Tuesday, March 17, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - மார்ச் 2009

போன முறை எல்லாரும் போட்டுத் தாக்கிய பின் இந்த முறை புதிர் போடவே பயமாக இருக்கிறது. சென்ற முறையை விடக் கொஞ்சமேனும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

வாத்தியார் வாஞ்சி, எங்கள் கூகிள் குழுமத்தில் சொல்லிக் கொடுத்ததன்படி இனி இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்பதற்குப் பதிலாக முறையே குறுக்கு, நெடுக்கு என்ற பதங்களைப் பாவிக்கலாம் என இருக்கிறேன்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
  • இந்த புதிரமைக்க பேருதவியாக இருந்த பெனாத்தலாருக்கு என் வந்தனங்கள்.
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.

1
2
345
6





7
89




10
11

12
13
14





15
16


குறுக்கு

3 புத்திரன் தலைமாறியதால் பிள்ளையார் ஆனானே! (5)
6 இந்தப் பண் மதத்தில் ஒரு பாதி (4)
7 யோசித்து ஆரம்பிக்க வேண்டிய இந்த தொழிலில் கண்ணாயிரு (4)
8 உடன்பிறந்தவள் வீசிய வலையில் பாதி பெற்ற பொன் உருவம் (6)
13 சமமில்லா இந்தக் சரணாகதிக்குக் காசும் வேண்டும் (6)
14 உலகத்தில் தலை இழந்த முதல் மகள் (4)
15 கலவரமும் கலகமும் ஆரம்பித்தால் சிரிப்பா? (4)
16 தேர் கொண்ட பூவிற்குமா குலப்பாசம்? (2,3)

நெடுக்கு

1 இசையின் பிறப்பிடத்தை இரவில் மறை (2,3)
2
உலகெங்கும் பரவி தங்கள் முறைகளை எண்ணிப் பார்த்தனர் (5)
4 இந்த ஊர் பேர் தெரியுமெனக் கருதக் கலை ஞானம் வேண்டும் (4)
5
அவன் மம்தாவைக் கண்டான், தீராப்பகை கொண்டான் (4)
9 சிலம்புச் செல்வரின் அடியும் முடியும் அறிந்த கொஞ்சம் பேர் (3)
10 பணமும் உறுதியும் கலந்து வந்த நல்ல நேரம் (5)
11 தாமிரத்தால் செய்த கப்பலில் ஒரு பகுதி சண்டை நடந்த இடம் (5)
12 வசந்தியின் இடை மாறியதாய் வெட்டிப் பேச்சு (4)
13 அவிக்க ஆரம்பித்து சமையலில் முடிந்த கலப்பு (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

Tuesday, March 10, 2009

கட்டிங் கபாலியால் கவுந்த வங்கிகள்!

இடம்: ராயபுரம் டாஸ்மாக் பார்

மன்னாரும் கபாலியும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கபாலி: தலைவா, மினிம்மா க்ளீன் பண்ணற ஆபீசில் என்னமோ பேசிக்கினு இருந்தாங்களாம். பெரிய பெரிய பேங்கு எல்லாம் அப்பீட் ஆவுதாமே. இன்னா மேட்டர் தல?

மன்னார்: சரியான மேட்டரைத்தான் புடிச்சு இட்டாந்துருக்க. நமக்கு பிரியற மாரி சொல்லணுமுன்னா, கொஞ்சம் வேற மாரி சொல்றேன் கேட்டுக்க.

தேர்தல் வரசொல்லதான் நம்ம கைல காசு பொரளும். ஆனா அதுவரை நம்ம வாயும் வயிறும் சும்மா இருக்குமா? இருக்காது. கட்டிங் கேக்காது? அப்போ நீ இன்னா செய்வே? நேரா நம்ம டாஸ்மேக் கோவாலாண்ட வந்து மாமே கொஞ்சம் கவ்னின்னுவே. செய்வதானே? உன்னிய மாரி எத்தினி பேரு அவனாண்ட வருவானுங்க. அவனும் சரின்னு சொல்லி ரெகுலர் பார்ட்டிங்க எல்லாம் அக்கவுண்ட் வெச்சு கட்டிங் அடிக்கலான்னு சொல்றான்.

உடனே நீ கோயிந்து பீட்டருன்னு உன் தோஸ்த் அல்லாரையும் கூட்டு சேத்துக்கினு கோவாலு கடையே கதின்னு கெடப்பதானே. கோவாலுக்கு பிஸ்னஸ் சும்மா பிச்சிக்கினு போவும். இதான் சாக்குன்னு அவனும் உங்களை மாரி கடனுக்கு குடிக்கிறவங்களுக்கு நைசா ரேட்டை வேற ஏத்திருவான்.

இந்த கடைக்கு எதுத்தா மாரி இருக்கிற பேங்குகாரன் இதைப் பாத்து, கோவாலு கோவாலு, உனக்கு சரக்கெடுக்க காசு தேவைப்படுது. இந்த மாதிரி கடனில் வர வேண்டிய காசை எல்லாம் வெச்சு என்னாண்ட லோன் வாங்கிக்கன்னு சொல்லறான். கோவாலுவும் கொஞ்சம் யோசிச்சு சரி ரொட்டேசனுக்கு காசு தேவப்படுதுன்னு நினைச்சு இவனாண்ட ஒரு லோன் எடுக்கறான்.

இப்போ இந்த பேங்கோட பெரிய ஆபீஸ்ல இருக்கிறவன் ஒருத்தன், நம்ம பேங்கு இருக்கிற காசை எல்லாம் இப்படிக் கடனா குடுத்தா எப்படி சரிப்படும்ன்னு நினைச்சு இந்த கடன் மூலமா வர வேண்டிய காசை எல்லாம் அடமானமா வெச்சு கடன்பத்திரம் தயாரிச்சு அதை பங்குச் சந்தையில் வித்துடறான். அங்க இந்த விவரமெல்லாம் தெரியாமா சொம்மா வாங்கி வாங்கி வித்து இந்த மாதிரி பத்திரங்க ரேட்டை எல்லாம் கன்னாப்பின்னான்னு ஏத்தி விடறாங்க. என்ன விலைக்கு வாங்கினாலும் அதுக்கும் மேல ரேட் ஏறாசொல்லோ அல்லாரும் ஹேப்பியா இருக்காங்க.

இப்டி அல்லாரும் சந்தோசமா இருக்கங்காட்டி, இந்த பேங்க்ல வேலை பாக்கிற ஒருத்தன் கோவாலாண்ட போயி கோவாலு கோவாலு கடன் ரொம்ப ஏறிப் போச்சே, கொஞ்சம் அசலைக் கட்டக்கூடாதான்னு கேட்ருதான். கோவாலு உன்னாண்ட வந்து கபாலி கொஞ்சம் காசு குடுறான்னு கேட்டா நீ இன்னா சொல்லுவே? அட என்னாண்ட இருந்தா தர மாட்டேனா பிரதர். கொஞ்சம் வெயிட் பண்ணு ரெண்டு மாசந்தள்ளி தேர்தல் வருது. மொத்த அக்கவுண்டையும் செட்டில் பண்றேம்ப. கோவாலு பேங்கு ஆள் கிட்ட போயி இப்போ என் கிட்ட காசு இல்லைன்னு சொல்லுவான். இந்த பேங்குகாரன் புத்தி எப்டி வேலை செய்யுமுன்னா உன்னாண்ட காசு இருக்கசொல்லோ கடனை வாங்கிக்கோன்னு கெஞ்சுவான். ஆனா உனக்கு எப்போ முடையாக்கீதோ அப்போ வந்து கடன கட்டுன்னு கயுத்து மேல கை வெப்பான். அந்தா மாரி கோவாலு காசு இல்லைன்னு சொன்னதுதான், உடனே கேசை போட்டு அத்தைப் போட்டு இத்தைப் போட்டு கோவாலை ஒரு வயி பண்ணிடுவான். கோவாலு ஒரு ஸ்டேஜ்ல போடாங்கோன்னு சொல்லி மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு கடையை மூடிக்கினு போயிடுவான்.

இப்போ கோவாலுக்கு நடந்ததுதான் அவனுக்கு கடன் குடுத்த பேங்குக்கும் நடக்கும். எப்போ கோவாலு மஞ்சக்கடுதாசி குடுத்தானோ, அப்போவே ஷேர்மார்க்கெட்டுக்கு நியூஸ் போயிரும். இந்தா மாரி இந்த பேங்கு குடுத்த கடன் வராது. அதனால அந்த பேங்கு பத்திரத்தை எல்லாம் வாங்காதீங்கோன்னு சொல்லிருவானுங்க. சக்கைப் போடு போட்டுக்கினு இருந்த பத்திரம் எல்லாம் குப்பையாயிரும். இந்த பேங்கு பத்திரம் எல்லாம் குப்பையாப் போச்சுன்னு நியூஸ் வந்தா உடனே, அதுல டெபாசிட் போட்டவனெல்லாம் உடனே வெளிய எடுக்கப் பாப்பான். ஆனா உடனடியா கேஷ் இருக்குமா? இருக்காது. ஆக அங்கேயும் ஆப்பு. உடனே அரசாங்கம் கைல கால்ல வியுந்து காசு வாங்கி இவங்களை செட்டில் பண்ணுவானுங்க. அரசாங்கமும் வரிப்பணத்தை எல்லாம் வாரி வயங்கி இவனுங்களைக் காப்பாத்தும். ஆனா பத்திரத்தை கடைசியா வாங்குன பரதேசிக்கு ஆப்புதான்.

இதெல்லாம் ஒரு சைடில் நடக்கும் போது, இன்னொரு பக்கம் கோவாலுக்கு கடனுக்கு சரக்கு குடுத்த கம்பெனிக்கும் இப்போ காசு வராதா? அவனுங்க எல்லாம் அப்பீட் ஆவானுங்க. 100 வருசமா இருக்கிற பிராந்தி கம்பெனி படுத்துக்கும். எதிர்கட்சிக்காரன் பீர் பேக்டரியை ஆளுங்கட்சிக்காரன் கம்பெனி வாங்கும். இந்த கம்பெனிக்காரன் கண்ட்ரோலில்கீற மத்த கம்பெனிங்களும் அடி வாங்கும். அவனுங்க செலவைக் கட்டுப்படுத்த ஆளுங்களை வீட்டுக்கு அனுப்புவானுங்க. இந்த வேலை போனவனுங்க வாங்குற கடைங்க, கைவண்டிங்க அல்லாருக்கும் வியாபாரம் படுத்துக்கும். இப்படி மொத்த ஊருக்குமே ஆப்புதான்.

இதுதாண்டா நடக்குதுன்னு சொல்லிக்கிட்டு கடனுக்குக் குடுத்த கோவாலு கட்டிங்கைத் திருப்பி கேட்குமுன் வாயில் கவுத்துக் கொண்டு மப்பானான் மன்னாரு.

டிஸ்கி 1:
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதால் ஒரு கபாலி, ஒரு கோவாலு, ஒரு வங்கி, ஒரு பத்திரம் எனச் சொல்லி இருக்கிறேன். உண்மையில் உள்ள சிக்கல் ரொம்பவே இடியாப்பம் ரேஞ்ச் என்பது எல்லாருக்கும் தெரியும். இதான் எனக்குத் தெரியுமே எனச் சொல்ல வரும் நிபுணர்களுக்காகவே இந்த டிஸ்கி.

Friday, March 06, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - பிப்ரவரி 2009

இந்த மாதம் தந்த குறிப்புகள் ரொம்பவும் எளிதாக இருந்ததா அல்லது தொடந்து பங்கெடுத்து வருவதால் என்னுடைய குறிப்பெழுதும் விதம் புரிந்து விட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் பின்னி எடுத்துவிட்டனர் மக்கள்! கலந்து கொண்ட 31 பேர்களில் 26 பேர் சரியான விடைகளைத் தந்திருக்கின்றனர்! அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்

  1. சீனா
  2. ஹரிஹரன்ஸ்
  3. பாசமலர்
  4. சகாதேவன்
  5. சதீஸ்
  6. தமிழ்ப்பிரியன்
  7. ஜி3
  8. மகேஷ்
  9. இராம்
  10. சந்தானம் குன்னத்தூர்
  11. ச சங்கர்
  12. யோசிப்பவர்
  13. பூங்கோதை
  14. ராசுக்குட்டி
  15. வடகரை வேலன்
  16. மஞ்சுளா ராஜாராமன்
  17. சௌமியா அருண்
  18. வசுப்ரதா
  19. திவா
  20. வாஞ்சிநாதன்
  21. வி ஆர் பாலகிருஷ்ணன்
  22. அரசு
  23. ஏஸ்
  24. கப்பி
  25. லதா சதீஷ்
  26. ராமையா நாராயணன்
அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?





இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
சப்பி - உறிஞ்சி என்பதற்கு மற்றொரு சொல். சாபமிடு என்பதை சபி எனக் கொண்டு அதில் குப்பியின் நடுவே இருக்கும் ப் என்ற எழுத்தை நுழைத்தால் சப்பி என வரும்.

5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
ரம்மியம் - கொஞ்சம் ஆங்கிலக் கலப்பு கொண்ட குறிப்பு. ஆனால் தமிழிலும் அவ்விளையாட்டை ரம்மி எனத்தானே சொல்கிறோம். ரம்மி என்ற சீட்டு விளையாட்டுடன் சுயம் என்ற சொல்லின் தலையான சு போய் மீதம் இருக்கும் யம் என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் அற்புதமான அழகு என்ற பொருள் கொண்ட ரம்மியம் வரும்.

6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
தாலி - லலிதா என்ற பெயரில் தாலி திரும்பி இருக்கிறது.

7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
தீபம் - தீவிரவாதம் என்ற சொல்லின் எல்லைகள் தீ மற்றும் ம் என்ற எழுத்துகள். இவைகளிடையே பசுவின் தலையான ப வர தீபம் என்ற விடை கிடைக்கும். விளக்கு என்பதை விளங்கச் செய் என்ற பொருள் இருந்தாலும் தீபம் என்ற பொருளும் இருக்கிறது அல்லவா!

8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
பதக்கம் - பக்குவம் என்பதைப் பதம் என்றும் சொல்லலாம். அதனிடையே மக்கள் என்ற சொல்லின் இடையான க்க என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் பதக்கம் என வரும். மார்பில் அணிவதுதானே பதக்கம்.

11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
அம்மாஞ்சி - தாய் என்றால் அம்மா. இஞ்சியின் தலையை வெட்ட ஞ்சி என ஆகும். இரண்டும் சேர்ந்தால் அம்மாஞ்சி - மாமம் மகன்.

12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
தகும் - ஈடாகும் என்பதற்கு ஈடான தகும் என்ற சொல் குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
ஆகா - அடடா அருமை எனச் சொல்ல ஆகா என்போம். ஆகாயம் முடியாமல் போனால் ஆகா வரும்.

16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
தந்திரம் - தந்தி எனத் தொடங்கி வீரம் என்பதில் இருந்து ரம் என்ற எழுத்துக்களைச் சேர்த்து உபாயம் என்பதற்கு விடையாக வருகிறது.

17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மிதவை - தருமியின் இடையை ஒடித்தால் தமி. அதனைத் தலைகீழாக மாற்றினால் மித. இதோடு வை என்ற சொல்லைச் சேர்த்தால் மிதவை. தெப்பம் என்றாலும் மிதவை.

மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
பரமபதம் - மரம் என்ற சொல்லோடு பதப என்ற மூன்று ஸ்வரங்களை சேர்த்து ஆட்டினால் (எழுத்துக்களின் வரிசையை மாற்றினால்) பரமபதம் என்ற விளையாட்டு வரும்.

2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
திமில் - ரிஷபம் என்றால் காளை என்றும் ரி என்ற ஸ்வரம் என்றும் இரு பொருட்கள் உண்டு. திமிரில் ரி போனால் திமில். அது காளையின் ஒரு உடற்பகுதி.

3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
சம்மதம் - நூறு என்றால் சதம். அதன் நடுவே மரம் என்பதின் நடுவை வெட்டி தலைகீழாக சேர்த்தால் சம்மதம் என்றாகும். ஒப்புக் கொள்கிறீர்களா?

4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
பிதா - அப்பா என்பதற்கு ஈடாக பிதா என்பது குறிப்பினுள்ளேயே இருக்கிறது.

9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
கறி குழம்பு - கறியும் குழம்பும் சாதமுடன் சேர்த்து உண்ணப்படுபவை. அதில் க் என்ற மெய்யெழுத்து சேர்ந்தால் கறிக்குழம்பு என்றாகும். மெய் இருந்தால்தானே அசைவம்!

10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
அஞ்சாதவை - தஞ்சாவூரில் இருந்து ஊரை எடுத்துவிட்டு அவை என்ற சொல்லைச் சேர்த்து எழுத்துக்களின் வரிசையை மாற்றினால் அஞ்சாதவை என வரும்.

13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
சதிர் - உடன்கட்டை ஏறியவர் சதி. ஒருவரில் கடைசி ர். இரண்டும் சேர்ந்தால் வருவது சதிர் என்ற ஆட்டம்.

15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)
காமி - காட்டு என்பதின் பேச்சு வழக்கு. குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.