Thursday, May 19, 2022

ஆசானோடு ஓர் அருமையான மாலை!

ஆற்றொழுக்கு என்பது ஆற்றின் நீரோட்டத்தைக் குறிப்பது. மலையில் தொடங்கி கடலில் சேரும் ஆறு, சிறு ஓடையாகத் தொடங்கும், அங்கிருந்து அதிவேகமாகப் பொங்கி வரும், அருவியாகக் கொட்டும், பரந்தும் விரிந்துமானப் பெருநதியாக மாறும், சலனமின்றி நிற்பது போலத் தோன்றினாலும் வேகமாக ஓடும், பாறைகளில் மோதி கலைந்து சுழலும் நுரையுமாகப் பாயும், சில இடங்களில் தன் ஆர்ப்பரிப்பை எல்லாம் குறைத்துக் கொண்டு மனிதனும் மற்ற உயிர்களும் தன்னுடன் உறவாட வகை செய்யும். 

எழுத்திலும் பேச்சிலும் இப்படி பிரவாகமாக எழுதுவதையும் பேசுவதையும் ஆற்றொழுக்கான நடை என்போம். அப்படி அமைய வேண்டும் என்பதால்தான் என்னவோ கம்பராமாயாணம் ஆகட்டும், கந்தபுராணமாகட்டும், கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து ஆற்றுப்படலம் என ஆறுகளின் பெருமையைச் சொல்லியே ஆரம்பிக்கின்றன. அதிலும் கம்பன், 'கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்' என்றது என்னைத்தானோ என எனக்கு ஒரு மயக்கம். கல்லிடையில் பிறந்ததும், போந்ததும் நிகழ்ந்து விட்டது. கடைசி காலத்தில் ஏதேனும் தீவு ஒன்றில் வசிக்கும் ஊழும் இருக்கிறதோ என்னவோ. போகட்டும். மீண்டும் ஆற்றொழுக்குக்கே வருவோம். 

ஆற்றொழுக்காகப் பேசுவது என்பது சிலருக்கே அமைவது. ஒரு தலைப்பில் தயார் செய்து கொண்ட உரையை மேடையில் பேசுவதை விட மிகக் கடினமானது பரந்துபட்ட பல தலைப்புகளில் தடைகளில்லாமல், கேட்பவர் கவனம் கெடாமல், சுவாரசியமாக , தொடர்ந்து பேசுவது. அப்படி மணிக்கணக்காகப் பேசக்கூடிய திறமை கொண்டவர் எழுத்தாளர் ஜெயமோகன். நேற்று மாலை அவருடன் சுமார் ஐந்து மணி நேரம் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

ஜெயமோகனோடு உரையாடப் போகிறேன் எனச் சொன்னதற்கு, நண்பரொருவர் அவர் பேசிக் கேட்கப் போகிறேன் எனச் சொல் என்று வேடிக்கையாகத் திருத்தினார். ஆனால் நடந்ததென்னவோ அதுதான். மறுநாள் விடிகாலை எழுந்து பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் இரவு முழுவதும் கூடப் பேசி இருப்பார் போல. பேசிய அவருக்கும் சரி, கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கும் சரி, கொஞ்சமும் அயர்ச்சியே இல்லை. 



தன் எழுத்து குறித்த விமர்சனம், சக எழுத்தாளர்களுடன் கொண்ட நட்பு, இந்திய வரலாறு, தெருப் பெயர்களை மாற்றுவது, இந்தியாவின் முன்னேற்றத்தில் ஆங்கிலேயர் பங்களிப்பு, அவர்கள் வரலாற்றினை ஆவணப்படுத்துவதிலும் வரைபடங்களாக நிலத்தினை வரைந்து கொள்வதிலும் காண்பித்த ஆர்வம், கர்நாடக சங்கீதம், தமிழ்ப்பாடல்கள், குணங்குடி மஸ்தான் சாகிப், பெரியசாமி தூரன், கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், விருத்தங்கள் பாடுவது, கம்ப ராமாயணம், டிகேசி, கம்பன் கழகம், நாஞ்சில் நாடன், அலங்காரப் பேச்சு அலங்கோலங்கள், மேடைப் பேச்சு அனுபவங்கள், மொழிபெயர்ப்பு, தமிழ் இலக்கணம், எழுவாய் பயனிலை சார்ந்த சங்கடங்கள், மலையாளம், அதற்கு முன்பான மலையாண்மை என்ற மொழிவடிவம், தத்துவம் சார்ந்த எழுத்துகளைத் தமிழிலும் மலையாளத்திலும் கொண்டு வருவதற்கான மொழி சார்ந்த சிக்கல்கள், அமெரிக்க அனுபவங்கள், ஆஸ்டினில் பார்க்க முடிந்த இடங்கள், நேரமின்மையால் பார்க்க முடியாமல் போன ஓ. ஹென்றி நினைவில்லம், அதிபர் ஜான்சன் நூலகம், ஆஸ்டின் பொது நூலகம், அமெரிக்க நூலகங்களில் நாம் படித்த ஆங்கில எழுத்தாளர்கள், சிறுகதை நாவல் போன்ற வடிவங்களுக்கான இலக்கணம், 1990ஆம் ஆண்டு தான் எழுதிய 'ரப்பர்' நாவலுக்குப் பரிசு கிடைத்த மேடையில் பேசியது, அதில் கிடைத்த ஊக்கத்தில் நாவல் கோட்பாடு எழுதியது, பா. ராகவன் நாவல்கள், அவர் முன்னெடுத்திருக்கும் எழுத்தாளர்களுக்கான வகுப்பு, புத்தகங்களை வாசிப்பதற்கும் கேட்பதற்கும் உண்டான வித்தியாசங்கள், புத்தகங்கள் திரைப்படங்களாகுதல், திரைப்பிரபலங்களுடான நட்பு, திரைப்பட அனுபவங்கள், சென்னை ரவுடிகள், திரைப்பட நடிகர்கள் மேல் வரும் அசூயை, கட்டப்படும் கதைகள், கவிஞர் கண்ணதாசன் குறித்த கதைகள், என் எஸ் கிருஷ்ணன் பட்ட சிரமங்கள், எம் கே தியாகராஜ பாகவதரின் இறுதிக் காலம் குறித்த கட்டுக்கதைகள், அவர் குற்றம் சாற்றப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த முறை, இந்தியாவில் இருந்த - அமெரிக்காவில் இருக்கும் ஜூரி சிஸ்டம், ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்கள் துறை விட்டுத் துறை மாற்றப்படுவது, நம் வரலாறு குறித்த ஆவணங்கள் வெளிநாடுகளில் இருப்பது, அவற்றைப் பார்க்க லிஸ்பன் போர்த்துகல் செல்ல ஆசை இருப்பது, தமிழ் விக்கி என மாலை நீண்டு கொண்டே இருந்தது. 

நான் மறந்து போய் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இன்னும் பல. இடையிடையே வந்திருப்பவர்களின் கேள்விகள், அதற்கான பதில்கள், அவர்களது பார்வை என்று கச்சேரி களைகட்டியே இருந்தது. பிரபல எழுத்தாளர் குறித்த அவர் புதிர் ஒன்றிற்குப் பதில் அளிக்க முடியாமல் விழித்தேன். விழித்தது நான் மட்டுமல்ல என்பது மட்டுமே ஆறுதல். 

பார்த்துப் பத்து வருடங்களுக்கு மேலாகி இருந்தாலும் என்னை நினைவில் வைத்திருந்து இது இலவசக்கொத்தனார் என மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சிதான். அங்குள்ள பலரும் 'நீதானா அது?' எனப் பார்த்த பார்வையால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. புதிய நட்புகள் சில கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சி. கூடுதல் பரிசாக எனக்காகக் கையெழுத்திட்ட புத்தகம் ஒன்றினையும் வழங்கினார். 


ஜெயமோகனின் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நண்பரொருவர், ஜெயமோகனின் புத்தகம் போன்ற கேக் ஒன்றைச் செய்து கொண்டு வந்திருந்தார். அளவிலும் ஜெயமோகன் எழுதும் புத்தகங்களை ஒத்து இருந்தது. அருமையான சாக்லேட் கேக். அதனை வெட்டி, உடன் வந்திருக்கும் அருண்மொழிக்கு ஊட்டி விட்டபின், இயேசுவின் உடல் அப்பமாக வழங்கப்படுவது போல் எங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு ஒரு துண்டு ஊட்டி விடப்பட்டது. ஜெயமோகன் இலக்கிய சந்திப்புகளின் விதிமுறைகள் அறிந்ததால் அப்பத்தோடு வைன் கிடைக்குமா என்ற நப்பாசை கிஞ்சித்தும் இல்லை. 


வந்தவர்களை வரவேற்றுக் கவனிப்பது, இடையிடையே தேநீர், பின் இரவுணவு, கேக் என அருமையாகக் கவனித்துக் கொண்ட நண்பர் சௌந்தர் அவர்களுக்கு என் நன்றி. நான் ஒன்றிரண்டு புகைப்படங்களுக்கு மேல் எடுக்கவில்லை. எடுத்தவர்கள் பகிர்ந்தால் அதனை இந்தப் பதிவில் சேர்க்கிறேன். 

நல்லதொரு மாலைப்பொழுது அமையச் செய்த ஜெயமோகனுக்கு நன்றி.