
· North Door — https://northdooraustin.queueapp.com/
· Austin Astronomical Society — http://austinastro.org/
ஆஸ்டின் தமிழ்ச்சங்கம் பொங்கல் சிறப்பிதழுக்காக எழுதியது. இதழினைப் படிக்க — http://www.austintamilsangam.com/pongal2017-newsletter/