கம்பன் தனது படைப்புக்கு வைத்த பெயர் ராமாவதாரம். ஆனால் வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் என்பதால் இது கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. அயணம் என்றால் வழி. ஒரு மனிதன் எப்படி தன்னை விட உயர்ந்தவர்களைப் பணிந்து, வரும் கஷ்டங்களை எதிர்கொண்டு, தீமைகளை எதிர்த்துப் போராடி, நட்புகளைப் பேணி, மனித நேயத்துடன் நடந்து, நல்லதொரு மனிதனாக எப்படி வாழ வேண்டும் என ராமன் வாழ்ந்து காட்டிய வழி ராம அயணம். ராமனை அடையும் வழி ராமாயணம் என்றும் சொல்லலாம்.
கம்பராமாயணத்தைப் படிக்கத் தொடங்கினால் அதில் முதல் பாடலாக இருக்கும் கடவுள் வாழ்த்திலேயே மயங்கிப் போய்விடுவோம். அத்தனை அழகான தொடக்கம் அந்தக் காவியத்திற்கு.
எழுதத் தொடங்கும் பொழுது கடவுள் வாழ்த்துடன் எழுதத் தொடங்குவது மரபு. நாம் (இப்பொழுது இல்லையானாலும் சிறு வயதிலாவது) பிள்ளையார் சுழியுடந்தானே எதையுமே எழுதத் தொடங்குகிறோம். கடவுளை வாழ்த்துவது நம் மரபு. வாழ்த்துவது என்றால் நம் மரியாதையைச் சொல்வது. இன்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று யாரேனும் சொன்னாலோ எழுதினாலோ வாழ்த்து என்பதன் பொருளே தெரியாமல் வாழ்கிறார்களே என்பதே எனக்குத் தோன்றும் எண்ணம். போகட்டும்.
எழுதுவது ராமனின் கதை. அப்படி இருக்கும் பொழுது அவன் புகழைப் பாடித் தொடங்குவதுதானே இயல்பு? ஆனால் கம்பன் தனது காவியத்தைத் எப்படித் தொடங்கி இருக்கிறான்?
உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே
இதைப் பிரித்து எழுதினால் நமக்கு நேரடியாகவே புரியும். அதுதான் கம்பராமாயணத்தின் அழகு.
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
பொதுவாக மங்கலமொழி கொண்டு தொடங்க வேண்டும் என்ற மரபினை தழுவி உலகம் என்ற சொல்லோடு ஆரம்பிக்கிறது இந்தக் காவியம். உலகங்கள் அத்தனையும் தானே படைத்து, காத்து, அழித்தலுமாய் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் முடிவில்லாத விளையாட்டினைக் கொண்ட தலைவனான கடவுளிடம் நாங்கள் சரண் அடைகிறோம்.
எழுதுவது ராமாயணமாகவே இருந்தாலும் ராமனின் பெயரைச் சொல்லாமல், ராமனாக அவதரித்த திருமாலின் பெயரைச் சொல்லாமல், வேறு எந்தக் கடவுளின் பெயரும் இல்லாமல் பொதுவான ஒரு தலைவனின் புகழ் பாடும்படியாக அமைந்திருப்பதே இந்த வாழ்த்தின் சிறப்பு.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனது இந்த உலகம். நாம் இருக்கும் உலகம் ஒன்று. அப்படி இருக்கையில் உலகம் யாவையும் என ஏன் எழுத வேண்டும்? உலகம் ஒன்றினைத் தானுளவாக்கலும் என ஏன் எழுதவில்லை? ஏன் என்றால் இந்த உலகம் மட்டும் உலகம் வேறு உலகங்கள் இல்லை எனக் கம்பன் நம்பவில்லை.
அவதாரங்களைப் பற்றிப் பேசும் பொழுது வாமன அவதாரத்தில் மூவுலகையும் இரண்டு அடிகளில் ஆட்கொண்டான் எனச் சொல்கிறோம். கிருஷ்ணாவதாரத்தில் மண்ணைத் தின்று தாயிடம் தன் வாயைத் திறந்து ஏழு உலகங்களைக் காண்பித்ததை ‘வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே’ எனப் பெரியாழ்வார் சொல்கிறார்.
இதே ராமாயணத்தில் பின்னால் ஓர் இடத்தில் ராமன் தன்தம்பியைப் பார்த்து “இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ கலக்குவென்” எனச் சொல்வதாகக் கம்பனே எழுதுகிறான். அதாவது பதினான்கு லோகங்கள் இருப்பதாக ராமன் சொல்வதாக இருக்கிறது அந்தப் பாடல்.
இப்படிப் பல உலகங்கள் இருப்பதாகக் குறிப்பிடுவதால் அதனை இத்தனைதான் எனச் சொல்லாமல் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் உலகங்கள் அத்தனையும் உன் படைப்பே என்பதை உலகம் யாவையும் எனச் சொல்கிறான் கம்பன்.
உலகங்கள் யாவையும் உருவாக்கி, காத்து, அழித்தலுமான விளையாட்டைச் செய்கின்ற தலைவன் என அழைத்து தன் வாழ்த்தைச் சொல்கின்றான். இவை அனைத்தையும் செய்கின்ற தலைவன் ஒருவனே. இவை அனைத்தும் அவன் ஒருவன் செயல்களே என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான். இவற்றை மிகவும் எளிதாகச் செய்வதைச் சொல்லும்படியாக அவை அந்தத் தலைவனுக்கு இது வெறும் விளையாட்டே என்றும் சொல்கிறான். தொடர்ந்து செய்யப்படுவதால் இதை முடிவே இல்லாத அளவிட முடியாத அலகிலா விளையாட்டு என்றும் சொல்கிறான்.
கடைசியாக, கடவுள் வாழ்த்து என்றாலும் அதில் வாழ்த்துகிறேன் எனச் சொல்லவில்லை, வணங்குகிறேன் எனச் சொல்லவில்லை, சரண் அடைகிறேன் என்று சொல்கின்றான். ஏனென்றால் ராமாயணத்தில் தொடர்ந்து சொல்லப்படும் ஒரு தத்துவம் என்னவென்றால் அது சரணாகதித் தத்துவம்தான். இலக்குவனும் அனுமனும் தங்களை ராமனுக்கு அர்ப்பணித்தது போல் வேறு எவரும் செய்தது கிடையாது. சுக்ரீவன் சரண் அடைந்தான், விபீடணன் சரணாகதி அடைந்தான். இப்படி இந்தக் காவியம் முழுதுமே சரணாகதித் தத்துவத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் வரப்போகிறது என்பதை கோடி காட்டவே முதல் பாடலான கடவுள் வாழ்த்திலும் கூட சரண் எனச் சொல்லி கோடி காட்டி ஆரம்பிக்கிறான் கம்பன்.
இப்படி ஒவ்வொரு சொல்லும் அத்தனை பொருத்தமாக எடுத்தாண்டு இருப்பதால்தான் இணையே இல்லாத கவிஞன், கவிச்சக்ரவர்த்தி கம்பன் என்று இன்றும் அழைக்கப்படுகிறான்.
ஆஸ்டின் தமிழ்ச்சங்கம் பொங்கல் சிறப்பிதழுக்காக எழுதியது. இதழினைப் படிக்க — http://www.austintamilsangam.com/pongal2017-newsletter/