டாம்போபாட்டா ஆராய்ச்சி மையம். டாம்போபாட்டா வனப்பகுதியில், மனிதர் வசிப்பிடத்தில் இருந்து மிகவும் விலகி இருக்கும் விடுதி. முன்பே சொன்னது போலப் படகில் சென்று, படகுத்துறையில் இருந்து காட்டின் உள்ளே நடந்து சென்று அடைய வேண்டிய இடம். சுற்றிலும் காடு, பறவைகளின் சத்தம், பறந்து கொண்டே இருக்கும் பட்டாம்பூச்சிகள் என்ற இயற்கை சூழல். இங்கு நமக்கு ஒரே ஒரு வேலைதான். காலையும் மாலையும் அங்கிருக்கும் ரப்பர் காலணிகளை மாட்டிக் கொண்டு காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டியதுதான்.
கையில் தொலைநோக்கியோடு எரிக் முன் செல்வார். பலியாடு மாதிரி நாம் சத்தம் போடாமல் பின்னால் போக வேண்டும். திடீரென்று நிற்பார். வெறும் மரங்கள்தான் நம் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அவர் எப்படியே அதில் இருக்கும் குரங்குக் கூட்டத்தைப் பார்ப்பார், மரங்கொத்திப் பறவையைப் பார்ப்பார், நமக்குச் சுட்டிக் காட்டுவார். அவர் காட்டிய பின்புதான் அது நமக்குத் தெரியும். தொலைநோக்கியைத் தயார் செய்து நமக்குப் பார்க்க வசதி செய்து தருவார். அதன் மூலம் நம் கைபேசிகளில் படமெடுத்தும் தருவார். கொஞ்சம் தள்ளி வந்து நாம் பார்த்த விலங்கினைப் பற்றி விபரம் சொல்வார். நானூறு ஐந்நூறு வருடங்களாக இருக்கும் பிரம்மாண்டமான மரங்கள், பல வகைக் குரங்குகள், பறவைகள், அவற்றின் கூடுகள், அவற்றில் முட்டைகள், சிலந்திகள், இலையை வெட்டிக் கொண்டு செல்லும் எறும்புகள் எனப் பெரிய விலங்குகளில் இருந்து சிறு பூச்சிகள் வரை பலவற்றை நம்மால் பார்க்க முடியும்.
ஆனால் ஒன்றை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். அமேசான் போன்ற மழைக்காடுகளில் விலங்குகளைப் பார்ப்பது ஆப்ரிக்கச் சமவெளிகளில் பார்ப்பது போல இல்லை. கூட்டம் கூட்டமாக விலங்குகள் நிற்கும், போகும் பொழுதெல்லாம் பார்க்கலாம் என்பது மழைக்காடுகளில் கிடைக்காது. அடர்த்தியாக இலைகள் அமைத்த விதானத்தினுள் மறைந்திருக்கும் விலங்குகளும் பறவைகளும். பார்ப்பது கடினம்தான். தொலைக்காட்சிகளில் பார்ப்பது போலத் தெளிவாகத் தொடர்ந்து பார்ப்பது அபூர்வம்தான். மின்னல் போலத் தோன்றி மறைந்து விடுகின்றன. நம்மால் பார்க்க முடிந்தது நமக்குப் பின் வரும் குழுவினருக்குப் பார்க்கக் கிடைக்காது. இந்தப் புரிதல் இல்லை என்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
நடந்து போய்ப் பார்ப்பது போதாது என்று படகில் சென்று கரையோரம் இருக்கும் விலங்கினங்களைப் பார்த்தோம். எங்கள் படகு முன்னால் சென்றது. பின்னால் மற்றுமொரு படகு வந்தது. நாங்கள் தாண்டிச் சென்ற ஒரு பகுதியில் அவர்கள் பார்ப்பதற்கு அரிய ஜாகுவார் என்ற புலி போன்ற விலங்கினைப் பார்த்தார்கள். ஆனால் நாங்கள் படகைத் திருப்பிக்கொண்டு அந்த இடம் வருமுன் அது காட்டுக்குள் சென்றுவிட்டது. இது போலக் கிடைத்தால் உண்டு இல்லை என்றால் இல்லை என்ற புரிதலோடு இங்கு வருவது நல்லது.
காலையிலும் மாலையிலும் பார்த்த காடு இரவில் எப்படி இருக்கும்? இரவுநேரத்தில் உலாவும் விலங்குகளைப் பார்க்க முடியுமா? இந்தக் கேள்விகளோடு ஓர் இரவு காட்டுக்குள் நடந்து சென்றோம். காரிருள், பூச்சிகளின் இரைச்சல், தொலைவில் கேட்கும் ஆந்தையின் அலறல் என வித்தியாசமான முகத்தைக் காண்பித்தது காடு. டாரண்டுலா சிலந்திகள், வண்ணமயமான தவளைகள் எனப் பகலில் பார்க்க முடியாதவற்றை இரவில் பார்க்க முடிந்தது. ஒரு சிலந்தி அதன் வலையில் இருப்பதைத்தான் பொதுவாகப் பார்ப்போம். ஆனால் இருநூறு முந்நூறு சிறு சிலந்திகள் சேர்ந்திருக்கும் வலையினைக் காண்பித்தார் எரிக். ஆந்தைகளைக் கேட்கத்தான் முடிந்ததே தவிரப் பார்க்க முடியவில்லை. இரவில் காட்டுக்குள் சென்றது வித்தியாசமான அனுபவம். புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் தளத்தில் ஒரு விடியோவை இணைத்திருக்கிறேன். விளக்கை அணைத்தால் ஒன்றுமே தெரியாத கும்மிருட்டையும் அப்பொழுது கேட்கும் ஒலிகளையும் அந்த விடியோவில் பார்க்கலாம், கேட்கலாம்.
நாங்கள் இருந்த நாட்களில் எல்லாம் மழை கொட்டப் போகிறது என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது கருமேகங்கள் சூழ்ந்த வானம். கடைசி தினத்தன்றுதான் வானத்தைப் பார்க்க முடிந்தது. அன்று இரவு வானம் அவ்வளவு அழகாக இருந்தது. செயற்கை வெளிச்சமே இல்லாத இடமென்பதால் ஏராளமான நட்சத்திரங்களைப் பார்க்க முடிந்தது. பூமியின் வடபகுதியில் பார்க்க முடியாத தென்சிலுவை என்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது சிறப்பான அனுபவம்.
இப்படி இரண்டு நாட்களை மனித நாகரிகத்தின் சுவடே இல்லாத இடத்தில் கழித்துவிட்டு கொஞ்சமும் மனதே இல்லாமல் வீடு திரும்புவதற்கானப் பயணத்தைத் தொடங்கினோம். விடுதியில் இருந்து படகுத்துறைக்கு நடை, அங்கிருந்து பிலடெல்பியாவிற்குப் படகு, பிலடெல்பியாவில் இருந்து புயெர்த்தோ மால்டனாடோ விமானநிலையத்திற்குப் பேருந்து, அங்கிருந்து லீமாவிற்கு விமானம், லீமாவிலிருந்து பனாமா சிட்டி வழியாக மீண்டும் ஆஸ்டின் என நெடும்பயணம் செய்து வீடு வந்தடைந்தோம்.
பெருவின் தென்பகுதியின் இருக்கும் பூனோ நகரத்திற்குச் சென்று, அங்கிருந்து டிட்டிக்காக்கா ஏரியைச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இதுவரை பார்த்த இடங்களுக்கே இரண்டு வாரங்கள் தேவைப்பட்டதால் அங்கு போக முடியவில்லை. டிட்டிக்காக்கா மிகப்பெரிய ஏரி. கிட்டத்தட்ட எண்பத்து மூவாயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் கடல் போல விரிந்துள்ளது இந்த ஏரி. கடல்மட்டத்தில் இருந்து பன்னிரண்டாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் பெருவிற்கும் பொலிவியாவிற்கும் இடையே அமைந்துள்ளது. உலகிலேயே பெரிய படகுகளைச் செலுத்தக்கூடிய ஏரிகளில் உயரமானது இதுதான் எனக் கருதப்படுகிறது. இன்கா இனத்தவரின் பூர்விகம் இதுதான். இங்குள்ள பழங்குடியினர் கோரைப்புற்களினால் செய்த செயற்கை தீவுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியைப் பார்க்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்.
சாப்பாட்டைப் பற்றிப் பேசவில்லையே. லீமாவைப் பொருத்தவரை பெரிய நகரம் என்பதால் எல்லா விதமான உணவு வகைகளும் கிடைக்கின்றன. இங்கு Raw Cafe என்ற வீகன் உணவகத்தில் சாப்பிட்டதும் மந்த்ரா என்ற இந்திய உணவகத்தில் சாப்பிட்டதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை.
கூஸ்கோ பகுதியில் பாரம்பரிய உணவு வகைகள் நன்றாக இருந்தன. ஓயான்டைடாம்போ விடுதியில் அவர்களே விளைவிக்கும் காய்கறிகள் கொண்டு சமைத்த உணவு வகைகள் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தன. கூஸ்கோ நகர்ப்பகுதியில் Guinea Pig என்று அழைக்கப்படும் முயல் போன்ற விலங்கினையும் அல்பாகாவையும் உண்பது உள்ளூர் மக்களின் பழக்கமாக இருக்கிறது. பல வகை உருளைக்கிழங்குகளையும் சோளங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தில் இருந்து தயார் செய்யப்படும் சிச்சா மொராடா என்ற பானத்தை அனைவரும் விரும்பிக் குடிக்கின்றனர்.
இங்கு கார்வால் இந்திய உணவகத்தில் உணவு வகைகள் நல்ல ருசியோடு இருந்தன. இந்த உணவகத்தை நடத்தி வரும் அமித் என்பவர் நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தார். இவர்களின் உணவகத்தில் அல்பாகா பிரியாணி கூடக் கிடைக்கிறது. அமேசான் காட்டுப் பகுதியில் இயன்றவரை ருசியாகச் செய்த உணவுப்பண்டங்களை அளித்தார்கள். சைவ உணவு உண்பவர்களுக்காக விசேஷ கவனம் எடுத்துக் கொண்டார்கள்.
சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடு என்பதால் உணவிலோ மற்றவற்றிலோ குறிப்பிட்ட தேவைகள் இருப்பின் முதலிலேயே சொல்லிவிட்டோம் என்றால் சரியான ஏற்பாடுகளைச் செய்து விடுகிறார்கள். நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும், உயரத்தால் வரும் உடற்சிக்கல்கள் என எல்லாவற்றையும் கணித்து அதற்கு ஏற்றாற் போலத் திட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள் வழிகாட்டிகள். எந்த வித அசௌகரியங்களும் நேராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
வீட்டை விட்டு வந்து இரண்டு வாரங்கள் போனதே தெரியவில்லை. மிகச் சுவாரசியமான பயணம். வழிகாட்டிகள் கொட்டிய தகவல்களால்தான் இந்தத் தொடரை எழுதவே தோன்றியது. பெருநகரம், பாலைவனம், மலைகள், காடுகள் எனப் பலவித அனுபவங்களை அடைய முடிவதும் தொன்மையான வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடிவதும் பெருவின் சிறப்பு. கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்.
என்னோடு இந்த பெரு(ம்) பயணத்தில் உடன் வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி.
பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன - அமேசான் புகைப்படங்கள்