Friday, December 31, 2010

ஜே ஜே இல்லாத குறிப்புகள்!

படிக்கும் நல்ல நெஞ்சங்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லா செல்வங்களும் சந்தோஷங்களும் உங்களைச் சேரட்டும்.

இந்த வாரம் தமிழ் பேப்பரில் சில எழுத்துப்பிழைகள், சில வார்த்தைகளின் மூலம் என வழக்கம் போல் எழுதி இருந்தாலும் ரஜினி பட பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போக அதற்கு அவர்கள் போட்ட படம் பற்றித்தான் பேச்சு அதிகமாக இருக்கிறது. படிக்க கீழே இருக்கும் உரலைச் சுட்டிப் பார்க்கவும்.


மன் மதன் அம்பு படம் பார்த்தோம். எல்லாரும் படம் சகிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதினாலோ என்னவோ படம் அந்த அளவு மோசமாகத் தெரியவில்லை.

கமலின் மிகச்சிறந்த ஆக்கமா என்றால் இல்லைதான். க்ரேஸி மோகன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமா என்றால் இருந்திருக்கும்தான். திரைக்கதையில் அபத்தமான ஓட்டைகள் இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வேஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களே என்றால் இருக்கிறார்களேதான்.

ஆனால் சமீபகால நேட்டிவிட்டி என்ற பெயரில் தரப்படும் திராபை இல்லாமல், குத்துப் பாட்டு ஆபாச நடனங்கள் இல்லாமல், அடிதடி சண்டைகள் இல்லாமல், ரத்தக் களறி இல்லாமல், காமெடி என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தக் கூத்துகள் இல்லாமல், மூளையை ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துவிட்டு வர முடிகிறது. பஞ்சதந்திரம், பம்மல் கே ரேஞ்சில் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய தரத்தில்தான் இருக்கிறது.

கமல் தொப்பையும் தொந்தியுமாக ஆகிவிட்டார். இனிமேல் வயதுக்கேற்ற கேரக்டர்கள் செய்வது நலம். மனைவியை இழந்தவராக வருவது, மனைவி மகள் என்று யாரேனும் இறக்கும் பொழுது ஒரு ட்ரேட்மார்க் அழுகையுடன் அழுவது போன்றவற்றில் இருந்து சீக்கிரம் வெளிவருதல் நலம். கே எஸ் ரவிக்குமாரை படத்தில் காணவே இல்லை. எல்லாருக்கும் அவரவர் இடத்தைக் கமல் தர வேண்டும். இசை பற்றிப் பேசாமல் இருப்பதே எல்லாருடைய ரத்த அழுத்தமும் ஏறாமல் இருக்க ஏதானது. இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்.

பெரும்பாலும் இணையத்தில் நன்றாக இருக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போவதும் (அஞ்சாதே, பசங்க, இன்னும் பல), மட்டம் என்று விமர்சிக்கப் படும் படங்கள் (மும்பை எக்ஸ்ப்ரெஸ்) பல எனக்குப் பிடிப்பதும் எப்பொழுதும் நடப்பதுதான். புவிவெப்பமயமாதலினால் இதில் மாற்றமெதுவும் இல்லை. நல்லது.

Comfort Fabric Softner, V Guard Stabilizer போன்ற எழுத்துப்பிழைகளுடான விளம்பரங்களும், ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்.

பிகு: இன்று படம் பார்க்க எங்கள் குடும்பத்துடன் வேறு மூன்று குடும்பங்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். எனவே ஜே ஜே எனக் கூட்டம் இல்லாத என்று தலைப்பைப் படித்துக் கொள்ளவும்.

Wednesday, December 22, 2010

இடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா?

இடக்கரடக்கல் மட்டும் இல்லை, குழூஉக்குறி, மங்கலம் இப்படி சில விஷயங்களைப் பத்தி சொல்லி இருக்கேன்.

Wednesday, December 15, 2010

கண்றாவி!!

மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா கண்ணில் இந்தக் கண்றாவிதான் பட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கோட்பாட்டின்படி நீங்களும் ஒரு தபா பார்த்திடுங்கோ!

கண்றாவி
(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)

Sunday, December 05, 2010

அக்கு வேற ஆணி வேற!

அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே. அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை.

அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு.

இவைதான் அக்கு என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள். இதில் அக்கு என்றால் எலும்பு என்பது ஒரு பொருள் உண்டாகும் அடிப்படை கட்டமைப்பு என்பதாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பொருளின் பாகங்கள் என்பதை விட, ஒரு பொருளின் கட்டமைப்புக்கான (structure / frame) பாகங்களாக இருப்பதை அக்கு என்று சொல்வோமானால் அது எலும்புக்கு ஈடாக வருகிறது. ஆகையால் இந்த இடத்தில் அக்கு என்பதற்கு எலும்புதான் சரியான பொருளாக வருகிறது. ஆனால் அப்படி எடுத்துக் கொண்டோமானால் ஆணி என்ற சொல் வருவதற்கான காரணம் சரியாகப் புரியவில்லை. எல்லாப் பொருட்களுமே ஆணி வைத்துதான் கோர்க்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு தவறான முன்முடிவாகவே எனக்குத் தோன்றியது. எனவே ஆணி என்ற சொல்லுக்கு வேறு என்ன விளக்கங்கள் இருக்கின்றன எனப் பார்க்க அகராதியை நாடினேன்.

ஆணி [ āṇi ] {*}, s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence, மேன்மை; 6. support, foundation, ஆதாரம்; 7. wish, desire, விருப்பம்.

இதுதான் ஆணிக்கு அகராதியில் இருக்கும் விளக்கங்கள். அக்கு என்பதற்கு ருத்திராட்சம் எனப் பார்த்து இருந்ததால் ஒரு வேளை அது கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கத்தை சோதிக்க ஆணி என்ற சொல் வந்திருக்குமோ என்றும் கூட நினைத்தேன். ஆனால் அதுவும் சரியான பொருளைத் தராத எண்ணமே வந்ததால் மேலும் கொஞ்சம் தேடினேன்.

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது. குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி

கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி

எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை நேரடியாக அணுகாமல் மறைபொருளாகப் பார்த்தோமானால், இங்கு ஆணி என்பது விருப்பத்தைக் குறிக்கும் என்று உணரலாம். அதாவது ஒருவனிடம் இருந்து நரம்பு, எலும்பு மட்டுமில்லாமல் அவன் ஆசையையும் நீக்கி எனப் பாடலின் பொருளாகச் சொல்லலாம். கயிறு என்றால் நரம்பு. எக்கு என்றால் எலும்பு என்றும் ஆணி என்றால் விருப்பம் என்றும் பொருள் இருப்பதை முன்னமே பார்த்தோம். எப்படி ஒருவனை பகுதி பகுதியாய் பிரித்து எடுப்பது என்று முடிவானால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம். ஆனால் அவனுள் இருக்கும் ஆசையை எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. பற்றற்ற நிலையை அடைவது என்பது எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை. எனவே ஒரு மனிதனை பரிபூரணமாய் பிரிப்பது என்றால் அவனுள் இருக்கும் ஆசையை வரை தனியாகப் பிரித்து எடுப்பது என்று பொருளாகிறது.

எனவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிப்பது என்றால் பரிபூரணமாகப் பிரித்துப் பார்ப்பது என்பது தெளிவாகிறது. இந்தப் பழமொழியில் அக்கு என்றால் எலும்பு என்பதையும் ஆணி என்றால் நேரடியாக தசை என்றும் மறைபொருளாக விருப்பம் என்றிருப்பதையும் இனி நாம் நினைவில் கொள்வோம்.

(தமிழ் பேப்பரில் 04-12-2010 அன்று வெளி வந்தது)

தமிழ் பேப்பரில் வரும் இலக்கணத் தொடரைப் படிக்கிறீர்களா?