முன்னர் எனக்கு நாகஸ்வரத்தைக் கேட்கவே பிடிக்காது. கல்யாண மண்டபங்கள் போன்ற இடங்களில் மற்ற சத்தங்களோடு கலந்து கேட்பதினால் அதன் அழகு தெரியாமலேயே இருந்தது. கர்நாடக சங்கீதத்தை கேட்க தொடர்ந்து முயற்சி செய்யும் பொழுது என்னை இழுத்துக் கொண்டது இந்தக் கருவி. இன்றைக்கு நாகஸ்வரம் சத்தம் கேட்டாலே நின்று கேட்டுவிட்டுப் போகும் அளவுக்கு மாறிவிட்டேன்.
ஆனால், இந்த இசைதான் பிடித்திழுத்ததே தவிர நாதஸ்வரமா நாகஸ்வரமா என்று பெயர்குழப்பத்தில் தொடங்கி இது பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்த எனக்கு மயிலை கார்த்திகேயன் அவர்களின் செயல்விளக்க விரிவுரை ஒன்றின் காணொலி இன்று கிடைத்தது. கார்த்திகேயன் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ஓர் இளம் நாகஸ்வர வித்வான். மிக மிக உயரத்தை அடையக் கூடிய திறமை கொண்டவர். இவர் வாசிப்பைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக வாசிப்பார். இவரின் இந்த விரிவுரை பற்றிச் சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்வது கர்நாடக இசை பற்றி ஆர்வம் கொண்டவர்கள் தவறவிடாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய விரிவுரை இது. பாருங்கள்.
நாதஸ்வரமா நாகஸ்வரமா என்று பெயரில் தொடங்கி (நாகஸ்வரம்தான்), நாகஸ்வரத்தின் வகைகள், அக்கருவியோடு தொடர்புடைய புராணக் கதைகள், அக்கருவியின் பாகங்கள், அதன் பெயர்கள், எப்படி வாசிக்க வேண்டும், எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும், இக்கருவியை கோயிலில் வாசிக்க வேண்டிய முறைகள், நாகஸ்வரத்திற்கேயான இசை வகைகளான அலாரிப்பு, மல்லாரி போன்றவை பற்றி என்று படிப்படியாக விளக்கி நமக்குப் புரியச் செய்கிறார் கார்த்திகேயன்.
செயல்விளக்க விரிவுரை என்பதால் பேசுவதோடு நிற்காமல் எங்கெல்லாம் வாசித்துக் காண்பிக்க முடியுமோ, அங்கெல்லாம் வாசித்துக் காண்பித்து நமக்குப் புரியச் செய்கிறார். சும்மாவே இவர் வாசிப்பு கேட்கச் சுகம்தான். இப்படி விளக்கத்துடன் கேட்கும் பொழுது இன்னமும் ரசிக்க முடிகிறது. சஹானாவில் ஆரம்பித்து சங்கராபரணம், ஷண்முகப்ரியா, நாட்டைக் குறிஞ்சி, ஹிந்தோளம், மல்லாரி வகைகள் என வாசித்தது அனைத்தும் அருமை. அது போக சமயத்தில் பாடியும் காட்டுகிறார். இவர் வாய்ப்பாட்டுக் கச்சேரியே செய்துவிடலாம்! வாசித்துக் காண்பிக்கும் பொழுதும் தான் செய்திருக்கும் சில உத்திகளைப் பற்றிப் பேசும் பொழுது அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும் மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன.
இவருடன் இணைந்து தவில் வாசிக்கும் ஜி.சிலம்பரசன் இடையிடையே தவில் வாசிப்பவரின் பார்வையில் இருந்து சொன்ன கருத்துகளும் அருமையாக இருந்தன. முன்பு நாகஸ்வர வித்வானும் தவில் வித்வானும் ஒரு அணியாகவே இருப்பார்கள், கிட்டத்தட்ட கணவன் மனைவி போன்ற ஜோடி அவர்கள் அதனால் குறிப்பறிந்து வாசிப்பது எளிதாக இருக்க முடிந்தது, தவிலில் உருட்டுச் சொல் என்ற வாசிப்பு முறை இன்று மறைந்து வருவது பற்றி எல்லாம் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது. இன்று முன்னணி பாடகர்கள் தங்களுக்கு இசைவாக இருக்கும் பக்கவாத்திய வித்வான்களோடு கச்சேரி செய்யும் பொழுது அந்தக் கச்சேரி ஒரு கூடுதல் ஈர்ப்போடு இருப்பதை நாம் காண்கிறோம். அவர்களும் முடிந்த வரை இந்த பக்கவாத்திய வித்வான்களோடு கச்சேரி செய்ய விரும்பவதும் இயல்பாக நடப்பதே.
கர்நாடக இசையில் குழூஉக்குறிகள் அதிகம். மற்றவர்கள் ஒன்று இக்குறிகளை அதிகம் பயன்படுத்தி நம்மை அந்நியப்படுத்தி உரையைப் புரிந்து கொள்ள முடியாமல் செய்துவிடுவார்கள் அல்லது மொத்தமாக தவிர்த்து உரையை நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள். ஆனால் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி, அதற்கு அழகாக விளக்கமும் தந்து நல்லபடி புரியச் செய்கிறார் கார்த்திகேயன். முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளாத என் போன்றவர்கள் சார்பாக இதற்கு ஒரு தனி நன்றி.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கவனம் சிதறாமல் பார்க்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் கார்த்திகேயனின் தயாரிப்பு. பேச வேண்டியது பற்றி குறிப்புகள் இல்லாமல், ஒரு ஒழுங்கு இல்லாமல் தோன்றுவதைப் பேசுவோர் உண்டு. அல்லது பேச வேண்டிய உரையை எழுதிக் கொண்டு வந்து படிப்போரும் உண்டு. இவ்விரண்டு வகை விரிவுரைகளுமே நமக்கு ஒட்டாமல் போய்விடும். ஆனால் என்ன பேச வேண்டும் என்பதைக் குறிப்புகளாக எடுத்துக் கொண்டு அவற்றை விரித்துப் பேசிய விதம் மிகவும் பாங்காக இருந்தது. அவரின் இம்முயற்சிக்கு என் நன்றி.
காணொலியின் ஒலித்தரம் அவ்வளவு சரியாக இல்லாதது ஒரு சிறிய குறைதான். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்த முறை இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். நிகழ்வின் காணொலியைப் பகிர்ந்து கொண்ட பாடகர் ரித்விக் ராஜாவுக்கு நன்றி.
When I started listening to Carnatic music, I could not stand the sound of Nagaswaram. I think the loud music, along with other noises in a closed environment such as a marriage hall, kind of put me off. However as I listened to Carnatic music more and more, I was able to appreciate the beauty of this instrument and the nuances that are unique to this instrument. Today, I cannot but stop and listen to a song well played on a Nagaswaram wherever I listen to it.
Though I enjoy it much, I do not have any knowledge about this instrument at all. In fact the confusion starts even with its name - is it Nadhaswaram or Nagaswaram?! Today, I got an opportunity to listen to a lecdem by Mylai Karthikeyan that gave me a very good understanding of this instrument. And if I have to say one line about this lecdem, I would say if you are interested in Carnatic music, you should listen to this lecdem. Karthikeyan is an young and upcoming Nagswaram player who is destined for great glory. Music runs in his blood and you can see that in his infectious enthusiasm.
He starts from the name of the instrument (it is Nagaswaram) and goes on to explain how this instrument evolved, the mythological stories associated with this instrument, its parts, how does it work, what are the conventions that are followed when it is played in temples, the special musical pieces that are played on this instrument such as Alarippu, Mallari etc. He does all this in easy steps so that we do not get lost in the volume of information he is trying to impart.
Wherever possible, he also plays the concept that he is talking about so that we are able to appreciate the concept better. If not for anything else just to listen to his Sahana, Shankarabharanam, Shanmukhapriya, Nattai Kurunji, the various types of Mallari, etc. this lecdem is a must listen. At times, he also sings and he does that so beautifully that if he takes up vocal music, he would give the current crop of vocalists a run for their money. I simply loved to see how happy he was when he played on the instrument and the enthusiasm that he shows when he talks about some nuances he has made is adorable.
G. Silambarasan, the Thavil player accompanying Karthikeyan, interjected at times and provided his point of view. He explained how the Nagaswaram and Thavil players were always an inseparable team in yesteryears and how it helped the musicians anticipate each other. Today we see this relationship among the leading vocalists and their preferred accompanists. The standard of the concert goes up a notch when the preferred team played together and naturally the vocalists prefer to be partnered with their favorites too. Another important point that Silambarasan talked about was the vanishing type of Thavil playing called ‘Uruttu Chol’ that is played after a ragam is played by the Nagaswaram artist. He played a sample of that as well to demonstrate it.
Carnatic music is full of jargons. So in a typical lecdem, either there is an abundance of it and a common listener feels excluded or the lecture is devoid of them and becomes too diluted. But here Karthikeyan does not shy away from jargons but explains them and often demonstrates what he is talking about so that the listener understands. This helped me for sure as I have not learnt Carnatic music. A special thanks to him for that.
The main reason to have us captivated for more than two hours is his preparation. Often we see a speaker comes to the stage without any preparation and rambles what comes to his mind then, often either about himself or how a legendary musician appreciated the talent of the speaker or comes with the entire speech written and read from it. Both these, lose the interest of the audience very quickly. Karthikeyan had clear notes on what he needed to speak on and referred to them during his speech. But the delivery itself was extempore and so was very natural. Another special thanks here for eschewing the disclaimers made with fake humility that are omnipresent in such lecdems.
As improvements, the audio quality of the recording could have been better. And when he shows some parts of the instrument, close ups of those parts would have helped. May be this could have been a simple powerpoint running behind him on a screen. The organizers can see how best to improve the user experience in future lecdems.
Thanks to Vidwan Rithvik Raja for sharing this video recording.