Wednesday, August 31, 2022

விநாயகர் தந்த வீட்டுப் பாடம்

இன்றைக்கு விநாயக சதுர்த்தி. விளையாட்டாய் விநாயகன், வின் நாயகன் என வார்த்தை விளையாட்டு ஒன்றினை விளையாடினேன். 

அதனாலோ என்னவோ, ஒரு நண்பன் வடிவில் அவரே வந்து வீட்டுப் பாடமொன்றைத் தந்துவிட்டார். கைத்தல நிறைகனி பாட்டுக்குப் பொருள் ஓரளவு தெரிந்தாலும் வரிக்கு வரி பொருள் சொல் என்பதே அந்த நண்பன் கேட்டது. எத்தனையோ பெரியவர்கள் இதற்கு முன் எழுதியதுதான் என்றாலும் பிள்ளையார் சதுர்த்தி அன்று என்னைக் கேட்டதால் நான் கற்றதை எழுத முனைகிறேன். 

இப்பாடல் அருணகிரிநாதர் அளித்த திருப்புகழில் வரும் விநாயகத் துதி. எந்த வேலையைத் தொடங்கும் பொழுதும் விநாயகனைத் துதித்துப் பின் தொடங்க வேண்டும் என்ற மரபினை ஒட்டி திருப்புகழையும் விநாயகனைத் துதித்தே தொடங்குகிறர் அருணகிரிநாதர். இந்தப் பாடலில் மெய்யெழுத்துகளை விட்டு எண்ணிப் பார்த்தால் இருநூறு எழுத்துகள் வரும். நூறு என்பதைப் பிள்ளையார் எனச் சொல்லும் வழக்கமுண்டு. எனவே இப்பாடலை இரட்டைப் பிள்ளையார் என்பர். வண்ண விருத்தம் என்ற எழுதக் கடினமான விருத்தவகையில் எழுதப்பட்டது திருப்புகழ். விருத்த இலக்கணத்திற்குள் போனோமானால் அதுவே பல பதிவுகளுக்கு இழுத்துவிடும். அதனை மற்றொரு சமயத்திற்கு வைத்துக் கொள்வோம். 

முதலில் பாடலைப் பார்க்கலாம். பாடலைப் படிக்கும் பொழுது வாரியார் சுவாமிகள் குரலில் கேட்கவும் செய்வோம். 



கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
அப்பம் தெரியும் அரிசிப்பொரி தெரியும். முட்டைப்பொரி கூடத் தெரிஞ்சிருக்கலாம். ஆனா அது என்னடா டவல் பொரி, துண்டுல பார்சல் பண்ணித் தருவாங்களான்னு எல்லாம் மிரள வேண்டாம். பாடலைப் பதம் பிரிச்சுப் படிச்சா, எவ்வளவு எளிமையான மொழியில் எழுதி இருக்காருன்னு தெரியும். 

1) கைத்தலம் நிறை கனி, அப்பமொடு, அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடி பேணி
2) கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் என வினை கடிது ஏகும் 
3) மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
மல் பொரு திரள் புய மதயானை
4) மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே
5) முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
6) முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடி செய்த அதி தீரா
7) அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதன் இடை இபமாகி
8) அக்குறமகள் உடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணம் அருள் பெருமாளே! 

ஒரு சில சொற்களைத் தவிர நேரடியாகப் பொருள் புரிந்துவிடும் என்றாலும் வரிக்கு வரி பொருள் சொல் என நண்பன் பணித்ததால் அப்படியே பார்ப்போம். 

1) கைத்தலம் நிறை கனி, அப்பமொடு, அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிப் பேணி - கைகளிலே கனி அப்பம் அவல் பொரி ஆகியவற்றை எடுத்து உண்ணும் யானை முகத்தானின் திருப்பாதங்களை வணங்கி

கைத்தலம் நிறை - தலம் என்ற சொல்லுக்கு உடலின் ஒரு பகுதி என்ற பொருளும் உண்டு. எனவே கைத்தலம் நிறை என்றால் கையாகி பகுதியில் நிறைந்து இருக்கும் 

கனி, அப்பமொடு, அவல் பொரி - பிள்ளையார் கையில் கனி வந்த கதை நமக்கு எல்லாம் தெரியும். விரிவாகச் சொன்னால் முருகன் கோச்சுப்பான். அப்படி கனி, அப்பம், அவல் பொரி எல்லாம் எடுத்துக் கொண்டு 

கப்பிய - கப்பு என்பதற்கு விரைவாக உண்ணுதல் எனப் பொருள். அகராதி ஆங்கிலத்தில் Eat voraciously எனப் பொருள் சொல்கிறது. எங்கம்மா வார்த்தைகளில் சொல்லணும்ன்னா காணாததைக் கண்டா மாதிரி அடைச்சுக்கிறது. பிள்ளையார் கனி, அப்பம், அவல் பொரி எல்லாத்தையும் கையிலே எடுத்து வாயில் அடைச்சுக்கிட்டுச் சாப்பிடுவாராம். 

கரிமுகன் - கரி என்றால் யானை. கரிமுகன் என்றால் யானை முகம் கொண்டவன். 

அடி பேணி - பேணுதல் என்றால் மதித்தல். 

2) கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் - நல்ல நூல்களைக் கற்றுத் தெளியும் பக்தர்களின் மனத்தில் இருப்பவனே. கற்பக மரம் போல வேண்டும் அனைத்தையும் தருபவனே எனத் துதிக்க, தீயவை விட்டு விலகி ஓடும் 

உறைபவ - உறைபவனே என்று கூப்பிடும் சொல். 

கடிது - விரைவாக 

ஏகும் - போகும் 

தமிழகத்திலேயே பழைமையான பிள்ளையார் கோயில் எனக் கருதப்படும் பிள்ளையார்பட்டி கோயிலில் பிள்ளையார் கற்பக விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3) மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மதயானை - ஊமத்தம் பூவையும் பிறை நிலவையும் வைத்துக் கொண்டு இருக்கும் சிவனின் மகனே, மல்யுத்தம் செய்ய உகந்த திரண்ட தோள்களைக் கொண்டவனே, மத யானை போன்றவனே 

மத்தம் - ஊமத்தம் பூ. சிவனைப் பற்றிச் சொல்லும் பொழுது மற்றவர்களுக்கு வேண்டாததை விரும்பி ஏற்றுக் கொள்ளும் கடவுள் என்பார்கள். பட்டாடை கிடையாது, புலித்தோல்தான். ஊருக்குள்ளே இடம் கிடையாது சுடுகாடுதான். தங்கத்தட்டு கிடையாது கபாலம்தான். அது போல எதற்கும் பயனில்லாத ஊமத்தம் பூவை விரும்பி ஏற்றுக்கொள்பவன் சிவன். 

மதியம் - நிலவு. மாசில் வீணையும் மாலை மதியமும் என்ற பாடலில் வருவது போல. அப்படி ஊமத்தம் பூவையும் நிலவையும் கொண்ட சிவன் என வர்ணிக்கிறார். 

மல்பொரு திரள் புய - மல்யுத்தம் செய்ய உகந்த திரண்ட தோள்களைக் கொண்ட, புஜம் என்ற சொல் தமிழில் புயம் என்று ஆகும். 

4) மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே - மத்தளம் போன்ற தொந்தியைக் கொண்ட கண்பதி, உத்தமியாம் பார்வதியின் புதல்வன். 

அப்பாவைச் சொன்ன பின் அம்மாவைச் சொல்லாமல் இருக்க முடியுமா? போன வரியில் சிவன் மகனே என்றதும் இந்த வரியில் சிவகாமி என்ற உத்தமியின் மகனே என அழைக்கிறார். கூடவே தவிர்க்கவே முடியாத அவரோட தொந்தியையும் சொல்லிடறார். 

மட்டு - மட்டு என்றால் கள். இதழ்களை விரித்தால் கள் சொட்டக் கூடிய மலர்களைத் தந்து கும்பிடுவேன் என்பதை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே என்கிறார். 

5) முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே - முத்தமிழுக்கான இலக்கணத்தை மேரு மலையில் முதன்முதலாக எழுதித் தந்த மூத்தவனே 

அடைவு - அடைவு என்றால் விதம். Form என்கிறது அகராதி. நாட்டியங்களில் அடவு எனப்படும் இலக்கணம் இந்த அடைவே. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கான இலக்கணத்தை வேறு யாரு தருவதற்கு முன் தந்தவர் பிள்ளையார். அவர் மேரு மலையில் இதனை எழுதியதாக ஐதிகம்.

6) முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா - திரிபுரங்களை எரித்த சிவனின் தேர் அச்சினைப் பொடிப் பொடியாக உடைத்த தீரத்தைச் செய்தவனே. 

திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளை எரித்து அழித்தவர் சிவன். அவர் அப்போருக்குச் செல்லும் பொழுது விநாயகனை வணங்கிச் செல்ல மறந்துவிட்டார். அப்பா என்றாலும் ஒரு செயலைத் தொடங்கும் பொழுது முழுமுதற்கடவுளை வணங்கி இருக்க வேண்டுமல்லவா. அப்படி வணங்காது சென்றதால் சிவன் ஏறிய தேரின் அச்சினை முறித்துவிட்டாராம் பிள்ளையார். தன் தவற்றினை உணர்ந்து பிள்ளையாரை வணங்கி மீண்டும் தேரில் ஏறி திரிபுரத்தை சிவன் எரித்தார் எனக் கதை போகும். அதைத்தான் இங்கே சுட்டிக் காட்டுகிறார். 

இந்நிகழ்ச்சி நடந்த இடம், சென்னைக்கு அருகே, செங்கல்பட்டுக்கு மிக அருகே, மதுராந்தகத்தைத் தொட்டடுத்த அச்சிறுப்பாக்கம். அச்சு இறு பாக்கம் என்பதே அச்சிறுபாக்கம் என்றானது என்பார்கள்.

7) அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதன் இடை இபமாகி - காதல் பிணி கொண்ட தம்பி சுப்பாமணிக்காக, அவன் பிணியைத் தீர்க்கும் பொருட்டு வயற்காட்டில் யானையாகி வந்தவரே 

புனம் - காடு. Land suitable for dry grain, commonly on hills என்கிறது அகராதி. வயற்காடு, தினைக்காடு என்பதைத்தான் புனம் என்கிறார். 

இபம் - யானை. தமிழில் யானைக்குத்தான் அத்தனை சொற்கள். அத்தி, ஆனை, கரி, குஞ்சரம், தந்தி, திண்டி, நாகம், பிடி, வேழம் என யானையைக் குறிக்க நூற்றுக்கும் மேலான சொற்கள் உண்டு. தமிழர்தம் வாழ்வோடு அத்தனை இயைந்தது யானை. 

8) அக்குறமகள் உடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே! - வள்ளியுடன் முருகன் திருமணம் நடக்க அருள் புரிந்தவனே!

பெருமாளே - பொதுவாகத் திருமாலைப் பெருமாள் என்றாலும் கூட பெருமாள் என்பது கடவுளுக்கான பொதுப்பெயர்தான். திருப்புகழில் முருகனைப் பெருமாளே என்றழைத்துப் பாடும் அருணகிரிநாதர், இப்பாடலில் விநாயகரைப் பெருமாளே என்றே துதித்து வணங்கி இருக்கிறார்.  

விநாயக சதுர்த்தியான இன்று, நானும் அவரை வணங்கிக் கொள்கிறேன். இந்தப் பதிவு எழுத காரணமாக இருந்த நண்பனுக்கு என் நன்றி.  அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்! 

என் தமிழுக்கு வழிகாட்டியாக, என் ஆசானாக இருக்கும் ஹரியண்ணா அவர்களுக்கு, அவர்தம் மகன் திருமண நிகழ்வையொட்டி, ஒரு சிறு பரிசாக இந்தப் பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன். எதேனும் பிழை இருந்தால் பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

4 comments:

said...

முத்தமிழ் அடைவு என்றால் என்ன என்றும் அதை மலையில் விநாயகர் எழுதியதாகவும் நான் அறிந்திருக்கவில்லை. நன்றி! மகாபாரதம் எழுதியது பற்றியே அறிந்திருந்தேன்.

said...

கைத்தல நிறைகனி மாங்கனியா, மாதுளங்கனியா?

said...

மாங்கனிதாங்க. அதைத்தானே தம்பியை ஏய்ச்சு வாங்கிக்கிட்டார். :)

said...

//முத்தமிழுக்கான இலக்கணத்தை மேரு மலையில் முதன்முதலாக எழுதித் தந்த மூத்தவனே//

அட? இது புதுசு! நன்றி.