Friday, March 06, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - பிப்ரவரி 2009

இந்த மாதம் தந்த குறிப்புகள் ரொம்பவும் எளிதாக இருந்ததா அல்லது தொடந்து பங்கெடுத்து வருவதால் என்னுடைய குறிப்பெழுதும் விதம் புரிந்து விட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் பின்னி எடுத்துவிட்டனர் மக்கள்! கலந்து கொண்ட 31 பேர்களில் 26 பேர் சரியான விடைகளைத் தந்திருக்கின்றனர்! அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்

 1. சீனா
 2. ஹரிஹரன்ஸ்
 3. பாசமலர்
 4. சகாதேவன்
 5. சதீஸ்
 6. தமிழ்ப்பிரியன்
 7. ஜி3
 8. மகேஷ்
 9. இராம்
 10. சந்தானம் குன்னத்தூர்
 11. ச சங்கர்
 12. யோசிப்பவர்
 13. பூங்கோதை
 14. ராசுக்குட்டி
 15. வடகரை வேலன்
 16. மஞ்சுளா ராஜாராமன்
 17. சௌமியா அருண்
 18. வசுப்ரதா
 19. திவா
 20. வாஞ்சிநாதன்
 21. வி ஆர் பாலகிருஷ்ணன்
 22. அரசு
 23. ஏஸ்
 24. கப்பி
 25. லதா சதீஷ்
 26. ராமையா நாராயணன்
அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?

இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
சப்பி - உறிஞ்சி என்பதற்கு மற்றொரு சொல். சாபமிடு என்பதை சபி எனக் கொண்டு அதில் குப்பியின் நடுவே இருக்கும் ப் என்ற எழுத்தை நுழைத்தால் சப்பி என வரும்.

5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
ரம்மியம் - கொஞ்சம் ஆங்கிலக் கலப்பு கொண்ட குறிப்பு. ஆனால் தமிழிலும் அவ்விளையாட்டை ரம்மி எனத்தானே சொல்கிறோம். ரம்மி என்ற சீட்டு விளையாட்டுடன் சுயம் என்ற சொல்லின் தலையான சு போய் மீதம் இருக்கும் யம் என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் அற்புதமான அழகு என்ற பொருள் கொண்ட ரம்மியம் வரும்.

6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
தாலி - லலிதா என்ற பெயரில் தாலி திரும்பி இருக்கிறது.

7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
தீபம் - தீவிரவாதம் என்ற சொல்லின் எல்லைகள் தீ மற்றும் ம் என்ற எழுத்துகள். இவைகளிடையே பசுவின் தலையான ப வர தீபம் என்ற விடை கிடைக்கும். விளக்கு என்பதை விளங்கச் செய் என்ற பொருள் இருந்தாலும் தீபம் என்ற பொருளும் இருக்கிறது அல்லவா!

8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
பதக்கம் - பக்குவம் என்பதைப் பதம் என்றும் சொல்லலாம். அதனிடையே மக்கள் என்ற சொல்லின் இடையான க்க என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் பதக்கம் என வரும். மார்பில் அணிவதுதானே பதக்கம்.

11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
அம்மாஞ்சி - தாய் என்றால் அம்மா. இஞ்சியின் தலையை வெட்ட ஞ்சி என ஆகும். இரண்டும் சேர்ந்தால் அம்மாஞ்சி - மாமம் மகன்.

12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
தகும் - ஈடாகும் என்பதற்கு ஈடான தகும் என்ற சொல் குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
ஆகா - அடடா அருமை எனச் சொல்ல ஆகா என்போம். ஆகாயம் முடியாமல் போனால் ஆகா வரும்.

16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
தந்திரம் - தந்தி எனத் தொடங்கி வீரம் என்பதில் இருந்து ரம் என்ற எழுத்துக்களைச் சேர்த்து உபாயம் என்பதற்கு விடையாக வருகிறது.

17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மிதவை - தருமியின் இடையை ஒடித்தால் தமி. அதனைத் தலைகீழாக மாற்றினால் மித. இதோடு வை என்ற சொல்லைச் சேர்த்தால் மிதவை. தெப்பம் என்றாலும் மிதவை.

மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
பரமபதம் - மரம் என்ற சொல்லோடு பதப என்ற மூன்று ஸ்வரங்களை சேர்த்து ஆட்டினால் (எழுத்துக்களின் வரிசையை மாற்றினால்) பரமபதம் என்ற விளையாட்டு வரும்.

2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
திமில் - ரிஷபம் என்றால் காளை என்றும் ரி என்ற ஸ்வரம் என்றும் இரு பொருட்கள் உண்டு. திமிரில் ரி போனால் திமில். அது காளையின் ஒரு உடற்பகுதி.

3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
சம்மதம் - நூறு என்றால் சதம். அதன் நடுவே மரம் என்பதின் நடுவை வெட்டி தலைகீழாக சேர்த்தால் சம்மதம் என்றாகும். ஒப்புக் கொள்கிறீர்களா?

4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
பிதா - அப்பா என்பதற்கு ஈடாக பிதா என்பது குறிப்பினுள்ளேயே இருக்கிறது.

9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
கறி குழம்பு - கறியும் குழம்பும் சாதமுடன் சேர்த்து உண்ணப்படுபவை. அதில் க் என்ற மெய்யெழுத்து சேர்ந்தால் கறிக்குழம்பு என்றாகும். மெய் இருந்தால்தானே அசைவம்!

10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
அஞ்சாதவை - தஞ்சாவூரில் இருந்து ஊரை எடுத்துவிட்டு அவை என்ற சொல்லைச் சேர்த்து எழுத்துக்களின் வரிசையை மாற்றினால் அஞ்சாதவை என வரும்.

13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
சதிர் - உடன்கட்டை ஏறியவர் சதி. ஒருவரில் கடைசி ர். இரண்டும் சேர்ந்தால் வருவது சதிர் என்ற ஆட்டம்.

15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)
காமி - காட்டு என்பதின் பேச்சு வழக்கு. குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.

5 comments:

said...

அடுத்த முறை கொஞ்சம் கடினமாக ஆக்க வேண்டும் போல. :))

said...

/அடுத்த முறை கொஞ்சம் கடினமாக ஆக்க வேண்டும் போல. :))//

ஆமாம்... எப்பிடியும் நாங்க டகால்டி பண்ணி கண்டுபிடிச்சிருவோம்'லே.... :))

said...

ஆனால் பார்த்துங்க... ரொம்பவும் கடினமா ஆக்கிறாதீங்க... அடுத்த புதிரை இப்போதிருந்தே எதிர் பார்க்க ஆரம்பிச்சாச்சு...

said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

said...

hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html

divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

PLEASE CONSIDER OUR REQUEST