Thursday, January 29, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - ஜனவரி 2009

இந்த மாதம் போட்ட புதிரில் எனக்கு நிறைவே இல்லை. வேலைப் பளு அதிகமாக வேறு இருந்தது. இருந்தாலும் விடாது போட வேண்டும் என்பதால்தான் புதிரினை வெளியிட்டேன். அதற்கேற்ற மாதிரியே இந்த முறை பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கையும் சரி, முழுவதற்கும் சரியான விடை அளித்தவர்கள் எண்ணிக்கையும் சரி மிகக் குறைவாகவே இருந்தது. எதனால் இந்த முறை அனைவரையும் கவரும்படியாக புதிர் இல்லை என்பதைச் சொன்னால் அடுத்த முறை திருத்திக் கொள்ள முயல்வேன். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்
  1. ஜி3
  2. ராம்
  3. மஞ்சுளா
  4. ராமையா நாராயணன்
  5. ஏஸ்
  6. திவா
  7. அரசு

அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்

5 ஆசாரமாய் இருக்க மடக்கு அல்லது மரணமடை (2)
மடி
- ஆசாரமாய் இருப்பதை மடி எனச் சொல்வார்கள். மடக்கு என்றாலும் மரணமடை என்றாலும் மடி என்ற பொருள் வருகிறது அல்லவா.

6 நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே (3,3)
தில்லை வாரும்
- இதுதான் எனக்கு சரியாக அமையாத குறிப்பு. நடராசர் பார்க்க தில்லை வாரும். இதில் வருவதில்லை என்பதில் இருந்து தில்லை என்பதும் அதைத் தொடர்ந்து வரும் வந்திடும் என்பதற்கு இணையான சொல்லாக வாரும் என்பதையும் போட்டு இருந்தேன். பலரும் சரியாக சொன்னது எனக்கே ஆச்சரியம்தான்.

7 கிழவி தைத்ததைப் பார்த்தால் முளைக்கப் போட்டது கிடைக்கும் (4)
விதைத்த
- கிழவி தைத்த என்ற சொற்களின் உள்ளேயே விதைத்த என்ற விடை இருக்கிறது. முளைக்கப் போட்டது என்பது விதைத்த என்ற பொருளை உணர்த்துகிறது.

8 மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? (3)
பெண்ணை
- மகளை என்பதற்குப் பெண்ணை எனச் சொல்லலாம். பெண்ணை என்பது நதியின் பெயரும் கூட.

9 கொஞ்சம் காரமாய் அம்மா திரும்பினால் மனைவியா ஆவாள்? (3)
தாரமா
- கொஞ்சம் க்ரிப்டிக்கான குறிப்புதான். அம்மா என்னும் சொல்லுக்கு ஈடாக மாதா என்ற சொல்லை எடுத்துத் திருப்பினால் தாமா என வரும். அதன் நடுவே கொஞ்சமாய் காரம் என்பதால் அதிலிருந்து ஒரு எழுத்து - ர என்ற எழுத்தைப் போட்டால் மனைவியா என்ற பொருள் தரும் தாரமா என்ற சொல் வரும்.

11 நகரம் திரும்பினால் நாட்டை ஆளுமே (3)
கமுதி
- நகரத்தின் பெயர். திருப்பிப் போட்டால் திமுக. தற்பொழுது நாட்டை ஆளும் கட்சி.

13 சங்கடம் இங்கு இல்லா வட்டம் (4)
சகடம்
- சகடம் என்றால் வட்டம். சங்கடம் என்ற சொல்லி ‘ங்’ என்ற எழுத்தை எடுத்தால் சகடம் வந்திடும். ‘ங்’ என்ற எழுத்தை இங்கு என உச்சரிப்பதால் இங்கு இல்லா என்று குறிப்பில் கூறியுள்ளேன்.

16 புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது (6)
விவேகமற்ற
- புத்தியற்ற என்பது இதற்குப் பொருள். புரவியின் இறுதி = வி. மெதுவாக = வேகமற்ற. இரண்டும் சேர்ந்தால் விவேகமற்ற வருதா!

17 இரவில் தெரியும் சூரியன் (2)
ரவி
- மிக எளிதான குறிப்பு. சூரியன் என்பது பொருள் இரவில் என்ற வார்த்தையினுள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்த தெரியும் என்ற குறிச்சொல்லும் இருக்கிறது.

மேலிருந்து கீழ்
1 காயம் பட பாதம் கொண்டு மிதி (2,2)
அடிஉதை
- கொஞ்சம் யோசித்தல் ரொம்ப எளிமையான குறிப்புதான். காயம் பட அடி உதை. பாதம் என்றால் அடி. மிதி என்றால் உதை.

2 அரை முத்தம் கொடு என்றால் தாக்கியதா? (5)
பாதித்ததா
- கொஞ்சம் வேண்டுமென்றே குழப்பிய குறிப்பு. அரை என்றால் பாதி. அரை முத்தம் என்றால் முத்தம் என்ற சொல்லி பாதி = த்த. ஆக அரை என்ற சொல் இங்கு டபுள்ட்யூட்டி செய்கிறது. கொடு என்றால் தா. பாதி+த்த+தா = பாதித்ததா. தாக்கியதா என்பது பொருள்.

3 கலையின் தலையெடுத்து தலைகீழாய் பிச்சை கேட்கும் சிற்பமா? (3)
சிலையா
- கலை என்ற சொல்லின் தலையை எடுத்துவிட்டால் மிஞ்சுவது லை. பிச்சை கேள் என்றால் யாசி. இது தலைகீழாக மாற சியா. இதனுள் லை என்ற எழுத்து நுழைய சிலையா. சிற்பமா என்பது பொருள்.

4 லட்சுமி நிலபுலன் கொண்டு வந்தால் நாமம்தான் (4)
திருமண்
- என்னோட பேவரைட் குறிப்பு இதுதான். திரு என்றால் லட்சுமி. மண் என்றால் நிலபுலன். திருமண் என்பது நாமத்தைக் குறிக்கும்.

10 மாது சற்றே ஓசை குறைத்துக் கொள்ள தூய்மையானது (5)
மாசற்றது
- மாது சற்றே என்ற எழுத்துக்களை எடுத்து அதில் றே என்பதின் ஓசையைக் குறைத்து ற என மாற்றிப் போட்டால் மாசற்றது என்ற சொல் கிடைக்கும். தூய்மையானது என்பது பொருள்.

12 முப்பத்திரண்டையும் பாதுகாத்திட முருகனுக்குத் தேவையானது (4)
முனைவேல்
- இது ரொம்ப எளிதான் குறிப்பு என நினைத்தேன். ஆனால் நிறையா பேர் போடாதது ஆச்சரியம்தான். முப்பத்திருபல் முனைவேல் காக்க என கந்த சஷ்டிக் கவசத்தில் வரும்.

14 உலோக முரசைக் கொட்டியதால் இப்படிச் செவிடாகும் (4)
டமாரம்
- உலோக முரசு மற்றும் டமாரச் செவிடு என இரு வகையான அர்த்தம் கொண்ட சொல்.

15 பாடு படாத ஈடுகோள் மட்டம் (3)
சமன்
- சமன்பாடு என்றால் ஈடுகோள். ஆங்கிலத்தில் Equation. அதில் பாடு போக மீதம் இருப்பது சமன். மட்டம் என்பது பொருள். ஈடுகோள் என கூகிளாண்டவரை வேண்டி இருந்தால் எளிதாக இருந்திருக்கும். சமம் என்ற விடையை சரியானதாகக் கருதவில்லை.


இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.

Tuesday, January 20, 2009

புதசெவி - 01/20/2009 அல்லது பெனாத்தலாருக்கு எச்சரிக்கை!

இந்த மாதம் புதசெவி பதிவு போடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா மாற்றங்கள் எல்லாம் பெரிய இடங்களில்தான் உனக்கென்ன என மனசாட்சி கேட்க, அதுவும் சரிதான் என்று வழக்கம்போல் புதசெவி பதிவு எழுதிட்டேன். இனி இந்த பதிவுக்கான விஷயங்கள்.

செய்தி 1
நீங்க எல்லாரும் நம்ம பெனாத்தலார் எழுதின பதிவைப் படிச்சு இருப்பீங்க. ஜூப்பரு, நெத்தியடி அப்படின்னு எல்லாம் ஏத்திவிட்டு இருக்காங்க நிறையா புண்ணியவானுங்க. ஆனா, ஐயா பெனாத்தலாரே நான் சொல்லறேன். சாக்கிரதையா இருந்துக்குங்க. இப்படித்தான் தாய்லாந்து நாட்டு இளவரசர் பத்தி என்னமோ எழுதினதுக்காக ஒரு அவுஸ்திரேலிய எழுத்தாளரை மூணு வருஷம் உள்ள தள்ளிட்டாங்களாம். அது தாய்லாந்து அதனால மூணு வருஷம். இது தந்தையர் நாடு. சாக்கிரதை மக்கா! செய்திக்கு இங்க போங்க. பெனாத்தலார் பதிவுக்கு இங்க.

பஞ்ச்: உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க.. இப்படி ஆமையை திருப்பி போடு அடிக்கணும் ரேஞ்சுக்கு சமையல் குறிப்பு போடாதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.

செய்தி 2:
அடுத்தது நம்ம ஊர் மேட்டர் ஒண்ணு பார்க்கலாம். புத்தாண்டு, இல்லை பொங்கல், இல்லை கருத்துக் கந்தசாமி பொறந்த நாளு, இப்படி ஒவ்வொரு ஆட்சியாளரைப் பொறுத்து எதோ ஒரு நாள். நாம எல்லாரும் பொங்கல் பொங்கிச் சாப்பிடுவோம். ஆனா நம்ம ஊர் ஒண்ணு இந்த நாளில் அகில உலக பிரபல்யம் அடைஞ்சு இருக்கு. ஏன் தெரியுமா? எங்க ஊரை எந்த வியாதியும் அண்டக்கூடாதுன்னு 7 வயசு பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் தவளைகளோட கல்யாணம் பண்ணி வெச்சு இருக்காங்க. மேட்டருக்கு இங்க போங்க. இந்தக் கல்யாணமா இல்லை முன்னாடி சொன்ன கட் அவுட் கல்யாணமா? எது பெட்டர்?

பஞ்ச்: தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு? இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது

செய்தி 3
சில நாட்களுக்கு முன் விமானி ஒருவர் திறமையாக ஹட்சன் நதியில் ஒரு விமானத்தை இறக்கி 155 உயிர்களைக் காப்பாற்றி இருப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் விமான நிலையத்தில் இறக்காமல் உயிர்களைக் காப்பாற்றிய விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். கார்டிப் நகரத்தில் இருந்து பாரிஸ் வரை வந்த விமானத்தில் தரை இறங்கும் முன் விமானி செய்த அறிவிப்பு "Unfortunately, I'm not qualified to land the plane in Paris." இப்படிச் சொல்லி விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சென்றதாம். செய்தி இங்கே. எகொஇச!

பஞ்ச்: இனிமேல ஒண்ணும் சரி ஆவாதுன்ற நிலைமை வந்ததும், நான் தான் தப்பு.. நான் தான் தப்பு - சத்யமா சொல்றேன்.. என்னை விட்டுடுங்க நான் ஓடிப்போறேன்னு நம்பினவங்களை நட்டாத்துல விடாம, கிளம்பின இடத்துக்கே கொண்டு போய் சேத்தாரே புண்ணியவான்.. அவரைப் பாராட்டுவீங்களா.. அதை விட்டுட்டு..

செய்தி 4
இது நம்ம மேட்டர். தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள் பற்றி எல்லாம் கேட்டு இருப்பீங்க. ஆனா இவங்க தூக்கத்தில் எழுந்து கணினியை துவக்கி, தனது மின்னஞ்சல் கணக்கினுள் போய், நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்காங்களாம். அடுத்த நாள் அந்த மின்னஞ்சல்கள் எல்லாம் பார்த்து அம்மிணிக்கு ஒரே அதிர்ச்சியாம். அந்த கால ஆனந்தவிகடனில் வரும் ஆபீசில் தூங்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு வாழ்வுதான்! செய்தி இங்கே.

பஞ்ச்: தூக்கத்துல மின்னஞ்சல்தானே அடிச்சாங்க? இது ஒரு தப்பா? போதையிலே எத்தனையோ பேர் பதிவே போடறாங்க! தூக்கத்துல நாடே ஆளறாங்க.. இதுக்கெல்லாம் அந்த அம்மணி அதிர்ச்சி ஆகறதுதான் அதிர்ச்சியா இருக்கு!

செய்தி 5
கவுஜ எழுத வேண்டாம், கவுஜ எழுத வேண்டாமுன்னு சொன்னாக் கேட்கறாங்களா? இப்படி உடைச்சு உடைச்சு கவுஜ எழுதறது, அதையே யோசிக்கறது எல்லாம் ஒரு மாதிரியாப் போயிடுமுன்னு சொன்னாக் கேட்கறதே இல்லையே. இங்க பாருங்க, கவுஜ எழுதறாங்க, அதைப் படிச்சு அடுத்தவங்களைக் கேட்க வெச்சுக் கொடுமைப் படுத்தறாங்க. ஆனா அதுக்கு அப்புறம் -10 டிகிரி குளிரில் தண்ணீரில் போய் குதிக்கிறது எல்லாம் இரண்டாம் மாடி. இதுக்குத்தான் சொல்லறேன் - கவுஜ வேண்டாம்! செய்தி இங்க.

பஞ்ச்: கவுஜ வேண்டாம் என பாசிஸ முரசுகொட்டும் கொத்தனாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். கவுஜைன்னா எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இங்கே திட்டறதுக்கும் கவிதைதான்.. வெட்டறதுக்கும் கவிதைதான்.. ஜெயிச்சா மகனை வாழ்த்தவும் கவிதைதான்.. தோத்தா மக்களைத் திட்டவும் கவிதைதான்..நீளமா எழுதி அதை படிக்கட்டா வெட்டி கவுஜ படைச்சுப்பாருய்யா அப்ப தெரியும் கஷ்டம்! உங்களுக்குத் தெரியுமா நீங்க கொடுத்த செய்தியிலே எவ்ளோ பெரிய புரட்சி இருக்குதுன்னு? கவுஜ எழுதின பாவத்தை தொலைக்க உடனே முழுக்கு போட்டிருக்காங்க - நடக்குமா இது நம்ம ஊர்லே?

செய்தி 6
கடைசியா ஒரு சோகச் செய்தி. அவுஸ்திரேலியாவில் ஒரு ரக்பி விளையாட்டின் முதற்பகுதி முடியும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் ஆடுகளத்திலேயே விழுந்து இறந்துவிட்டாராம். உடன் ஆடியவர்கள் என்ன செய்தார்களாம் தெரியுமா? ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார்களாம். இதனால் இறந்தவர் குடும்பம் மிகுந்த மன கஷ்டத்திற்குள்ளானார்களாம். இங்க படியுங்க.

பஞ்ச்: சே.. இரக்கம் கெட்ட விளையாட்டா இருக்கு! நாமன்னா குறைஞ்சது ஒரு 10 நாள் வீராவேசமா பேசுவோம், 6 மாசம் அமுக்கி வாசிப்போம், ரெண்டு வருஷம் கழிச்சி சமாதானம் ஆவோம்.. அப்புறம்தான் கண்ணு பனிக்கும் இதயம் புளிக்கும் - செத்தவங்களை மறப்போம். நம்மளை மாதிரி ’கருணை உள்ளம்’ அவங்களுக்கு வருமா?

கடைசியா ஒரு போனஸ் மேட்டர். ஆனா இது வயது முதிர்ந்த வாசகர்களுக்கு மட்டும்.



பஞ்ச்: என்ன மேட்டரா இருந்தாலும் (முக்கியமா என்னோட கருத்துக்களா இருந்தா) அவசரப்பட்டு கருத்து சொல்லிடக்கூடாதுன்னு சொல்ற அற்புதத் தத்துவமய்யா இது! சரி.. நீரும் பாத்துட்டீர்.. உங்க கலர் கண்ணாடி பல்லை இளிச்சுதா இல்லையா?

Wednesday, January 14, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009

எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த வருட ஆரம்பத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. அப்படி இருப்பதே கூட நல்ல விஷயம்தான். ஆனால் இந்த குறுக்கெழுத்துப் புதிரைச் செய்ய நேரமில்லாமல் போய்விட்டது. அதனால் வழக்கமாக ப்ரிவியூ பார்க்கும் பெனாத்தலார் இந்த முறை இணை இயக்குனராக மாறி பாதிக்கும் மேல் குறிப்பெழுதி இருக்கிறார். எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னா இதை அவரிடம் மொத்தமாக அவுட்சோர்ஸ் பண்ணிவிட ஒரு சான்ஸ் கிடைக்கும். :)

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.



1
2
3
4
5
6





7

8



910


1112

1314


15


16
17






இடமிருந்து வலம்
5 ஆசாரமாய் இருக்க மடக்கு அல்லது மரணமடை (2)
6 நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே (3,3)
7 கிழவி தைத்ததைப் பார்த்தால் முளைக்கப் போட்டது கிடைக்கும் (4)
8 மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? (3)
9 கொஞ்சம் காரமாய் அம்மா திரும்பினால் மனைவியா ஆவாள்? (3)
11 நகரம் திரும்பினால் நாட்டை ஆளுமே (3)
13 சங்கடம் இங்கு இல்லா வட்டம் (4)
16 புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது (6)
17 இரவில் தெரியும் சூரியன் (2)


மேலிருந்து கீழ்
1 காயம் பட பாதம் கொண்டு மிதி (2,2)
2 அரை முத்தம் கொடு என்றால் தாக்கியதா? (5)
3 கலையின் தலையெடுத்து தலைகீழாய் பிச்சை கேட்கும் சிற்பமா? (3)
4 லட்சுமி நிலபுலன் கொண்டு வந்தால் நாமம்தான் (4)
10 மாது சற்றே ஓசை குறைத்துக் கொள்ள தூய்மையானது (5)
12 முப்பத்திரண்டையும் பாதுகாத்திட முருகனுக்குத் தேவையானது (4)
14 உலோக முரசைக் கொட்டியதால் இப்படிச் செவிடாகும் (4)
15 பாடு படாத ஈடுகோள் மட்டம் (3)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.