இந்தப் பாடலை வேறு யாரோ பாடும் பொழுது வார்த்தைகளைத் தவறாகப் பிரித்து “தாயே யசோதே உந்த நாயர் குலத்துதித்த மாயன்” எனப் பாடிவிட்டதாகவும், விமர்சகர் சுப்புடு இப்படி கண்ணனை நாயர் ஆக்கிவிட்டீர்களே என எழுதியதாகவும் ஒரு கதை உண்டு. இன்று இதனைப் புதுக்கதை போல பேஸ்புக்கில் போட்டு வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டான் ஐயப்பன். அங்கு ஒரு சிறு விளக்கம் தந்தாலும் இதனை முழுதாக விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.
வெண்பா எழுதும் பொழுது எதிர்மறையாக எதையும் எழுதாதே, அது பலித்துவிடும் என்பார் ஹரியண்ணா. ஒரு கவிஞன் தன்னை வஞ்சனை செய்தவர்களைச் சபித்து பாடுவதை அறம் பாடுதல் என்பார்கள். தமிழில் எதைச் சொன்னாலும் அது தவறாது என்பதே அதற்குக் காரணம். அது போல தமிழில் என்ன சொன்னாலும் அது உண்மையாகிவிடும் என்பதற்கு இந்தப் பாடலே உதாரணம்.
இவர்கள் தவறென்று பழித்துச் சிரிப்பதைப் பார்க்குமுன்னர் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் எழுதியதுதான் தவறென்று என்னிடம் வந்து கடிந்து கொண்ட நண்பர் ஒருவரும் உண்டு. அது எப்படி கண்ணனை ஆயர் குலத்தில் உதித்த எனச் சொல்லலாம்? அவன் ஆயர் குலத்திலா உதித்தான்? வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தை அல்லவா அவன்? அவன் எப்படி ஆயர்குலத்தில் உதித்தவனாக முடியும் என்பது அவர் கேள்வி. உதித்த என்றால் பிறந்த என்ற பொருள் உண்டு என்றாலும் அது மட்டுமே பொருள் இல்லை. தோன்றிய, உதயமாகிய என்றெல்லாமும் சொல்லலாம் என்பதால் ஆயர் குலத்தினர் இடையே தோன்றிய எனப் பொருள் கொண்டால் பாடலில் தவறில்லை என விளக்குவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றானது.
சரி, இன்றைய சர்ச்சைக்கு வருவோம். அப்படி என்ன மாற்றிப் பாடிவிட்டார்கள்? உந்த நாயர் குலத்துதித்த மாயன் எனப் பாடிவிட்டாரகள் அவ்வளவுதானே ஐயா. அதற்கேன் இவ்வளவு சினம்?
கிருஷ்ண என்றால் கருப்பு. ப்ரெஞ்சில் Noir என்றால் கருப்பு. உச்சரிப்பு அப்படியே இல்லை என்றாலும் அப்படி ஒரு குழப்பம் வந்திருக்கலாம் எனச் சப்பைக்கட்டு கட்ட முடியும். அதைச் செய்ய வேண்டாம்.
வெளிப்படையான பொருளைக் கொண்டால், நாயர் குலத்தில் உதித்திருக்கும் மாயன் என்பதில் இருந்து அந்தக்காலத்திலேயே சேர நாட்டிற்கும் தற்பொழுது மெக்ஸிகோ என அழைக்கப்படும் அந்த நாளைய மாயன் சாம்ராஜ்ஜியத்திற்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருந்திருப்பதையும் கண்ணனே இவ்விரு பிரிவுகளின் கலப்பு என்பதையும் ஒரு பாடலின் வரி மூலம் நம்மை உணரச்செய்கிறார் கவிஞர்.
வேண்டுமென்றால் மாயர்கள் பிள்ளையார் வழிபாடு செய்திருப்பதையும், அங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் இங்கு காடு சூழ்ந்த இடங்களில் குடியேறியதால் முல்லை நிலக் கடவுளின் பெயரையையே தமிழில் மாயோன் என நம் வரலாற்றில் சுட்டி இருப்பதையும் பேசி மேலும் பல தரவுகள் தரலாம். கூடவே மாயக்கண்ணன் விஷ்ணுவின் அவதாரம். ஆனால் அந்த அவதாரத்திற்கு முன்னர் வந்தவர் பரசுராமர். அவர் தனது கோடாலியைக் கடலில் எறிந்து கேரள கர்நாடக நிலப்பரப்பை உண்டாக்கியதால் அங்குள்ள அனைவருக்கும் அவரே மூதாதையர் எனக் கொண்டு நாயரும் அவரே ராயரும் அவரே என்பதிலும் தவறில்லை.
நாயருக்கு விளக்கம் தருவது இருக்கட்டும் அதற்கு முன்னால் என்ன உந்த? யார் உந்த எதற்கு உந்த எனக் கேள்வி. அங்கேதான் தமிழின் அழகு வெளிப்படுகிறது. இவன் என்றால் இங்கே இருப்பவன், அவன் என்றால் அங்கே இருப்பவன். உவன் என்றால் அவனுக்கும் இவனுக்கும் நடுவே இருப்பவன். அது போல தமிழ்நாட்டில் இருந்து பேசும் பொழுது இந்தத் தமிழன், அந்த வடநாட்டவன். அப்பொழுது கேரள நாயரை என்னவென அழைக்க? அதனால்தான் உந்த நாயர். என்னே தமிழின் சிறப்பு எனச் சொல்லி முடித்துவிடலாம்.